தொடர் 13: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன்  | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 13: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

 

“சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை வெளிப்பாடு, சமூக அக்கறை, தொனி எத்தனை சொற்கள் இல்லை தமிழில்.  எல்லாம் காலத்துக் காலம் கோணத்துக்குக் கோணம் இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன.  மாறாத சில உண்டு.  மனித நேயம், சொல்வதில் நேர்மை, நான் வரித்துக் கொண்ட இலக்கணங்கள் அவை.  அதில் சோர்வில்லை, தளர்வில்லை, இன்றும் எனக்கு” என்கிறார் நாஞ்சில் நாடன்

 

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

நாஞ்சில் நாடன்

கண கண கணவென முரசுகளும், தவுல்களும் முத்தாரம்மன் கோயிலில் முழுங்கின.   தென்வடலாக  நீள வாட்டத்தில் அமைந்திருந்த அந்தக் கோவிலின் கருவறையின் எதிரே வடகிழக்கு மூலையில்  சந்நிதியைப் பார்த்து உட்கார்ந்தவாறு  தாமரைக்குளம்  வில்லுப்பாட்டு பகவதிப் பெருமாள் பிள்ளை வரத்துப் பாடிக் கொண்டிருந்தார்.  

கொடை கொடுக்கும் கோவிலை நோக்கி உடன் குடியிருக்கும் சூலைப்பிடாரி, சந்தனமாரி, பூதத்தான் புடை சூழ முத்தாரம்மன் வந்து கொண்டிருந்தாள்.  கீழ்புறத்தில் பலகை அளியோரமாகப் படிப்புரையில் நின்று ஒரு கூட்டம் உள்ளே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது. அது வேளாளர் சமுதாயக் கோவில்.  எனவே தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு அங்கே இடமில்லை.  மனிதன் என்பதற்கான மரியாதையைக்கூடத் தேடித்தர இயலாத வக்கற்ற தெய்வத்தின் அருள் வேண்டி அவர்கள் பழியாகக் காத்துக் கிடந்தனர்.  

கோவிலின் வெளிப்புறச் சுவரில்  ஒரு மாடக்குழி போன்ற அமைப்பில் சிறிய கோயில்.   அதில் முழுக் கோவிலையும் இரவு பகலாகக் காவல் செய்கின்ற  சாதியில் குறைந்த தெய்வமான அரவணைப் போத்தி. சிலை, சிங்காரம் எதுவும் வித்தாரமாகக் கிடையாது,  சுண்ணாம்புக் காரையால் ஆன மொட்டை மொழுக்கட்டை.  சாதி குறைந்த சாமிக்கு இதுகூட அதிகம் என்று தர்மகர்த்தாக்கள் நினைத்தார்களோ என்னவோ?

இசக்கிமுத்துவின் சாமியாட்டத்தை அவன் சாதிக்கூட்டம் ஒன்று சுற்றி நின்று பயபக்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தது.   கோவிலின் உள்ளே வரத்துப் பாட்டின் இறுதிக் கட்டம்.   கோமரத்தாடிகள் அனைவரும் குளித்து முழுகி ஈர வேட்டியின் மீது துவர்த்தை மடித்துக் கட்டி  நெற்றியிலும், உடலிலும் வரிவரியாக வெண்ணீறு துலங்க பயபக்தியோடு வணங்கி நின்றனர்.  

கருவறைகளுக்கு ஐந்தடி முன்னால் வெள்ளைத் திரையால் மறைக்கப்பட்டு சுத்த சைவமான முத்தாரம்மனுக்கு பருப்பு சாம்பார், அவியல், புளிசேரி, எரிசேரி, கட்டித் தயிர், பச்சடி, கிச்சடி, பொரியல், துவரன், உப்பிலிடு வகைகள் அம்பாரமாக குவிக்கப் பெற்ற பச்சரிசிச் சோற்றின் மீது கொட்டப்பட்டது.  மற்ற தெய்வங்களுக்கெல்லாம் குளத்து மீன், கறி, அவித்த முட்டைகள், கோழி ஆட்டுக் கறிகள், தீயில் சுட்ட அயிலைக் கருவாடு.  

படைத்து முடிந்ததும் திரை விலகியது.  மேளங்கள் சேர்ந்து முழங்கின.  பூ எடுத்தாகி விட்டது.  வில்வமங்கலம் வேளாளர் சமுதாய முத்தாரம்மன் கோவில் முதலடி தர்மலிங்கம் பிள்ளை அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.  கொஞ்ச நேரத்தில் வாகனம் எடுத்தாக வேண்டும்,  

மான் வாகனம் நன்றாகச் சோடிக்கப்பட்டிருந்தது.  அம்மனின் வெண்கலச் சிலை வாகன முதுகின் பீடத்தில் வைத்துக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.  பெட்ரோமாக்ஸ் விளக்குகளை தலை மீது ஏற்றி வந்தார்கள். பசி பொறுக்க மாட்டாத சிறுவனைப் போல தீவட்டிகள் அழுது வடிந்தன.  தீவட்டி பிடிப்பவர்களும், எண்ணெய் ஊற்றுகிறவனும்  செல்வாக்கில்லாத இந்துச் சிறுவர்கள்தான்.  

கடையநல்லூரிலிருந்து வந்த கரகாட்டக்குழு தயார் நிலையில் இருந்தது.  நையாண்டி மேளம் தங்கப்பா கெத்தோடு நின்று கொண்டிருந்தார்.   தீபாராதனை பிறகு வெடல் முடிந்து வாகனம் கிளம்பியது.  சாராயத்தின் கனத்த நெடி நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.   கொட்டு முழக்கத்தோடு வாகனம் நகரத் தொடங்கியது.  ஊராட்சி தலைவர் பஞ்ச வர்ணம் பிள்ளைக்கும் அவர் மைத்துனர் முதலடி தர்மலிங்கம் பிள்ளைக்கும் கொடை நன்றாக நடந்து முடிய வேண்டுமென்ற கவலை.   

சேரியையும் வெள்ளாங்குடியையும் இணைக்கும் கப்பி ரோடு அந்த மூலையில் சந்திக்கிறது,  கொடை பார்க்க வந்த பெண்களும் ஆடவர்களும் அங்கே ஓரமாக நின்றனர்,  மற்ற நாட்களில் வேளாளர்கள் வீட்டு அடுக்களை வரை புழங்கும் அவர்கள் இன்று தனிப்பட்டு நின்றனர்.  

ஊர்வலம் பஞ்சவர்ணம் பிள்ளை வீட்டு வாசலில் நின்றது,  கோமரத்தாடிகளுக்கு செவ்விளநீர்க் காய்கள் சீவித் தரப்பட்டன.  அவர் வீட்டுத் திண்ணையில் பெண்களும், குழந்தைகளும் நிறைந்து நின்றனர்,  கரகம், நையாண்டி மேளம் யாவர்க்கும் சோடா கலர் உடைத்துக் கொடுத்தார் ஒருவர்.  இப்படியாக அரை மணி நேரம் ஆகி விட்டது.   

ஊர்வலம் நகர்ந்தது. தெற்கு தெருவிற்கு வரும்போது மூன்றரை. ஏழெட்டு வீடுகள் தாண்டினால் கோவில்.  வாகனம் இறக்க நாலாகிவிடும். தொட்டிவீட்டுப் பலவேசம் பிள்ளை வீட்டு முகப்பிலும் பலத்த கூட்டம்,  அவர் மகள் திருவனந்தபுரத்திலிருந்து அம்மனுக்கு சாத்த ரோஜாப்பூ ஆரம் கொண்டு வந்திருந்தாள்,  ஒரு பாட்டு முடிவதற்கும் சாமி கொண்டாடிகள் பிரசாதம் வழங்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது,   

“ஆங்” போகட்டும் என்றார் முதலடி தர்மலிங்கம் பிள்ளை.

“என்ன போகட்டும் ? வாகனம் நிக்கட்டும்” பலவேசம் பிள்ளையின் தம்பியின் குரல்கூட்டத்தில் ஒரு விதிர்ப்பை ஏற்படுத்தியது.

முதலடியின் குரலுக்கு மறுகுரலா? “என்ன பார்த்துகிட்டு நிக்கியோ? மணி என்னாகு ம்ம் போகட்டும்”  தர்மலிங்கம் பிள்ளை

“அம்மன் வாகனம் உம்ம அப்பன் வீட்டுச் சொத்தா?  பிரசிடெண்ட் வீட்டு வாசல்லே அரை மணிக்கூர் நிறுத்தச் தெரிஞ்சுல்லா?” 

கூட்டம் கலகலத்தது,  

தர்மலிங்கம் பிள்ளை உரமேறிய கைகளால் வாகனத்தை மறித்தவர் செவளையில் அடித்தார்.   யார் பாரை அடிப்பது என்று தெரியாமல் மாறி மாறி. . .

பலவேசம் பிள்ளையின் கட்சிக்கு உதவியாக வாகனத்தின் பின்புறம் தோள் போடுக் கொண்டு நின்ற இருவரும் விலக . . .  

வாகனம் மட மடவென்று பின்னோக்கிச் சரியத் தொடங்கியது.

 

கணையாழி, மே 78

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *