சேணம் கட்டிய குதிரைகள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : சேணம் கட்டிய குதிரைகள்
ஆசிரியர் : பொன். விக்ரம்
வெளியீடு : கௌரா பதிப்பகம்
விலை : ₹250
சேணம் கட்டிய குதிரைகள் எழுத்தாளர் பொன் விக்ரம் அவர்கள் எழுதிய நாவல். இந்த நாவல் ஒரு காதல் காவியம்! காதலர்களுக்குக் கோவில் கட்டுகிற காவியம்! சாதிக்கு சமாதி கட்டுகிற காவியம் ! அரசியல் அதிகார போட்டி என்பது சாதியை அழியாமல் பாதுகாப்பதில் சாதி மறுப்பு காதலை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கூறும் சமூக அக்கரையுள்ள நாவல் !
எழுத்தாளர்கள் காதலை சோலையிலே தோன்ற வைப்பார்கள் கடற்கரையிலே தோன்ற வைப்பார்கள், இன்னும் வண்ண மயமான இடங்களில் காதல் தோன்றும்படி களம் அமைப்பார்கள். ஆனால் நாவலாசிரியர் பொன் விக்ரம் அவர்கள் காதல் மருத்துவமனையில் தோன்றுவதாக எழுதி இருக்கிறார். அதுவும் அரசு மருத்துவமனையில் காதல் உருவாகிறது. காதலர்கள் 10 நிமிடம் தான் பேசிக் கொள்கிறார்கள்! அதன்பிறகு பத்து வருடங்களுக்கு அவர்கள் சந்திக்கவே இல்லை.
ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் போகிறது ஆனால் இருவரும் திருமணம் செய்யாமல் பரஸ்பரம் காத்திருக்கிறார்கள் ! காதலில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் காதல் கனிந்து கைகூடி பெண் பார்க்கும் படலம் வரை வருகிறது. அதில் காதலன் காதலியைப் பெண்பார்க்க போகிற இடம் எதுவாக இருக்கிறது தெரியுமா? மருத்துவமனையாக இருக்கிறது அதுவும் மனநல மருத்துவமனை.
இதன் மூலம் எழுத்தாளர் சொல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறார். காதல் மருத்துவமாக இருக்கிறது நோயை தீர்க்கும் மருத்துவமனையாக இருக்கிறது என்று நமக்கு சொல்கிறார் உண்மைதான் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற ஜாதி நோய்க்கு மருந்து காதல் தான் அதுவும் ஜாதி மறுப்பு காதல். இவர்கள் காதலிக்கத் தொடங்குவது ஒரு விபத்து தான். பழமலை என்ற கிராமத்தில் ஜோதி என்பவளுக்கு திருமண நிச்சயமாகிறது அந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை அதனால் தன் சித்தப்பா வீட்டிற்கு கொண்டு போய் விடும்படி அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவனிடம் உதவி கேட்கிறாள் அவர்கள் இருவரும் அப்போதுதான் பிளஸ் டூ முடித்து இருக்கிற பருவம். அவனும் அவளுக்கு உதவி செய்கிறான் அவளை திண்டுக்கல் வரை கொண்டு போய் அவர்கள் சித்தப்பா வீட்டில் விட்டுவிட்டு அடுத்த நாள் வருகிறான். அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். இவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். ஊருக்கு சொல்ல வேண்டுமா உடனே வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சனைகள் உருவாகின்றன இவன் கூட போய் உதவி செய்தேன் என்று சொன்னால் அதை யார் நம்ப போகிறார்கள் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்.
பெண் எங்கே என்று பிரச்சினைகள் உருவாகிறது அப்புறம் உண்மையை இவன் சொல்லுகிறான் இவன் சொன்ன மாதிரி இருந்தாலும் இந்த செயலை கண்டித்து தண்ட தீர்வை விதிக்கப்படுகிறது. மணிக்கு 2000 ரூபாய் ! அந்த தண்டத்திருவையை மணியின் தாய்மாமன் தவசி கட்டி விட்டார். அவர் ஊரிலே மைனரைப் போன்றோர் அவர் சொல்வதை நாலு பேர் கேட்கிற அளவிலே இருக்கக்கூடியவர் இப்படி பஞ்சாயத்தில் தண்டத் தீர்வை கட்டியது அவரால் பொறுக்க முடியவில்லை மணி கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
எல்லார் முன்னிலையில் ஊர் முன்னிலையில் அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மணி மூட்டை பூச்சி மருந்து குடித்து படுத்துக் கொள்கிறேன் பிறகு என்ன ஆஸ்பத்திரியிலேயே சேர்க்கப்படுகிறான். எந்த தவறும் செய்யாத மணி தனக்கு உதவி செய்த காரணத்திற்காக வீண்பழி சுமந்து சாகப்போகிறான் நமக்கு திருமணமா என்று சோதியும் மருந்து குடித்து விடுகிறாள். இருவரும் ஒரே ஆஸ்பத்திரியிலே சேர்க்கப்படுகிறார்கள்
இதை மருத்துவம் பார்த்த நர்ஸ் ஸ்டெல்லா நல்ல குணம் படைத்தவர் இருவரும் மருந்து குடித்ததற்கான காரணத்தை அறிந்து. இருவரையும் ரகசியமாக சந்திக்க வைக்கிறார். அவர்களுக்கு காதல் பிறக்கிறது இருவரும் சபதம் செய்கிறார்கள் அந்த பத்து நிமிடத்திலே சாதிப்பதைப் பற்றியே பேசுகிறார்கள். படிப்பைத் தொடர்வது நல்ல வேலைக்குப் போவது சாதிப்பது என்று முடிவு செய்தார்கள். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வோம் அதுவரை இருவரும் காத்திருப்போம் என்று இந்த சபதம் எப்படி நிறைவேறுகிறது என்பதுதான் பாதிக் கதை .
இதற்கு முக்கிய பங்காற்றுபவர் தான் அந்த தவசி அவன் மருந்து குடிப்பதற்கு யார் காரணமாக இருந்தாரோ அவர்தான் அந்த காதலர்களை இணைத்து வைக்கவும் காரணமாக இருக்கிறார். எப்படி என்றால் மருத்துவமனை விட்டு சென்றபின் மணி கோயம்புத்தூரில் சென்று பொறியியல் படிக்கிறான் பிறகு பெங்களூருக்குச் சென்று ஐடி கம்பெனியில் வேலை வாய்ப்பு ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கின்ற ஒரு கனவானாக இருக்கிறான்
அதுவரைக்கும் அவன் தாய் கண்ணம்மா மட்டும் அவனை போய் பார்த்து வருகிறவர்களாக இருக்கிறார் அப்போது அவன் தாய் மாமன் அவனுக்கு அவன் வீட்டாருக்கும் என்ன ஆசை என்றால் தவசிக்கு ஒரு மகள் இருக்கிறாள் அந்த மகளை மணிக்கு கட்டி வைக்க வேண்டும் என்கிற ஆசை அவன் அதை அக்காவிடம் கேட்டு கேட்டு பார்க்கிறான் ஒருநாள் அவனே பெங்களூருக்கு வந்து விடுகிறான்
அந்த அக்கா மகன் இருக்கிற இருப்பை பார்த்து விட்டு மகிழ்ந்து போகிறான் அவனே ஒரு முடிவுக்கு வருகிறான் தன்மகள் அவனுக்கு சரிப்பட்டு வர மாட்டாள் ! என் மகளை நீ கட்ட வேண்டாம் நீ முதலில் ஊருக்கு வா உனக்கு தகுந்த பெண்ணை பார்த்து ஜாம் ஜாம் என்று திருமணம் நடத்தி வைக்கிறோம் என்று வேண்டுகோள் வைக்கிறார் தவசி.
அவனை ஊருக்கு வரச் சொல்லுகிறார் அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மகள் ஆசிரியை திருமண பேச்செடுத்தாலே தற்கொலை முயற்சிக்கு போகிறார் ! நீ படித்த பிள்ளையாய் இருக்கிறாய் இதுக்கு என்ன காரணமாக இருக்கும் சரிபடுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.
அவளுக்கு ஏதாவது ஒரு வயதிலேயே ஏதாவது அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கும் அது அவள் ஆழ்மனதில் பதிந்திருக்கும் அவளை அறியாமல் அதுதான் காரணமாக இருக்கும் அதற்கான மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் அழைத்துச் சென்றால் அதை கண்டுபிடித்து ஆழ்நிலை தூக்கத்திற்கு கொண்டு சென்று அதை அறிந்து அதை சரி செய்து விடுவார்கள் என்று ஆலோசனை சொல்கிறான் மணி.
ஊருக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டு தவசி விடை பெற்று போகிறார் இவனும் சொன்னபடி ஒரு மாதத்தில் ஊருக்கு வருகிறான் அவன் மனமெல்லாம் நிறைந்திருந்த அந்த ஊர் இந்த ஊரின் சாவடி டீக்கடை மரங்கள் ஊரணிகள் இப்படி எல்லாவற்றிலும் பாசத்துடன் அவன் சுற்றி பார்க்கிறார் சொந்த ஊர் என்றால் எல்லோருக்கும் அந்த பாசம் இருக்கும் அல்லவா அதைவிட அவன் ஊரிலே தேடுவது சோதியைத்தான் அவள் எங்கே ? அவளுக்கு என்ன ஆனது அவளை எப்படிப் பார்ப்பது ? ஆனால் யாரிடமும் கேட்க முடியவில்லை வாய் திறந்து.
ஆனால் அதே நேரத்துல என்ன நடக்கிறது என்றால் சோதியை மனநல மருத்துவமனையில் அவள் பெற்றோர்களோடு போய் சேர்க்கிறார் தவசி ! சோதியின் நோயுக்குத்தான் மணியிடம் ஆலோசனை கேட்டிருந்தார் தவசி இப்போது அவளுக்கு ஒரு மனநல மருத்துவமனையில் மருத்துவம் தொடங்குகிறது அங்கே தான் அவளுக்கு அந்த நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது சோதிக்கு மணியின் மீது உள்ள காதல் கண்டுபிடிக்கப்படுகிறது அதுதான் சரியான மருந்து என்று கண்டறிகிறார்கள் இவனும் வந்து சேருகிறான் தவசி தன் அக்கா மற்றும் குடும்பத்தாரோடு பேசி எல்லாரும் கருத்தை அறிகிறான் அவமானப்படுத்தியதாக காரணம் இதற்கு நானே பிராயச்சித்தம் தேட வேண்டி இருக்கிறது எனவே அவர்களுக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்கிறார் தவசி.

எல்லோரும் சம்மதிக்கிறார்கள் சாதி வேற்றுமை எல்லாம் மறந்து காதலர்களை இணைக்க குடும்பம் ஒன்று கூடுகிறது. ஒரு பத்து வருடம் காத்திருக்கிறார்கள் புனிதமான காதலை சேர்த்து வைக்கிற பணியிலே இணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போதுதான் மணியைப் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள் இவனுக்கு யார் என்று தெரியாது சொல்லவில்லை அவன் போன பிறகுதான் தெரிகிறது அது அவன் 10 வருடமாக காத்திருந்த அவன் ஜோதி என்று இருவரும் காதல் மயக்கத்திலே விழுகிறார்கள் இது முடிவு அல்ல. கதை இங்கு தான் தொடங்குகிறது…
தவசி உடைய பொது நலம் இதுவரை சரியானது பாராட்டுக்குரியது மகிழ்ச்சி புரிகிறது ஆனால் அந்த பொதுநலத்தில் அவனுடைய சுயநலம் கலக்கத் தொடங்குகிறது அது அவனை அறியாமல என்று கூட சொல்லலாம். முதலமைச்சரை அழைத்து வந்து நடத்த வேண்டும் ! கலப்பு திருமணத்தை நடத்துங்கள் நான் வந்து தலைமை ஏற்கிறேன் என்று சிஎம் சொல்லி இருந்ததை வைத்து இந்த முடிவுக்குப் போகிறார் ஆர்வம் மிகுதியால் அந்த முடிவுக்குப் போய்விடுகிறார் அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இவன் அரசியலில் இருக்கிறான் அரசியல் என்றாலே சதுரங்க ஆட்டம் தான் இவன் ஏற்கனவே பதவியிலிருந்தவர்களை வீழ்த்தி விட்டு தான் மேலே வந்திருக்கிறார் விழுந்தவனுக்கு வலி இருக்கும் அல்லவா !
அவன் சதுரங்க காய்களை நகர்த்துவானல்லவா இவன் இந்த நிகழ்வை நடத்துவதன் மூலம் தமிழகத்தின் கவனத்தைப் பெற்று அடுத்து எம்எல்ஏ வாகவும் மந்திரியாகவும் வாய்ப்பு இருக்கிறது இவனும் அப்படி நினைக்கிறான் இந்த நிகழ்வின் மூலம் தவசிக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஊராரும் கூற ஆரம்பிக்கிறார்கள். ஒரு தலித் பெண்ணை ஒரு நடுத்தர ஜாதிக்காரன் திருமணம் செய்கிறார் ஆக இந்த இருவரின் சுயநலம் அதிகாரப்போட்டி இவர்கள் காதலில் 10 வருடம் காத்திருந்த அந்த புனிதமான காதலின் விதிவோடு விளையாடுகிறது.
தவசியின் அரசியல் போட்டியாளர் தேவராசு காய்களை நகர்த்துகிறார். அது ஜாதி கலவரமாக வெடித்து. இரண்டு பக்கமும் பல உயிர்கள் பலியாகி வீடுகள் சேதமாகி ஊரே தீக்கரையாகி. அது மிகப்பெரிய கலவரத்தில் போய் முடிகிறது. பிறகு என்ன இவர்கள் இவ்வளவு நடந்ததற்குப் பின்னும் இவர்கள் எப்படி ஒன்று சேர்வது திருமணம் செய்ய முடியும் இவர்களுக்குக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறார்கள்.
நம் காதலால் இத்தனை உயிர்கள் இத்தனை துயரங்கள் நடந்திருக்கிறது என்று அவர்கள் குற்ற உணர்வால் துடித்து செயலற்று போகிறார்கள். ஊர் ஐயப்பன் கோவில் நெய் குண்டத்தில் ஜோதி இறங்கிவிடுகிறாள் மணியும் அவளோடு இணைந்து சாம்பலாகிறார்கள். இதை கண்டு குற்ற உணர்வில் ஸ்தம்பிக்கிறது ஊர் அங்கே கலவரத்திற்குப் பின் அன்புக்குழு என்று இளைஞர்கள் இரு தரப்பிலிருந்தும் இணைந்து செயல்பட்டு வருபவர்கள் முன் எடுக்கும் அறப்போராட்டத்தால் இனிமேல் நாங்கள் ஜாதி பார்க்க மாட்டோம் என்று எந்த விஷயத்திலும் ஜாதி பார்க்க மாட்டோம் என்று மக்கள் கையெழுத்துப் போட்டு உறுதி எடுக்கிறார்கள்.
மணிக்கும் ஜோதிக்கும் கோவில் கட்டுகிறார்கள் ! ஜாதிக்கு சமாதி கட்டுகிறார்கள் இப்படி ஜாதிக்கு சமாதி கட்டுகிற இந்த கதை அருமையான கதை.இந்த கதை யாருக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னால் மணிவண்ணன் என்பவர் தன் காரிலேயே போய்க் கொண்டிருக்கிறார் அவர் ஓட்டுனர் கணேசன் ஒரு மாலை நேரத்திலே ஒரு கிராமத்தின் வழியாக செல்கிற போது ஒரு பெண் இளம் பெண் காரை மறிக்கிறார், மறித்து ஐயா எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் பக்கத்து கிராமத்தில் என்னை இறக்கி விட்டு போங்கள் என்று சொல்லுகிறார் மணிவண்ணன் காரை விட்டு இறங்கி சற்று தூரம் தள்ளி போய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் அதிகாரியை வரவழைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கிறார்.
கணேசன் மணிவண்ணன் மீது கோபப்படுகிறார். பெண்ணுரிமை பேசுறீங்க மேடைகள் எல்லாம் முழங்குறீங்க ஆனால் ஒரு பெண் உதவி கேட்டு இந்த மாலை நேரத்திலே நிற்க இவ்வளோ நேரம் நிற்க வைத்து போலீஸ் மூலம் உதவி செய்கிறீர்கள். அதை நீங்களே செய்திருக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார் அப்போதுதான் அவர் இந்த கதையை சொல்லுகிறார் இந்த பழமலை என்ற ஊரிலே மணி என்பவன் இந்த ஜோதி என்பவளுக்கு உதவி செய்கிறான் அதனால் எவ்வளவு பெரிய பின் விளைவுகள் ஏற்பட்டது பார் என்பதற்காகத்தான் இந்த கதையை சொல்லுகிறார்.
இது ஒரு ஓட்டுனருக்கு உரிமையாளர் இப்படி சொல்வதற்கு பதிலாக ஒரு ஆர்வக்கோளாறு அரசியல்வாதிக்கு இன்னொரு பொறுப்பான அரசியல்வாதி சொல்வதாக இந்த கதையை அமைத்திருக்கலாம். ஒரு அரசியல்வாதி ஒரு காதல் திருமணத்தை ஜாதி மறுப்பு திருமணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்று கேட்கிறார். அப்போது அப்படி நடத்தினால் என்னவெல்லாம் பின் விளைவுகள் வரும் என்பதை உணர வைக்க இப்படியான ஒரு உதாரணத்தை சொல்லி இப்படி எல்லாம் ஆகும் என்று சொல்லி இருக்கலாம். அப்படியாக இந்த கதையை அமைத்திருக்கலாம் என்பது எனக்கு தோன்றிய கோணம் !
நல்ல கதை அனைவரும் படிக்க வேண்டியவை கல்லூரியில் பாடமாக வைக்க வேண்டிய நாவல். நல்ல கடமையை கூட பின் விளைவுகளை யோசித்து அதற்கு தகுந்தாற் போல சூழ்நிலை அனுமதித்தால் விமர்சையாகவோ வாய்பில்லையானால் எளிமையாகவோ நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிற பொறுப்பான நாவல். ஒரு சிலரின் சுயநலம்தான் ஊரில் சாதியை நீட்டிக்க வைக்கிறது மக்கள் பெரும் போக்காகவே இருக்கிறார்கள் என்பது நாவலின் கொந்தளிப்பான இடங்களில் சொல்லப்படுவது நிதர்சணம். ரசனைக்கு நவரசங்களும் நாவலில் கொட்டி கிடக்கிறது அல்லி பருகுங்கள்..
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளங்கோவன் கார்மேகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

