செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம் | Ask a stupid question day - september 28 day - bookday - https://bookday.in/

செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம்

செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம் (Ask a stupid question day)

குழந்தைகளில், நண்பர்களில் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்கிறவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? “என்ன முட்டாள்தனமான கேள்வி கேட்டுக்கிட்டிருக்க,” என்று அவர்களை வாயடைக்கச் செய்யாமல் கொண்டாடுங்கள்.

இன்று (செப்டம்பர் 28) என்ன உலக தினம் என்ற கேள்வியோடு இணையத்தில் நுழைந்தபோது “முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம்” என்று வந்தது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாகவும், வேறு பல நாடுகளைப் பொறுத்தவரை இதில் ஆர்வமுள்ள குழுக்களாலும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளிலோ, பலரும் கூடியிருக்கிற சபைகளிலோ யார் வேண்டுமானாலும் தயக்கமில்லாமல், கேட்டால் சிரிப்பார்களோ என்ற கூச்சமில்லாமல், தங்களுடைய மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விகளைக் கேட்கலாம். கேள்விச் சுதந்திரம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது.

பெயரில் முட்டாள்தனமான கேள்வி என்று இருந்தாலும், உண்மையில் அறிவார்ந்த கேள்விகள் புறப்படுவதைக் காணலாம். ஏன் விடிகிறது, ஏன் இருட்டுது என்று கேட்ட ஆதித் தாய்களும் தந்தையரும்தானே சூரியனைப் பூமி சுற்றி வருகிறது என்ற உண்மை கண்டுபிடிக்கப்படுவதற்கு வித்திட்டார்கள்? ஆப்பிள் பழம் ஏன் மரத்திலிருந்து மேலே போகாமல் கீழே விழுகிறது என்ற கேள்வி அன்றைக்கு முட்டாள்தனமானதாகத்தானே பார்க்கப்பட்டிருக்கும்?

வானத்துக்கு மழை எப்படிப் போனது? மனிதர்கள் ஏன் செல்வ மேட்டிலும் வறுமைப் பள்ளத்திலுமாக இருக்கிறார்கள்? இப்படிக் கோடிக்கணக்கான கேள்விகளால் அல்லவா ஒளி பெற்றுக்கொண்டே இருக்கிறது உலகம்….

கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்றால் ஏன் எல்லோரையும் ஒரே நிலையில் படைக்கவில்லை என்ற கேள்வி முதல், கடவுளைப் பற்றிக் கேட்டால் ஏன் சிலர் மனம் புண்படுவதாகச் சொல்கிறார்கள் என்ற கேள்வி வரையில் எவ்வளவு முக்கியமானவை. மனங்கள் இணைவது இயற்கையான காதல் என்றாலும் ஏன் சாதி ஆணவக் கொலைகள் நடக்கின்றன என்ற கேள்வி எவ்வளவு கூர்மையானது. பொண்ணா லட்சணமா இரு என்று இன்னும் எத்தனை காலம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள் என்ற கேள்வி எவ்வளவு சரியானது.

இங்கே பள்ளிகளில் பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்பதற்கென்றே வகுப்பு நேரத்தில் கொஞ்சம் ஒதுக்குகிற ஆசிரியர்களை அறிவேன். என்னைக் கேட்டால், நமது நாட்டிலும் பல்வேறு உலக, தேசிய தினங்கள் அனுசரிக்கப்பட்டாலும் “முட்டாள்தனமாக” கேள்விகள் கேட்பதற்கான தினம் எங்கும் கொண்டாடப்பட வேண்டும் என்பேன்.

கட்டுரையாளர் :

அ.குமரேசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *