மதுரை கீட்சுக்கு மக்களில் ஒருவனின் வாழ்த்து..!
…………………………………
இயக்குநர் சீனு ராமசாமியின் நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் (Ninaivil Olirum Jimikki Kammal) கவிதைத் தொகுப்பு கைக்கு வந்தது.
கவிதைகள்
குறுங்கவிதைகள்
சிறுகூற்றுக்கவிதைகள் என அட்டைப்படமே கண்களைக் கவன ஈர்ப்புச்செய்தது.
எந்தப்புத்தகம் வந்தாலும் உடனே படிக்கத் தொடங்கிவிடுவது என்பழக்கம்.
நல்ல படைப்புகள் உடனே படிக்கச்சொல்லும்.
சில கொஞ்சம் ஆறப்போட்டுப்படிக்கச்சொல்லும்.
சில படிக்கவே வேண்டாம் என அடம்பிடிக்கும்.
நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக்கம்மல் உடனே படிக்கவும்பின் ஓரிருமுறை படிக்கவும் உந்தித்தள்ளியது.
முதற் கவிதையான சூரியமகளை ஊர்தேடியதுபோல் நானும்கிணறெல்லாம் தேடினேன்.
அவள்பறித்த அரளிப்பூக்கள் அரளிக்காய்களோடு கருப்புக்கோயில் படிக்கட்டில் இருந்தன.
இன்னும் இன்னும்அரளிக்காய் தேடும் அவலம் எம்பெண்களுக்கு நேர்கிறது என்பது படிமமாகப் படிகிறது.நம் நெஞ்சில் இரத்தம்படிகிறது.
மழைபொழிகிறது.
தந்தை எந்த ஊரில்ஜீவன்பிரிந்தார் என்று தெரியவில்லை. மழைநாளில்மண்வெட்டியோடு பாத்திகளை உருவாக்கி பிள்ளைகளை நனைத்துத் தானும்குளிப்பவர் வர இயலாத சூழலில் அவருக்கான மழையை அவரைக்கண்டு பொழியுமாறு லைபாய் சோப்புடன் அனுப்பி வைப்பது தமிழ்க்கவிதை வரலாற்றில் புதிய உத்தி.
நவீன சங்க இலக்கியமாக மனத்தை மழையாக நனைக்கிறார் கவிஞர்.
ஒருகவிதையின் வெற்றி அதைக்காட்சிப்படுத்தும் விதத்தில்இருக்கிறது. சங்க இலக்கியம் முதல் கம்பன்,பாரதி,பாவேந்தர்,கவியரசர்என வெற்றி பெற்ற கவிதைகள் எல்லாம் அது காட்சிபடுத்திய விதத்திலேயே நின்று நிலைக்கிறது.
இங்கு ஒரு இளம் சடலத்தைத் தூக்குகிறார்கள்.
தொங்கிய தலையை நினைவு மறந்த தாய் நினைவுமீண்டு ஓடி வந்து தூக்கிநிறுத்துகிறாள். அத்தோடு நில்லாமல் நால்வரோடு ஆம்பூலன்சுக்கும் ஓடுகிறாள்.
அவள்மகன் என்ற இந்தக்கவிதை காட்சிப்படிமமாகக் கண்முன் தெரிய வைப்பதும்,கண்களை மூடினாலும் தெரிவதும்
இந்தத் தொகுப்பின் வெற்றியாக நான் பார்க்கிறேன்.
மனிதரின் முகங்கள் இன்றைய நிகழ் நிலை வஞ்சகத்தை அப்படியே படம்பிடிக்கிறது.
பிணத்தைத் தோண்டும் நரி குரைப்பதில்லை.
கல் எறிந்து விரட்டும் தந்திரங்கள் நாய்க்குப்புரிவதில்லை.
வஞ்சகத்தை ரசிக்கத் தொடங்கியபின்
நரி அழகாவதும்
நன்றியின் இதயம் வாலில் துடிக்கும் நாய்
கோரமான ஜீவனாவதும்
வாழ்வின் ஓரங்க நாடகத்தின் இறுதிக்காட்சி.
மனிதக் கோரமுகங்களை அவர்களுக்குள் வாழும் வஞ்சக நரிகளை கண்முன் ஓரங்க நாடகமாகவே கவிதைகாட்டுகிறது.
மரணம் வரும் வரை உப்பிநிற்கும் பலூன் தத்துவார்த்தம் பேசுகிறது.
யாரும் வாங்கவராத வீடு மர்மங்களைச்
சுமக்கிறது.
இன்றைய நீதிமன்றங்களில் நீதியின் நிலைமையை பேசும் கவிதைக்கு நின்று கை தட்டலாம்.
நேர்ந்ததைத் திரும்பத் திரும்பக்கேட்டும் அவள்சொல்வில்லை
கூண்டில் ஏறியதும் நீதிக்குக் கேட்டுவிட்டது
நீதிமன்றத்திற்கு அது கேட்கவில்லை. இந்தக்கவிதையின் பேசுபொருளின் அடர்த்தியைப் பேசிக்கொண்டே இருக்கலாம்.
கண்ணகிநிர்கதியாய் நிற்பதுபோல் என்கண்களுக்குத் தெரிகிறது.
ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின்
பசி வருகிறது என்ற வரிகளை என்ன சொல்லிப் பேச பேசமுடியும்.. ?
தொழில் தர்மமிலாதவன்
ஜோராக வளர்கிறான்
கருணையற்ற ஆத்திகன் அம்பாள் பெருமை பேசிப் பூரிக்கிறான்.
இருபக்கமும் நேர்மையாளர்கள்
நெருப்பில் நீந்தி அலைய வேண்டி இருக்கிறது என்று நேர்மைக்கு வலி கொடுப்பதை கவிதை எடுத்துக் கொடுக்கிறது.
இரண்டுகவிதை என்போன்றவர்களை என்னவோ செய்கிறது.
அது அடகு வைக்க முடியாத தாத்தா பெயர் வெட்டிய அண்டா
இன்னொன்று
நல்லா இருப்போம்டா என்ற சொற்களைசோற்றில் ஊற்றி ஊட்டி வளர்த்த தாய்..!
என் போன்றவர்கள் வாழ்க்கையிலும் இது போன்ற கதைகள் இருப்பதால் கவிதை என்னை நனைக்கிறது
நானும் நனைகிறேன்..
பசி மேய்கிறது வயலை
ஒன்றும் அறியாத
மாட்டை ஏன் விரட்டுகிறாய்
இப்படி நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் (Ninaivil Olirum Jimikki Kammal)
படிப்பவரை ரசவாதம் செய்கிறது.
தொட்டுக் காட்டியது கொஞ்சம்
சொல்ல நிறைய இருக்கிறது.
இதுவரை உள்ளூர் கீட்சாக மட்டும் கவனம்பெற்றதாக அவையடக்கத்துடன் சொல்லும் மக்கள் இயக்குனர்,
ஜிமிக்கிக் கம்மல் ஒளியால் உலகெங்கும் கவனம்பெறுவார்.
வாழ்த்துகள் மக்கள் இயக்குநர் அவர்களே..
நூலின் தகவல்கள் :
நூல் : நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் (Ninaivil Olirum Jimikki Kammal)
ஆசிரியர் : இயக்குநர் சீனு ராமசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.160
நூலைப் பெற : thamizhbooks.com
நூல் அறிமுகம் எழுதியவர்:
பொற்கைப்பாண்டியன்,
ஆசிரியர்-மகிழ்ச்சி மாத இதழ்,
மீனாட்சிமிஷன் மருத்துவமனை,
மதுரை.
82480 76743
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.