செப்டம்பர் 14 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாரன்ஸ் ஆர். க்ளீன், ராபின் முர்ரே & வாரன் ஜோசப் சாமுவேல் (Economist Lawrence R.Klein & Robin Murray & Warren Joseph Samuel Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாரன்ஸ் ஆர். க்ளீன், ராபின் முர்ரே & வாரன் ஜோசப் சாமுவேல் – முனைவர் பு. அன்பழகன்

1. லாரன்ஸ் ஆர். க்ளீன் (Lawrence R.Klein) செப்டம்பர் 14, 1920இல் பிறந்து அக்டோபர் 20, 2013இல் மறைந்த அமெரிக்க நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். தேசிய, பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களுக்கான பேரியல் பொருளாதார மாதிரிகளை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பணிக்காக 1980ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் போரின் முடிவு மற்றொரு மந்தநிலையைக் கொண்டுவரும் என்று கணித்திருந்தனர் ஆனால், க்ளீனின் கணிப்பின்படி பொருளாதாரம் ஏற்றம் ஏற்படும் என்று எடுத்துரைத்தன் மூலம் புகழ் பெற்றார். இருப்பினும், இக் கால கட்டங்களில் தேங்கி நின்ற நுகர்வோர் பொருட்களுக்கான தேவையானது தூண்டப்படும் என்றும், அமெரிக்க வீரர்களின் வாங்கும் திறனின் வளர்ச்சியைத் தூண்டும் என்று க்ளீன் துல்லியமாகக் கணித்தார்.

பொருளாதார நடவடிக்கைகளின் முன் கணிப்பிற்காக, பொருளாதார அளவீடுகள் (econometrics) என்றும் அழைக்கப்படும் புள்ளிவிவர மாதிரிகளை உருவாக்க பொது கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துவதில் க்ளீன் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது பணியானது, மிச்சிகன் மற்றும் வார்டன் மாதிரிகள் ஆகிய இரண்டு புகழ்பெற்ற பொருளாதார அளவீட்டு மாதிரிகளுக்கு அடித்தளம் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1993ஆம் ஆண்டில், பொருளாதார ஆய்வுக்கான உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகப் பல்கலைக்கழகத்தின் பங்கை மேம்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கான சூழலை வளர்ப்பதற்காக, Penn Institute for Economic Research (PIER) என்ற ஆய்வு மையத்தை க்ளீன் உருவாக்கினார்.

ஆதாரம்: www.britannica.com; www.investopedia.com; www.economics.sas.upenn.edu; www.nobelprize.org

*****************************************

2. ராபின் முர்ரே (Robin Murray) செப்டம்பர் 14, 1940இல் பிறந்து மே 29, 2017இல் மறைந்த பிரித்தானிய நாட்டை சார்ந்த தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதார அறிஞர் ஆவார். ராபின் முர்ரே கற்பனைத்திறன் மிக்கவராகவும், முற்போக்கு எண்ணங்களை கொண்டவராகவும், மனித நேயம் கொண்ட பொருளாதார அறிஞராகவும் அறியப்படுகிறார். மார்க்சியம், காந்தி மற்றும் உலகம் முழுவதும் காணப்படும் சமூகம் சார் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றவராக அவர் காணப்பட்டார். ராபின் முர்ரே பொருளாதார அறிஞர் என்ற வகையில், நியாயமான வர்த்தகம், தொழில்துறை உத்தி மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றில் அவருடைய ஆர்வம் காணப்பட்டது. முர்ரேயின் முன்னோடிப் பணிகளாக, நியாயமான வர்த்தகம், கழிவு மேலாண்மை மற்றும் லண்டனின் மறுமலர்ச்சி உள்ளிட்டவையாக உள்ளது.

1999ஆம் ஆண்டு முர்ரேயின் முதல் புத்தகமான Creatubg Wealth from Waste, என்பது நிராகரிக்கப்பட்ட பொருட்களுக்கு மதிப்பு இருப்பது பற்றிக் குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு Zero Waste, என்பது கழிவுகளை உருவாக்குவது மனிதக்குலத்தின் மிகப்பெரிய தவறு என்பதை நிரூபித்தது. இந்த கிரகத்தில் வேறு எந்த உயிரினமும் செய்யாத வகையில் நாம் கழிவுகளை உருவாக்குகிறோம், மேலும் அதை நாம் உற்பத்தி செய்ய முடிந்தால், அதை உற்பத்தி செய்வதை நிறுத்தவும் முடியும் என்று குறிப்பிடுகிறார். நியாயமான வர்த்தக இயக்கத்தின் வளர்ச்சியில் அவரது முதன்மை பங்கு சமகால கூட்டுறவு இயக்கத்தில் மிகவும் புகழுடையது ஆகும்.

ஆதாரம்: www.lwbooks.co.uk; www.blog.p2pfoundation.net; www.solidarityeconomy.coop; www.resource.co

*****************************************

3. வாரன் ஜோசப் சாமுவேல் (Warren Joseph Samuel) செப்டம்பர் 14, 1933இல் பிறந்து ஆகஸ்ட் 17, 2011இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். பல்வேறு புகழ்மிக்கப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அவர் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். வாரன் ஜோசப் சாமுவேல் பொருளாதார சிந்தனை வரலாற்றில் உலகில் புகழ்மிக்க அறிஞர்களில் ஒருவாராக்க கருதப்படுகிறார், இத்துடன் அவர் நிறுவன அரசியல் பொருளாதாரம், சட்டம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். வாரன் பொருளாதார வழிமுறை இலக்கியத்திற்கும் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்களைப் பாதிக்கப் பயன்படுகிறது என்ற அடிப்படை அனுமானத்துடன் அவர் பணியாற்றினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

The Physiocratic Theory of Economic Policy (1962), The Classical Theory of Economic Policy (1966), The Economy as a Process of Valuation (1997), Economics, Governance and Law: Essays on Theory and Policy (2002), Essays on the History of Economics (2004) ஆகியவை சாமுவேல்ஸின் செல்வாக்கு மிக்க கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுக்காக முக்கியமாக நினைவுகூரப்படுகிறது.

ஆதாரம்: www.econ.msu.edu; www.coordinationproblem.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *