தொடர் 14: தபால்கார அப்துல் காதர் – எம்.எஸ்.கல்யாணசுந்தரம் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 14: தபால்கார அப்துல் காதர் – எம்.எஸ்.கல்யாணசுந்தரம் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

சுதந்திரப் போராட்டத்தில்  நேரடியான பங்களிப்பை கொண்டிருந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரம் முன்ஷி என்ற பெயரில் முப்பதுகளில், பல்வேறுபட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.  பின்னாளில் தந்தித் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். அரசு ஊழியர்கள் பற்றிய கருத்தோட்டத்தை நாற்பதுகளில் எழுதப்பட்ட இக்கதை கட்டுடைக்கிறது.

தபால்கார அப்துல் காதர்

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது பார்க்கத் தகுதியானவற்றை விசாரித்தபோது, அந்தப் பட்டியலில் தபால்கார அப்துல் காதரும் இடம் பெற்றிருந்தார். ஆயின் ஒவ்வொரு ஊரிலும் ஒன்றைத்தான் பார்த்து வருவதாகவும் இந்த ஊரில் அப்துல்காதர் என்றும் அவர் கூறிவிட்டார். ஆயின் அவனுடைய வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவர் மெடிகல் சர்டிபிகேட் கொடுத்துவிட்டு இரண்டு மாத ரஜாவில் கிராமத்திற்குப் போய்விட்டதை அறிய முடிந்தது. ஷாவும் அடுத்த ரயிலில் ஏமாற்றத்தோடு சென்றுவிட்டார்.

அப்துல் காதர் வெகுநாளாக தன் சொந்த ஊராகிய இவ்வூரில்தான் தபால்காரனாக இருந்து வருகிறான்.  அவன் பெயரைச் சொன்னதுமே அனேகருக்கு அப்துல் காதரின் நீண்ட மாம்பிஞ்சுகள் போன்ற மீசையும், படிப்படியான நீர்வீழ்ச்சி போன்ற தாடியும், சிரித்த பற்களும், அன்பு ததும்பும் கண்களும், நீல நிறச் சட்டையும், காக்கித் தலைப்பாகையும் மனத்தின் முன் நிற்கும்.  

மலை ஆறு அல்லது ஆறரை மணிக்கு அவன் தபால் எடுத்து வருவான்.  அவன் தெருக்கோடி திரும்பியதுமே மற்றொரு சூரியன் உதித்துவிட்டது போல் ஜனங்களுக்குத் தோன்றும். தபாலாபீசிலிருந்து புறப்படும்போதே யாராருக்குக் கடிதம் இருக்கிறது என்று அவன் மனப்பாடம் செய்திருப்பான்.

ஊரிலுள்ள  ஒவ்வொர் பற்றிய விவரங்களை தன்னகத்தே கொண்டுள்ளதோடன்றி, அவர்களுக்கு ஏற்ற முறையில் பேசி வருவதில் அப்துல் காதர் சமர்த்தர்தான்.  ராமா ஜோஸ்யர்  தபால் கேட்டால் “நீங்கதான் ஜோஸ்யம்  பார்த்துச் சொல்லுங்களேன்”  என்று சொல்லும் அப்துல் காதர் உபாத்யாயர் “என்னாலே உனக்கு சிரமம் இருக்காதே?” என்றால் “அதென்ன அப்படிச் சொல்றீங்க? மூணு லெட்டர் இருக்குதே! உங்க துரைசாமி பிள்ளை எழுத்துனு நினைச்சேன்.  ஆனா அவர் இப்படி வளச்சிப் போட மாட்டாருங்க” என்று பளீச்சென்று அப்துல் காதர் பதில் சொல்வான்.

யாரும் விசாரிக்கவில்லையென்றால் “என்னவிருந்தாலும் பாருங்க, தபால்காரப்பயன்னா வேறொண்ணும் கேக்கத் தோன்றுதில்லை.  அவனும் மனுஷந்தானே! அவன் பிள்ளை குட்டியைப் பற்றி விசாரிப்போம்னு தோணறதில்லை”யென்று காதர் புலம்புவார்.

இருபது வருஷங்கள் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - தமிழினி வெளியீடு | panuval.com

விசுவநாத குருக்கள் “ஏண்டாப்பா சாயபு, வடக்கத்தித் தபால் வந்துடுத்தோ?” என்று கேட்டால் “வடக்கத்தி, தெற்கத்தி, பேனாக்கத்தி, தொண்டை கிழியக் கத்தி எல்லா தபாலும் வந்துடுத்து. உக்ளுக்கொண்ணும் இல்லை” என்று அப்துல்காதர் பதில் சொல்வார்.   ஷாப் கடை பாச்சாரியா ஹிந்தியில் கேள்வி கேட்டால் ஹிந்தியிலேயே பதிலளிப்பார்.

ஒரு நாள் நாங்கள் சில பேர் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  படியில் உட்கார்ந்து  வெற்றிலைப் பாக்குப் பெட்டியின் பக்கமாக கையை நீட்டினான்.  திண்ணையில் வந்து உட்காரும்படி நாங்கள் சொன்னோம்.  “இங்கே குந்தியிருந்தா யாராவது வந்ததும் எட்டிக் கடிதத்தை கொடுத்திடுவேன்.  பேச்சும் நடக்கும். வேலையும் நிக்காது” என்றான்.  அவன் சாதாரணமாக எங்களைப் போன்ற கூட்டங்களோடு பேசிக் கொண்டே தன் பாதி பாரத்தையும் குறைத்துக் கொள்வான்.  தனது அநுபவ ஞானத்தால் நிகழ்ச்சிகளை ஊகித்து விடுவான்.

ஒரு சமயம் அப்துல் காதர் ஒரு மாதம் லீவில் சென்றான்.  அவனுக்குப் பதிலாக வேலுச்சாமிப் பிள்ளையை நியமித்தார்கள்.  அவன் வேலை ஒப்புக் கொண்ட முதல் நாள் 5.15க்கு கடிதங்களை கொண்டு வந்தான். “என்ன இவ்வளவு சீக்கிரம்?” என்ற நான் கேட்ட போது தாமதமாய் வந்ததைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணி, “பீட் புதிது இரண்டு நாளில் சரியாகப் போய்விடும்” என்று சமாதானம் கூறினான்.  

ஐந்து மணிக்கு கொடுக்கக்கூடிய கடிதத்தை ஆறரை மணிக்கு கொடுத்து வந்ததற்காக அப்துல் காதர் மேல் எனக்கு உண்மையாகவே கோபம் பொங்கிற்று.  இத்தனை வருஷங்களாக இதைக் கவனியாமல் விட்டதற்காக என் பேரிலும் எனக்கு கோபம் உண்டாகி, கடைசியில் அதுவும் அவன்பேரில் திரும்பிற்று.  எச்சரிக்கையால் அவன் திருந்தாவிட்டால் பின்னர் அதிகாரிகளுக்கு எழுதத் தீர்மானித்தேன்.  சூடு தணியுமுன்னே ஒரு புகார் மனுவும் எழுதி வைத்து விட்டேன்.

லீவ் முடிந்து வேலைக்குத் திரும்பினான்.  மணி ஐந்தடித்தது.  தபால்காரனைக் காணோம். 5.30, 6.10 அப்பொழுதுதான் அவன் பத்து வீடுகளுக்கப்பால் தென்பட்டான்.    என்னண்டை வரும் போது மணி 6.30.  கட்டில் தேடிப்பார்ப்பதாக பாவனை செய்து விட்டு உடன் பிறந்த புன்சிரிப்புடன் “இல்லை போலிருக்கு” என்றான் அவன்.

“ஏன் இவ்வளவு தாமதம்?” என்றேன்

“எப்போதும் போலத்தானே வந்திருக்கிறேன்” என்றான்.

“ஒரு மாதமாக எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் கடிதம் கிடைத்து வந்தது” என்றேன்.

“ஆம்,  அவர்கள் அப்படித்தான்.  விரு விரு வென்று கொடுத்து விட்டு லாயத்திற்கு திரும்பும் ஜட்காக் குதிரை போல போய்விடுகிறார்கள்”.

“நீரும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?” தோரணையுடன் கேட்டேன்,

“செய்யலாம். ஆனால் எனக்கு ஒத்து வராது” என்று சிரத்தையற்ற புன்சிரிப்புடன் இழுத்தபோது,  “நாலு பேர் எழுதிப் போட்டால் வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள்” என்று பயமுறுத்தினேன்.  

தலையைச் சொறிந்தான்.  “அதுவும் ஒரு நன்மைதான்.  பிறந்து வளர்ந்த பழகிப் போன ஊர்.  ஜனங்கள் என்னை அதென்ன அப்துல் இதென்ன அப்துல் என்று கேட்டுக் கொண்டுதானிருப்பார்கள். (இந்தாங்கோ பாட்டியம்மா, சீயாழியிலிருந்து உங்க மூத்த பிள்ளை எழுதியிருக்காரு) ஜனங்கள் இழுத்து வைத்துப் பேசினால் நான் தான் என்ன செய்யறது? (செட்டியாரே லெட்டர், இந்த எழுத்தை எப்படித்தான் வாசிக்கப் போறீங்களோ?)”

அவர் தொடர்ந்தார். “நீங்கள் இவ்வளவு நேரம் இத்தனை தகவல்கள் விசாரித்தீர்கள். நின்று பதில் சொல்லி விட்டுப் போவதுதானே மரியாதை.  கடுதாசிக்கு என்ன அவசரம்? ஐஸ்கிரீமா, மல்லிகைக் பூவா, இளகிக் போகும் வாடிப்போகும்னு பயப்பட. முந்தாநாள் உங்க அண்ணாச்சியை மதுரையிலே பார்த்தேன்,  ரெண்டு மூணு மாசமா உங்ககிட்டேயிருந்து லெட்டரே வரலையாம்.  முன்னைக்கிப்போ ஒரு சுத்து பருத்திருக்காரு. வரட்டுமா சார்” 

அப்துல் காதர் வக்கீல் கோபாலய்யர் வீட்டை நோக்கிச் சென்றான்.  கடிதம் இல்லை என்று கையை ஆட்டிச் சென்றான்.

எழுதி வைத்திருந்த மனுவைத் துண்டு துண்டாகக் கிழித்து சாக்கடையில் போட்டேன். 

 

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *