சீத்தாராம், ஓர் ஒளிரும் நட்சத்திரம் – பினராயி விஜயன்
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு, பொதுவாக இந்திய ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற அரசியலுக்கும் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கும் பலத்த அடியாகும். அவர் ஒரு சிறந்த மாபெரும் மார்க்சிய அறிவுஜீவியாவார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் கட்சியை வழிநடத்தி அதன் சில கடினமான காலங்களில் முன்னெடுத்துச் சென்றார்.
சீத்தாராம் யெச்சூரி, அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்த ஒரு மாணவர் தலைவராக பிரபல்யம் அடைந்தார். ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தபோது, அவசரநிலைக் காலத்தில் அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த பின்னணியில் அதனைக் கண்டித்திடும் விதத்தில், பிரதமர் இந்திரா காந்தி இல்லத்தை நோக்கி மாணவர்களை அணிதிரட்டிச் சென்று, இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளிக்கக்கூடிய அளவிற்கு தைர்யமிக்கவராக இருந்தார். அதன்பின்னர் இன்று வரையிலும் ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர் தலைவராக தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் உண்டு என்றால் அது தோழர் சீத்தாராம் யெச்சூரி மட்டுமேயாகும்.
ஜேஎன்யு வளாகத்திற்குள் பிரியா விடை அளிக்கப்பெற்ற ஒரே அரசியல் தலைவர் தோழர் சீத்தாராம் என்கிற உண்மை, அவர் முன்னாள் மாணவர்களாலும் இன்னாள் மாணவர்களாலும் எந்த அளவிற்கு மதிக்கப்பட்டிருக்கிறார் என்பதிலிருந்து தெரிய வருகிறது.

தோழர் சீத்தாராம், 33 வயதுடைய இளம் வயதிலேயே கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40 வயதாகும் சமயத்திலேயே அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் மாறினார். மாறிவரும் சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளுக்கேற்ப கட்சியில் அரசியல், நீண்டகால போர்த்தந்திரம் மற்றும் உடனடி நடைமுறை உத்திகளை வகுப்பதற்கான வரைவுகளைத் தயார் செய்வதில் அவர் முன்னணிப் பாத்திரம் வகித்தார். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நம்முடைய நிலைப்பாடுகள்தான் மிகவும் சரியானவை என்றும், வலுவானவை என்றும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளிலும் நம் பணிகள் மேம்பட்டிருக்கின்றன. பல்வேறு புதிய பிரிவுகளிலும் நம்மால் புக முடிந்திருக்கிறது.
சீத்தாராம் யெச்சூரி மிகச் சிறந்த படிப்பாளி. பல மொழிகளை மிக எளிதாகக் கையாளும் திறமை படைத்தவர். அவருக்கு இந்திய வரலாறு, சமூகம், கலாச்சாரம், அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச உறவுகளைப் பற்றிய அறிவு மிகவும் சிறப்பாக இருந்தது. அவருடைய சொற்பொழிவுகள் கேட்போர் அனைவரையும் நன்கு ஈர்க்கக்கூடிய விதத்தில் அமைந்திடும். மார்க்சிசம், லெனினிசம் மற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சாமானியர்களும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் முன்வைக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவர் எடுத்திடும் கட்சி வகுப்புகளை மாணவர்களும், இளைஞர்களும் மிகவும் விரும்புவார்கள். வெகுஜனங்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை எடுத்துக்கொண்டு, அவர் லெஃப்ட்வேர்ட் புக்ஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குநரானார்.
தோழர் சீத்தாராம் ஓர் உண்மையான மக்கள் நாடாளுமன்றவாதியாக இருந்தார். அவர் இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்திலும், நாட்டிலுள்ள சாமானிய மக்களையும், ஏழை மக்களையும் பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை எழுப்பி அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். உண்மையில், விளிம்பு நிலை மக்கள் மீதும், அடித்தட்டு மக்கள் மீதும் அவருக்கிறது ஆழ்ந்த கவலை, ஐமுகூ-1 ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பொது குறைந்தபட்ச திட்டத்தில் நன்கு பிரதிபலித்தது. அந்தத் திட்டம் உருவாகும்போது அதனை உருவாக்குவதற்கு அவர் மிகவும் உதவினார். மாநிலங்களவையில் அவர் உரைநிகழ்த்தும்போது அனைவராலும் அவர் உற்று நோக்கப்பட்டார், அடிக்கடி அவைத் தலைவரால் பாராட்டப்பட்டார்.
ஜனநாயகம், கூட்டாட்சி, சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் தேசத்தின் இறையாண்மை ஆகிய உயர் விழுமியங்களைப் பாதுகாப்பதில் சீத்தாராம் ஒரு கோட்டையாக நின்றார். நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்த ஆக்கப்பூர்வமான யோசனைகள் தேசம் தொடர்பான பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உதவின. தாராளமயம்-தனியார்மயம்-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய அவர், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றார். கடந்த ஐம்பதாண்டுகளாக தில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்று காவல்துறையினரின் கொடூரமான தாக்குதல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார். விவசாயிகள் போராட்டம் முதல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உட்பட அனைத்துப் போராட்டங்களிலும் அவர் முன்வரிசையில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 2ஜி ஊழல் முதல் அணுமின் நிலையங்கள் வரை அனைத்துத் துறைகள் குறித்தும் விரிவான அளவில் பேசி இருக்கிறார். ஐமுகூ-1 ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை, உணவுப் பாதுகாப்புத் திட்டம் முதலானவற்றின் கொள்கைகளை வரைவதில் முக்கிய பங்காற்றினார்.

பொதுவாக, குடியரசுத் தலைவர் உரைக்கு எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் திருத்தங்கள் ஏற்கப்படுவதில்லை. எனினும், சீத்தாராமின் சாதுரியமான தலையீட்டின் விளைவாக எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த இரு திருத்தங்களை ஆளும் கட்சியினர் ஏற்றுக்கொண்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவையில் பல சமயங்களில் தோழர் சீத்தாராம் பொதுவான அம்சங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். இவ்வாறு பல பிரச்சனைகளில் பல கட்சியினருக்கிடையே அரசியல் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியதன் மூலம் அவர் ஒரு சிறந்த அரசியல் மேதையாக (statesman) உயர்ந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நாட்டின் நலன் என்பதன் பொருள், நாட்டு மக்களின் நலன்தான். அவர்களின் நலன்களைக் காப்பதற்காக அனைத்து வாய்ப்புவாசல்களையும் அவர் ஆராய்ந்திடுவார்.
இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்க, அதன் மதச்சார்பற்ற கூட்டாட்சித் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதன் விவகாரங்களை நிர்வகிப்பதில் நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான கருத்து இருக்க வேண்டும் என்பதில் சீத்தாராம் உறுதியாக இருந்தார். நமது ஜனநாயகம் வெளிப்படையானதாக இல்லாவிட்டால், அது ஒருபோதும் பின்தங்கியவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவாக செயல்படாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேர்தல் பத்திரங்கள் போன்றவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளராக உச்சநீதிமன்றம் அளவிற்கு எடுத்துச் சென்றமை அவருடைய நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதேபோன்றே இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புமுறையைப் பாதுகாப்பதிலும், அவர் முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளார். மாநிலங்களின் உரிமைகளையும் நிதியையும் பறித்துக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லியில் நாடாளுமன்ற வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பங்குபெற வைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

நவீன தாராளமய சகாப்தத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சீத்தாராம் மதிப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கவைகளாகும். சமீபத்திய ஆண்டுகளில் அவர்களின் அவலநிலையைப் போக்கிட அவர் மேற்கொண்ட தலையீடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
தேர்தல் முடிவுகளில் நமக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள போதிலும் களத்தில் நாம் மேற்கொண்ட போராட்டங்கள் வெகுதூரத்திற்கு விரிவடைந்துள்ளன. ஆட்சியாளர்கள் தங்கள் வர்க்கத்தினரைக் குஷிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்திருக்கிறோம்.
நாட்டில் படுபிற்போக்குத்தனமான சக்திகள் வரலாற்றைத் தடம்புரளச் செய்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், சீத்தாராம் யெச்சூரி விவாதபூர்வமாகத் தலையிட்டு, அதனைச் சரியான பாதையில் செலுத்தினார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி கட்சியின் வரலாற்றிலும் முழுமையான அறிவினைப் பெற்றிருந்தார். மிக முக்கியமான தருணங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பினைச் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டுவார். மிகவும் சிக்கலான ஆத்திரமூட்டும் நிலைமைகள் உருவாகும்போதும்கூட, புன்னகையுடன் அவற்றைச் சமாளிப்பதற்குரிய தனித்துவமான புத்திசாலித்தனம் அவரிடமிருந்தது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், அரசியல் மற்றும் அமைப்புரீதியாக பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சீத்தாராம் யெச்சூரி எங்களுக்கு உதவி வந்தார். அவருடைய சித்தாந்தத் தெளிவும், ஸ்தாபனத்தின் மீதான அவருடைய அர்ப்பணிப்பும் உண்மையில் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்தன. கேரளாவில் எங்களுடைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, கடந்த எட்டு ஆண்டுகளாக அவருடைய வழிகாட்டுதலையும், ஆதரவையும் எப்போதும் பெற்று வந்திருக்கிறோம். இனி அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலும், அரசியல் தலைமைக்குழுவிலும் தோழர் சீத்தாராமுடன் இணைந்து பணியாற்ற முடிந்ததை தனிப்பட்ட பாக்கியமாகவே கருதுகிறேன். அவருடைய சக ஊழியராகவும், தோழராகவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் எப்போதும் நிறைய இருந்தது. கடுமையான தனிப்பட்ட இழப்புகள் மற்றும் உடல்நலக் குறைவுகளுக்கு மத்தியிலும், கட்சியும் சமூகமும் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்புகளில் அவர் எப்போதும் உறுதியாக இருந்தார். அவரது மறைவு தனிப்பட்ட இழப்பு மட்டுமல்ல, இந்திய மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் பெரும் இழப்பாகும்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுவதும் செய்ததைப் போலவே, தனது மறைவிலும், அறிவியல் மனப்பான்மையை உயர்த்திப்பிடித்துள்ளார். அவர் ஓர் ஒளிரும் நட்சத்திரம். அவர் அறிவியலில் ஓய்வெடுக்கிறார். செவ்வணக்கம் என் அன்புத் தோழரே!
(தமிழில்: ச.வீரமணி)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

