தொடர் கதை – 1 : “டோபா கடிகாரம்”
– மனநல மருத்துவர் மந்திரிகுமார்
என்னுடைய கடுவாச்சித் தாத்தாவிடம் வித்தியானமான கடிகாரம் ஒன்றிருந்தது. அதை அவர் யாரிடமும் காட்டியதில்லை. அடிக்கடி விசாரிக்கும் வேலாயி பாட்டியிடம்கூட அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. தூங்கும் போதும், குளிக்கும்போதும், ஏன், கழிவறையின் போதுகூட கடிகாரத்தைப் பிரியாமலிருக்கும் தாத்தாவைப் பார்த்து கோபம் வந்து கத்துவதைத் தவிர வேறு எதுவும் பாட்டியால் செய்ய முடிந்ததில்லை. ஏதோ ஒரு சமயம் தூங்கும்போது கையில் இருந்து தெரியாமல் கழட்டிய சமயம் பிள்ளை மாதிரி தூக்கத்திலேயே அழுது பின்னால் மயங்கிக் கிடந்தாராம் தாத்தா.
என்னென்னமோ செய்து பார்த்தும் விழிக்காத தாத்தாவின் கையில் மறுபடியும் கடிகாரத்தை கட்டிய பின்தான் மூச்சுவிட்டாராம். ஏதோ திடுக்கிட்டு எழுந்தவர் சுற்றி அசடாய் நின்ற பாட்டியைப் பார்த்து சத்தம் போட்டுவிட்டு பின்னால் தூங்கிவிட்டாராம். அன்றிலிருந்துதான் கடிகாரம் நேரம் குறைவாய் ஓடுவதாக தாத்தாவும் குறைபட்டுக் கொள்வார். இதைப் பற்றியெல்லாம் நான் காதோரம் கேட்டுக் கொண்ட கதைகள்தான். மற்றபடி தாத்தாவாய் வாயைத் திறக்கிற வரை நிஜமென்று எதையும் நான் நம்பியிருக்கவில்லை.
″மத்தவளுக்கு இதுதாம்லே கடிகாரம், ஆனா தாத்தனுக்கு இதாம்லே உசுரு. உசுருன்னா, இது இல்லைனா செத்துருவேன்னு அர்த்தமில்ல. உணர்ச்சியில்லாம ஆயிடுவேன். அதாம்லே உணர்ச்சிக் கடிகாரம். இதுல முள்ளு சுத்த சுத்த எனக்கு மூடு மாறிட்டே இருக்கும். அது இங்க யாருக்கும் தெரியாது. பகலுல அதிகமா துள்ளிட்டு சந்தோசமா இருப்பேன், ராத்திரிக்கு மந்தமா அழுதுட்டு இருப்பேன். வெயிலுக்கு வேலை பாக்குறா, தூக்கத்துல பழச நெனைச்சு அழுகுறான்னு பேசிக்குவா உன் பாட்டி. அதாம்ல இல்ல. இந்தக் கடிகாரம்தான் என்ன சந்தோசமா, அழுகையா ஆக்கி வைக்கிது. இதை நீ பழக்கி வச்சுக்கிட்டேனா நீதான்லே ராசா. உன்னால எப்படியாப்பட்ட சோகத்துலயும் சந்தோசமா இருக்க முடியும். கடுசான வேலையும் சுளுவமா முடிச்சுற முடியும். ஆனா இது எனக்கு சாத்தியப்படல. உன்னால முடியும்னு தோணுது. ஒரு கொழந்தை கணக்கா பழக்காட்டுனா இது பழகிடும். மனக்கணக்கு போடுறது மாதிரி தாம்லே இது. இந்தா வச்சுக்கோ.″
தாத்தா என்னிடம் இதைக் கொடுத்ததிலிருந்து அசட்டுத்தனமாக எல்லா உணர்ச்சியும் இழந்துவிடவில்லை. ஆனால் உணர்ச்சிக் கட்டுப்பாடின்றி, எப்போது அழுவது சிரிப்பதென்று தெரியாமல் குழம்பிப் பேசவும் விந்தையாக நடக்கவும் ஆரம்பித்துவிட்டார். என்னை சீக்கிரம் எடுத்துக் கொள் ஆண்டவா என்று வேண்டியபடி புலம்புவர், பின்நாளில் கடவுளிடம் நேரில் பேசுபவர் போல அமர்ந்து உரையாடுவது வழக்கமாகிப் போனது. கடகடவென தன்னால் சிரிப்பது, தனக்குள்ளேயே பாசுரம் போல என்னத்தையோ முணங்குவது என்று ஆளே மாறிவிட்டார்.
பேசிக்கொண்டே வீட்டைவிட்டு வெளியேறி சுடுகாடிவரையிலும் சென்றவரை அரைகுறை பார்வையோடு பாட்டிதான் தேடிப்பிடித்து ஒருமுறை கொண்டு வந்தார். எல்லாம் கடிகாரம் காணாமல் போனதால் வந்தவினை என்று எங்கெங்கோ துலாவிப் பார்த்தும் அவளுக்கு கடிகாரம் கிட்டவில்லை. அடிக்கடி நேர்கிற குற்றவுணர்ச்சியில் கடிகாரத்தை தாத்தாவிடம் யாருக்கும் தெரியாமல் ராத்திரிநேரம் போய் கட்டிவிடலாம் என்றாலும் அவர் கட்டாயமாகச் சொல்லிவிட்ட அவரின் சத்தியம் என்னை தடுத்துவிட்டது. தாத்தாவின் இந்தப் பாடுகளையெல்லாம் சகியாமல் அவரது காலில் கயிற்றைக் கட்டி கட்டிலோடு இருக்கச் செய்துவிட்டார் பாட்டி. அப்போதுதான் என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் எல்லாவற்றையும் மீறி கடிகாரத்தை அவரின் கையில் கட்ட வேண்டியாகிவிட்டது.
கடிகாரம் கட்டியதும் கையில் கடிகாரத்தையும், காலில் கயிற்றையும் பார்த்தவர் இதுவெல்லாம் தெரிந்த ஒன்றுதான் என்று தலையாட்டியபடி அப்படியே படுக்கையில் சாய்ந்தவர் அதற்குப் பின்பாக எழவேயில்லை. ஒருவேளை நீண்ட கால இடைவெளியோ அல்லது தீடிரென கடிகாரத்தால் உந்தப்பட்ட உணர்ச்சியோ அவரை சாகடித்திருக்கலாம். இதுதான் நேரும் என்று தெரிந்துதான் அவர் மீண்டும் என்னிடம் தரவேண்டாம் என்று தவிர்த்தாரோ என்னமோ. முன்பாவது பிதற்றுநிலையில் கண்முன்னே இருந்தவர் இப்போது இல்லாமலே ஆகிவிட்டார். எனக்கோ முன்னைவிட கூடுதலான குற்றவுணர்ச்சியுடன் சுற்றியலையும்படி ஆகிவிட்டது.
தாத்தா என்னிடம் காரணமின்றி எதையும் விட்டுச்செல்லவில்லை என்று புரிந்துகொள்ள காலம்பிடித்தது உண்மைதான். ஆனால் இப்போது இதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வதற்கான காலம் வந்துவிட்டதாக தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆம், கடிகாரத்தை நான் கையில் அணியப் போகிறேன். அதன்பின் வருவதை தாத்தா பார்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கும் வேறு வழியில்லை.
கதாசிரியர் :
– மனநல மருத்துவர் மந்திரிகுமார்
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவ அறிவை மக்களுக்கானதாக மாற்றுவதில் எழுத்தை ஆயுதமாக்கிக் கொண்டவர். மகப்பேறு, குழந்தைகள் நலம் மற்றும் பிறவிக் குறைபாடுடைய இருதயம் மற்றும் காது கேளாத குழந்தைகளுக்காக களப்பணியிலும் எழுத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். இதுவரை நான்கு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. இது அவரது முதல் நாவல் முயற்சி.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.