சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம் (seetukattil siruvargalukkana kanitham) – நூல் அறிமுகம்
சரியாக கோடை விடுமுறைக்கு முன் இந்த புத்தகம் என் கையில் கிடைத்தது. அப்போது குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் இதில் உள்ள விளையாட்டுகளை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட மிக தோதாக இருந்தது. அவ்வப்போது புத்தகத்தை எடுத்து பார்த்து ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடி பார்ப்போம். சீட்டுக்கட்டை குழந்தைகள் கையில் கொடுக்கிறீர்களே இது தவறல்லவா என்று பலரும் என்னிடம் கருத்து கூறினார்கள் எனினும் இது எண்களின் மேல் பரிச்சயம் ஏற்படுத்த சிறந்த வழி என்றே ஆசிரியரை போல் எனக்கும் தோன்றுகிறது.
சின்ன வயதில் நான் என் தாத்தா, பாட்டி, சித்தி என்று பெரிய பட்டாளத்தோடு அமர்ந்து விளையாண்ட சீட்டு, தாயக்கட்டை போன்ற விளையாட்டுக்கள் எனக்கு மெண்டல் மேத்ஸில்(மன கணிதம்) முன்னேற மிகவும் உதவியது என்று கூறலாம். எதிரணியை தோற்கடிக்க எத்தனை எண் தேவைப்படும் என்று யோசிப்பது ஒரு கணக்கு தானே, வேகமாக கூட்டல், பெருக்கல் செய்ய இந்த விளையாட்டுகள் மிகவும் உதவியாக இருந்தன என்றால் அதில் துளி கூட மிகையில்லை.
புத்தகத்தில் ஜிக்கர் என்ற ஜோக்கர் நம்முடன் கூடவே பயணிக்கிறார் நமக்கு தோன்றும் சில சந்தேகங்களையும் சில அறிய தகவல்களையும் நம்முடன் பகிர்கிறார். முதலில் சீட்டுக் கட்டில் என்னென்ன சீட்டுகள் உள்ளன, அவை எத்தனை தொகுப்புகளாக உள்ளன, அவை இரண்டு வண்ணங்களில் அமைந்திருப்பது, அவற்றில் இருக்கும் முகச் சீட்டுக்கள், எண் சீட்டுக்கள், எழுத்துச் சீட்டுக்கள் அனைத்தையும் நமக்கு அறிமுக படுத்துகிறார். எவ்வளவோ வருடம் சீட்டு விளையாடி வருகிறேன் என்றாலும் கிங் ஹார்ட் சீட்டில் மீசை இருக்காது, தலையில் கத்தி இருக்கும் என்பதை கவனித்ததே இல்லை.
சீட்டுக்களை அறிமுக படுத்தியவுடன் எளிய சில விளையாட்டுக்களை அறிமுக படுத்துகிறார். இவற்றில் பல விளையாட்டுக்களை நான் என் சின்ன வயதில் விளையாடி இருக்கிறேன் என்றாலும் என் குழந்தைகளை விளையாட வைத்ததில்லை. இந்த புத்தகத்தில் படித்த பிறகு நாங்கள் இதில் குறிப்பிட்ட சில விளையாட்டுகளை விளையாடி பார்த்தோம். குழந்தைகளுக்கு மெமரி கேம் என்ற நியாபக சக்தியை சோதித்து பார்க்கும் விளையாட்டு மிகவும் பிடித்தது.
நிகழ்தகவு என்பது probability, இதை பற்றி விளக்கி அது சார்ந்த ஒரு விளையாட்டை சொல்கிறார்…. எதற்காக வகுக்க வேண்டும் என்பதை கூறி அப்படியே ஒவ்வொரு எண்ணுக்கும் வகுப்படும் விதிகளை கூறுகிறார், இது குழந்தைகளுக்கு வகுப்பிற்கும் மிக உபயோகமாகவே இருக்கும். பகு எண்(composite நம்பர்), பகா எண்(prime நம்பர்) குறித்து விளக்கும் இடங்களும் அந்த விளையாட்டும் மிக அருமை.
காப்ரேக்கர் எண் என்று மூன்று மற்றும் நான்கு இலக்க எண்களை கூறுகிறார், அவை 495 மற்றும் 6174. எந்த மூன்று இலக்க எண்ணை எடுத்து கொண்டும்(அவற்றில் ஒரு எண் திரும்ப வரலாம்…உதாரணத்துக்கு 559) நீங்கள் 495 அடைந்துவிட முடியும், என்ன செய்ய வேண்டுமெனில் அந்த எண்ணில் இருந்து அதிகபட்ச எண் மற்றும் குறைந்த பட்ச எண்ணை உருவாக்கி அதிகத்தில் இருந்து குறைந்த பட்ச எண்ணை கழிக்க வேண்டும் இப்படி செய்து கொண்டே வந்தால் இறுதியில் நமக்கு கிடைக்கும் எண் 495. இதே போல நான்கு இலக்க எண்ணில் செய்து பார்த்தால் 6174 கிடைக்கும். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் அவசியம் புத்தகம் வாங்கி தீர்தது கொள்ளலாம். மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது இந்த விளையாட்டு.
சீட்டுக்கள் ஏன் தற்போதுள்ள வடிவத்தில் உள்ளன அவை ஏன் முக்கோணமாகவோ அல்லது வட்டமாகவோ இல்லை. தற்போதுள்ள வடிவத்தில் இருப்பதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் சிறப்பாக விளக்குறார்கள் ஆசியர்கள். சமச்சீர்தன்மை, BODMAS, PEDMAS போன்று அனைத்து விஷயங்களையும் விடாமல் சீட்டுக்கட்டில் செய்து காட்டுகிறார்கள். இதன் மூலம் எப்படி விளையாட்டாகவே கணிதத்தை கற்றுக் கொள்ளலாம், கற்றுக் கொடுக்கலாம் என்று எளிமையாக புரியவைக்கிறார்கள்.
சிறார் இலக்கியத்தில் கதை சொல்லல் மட்டுமல்லாமல் இதை போன்று விளையாட்டினை அடிப்படையாக வைத்து கணிதத்தை புரியவைக்கலாம் என்ற முயற்சி பாராட்டிற்குரியது. இதை தொடர்ந்து கிரிக்கெட்டில் கணிதம் புத்தகம் வந்தது தற்போது நடக்கும் புத்தக கண்காட்சியில் தேநீரில் கணிதம் வந்திருக்கிறது இவையெல்லாம் கணிதத்தை குழந்தைக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகச் சிறந்த முயற்சிகள், பெற்றோரும் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
நூலின் தகவல்கள் :
நூல் : சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
ஆசிரியர்கள் : விழியன் & சரண்யா
பதிப்பகம் : பாரதி புத்தகயாலயம்
பக்கங்கள் : 127
விலை : ரூ .150
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/seetukattil-siruvargalukkana-kanitham/
நூலின் அறிமுகம் எழுதியவர் :
இந்து
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.