தொடர் 11: கனவு மெய்ப்பட இரா. நாறும்பூநாதன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 11: கனவு மெய்ப்பட இரா. நாறும்பூநாதன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

அவரது உலகம் பிரத்யேகமானதல்ல, நிகழ்வுகளும் அசாதாரணமானதல்ல. இருப்பினும் கதைசொல்லும் முறையாலும் மொழித் திறனாலும் இவரது கதைகள் கவனிப்புக்கு உரியதாகின்றன

கனவு மெய்ப்பட
இரா. நாறும்பூநாதன்

அவன் தன் மகளுக்கு சர்டிபிகேட் வாங்கும் பொருட்டு வெயிலில் அப்பா போயிருக்க வேண்டியதில்லை என்று கருதினான்.  மனைவி “காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு பாக்கியமுத்து சாரைப் பார்த்துட்டு வாரேன்னு போனா” என்று சொல்லும்போதே அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  

முந்தாநாள் ஊரிலிருந்து வந்தபோதே “சிவகாமிக்கு  சர்டிபிகேட் வாங்கிட்டியா?” என்றுதான் கேட்டார்.  என்னென்னமோ பேசியும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. மாலையே பாக்கியமுத்து சாரைப் பார்த்து  பேசிவிட்டு வந்தார்.

அவரது மகன் பரமசிவன் தாசில்தாராக இருப்பதால் காரியத்தை உடனே முடிச்சிரலாம்னு அப்பா கருதினார்.  இவனுக்கோ சர்டிபிகேட்டை மாத்தி என்ன ஆவப்போவுது அதையும் தவிர காலப்போக்கில் எந்த சாதிக்கும் வேலை கிடைக்காது என்ற கருத்தும் இருந்தது.  

“நம்ம சாதிக்கு முன்னாலே ரெண்டு எழுத்தைச் சேர்த்திட்டா பிற்காலத்துல நம்ம சந்ததிங்க நல்லா இருக்குமேன்னுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு” என்று அப்பா பொரிந்து தள்ளி விட்டார். தவிர “இதைக் கொலைக் குற்றம் செஞ்ச மாதிரி பதற வேண்டாம்” என்றும் கூறி விட்டார்.

வந்ததிலிருந்து தினமும் அம்மையார்பட்டி மஞ்சள்பை ஒன்றில், எல்லா சமாச்சாரங்களையும் எடுத்துச் சுமந்தபடி தாலுகா ஆபீஸில் பரமசிவத்தைப் பார்த்து வந்து கொண்டிருப்பதை இரவில் அறிந்து கொண்டான். மதியம் சாப்பிடக்கூட வராமல் தாலுகா ஆபீஸில் தவம் கிடக்கும் அப்பாவை நினைக்கையில் வருத்தமாக இருந்தது.

சிறுவயதிலிருந்தே அப்பாவின்  டாக்டர் கனவுகளை நன்கு அறிந்திருந்தான்.  இவன் பியூசியில் நல்ல மார்க் வாங்கும் பொருட்டு குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  தொண்ணூற்றி நாலு பெர்சன்ட் நல்ல மார்க்தான் ஆனா பார்வர்டு கம்யூனிட்டியாச்சே என்றபோது அப்பா தலைகுப்புற விழுந்தாற்போல உணர்ந்தார்.  பிறகு எப்படியோ சர்வீஸ் கமிஷன் எழுதி இந்த குமாஸ்தா வேலையில் சேர்ந்தது கனவாகத்தான் இருக்கிறது.

இரா. நாறும்பூ நாதன் நேர்காணல் – ஊஞ்சலாடி

“கல்யாணி கொஞ்சம் மோர் இருந்தா ரெண்டு உப்புப் போட்டு கொடும்மா!”

கண்மூடிச் சாய்ந்திருந்த அப்பாவிடம் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை.  “ஒரு வழியா முடிச்சுக் கொடுத்துட்டான்.  இந்த காலத்துல யாரு இந்த மாதிரியெல்லாம் உதவி செய்தாக?” அப்பா வெற்றிப் பெருமிதத்துடன் கூறிக் கொண்டிருந்தார்.  

பேத்தியைப் பற்றி அவர் விசாரித்துக் கொண்டிருக்கையில்தான், அவளும் வாசலில் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுக் கொண்டிருந்தாள்.   உடனடியாக கோச்சிங் கிளாசுக்கு செல்வதற்கு ஆயத்தமானாள்.

“இது தப்பில்லையா?” இவன்தான் ஆரம்பித்தான்.

“எதையும் காலத்திலே செய்யாம விட்டாத்தான் தப்பு. யாரையும் ஏமாத்தி வேலையவா வாங்கிட்டோம், நேர்மையா நடந்தா கோட்டிக்காரன்னுதான் சொல்லுதான்” குற்றவுணர்ச்சி உறுத்தினாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அப்பா.

“நாளைக்கே ஸ்கூல்லே சர்டிபிகேட்ட ஞாபகமா  கொடுத்திடு.  பொண்ணு எட்டாங்கிளாஸ்தான் படிக்கின்னு பேசாம இருந்துராதே!” எச்சரிக்கையுடன் பேசினார்.

“தாத்தா சீக்கிரமா வந்துருவேன்” என்று பேத்தி கிளம்பியபோது “சீக்கிரமாக வர வேண்டாம் கூடக் கொஞ்ச நேரம் படி, படிச்சு டாக்டரா வரணும்” அப்பா சந்தோஷத்தில் சிரித்தார்.

அப்பா மஞ்சள் பையை இவன் கையில் கொடுத்துவிட்டு முகம் கழுவச் சென்றார். உள்ளிருந்து பேப்பர்களை வெளியே எடுத்தான். சாதிச் சான்றிதழில் சிவகாமி மிகவும் பிற்படுத்தப்பட்டிருந்தாள்.  வில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரச் சின்னம் இவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *