இமையம் எழுதிய செல்லாத பணம் - நூல் அறிமுகம் | Writer Imayam - Selllaatha Panam Book Review by Vijayakumar Periyakaruppan - https://bookday.in/

செல்லாத பணம்- நூல் அறிமுகம்

செல்லாத பணம் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல் : செல்லாத பணம்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு  : க்ரியா வெளியீடு
விலை : ரூ .275

‘செல்லாத பணம்’ – மனித வாழ்வில் பணம் செல்லாமல் போகும் இடமும் உண்டு என்பதை உணர்த்திடும் இமையத்தின் நாவல்.

இமையம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியரான இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. திராவிடர் கழகம் வழங்கும் ’பெரியார் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க விருது, கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது போன்ற பல விருதுகளை இமையம் பெற்றுள்ளார்.

‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ’செடல்’, ’செல்லாத பணம்’ போன்ற நாவல்கள், பெத்தவன் என்ற நெடுங்கதை மற்றும் ஏராளமான சிறுகதைகளை இமையம் எழுதியுள்ளார். ”தமிழ் எழுத்துலகின் கடந்த நூறாண்டு கால வளர்ச்சியில் இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலுக்கு இணையான வேறொன்று இல்லை” என எழுத்தாளர் சுந்தர ராமசாமி பாராட்டியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்ற இமையத்தின் ’செல்லாத பணம்’ நாவல் ஆங்கிலத்தில் ‘A Woman Burnt’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இந்நாவலைத் திரைப்படம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தீயில் வெந்தவர்களின் உடலைச் சுமந்துவரும் ஆம்புலன்சுகள் வந்தவண்ணம் இருக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தீப்புண் சிகிச்சைப் பிரிவுதான் நாவலின் கதைக்களம். செல்லாத பணம் நாவலைப் படித்து முடிக்க நினைக்கும் ஒருவர் முதலில் தனது மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும். எண்பத்தொன்பது டிகிரி தீக்காயத்துடன் நாவலின் நாயகி ரேவதி அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். மருத்துவமனை வாசலில் ரேவதியின் தந்தை நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருண்மொழி, கணவன் ரவி எனப் பலரும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். வாசகர்களாகிய நாமும்தான்.

நடேசன் – அமராவதி தம்பதியரின் அன்பு மகள் ரேவதி. அழகான பெண். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, வளாகத் தேர்வில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்தெடுக்கப்படுகிறாள். வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழி உடைவதைப்போல ரேவதி காதல் எனும் மாயவலையில் சிக்கிக் கொள்கிறாள்.

அவளைக் காதலிக்கும் காதலன் ரவி ஆட்டோ ஓட்டுபவன். படிப்பறிவு இல்லாத முரடன். குடிகாரன். ரேவதி போகுமிடமெங்கும் அவளைப் பின்தொடர்ந்து வந்து நச்சரித்துக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய உடல் முழுவதும் ரேவதியின் பெயரை அவன் பச்சை குத்திக் கொள்கிறான். பிளேடால் கையைக் கிழித்துக் கொண்டு அவளிடம் காதல் யாசகம் கேட்கிறான். அவனது ‘காதலை’ தவிர்க்க முடியாது தவிக்கிறாள் ரேவதி. காதல் பிச்சை கேட்டு அலையும் ரவியின் கெஞ்சலுக்கு மனமிரங்குகிறாள். அவனைத் திருமணம் செய்து கொள்வது என்ற விபரீத முடிவை மேற்கொள்கிறாள்.

ரேவதி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை நடேசன் பள்ளித் தலைமையாசிரியர். அண்ணனும், அண்ணி அருள்மொழியும் மென்பொருள் பொறியாளர்கள். அருண்மொழி அண்ணி மட்டுமல்ல ரேவதியின் கல்லூரித் தோழியும்கூட. ரேவதியின் பெற்றோர்கள், அண்ணன், அண்ணி எல்லோரும் ரவி-ரேவதி காதல் பொருந்தாக் காதல், அபத்தமானது என்று ரேவதியிடம் எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். இருப்பினும் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ரேவதி தனது குடும்பத்தாரிடம் பிடிவாதம்பிடிக்கிறாள்.

ரேவதியின் தாய் அமராவதி ரவியின் வீட்டுக்குச் சென்று அவனுடைய  பெற்றோரை, சகோதரியைச் சந்தித்து நிலைமையை விளக்குகிறார். ரேவதி – ரவி இடையிலான காதல் சாத்தியப்படாது, பொருந்தாது, ஒத்துவராது என்று சொல்லி ரவி வீட்டாரை எச்சரிக்கிறார். இனியும் ரவி தன் மகளைப் பின்தொடர்ந்தால் போலீசில் புகார் கொடுக்கப் போவதாக அவர்களிடம் மிரட்டுகிறார். “உங்க மகளை நீங்கள் கண்டித்துவைங்க. பெண் ஒத்துக் கொள்ளாமல் ஆண் அவளைப் பின்தொடருவானா”? என்று ரவியின் தாய் திரும்பக் கேட்கிறார்.

தற்கொலை செய்து கொள்ளப் போவதான ரேவதியின் தொடர் மிரட்டல்களுக்குப் பின்னர் வேறு மாப்பிள்ளை தேடும் வேலையை கைவிட்டுவிட்டு நடேசன் குடும்பத்தினர் ரேவதியின் பிடிவாதத்திற்கு இணங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் ரேவதி-ரவி திருமணத்தை அவர்கள் நடத்துகின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு வேலையில் சேர்ந்து சென்னையில் இல்லற வாழ்வை இனிதே தொடங்கலாம் என்ற ரேவதியின் கனவு பாழாகிப் போகிறது. அவளை வேலைக்கு அனுப்ப ரவி தயாராக இல்லை. ‘எங்கம்மா சொல்லிச்சு. ஆளு அழகா இருக்கா, வேலக்கி அனுப்பாதன்னு. தெருவுல, ஆட்டோ ஸ்டேண்டுல. புதுக் குழப்பம் புதுப் பிரச்சன வந்துடும்ன்னு சொன்னாங்க” – இது அவளை வேலைக்கு அனுப்பாததற்கு அவன் சொல்லிக் கொண்ட காரணம்.

ரேவதி வீட்டிற்குள் சிறைப்பிடிக்கப்படுகிறாள். தினமும் குடித்துவிட்டு வரும் ரவி, அதனைத் தட்டிக் கேட்கும் ரேவதியை அடித்துத் துன்புறுத்துகிறான். தெருவில் விழுந்து கிடக்கிறான். ஊரெல்லாம் அவனுக்குக் கடன். அவனுடைய கடனை அடைக்க அம்மாவிடமிருந்து ரேவதி பணம் பெறுகிறாள். அம்மா அமராவதி தவிர ரேவதி விஷயத்தில் நடேசன், முருகன், அருண்மொழி மூவரும் தலையிடுவதே இல்லை. ரேவதி வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பது தெரிந்ததும் அவர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொள்கின்றனர். ரேவதி அம்மாவிடமிருந்து அடிக்கடி பணம் பெற்றுச் செல்வதை அறிந்த போதிலும் அவர்கள் அதனைக் கண்டு கொள்வதில்லை. திருமணமான எட்டாண்டுகளில் ரேவதி இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். ரவி திருந்துவதாக இல்லை. நரக வாழ்க்கைதான் ரேவதிக்கு…

ஒரு கொடிய நாளில் ஆட்டோவுக்காக ரவி வாங்கிய கடனை அடைப்பதற்காக அம்மாவிடமிருந்து ரேவதி முப்பதினாயிரம் பணம் வாங்கி வருகிறாள். பணத்தை எடுத்துச் செல்லும் ரவி குடித்துவிட்டு வீடு திரும்புகிறான். அதற்குப் பிறகு நடந்தது யாருக்கும் தெரியாத மர்மமாக நாவலில் தொடர்கிறது.

தீக்காயங்களுடன் ரேவதியை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ரவி முதலில் எடுத்துச் செல்கிறான். தீவிர சிகிச்சை வேண்டி கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறான். செய்தி அறிந்த ரேவதியின் குடும்பத்தினர் அனைவரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து தீக்காயச் சிகிச்சைப் பிரிவின் வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.

தீக்காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை எப்படியிருக்கும், காயமடைந்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது என்பதை நாவலாசிரியர் விவரித்துச் சொல்வதைப் படிக்கும் போது நம் நெஞ்சம் பதறிப் போகிறது. தற்கொலை கொடியது. அதிலும் கொடியது தீக்குளித்துத் தற்கொலை செய்வது என்பதை அந்த விவரிப்பின் மூலம் அறிகிறோம்.

உடல் எத்தனை டிகிரி எரிந்துள்ளது என்பதைப் பொறுத்தே நோயாளி பிழைப்பாரா, இல்லையா என்பதறியலாம். எண்பத்தியொன்பது டிகிரி அளவிற்கு ரேவதியின் உடல் எரிந்துள்ளதால் அவர் பிழைப்பது அரிதாகிறது. ஆடைகளைக் களைந்து மிகக் குறைவான வெளிச்சத்துடனான குளிரூட்டப்பட்ட அறையில் நோயாளியைப் படுக்கவைக்கிறார்கள். டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே உள்ளே செல்கிறார்கள். நோயாளியின் நெருங்கிய சொந்தக்காரார் மட்டும் தினம் ஒருமுறை நோயாளியின் உடலைத் துடைத்துச் சுத்தம் செய்வதற்காக அனுமதிக்கப்படுகிறார். உள்ளே செல்பவர்கள் கையுறை, முகத்தில் மாஸ்க், உடலில் ஏப்ரன் அணிந்தே செல்ல வேண்டும். நோயாளி இன்ஃப்க்‌ஷன் ஆகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. ஐசியு அறையில் இருக்கும் நோயாளியைப் பார்க்க அனுமதி யாருக்கும் கிடையாது. அட்டெண்டர் ஒருவர் மட்டும் ஐசியுக்கு வெளியே காத்திருக்கலாம். சிகிச்சைக்கு வேண்டிய மருந்துகளை வாங்கித்தருவது, தினமும் காலையில் நோயாளியைத் துடைத்துச் சுத்தம் செய்வது அவரின் பொறுப்பாகும். நோயாளியை மயக்க நிலையிலேயே எந்நேரமும் வைத்திருக்கிறார்கள். மயக்க மருந்தின் திறன் குறைந்ததும் நோயாளி வலியில் கதறுவார். நர்ஸ் நோயாளிக்கு உடனே மேலும் மயக்க மருந்தைச் செலுத்துவார்.

ரேவதியின் உடல்நிலை பற்றிய சரியான பதில் கிடைக்காமல் குடும்பத்தினர் அனைவரும் தவிக்கின்றனர். ரேவதி பிழைக்கமாட்டாளா என்ற ஏக்கத்துடன் உண்ணாமல், உறங்காமல் அவர்கள் அனைவரும் மருத்துவமனை வாயிலில் காத்துக்கிடக்கின்றனர். மருத்துவமனைப் பணியாளர்களை மீறி நடேசன் ஒரு நாள் தீவிரச் சிகிச்சைப் பிரிவின் டாக்டர் இருக்கும் அறைக்குள் நுழைந்து விடுகிறார். டாக்டரிடம் மகளின் நிலைமை குறித்து கவலையுடன் கேட்கிறார். பத்துலட்சம் ரூபாய் நோட்டுக்கட்டுகளை, ஏராளமான நகைகளை டாக்டரின் மேஜையில் வைக்கிறார். “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை டாக்டர்! எப்படியாவது என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். “எங்களால் ஆன அனைத்து மருத்துவ உதவிகளையும் நாங்கள் உங்கள் மகளுக்கு செய்து வருகிறோம். இதே மருத்துவம்தான் நீங்கள் எங்கே சென்றாலும் கொடுப்பார்கள். உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இப்போது செல்லாத பணம். பணத்துக்கான மதிப்புள்ள இடமும், நேரமும் இதுவல்ல” என்று அமைதியுடன் மருத்துவர் சொல்கிறார். மிகுந்த ஏமாற்றத்துடன் நடேசன் திரும்புகிறார்.

ரேவதி குடும்பத்தார் அனைவரும் ரவியின் மீது மிகுந்த கோபமும், வெறுப்பும் கொண்டுள்ளனர். ஒரு நாள் மாலை மருத்துவமனை வாசலில் அருண்மொழி – ரவி இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் நாவலின் ஆன்மாபோல் விளங்குகிறது. ரவியிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்து உண்மையை அறிந்து கொள்ள முனைகிறார் அருண்மொழி. “எங்கள் வீட்டுச் செல்லப் பெண் ரேவதியின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டாய். இறுதியில் தீயிட்டுக் கொன்றும்விட்டாய். எப்படிடா உன்னை நம்பிவந்த பெண்ணை இப்படிச் செய்ய மனம் வந்தது” என்று கேட்கிறார். ”நான் ரேவதியைக் கொல்லவில்லை அக்கா”, என்று தொடங்கும் ரவி தன்னுடைய நியாயத்தை அவளிடம் சொல்கிறான். “எங்கள் திருமணத்துக்குப் பிறகு என்னை என்றாவது மதித்தீர்களா. கல்யாணமான இத்தன வருஷத்துல ரேவதியோட அப்பாவும் சரி, அண்ணனும் சரி எங்கிட்ட பேசுனதே இல்ல. இங்க இப்ப ஆஸ்பத்திரியில வந்துதான் பேசுனாங்க. நான் பொறுக்கிதான். ஆட்டோ ஒட்டுறவன்தான். தண்ணி அடிக்கிறவன்தான்; நீங்க எல்லோரும் சொல்கிற மாதிரி நான் சோத்துக்கு இல்லாத நாயிதான். நீங்க எல்லோரும் பெரிய படிப்பு படிச்சவங்க. பெரிய வேலையில் இருக்கிறவங்க.. பணம் உள்ளவங்க. எல்லாம் இருக்கு ஒங்ககிட்ட. ஆனா பெரிய மனசு மட்டும் இல்ல” அவனுடைய பேச்சைக் கேட்டு அருண்மொழி வியக்கிறார். ஆச்சரியம் மேலிட ‘இப்படிப் பேச எவ்வளவு திமிர் உனக்கு. நீ சொல்வதற்கு என்ன இருக்கு’ என்று அவனிடம் கேட்கிறார்.

”நிறைய இருக்கு அக்கா. எங்கிட்ட பேசினா என்னா; என்னை உங்க வீட்டுக்குள் விட்டா என்னா; எம்பிள்ளைங்கட்ட பேசுனா என்னா; இதுதான் ரேவதிக்கு வருத்தமா இருந்துச்சி; அதனாலதான் நான் திட்டுவேன். அதனாலதான் எனக்கும் அவளுக்கும் தினமும் சண்டை நடக்கும். நான் சல்லிப் பயன்தான்; இல்லன்னு சொல்லல. சல்லிப்பய சல்லிப்பயலாத்தான் இருப்பான். ஆனா, பெரிய மனுசன் பெரிய மனுசனா இருக்க வேண்டாமா? நான் தினமும் அவளுடைய உடம்புல அடிச்சேன். நீங்க அவளோட மனதில் அடிச்சீங்க. ரேவதிய நான் எரிக்கல. நீங்கதான் எரிச்சிங்க. என்னை குடிகாரப் பன்னி, பிச்சக்காரன், ஆட்டோ ஓட்டுறவன்னு ஒதுங்கிப் போனீங்களே. அதுதான் ரேவதியை எரிச்சது. அவள் அப்பா பத்து லட்சம் பணத்தைக் கொடுத்து இன்று தன் மகள் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார். இந்தப் பத்து லட்சத்தை அன்று என்னிடம் தந்திருந்தால் பத்து ஆட்டோ வாங்கி நல்லாப் பிழைச்சிருப்பேன். ரேவதி இறந்திருக்க மாட்டாள். என்று ரவி பேசி முடித்ததும் அருண்மொழி வாயடைத்துப் போகிறாள்.

ரேவதி தனக்குத்தானே தீவைத்துக் கொண்டாளா? அடுப்படியில் நடந்த விபத்தா? ரவி அவளைத் தீவைத்துக் கொளுத்தினானா? நடந்ததை யாரறிவர்? ரேவதி குடும்பத்தினர் அனைவரும் ரவிதான் தீவைத்துக் கொளுத்தியிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றனர். அவனைப் பார்க்கும் நேரத்தில் மட்டுமல்லாது, அவன் இல்லாத நேரத்திலும் அவனையே திட்டிக் கொண்டிருக்கின்றனர். போலீஸ் நடவடிக்கை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் ரவியோ அது அடுப்படியில் ஏற்பட்ட விபத்து என்று சாதிக்கிறான். தீவிபத்து என்பதால் யாரும் முறையாகப் புகார் செய்யமாலேயே போலீஸ் கேசாகிறது. ரேவதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு மாஜிஸ்டிரேட் வருகிறார். இதனைத் தொடர்ந்து போலீஸ் வாக்குமூலம் பெறுகிறார்கள். அவையிரண்டும் ஒத்துப்போகவேண்டும். குற்றவாளி தப்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை இருக்கிறது. எனவே இப்போது ரேவதி தன்னுடைய வாக்குமூலத்தில் என்ன சொல்லப் போகிறாள் என்பதில் கவலையுடன் இருக்கிறார்கள். ரேவதி உண்மையைச் சொன்னால்தான் ரவியைச் சிறைக்குள் தள்ள முடியும். இதை அவள் செய்வாள் என்று ரேவதி குடும்பத்தார் நம்புகின்றனர். போலீசும் எதிர்பார்க்கிறது.

என்னவொரு அதிர்ச்சி! ரேவதி தன்னுடைய வாக்குமூலத்தில் ”நான் அடுப்படியில் வேலை பார்க்கும்போது மேலிருந்த மண்ணெண்ணெய் கேன் கீழே விழுந்ததால் என் சேலையில் தீப்பற்றியது. என் கணவர் உடனே ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார். மயங்கி விழுந்த என்னை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். இதுவொரு விபத்து மட்டுமே. நான் தற்கொலைக்கு முயலவில்லை” என்கிறாள். விருத்தாசலம் காவல்நிலைய ஏட்டு கணேசனும், கான்ஸ்டபிள் ஆனந்தகுமாரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இந்தப் பொண்ணு கொலைகாரனத் தப்பிக்க விட்டுவிட்டதே என்று அங்கலாய்க்கின்றனர். ரேவதி குடும்பத்தாரைப் பார்த்து “நீங்களாவது இந்தத் திருட்டுப் பையன் மேல் எங்களுக்குச் சந்தேகம் இருக்குனு எழுதிக் கொடுங்கள்; இவன உடனே கைதுசெய்து, கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைக்கிறோம். நான்கு நாளாவது இந்தக் காலிப்பயல் சிறையில் இருக்கட்டும்”. என்கின்றனர்  ”எங்கள் அன்பு மகளே போனபிறகு இந்தப் பயல் என்ன ஆனால் எங்களுக்கென்ன. கோர்ட்டு, கேசுனு அலைய முடியாது” என்று சொல்லி நடேசன் விலகிக் கொள்கிறார்.

கான்ஸ்டபிள் ஆனந்தகுமார் உண்மையான அக்கறையோடு ”தாயை இழந்த குழந்தைகளை என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேட்கிறார். அவரின் இளகிய மனதை, கருணையுள்ளத்தைக் கண்டு அருண்மொழி வியக்கிறார். ”குழந்தைகள் இருவரும் உங்கள் கவனிப்பில் இருக்கட்டும். தாயில்லாக் குழந்தைகளை இந்த அயோக்கியனிடம் விட்டுவிடாதீர்கள். கெடுத்து விடுவான். உலகத்தில பெருசு கடலுன்னு சொல்றாங்க. அது பொய். அம்மாதான் பெருசு. என்று சொல்லி ஆனந்தகுமார் கண்ணீர் வடிப்பது கண்டு அவரை வணங்கி ரேவதி குடும்பத்தினர் நன்றி கூறுகின்றனர். ரவியும் அவன் நண்பர்களும் ரேவதியின் பூதவுடலைப் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். ரேவதி குடும்பத்தார் காரில் ஏறி மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேறும்போது மருத்துவமனைக்குள் மற்றுமொரு ஆம்புலன்ஸ் நுழைகிறது. அதுதானே அந்த மருத்துவமனையின் சிறப்பும், இயல்பும்…

பணம் பத்தும் செய்யும் என்று நம்புகிறோம். இல்லை; அதன் பாய்ச்சலுக்கு ஓர் எல்லை இருப்பதை உயிருக்குப் போராடும் சூழலில் உணருகிறோம். ரேவதிக்கு உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடும் போது நடேசன் குடும்பத்தினர் அதனை உணர்கின்றனர். பாதாளம் வரை எல்லாம் பணம் பாயாது என்ற கசப்பான உண்மை அவர்களுக்குத் தெரிய வருகிறது. தங்களிடம் இருக்கும் பணம் செல்லாத பணமென்று தெரிந்து கொள்கின்றனர்.

ரவி – ரேவதி திருமணம் சாதி மறுப்புக் காதல் திருமணம் மட்டுமல்ல. வர்க்க வேறுபாடுடையதும்கூட. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. ஏணி வைத்தாலும் ரேவதி வீட்டு வசதியை ரவியால் எட்டிப் பிடிக்க முடியாது. ரவி வீட்டு ஏழ்மையே ரேவதி குடும்பத்தாரை உறுத்தியது. நடேசன் வீட்டு பணத்திமிர் ரவி குடும்பத்தாரிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்தியது. முதன் முதலாக ரேவதியின் தாய் ரவியின் வீட்டுக்குப் போகும்போதே அது வெளிப்படுகிறது. ரவி வீட்டின் ஏழ்மை கண்டு ரேவதியின் தாய் அமரவாதி முகம் சுளிக்கிறார். அவரைக் காட்டிலும் கூடுதலாக ரவியை ரேவதியின் தந்தையும், அண்ணனும் முற்றிலுமாக வெறுக்கிறார்கள். ஒதுக்குகிறார்கள். அவனைக் கண்டாலே ஒதுங்கிக் கொள்கின்றனர். ரவியிடமிருந்து தங்களைப் பிரித்துக் காணும் வர்க்கப் பெருமையால் மகள், தங்கையை இழக்கவும் தயாராகின்றனர். காதலுக்கு எதிராக சாதிப் பெருமையுடன் வர்க்கப் பெருமையும் சேரும்போது வாழ்க்கை தடம் புரண்டு அனைவரையும் பாதிப்பிற்குள்ளாவதை இந்நாவல் நமக்கு உணர்த்துகிறது.

நூல் அறிமுகம் எழுதியவர் :

பெ.விஜயகுமார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *