“டோபா கடிகாரம்” (Toppa Kadikaaram) – 4
பள்ளிக்கு நேரமாகிவிட்டது. ஏனோ உற்சாகமாக இருந்தது. அவசரகதியில் கிளம்பியதும் கடிகாரத்தைப் பார்த்தேன். இதயத்துடிப்போடு ஒன்றிப்போய் துடிப்பது போலிருந்தது. கடிகாரம் உடலின் ஒரு அங்கமாகிவிட்டதாகத் தோன்றியது. இதயத்தைக் கழட்டி மணிக்கட்டிக்கட்டில் கட்டிக் கொண்டது போன்ற உணர்வு. இன்னும்கூட அதன் அதிர்வு மாறவில்லை. அது உள்ளுணர்வு போல கடிகாரத்தைப் பரிசோதித்துப் பார்க்கத் தூண்டியது. இக்கணம் அச்சம் பிறழ்ந்து பரவசம் தொற்றிக் கொண்டது.
பெரிய முள்ளை ஒரு சுழற்று முழுவதுமாக சுழற்றிவிட்டுப் பார்த்தேன். சுழலைப் போல காற்று கடந்தது போலிருந்தது. உடலில் எந்த மாறுதலுமில்லை. ஆனால் சட்டென்று ஒருமணி நேரம் காலத்தில் முன்னதாகவே நகர்ந்துவிட்டதைப் போலுணர்வு. என்னைச்சுற்றிய சுழல் எங்கோ நகர்த்தியதைப் போல பரவசம். நானோ உறைந்துவிட்டேன். காலம் தண்ணீரை முப்பரிமாணங்களில் கலைத்துப் போட்டு விளையாடுவதைப் போல ஆனேன். உலகில் நடப்பதை நான் ஒருமணிநேரம் முன்னதாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது சிலிர்ப்பதைத் தந்தது.
பள்ளிக்கு செல்லும் வழியில் துருதுருவென்றிருந்தது. கால்கள் பரபரத்தன. நடப்பதே ஓடுவது போலிருந்தது. ஓடுவதோ மிதப்பது போலிருந்தது. மனமும் அப்படித்தான். சிந்தனைகள் சிறகடித்தன. ஒன்றிலிருந்து ஒன்றெனத் தாவின. மனமோ தறிகெட்டு ஓடின. அதை பட்டம் போல விடாப்பிடியாக ஏதோ ஒன்றில் கட்டி வைத்திருந்தன. அதுவே பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. எதையோ நினைத்துச் சிரித்தேன், பயந்தேன். பின் அழுதேன், அமைதியானேன். நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் குழம்பினேன். என்னை நானே உணரத் தாமதமாகியது. காலத்தின் சுழற்சியில் நான் மாட்டிக் கொண்டேன். காலத்தின் சுழல். அதில் நான் துண்டுச்சீட்டு போல சுழற்றியடிக்கப்பட்டேன். அது எனக்கான கடவுச்சீட்டு போல எங்கெங்கோ பறந்தேன், தரையிறங்கினேன், மீண்டும் பயணமானேன்.
காலம் கைவசப்பட்டால் உலகமே வசப்பட்டுவிடும். கண்ணுக்குத் தெரியாத காலம் ஒரு மாயைபோல மனிதமனமும் மாயைதானே! மனதை வசப்படுத்தத்தானே வசியமெல்லாம். மனிதனை மனிதன் வசியம் செய்ய எவ்வளவோ முயற்சிக்கிறான். அதற்கு காலம் வசப்பட வேண்டும். மந்திரங்கள், சடங்குகள் எல்லாம் குறுக்குவழிகள். என்னால் வசியம் செய்ய முடியும். அப்படித்தான் தாத்தாவும் வசியம் செய்யப்பட்டது போலக் கிடந்தார்.
″உந் தாத்தனுக்கு யாரோ வசியம் வச்சுட்டாங்க. அதான் இப்படிக் கெடிகாரத்தை கெட்டிக் கெடயா கெடக்காரு. யாரு செய்வெனை பண்ண கோளாறோ, அவங்களுக்கு என்ன கொறை வச்சேனோ, தெரியலையே ராசா. எத்தனைக் கோவிலு, கொளமுனு போய் மந்திரிச்சு, தாயத்துக் கெட்டிப் பாத்தேன், ஒண்ணும் காங்கலையே. தாத்தனுக்கு வச்ச பில்லி சூனியத்தை எதாலயும் எடுக்க முடியலை. தலைமுறை தாண்டியும் உன்கிட்ட வந்து வேலைய காட்டிருமேனு தான் மனசு கெடையா கெடந்து தவிக்குது. உன்னைக் காவு கொடுக்காம இருக்கத்தேன் நான் உசுர கையில பிடிச்சுக்கிட்டு கெடக்கேன்″ என்று பாட்டி அழுதழுது கதை சொல்லுவாள்.
பாட்டி இதைச் சொல்லும் போதெல்லாம் பயம் வந்துவிடும். ″அவகெடக்கா கெழவி. இங்கின பாரு. ஒவ்வொரு முள்ளும் ஒரு உரு. அதுக்கு உசுரு இருக்கு. அது சுத்தி சுத்தி வர்ற கட்டத்துல எல்லாம் ஒரு கணக்கு இருக்குடே. அது சரியா சுத்துனா பூமி சரியா சுத்துங்குற மாதிரி. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் விலகிப் போறப்போ உடம்புக்குள்ள உடம்பும் மனசும் பிரிஞ்சு போயி ஆவியா, உடம்பா தனியா தெரியுறதாட்டம் இருக்கும். திரும்ப முள்ளு ஒண்ணு சேரும் போது பிரிஞ்ச ஆவி உடம்புக்குள்ள வந்திடும். இது சாதாரண விசயமில்லடே. கூடுவிட்டு கூடு பாயிற வித்தைக்கு ஒரு எந்திரம். இதைப் பத்திரமா பாத்துக்கடே. ஒருவேளை தாத்தன் செத்துப் போயிட்டாகூட என்னையும் நீ எந்திரம் வழியா பாத்துடலாம்″
பாட்டியின் மீது பாசம் அதிகம். அவளை என்னால் பரிதாபமாக பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது. எனக்கு தாத்தன் சொல்றது மேலதான் நம்பிக்கை. திடுதிப்பென்று பள்ளிவரை வந்துவிட்டது ஆச்சரியமாக இருந்தது. இப்போது நான் கடந்த காலத்தில் இருக்கிறேனா, எதிர்காலத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை. சிந்தனையெல்லாம் தாத்தா பாட்டியிடம் கடந்த காலத்தில் இருந்தது. இப்போது வேகமாகவே ஒருமணிநேரம் முன்னதாகவே பள்ளிவந்து சேர்ந்துவிட்டதைப் போல இருக்கிறது. அப்படியென்றால் உடல் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் பயணிக்கிறதா?
எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இதை யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. தாத்தா இருந்தால் கேட்டிருக்கலாம். இப்போதிருப்பதோ நிகழ்காலம். அதாவது பள்ளிக்கூடத்தில். என்னால் மூன்று காலத்திலும் நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. ஆக, நான் கடிகாரத்தைப் பரிசோதிப்பது என்பது காலத்தைப் பரிசோதிப்பது தானா? ஒருவேளை கடவுளையே ஆராய முற்படுகிறேனா?
″கடவுளுங்குறது காலம்தான்டே. உன்னால காலத்தை கடக்க முடிஞ்சா, கடவுளையே பாத்துறலாம். ஒருகட்டத்துல நீயே கடவுளாகவும் ஆயிடலாம். உன் தாத்தனுக்கு அந்தக் கொடுப்பினை இல்ல. நீ கடவுளைப் பாத்துடனும்னு தாத்தன் ஆசைப்படுறேன். மத்தபடி நீ கடவுளா ஆகிட்டா அது உன்னோட சாமர்த்தியம்டே.″
எனக்கு தாத்தன் குரல் கேட்பது போலிருந்தது. கூடவே அவரது சிரிப்புச் சத்தமும். பள்ளி அறைக்குள் நுழையும்வரை எல்லாம் மாயம் போலிருந்தது. இனி படிப்பில் சாமர்த்தியத்தைக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது.
தொடரும் ……
எழுதியவர் :

– மனநல மருத்துவர் மந்திரிகுமார்
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவ அறிவை மக்களுக்கானதாக மாற்றுவதில் எழுத்தை ஆயுதமாக்கிக் கொண்டவர். மகப்பேறு, குழந்தைகள் நலம் மற்றும் பிறவிக் குறைபாடுடைய இருதயம் மற்றும் காது கேளாத குழந்தைகளுக்காக களப்பணியிலும் எழுத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். இதுவரை நான்கு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. இது அவரது முதல் நாவல் முயற்சி.
முந்தைய தொடரை படிக்க : https://bookday.in/serial-story-3-toppa-kadikaaram-written-by-manthiri-kumar/
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

