செம்மயமான நூற்றாண்டு பதிவுகள் - Semmayamana Nootrandu Pathivukal | பா. உதயகண்ணன்

வரலாற்று நூல்கள் பலவும் 300, 400 பக்கங்களில் அச்சிட்டு காத்துக் கிடக்கும் சூழலில் ( வாழ்க்கை வரலாறோ அல்லது இயக்க வரலாறோ ) வெறும் 32 பக்கங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறான்டுகால சாதனைகளை சுவைபட கூறியுள்ளார் கவிஞர் முல்லைவாசன்.

கவிஞர் முல்லைவாசன் குடியாத்தத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்ட தமுஎகச வின் பல முக்கிய பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு வருபவர்.வேலூர் மாவட்ட கவியரங்கப் புலி.இவரின் கவிதை வீச்சைக்கண்டு இன்னமும் பல கவிஞர்கள் உருவாகிக்கொண்டே உள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட கவிதை கட்டுரை என பல நூல்களை வெளியிட்டிருப்பவர்.

கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தோன்றி நூறாண்டு கடந்த நிலையில் அது சாதித்த சாதனைகளை அதற்காக அக்கட்சி உறுப்பினர்கள் செய்த தியாகங்களை ரத்தினச் சுருக்கமாக விவரித்துள்ளார் கவிஞர்.

கட்சி துவக்குவதே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே இலக்காக உள்ள சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவது அதிகார மாற்றத்திற்கு மட்டுமல்ல சமுகமாற்றத்திற்காகவும்தான் என எஸ்.தயாநிதி முன்னுரையில் கூறியிருந்தது கட்டுரைகளை வாசிக்க ஆர்வத்தை தூண்டியது.

32 பக்க புத்தகம் .அதில் 6 தலைப்புகள்.ஒவ்வொன்றும் 4 அல்லது 5 பக்க அளவில். ஏராளமான செய்திகளை சுவை குன்றாமல் எளிய வார்த்தைகளைக்கொண்டே கட்டுரையாக்கியிருக்கிறார்.

முதல் கட்டுரை பொதுவுடமை இயக்க தோற்றம் பற்றி கூறுகிறார்.முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது இந்தியாவில் இல்லை. ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்டில்தான்.அதுவும் நான்கு பேரைக்கொண்டு.அதன் பிறகுதான் இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் தனித்தனி குழுக்களாக செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரத்திற்காக போராடுகிறது. பூரண விடுதலை கோரிக்கையை முதன் முதலில் எழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான் . 1921 ல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அறைகூவல் விடுத்தது.அதற்கு முன்புவரை பூரண விடுதலை கோரிக்கை அப்போதிருந்த கட்சிகள் வைக்கவில்லையெனவும் முழுமையான சுதந்திரம் , அனைவருக்கும் வாக்குரிமை, இந்திய சமஷ்டி குடியரசு அமைத்தல் போன்றவற்றையே கோரிக்கையாக வைத்திருந்தது எனவும் வாசிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. கான்பூர் சதி வழக்கு மீரட் சதி வழக்கு போன்ற சதிவழக்குகளை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்ட விதத்தினையும் அந்த வழக்குகளை கட்சியின் பிரச்சாரமாக எப்படி பயன்படுத்தினார்கள் என்பதையும்
இக் கட்டுரையை மூலம் அறிய முடிகிறது.

இரண்டாம் கட்டுரை நிலக்குவியலை எதிர்த்து பொதுவுடமை இயக்கம் நடத்திய மகத்தான போராட்டங்களை விவரிக்கிறார். வங்கத்தில் 15 ஆண்டுகள் நடைபெற்ற தெபாகா இயக்க நிலவுடமை எதிர்ப்பு போராட்டம் பற்றியும் 1977 ல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் நிலவுச்சவரம்பு சட்டத்தின் மூலம் 12 லட்சம் உபரி ஏக்கர் நிலம் சுமார் 30 லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்ததையும் கவிஞர் பெருமிதமாக விவரித்துள்ளார்.இன்னொன்று தெலுங்கானாவில் நடைபெற்ற போராட்டங்கள், இன்னல்கள், தியாகங்கள் பற்றியும் சாதித்த சாதனைகள் பற்றியும் ( மூவாயிரம் கிராமங்களை விடுவித்து 10 லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு வழங்கியது) கூறியுள்ளார். தமிழகத்தில் தஞ்சை, கேரளாவில் திருவிதாங்கூர், திரிபுராவில், மகாராஷ்டிர வாந்தி இன மக்களின் போராட்டம் என அவரது விவரிப்பு பொதுவுடமை கட்சியின் மீது மதிப்பைக்கூட்டுகிறது

மூன்றாவதுஹகட்டுரை மொழிவாரி மாநிலங்கள் பற்றியது.ஆந்திரா மாநிலம் அமைய பெட்டிஸ்ரீராமுலு செய்த தியாகம் தமிழ்நாடு அமைய சங்கரலிங்கம் செய்த உயிர்த்தியாகம் விசால ஆந்திரா ,ஐக்கிய கேரளா, சம்யுக்தா மகாராஷ்டிரா, மகா குஜராத் போன்ற இந்தியா முழுமையும் மொழிவழி மாநில கோரிக்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து சென்றதை தெளிவாக பதிவு செய்துள்ளார்.

நான்காவது கட்டுரை ஜனநாயகத்தைப் பற்றியது. நாடாளுமன்ற செயல்பாடுகள் அரசியல் சாசனம் வழங்கிய சனநாயக நெறிமுறைகளை காப்பது என கட்சி காட்டிய அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் விவரிக்கிறார்.

ஐந்தாவது கட்டுரை தொழிற்சங்கத்தை பற்றியது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மேதினம் கொண்டாடப்பட்டது என்ற தகவலை அருமையாக விவரித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க போராட்டங்கள் ,தலைமை தாங்கிய தலைவர்கள் , தொழிலாளர்களை ஒருங்கிணைக்க எடுத்த முயற்சிகள் பற்றி நெஞ்சம் பதற பதற விவாதிக்கிறார். தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற தொழிற்சங்க போராட்டங்களும் இக் கட்டுரையில் அடங்கும்.

ஆறாவது கட்டுரை பெண்விடுதலை பற்றியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களில் பங்காற்றிய பெண்கள் பற்றியும் அவர்கள் சந்தித்த தூயரங்கள் பற்றியும் போராட்டங்களில் வீராங்கணைகளாக செயல்பட்டது பற்றியும் கூறியிருக்கிறார்.

வகுப்பு எடுப்பவர்களுக்கும் இளம் தலைமுறையினர் பொதுவுடமை இயக்க வரலாற்றை சுருக்கமாக அறிந்து கொள்வதற்கும் ஏற்ற புத்தகம்.
கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களை சந்தித்து ‘ நீங்கள் சாதித்தது என்ன ? ‘
என்று கேட்டால் இப்புத்தகம் கொண்டு பதில் கூறிவிடலாம்.மிகச்சிறப்பான இப்புத்தகத்தை வடிவமைப்பு செய்து வழங்கியிருப்பவர் பா. உதயகண்ணன் அவர்கள். அட்டைப்பட ஆக்கமும் அவருடையதே.

இன்னும் சில தலைப்புகளுடன் கவிஞர் முல்லைவாசன் அடுத்த புத்தகம் வெளியிட காத்திருக்கிறார்.
நாமும் காத்திருப்போம்.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : செம்மயமான நூற்றாண்டு பதிவுகள்

நூலாசிரியர் : பா. உதயகண்ணன்

வெளியீடு : சாரல் மையம் வேலூர்

புத்தகம் கிடைக்குமிடம்: கவிஞர் முல்லைவாசன்
கை.எண் : 9486390973

முதல் பதிப்பு : மார்ச் 2022

விலை : ரூ. 30/-

நூலறிமுகம் எழுதியவர்:- 

 

சகுவரதன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *