1. தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji) செப்டம்பர் 4, 1825இல் பிறந்து ஜூன் 30, 1917இல் மறைந்த இந்தியத் தேசியவாதி மற்றும் இந்தியாவில் பிரிட்டிஷ் பொருளாதாரக் கொள்கையை முதலில் விமர்சித்தவர் ஆவார். Grand Old Man of India (இந்தியாவின் முதுபெரும் கிழவர்) என்றும் அழைக்கப்பட்டார், மேலும் இந்தியாவின் தூதராகவும் பணியாற்றினார். இந்தியாவின் தேசிய வருமானத்தை மதிப்பிடுவதில் அவர் செய்த முன்னோடிப் பணிக்காக இந்தியப் பொருளாதார சிந்தனை வரலாற்றில் அவர் பெரிதும் புகழ்பெற்றவர் ஆவார்.
Theory of Drain of Wealth (செல்வம் வடிகால் கோட்பாடு)
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் செல்வத்தை பிரித்தானியாவிற்குக் கொண்டு சென்றதை அடிப்படையாகக்கொண்டு நௌரோஜி Drain of Wealth theory (செல்வத்தை வெளியேற்றும் கோட்பாட்டை) அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் நிகர தேசிய லாபம் மற்றும் காலனித்துவத்தால் நாடு சந்தித்த விளைவு பற்றிய கருத்துகளை அழுத்தமாகப் பதிவுசெய்தார். பிரித்தானியாவால் இந்தியாவிலிருந்து பணம் வெளியேற்றப்படுகிறது என்பதை நிரூபிக்க அவர் முயன்றார். இதற்கான ஆறு காரணிகளை அவர் இனம் கண்டார் அவை, 1. வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்சி; 2. உரிமையியல் நிர்வாகத்தின் செலவுகள்; 3. பிரித்தானியப் பேரரசைக் கட்டியெழுப்பும் செலவுகள் இந்தியாமீது சுமத்தப்பட்டது; 4. சுதந்திரமான வர்த்தகம் என்ற பெயரில் இந்திய வளங்கள் சுரண்டப்பட்டது; 5. அதிக அளவிற்கு வருமானம் ஈட்டுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பாக பிரித்தானியர்களாக இருந்தனர்; 6. இந்தியா குடியேறிகளை (வெளிநாட்டிலிருந்து குடிபெயர்பவர்களை) ஈர்க்கவில்லை, என்பதாகும். அவரது கருத்துப்படி, இந்த நடவடிக்கையின் காரணமாக இந்தியாவின் செல்வமானது வெளிப்புற வடிகாலுக்கு வழிவகுத்தது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியலில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்திய முதல் நபராக நௌரோஜி காணப்படுகிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார விளைவுகள் குறித்த அவரது எதிர்க் கருத்துக்காக அவர் பரவலாக அறியப்பட்டார். நௌரோஜி 1895இல் இந்தியச் செலவினங்களுக்கான ராயல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1901இல் Poverty and Un-British Rule (இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சி) என்ற புத்தகத்தை வெளியிட்டார் , அதில் அவர் பிரித்தானிய அரசினால், இந்தியாவின் வருவாய் இழப்பு 200–300 மில்லியன் பவுண்டுகள் என்று மதிப்பிட்டார், இந்தப் பணம் ஒருபோதும் இந்திய அரசுக்குத் திருப்பித் தரப்படவில்லை.
பிரித்தானிய நிறுவனங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தால் இந்தியாவின் வருவாயானது உள்நாட்டிலேயே தங்கியிருக்கும் என்றும், இதனால் இந்தியாவானது தன்னைத்தானே நிர்வகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஈட்டப்படும் பணம் இந்தியாவில் இருந்து வெளியேறாமல் இருக்கும் நிலையில் வறுமையற்ற நிலை உருவாகும் என்று அவர் கூறினார். இந்த நோக்கத்தை அடைய, நடப்பில் உள்ள உயர் தகுதி படைத்த இந்தியர்களுக்கு அதே நிலையில் உள்ள பிரித்தானியர்கள் போலவே சம வேலைவாய்ப்பினை வழங்குதல், இந்தியாவில் தொழில்களின் வளர்ச்சியினை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார்.
ஆதாரம்: www.britannica.com; www.inc.in/leadership; www.unacademy.com; www.learn.culturalindia.net
*********************************************
2. கிளைவ் வில்லியம் ஜான் கிரேன்ஜர் (Clive William John Granger) செப்டம்பர் 4, 1934இல் பிறந்து மே 27, 2009இல் மறைந்த வேல்ஸ் நாட்டினைச் சார்ந்த பொருளாதார நிபுணர் ஆவார். காலத் தொடர் (time series) தரவை பொதுவான போக்குகளுடன் பகுப்பாய்வு செய்வதற்கான நுட்பங்களை உருவாக்கியதற்காக 2003ஆம் ஆண்டில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசை ராபர்ட் எஃப். எங்கிளுடன் சேர்ந்து பெற்றார்.
Granger Causality (கிரேன்ஜர் காரணகாரியம்)
கிரேஞ்சர் காரண காரியம் என்று அழைக்கப்படும் கிரேஞ்சரின் பங்களிப்பு, பொருளாதாரத் தரவுகளில் காரண காரிய உறவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு தரமான கருவியாகும். “கிரேஞ்சர் காரண காரியம்” என்ற கருத்தானது, ஒரு மாறிலியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றொரு மாறிலியில் ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்கிறது. இதனைப் பொருளாதார வல்லுநர்கள், சமூக விஞ்ஞானிகள் முதன்மையாக பயன்படுத்தும் கருவியாகும். ஜான் கிரேன்ஜர் வெளியிட்டப் புத்தகங்களில், காலத் தொடர் பகுப்பாய்வு, முன் கணிப்பு, புள்ளிவிவரக் கோட்பாடு, பயன்பாட்டுப் புள்ளிவிவரங்கள் போன்றவற்றை பரவலாக காணப்படுகிறது.
காலத் தொடர் தரவுகளை முன் கணிப்பதில் அவர் ஆற்றிய பணி (தினசரி பங்கு விலைக் குறியீடுகள், நுகர்வோர் செலவு, ஒவ்வொரு காலாண்டிற்கும் தேசிய வருமானம் போன்ற காலத்தால் வரிசைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தரவுகளின் தொகுப்புகள் உள்ளிட்டவை) பொருளாதார அளவியல் துறையில் (Econometrics) நிலையான இடத்தைப் பெற்றுள்ளது (பொருளாதாரத் தரவுகளின் பகுப்பாய்விற்குக் கணித அல்லது புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்துதல்). மற்றக் கோட்பாட்டாளர்களை விட, முன் கணிப்புத் திறன் மற்றும் அனுபவ உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ஆராய்ச்சிக்கான அணுகுமுறையை உருவாக்குவதில் கிளைவ் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். பல பொருளாதார வல்லுநர்கள் கிளைவின் கருத்துக்களை பெரிதும் பயன்படுத்துவது என்பது அவரின் செல்வாக்கு எந்த அளவிற்குப் பரந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள இயலுகிறது.
ஆதாரம்: www.britannica.com; www.antidismal.blogspot.com; www.theguardian.com; www.onthisday.com; www.econlib.org; www.econbrowser.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

