சீனு ராமசாமி எழுதிய "நதியழகி" கவிதைத் தொகுப்பு புத்தகம் ஓர் அறிமுகம் | Seenu Ramasamy's Nathiyazhagi Poetry Collection Book Review | www.bookday.in

சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

என்ன மந்திரமோ என்ன மாயமோ தெரியவில்லை ஒரு புத்தகத்தில் முதல் பக்கமே தீர்மானித்து விடுகிறது அடுத்த பக்கத்திற்கு போவதா , அல்லது அதற்கு மேல் வாசிக்க ஒன்றுமில்லை என்பதா என்பதை. ஒரு மாயக்காரியின் மந்திரக் கோலுக்கிணங்குவது போல் கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூலினை (“நதியழகி” கவிதைத் தொகுப்பு) நிராகரிக்கவே முடியாத மந்திரங்களால் நிரப்பப்பட்டிருந்தது எழுத்துக்கள்.

இடர்பாடுகளுக்குள்ளும் இண்டஞ்செடிகளுக்குள்ளும் தன் படைப்புகளை தேடி எடுத்துக் கொள்ளும் தந்திரக்காரர் தான் கவிஞர். பூக்களின் மென்மையை பேசிக்கொண்டிருக்கையில் வேர் கெடுக்க வெளிவரும் கண்ணீரை கவிதை வடிக்கிறார். ஒரு குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போதே பால் கொடுக்கும் தாயின் வயிற்றுப் பசியை தாய்மையோடு எழுதிவிடுகிறார் . இயலாமையை வறுமையை இதைவிட வலிக்கச் சொல்ல முடியுமா என்கிற ஆச்சரியத்தோடு இக்கவிதை வாசிக்கிறேன்..

” இருந்த ஒரே
பள்ளிச் சீருடையை
நள்ளிரவில்
துவைக்கும் சத்தங்கள்
இன்றும் கேட்கின்றன
அந்த ஊரிலிருந்து
கிணற்று மேட்டிலிருந்து
குடிசை வாசலிலிருந்து
தாயார்களின்
கைகளில் இருந்தும் ”

உயிர்களின் வாழ்வியல் சூழலும், தேவையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், சகல சீவராசிகளுக்கும்அதுவே விதிக்கப்பட்ட விதி. யாருக்கு பரிதாபப்பட, குறி வைக்கும் சிங்கத்திற்கா ..
இறையாகப்போகும் மான்களுக்கா.. என நம்மை திணறடிக்கும் இக்கவிதை ..

“ஆற்றின் இக்கரையில்
புள்ளிமானும்
அதன் சிறுகுட்டியும்
பொறுமையாக
நீர் அருந்துவதை
அக்கறையில் நடந்தபடி
பார்த்துக் கொண்டே போகிறது
சிறுத்தையும் அதன் குட்டியும்
பிரபஞ்சத்தின் பேரருளாக
மான்களுக்கும் சிறுத்தைகளுக்கும்
வாழ்வின் சவாலாக
இடையில்
ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு ”

குறலற்றவர்களுக்காக குரல் எழுப்புகிற படைப்புகள், கலைகள், போராட்டங்கள், சட்டங்கள் பார்ப்பது பழகி விட்ட நமக்கு நீதியற்ற தன்மையாக நாம் கருத்து வைத்திருக்கிற வார்த்தைகளுக்காகவும் , வழக்காடு சொற்களுக்காகவும் கூட வக்காலத்து வாங்க கவிஞரால் மட்டுமே முடிகிறது பாருங்கள். நையாண்டித்தனமாக உண்மையை நாசுக்காக சொல்கிறது இக்கவிதை..

” தடுப்பணைகளை உடைக்காமல்
கரைகளை உடைத்துக் கொண்டு
வெளியேறுகிற நிறை கண்மாய்
ஒரு முழு பைத்தியம்
அடைப்பவனை விட்டுவிட்டு
அணைத்திருப்பவனை
அடித்துச் சென்று விடுகிறது ”

சீனு ராமசாமி எழுதிய "நதியழகி" கவிதைத் தொகுப்பு புத்தகம் ஓர் அறிமுகம் | Seenu Ramasamy's Nathiyazhagi Poetry Collection Book Review | www.bookday.in

யாரும் சொல்லாத கவனிக்காத சிறுவர்கள் உலகத்தையும் கவனிக்கிறது ஒரு கவிதை ..

“பெரிய சுற்றுச்சுவர் எழுப்பிய
வீடுகளில்
உள் விழுந்த பந்தை
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
சிறுவர்கள்
ஒருவன் துணிந்து
உள்ளே குதித்ததும்
பெரிய வீட்டிலிருந்து
சிறிய மனிதர்கள்
வெளிப்படுகிறார்கள் ”

எதார்த்தமும் இயல்பும் கொண்ட வார்த்தைகள், நெய்யப்பட்ட கைத்தறி ஆடைகளாய், மென்மையாய் உடலுக்குத் தீங்கில்லாத, எந்த அதிருப்தியும் தராத சொற்களால் நூல் முழுக்க நிறைந்து கிடக்கிறது மென்பஞ்சாய்.

“உன்னை தவறவிட்ட
வாழ்வின் கசப்பின் மீது
இப்பெருநகர வெயிலின்
சுட்டெரிப்பை
ஒருவித தண்டனையாக ஏற்று
சதா உன்னைச் சுமந்தலைந்த
களைப்பின் பின்னிரவில்
உறங்கச் செல்லும் முன்
மின்விளக்கை அணைக்கிறேன்
கண்களை மூடுகிறேன்
இருள் சூழ்கிறது
தீபத்தை கையில் ஏந்தி
வெளிச்சத்தால்
எனை மூடுவதற்கு
நாள்தோறும்
எங்கிருந்து வருகிறாய்”

இழப்பை ஏக்கத்தை ஒவ்வொருவரும் கண்மூடிக்காணும் கனவுகளுக்குள் தான் வாழ்ந்து தொலைகிறார்கள் . திக்கற்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும் கனவில் காண்பதைத் தவிர. நாசுக்காக சொல்லிவிடுகிற வார்த்தைகளை கண்டுபிடிக்கும் ஒரு கவிஞனிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . எங்கேயாவது ஒளிந்து கிடக்கும் வார்த்தைகள் நமக்காக கூட நக்களோடு சொல்லப்பட்டுருக்கும். நானும் அப்படித்தான் என்னை நோக்கி வருகிற அம்புகளை தேன் தடவி அவர்களுக்கே திரும்ப அனுப்பி விடுவேன். பல கவிதைகள் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிடத்தில் சென்று சேரும் வித்தை படைப்புகளுக்கே உரித்தான சாதுர்யம். யாரோ ஒருவரின் சிபாரிசோடு கூட எழுதப்பட்டவர்களுக்காக போய் சேரும், அப்படித்தான் கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை வரிகள் முகத்தில் அடிக்கிறது.

கவிதை உலகில் தீரா பசியோடு இருக்கும் ஒருவரின் கண்களுக்கு எல்லாமும் படைப்பாகி விடுகிறது. கழுகு கண்களாய் இவ்வுலகை, இயற்கையை, மனிதர்களின் வாழ்வியலை, துயரங்களை, இயக்கங்களை , துரோகங்களை தன் கவிதைக்கு இரையாக்கி கொண்டுருக்கிறார். தான் எழுதிய அத்தனை கவிதை நூல்களுக்குள்ளும் கரைபுரண்டும், வற்றிய மணல்மேடாகவும் அழகர் இறங்குகிற நீர் நிரப்பிய தொட்டியாகவும் வைகை நதி மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கவிஞருக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறாள் எப்போதும் வைகை நதியழகி.

நூலின் விவரங்கள்:

புத்தகம் : நதியழகி கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : சீனு ராமசாமி
பதிப்பகம் : நாதன் பதிப்பகம்
விலை: ரூ.100

எழுதியவர் : 

✍🏻 பா.மகாலட்சுமி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *