ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

 

 

 

எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான் பார்க்கிறேன். லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், எழுத்தர்கள், சரக்குகள், சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவர்களையெல்லாம் கட்டி மேய்க்கும் டிரான்ஸ்போர்ட்கள் என இதுவரை சொல்லப்படாத ஒரு வலைப்பின்னல் வாழ்வை, அதில் வாழ்ந்த ஒருவரே பதிவு செய்திருப்பதுதான் நாவலின் தரத்துக்குச் சான்று. பாவனா டிரான்ஸ்போர்டில் எழுத்தர் வேலை செய்யும் முதல் தலைமுறை பட்டதாரிகளான மணியும் சுந்தரும், சாதி கடந்த முதல் தலைமுறை நண்பர்கள் என்பதும் நாவலின் உள்ளீடாக சொல்லப்பட்டிருக்கும் மிக முக்கியமான விடயம்.

தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் அவதானிக்கும் மணியின் கண்களால் இருபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையின் வால்டாக்ஸ் சாலையை, சென்ட்ரல் மற்றும் பெரம்பூர் ரயில்நிலையங்களை, ஏலகிரி எக்ஸ்பிரஸை, ஓட்டல் உணவு விலைகளை, போதையூசி மனிதர்களை, ஆட்டோ ரிக்ஷா காரர்களை இப்படி பலவற்றை மனக்கண்ணில் பார்க்க நேர்ந்தது. அதேபோல், ஆர்க்காடு பக்கத்தில் உள்ள மணி மற்றும் சுந்தர் ஆகியோரின் கிராமங்கள், வேலூரின் அடையாளங்களாக இருக்கும் வேலூர்க் கோட்டை, வடக்கு காவல்நிலையம், அதன் சுற்றுவட்டார ஊர்கள் வரை சொல்கிறது நாவல்.

கிளீனர்கள் முதல் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் வரையிலான லாரியோடு சம்பந்தப்பட்ட எவர்க்கும் ஏற்படும் விபத்துகள், கடத்தல்கள், கொலைகள், லாப-நட்டங்கள் என்று புதிர் உலகத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். அதிலும் குறிப்பாக, கும்மிடிப்பூண்டி பைப் தொழிற்சாலையில் அவ்வப்போது நடக்கும் மனித விபத்துகளை மறைக்க அந்நிறுவனம் செய்யும் காணாப் பிணமாக்கும் நிகழ்வெல்லாம் படிப்பவரைப் பயங்கொள்ளச் செய்கிறது.

மணியின் அறையில் ஒருநாள், பக்கத்து அலுவலக பார்ப்பனர் ஒருவர் குடிக்க பாட்டில்களோடு வருவதும், வந்து மணி சமைத்து வைத்திருந்த மாட்டுக்கறியைத் தின்பதும், குடித்ததினால் மணி எடுத்த வாந்தியை அந்தப் பார்ப்பனர் வாரிக் கொட்டியதும், வேலூரைச் சார்ந்த இன்னொரு பார்ப்பனர், லாரி ஓட்டுநராக வருவதும் குறியீடுகளாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இடைநிலை வகுப்பைச் சார்ந்த மணியோடு நகரும் நாவல், மெல்ல மெல்ல அவனுக்கு இணையாக தலித்துகளின் வாழ்வியலையும் பேசிக் கொண்டே வருகிறது. ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்த பஞ்சப் பராரியான புட்டவாடன் குடும்பத்தின் கதைதான் அது. புட்டவாடனின் மகன்களான பெத்தவாடன்-குன்டிவாடன், அந்த அண்ணன் தம்பிகளின் மனைவிகள், அவர்தம் வாரிசுகள் என்று விலாவாரியாக சொல்வதற்கு முன்பே, ராணி எனும் அந்தக் குடும்பத்தின் இளம் பெண் ஆதிக்கச் சாதி கோபால் என்பனால் காதலிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து கோபாலின் பங்காளிகளால் கூட்டுவண்புர்வுக்கு உள்ளாகிச் சாவதும், நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. எல்லா ஊரிலும் ராணிகள் இப்படித்தான் சாகிறார்கள். எங்கள் ஊரில் இப்படிச்செத்துப் போன சில ராணிகளை நினைத்துக் கொண்டேன். புட்டவாடன் குடும்பத்தின் பட்டதாரி இளைஞன்தான் சுந்தர் என்றும், இறந்து போன ராணியின் சித்தப்பா மகன் என்றும், நாவலில் திடீர் திருப்பம் தருகிறார் நாவலாசிரியர்.

மணியை நாயகனாக வைத்து பயணிக்கும் நாவல், பின்னர் சுந்தரோடு பயணிக்கிறது. சுந்தருக்கு பள்ளியில் நிகழும் தீண்டாமையும், வீட்டுக்கு வரும் வழியில் சாதி இந்து மாணவர்களால் நிகழ்த்தப்படும் மலத்திலான தாக்குதலும், அதைத் தொடர்ந்து தனது அப்பனோடு சுந்தர் நிகழ்த்தும் உரையாடலும் கண்களை ஈரமாக்கின. சேரிகளில் பிறக்கும் பெரும்பாலான சுந்தர்களுக்கு, கடவுள் மீதான கேள்விகள் நாத்திகத்திலும் இந்துமத வெறுப்பிலுமே முடிவடைகின்றன. அதை நாவலில் வரும் உரையாடல் அவ்வளவு நேர்த்தியாகப் பேசுகிறது. சுந்தரின் சாதிப் பெண்கள், ஆண்டை வீடுகளை நோக்கி களிக்கும் கூழுக்கும் கையேந்தும் பக்கங்களை வாசிக்கையில் மனம் கனத்தது.

வெறுமனே லாரி சார்ந்த மனிதர்கள் வாழ்வை மட்டும் பேசாமல், கிராமங்களில் காணப்படும் சாதிய இறுக்கங்களை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காணப்படும் தோல் தொழிற்சாலைகளில் பணிசெய்பவர்களை, நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி செய்பவர்களை என்று ஒட்டுமொத்த தரப்பையும் பேசியருப்பதும், நேர்மையாகப் பேசியிருப்பதும் கவனிக்க முடிகிறது. காதலைப் பேசும் பக்கங்களும் கவனம் பெறுகின்றன. மணியின் பெயர் தெரியாத காதலியும், சுந்தரின் லீனாவும் நாவலுக்கு வலு சேர்க்கும் பாத்திரங்கள். லீனாக்களும் மணிகளும் போற்றுதலுக்குரியவர்கள். அப்படியான இடைநிலை சாதியில் பிறந்த சாதி மறுப்பாளர்கள் எல்லா சுந்தர்களுக்கும் வாய்ப்பதில்லை.

பூன்ட்ரம், காஸ்லு, செத்தை-செனார், சூரிக்கத்தி, நுந்தி, நெய்ல் இப்படியான எமது வட்டார வார்த்தைகள் மீண்டும் ஞாபகத்துக்கு வந்து போயின. நாவலின் கடைசிப் பக்கங்களில், மணியும் சுந்தரும் சாதி குறித்த நிகழ்த்தும் நீண்ட உரையாடல் நாவலுக்கு மேலும் வலுசேர்க்கும் இடங்களாக மாறுகின்றன. எழுத்தாளருக்கு இந்தச் சமூகத்தின் மீது மிகப் பெரிய பொறுப்புணர்வு உண்டு என்பதை உணர்த்து எழுதியிருக்கிறார் கவிப்பித்தன் அவர்கள். தலித்துகள் வானத்திலிருந்தோ வேற்று கிரகத்திலிருந்தோ வரவில்லை. இங்கே தங்களோடு சமமற்று, மதிக்கப்படாமல் வாழ்ந்து வரும் மனிதர்கள் என்பதை உணர்ந்து அவர்களின் அவலங்களை, அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை கவிப்பித்தன் போன்ற வெகு சிலரே பதிவு செய்கிறார்கள். நாவல் இன்னும் பரவலாகப் பேசப்பட வேண்டும். தோழர்களுக்கு இந்த நாவலை நான் பரிந்துரைக்கிறேன். நாவலாசிரியருக்கு அன்பும் வாழ்த்தும்.

நூல்: சேங்கை நாவல் 
விலை: ₹.350
ஆசிரியர்: கவிப்பித்தன்
வெளியீடு: நீலம் பதிப்பகம்

– பாரத் தமிழ்,
வேலூர்.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *