சென்று வா தாயே…
சென்று வா தாயே…
வாழ்க்கை இழந்தபோதும் வறுமை சூழ்ந்தபோதும்
வாடாத உன் வண்ண முகம்
வயது முதிர்ச்சியால் வாடியதேன்?
தளராத நெஞ்சுரமும் ஓயாத உழைப்புமாய் உயர்ந்து நின்றவளே!
தற்போது உருக்குலைந்து கிடப்பதுமேன்?
தெளிவான சிந்தனையில் திறம்பட பயணித்தவளே!
உன் சுயநினைவை இழந்ததுமேன்?
மாராப்புத்துணி விலக மறுத்த உன் கைகள்!
தற்போது உன் உடல் மறைக்கும் உடைகளையே உதறித் தள்ளுவதேன்?
ஒரு சொட்டு நீரைக்கூட எவரிடத்தும் எதிர்பார்த்திராத நீ!
ஒரு நிமிடத்தைக் கடக்கக்கூட பிறருதவி நாடுவதேன்?
எடுத்தெறிந்து பேசுவோர் முன்
வைராக்ய வார்த்தைகளின் வாள் வீசிய நீ…!
அவமான அர்ச்சனைகளை அமைதியுடன் அனுமதிப்பதேன்?
அம்மணமாய்ப் பிறந்த என்னை அரவணைத்து அலங்கரித்தாய்!
அலங்கோலமாய்க் கிடக்கும் உன்னை
அம்மணமாய்க் காண வைத்தாய்!
எனக்கூட்டிய வாய்ச்சோறு
நாளுக்கு நாள் கூடக் கண்டு குதூகலித்தாய்!
உனக்கூட்டும் ஒருவாய்ச் சோற்றை உள்ளிறக்க
மறுத்துவிட்டாய்!
அஞ்சப்பெத்துப் போட்டு அப்பனவன் போய்ச்சேர!
அத்தனையும் கரைசேர்த்து உன் கடமையை முடித்திட்டாய்!
என் கடனை நான் செலுத்த வாய்ப்பு மட்டும் மறுத்திட்டாய்!
கைம்பொண்ணு பெத்ததெல்லாம் கழிசடையாப் போகுமுன்னு
கண்டதெல்லாம் கொக்கரிக்க…!
மூக்குல கைய வச்சு முன்னவிட்டுப் பின்னப்பேச முன்னேத்திக் காட்டினாயே…!
இப்ப மூச்சுவிட முடியாமல்
நீ முடங்கிக்கிடக்கிறாயே!
மத்த பிள்ளைக்கெல்லாம்
தாய்ப் பாலை மட்டும் நீ ஊட்ட!
கடைக்குட்டி எனக்கு மட்டும்
கல்விப் பாலையும் கலந்தூட்டி வளர்த்தாயே…!
நாலெழுத்து நான் படிக்க நீ
நாய்ப் படாப் பாடுபட்டாய்!
நல்ல சோறு நான் திங்க
நாக்கு செத்து நீ தவித்தாய்!
படக்கென்று செத்தவற்கு
நல்லச் சாவென்று ஊர் சொல்ல!
எனைப்பிரிய மனமின்றி நீ
உயிரை இழுத்துப்பிடித்திருப்பதை
எவர் அவர்க்கு எடுத்துச்சொல்ல!
எமனே நினைத்தாலும்
என்னிலிருந்து உனைப்பிரிக்க!
நானனுமதிக்க வேண்டுமென்று
எப்படி நான் எடுத்துச்சொல்ல!
குறையின்றி வளர்த்தப் பிள்ளையின்
குழந்தையில்லாக் குறையும் தீர்க்க!
நீ குழந்தை அவதாரமேற்றிருப்பதை
எப்படி நான் புரிய வைக்க!
உறக்கமின்றி நீ தவிக்க!
உடலுறுப்புகள் உருக்குலைய!
படுக்கைப்புண்கள் உனை வருத்த!
பாவி நான் செய்வதன்றித் தடுமாறும்
நாட்கள் இனி எத்தனம்மா…?
அடுத்த பிறவி மீது நம்பிக்கை எனக்கில்லை!
தெய்வம் உண்டென்றால் உனையன்றி வேறில்லை!
வருத்தும் வெற்றுடலைத் துறந்து விடு தாயே!
நீ வாரித்தந்த என்னுயிரில் கலந்து விடு தாயே!
சாகும் நிலையை விட்டுக் கடந்து விடு தாயே!
உன் சாயலுள்ள என்னுடலில் புகுந்து விடு தாயே!
அனுமதி அளித்துவிட்டேன் தாயே!
உன் ஆசை மகன் அனுமதி அளித்துவிட்டேன் தாயே!
அமைதியாய்ச் சென்று வா தாயே!!!
சென்று வா!!!
__ காத்திருக்கும் உன்
மகன் ஆசைத்தம்பி__
எழுதியவர்:
ஆசைத்தம்பி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

