நினைவேந்தல் கட்டுரை:
அழியாச் சுடர் ச.சீ. ராஜகோபாலன் (1930-2026)
– பொன். தனசேகரன்
பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து நீ்ண்ட காலம் அனுபவம் பெற்றவரும் இந்தியக் கல்வித்துறையில், குறிப்பாகப் பள்ளிக் கல்வியில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தவருமான, விளிம்பு நிலை மக்கள் உள்பட அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் அதற்கான அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் அதனை நோக்கியதாகவே இருக்க வேண்டும் என்றும் வாழ்நாளில் தொடர்ந்து அயராது போராடியவருமான கல்வியாளர் சருக்கை சீனிவாசன் ராஜகோபாலன் என்கிற ச.சீ. ராஜகோபாலன் தனது 95 வயதில் (3-2-2026)காலமானார். பள்ளிச் சான்றிதழ்படி அவரது பிறந்த தேதி 23.12.1930. ஆனால், அவரது உண்மையான பிறந்த நாள் 19.2.1931.
அவரது தந்தையார் சீனிவாசன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சுப்பிரமணியத்தின் தந்தை கிருஷ்ணசாமி நடத்திய பள்ளி அது. சீனிவாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுவது வழக்கம். வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியைச் சந்தித்திருக்கிறார். “தாய் மொழியில் இல்லாமல் ஆங்கில மீடியத்தில் வகுப்புகளை நடத்தினால் கிராமத்துப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள், தாய்மொழியில் பாடங்களை நடத்த வேண்டும்’’ என்று காந்தி அவரிடம் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, அவர் தனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மூலம் அரசின் அனுமதி பெற்று தான் தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியில் தமிழ் வழியில் வகுப்புகளைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் முதல் முதலாகத் தொடங்கப்பட்ட தமிழ் வழிப்பள்ளி அது.
சாந்திநிகேதனில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார் சீனிவாசன். அவரது பள்ளியைப் பற்றி அவர் கேட்டறிந்த அவர், ஆண்களுக்கு தனிப்பள்ளி, பெண்களுக்குத் தனிப் பள்ளியா என்று கேட்டார். வீட்டில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இருந்தால் தனித் தனி வீட்டிலா வைத்திருப்போம் அனைவரும் ஒரே வீட்டில்தானே குடியிருப்போம். அதேபோல, இருபாலரும் படிக்கும் வகையில் பள்ளி இருக்க வேண்டாமா என்றும் கேட்டார் தாகூர். அந்த சிறிய கிராமத்துப் பள்ளியில் இருபாலாரும் சேர்ந்து படிக்கும் வகுப்புகளை தொடக்கப் பள்ளி நிலை வரைதான் அவரால் கொண்டுவர முடிந்தது.
ஆனால், இதுகுறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டத்தில் சீனிவாசன் பேசியது சுதேசமித்திரன் இதழில் விரிவாக வெளியானது. அதைப்பார்த்த கோவை பீளமேட்டில் அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில் புதிதாகப் பள்ளி தொடங்கும் முயற்சியில் இருந்தவர்கள் அவரைத் தேடிவந்து புதிய பள்ளியின் தலைமை ஆசிரியராக வரும்படி அழைத்தனர். அதையடுத்து பீளமேட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட சர்வஜன உயர்நிலைப் பள்ளிக்குத் (1924) தலைமை ஆசிரியரானார் சீனிவாசன்.
அந்தக் காலத்தில் கோவை அரசு கலைக் கல்லூரியில் இருபாலாரும் சேர்க்கலாம் என்று இருந்தாலும்கூட, அந்தக் கல்லூரியில் மாணவிகள் யாரும் சேர்க்கப்படுவதில்லை. சீனிவாசன், 1935இல் தனது மூத்த மகள் பத்மாவை கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்க்க அழைத்தச் சென்றார். `புலிகள் வாழும் கூட்டத்தில் புள்ளி மானை கொண்டு வந்து சேர்க்க நினைக்கிறீரே’ என்று கேட்டார் கல்லூரி முதல்வர். `அவரது வீட்டில் கணவரும் மாமனார், மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்’ என்றதும், `என்னைய்யா மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்’ என்றார் கல்லூரி முதல்வர். கல்லூரியில் மாணவிகளையும் சேர்க்கலாம் என்ற விதிமுறையைச் சுட்டிக்காட்டியதும் வேறு வழியில்லாமல் கல்லூரியில் பத்மா படிக்க சீட் கொடுத்தார். அந்த அரசுக் கலைக் கல்லூரியில் படிக்கச் சேர்ந்த முதல் மாணவி அவர்.
ராஜகோபாலனின் மூத்த சகோதரர் ச.சீ. கண்ணன், பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்தபோது பொறியியல் படித்தவர். பி.ராமமூர்த்தி, எம்.பி. சீனிவாசன் ஆகியோர் அவரது கல்லூரி காலத் தோழர்கள். தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வத்துடன் இருந்த அவர், பட்டம் பெற்று வரும்போது கம்யூனிஸ்டாகத் திரும்பினார். எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து சென்னையில் காரல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கி நடத்தியவர் அவர். அத்துடன், பார்வையற்ற பலர் படித்து பட்டம் பெறுவதற்கும் படித்த பிறகு வேலைகளில் சேருவதற்குமான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இதேபோல, அவரது தம்பி விஜயராகவன், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்தவர். அந்தக் காலத்தில் தனியார் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதி மோசடி குறித்து ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு உரிய சட்டமுன்வடிவை தயாரிக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர். லக்னோவில் எல்ஐசி நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த வந்த அவர் பாம்பு கடித்து இறந்து போனது சோக நிகழ்வு.
இத்தகையக் குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த ராஜகோபாலன், பள்ளியில் படிக்கச் சேர்ந்த கதை சுவாரசியமானது.
“கோவையில் டிஸ்ட்ரிக் போர்டு தொடக்கப் பள்ளியில் சேர்க்க அவரை வீட்டிலிருந்த ஒருவர் அழைத்துச் சென்றார். அங்கு ஓர் ஆசிரியர் ஒரு மாணவரை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த, வீட்டுக்கு திரும்பி ஓடி வந்துவிட்டார். அவரது அக்கா பத்மாவிடம் நடந்ததைச் சொன்னார். இயற்கையிலேயே இரக்கக் குணம் நிரம்பிய அவர், நீ அடிக்கிற ஆசிரியரிடம் போக வேண்டாம். நான் பாடம் சொல்லித் தருகிறேன் என்றார். அதைத் தொடர்ந்து வீட்டில் அக்காவிடமிருந்து பாலபாடம். ஆறு வயதில் சர்வஜன பள்ளியில் சேரச் சென்றார். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் அவரது அப்பா சீனிவாசன். வாக்குண்டாம் சொல் என்றார். சொன்னார். 13ஆம் வாய்ப்பாட்டைச் சொல் என்றார். நான் சொல்ல ஆரம்பித்த வேகத்திலேயே 4ஆம் வகுப்பு பி செக் ஷனுக்குபோ என்றார். வகுப்பறை கிடையாது. திண்ணைதான். ஆசிரியர் வந்து வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் என்று சொல்ல நாங்களும்கூடச் சொல்ல பாரதி வாழ்த்தோடு எனது பள்ளிக் கல்வி தொடங்கியது” என்பார் ராஜகோபாலன்.
புட்பால் விளையாடுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கோவையில் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி சார்பாக புட்பால் விளையாடியிருக்கிறார். பல்கலைக்கழக டீமில் இடம் கிடைத்தும்கூட, விளையாட்டில் கவனம் செலுத்தினால் சரியாகப் படிக்க முடியாது என்று அவரது அம்மா கூறிவிட்டதால், அவர் விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தவில்லை.
அவர் படித்த கல்லூரியில் சிறந்த மாணவர்களுக்கு `காண்டக்ட் கப்’ கொடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. “கல்லூரியில் படிக்க வரும் அனைத்து மாணவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்பதுதானே நோக்கம். அப்புறம் ஒரு மாணவருக்கு மட்டும் கப் கொடுக்கும் நடைமுறையை எதிர்க்க வேண்டும் என்றும் மாணவர் கப்பை வாங்கும்போது, மேடைக்குச் சென்று அந்தக் கப்பைப் பறிக்க வேண்டும் என்றும் சீனியர் மாணவர்கள் முடிவு செய்தனர். அந்தக் கப்பை பறிக்கும் வேலை ஜூனியர் மாணவரான என்னிடம். மேடையில் ஏறி நான் கப்பை பறித்ததும், அமைச்சர் அவிநாசிலிங்கம் எதுவும் பேசாமல் மேடையிலிருந்து கீழே இறங்கிப் போய்விட்டார்’’ என்ற பழைய சம்பவத்தை என்னிடம் நினைவுகூர்ந்திருக்கிறார் அவர்.
1945இல் கோவை அரசுக் கல்லூரியில் பிஏ கணிதம் படித்த பிறகு, ராஜகோபாலனுக்கு இம்பிரீயல் வங்கியில் (பின்னாளில் ஸ்டேட் வங்கியாக மாறியது) அதிகாரி வேலை கிடைத்தது. இரண்டாவது ரேங்க் எடுத்திருந்தும், ஆங்கிலேயர் நடத்தும் வங்கியில் வேலை வேண்டாம் என்று அதில் சேரவில்லை. அதில் அப்போது அதிகாரியாகச் சேர்ந்திருந்தால் பாரத ஸ்டேட் வங்கித் தலைவராக ஓய்வு பெற்றிருப்பார். 1948இல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தகுதி பெற்றபோதிலும் அரசுப் பணியில் அதிகாரியாகச் சேரவில்லை. அவ்வாறு சேர்ந்திருந்தால் தலைமைச் செயலராக ஆகி இருப்பார். தலைமை ஆசிரியர் பணியிலேயே இருக்காமல் பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரி பணியில் சேர்ந்திருந்தால் பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக ஓய்வு பெற்றிருப்பார். ஆனால், ஆசிரியப் பணியில் இருந்த ஆர்வம் காரணமாகவே அரசுப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த அவர், பின்னர் கோவை பீளமேடு சர்வஜன பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
கோவையில் அரசு கலைக் கல்லூரியில் பிஏ கணிதம் பட்டம் படித்த பிறகு கல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்டாட்டிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட்டில் மேற்படிப்புப் படிக்க இடம் கிடைத்தது. அந்தக் காலத்தில் வட இந்தியாவில் மதக் கலவரங்கள் நடந்ததைப் பார்த்த அவரது அம்மா, அங்கு படிக்கப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால், 1949இல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் படிக்கச் சேர்ந்தார்.
“அப்போது எம்எல்ஏ வாக இருந்தவரும் டிஸ்டிரிக்ட் போர்டு தலைவருமான வி.கே. பழனிச்சாமி கவுண்டர் நான் படிக்கும் கல்லூரிக்கு வந்தார். டிஸ்டிரிக்ட் போர்டு சார்பில் பள்ளிகளைத் தொடங்கிவிட்டோம். ஆசிரியர்கள் போட வேண்டியுள்ளது. படித்து முடித்தும் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் ஸ்டைபண்ட் தொகையையாக ரூ.500க்கான செக்கையும் பாண்டையும் கொடுத்தார். என்னை விலைக்கு வாங்க நினைக்கிறீர்களா அந்தப் பணம் வேண்டாம்” என்றார் ராஜகோபாலன். சட்டப்படி கொடுக்கின்ற பணம் தான் என்று அவர் விளக்கினார். “எனக்குப் பணம் வேண்டாம் படித்து முடித்ததும் டிஸ்ட்ரிக்ட் போர்டு பள்ளியில் வேலைக்கு வருகிறேன்” என்றார் எஸ்எஸ்ஆர். அதன்படி, படித்து முடித்ததும் அந்தியூரில் உள்ள பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார்.
பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எம்எஸ்சி இரண்டு ஆண்டுப் படிப்பை ஓராண்டில் படிக்க சிறப்பு அனுமதி பெற்று தேர்ச்சி பெற்றவர். பிறகு சர்வஜன பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து எம்பிஏ பட்டம் பெற்றார்.
1983ஆம் ஆண்டில் பரோடாவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் கல்வி குறித்த அவரது பிஎச்டி ஆய்வேடு (An enquiry into Certain aspects of selected innovation in education) இன்றைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஆய்வேட்டை மதிப்பீடு செய்த மத்திய கல்வித்துறை செயலாளர், இந்த ஆய்வேட்டை புத்தகமாக்க ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்க முன்வந்தார். அவரது ஆசிரியப் பணிச்சுமைகள் காரணமாக அது புத்தக வடிவம் பெறாமல் நின்றுவிட்டது.
அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் இருந்தபோது, மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்தார். அவர் பள்ளிக்கும் வரும்போதே புகைப்பிடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்த ராஜகோபாலன், பள்ளி வளாகத்துக்குள் அதற்கு அனுமதி இல்லை என்றார். அதையடுத்து அந்த அதிகாரி சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு நடக்க ஆரம்பித்தார். கீழே போட்ட சிகரெட்டை நீங்கள்தான் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார். அதையடுத்து சிகரெட்டை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்த அந்த அதிகாரிக்கு ராஜகோபாலன் மீது கடும் கோபம். எப்படியாவது குற்றம்சாட்டி, தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார். `உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், வேறு பள்ளிக்குப் போய்விடுங்கள்’ என்று அந்தப் பகுதியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி ராஜகோபாலனை அறிவுறுத்தினார். `அரசுப் பள்ளியில் பல முதலாளிகளுக்கு வேலை செய்வதைவிட ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வதே மேல்’ என்று அரசுப் பள்ளி வேலையை விட்டுவிட்டு, அரசு உதவி பெறும் பள்ளியான, தான் படித்த சர்வஜன பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவருக்கு எதிராகச் செயல்பட்ட அந்த அதிகாரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகி ஓய்வு பெற்ற பிறகு, தனது செயலுக்கு வருந்தி தனக்குக் கடிதம் எழுதியதை என்னிடம் நினைவுகூர்ந்திருக்கிறார் ராஜகோபாலன்.
“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் ஆசிரியர் பணிக்காக எனது பள்ளிக்குத் தேடி வந்திருந்தார். அவரது சித்தியுடன் வந்த அவர், எனது மேஜை மீது பணத்தை வைத்துவிட்டு, எனக்கு எப்படியாவது ஆசிரியர் வேலை கொடுங்கள் என்று சொன்னார். ஆசிரியர் வேலை கொடுத்தால் நாங்கள்தானே பணம் கொடுக்க வேண்டும், நீங்கள் ஏன் பணம் கொடுக்கிறீர்கள். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். பள்ளியின் செயலராக இருந்த ஜி.கே. தேவராஜுலு, ஆசிரியராக வருவபர் தூய்மையாக ஆடை அணிய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். ஆனால் நாராயணன் போட்டு வந்திருந்த கசங்கிய ஆடையுடன் அவரைப் பார்க்கப்போனால் நிச்சயம் வேலை கிடைக்காது. எனவே, அவரை எனது டெய்லரிடம் சொல்லி புதிய ஆடைகளைத் தைத்துத் தந்தேன். அதைப் போட்டுக் கொண்டு செயலரிடம் அழைத்துப் போனேன். அவருக்கு வேலைகிடைத்துவிட்டது” என்கிறார் எஸ்எஸ்ஆர். இதுபோல பல மாணவர்களின் படிப்புக்கு அவர் உதவிக்கரம் நீட்டிய பல கதைகள் இருக்கின்றன.
விளிம்பு நிலை மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சராசரியாகப் படிக்கும் மாணவர்களையும் பள்ளியைவிட்டு இடையிலேயே நின்றுவிடாமல் தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தீவிர அக்கறை செலுத்துவார்.
“புதையுண்டவர்களில் எத்தனையோ பேர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றும் ஆழ்கடலில் உள்ள மாணிக்கம் போலவும், பாலையில் நறுமணம் வீசும் மலர் போலவும் ஊர் பேரறியாது மறைந்துள்ளனரோ என்று தாமஸ்கிரே என்ற ஆங்கிலக் கவிஞர் `மயானத்தில் ஓர் இரங்கற்பா’ என்ற கவிதையில் அங்கலாய்ப்பார். அத்தகைய நிலை ஏற்படாது நம் மாணவர்களைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரியருக்கும் பள்ளிக்கும் உண்டு. மல்லிகை நாளும் மலரும். வேறுசில மொட்டுகள் மலர நாட்கள் பல எடுக்கும். நம் மாணவரது மலரும் பருவமும் ஒன்று போலன்று. இன்று மலரவில்லை என்று கிள்ளி எறியக் கூடாது. பொறுத்திருந்து தாமாக மலர்வதற்கு உதவுவதே நம் கடமை’’ என்பார் ராஜகோபாலன்.
பொள்ளாச்சியில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது, விடுமுறை நாட்களில் ஊரின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார். இவரது சமூகப் பணிகளைப் பார்த்த அன்றைய முதல்வர் காமராஜர், “இந்த ஊருக்கு இரண்டு பிடிஓக்கள். ஒரு பிடிஓ அரசு நியமித்தது. மற்றொருவர் தலைமை ஆசிரியர் ராஜகோபாலன்” என்று பாராட்டி இருக்கிறார். தமிழக முதல்வர்களாக இருந்த காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரை நேரில் சந்தித்து கல்வி சம்பந்தமான தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும், அவர்கள் ஏற்பார்களாக இல்லையா என்ற தயக்கமின்றி கூறி இருக்கிறார்.
பொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளிக் கல்வி முறை, இருமொழிக் கல்வி, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்ததுடன், கல்வி வணிகமயமாதல், கட்டாய நீட் தேர்வு, பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
தமிழக அரசின் சமச்சீர் பாடக் கல்விக் குழுவிலும் பள்ளிக் கல்வி பாடச் சுமை குறித்து ஆய்வு செய்வதற்கான சிவஞானம் குழுவிலும் உறுப்பினராக இருந்தவர். தொழிற் கல்வி குறித்த பஞ்சாப் மாநிலக் கல்விக் குழுவில் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர். 94 குழந்தைகள் கருகி இறந்த கும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்து விசாரணை செய்ய அமைக்கபட்ட நீதிபதி சம்பத் குழுவிடம் பள்ளிகளில் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சட்ட விதிமுறைகளில் இருக்கும் விவரங்களை மூன்றுநேரம் வாக்குமூலமாகத் தந்தவர். இதற்காக, அந்த அறிக்கையில் ராஜகோபாலனுக்கு நன்றி தெரிவிக்கும் குறிப்பும் உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த சை.வே. சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், மெட்ரிக் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் ஆசிரியர் ஊதியம் போன்ற பல்வேறு விஷயங்களில் நீர்த்துப்போகச் செய்யும் விதிமுறைகளைப் பார்த்து அந்த அறிக்கையில் கையெழுத்துப் போட மறுத்தவர் ராஜகோபாலன்.
பக்தவத்சலம் கல்வி அமைச்சராக இருந்தபோது, பள்ளிகளில் தனியார் பாட நூல்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதன் விளைவாக,பின்னாளில் அரசுப் பாட நூல் நிறுவனம் உருவாக வழிவகுத்ததில் ராஜகோபாலனுக்கும் பங்கு உண்டு. பாட நூல்களை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தமிழில் மொழிபெயர்க்கும் நடைமுறையை பின்பற்றி வந்த தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் நடைமுறையை மாற்றி தாய்மொழியில் நேரடியாக பாட நூல்களை எழுத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.
பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்தே ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக ஆனவர். தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். வோல்ட் பெடரேஷன் ஆப் டீச்சர்ஸ் யூனியன்ஸ் (FISE) என்ற சர்வதேச அமைப்பிலும் உறுப்பினராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக செனட், அகாடெமிக் குழுக்களில் உறுப்பினராக இருந்திருக்கிறார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
இஸ்கஸ் சார்பில் சோவியத் யூனியனுக்குச் சென்ற அவர் அங்குள்ள பள்ளிகள் செயல்படும் விதத்தைப் பார்வையிட்டார். பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பின் பேரில் பிரிட்டன் சென்ற அவர், நியூகேசிலில் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கணிதப் பாடத்தை கற்பிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். ரோட்டரி கிளப் சார்பில் அமெரிக்கா சென்று அங்குள்ள கல்விமுறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்.
கணிதப் பாடத்தில் ஆர்வமிக்க அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளி மாணவர்களுக்காக அவர் எழுதிய கணிதப் பாடப்புத்தகம் தில்லி பப்ளிக் ஸ்கூலில் பாடமாக வைக்கப்பட்டது. சார்க் நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் பாடமாக வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆழ்ந்த படிப்பாளி. கல்வி ஆய்விதழ்கள் உள்பட பல்வேறு முக்கிய இதழ்களைச் சந்தா செலுத்தி வாங்கிப் படிப்பார். முக்கியப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து படித்துவிடுவார். கல்வித் துறை குறித்த விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் பத்திரிகைகளுக்கு கடிதங்கள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பதிவு செய்து வந்தவர். அதிலுள்ள வரலாற்று செய்திகள் அவரது அபார நினைவாற்றலை நமக்கு உணர்த்தும். அவரது கருத்துகள் அனைவரது கவனத்துக்கும் உரியவை.
மனிதர்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. பேசுகின்ற, கேட்கின்ற ஆற்றலே போய்விடுமோ என்றுகூறி, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு தரப்பினரைக் கூட்டங்களில் சந்தித்துப் பேசி உரையாடுவதில் ஆர்வம்காட்டிய அவர், தனது மனைவி சீதா மரணத்துக்குப் பிறகு, அந்த இழப்பைத் தாங்க முடியாமல் தனிமையில் தவித்தார். காலையில் எழுந்ததும் பத்திரிகையில் வரும் சுடகு, கிராஸ்வேர்டு பசில் ஆகியவற்றைப் போடுவதுடன் அவரது பத்திரிகைப் படிப்பு குறுகிவிட்டதுடன், அவரைப் பார்க்க வருகிறவர்களிடம் கல்வி குறித்த விஷயங்களை விவாதிப்பதும் குறைந்துவிட்டது.
நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவரைப் பார்க்க அடிக்கடி வருவேன். “நான் தனிமையில் இருக்கப் பழகிவிட்டேன். அதனால் என்னைப் பார்க்க வருவதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டாம்’’ என்று இமெயில் மூலம் தகவல் அனுப்பினார். “நீங்கள் தனியாக இருக்கப் பழகிவிட்டீர்கள். நான் தனியாக இருக்க இன்னமும் பழகவில்லை. அதனால் உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்று கூறியதும் அவரிடம் ஒரு புன்முறுவல்.
“எனக்கு கடவுள் பக்தி கிடையாது. ஆனால் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் பேரில் பிரியம் உண்டு. ஆந்திரப் புயல் சமயத்தில் ஏராளமானவர்கள் இறந்து போனார்கள். கோவையிலிருந்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் 3 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. அதை விநியோகிப்பதற்காக என்னைச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆந்திர கடலோரப் பகுதியில் புயலினால் ஏராளமானவர்கள் இறந்து போனார்கள். அவர்களை எடுத்து அடக்கம் செய்யும் பணியில் ஏராளமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களுடன் ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகளும் அர்ப்பணிப்போடு அந்தப் பணிகளில் ஈடுபட்டதைப்பார்தேன். அதையடுத்து ஒவ்வொரு ஜனவரி மாதமும் முதல் தேதியில் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்கு நன்கொடை அனுப்புவது எனது வழக்கம். இதேபோல தென்காசியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கும் நன்கொடை அனுப்புவேன்’’ என்று கூறுவார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சக மனிதர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரது ஒவ்வொரு செயலிலும் அந்த அன்பையும் அக்கறையையும் பார்க்க முடியும். சருக்கையில் உள்ள தனது பூர்வீக இல்லத்தை அரசு நூலகத்துக்காகக் கொடையாக வழங்கியவர். தனக்கு சொந்த வீடுகூட வைத்துக் கொள்ளாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு, தனது வாழ்நாளில் தனது வருவாயில் கணிசமான பகுதியை பல்வேறு அறப்பணிகளுக்காகவும் பல மாணவர்களின் கல்விக்காகவும் சப்தமில்லாமல் உதவி வந்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகு, மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலும் தானமாக வழங்கப்பட்டது. `ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்கள் மேன்மையானவை.’
📚 எழுதியவர்:
– பொன். தனசேகரன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

