“சேப்பாயி” தன் பேத்தி லட்சுமியின் கைபிடித்து வயல்வெளிகளின்  ஊடறுத்து வரப்பு மேல் நடந்து வரும்பொழுது அருகில் ஓடும் கால்வாயில் துள்ளி விளையாடிய மீன்கள் காணாமல் போனதைப் பேசுவாள்.. அகண்ட கால்வாய் நிலமாகிக் கிடப்பதின் சூட்சுமம் குறித்து லட்சுமியிடம் சொல்லுவாள்.. சேற்று நண்டும் நத்தையும் பிடித்துக் கறி செய்து சமைத்த கதைதனைச் சொல்லுவாள்.. நத்தையும் நண்டும் எப்படி புது ரக உரங்களால் அழிக்கப்பட்டு காணாமல் போய்க் கிடக்கிறது என்பதை கதை கதையாகச் சொல்லுவாள்.. பச்சைத் தவளை இருந்ததால்தான் உன் அப்பா இன்று உயிரோடு இருக்கிறான் என்று சொல்லிச் சொல்லி தன் அங்கலாய்ப்பு பேச்சிதனை பேசி வருவாள் பேத்தியிடம்.. இயற்கையும், அதன் படைப்புகளும், உயிர்களும் எப்படியெல்லாம் நம்முடைய மனிதர்களின் உயிர் வாழ்வியலோடு கலந்து உறவாடியது என்பதை பேசிக்கொண்டே வருவாள்.. அவள் பேசப் பேச நாமும் அவள் பதித்த தடங்களில் நுழைந்து கால்வாயில் ஓடும் தண்ணீர் அடித்து போய்க்கொண்டு இருப்போம்.. நத்தையையும் நண்டையும் கூடவே பச்சை நிறத் தவளையும் தேடிக்கொண்டே வருவோம் எங்கேயாவது பார்த்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தோடு.. சலசலவென்று ஓடிவரும் தண்ணீருக்குள் இருந்து மீன்கள் ஏதேனும் துள்ளிக் குதிக்குதா கொக்கைப் போன்று நின்று கொண்டிருப்போம் ஒற்றைக்காலில் .. இப்படியான ஒரு கிரக்கத்தை சேப்பாயி லட்சுமியிடம் பேசி வந்திடும் வார்த்தைகளுக்குள்  நம்மை நாமே மகிழ்ச்சி தனின் உச்சத்தில் மூழ்கடித்துக் கொள்வோம்..
சேப்பாயி தோட்டத்திற்குள் நுழையும் பொழுது கொய்யா மரத்தில் உறவாடிக் கொண்டு இருக்கும் வவ்வால்களின் கூட்டத்தை பார்க்கலாம்.. மாமரத்தில் ஓடிடும் அணில்களின் கொஞ்சும் பேச்சினில் நம்மை இழந்து நிற்கலாம்.. வீசும் காற்றின் வடிவுக்கு ஏற்றபடி அசைந்தாடி கீதம் இசைத்து பச்சைக் குடை பிடித்து நிற்கும் தென்னை மரங்களில் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கும் இளநீரின் ஈரம் வேண்டி வான்நோக்கி நிற்கலாம் சேப்பாயியின் ஈர விழிகளோடு இணைந்து.. சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பூத்துக் குலுங்கும் செம்பருத்திச் செடியின் மேல் அமர்ந்து ஒய்யாரமாய் கழுத்தைத் திருப்பி உங்களைப் பார்த்து இருக்கும் அந்தச் சிட்டுக்குருவியின் அழைப்பதனில் நம் மனம் காதல் கொள்ளலாம்.. அப்படியே  பலாமரத்து நிழலில் நீங்கள் ஒதுங்கிடும்வேளை அங்கே கண் திறக்காத தன் குட்டிகளுக்கு முலைப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் செல்லம்மா உங்கள் கால்களை வாஞ்சையோடு நக்கிக் கொடுக்க வால் குழைத்து ஓடி வரும்.. கொஞ்சம் தள்ளிப் போனால் வள்ளி தெய்வானையின் வாரிசுகள்  எங்கே தனது தாயை தன்னிடமிருந்து பிரித்து விடுவாரோ என நினைத்து உங்களின் புட்டத்தை தன் நெற்றியால் முட்ட வருவார்கள் கருப்பும் வெளுப்பும் கலந்தவர்களாக..
வளர்ந்த தன் குஞ்சுகளோடு கோழியும் சேவலுமாக தோட்டமெங்கிலும் கும்மாளமிடலாம்.. இப்படியானதொரு  ஏகாந்த வாழ்வுதனை சேப்பாயி வாழ்ந்து கிடக்கிறாள் என நாம் நினைத்து அவளோடு பேசினாள்.. அவள் பேசும் வார்த்தைகளுக்குள் இருக்கும் சோகத்தையும் பெரும் துயரத்தையும் நாமும் சுமந்தே ஆக வேண்டும். தான் பெரியவளாகிய நாளினிலே தாயைப்  பறி கொடுத்த பெரும் வலியையும், தம்பியாய் பிறந்த முத்துசாமிக்கு வாலிப வயது நெருங்கி வரும் சூழலில் பெண்மையும் சேர்ந்தே கூட வளர சொந்த கிராமத்தில் அவனும் வாழவழியற்று கிராமத்தை விட்டே வெளியேறிட கூடப்பிறந்தவர்கள் எவரும் இல்லாது தனித்து விடப்பட்ட நிலையில்.. தங்கவேலோடு காதலில் மறுகி திருமணத்தின் நாளன்று பொழுதெல்லாம் உழைத்து கிடந்த தன் தகப்பன் சங்கரன் நோய் வந்து தூக்கிப்போக வாய்க்கரிசி போட்டனுப்பிய பெரும் துயரத்தையும் ..
Image
தனக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் ஆறுமுகமும், சாமியும் தன்னுடைய நிலத்தின் மீதும் தோட்டத்தின் மீதுமே குறியாக நின்றிட, மூன்றாவது மகனான மாரி ஆற்று மணல் திருடர்களுக்கு உடந்தையாய் நிற்க,  நன்றாக படித்து முடித்த நான்காவது மகன் சீனுவை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய கும்பலொன்று தாக்கியதால் திடீரென  மனநிலை பிறழ்ந்து ஊரில் பலரால் அனுதாபத்திற்காளானாலும்  கூடப்பிறந்த அண்ணன்களால் இரக்கமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்தப் படுவதையும்.. காதல் கணவன் தங்கவேலுவும் இன்னும் ஒரு பெண்ணால் ஈர்க்கப்பட்டு அவளோடவே ஆரல்வாய்மொழியில் தனிக் குடும்பம் நடத்துகிறான் என்பதையும், அவள் நேசிக்கும் ஏதேனும் ஒரு உயிராக இருந்து அவளின் தலைசாய்க்கும் மடியாக இருந்து
வாஞ்சையோடு ஒரு நாளாவது அவளை உறங்க வைப்போம்..
இத்தனை துயரங்களையும் நெஞ்சமெல்லாம் சுமந்துகொண்டு இயற்கையோடு பிணைந்து வாழ்ந்து வரும் சேப்பாயிக்கு.. கார்ப்பரேட் வீசிய எலும்புத் துண்டுகளுக்கு வாலை ஆட்டிய அரசியல் அதிகாரம், ஆசை வார்த்தைகளைப் பேசி ஆசையை பண வெறியாக மாற்றிப் போடுகிறார்கள் கிராமத்தின் அத்தனை குடும்பத்தாரிடமும். நிறைய பணத்தை விரைவாக சம்பாதிக்க ஆசைப்பட்ட அத்தனை பேரும் தங்கள் வீட்டில் இருந்த தோட்டத்தில் இருந்த அத்தனை மரங்களையும் வெட்டி அங்கே ரப்பர் மரங்களை நட்டு வைக்க.. ரப்பர் மரத்தை நட்டு வைப்பதால் இயற்கை வளங்கள் எல்லாமும் பறிபோகும், உயிர்கள் வாழக்கூடிய பூமியாக நம்மண் இருக்காது; குடிப்பதற்கும் மிகப்பெரிய ஒரு அவலத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஒவ்வொரு வீடாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் சேப்பாயி.. அரசு அதிகாரம் சேப்பாயிக்கு எதிராக அவரது மகன்களை கொம்பு சீவி அனுப்புகிறார்கள் வந்தவர்கள் எங்களுக்கான நில பாகத்தை பிரித்துக் கொடுவென சேப்பாயிடம் மல்லுக்கு நிற்க, அவளோ அவர்களின் கள்ளத்தனம் அறிந்து முடியாது என்கிறார். தனி ஒரு மனுசியாக நின்று இயற்கை வளங்களுக்கு எதிராக நடைபெறும் போரில் அவளது அத்தனை வளங்களும் வனங்களும் வஞ்சகமாக சூறையாடப்படுகிறது மகன்களாளும் அரசு அதிகாரத்தாலும் அவரின் உயிரையும் விட்டு வைக்காமல்.. கார்போரட்டுக்கு எதிரான  போராட்டம் அந்த கிராமத்தில் அடுத்த தலைமுறைக்கு கை அளிக்கப்படுகிறது.. அது சேப்பாயின் பேத்தி லட்சுமி வழியாக.. அவள் கைகளில் தென்னங்கன்று கொண்டு சேப்பாயி புதைக்கப்பட்ட மண் மீது நட்டு வைக்கப்பட்டு..
“சேப்பாயி”இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறாள்.. இயற்கை வளங்களை நம்பி வாழும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.. மனிதர்களை நம்பி வாழும் பல உயிரினங்களோடு நம்மை பறக்க வைக்கிறார்.. அவைகளோடு நம்மை கொஞ்சிப்  பேசச் சொல்கிறார்.. நாம் வாழ அவைகள் கொடுக்கும் சக்திகளை நமக்குள் ஏற்றி விடுகிறார். எளிய மொழி நடையில் நாவலை கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் கணேஷ் ராகவன். நாவலுக்குள் பேச்சு வழக்கில் இருக்கும் மலையாளமும் கொஞ்சுகிறது நம்மை. நாவலின் போக்கில் சேப்பாயி தம்பி முத்துசாமி திருநங்கையாக மாறுவது நாவலின் கதையோட்டத்தில் ஒரு சிறு தடையினை ஏற்படுத்துகிறது. திருநங்கைகள் வாழ்வியல் சம்பந்தமாக அவர்கள் சந்திக்கக் கூடிய சவால்கள் குடும்பம் தொடங்கி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அவர்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம் என காத்திரமாக பேசவேண்டிய விளிம்பு நிலை மக்கள் அவர்கள். அதை போகிற போக்கில் பேசுவது இந்த நாவலுக்குள் அது பெரிய அளவு பேசக்கூடிய மாதிரி உதவாது.
சேப்பாயி seppayi
வேலையற்ற வாலிபர்கள், படித்து முடித்த பட்டதாரிகள் என ஒரு பெரும் பகுதி சுயமரியாதையோடு வாழ வேண்டும் என நினைத்துக் கிடப்பதை வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் என்கிற விளம்பரத்தின் வழியாக பல தனியார் ஏமாற்று நிறுவனங்கள் வாலிபர்களையும் அவர்தம் குடும்பங்களையும் எப்படி ஏமாற்றி பணத்தினை சூறையாடகிறார்கள் என்பதையும், அதனால் பாதிக்கப்பட்ட வாலிபன் கோபப்படும் பொழுது எப்படி விரட்டப்பட்டு மிரட்டுகிறான் என்பதையும் நாவலுக்குள் பேசியிருக்கிறார் சீனு வழியாக நாவலாசிரியர். மனப் பிறழ்வு அடைந்த சீனு பொதுவெளியில் தாக்கப்படும் பொழுது அவனுக்காகப் பரிந்து பேச ஒருவரும் வராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் காலகாலமாக இங்கே தொடர்கிறது. இந்தப் பகுதியை வாசிக்கும் பொழுது கேரளாவின் ஒரு சின்னஞ்சிறிய மலைப்பகுதியில் வயிற்றுப் பசியின் கொடூரத்தால் உணவுப் பொருளை எடுத்தான் என்பதற்காக ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபனை ஒரு கும்பல் அடித்தே கொன்றதை எவருமே மறுக்க முடியாது இங்கு. அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என நினைக்கும் பொழுது வெட்கப்படவும், சீனுவைப் போன்ற எண்ணற்றவர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நாளை அவர்கள் பெற்றோர் இல்லாத பொழுது அந்த பிள்ளைகளின் நிலைமை என்னவாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் எழவேண்டும் எல்லோருக்குமே. சீனுவின் நிலைமையை வலுவாகவும் வேதனையோடும் பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர் கணேஷ் ராகவன்.
நாவலுக்குள்  சேப்பாயியினுடைய  உழைப்பும், இயற்கையின் பால் அவள் கொண்ட அளப்பரிய நேசமும், அதற்கு சிதைவு ஏற்படும் பொழுது கொள்ளும் கோபமும், அதில் இருக்கும் நியாயமும் ஆழமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நாவலின் பல இடங்களில். அதேபோன்று அவரின் மரணத்தின்போது வாசிக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறார்
கணேஷ் ராகவன்.
இந்த நாவலுக்குள் படைக்கப்பட்ட சேப்பாயி கணவன் தங்கவேலு தொடங்கி அத்தனை ஆண்களும் பொதுச் சமூகத்தில் ஆண் திமிரின் அடையாளங்களாக.. தினம் நாம் பார்க்கும் அத்தனை ஆண்களும் இந்த நாவலுக்குள் அப்படியே உலா வருகிறார்கள்.
இயற்கை வளத்தின் பக்கம் நிற்கக்கூடிய அனைவரும் மட்டுமல்லாது, இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள் நவீனத்தின் பெயரால் இயற்கையின் மீது பேராபத்து நிதமும் தன்னையறியாமலேயே நிகழ்த்திக்   கொண்டிருப்பவர்கள் என அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நாவல் இது.
இயற்கைக்கு ஆதரவு தெரிவித்து நல்லதொரு அரசியல் பேசியிருக்கும் கணேஷ் ராகவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டுகளும். சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கும் பேரன்பும் நன்றியும்.
இயற்கையை கொண்டாடுவோம்..
இயற்கை வளங்களை கொண்டாடுவோம்..
அனைத்து உயிர்களையும் கொண்டாடுவோம்..
இவைகளைக் கொண்டாடும் மனிதர்களை போற்றுவோம்..பாதுகாப்போம்..
சேப்பாயி
கணேஷ் ராகவன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கருப்பு அன்பரசன்.
One thought on “நூல் அறிமுகம்: சேப்பாயி நாவல் – கருப்பு அன்பரசன்.”
  1. சமூகம் சார்ந்த படைப்பு.
    நடுவுநிலையான விமர்சனம்.
    பாராட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *