“நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
இருப்பின் பொருள் அறிய தூண்டும் கவிதைகள்
– ரவிசுப்பிரமணியன்
எனக்குப் பின் ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு பிறந்த இளைய தம்பி சீனு ராமசாமி, கிடுகிடுவென இப்போது ‘நதியழகி’யெனும் ஒன்பதாம் தொகுதிக்கு வந்துவிட்டார். அது அப்படித்தான்; பூக்கும் காலம் வந்தால் நிற்காது. ஆனால், எல்லாமும் பூத்துவிடுவதில்லை. சில மெளன மொட்டாய் நிற்கவும் செய்கின்றன. கொய்யும்போது மிதிபட்டு விடுபவை சில. விரல்களுக்கு வசப்படாமல் கொம்பிலேயே நின்று தானே தனியே உதிர்பவை சில.
“சில பூக்கள்
யாருக்கும் தெரியாமல் பூக்கின்றன
இருக்கும் வரை
எவர் தடுத்தும்
மணம் பரப்பும் குணம் மாறாமல் இருக்கின்றன
எவருக்கும் சிறு தொந்தரவும் இன்றி
யாரிடமும் சொல்லாமல்
உதிர்ந்து விடுகின்றன.”
சீனு காட்டும் இந்தப் பூக்கள், பூத்த பூக்கள். பூத்து மணம் பரப்பி யாருக்கும் தொந்தரவின்றி உதிர்ந்தும் விடுகிறவை. ஆத்மாநாம் சொல்வது போல “எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இரு”ந்துவிடும்படியாக இவ்விதம் வாழ்வு அமைந்துவிட்டால் அது எத்தனை அழகு. அது முடியாமல் தானே நாம் கட்டும் இத்தனை வேஷங்கள். அந்த வேஷங்களால்தான் எத்தனை பாடுகள், கண்ணீர், அவசங்கள், வலிகள். அந்த வேஷங்களுக்காக சக மனிதர்கள் தரும் வாக்குறுதிகள் நமக்கு எவ்வளவு நம்பிக்கையைத் தந்துவிடுகின்றன.
“கடைசி நிமிடம் வரை
கைதொட்டு
நம்பிக்கையை வளர்த்து
ஏமாற்றிய துரோகிகள்
எப்படியோ
தூக்கம் வராத தனியிரவுகளில்
உருவமற்று
ஒவ்வொருவராக எதிரே வந்து
அமர்ந்துவிடுகிறார்கள்.”

நமக்கேயானவரென உறுதியாக நம்பி, தேனில் தோய்ந்த நஞ்சறியாமல் குலைந்த பின், அவரையே அந்நியராகக் காணல் துரோகத்தின் தோன்றா ரூபம். அன்பின் முத்தத்தையே யூதாஸால் துரோகமாக்க முடிந்ததே. அந்தத் துரோகம் கூட மறந்து போகும். அதை நம்பி வெதும்பிய மனத்தை எதைச் சொல்லி தேற்றுவது. யூதாஸ்கள் நிரம்பிய தேசத்தில் மெளனமும் தீமை என்கிறார் சீனு இன்னொரு கவிதையில்.
“பேச வேண்டியதை
பேசும் காலத்தில் பேசி விடுங்கள்
கேட்க வேண்டியது எல்லாம்
நீண்ட காலம் காத்திருக்காது
மௌனமாக இருப்பது வேறு
ஊமையாக இருப்பது வேறு
முதல் நன்மையின் பூச்சொல்லை
நான் எடுத்து வைக்கிறேன்.”
அந்த முதல் நன்மையின் பூச்சொல்லில், தாமரை இதழில் உருளும் பளிங்கு நீராய் உருள்கிறது கவித்துவம். பல சமயங்களில் கவிதைக்கு ஒரு சொல்லே கூட போதும், மொத்தக் கவிதையை மலர்த்த. அதுவே கவிதையின் மாயம். இந்த மாயம் அவரது இன்னொரு கவிதையில் இந்திரஜித் தோற்றம்கொண்டு நிற்கிறது.
“நேற்று தார்ச் சாலையின் ஓரத்தில்
கையேந்தியவனை
காணவில்லை என்கிறீர்கள்
எல்லாம் அங்கே அப்படியே இருக்கின்றன
அவன் பசியும் அவ்விடத்தில் நிற்கிறது
உங்களுக்குத் தெரியாமல்.”
நிற்கும் பசியென கவிதையின் நுட்பம் மட்டும் அங்கு சூட்சும உரு கொள்ளவில்லை. புலன்களின் கூர்மையின்றி நாம் காணத் தவறுபவையும்தான். அதைத்தான் கவி கவனப்படுத்தியிருக்கிறான். இருப்பின் அர்த்தத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி சரியான பொருளைக் காணத் தூண்டுகிறான்.
நாம் காணத்தவறியதும் உணரத்தவறியதும் ஒன்றா இரண்டா..?! 1984 பிப்ரவரி ஏழாம் நாள் மும்பை ஐ.ஐ.டியில், ‘நீங்கள் கல்வி பெறுவது எதற்காக?’ என்ற தலைப்பில் உரையாற்றிய தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி, “இந்த வாழ்க்கைத் தன்மை (existence), அதன் இருப்பு எல்லாவற்றின் பொருளும் என்ன? அது என்ன என்று உங்களுக்குப் பார்க்க விருப்பமில்லாமல் இருக்கலாம், ஆனால் அதை ஏன் நீங்கள் தவிர்க்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.
“இயற்பியல், மொழியியல், உயிரியல், சமூகவியல், தத்துவக் கல்வி, மனநோய் மருத்துவம் எனும் அறிவுகளுக்காக இருபது அல்லது முப்பது வருடங்கள் செலவழிப்பீர்கள். பல ஆண்டுகளை அதற்காகத் தருவீர்கள். ஆனால், நீங்கள் யார் என்பதை அறிய, நீங்கள் ஏன் இவ்வாறு வாழ்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு நாளைக் கூட, ஏன்… ஒரு மணி நேரத்தைக்கூடச் செலவழித்து யோசிக்க மறுக்கிறீர்கள்.”
சீனுவின் சில கவிதைகள் இப்படி ‘தன்னையறிந்து இன்பமுற’க் கோருகின்றன. ‘செருப்பிடைச் சிறு பரல்’ தந்த உறுத்தலாய் இயற்றிய கவிதையை ஏற்பதும் மறுப்பதும் பற்றிக் கவலையின்றி சீனு பத்தாம் தொகுதிக்கு ஏகவேண்டுமென்பதே என் அவா.
நூலின் விவரங்கள்:
புத்தகம் : நதியழகி கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : சீனு ராமசாமி
பதிப்பகம் : நாதன் பதிப்பகம்
விலை: ரூ.100
எழுதியவர் :
✍🏻 ரவிசுப்பிரமணியன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
