The politics of tamil short story (Mu. Suyambulingam) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

முன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்து முறைக்குச் சொந்தக்காரர்  மு.சுயம்புலிங்கம். கோணங்கி கொண்டு வந்தகல்குதிரை ’-’சுயம்புலிங்கம் சிறப்பிதழ்’  மூலமாகவும் கி .ராஜநாராயணன்  தொகுத்த கரிசல் கதைத்திரட்டு  வழியாகவும் வெளி உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தவர் சுயம்புலிங்கம். அவரே நடத்திவந்தநாட்டுப் பூக்கள்என்கிற கையெழுத்து இதழில் வெளிவந்திருந்த கவிதைகளையும் கதைகளையும்கல்குதிரைமுதல் முதலில் அச்சில் கொண்டு வந்தபோது நவீன தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாகின.இதுவரை தமிழ்ச்சிறுகதை உலகம் கண்டிராத புதிய எழுத்து முறையை  மு. சுயம்பு லிங்கம் கைக் கொண்டிருந்தார்.அவருடைய படைப்புகளை ஊர்க்கூட்டம் என்கிற நூலாக முதலில் கொண்டு வந்தது சவுத்விஷன் புக் ஹவுஸ்
”சுயம்பு, எழுத்தாளனெல்லாம் இல்லை. நிறைய பேரு சுயம்புவை அப்படி ஏத்துக்கிறதும் இல்லை. அவன் எழுதுறதெல்லாம் வெறும் செய்திகள். அவனைப் பாதிக்கிற செய்திகள். வேறெந்த எழுத்தாளன்கிட்டயும் அவன் போறதில்லை. அவன் உலகம் ரொம்பச் சின்னது” என்று அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தபோதும் (அதெல்லாம் சும்மா ஒரு ‘மேப்பேச்சு’ என்பேன்), பிசிறின்றிச் செதுக்கப்பட்ட,அதே சமயம் மிகமிகச் சாதாரணமான சொற்களின் மூலம் சொல்லப்படும் அவரது சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் எவரும் நடந்திராத புதிய பாதையில் நடை போடுபவை.

Image
மு.சுயம்புலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை என்கிற பனங்காட்டு கிராமத்திலிருந்து வாழ்வு தேடி 1964இல் சென்னைப்பட்டணம் வந்த சுயம்பு படாத கஷ்டமில்லை.பார்க்காத வேலை இல்லை. மாட்டுத்தீவனக்கடையில் தொழிலாளி,தள்ளு வண்டியில் வைத்துப் பொருட்களை விற்பது,சிறிய மிட்டாய்க்கடை போட்டு நடத்துவது என்று பெரிய அளவுக்குப் பொருளாதார வெற்றி தராத பல முயற்சிகளில் ஈடுபட்டார்.சென்னையின் புறநகரப்பகுதிகளில் அலைந்து திரிந்த வாழ்க்கைதான் அவருடையது.ஆனால்,எந்த நிலையிலும் அவர் எழுத்தைக் கைவிட்டதில்லை.

`மக்கள் எழுத்தாளர் சங்கம்னு ஒரு அமைப்புநான் படிக்கப்போற நூலகத்துல மாசம் ஒருமுறை கூட்டம் நடக்கும். அதுல கடைசி வரிசையில போயி உட்கார்ந்திருப்பேன். தி..சி.. செந்தில்நாதன், கார்க்கி, இளவேனில்னு பலபேர் இருப்பாங்க. ஆர்வக்கோளாறுல நான் ஒரு கதை எழுதிப் படிச்சேன். எல்லாப் பேரும் எழுந்து போயிட்டாங்க.

அந்தக் கூட்டத்திலதான் எனக்கு `தாமரைஅறிமுகமாச்சு. தி..சி மூலமா அதுல ஒரு கதை வந்துச்சு. செந்தில்நாதன், `சிகரம்பத்திரிகையில கதை வாங்கிப் போடுவாரு. அதே வேகத்துல, `நாட்டுப்பூக்கள்னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சேன். ஆனா, அதை சீண்டக்கூட ஆளில்லை. கோணங்கிதான் அதைக் கொண்டாடினார். `கல்குதிரையில சிறப்பிதழ் எல்லாம் கொண்டுவந்தார். அப்பறம், கி.ரா என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, `கரிசல்காட்டுத் திரட்டு கதைகளை வாங்கிப் போட்டார். அதுக்குப் பெறவுதான் சுயம்புவுக்கு அடையாளமெல்லாம்…” என்பது அவர் பாணியில் நாலு வரியில் சொன்ன அவரது இலக்கிய வரலாறு. 

சுயம்புலிங்கம் பார்வையில சுயம்புலிங்கம் ஒரு பொழைக்கத் தெரியாத ஆளு. அன்னிக்கும் சரி, நேத்தைக்கும் சரி, இன்னிக்கும் சரி வருமானம் பார்க்கத் தெரியாத, வேலவெட்டி இல்லாத ஆளுதான் சுயம்பு. நாலு பயலுகளுக்கும்ஒரு அப்பனா அவங்களுக்கு நான் எதுவும் செய்யலே. நல்ல பள்ளிக்கூடத்துல, நல்ல கல்லூரியில சேர்க்கலே. அவங்களா படிச்சுக்கிட்டாங்க. ஒரு வேலை வாங்கிக் கொடுக்கக்கூடத் தெரியலே. `சரிஇந்தா பணம்போயி ஒரு தொழில் தொடங்குனு சொல்லக்கூட முடியலே. `அப்பன் வேலைக்காக மாட்டான்னு புரிஞ்சுக்கிட்டு, அவனவன் படிச்சு ஆளுக்கொரு பொழப்பைத் தேடிக்கிட்டான். காலாகாலத்துல பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூட முடியலே. அவ்வளவு பலவீனமா இருக்கேன். .” என்பது அவர் சொன்ன அவரது வாழ்க்கை வரலாறு.

அவருக்கென்று அழுத்தமான ஓர் இலக்கியக்கொள்கை உண்டு.அதை அவரது கவிதைகளும் சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.சிறுகதைதான் அவருக்குப் பிடித்தமான வடிவம்.சிக்கனமான வார்த்தைகளில் கதை எழுத ஒரு பயிற்சியாகவே அவர் கவிதை எழுதுவதாகச் சொல்லி அந்த நாட்களில் எழுதுகிறவர்களுக்கு ஒரு கலக்கத்தை உண்டுபண்ணினார்.மொழிக்காக,வார்த்தைச் சிக்கனத்துக்காக இப்படி மெனக்கெடும்,பயிற்சி எடுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

தீட்டுக் கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம், வாங்கிக்கொண்டு
ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.

இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.

கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.

திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.

இந்திய சுதந்திரத்தின்,இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தில் காறி உமிழப்பட்ட சுயம்புவின் கவிதை இது.முப்பது ஆண்டுகளுக்கு முன் சுயம்பு எழுதிய இந்தக்கவிதைதான் புலம் பெயர் தொழிலாளிகள் இத்தேசத்தின் தெருக்களில் நடந்து போன அந்த வாழ்க்கையின் அசலான மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதையில் ஒளிந்திருக்கும் துயர் பாரித்த அங்கதம்தான் சுயம்புவின் அடையாளம்.இதுபோன்ற கவிதைகளில் எழுதிப் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் கதை எழுத வருகிறார் சுயம்பு.

”கரிசல்க்காட்டுப் பாலைவனம்” என்று ஒரு கதையில் சுயம்பு குறிப்பிடும் பனங்காடுகள் சூழ்ந்த கரிசல் கிராமத்து வாழ்க்கையே அவரது கதைகளின் களம்.கவிதைகளுக்கும் அதுதான் களம். கரிசல் வாழ்வின் பிற நிலப்பரப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கிழக்குக் கடைசிப் பகுதி இது.கரிசலின் முடிவில் கடல் துவங்கும் ஒரு நிலப்பரப்பு.அங்கும் அவர்களுக்குப் பாடல் பெற்ற நெய்தல் வாழ்க்கை லபிக்கவில்லை. 

முத்துக்குளிப்பதோ ,மீன் பிடித்தலோ அங்கு இல்லை.மாறாக உப்புச் சுமக்கும்,கருவாட்டுக் கூடை சுமக்கும் ஒரு வாழ்க்கையே அவர்களுக்கு லபித்திருக்கிறது.நெய்தலின் பேசப்படாத மறுபக்கமும் கரிசலின் வெக்கை உச்சம் தொட்ட வாழ்வும்தான் சுயம்புவின் சிறுகதைகளின் சாரம்.அக்கதையைச் சொல்ல அவர் கையாளும் பேச்சு மொழி கதைகளுக்குத் தனீ அழகையும் அழுத்தத்தையும் தந்து விடுகின்றன.

மாத விலக்கன்று அழிநாத்தமும் மீன் நாத்தமும் சேலப்பீ நாத்தமும் மண்டிக்கிடக்கும் வத்திக்கெடக்குற கம்மாத்தண்ணியில் முங்கி முங்கி ஆசை தீரக்குளித்துவிட்டு அலுப்பில் வீட்டு வாசலில்,வேப்ப மரத்தடியில் படுக்கிறாள் அவள் ‘தூரம்’ கதையில்.

”உப்பளத்துல உப்பு சொமக்குற வேல அவளுக்கு. அவா உப்பளத்துக்கு வேலைக்குப் போக வேண்டிய நேரம் எப்பமோ வந்து எப்பமோ பீட்டுது. அவளால் எந்ரிக்க முடியல. அவா நெனவுல அந்தப் பெரிய உப்பளமும் அவா வேல பாக்குற அந்த வேலத்தலமும் அவா செய்ற வேலையும் சொப்பனம் மாதிரி அலை அலையா வந்துக்கிட்டேருக்கு. ஒரு பெரிய்ய ஓலப்பெட்டி. அந்த ஓலப்பெட்டி நெறய்யா கோவாரமா உப்பு அள்ளி வச்சிருக்கு. அவா முன்னால ஒரு எளவட்டம் நிக்கிறான். அவன் அந்த உப்புப் பெட்டிய இவா தலைக்கு தூக்கிவுடுதான். ரெண்டு கைட்டும் பிடிச்சிக்கிட்டு அவனுக்கு இணையா பெட்டிய உன்னித் தலைக்குத் தூக்குதாள். தலைல உப்புப் பெட்டியச் சொமந்துக் கிட்டு உப்பு அம்பாரத்துக்கு நடக்கிறாள். ஓட்டமும் நடையுமாப் போறாள். உப்பு அம்பாரம் ஒயரமாருக்கு. ஏறுதாள். ஏறி ஏறி உச்சாணிக்குப் போறாள். நடக்கும்போதும் ஓடும்போதும் உப்பு அம்பாரத்தில் மேலே மேலே ஏறும்போதும் அவள் தொடைகள் நசுங்குது. ரெண்டு தொடைகளும் ஒரசி ஒரசி அவளுக்குக் காந்தல் எடுக்குது. அவளுக்கு அழுகையா வருது. அழுவுதாள். ஏழ வீட்ல இப்படிப் பொண்ணாப் பொறந்து இந்த மாதிரி நொம்பலப்பட வேண்டியதிருக்கேன்னு அவள் கண்கள் கலங்குகிறது. அவா பெரண்டு படுக்குறாள். ஒரு கையை மடித்துத் தலைக்குக் கொடுக்கிறாள். அவளுக்கு அவா கண் இமைகள் கனத்துக் கெடக்குது. அவளால கண்ணத் தெறக்க முடியல.

அவா இண்ணக்கி வேலைக்குப் போவல. வேலைக்குப் போவாட்டாக் கெடக்குன்னு மறுபடியும் அவா பெரண்டு படுத்துக் கிட்டாள்.”என்று கதையை முடிக்கிறார்.வாசிக்கும் எவர் மனதையும் கசிந்துருகச்செய்யும் ஒரு வாழ்க்கைக்காட்சி இது.ஆனால் தான் எந்தச் சார்பும் கொள்ளாமல்,இக்காட்சியின் மீது உணர்வேற்றம் ஏதும் செய்யாமல் ‘பாத்துக்குங்க எங்க மக்க பொழப்ப’ என்று எழுதிவிட்டு ஒதுங்கி நிற்கிறார் சுயம்பு.

Image

இன்னொரு காலைக்காட்சி “பால்த்தங்கம் உப்புப்பெட்டிய அம்ம தலைக்குத் தூக்கி வுடுதாள். இவிய தலச் சொமையோட ஊர்ஊரா அலஞ்சி திரிஞ்சி உப்ப வித்துக் காசாக்கணும். செருப்ப அவிய கால்ல போடாம கைல வச்சிக்கிட்டுப் போறாவ

மூணு பொட்டப் பிள்ளிவளும் உப்பளத்துல உப்புச் சொமக்குற வேலைக்குப் போறாளுவ. ஆம்பள மவனுக்கு உப்பளத்துல லாரி டிரைவர் வேல. இவிய அய்யாவுக்கு சீட்டாடிச் சீட்டாடிப் பகல் தேரம் கழிஞ்சிரும்

ஒரு ஒரு ஆளா இனுமத்தான் இவிய வேலைக்குக் கௌம்புவாவ. இவிய எல்லாரும் வீட்டுக்குத் திரும்பி வரும்போது பொழுது மேக்க சாஞ்சிரும்

இப்போத் தேரம் ஒரு குத்துமதிப்பாக் கெடியாரத்துல அஞ்சு மணிய நெருங்கிக்கிட்டு இருக்கும். வேப்ப மரத்துல தாழ்ந்த கிளையில் உக்காந்துக்கிட்டு ஒரு காக்கா சத்தம் குடுக்கு. வீட்டுக் கூரை மேல கால்கள அகலமா ஊனிக்கிட்டு ஒரு பெரிய சேவல் சத்தமாக் கூவுது. எதிர் ஒலியா ஏராளம் சேவல்கள் கூவுகிற சத்தம். பக்கத்து வீடுகளில் முத்தம் தெளிக்காக. நேரம் விடிஞ்சிக்கிட்டு வருது.” கதையின் இறுதிப்பத்தி இது.இக்கதைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு “ஒரு நாவலின் முதல்ப்பக்கம்”

இந்தக் கதை மட்டுமல்ல அவருடைய ஒவ்வொரு கதையுமே ஒரு நாவலின் ஏதாவது ஒரு பக்கமாகவே இருக்கிறது.முன்னேயும் பின்னேயும் நடப்பதை அவர் சொல்லாமல் விட்டு விடுகிறார்.அவர் விட்டதையெல்லாம்  வாசக மனம் தானே வரைந்துகொள்கிறபடி புள்ளிகளை மட்டும் இட்டுச் செல்வது அவரது பாணியாக இருக்கிறது.மேற்சொன்ன கதையில் ஒரு பொறுப்பற்ற ஆம்பிளைதான் குடும்பத்தலைவர் என்பதும் ஒரு நீண்ட நெடிய உடல் உழைப்பு-வாழ்க்கையின் ஒவ்வொரு அதிகாலைப் பொழுதின் ஒரு காலைதான் இது என்பதும் நமக்குப் பளிச்செனப் புலனாகிறது.

உணர்ச்சி வசப்படாமல் உரத்த குரலில் எதையும் சொல்லிவிடாமல் அச்சு அசலான பேச்சு மொழியில் கதை சொன்னாலும் சுயம்புவின் கதைகளில்  பிரக்ஞாபூர்வமாக ஒரு ‘தொனி’ இருப்பதைக் காண முடியும்”.என் கதைகளைப் படிக்கும் நடுத்தர வர்க்கத்து வாசகர்களே..உங்களுக்கெல்லாம் எங்க பனங்காட்டு கிராமத்து வாழ்க்கை தெரியாது.நான் சொல்றேன்..கேட்டுக்கங்க..”  என்கிற தொனி.இந்தத் தொனியை அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கேட்க முடிகிறது.யாருக்கு அல்லது யாரை நோக்குப் பேசுகிறோம் என்கிற முழூத் தன்னுணர்வும் சுயம்புவுக்கு இருக்கிறது.அதுவே அவரது மொழியையும் குரலின் டெஸிபல்லையும் முடிவு செய்கிறது.

’தனக்கு ஒண்ணுந்தெரியாது’ என்று அவர் பேட்டிகளில் சொல்லிக்கொண்டிருந்தாலும் தன் படைப்புகள்,தன் எழுத்து,தன் பிரதேசத்து மக்களின் வாழ்க்கை,நவீன இலக்கிய உலகின் போக்குகள்,வாசகர் மனோபாவம், நாட்டின் அரசியல் போக்குகள் இவை பற்றிய முழுப் பிரக்ஞையோடுதான் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

இரண்டு பக்கங்களுக்கு மேல் எந்தக் கதையையும் அவர் எழுதுவதில்லை.’வளவள வைக்கப்படப்பு’ என்று வார்த்தைகளை வளர்த்துக்கொண்டு போவது வள்ளுசாக அவருக்குப் பிடிக்காது.ஒண்ணரைப்பக்கத்தில் முடிகிற ‘நடை’ என்கிற, கருவாட்டு யாவாரம் பார்த்த தன் தந்தையைப் பற்றிச் சொல்லும் கதையை முடிக்கும்போது சுயம்பு எழுதும் இரண்டு வரிகள்:

“கொஞ்ச நடையா நடந்துருக்காவ எங்க அய்யா.

டூ வீலர்லேயே போய்க்கிட்டு இருக்கிற எனக்கு எங்க அய்யா நடந்த நடை அவ்வளவு பிரமிப்பா இருக்கு” 

இவ்விரு வரிகளுக்குள்ளிருந்து வெளிப்படும் துயர் மிகு பெருமூச்சும் இரு தலைமுறைகளின் இடைவெளியும், நடந்தே திரிந்த ஒரு முழு வாழ்க்கையும் சேதாரமின்றி அப்படியே நம்மை வந்து தாக்குவதைக் காண்கிறோம்.

சுயம்புவின் அரசியல் எந்தச் சந்தேகமும் இல்லாமல் எளிய மக்கள் சார்ந்தது.உண்ண உணவும் உடுத்த உடையும் தலைசாய்க்க ஒரு நிழலும் இயல்பாகக் கிட்டாத ஒரு பகுதி மக்களையும் அவர்களின் பாடுகளையும்தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வண்ணங்களிலும் வார்த்தைகளிலும் தன் கதைகளில் வரைந்துகொண்டே இருக்கிறார்.

பனங்காட்டு கிராமத்தின் மக்கள் சாப்பிடும் காட்சி மீண்டும் மீண்டும் அவர் கதைகளில் வருவதைப் பார்க்கிறோம்.அவர்கள் சாப்பிடுவதை,கஞ்சி குடிப்பதை லேசாகத் திரைச்சீலையை விலக்கி “இன்னா பாருங் இதுதான் இவுக சாப்பாடு” என்று காட்டிக்கொண்டே இருக்கிறார்.அதற்கு மேற்கொண்டு பிலாக்கணம் வைக்க மாட்டார்.வேறு வேறு கதைளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட சாப்பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் நம் மனதை உலுக்குகின்றன.எங்கள் சக மனிதர்களான உங்களுக்குக் கிடைக்கும் உணவு இதுதானா? இவ்வளவுதானா? என்று நம் மனம் குற்ற உணர்வு கொள்கிறது.அங்கே நிற்கிறது சுயம்புவின் சிறுகதையின் அரசியல். 

Image

”எங்க அய்யா காலையிலேயே எந்திரிச்சிருவார். கஞ்சியும் காலையி லேயே குடிச்சிருவார். அவர் கஞ்சி குடிக்கிறது ரொம்ப சிம்பிளாருக்கும்.

 ஒரு மண் சட்டியில் கம்மங்கஞ்சியை நல்லாக் கரைப்பார். வெஞ்சனத் துக்கு ரெண்டு வத்தல், ரெண்டு உப்புக்கல் அம்மியில் வச்சித் தட்டுவார். மொளவாத் தூள ரெண்டு வெரல்ட்டு அள்ளுவார். நாக்குல வச்சித் தேய்ப்பார். கஞ்சி சரசரன்னு போகும். அம்மியில் மீதி இருக்கிற மொளவாத் தூள அள்ளி அடிநாக்குல வைப்பார். கண்ண மூடிக்கிட்டுக் கஞ்சியக் குடிப்பார். கஞ்சி குடிச்ச சட்டியை அவரே கழுவி  திருணையில் கலக்கி வெச்சிருவார்”(நடை)

(2)

”எங்களக் கஞ்சி குடிக்கக் கூப்பிட்டாள் எங்க அம்ம.

கனியப் பழுத்த தக்காளிப் பழங்களப் புடுங்கிக்கிட்டுப் போய் அம்மட்டக் குடுத்தோம். ரெண்டு மிளகாப் பழம் பிச்சிப் போட்டு ரெண்டு உப்புக் கல் சேர்த்துத் தக்காளியைப் பெனைஞ்சா எங்க அம்ம. கஞ்சிக்கூட்டுக்கு வெஞ்சனம் ரெடியாய்ட்டுது.” (புஞ்சைக்காடு)

(3)

”முட்டங்கால்களை மடக்கிக்கொண்டு சம்மணம் கூட்டி அவன் உக்காந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் ஒரு வெங்கல வட்டிலில் பழைய சோறு இருக்கு. வட்டில் நிமூரத் தண்ணீர். அவன் கடித்துக் கொள்வதற்கு வறுத்த சீனியாவரக்காய் வத்தல் ஒரு அலுமினியத் தட்டில் இருக்கிறது. ஈக்கள் அவனை மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அவன் நீத்துத் தண்ணீர் சிந்தாமல் சோத்தை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.”(சித்தாள்)

(4)

”அக்கா வயசுல நல்லாச் சாப்டுவேன் தம்பி. ஒரு கும்பாக் கம்மஞ் சோறு வச்சிக்கிட்டுக் கம்மஞ் சோத்துல குழி பறிச்சி அது நெறையாபட்டுக் கொளுப்பை வச்சித் திம்பேன் தம்பி. களி தின்னாலும் வரு கும்பாக் களி திம்பேன் அக்கா. எங்க அம்ம களிக்கு அவ்வளவு நான் வெண்ண ஊத்திக் குடுப்பா அக்காளுக்கு. பலகாரம் தின்னாலும் அப்படித்தான். பணியாரம் சுட்டால் அக்காள் ஒரு குத்துப்பெட்டி நெறையாப் பணியாரம் திம்பேன். அக்காளுக்கு இப்பச் சாப்பாடு செல்லல. வாய்க்கு ருசியா வேணும்ங் தது. வயசான காலத்துல திங்க என்னமெல்லாம் ஆச குடுக்கு” (வெள்ளச் சீல)

(5)

”எனக்குச் சாப்பாடு ஒரு மெஸ்ஸில். காலையில் பழைய கஞ்சி வகுத்துக்கும் சாப்பிடலாம். தொட்டு க்கிறதுக்கு ராத்திரி சுண்ட வச்ச பழைய கொளம்பு இருக்கும் கொளம்பு இல்லாட்டாப் பொரிகடலத் தொவையல்.

மதியம் அளவு சாப்பாடு. ராத்திரிக்கும் அளவு சாப்பாடுதான் எக்ஸ்ட்ரா பொருள்கள் ஒண்ணும் நான் வாங்கிக்கக் கூடாது.”(நேத்துக்கதை)

நாங்கள்(கரிசக்காட்டுச் சிறுவர்கள்) சின்ன வயதில் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரும் நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசனும் விலாவரியாகச் சாப்பிடும் காட்சிகளுக்காக அந்தப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தது நினைவிலாடுகிறது.வயிறாரச் சாப்பிட்டாலே போது. வேறென்ன வேண்டும் உலகத்திலே.வகுறு நெறஞ்சா வச்சு மூடத்தெரியாது என்பது நம் பாட்டிகளின் சொலவடை.சாப்பிடுவதைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதற்குள் ஓர் பனங்காட்டுப் பசித்த மனிதனின் உளவியல் வெளிப்படுகிறது.

இம்புட்டு எழுதியும் ஆறாத சுயம்புவின் மனசு “சோறு” என்றே ஒரு முழுக்கதையும் எழுதுகிறது. சத்துணவுச் சாப்பாட்டை நம்பிப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அந்த வாத்தி பிள்ளைகளுக்கு அரைவகுத்துச் சோத்தைப் போட்டுவிட்டு அரிசி பருப்பைத் தான் அமுக்கிறான் என்று ஒரு தாய்க்கு அம்புட்டுக் கோபம்.குறை வகுத்துப் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து அய்யாவுக்கு என்று அம்மா மூடி வைத்துப் போயிருந்த ஒரு கும்பா கஞ்சியையும் முழுக்கக் குடித்துவிடுகிறார்கள். உழைத்துக் களைத்து வந்த மனுசனுக்குக் கஞ்சி இல்லை.சாயங்காலம் வீடும்பும் அம்மா பசியோடு படுத்துக் கிடக்கும் புருசனைப் பார்த்து மனம் கலங்குகிறாள்.விறு விறு என்று பள்ளிக்கூடத்துக்குப் போய் வாத்தியாரை ஏசுகிறாள்..ஏசுகிறாள்…அப்படி ஒரு ஏச்சு.உண்மையில் சுயம்புவின் கோபத்தை இந்தக் கதையில்தான் பார்க்க முடிகிறது.

இப்படிக் கண்டும் காணாத கஞ்சிப்பாட்டையே எழுதிய சுயம்புவுக்கு நல்லாத் திங்கிற ஒரு காட்சியையாவது ஒரு கதையிலேயாச்சும் எழுதிவிடணும் என்று தோன்றி விட்டது.நாலு குடிகாரங்க ஒரு ஆட்டை அறுத்துத் திங்கிறதை மட்டுமே ஒரு கதையாக எழுதி விடுகிறார்.அப்பத்தான் மனசு ஆறுது அவருக்கும் வாசிக்கிற நமக்கும்.அது “ருசி” என்கிற கதை:

Image
”நான் ஒரு பெரிய ஓலப்பட்டையில் தனிக்கறி அள்ளி வச்சிக்கிட்டு தனிக்கறியாத் தின்னுக்கிட்டிருக்கேன்.

பச்ச ஓலைப்பட்டையின் பச்சை வாசம் கறிக்கு இன்னும் ருசி கூட்டுகிறது.

நம்பமுடியாத அளவுக்குக் கறியை நான் பாட்டுக்கு விழுங்குகிறேன். கறி அதுபாட்டுக்கு உள்ள போகுது.

திரும்பவும் திரும்பவும் பட்டை நெறையாத் தனிக்கறியை அள்ளி வைத்துக்கொண்டு ரசித்து ரசித்து அதன் ருசியை அனுபவித்துச் சாப்பிடுகிறேன்.

கறி முழு வேக்காடு வெந்திருக்கு.

நான் ஒரு பெரிய மூட்டெலும்பை உதறுகிறேன். அந்த மூட்டெலும்பில் இருந்து கறி பூப்போல உதிர்கிறது. நான் அந்த மூட்டெலும்பை வாயில் வைத்து உறிகிறேன். மூட்டெலும்பில் மூளை அவ்வளவும் என் நாக்கில் உக்காந்து கரைகிறது.

கறி வெந்து கறியின் சாறு மசாலாவில் சேர்ந்திருக்கு மசால் நல்லா வெந்து மசாலையின் சாறு கறியோடு நல்லா சேர்ந்திருக்கு.

திட்டமான உப்பு.

திட்டமான காரம்.

ஒரு தோல்க்கறி என் நாவில் தட்டுப்பட்டது. தோல்க்கறி மவிய வெந்திருக்கு. அதன் பொசுங்கிய ரோமங்கள் கூட அதன் ருசியை எனக்குச் சொல்லிக் கொடுத்தது.

குடல்த்துண்டுகள் பெருசு பெருசாருக்கு. அது என் நாக்கில் கரைந்து அன்னரசமாக என் தொண்டைக்குள் சுகமாக இறங்குகிறது.

பூவாக வெந்து மணந்து கொண்டு திங்கத்திங்க ஆசையைத் தூண்டுகிற ருசியான தனிக்கறி பூப்போல என் வயிற்றை நிறைக்கிறது.

கடேசியில் சோறும் கறியும் சேர்த்துப் பிசைந்த சோத்து  உருண்டைகள் என் விலா எலும்புகள் புடைக்க என் வயிற்றை நிரப்புகிறது.

வயிறு முட்டத் தின்ன திருப்தி. கடல் தண்ணீரில் நின்று கொண்டு கை கழுவுகிறேன்

தின்ன மயக்கம்.

கூட்டாளிகள் ஒரு ஒட மரத்தின் நிழலில்  படுத்திருக்கிறார்கள். நானும் என் துண்டை விரித்துப் படுக்கிறேன்.”

நல்லாத் தின்னுட்டுப் படுத்தான் என்கிறதை மட்டுமே ஒரு கதையாக எழுதணும்னு சுயம்புவுக்கு ஏன் தோணுச்சி என்பதை நாம யோசிக்கணும்.இந்தக் கதையை மட்டும் தனியாப் படிச்சா புரியாது.பசி ..பசி.. என அலையும் இந்த 85 கதைகளுக்கு நடுவுலே வச்சி இதை வாசித்தால்தான் ஆகா…அப்பாடா…என்று இருக்கும்.இதுவும் சேர்ந்ததுதான் எங்க மக்க வாழ்க்கை என்று காட்டுகிறார்.

நேரடியான அரசியல் கதைகளையும் சுயம்பு எழுதுகிறார். எதுவானாலும் ரெண்டே பக்கம்தான்.”ஒரு மாதிரிக்கிராமம்’ என்கிற அரசியல் கதை இது:

“ரொம்பப் பாழடஞ்ச கிராமம் அது. பாலைவனம் மாதிரித்தான் இந்த ஊரு. எப்பமாவது ஒரு சமயம் முக்கிக்கிட்டு மொணங்கிக்கிட்டு வெண்டா வெறுப்புல மழை பெய்யும். ரொம்பக் காஞ்ச கிராமம்

அந்த ஊர்ல அடுப்பு எரிக்க வெறகுக்குக்கூடப் பஞ்சம்தான். வெறகுக் பாகப் பெண்கள் வெகுதூரம் போய் முள்ளுப் பெறக்கிக்கிட்டு வந்து தான் உலை ஏத்துறது வழக்கம். சமுசாரிகள் பிஞ்சக் காட்டுக்குக் கோடைக்காலத்திலும் கொண்டிக் காவல் போட்டுருவாக. ஒரு காஞ்ச எருவையோ ஒரு கம்மந்தட்டத் தரையோ அடுப்பு எறிக்கிறதுக்குப் பெறக்கிக்கிட்டு வர முடியாது

வாழ்க்கை இவ்வளவு தீஞ்சி போய் இருந்தாலும் ஊர் அமைதியாக இருந்தது. திருட்டுப் பயம் இல்ல. கொள்ளை நடக்கல. கொலை நடந்ததே கெடையாது. நம்ம நாட்ட அப்போ வெள்ளக்காரன் ஆண்டுக்கிட்டு இருந்தான். உங்கள் நாட்டை நீங்களே வச்சிக்கோங்க சாமின்னு இங்க உள்ள ரொம்பப் பெரிய மனுசங்ககிட்ட ஒப்படச்சிட்டு ஒரு நாள் அவன் கப்பல் ஏறினான்.

வெள்ளக்காரன் ராத்திரிக் கப்பல் ஏறியிருக்கான். மறுநாள் பட்டப் பகல்ல மொத மொத இந்த ஊர்ல ஒரு கொல விழுந்தது. காட்டுக்கு வெறகு பெறக்கப் போன ஒரு பொம்பளைய அவா காதுல கெடந்த நகைக்கு ஆசப்பட்டு வெட்டிக் கொன்னுட்டாங்க. அந்தப் பொணத்த மொத மொதப் பார்த்தது ஒரு வெத்தல யாவாரி. அவர் நேராகக் கிராம முன்சீப்ட்டப் போய்ச் சொல்லியிருக்கார். அதிகாரி வெத்தல யாவாரிட்ட அந்த விசயத்தக் கேட்டுத் தெரிஞ்சிக் கிட்டார்

இந்தக் கதையை ஒகுறியீட்டுக் கதையாகவும் வாசிக்க முடியும்.காந்தி மகான் என்ன சொன்னார். நடுச்சாமத்திலே ஒரு கன்னிப்பொண்ணு உடம்பு முழுக்க நகை அணிந்து ஒரு ஊருலேருந்து இன்னொரு ஊருக்கு பத்திரமாப் போகணும்.அதுதான் சுதந்திரம்.அன்னிக்குத்தான் நமக்குச் சுதந்திரம் அப்படின்னு சொன்னார்.சுயம்பு என்ன எழுதுகிறார்.” வெள்ளக்காரன் ராத்திரிக் கப்பல் ஏறியிருக்கான். மறுநாள் பட்டப் பகல்ல  ஊர்ல ஒரு கொல விழுந்தது.” என்று எழுதுகிறார்.காந்தியையே அப்படித்தானே போட்டுத் தள்ளினாங்க-அவன் அங்கிட்டுப் போகவும்.சொலவடைகளில் கிராமத்துப்பெண்கள் வெளிப்படுத்தும் உக்கிரமான பகடியின் வாசம் இக்கதையின் மீதேறி நிற்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகளுக்கு உதவ என்று கூட்டுறவு சொஸைட்டிகள் பிறந்தன.எல்லோருக்கும் கடன் கொடுத்தார்கள்.விவசாயம் பண்ணுங்க என்று சொன்னார்கள்.அப்புறம் கொஞ்ச நாளில் கடனைக் கேட்டு வந்து விட்டார்கள்.கரிசல் கிராமங்களின் வாழ்வோடு  பிரிக்க முடியாத ஒன்று இந்தச் சொஸைட்டிக்கடனும் ஜப்தியும்.கி.ராஜநாராயணனின் ‘கதவு’ முதல்க்கொண்டு கோணங்கியின் ‘கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்’ வரை இந்தக் கடன்காரங்களைப் பற்றி எழுதிவிட்டார்கள்.

”வெயில் அகோரமாய் இருக்கிறது. காற்று இல்லை . உடம்பு அசதியாய் இருக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. அந்த நேரம் உள்ளுர் சொசைட்டிக்காரர்கள் வந்தார்கள். பயிர்க் கடன் கூட்டுறவு சங்கத்தார். அவர்கள் என்னிடம் கடனைத் தரச் சொல்லிக் கேட்டார்கள்

நான் ஒரு மானாவாரிச் சமுசாரி. மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து பிழைக்கிறவன். பருவ மழை தவறும்போதெல்லாம் எனக்குக் கோபம் வரும் அப்போதெல்லாம் இந்த வானத்தையே நான் பகைத்துக்கொள்வேன். ஆரோக்கியம் கெட்ட இந்த வானத்தை இடித்துத் தகர்த்தால் என்ன என்று எனக்குத் தோணும்

இன்றைக்கு என் கோவம் இவர்கள் மேல் தாவியது. என்ன மனிதர்கள் இவர்கள் ? உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவக்கூடியவர்கள் தானா இவர்கள் ? நல்ல பெய சங்கம்? நல்ல பெய சர்க்க்கார்? நான் வானத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது வானத்தை இல்லை, அரசு நிர்வாகத்தையாக்கும் என்று அப்போது புரிந்துகொண்டேன்.

 கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கிறேன். சுகமாக இருக்கிறது.” (மானாவாரி மனிதன்)

’இடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தை’ என்கிற வரியோடு கதையை முடித்திருந்தால் அது ஒரு கோபத்தோடு முடிந்திருக்கும்.அப்புறம் ஏன் கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கிறேன்.சுகமாக இருக்கிறது.” என்று ஒரு வரியை எழுதி , அவரே கிளப்பிவிட்ட கோபத்தைத் தணிக்கிறார்?இதுதான் சுயம்புவின் கதைப்பாணி.குளிர்ச்சியான கிணத்துத்தண்ணிக்குள் உட்கார்ந்து சுகமாக உணரும்போது அந்த நாளின் வெக்கை நினைவில் அலையடிக்கிறது என்று கொள்ளலாம்.அல்லது அப்படியே வெந்த நினைவோடு கதையை முடிக்கப்படாது என்று சுயம்பு நினைச்சிருக்கலாம்.நடந்த சூடு தணிஞ்ச அப்புறம்தானே கதையை மத்தவுகளுக்குச் சொல்லுகிறோம்.அந்தப் பிரக்ஞையும் காரணமாக இருக்கலாம்.கல்லறைத்தோட்டம்,நீர்மாலை,சீம்பால்,,குருவி எனப்பல கதைகளில் இப்படி ஆற்றுப்படுத்தி அமத்தி முடிக்கிறதை தன் பாணியாகக் கொண்டுள்ளார் சுயம்பு.

’ஒரு சமுசாரியின் கதை’ சிறுகதையில் போகிற போக்கில் ஒரு வரியைப் போடுகிறார் சுயம்பு ”முதலமைச்சர் ஒத்த மனுசன் அவர் வீட்டுக்குப் பாப்பாரா?நக்கிக்குடிக்கிற இந்தச் சமுசாரிகளைப் பாப்பாரா?” என்று. என்ன நக்கல்?என்ன கிண்டல்?இதுமாதிரித் தெறிப்புகள் பல கதைகளில் வரும்.

சாக்கடைக்குழிக்குள் இறங்கும் மாநகராட்சித் துப்புரப்பணியாளர் வாழ்விலிருந்து ஒரு இணுக்கை நம் முன் தூக்கிப்போடுகிறார் சுயம்பு:

”தோவாளத்தில் வந்து உக்காந்திருக்கிறார். அவர் உடம்பு பூராவும் சாக்கடை. சாக்கடை அவர் உச்சந்தலையில் இருந்து வடிந்து கொண்டிருக்கிறது. சாக்கடையில் ஊறிய கைகளைக் கொண்டு முகத்தில் இருக்கிற சாக்கடையைத் துடைக்கிறார். பாதாளச் சாக்கடைக்கு உள்ளேயிருந்து அள்ளிய சாக்கடைச் சகதி இந்தத் தோவாளத்தைச் சுற்றிக் குவிந்து கிடக்கிறது. வண்டிகள் மெதுவாக நகர்கின்றன. நடந்து போகிறவர்கள் கர்ச்சீப்பால் முகத்தைப் பொத்துகிறார்கள். அவர்கள் பிரயாசைப்பட்டு தங்கள்  பார்வையை வேறு பக்கங்களுக்குத் திருப்புகிறார்கள். சாக்கடை தங்கள் ஆடைகளில் பட்டுவிடக் கூடாது என்று கவனமாக நடந்து போகிறார்கள்.

இரண்டு குட்டி விமானங்கள் இடித்துக்கொள்வதைப் போல் சேர்ந்து கீழே இறங்கி வருகின்றன. விமானங்கள் அந்தரத்தில் ஒரு குட்டிக் கரணம் அடித்துவிட்டுப் பறந்து பறந்து உச்சாணிக்குப் போய்விட்டன. தோவாளத்துக்கு உள்ளே பாதாளச் சாக்கடையில் சாக்கடைத் தண்ணீரின் மேல் மட்டத்தில் மனிதனின் சுவாசக் காற்று முட்டை இடுகிறது. அவர் இடுப்பில் கட்டியிருக்கிற கயிற்றைப் பிடித்து கொண்டு நிற்கிறார்கள் அவர் சகாக்கள். உடன்பிறப்புக்களை சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும் படி நிர்ப்பந்தப்படுத்துகிறது அரசாங்கம். சாக்கடைக்குள் முங்கி மூச்சு திணறிக்கொண்டிருக்கிற மனிதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.(தோவாளம்)”இரண்டே பத்திகளில் சாக்கடையில் அமிழ்த்தப்பட்ட ஒரு முழு வாழ்வையும் சொல்லிவிட முடிகிறதே என்று வியப்பாக இருக்கிறது.தூரம் கதையில் அழுக்கத்தண்ணியில் முங்கி எழுகிற பெண் நினைவுக்கு வருகிறாள்.

Image
”எங்களுக்கு ஒரு மகன், ரெண்டு பொம்பள மக்கள்.

ரெண்டு மருமகன்களும் எங்களுக்குச் சரியா வாய்க்கல. ரெண்டு மருமகன்களும் குடிகாரன்கள். ஒருத்தன் ஜெயில்ல இருக்கான்.

எங்களுக்கு மகனும் சரி கிடையாது. எம் மகன் முழுக்குடிகாரன். இவனால வீட்லயும் தொல்ல. வெளியிலயும் தொல்ல.

எம்மகன் எங்க போனாலும் வம்பு இழுத்துக் கிட்டுத்தான் வருவான். வேலைக்குப் போக மாட்டான். வாங்குற கடன திருப்பிக் கொடுக்க மாட்டான். கடன் கொடுத்தவன் கேப்பான்லஇவன் அருவாளத் தூக்குவான். ஓட்டலுக்குப் போய்த் திம்பான். மீனும் கறியும் பிரியாணியுமா விழுங்குவான். ஓட்டல்க்காரன் பணம் கேப்பான்லகொடுக்கமாட்டான். கண்ணாடிகள் உடைப்பான். நாற்காலிகளத் தூக்கி எறிவான். ஓட்டல்க்காரன வெட்டுவான். தெனமும் எங்கயாகிலும் ஒரு கலவரம் பண்ணிட்டுத்தான் வருவான். யாரையாவது வெட்டிட்டு வருவான் அல்லது எவன்கிட்டயாவது அவன் வெட்டுப் பட்டுக்கிட்டு வருவான்.

போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பத்திரிக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கும் என்னால நடந்து முடியல. படுத்தால் உறக்கம் வல்ல. நிம்மதியா ஒருவாய்ச் சோறு திங்க முடியல. எனக்கு நிம்மதியில்லாத பொழப்பாப் போச்சு.

எம் மகன் மூத்த மருமகன வெட்டிக் கொன்னான்.

என் ரெண்டாவது மருமகன் எம் மகன வெட்டிக் சொன்னான்.

எம் மகன் செத்தான். எங்கள் கஷ்ட்ட ம் விலகியது. இம்மதியா இருக்கோம்.

ரெண்டு பொம்பள மக்களும் மருமகளும் வேலைக்குப் போகுதுக. அது அது கூரையில் நிம்மதியா இருக்குக.

(குடி)

அரைப்பக்கத்தில் இந்த ’குடி’ என்கிற மொத்தக்கதையும் முடிந்து விடுகிறது.ஆம்பிளைக இல்லாட்ட பொம்பிளைக எம்புட்டு நிம்மதியாக வாழ முடிகிறது என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்.எத்தனை கேள்விகளை இக்கதை எழுப்புகிறது?எத்தனை கேள்விகளுக்கு விடையாக இக்கதை அமைந்து விடுகிறது.முக்கியமான அரசியலையும் இக்கதை கொண்டிருக்கிறது.

அனலாய்க் கொதிக்கும் இந்த வாழ்க்கையையும் ரசித்து வாழுகிறார்கள் எங்கள் மக்கள் பாருங்க என்று ஒரு காட்சியை நமக்குக் காட்டுகிறார்: 

”அது மதிய நேரம். சரியான வெயில்.

ஒரு வெயில் அலை வெட்டுக்கிடங்கில் இருக்கிற குளிர்ச்சியான மரங்களுக்கு மேல் அதன் உச்சியைத் தொட்டுக் கொண்டு தெற்காமல்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நிழல் அலை அந்த வெயில் அலைக்குப் பின்னாலேயே தொடுத்து வந்து கொண்டிருக்கிறது.

வடக்க இருந்து இன்னொரு வெயில் அலை வேகமாக எழும்பி வருகிறது. அது தனக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கிற நிழல் அலையை எட்டிப் பிடித்து அதன் மேல் ஏறிச் சவாரி செய்து கொண்டு முன்னேறுகிறது.

அடிபம்பில் குளித்துக்கொண்டிருந்த பெண்களில் மூத்தவள் இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பார்த்து ரசித்த அந்தக் காட்சியை ஆதியோடு அந்தம் வரை அவள் தன் தங்கச்சிட்டச் சொல்கிறாள்.”(ரசனை)

இவ்வளவுதான் கதையே.இதை மட்டுமே சொல்ல ஒரு கதை.இதெல்லாம் கூட எங்கள் வாழ்க்கையில் இருக்கு சார்களே…என்கிறார்.அக்கா கண்டதை தங்கைக்கு எடுத்துச் சொல்லுவதில் உள்ள சந்தோசமே தனிதானே.அந்த அக்காவாக சுயம்பு நமக்கு அதைக் கடத்துகிறார்.கடலில் அலையடிப்பதுபோல வெயிலும் நிழலும்தானே கரிசல்காட்டில் அலையடிக்க முடியும்?

ஒரு பனங்காட்டுக் கிராமம்(உயிர்மை பதிப்பகம்) நீர்மாலை (காலச்சுவடு பதிப்பகம்) ஆகிய இரு தொகுப்புகளில் இருக்கும் இந்த 85 கதைகளையுமே அவர் முழுத் தன்னுணர்வோடு,இப்படித்தான் கதை சொல்லவேண்டும் என்று முடிவு செய்து,இவ்வளவு சொற்களில்த்தான் சொல்ல வேண்டும்,இந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும் என்று தீர்மானகரமாகச் சிறுகதை எழுதுகிறார் சுயம்பு.அவர் பெரிய படிப்பாளி இல்லை.பண்டிதரும் இல்லை.ஆனால் தான் எழுதும் மொழி குறித்து இத்தனை ஓர்மை கொண்ட படைப்பாளிகள் அபூர்வமாகத்தான் தோன்றுவார்கள்.அப்படி நமக்கு வாய்த்த ஆளுமை சுயம்பு.

தன் கதைகள் குறித்து எந்த சந்தேகமும் குழப்பமும் அவருக்கில்லை.’ஒரு பனங்காட்டு கிராமம்’ தொகுப்புக்கான முன்னுரையில் அவர் எழுதிய இவ்வரிகளே சான்று:

Image
”கத சொல்றதுக்கு எப்படித்தான் ஆச வந்துச்சின்னே இவனுக்குத் தெரியல

வாழ்க்கையைப் பற்றி எதையுமே அறிந்துகொள்ள முடியாத அவ்வளவு சின்ன வயதிலேயே கதை சொல்கிற ஆசை இவனிடம் பூந்தாலும் பூந்திருக்கலாம். நல்லா வெவரம் தெரிஞ்சதுக்குப் பெறகு ரொம்ப லேசியான வேல இந்தக் கத சொல்ற வேலதான்னு இவனாகத் தேர்வு செஞ்சிருந்தாலும் செய்திருக்கலாம்.

 எங்க அம்ம என்ன பேசினாலும் அதை ஆர்வமாகக் கேப்பேன். எங்க அம்ம சொன்னதுகள் எல்லாத்தையுமே நான் கதைகளாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வாயக்கொண்டு எத்தன கதைன்னாலும் சொல்லிப்புடலாம். ஒரே ஒரு சின்னக் கதையை எழுதிச் சொல்றதுக்குள்ள விரல்கள் துவண்டு போகின்றன..

கதை சொல்லணும்னுட்டு சொயம்புக்கு அவ்வளவு ஆசை. தெனம்மும் இவன் எழுதிக்கிட்டேதான் இருக்கான். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் நல்ல கதைகள் தானா? ஒரு சின்னச் சந்தேகம்கூடத் தேவை இல்லை. எல்லாக் கதைகளுமே நல்ல கதைகள். நமக்கு முன்னால் இருக்கிற வாழ்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல்த் திறந்த மனதோடு பேசுகிற நல்ல கதைகள்.”

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 3 Comments

3 Comments

  1. jananesan

    பாலைச் சுண்டக் காய்ச்சியது போல் சொற்சுருக்கம் கூட சொல்வதில் உருக்கமும் வாசகர் நெஞ்சிற்கு படைப்பின் மீது நெருக்கமும் கூடிவிடுகிறது. அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை உணர்த்துவதைவிட. வேறு என்ன அரசியல் இருக்கிறது. இதுதானே சூழலுக்கேற்ப பல பரிமாணங்களைக் கொள்கிறது. இந்த 85 கதைகளையும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. இந்த த் தூண்டுதலே சுயம்புவின் அரசியல் வெற்றி.அருமையாக கட்டுரையாக்கி உணர்வைப் பெருக்கிய தோழர் தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்துகள்.

  2. Chandru

    நெ(ரு)ஞ்சில் முள்.
    கண்ணில் சுடுநீர்
    சுயம்புவின் க(வி)தைகள்
    நன்றி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *