நூல் அறிமுகம்: கௌரவமாய் ஒரு கௌரவக் கொலை (சாகித்திய அகாதமி விருது பெற்ற இமையம் அவர்களின் நாவல் “செல்லாத பணம்” நாவலை முன்வைத்து) – எஸ். ஜெயஸ்ரீநூல்: செல்லாத பணம் நாவல்
ஆசிரியர்: இமையம் 
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
விலை: ரூ. 270

சமீப காலங்களில் கிளைத்த ஒரு வார்த்தை “கௌரவக் கொலை”. இந்த வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம், கௌரவமற்ற முறையில் செய்யப்படும் ஒரு பாதகத்துக்கு இப்படி ஒரு பெயரா என்று ஆச்சர்யமாக இருக்கும். கொலை என்ற ஒரு மாபாதகச் செயலுக்கு, அதே கொலை காரர்களால் சொல்லப்படும் காரணம், குடும்ப கௌரவதுக்காக இந்தக் கொலையை செய்தோம் என்பது. கொலை என்பதை எல்லா அறநெறிகளும் ஒதுக்கி வைத்திருக்கும்போது, இதைச் சரியென்று ஒரு கூட்டம் சொல்லிதிரிகிறது. இப்படி நடந்த சம்பவங்களில் எல்லாமே அடிப்படைக் காரணம் சாதி என்ற ஒன்றுதான். சாதிகளிலும், அவர்கள் சார்ந்த சாதியை விட உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் வாழ்க்கையில் இணைவது என்றால் அதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. சாதியால் பிற்படுத்தப்பட்டவர் என்றால், அங்கே முளைக்கிறது கௌரவம். பின்னர்,இந்தக் கொலைகள் ஆணவப் படுகொலைகள் என்ற பெயர் கொண்டன. இது, சாதி சார்ந்த ஆணவம், தன் படிப்பு சார்ந்த ஆணவம், பொருள் வசதி சார்ந்த ஆணவம் இப்படி. இதில் எந்த விதத்திலும், தாழ்ந்தவரோடு கொள்ளப்படும் உறவு அவர்களுடைய அந்தஸ்துக்குக் குறைபாடாகக் கருதப்படுகிறது. இது அவர்களைக் கொல்லவும் தூண்டுகிறது.

இப்படிப்பட்ட ஆணவக் கொலைகள் நடந்து முடிந்த பிறகு, யாருக்கு என்ன லாபம்? ஒருவன்/ஒருத்தி இறக்கிறாள். கொலை செய்தவர்கள் சிறைக்குச் செல்கிறார்கள். யாருக்கும் பலனற்ற வாழ்க்கையாக முடிகிறது. இப்படியெல்லாம் நடக்காமல், பெண் விரும்பியவனையே திருமணம் செய்து கொடுத்து, அவள் தன்னையே மாய்த்துக் கொள்ள, மறைமுகமாக, தங்கள் உணர்வுகளால், மதிக்காத போக்கினால் தூண்ட முடியுமென்றால் எப்படி இருக்கும்? இப்படித்தானிருக்கும், “செல்லாத பணம்” ரேவதி போல்.

கோவேறு கழுதைகள், எங் கத போன்ற வெற்றி நாவல்களைப் படைத்த இமையம் அவர்களின் , சாகித்திய அகாதமி பரிசினை வென்றிருக்கும் நாவல் “செல்லாத பணம்”. இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், ஏதோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனால், பணம் என்பது, இந்த லஞ்ச, லாவண்ய யுகத்தில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படாத ஒரு சூழலைப் படைத்துக் காட்டியிருக்கிறார் நாவலசிரியர். எந்தப் பணம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் தன் மகளின் வாழ்க்கையை தீக்கிரையாக்கப்பட்டிருக்காதோ, எந்தப் பணம் அவள் வாழ்க்கையை உயர்த்தியிருக்குமோ, அந்தப் பணத்தை கட்டுக் கட்டுக் கட்டாக வைத்துக் கொண்டு தன் மகளின் உயிரைக் காப்பாற்றும்படியும், அவள் முகத்தை பார்க்க அனுமதிக்கும்படியும் அலைகிறார் நடேசன். கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பது போல, மகளின் அவல நிலைக்கு மறைமுகமாகக் காரணாமாக இருந்து விட்டு, அப்புறம் பணத்தால் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று நினைக்கும் நடேசன் வைத்திருக்கும் பணம் செல்லாத பணமாகிறது.நடேசன் ஒரு பள்ளித் தலைமையாசிரியர். ஒரு மகன்;ஒரு மகள். முருகன், ரேவதி. அமராவதி அவர் மனைவி. ரேவதி கல்லூரி முடித்த பிறகு, வளாகத் தேர்வில் கிடைத்த வேலைக்கும் செல்லவில்லை. திடீரென்று கலகலப்புக் குன்றியவளாய், திருமண ஏற்பாடுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ரேவதியிம் தோழி அருண்மொழி. அவளாலும் ரேவதியிடம் கலகலப்பைக் கொண்டு வர முடியவில்லை. காரணம், ரேவதி ஆட்டோக் கார ரவியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். அருண்மொழிக்கும், முருகனுக்கும் காதல் இருக்கிறது. (ஆனால், அது ஒரே சாதிக் காதல்)
ரேவதி ரவியைத் திருமணம் செய்து கொள்ளப் பிடிவாதம் கொள்வதற்குக் காலம் காலமாய் வளர்ந்த காதலெல்லாம் இல்லை. இவள் கோவிலுக்குப் போகும்போது பார்த்தவன், இவளையே சுற்றிச் சுற்றி வருகிறான். இருவருக்கும் அதிக உரையாடல்கள் கூட இல்லை. அவன், ஒரு முறை”நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்று கையை ப்ளேடால் கீறிக் கொள்கிறான். அதிலிருந்து அவள் அவன் மேல் இரக்கம் கொண்டு அவனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அம்மா போய் அவன் வீட்டில் பேசிப் பார்க்கிறாள். எதற்கும் ரேவதி ஒத்துக் கொள்ளவில்லை. நடேசன் குடும்பம், தாமே திருமணம் செய்து கொடுத்து விடுவோம் என்று முடிவெடுக்கிறது. சும்மா ஏனோ தானோவென்று ஒரு கல்யாணம். ரேவதியின் அந்தப் பிடிவாதத்திற்குப் பிறகே அண்ணனும், அப்பாவும் பேசுவதேயில்லை. திருமணத்திற்குப் பிறகு சுத்தமாக அவளைப் பற்றி நினைபப்து கூட இல்லை. அம்மா அமராவதி மட்டும், பெண்ணுடன் செல்பேசியில் பேசுவதும், அவ்வப்போது பணம் கொடுப்பதும் செய்கிறாள்.

ஒருமுறை அம்மா, ஆட்டோவுக்குக் கடன் தொகை கட்ட கொடுத்த தொகையிலிருந்து, தன் கணவன் குடிப்பதற்கு பணம் எடுத்து விட்டான் என்று ரேவதி கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் வர, அவள் வாய் வார்த்தையாக, “நான் சாக வேண்டியதுதான்” என்று சொல்ல, அவன் ‘சாவேன்” என்று பதில் சொல்ல, ரேவதி. ஆட்டோவுக்காக வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றிக் கொள்கிறாள். அதன் பிறகு, அவளை மருத்துவமனையில் சேர்த்து, ரவி, அவளுடைய அம்மா அப்பாவிற்கு தகவல் கொடுக்கிறான். சிகிச்சை ஒன்றும் பலனின்றி ரேவதி இறக்கிறாள்.ரேவதியின் பிடிவாதம், திருமணம் என்று சுருக்கமாக பகுதி ஒன்று முடிகிறது. 23 பக்கங்களில். அடுத்தடுத்த பக்கங்கள் மருத்துவமனையிலேயே நம்மை நிறுத்தி வைக்கிறது. நகர்கின்ற பக்கங்கள் வழியேதான் வாசகனை அந்தக் குடும்பங்களோடு கூடவே நம்மையும் இருத்தி வைக்கிறார் நாவலாசிரியர். ரேவதி தீக்குளித்த செய்தியை கேட்டவுடனேயே, நடேசன், தன் மனைவியிடம், இருக்கிற பணம், ஏடிஎம் கார்ட் எல்லாத்தையும் எடுத்துக்கோ என்று சொல்கிறார். அந்தப் பணத்தால் எந்த இடத்திலும் காரியம் ஆவதில்லை என்பதோடு, ரவிக்கும், அருண்மொழிக்கும், ஒரு வாத உரையாடல் நடக்கும் ஒரு பகுதியில், ரவி சொல்வதாக வரும். இப்போ இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு அலையறதுக்கு, அப்பவே இந்தப் பணத்தக் கொடுத்திருந்தா, நானும் கடன அடச்சிருப்பேன். அவளும் இப்படி செய்திருக்க மாட்டா; நீங்கள்லாம் அவள என்னிக்கோ கொன்னுட்டீங்களே; அவள எப்பப் பாத்தாலும் ஆட்டோக் காரன் பொண்டாட்டி அப்டின்னுதான சொன்னீங்க.” என்ற இந்த உரையாடல் மிகவும் கவனித்தக்கது. மனதில் ரவி என்பவன் குலத்தால் தாழ்ந்தவன் என்றும், அவன் ஆட்டோக்காரன், அவனால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று பொதுப்புத்தியில் இருப்பதை அந்தக் குடும்பம் அப்படியே பின் தொடர்கிறது. அவனையும், அந்தப் பெண்ணையும் சாதிப் பாகுபாடின்றி, அரவணைத்து, குடும்பத்தில் ஒருவனாக மதித்து அரவணைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று வாசிப்பவரால் உணர முடிகிறது. அரிவாளால் வெட்டினாலோ, துப்பாக்கியால் சுட்டோ கொன்றால்தான் அது கொலையா? உணர்வுகளால் கொன்று, வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதும் எல்லாம் கூட ஒரு உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதற்கு சமம்தானே?

இமையம் இந்த நாவலை எந்த வர்ணனைகளோ, தத்துவங்களோ எல்லாம் சொல்லி வளர்த்தவில்லை. நேரடியாக கதையை வாசகர் முன் வைக்கிறார். அவர் காட்டும், மருத்துவமனைக் காட்சிகளும், அதுவும் குறி[ப்பாக தீக்காய வார்டுகளும், ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தின் அலைகழிப்புகளும், மிக யதார்த்தமாக வாசகர் முன் விரிந்து, நாவலோடு ஒன்றிப் போகச் செய்கிறது. விருத்தாசலம், கடலூர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என அத்தனையும் அப்படியே கண் முன் விரிகிறது.

எந்த இடத்திலும் சாதி பற்றியோ, பாகுபாடுகள் பற்றியோ, சமூக நிலைமகள் என்பது பற்றியோ என எதுவுமே இல்லாமல், அப்படியே நடந்ததை நடந்தது மாதிரி விவரித்துச் சொல்வது போலத்தான் இமையம் நாவலை எழுதிச் செல்கிறார். அது வாசகனை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று சிந்திக்க வைப்பதில் நாவல் வெற்றி பெற்றிருக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்ற இமையம் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!