Book review banner featuring the Tamil novel "கெளிமதம்" by Selvakumar Paechimuthu with the author's portrait and a realistic 3D book mockup.

செல்வக்குமார் பேச்சிமுத்துவின் “கெளிமதம்” நாவல் – நூல் அறிமுகம்

இந்நூல் (“கெளிமதம்” நாவல்) யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் டிசம்பர் 2024-ல் வெளியான எழுத்தாளரின் முதல் நாவல், சீர் வாசகர் வட்டத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்புக்கான விந்தன் விருதை பெற்றுள்ளது..

இந்நாவலில் “கெளிமதம்” என்ற சொல் “களிப்பால் வரும் திமிர்” எனப் பொருள்படுத்தப்பட்டுள்ளது. மனிதனின் ஆணவமும் அதன் விளைவான வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் மையச் சிந்தனையாக முழுக் கதையும் நகர்கிறது..

இந்த நாவலின் முக்கியமான பலங்களில் ஒன்று அதன் தென்காசி வட்டார வாழ்க்கைச் சித்திரிப்பு ஆகும்.. தென்காசியிலிருந்து கேரளா செல்லும் வழியில் அமைந்துள்ள பள்ளியூர் மையமாகக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள செங்குளம், கொன்னங்காடு, பைம்பொழில், கீழக்கரை, கேசவனூர், புதூர், கட்டளை கட்லுர், பூவையார் குடியிருப்பு, கருமத்தம்பட்டி, மாடனூர், பண்பொழி போன்ற பல ஊர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளன..

இந்த இடவியல் விவரங்கள் நாவலுக்கு வலுவான நிஜத்தன்மையை அளித்து, நம்மை நேரடியாக அந்த நிலப்பரப்புக்குள் அழைத்துச் செல்வதோடு வட்டார மொழி வாசனை கூடுதல் சிறப்பு தருவது இப்படைப்புக்கு *வட்டார நாவல்* என்ற அடையாளத்தை நிர்ணயிக்கிறது..

கெளிமதம் நாவல், தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு மையக் கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் சமூகப் படைப்பாகும். ராக்கம்மா என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, சமூகத்தின் மறைமுகமான விரிசல்கள் மற்றும் சமூகத்தால் பெண்ணுக்கு நேரிடும் சிக்கல்கள் மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளன..

ராக்கம்மா என்ற கதாபாத்திரம் ஒரு பெண்ணின் உள் வலிமையையும், சமூகத்தின் வெளிப்படையான முரண்பாடுகளையும், ஒரே நேரத்தில் வெளிக்கொணரும் ஆழமான உருவகம்..

ஆரம்பத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவளாகத் தோன்றும் ராக்கம்மா, குடும்பத்திற்காக எதையும் எதிர்கொள்ளும் மனப்பாங்கு உடையவளாக, தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிவு கொண்டவள் ஆனால், அவள் வாழும் அமைப்பு அவளது தனித்துவத்தையும், மனநிலையையும், புரிந்துகொள்ளத் தவறுகிறது..

விபச்சாரத் தொழிலில் அவள் ஈடுபட வேண்டிய நிலை உருவாகும்போது, அது அவளது தனிப்பட்ட விருப்பத்தின் விளைவாக அல்ல மாறாக, சூழ்நிலைகளின் கட்டாயம் என்பதை நம்மால் உணர முடிகிறது, இதன் மூலம், ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு சமூக அழுத்தங்களாலும், குடும்பப் பின்னணியாலும் பாதிக்கப்படுகிறது என்பதை எழுத்தாளர் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்..

ஆரம்பத்தில் அவளை ஆதரித்தவர்களே பின்னர் அவளை ஒதுக்குவது, சமூகத்தின் இரட்டை முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.. அவளது அழகு, உபசரிப்பு, ஆணவம் ஆகியவை அவளை உயர்த்தியவையாக இருந்தாலும், அதே அம்சங்களே அவளது வீழ்ச்சிக்கும் காரணமாக மாறுகின்றன..

முருகையா, முத்தம்மா போன்ற பெற்றோர் கதாபாத்திரங்கள், பெற்றோரின் பொறுப்பையும், தவறுகளையும் பிரதிபலிக்கின்றன.. ஆரம்பத்தில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள், பின்னர் தளர்ந்து, இடையில் அவர்களே மகளின் துயரத்திற்கு காரணமாக மாறுவது, குடும்பத்தினுள் புரிதல் குறைபாட்டை வெளிக்காட்டுகிறது..

இந்நாவலின் மையச் சிந்தனை, ஒரு பெண் தன்னிலை உணர்ந்து, சமூகத்தின் பார்வையை விமர்சன ரீதியில் அணுகி, தன் சுயமரியாதையை காக்கும் மனத் தைரியம் கொண்டிருக்க வேண்டும்..

ராக்கம்மாவின் வாழ்க்கையில் அத்தகைய மனநிலையில் இல்லாமையாலும், ஆணவத்தால் ஏற்படும் வீழ்ச்சியை எடுத்துக்காட்டி, ஒரு பெண் தன்னுடைய வாழ்வை நேர்மையாகவும் தன்னம்பிக்கையுடனும் கட்டியெழுப்ப முன்வராதபோது, அவளுக்கு நேரும் அநீதிகள் அவளை மட்டுமல்லாமல், அவளைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது..

மொத்தத்தில், ராக்கம்மா கதாபாத்திரம், பெண்களுக்கான எச்சரிக்கைச் சின்னமாகவும், பெண்களின் சுயமரியாதை மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் சக்திவாய்ந்த எச்சரிப்புமாய் அமைகிறது..

மேலும், இந்நாவலுக்கு அழகூட்டுவது கிராமிய வாழ்வின் மணமும், மனமும் ஒன்றாக கலந்து உருகும் தருணங்களையும், இயற்கையோடு இணைந்து வாழும் ஒரு சமூகத்தின் அன்றாட அனுபவங்கள், குளம், குட்டை, நதி, மலை, மரங்கள், பூக்கள், மலை, கோயில், வயல், எல்லாம் சேர்ந்து ஒரு உயிருள்ள உலகத்தை உருவாக்குகின்றன..

குறிப்பாக, பாரம்பரிய சமையல் கதைக்குள் நுட்பமாக பின்னிப் பிணைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அதிலும், திருமண விழாக்களில் அவர்கள் செய்யும் பாதி விளைந்த பலாக்காயை நறுக்கி, பனை ஓலையில் காயவைத்து, அவித்து, தேங்காய் எண்ணெயில் வதக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு கலந்து, இறுதியில் இளம் தேங்காய் துருவலுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து மணம் வீசும் *பலாக்கா தொவரம்* தயாராகும் அந்தச் செய்முறை வாசிக்கும்போதே நாவில் எச்சில் ஊறியது.. இது ஒரு சாதாரண சமையல் விளக்கம் அல்ல, அது ஒரு தலைமுறையின் நினைவுகளையும், பண்பாட்டையும் சுமக்கும் ஒரு சுவைமிகு சின்னமாகிறது..

இவ்வகை உணவு விவரிப்புகள் கதைக்கு வெறும் சுவையைக் கொடுப்பதல்ல அவை அந்த மண்ணின் அடையாளத்தை, விவசாயத்தின் நெருக்கத்தை, உழைப்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன..

மொத்தத்தில், இந்நாவல் இயற்கை, உணவு, மொழி, வரலாறு, சமூக நீதி ஆகியவை ஒருங்கிணைந்து, நம் மனதில் நீங்காத ஒரு கிராமிய வாசனையை விதைக்கும் சிறந்த படைப்பாக திகழ்கிறது..

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:
“கெளிமதம்” நாவல்
ஆசிரியர்:செல்வக்குமார் பேச்சிமுத்து
வெளியீடு:
யாவரும் பதிப்பகம்
விலை: 
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.சுகிர்தா,
நெல்லை.

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *