செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்
ஆசிரியர்: பேரா. சிடி. குரியன்
தமிழாக்கம் : ச. சுப்பாராவ்
விலை : ரூ.170
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com
பொருளியலின் பொருளைப் புரிந்து கொள்ள முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் பொருளியல் மாணவன் இல்லை. பொருளியல், வரலாறு மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்கள் கல்லூரியையே கலக்கும் போது விஞ்ஞானம் பயிலும் நாங்கள் அனைவரும் வசூல் ராஜாவில் வரும் சாம்புவின் மகன்கள் போல அமைதியாக இருப்போம். மனதளவில் பொருளியல் எளிதானது; கூறியதையே திரும்பக் கூறி பக்கம் பக்கமாக எழுதினால் போதும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் பணியின் பொருட்டு பொருளியலைப் பயில நேர்ந்த போது அதன் ஆழம் புரிந்தது.
பேரா. சி.டி.குரியனின் “செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்” புத்தகம் அந்த அளவிலான அறிமுகம் கூட இல்லாமல், பொருளியலைப் புதிதாக அணுகுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் கல்விப்புலம் சார்ந்த ஒருவரின் புத்தகம் என்றதும் புரிந்து கொள்ள முடியாமல், வறட்டுத்தனமாக இருக்குமோ என்ற அச்சமும், தயக்கமும் புத்தகத்தைத் தொடங்கவிடவில்லை. ஆனால் படித்து முடித்ததும், இப்புத்தகம் முதல் மரியாதை பட கேசட்டில் பாரதிராஜா கூறுவதைப் போக “தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் உலவிய திருப்தி அளிக்கிறது”.
அறிமுகத்தைத் தொடர்ந்து, அடிப்படை உறவுகள், இடைச் செயல்பாட்டாளர்கள், உற்பத்தி அலகுகள் (அரசு, தேசிய மற்றும் உலகப் பொருளாதாரம்) இந்தியப் பொருளாதாரம் என நான்கு பாகங்களாக நூல் அமைந்துள்ளது.
கிராக்கி, அளிப்பு, ரிகார்டோவின் வாடகைக் கொள்கை ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் போகிறார் என்ற முன்முடிவுடன் அணுகுகையில், மூன்று கேள்விகளைத் தான் கேட்க இருப்பதாக ஆசிரியர் முன் வைக்கிறார். அவை (1) யாருக்கு எது சொந்தம்? (2) யார் என்ன செய்கிறார்? (3) யார் எதைப் பெறுகிறார்? என்பன. கேள்விகளின் ஆழம் தொடுத்த தாக்குதலில்தான் முழுப் புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்தேன். கதையின் முதல் பத்தியில், சுவரில் துப்பாக்கி தொங்குவதாக ஒரு வரி வந்தால் கதை முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடிக்க வேண்டும் என செகோவ் கூறியதாகப் படித்திருக்கிறேன். இந்த மூன்று கேள்விகளும் அந்தத் துப்பாக்கியைப் போன்றவை. அவை வெடிப்பதும் நூலின் இறுதிப் பகுதியில்தான்.
இடைச்செயல்பாடு ஆற்றும் ஒரு நிறுவனத்தின் ஊழியன் என்பதால் முதல் இரண்டு பகுதிகள் பரிச்சயமாகி இருக்க மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்கள்தாம் என்னைக் கவர்ந்தன. அரசாங்கம் வரி விதித்தாலும் அச்செயலின் மூலம் அது அரசின் பணியையே செய்கிறது என்ற சிறிய உதாரணத்தில் தொடங்கி அரசு மற்றும் அரசாங்கத்திற்கான வேறுபாட்டை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். ஆடம் ஸ்மித் கூறும் அரசின் மூன்று பொறுப்புகளை முன்வைக்கும் போதும் அவர் நீதி பரிபாலனம் (Jurispudence?) என்பதன் உடைமைகளைப் பாதுகாப்பதைக் கூறுவதும் பொதுப்பணிகள் என்பவை தனியாருக்கு லாபம் ஈட்டுபவை அல்லவையே அன்றி அவர்களால் செய்ய முடியாதவை அல்ல என்று ஸ்மித் கூறுவதிலும் ஆசிரியர் அழுத்தம் தருகிறார். அரசு – நாடு – தேசம் என்ற பிரிவினைகள் குடிமையியல் மற்றும் பொது நிர்வாகத்தில் விரிவாகப் பேசப்படுபவை என்றாலும் பொருளியலில் அவற்றின் பங்கு குறித்து ஆசிரியர் அளிக்கும் விளக்கம் ஆழமானது.
தொடர்ந்து ஒரு தேசியப் பொருளாதாரத்தின் காரணிகளாக இருக்கும் விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் அவை வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு பற்றிக் கூறுகிறார் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே இந்தக் காரணிகள் வளர்ச்சி விகிதத்தில் மாறுபட்டு செயலாற்றும் தன்மையையும் கவனிக்க வேண்டும். பொருளாதார வளார்ச்சி சேவைத்துறையின் விரிவாக்கத்தோடு ஏற்பட்டால், அந்த வளர்ச்சியின் பெரும் பகுதி மாயத் தோற்றமாக இருக்க வாய்ப்புண்டு என்று ஆசிரியர் கூறுவதையும், புத்தகத்தின் இறுதிப் பகுதியில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிக் கூறுகையில் சேவைத்துறை வியத்தகு சாதனை படைத்திருப்பதைக் குறிப்பிடுவதையும் சேர்த்துப் படித்தால் நமது அரசியல் கட்சிகள் முன் வைக்கும் வளர்ச்சி விகிதத்தின் உள் அர்த்தம் புலப்படும்.
அரசியல் பற்றிய பிரக்ஞை இன்றி பொருளியலை பயில முல்வது வீண். பல நாடுகளில் பொருளாதார பலம் உடையவர் யார்? அரசியல் அதிகாரம் உடையவர் யார்? என்று பிரித்துப் பார்ப்பதில் உள்ள சிரமம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதும் வசதி படைத்த ஒரு சதவிகித்தினர், அந்த ஒரு சதவிகிதத்தினருக்கு அதே ஒரு சதவிகிதத்தினரின் மூலமே இயங்குவது (of the one per cent, by the one per cent, for the one per cent) என்பதும் இதைத்தான் காட்டுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விவசாயத்தை முதன்மையாகக் கருதி, அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மானியம் அளித்து அது தொடர்பான இறக்குமதிக்கு அதிகபட்ச சுங்கம் வசூலிக்கையில், நமது அரசாங்கங்கள் ஏழைகளின் நலனைப் பாதுகாப்பதா அல்லது பெரும் வியாபாரிகளின் நலனைப் பாதுகாப்பதா என்ற கேள்வி எழும் போதெல்லாம் பின்னவரின் பக்கமே சாய்கின்றன. கிடங்குகளில் அழுகும் தானியங்களை ஏழைகளுக்கு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கூறிய போது அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது என அன்றைய பிரதம மந்திரி கூறியது நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தியப் பொருளாதாரத்தின் தோற்றம், மற்றும் வளர்ச்சி குறித்த இறுதிப்பகுதியில் ஆசிரியர் 90களில் அப்போதைய அரசாங்கம் வாங்கிய உலக வங்கிக் கடன் பற்றி எழுதும் போது, இணைய வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் அதைப் பற்றித் தெரிந்து கோள்ள பொது நிதியியல் புத்தகங்களைப் பதைபதைப்புடன் தேடி ஓடிய நாட்கள் நினைவிற்கு வருகின்றன. இறுதியில் என்ன பலன் ? ஆசிரியர் கூறுவது போல சீர்திருத்தங்கள் பின்பு வந்த அரசாங்கங்களின் கொள்கைகள் ஆகி விட்டன. இருப்பினும் நாம் நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசியக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கொள்கைகளை (Directive Principles of State Policy) மீறி சட்டங்கள் வந்து விட முடியாது. நீதித்துறை நம்மைப் பாதுகாக்கட்டும்.
தமது உரையில் மொழிபெயர்ப்பாளர் கூறி இருப்பது போல, எளிதான பிரதியை எளிதான நடையில் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானது. தோழர் சுப்பாராவ் அதை மிக நன்றாக செய்திருக்கிறார். பம்ப் பிரைமிஸ் பற்றிய அவரது குறிப்பும், தாமஸ் ஹார்டியின் Far From the Maddening Crowdஐ ஆசிரியர் கோர்த்துக் கூறுவதை வியப்பதிலும் அவர் மிளிர்கிறார். மிக எளிய நடையில் புத்தகம் ஓடி விடுகிறது.
எளிமையான மொழிபெயர்ப்பிற்காக அவருக்கும், இந்த நூல் பரவலாக வாசகர்களை அடைய வேண்டும் என்பதற்காக இதை மொழிபெயர்க்கத் துணிந்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.
எழுதியவர்:
வே. கண்ணன்
மேலும் படிப்பிக்க : பேராசிரியர் சி.டி.குரியன் – இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தங்களின் இந்த நூல் அறிமுகமே இந்த நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தூண்டுகிறது. சிறப்பாக இருந்தது. தங்களின் ( of, by, for the one percent) அருமை. அரசியலும் பொருளாதாரமும் இணைந்தே நடைபெறுவதை சிறந்த முறையில் அலசி உள்ளீர்கள். வாழ்த்துகள் 👏👏
அருமையான பதிவு. நூல் அறிமுகம் நன்று. அறிமுகமே பல சிறப்பான கருத்துக்களை விளக்கியுள்ளார். புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. மேலும் எனது இணைத தோழர ச. சுப்பாராவ் அவர்களுக்கு வாழ்த்துத்துக்கள். மேலும் நமது Book day ..யில் ச.சுப்பாராவ் என்பதற்கு பதிலாக ஆங்கிலத்தில் Su.Subb roa என்று உள்ளது என எண்ணுகிறேன். சரிபார்க்கே வேண்டும் நன்றி ….