சேணம் கட்டிய குதிரைகள் (Senam Kattiya Kuthiraigal)
நூலின் தகவல்கள் :
நூல் : சேணம் கட்டிய குதிரைகள் (Senam Kattiya Kuthiraigal)
ஆசிரியர் : பொன். விக்ரம்
விலை : ரூ.250
பக்கம் : 363
பதிப்பகம் : கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
எழுத்தாளர் பொன் விக்ரம் அவர்கள் 2017ல் எழுதிய முதல் நாவல் 363 பக்கம் 72 அத்தியாயம் அடேங்கப்பா!. கவிஞராக வலம் வந்தவர், ஒரே பாய்ச்சல் வேகத்தில் இவ்வளவு பெரிய நாவலை நாவல்பழம் சுவையோடு தந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆச்சிரியத்திற்குரியது!. என்னுடைய எழுத்து அனுபவத்திலிருந்து பார்க்கும் போது நாவலாசிரியரை பிரமிப்பாக பார்க்கிறேன். எழுத்தாளர் பொன் விக்ரம் அவர்கள் அற்புதமான வீதி நாடக கலைஞர் , தொழிலதிபர், மனித நேயம் பேச்சளவில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படுத்த கூடியவர் . அதேநேரத்தில் யாரையும் வந்து பாருங்களென நேருக்கு நேர் சந்திக்க கூடிய மதுரைக்காரர்.
சீதை பதிப்பகம் வெளியிட்ட இந் நாவலின் சாராம்சம் சாதி இரண்டொழிய வேறில்லை என்பதே . சமூக நோயான சாதி எங்கெல்லாம் பீடித்திருக்கிறது என்பதை மிக நுட்பமாக மதுரை மக்கள் மொழியில் சொல்லியிருக்கிறார். எழுத்தாளாரை நாவலின் முதல் அத்தியாயத்திலே பார்க்க முடிகிறது.
கதை இப்படி துவங்குகிறது, அந்தி சாயும் பொழுதில் சூரியன் சந்திரனாக மாறும் வேளை வெற்றிலை சாறை துப்பியது போல் வானத்தில் இளம் மஞ்சள் வெயிலின் மினுமினுப்பு கார் கண்ணாடி வழியே ரசித்தவாறே தார் சாலையில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் கணேசன். எதிர் பாராத விதமாக ஒரு அழகான இளம் பெண் காரை மறிக்க மெதுவாக நிறுத்திய கணேசன் என்னமா என்று கேட்க? போற வழியில் இருக்கும் கிராமத்தில் இறக்கி விடுமாறு உதவி கேட்கிறாள். காருக்குள் அமர்ந்திருக்கும் முதலாளி மணிவண்ணனை கணேசன் பார்க்க மணிவண்ணன் அப் பெண்ணை விசாரித்து காவல் துறையிடம் ஒப்படைக்கிறார்.
ஓட்டுநர் கணேசன் மிகவும் வருத்தப்படுகிறார் உதவி கேட்ட பெண்ணை போலீஸில் ஒப்படைத்து விட்டீர்களே! அதிலிருந்து நாவல் விரிகிறது. தான் கேள்வி பட்ட உண்மை சம்பவங்களை அனுபவத்தை கதையாக கணேசனுக்கு மட்டும் சொல்லவில்லை நமக்கும் சொல்கிறார் மணிவண்ணாகிய எழுத்தாளர்.
பழமலை கிராமத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் கதையின் நாயகி ஜோதி 17 தலித் பெண். நாயகன் வடக்கு தெருவில் குடியிருக்கும் மணி மாறன் 18 முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் . இவர்கள் இருவரும் ஒரே ஊர் என்பதைத் தாண்டி வேறு எந்த தொடர்பும் இல்லை . ஒரு இக்கட்டான சமயத்தில் ஜோதிக்கு உதவியாக திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் வரை கூட செல்கின்றான் மணிமாறன். போன இடத்தில் திரும்பி வர பஸ் கிடைக்காததால் மறுநாள் ஊர் வந்து சேர்கிறான் மணிமாறன். அந்த ஒரு நாள் இரவு மணிமாறன், ஜோதி மற்றும் அந்த கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது.
சுவாரஸ்யமான கதை மாந்தர்களோடு அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடனே கிராமத்து கதை களம் நம்மை இழுத்துச் செல்கிறது கடைசி வரை. பொதுவாக கிராமத்தில் வெள்ளந்தி மனிதர்களை பார்க்க முடியும் அதேபோல் வினையம் பிடித்தவர்களும் இருப்பார்கள். இந்த இரண்டு வகையான கதை மாந்தர்களை பழமலை கிராமத்தில் பார்க்கலாம். அந்தந்த பாத்திரத்திற்கு தகுந்தாற்போல் வெகு யதார்த்தமான கிராம உரையாடல் இயற்கையின் வர்ணனைகள், கிராமத்தை அங்குலம் அங்குலமாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். 25 வருடத்திற்கு முன்பு டீ கடை தங்கமணி வைத்திருந்த சைக்கிளை கூட அவ்வளவு அழகாக ஜோடிச்சு சொல்லும் பாங்கு எழுத்தாளருக்கு கை கூடியுள்ளது.
காதல் என்ன வயது வந்தவர்களுக்கு மட்டுமா!? வயதான போதும் அதை நினைத்து தொத்தன் இறப்பில் ஒப்பு வைக்கும் கொளஞ்சியின் மலரும் நினைவுகள் அழகியல்.

இந்த நாவலில் மிக நுட்பமாக நான் வாசிக்கும் போது வியந்தது தலித்தின் மன உளவியலை அப்படியே அந்த வலியோடு நமக்கு கடத்தும் காட்சி அபாரம். நாயகன் மணிமாறன் குடும்ப விழா அழகர் கோயில் கிடா வெட்டு அதில் நாயகி ஜோதி குடும்பமும் கலந்து கொள்கிறார்கள். ஆனாலும் தனித்து விடப்படுகிறார்கள். பேயம்மாவும், முனியாண்டியும் பேசிக்கொள்வது மனசைக் கொல்லும் காட்சி.
நாம் என்னதான் சமூக நீதி இட ஒதுக்கீடு பேசினாலும் கிராமத்தில் இன்றும் நடைமுறையில் கீழ்த் தெரு, மேலத்தெரு , காலனி, தெற்கு, வடக்குனு இங்கு ஒவ்வொருவரும் மனதில் சாதி என்னும் சேணையை கட்டிக்கொண்டு அலையுறோம் அதை எவ்வாறு மாற்றப்போறோம்? இந்த நாவல் அந்த கவலையை ஏற்படுத்துகிறது. அதேபோல் பிரச்சினைக்கான மூல காரணத்தை எதுவென தேடிலைகிறது .
திரித்து பேசுவது , வத்தி வைப்பது, சிண்டுமுடிஞ்விடுவது, குடியை கெடுப்பது , ஊதி பெரிசாக்குவது இப்படியான மனிதர்கள் பழமலை கிராமத்தில் மட்டுமல்ல எல்லா பகுதிகளிலும் இடத்திற்கு தகுந்தவாறு இருக்கிறார்கள். இவர்களை எப்படி மாற்ற முடியும்?
“யேப்பே நான் இப்புடிச் சொன்னேன் அது அப்புடிப்போச்சா” ! செரி விடுப்பே! என்று அசால்டாக பேசும் மாந்தர்களிடம் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென நாவல் அறிவுறுத்துகிறது.
இருந்தாலும் இவர்களைப் போன்ற மக்களை மாற்றுவதற்கு அந்த கிராமத்தில் புதிதாக தோன்றிய அன்புக்குழு செயல்பாடு பிரச்சாரமாக தோன்றுகிறது.
விமர்சனமாக பார்ப்பது ஸ்டெல்லா நர்ஸ் ரோல் அற்புதமானது. ஆனால் கிராமத்திற்கு வந்த ஸ்டெல்லா அதற்கடுத்து காணவில்லை. சவுடிக்கார ஆத்தாவின் மரணம் போறபோக்கில் சொல்லப்பட்டுள்ளது .
இரண்டாம் அத்தியாயத்தில் ஜோதியும் மணிமாறன் பயணிக்கும் விவரணை ஒவ்வொரு இடத்திலும் ( போலீஸிடம் , நண்பர்களிடம் , ஊர் பஞ்சாயத்திடம்) திரும்ப திரும்ப வருவது . தவசியின் அரசியல் கனவு செயல்பாடு ஒவ்வொருத்தரிடமும் பேசும் போது திருப்பி வருவது இது போல் முக்கிய பாத்திரங்களின் மலரும் நினைவுகள் மறுபடியும் வருவதால் வாசிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதை குறைத்திருந்தால் பக்கங்கள் குறைந்திருக்கும். என்னைப் போன்ற வாசிப்பாளருக்கு மலைப்பு வராது. 67 வது அத்தியாயத்தில் பேய்யம்மாவின் கதறல் மற்றும் 72 ல் வரும் கல்வெட்டு இணைத்து நாவலை முடித்திருக்கலாம் .
இந்த நாவலுக்கு பிறகு இரண்டு நாவலை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மேலும் சமூகத்திற்கு தேவையான முற்போக்கு கதையாடல்களை கொண்டு வருவார் அனைவரின் கவனத்திலும் இடம் பெறுவார்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
க . பாண்டிச்செல்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

