கு.ப.ராஜகோபாலன்,மௌனி,ந.பிச்சமூர்த்தி,கரிச்சான்குஞ்சு,எம்.வி.வெங்கட்ராம்,தி.ஜானகிராமன்,சிட்டி,க.நா.சு., எனப் பல முன்னோடிகளைத் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த தஞ்சை மண்ணிலிருந்து வந்த இன்னும் ஒரு படைப்பாளி தஞ்சை ப்ரகாஷ்.மற்ற படைப்பாளிகள் கும்பகோணத்தைச் சுற்றிய நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் எனில் தஞ்சை நகரத்தின் வாழ்விலிலிருந்து முகிழ்த்தெழுந்தவர் ப்ரகாஷ். பிரபஞ்சன் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில், “ நான் அவரைச் சந்தித்தபோது அவர் ஜி.எம்.எல்.ப்ரகாஷ். அதன் விரிவு கார்டன் மார்ட்டின் லியோனல் பிரகாஷ்.ஐயங்கார் மரபும் புரோட்டஸ்டண்ட் கிறித்துவ மரபும் கூடிய பெற்றோரின் ஒரு மகன் அவர்.அவர் காலத்தில் காவிரியின் ஐந்து ஆறுகளிலும் இரு கரையும் நீர் புரண்டு ஓடியது.அவர் நண்பர்கள் சுவாமிநாத ஆத்ரேயன்,தி.ஜானகிராமன்,எம்.வி.வி.,கரிச்சான் குஞ்சு,ந.பிச்சமூர்த்தி, க.நா.சு ஆகியோர்.அவருடன் பிணைந்து பழகிய அந்த முப்பது ஆண்டுகளிலும் எந்த மதச்சார்பும்,சாதிச் சார்பும்  எள் முனை அளவுக்கும் இல்லாத மனிதராக அவர் இருந்ததை நான் பார்த்தேன்.அவர் நண்பர்கள் அப்படி இருந்தார்களா என்று என்னால் சொல்ல முடியாது.குறிப்பாக வெங்கட் சுவாமிநாதன் மேல் அவருக்கு இருந்த நட்பும் ,அவர் கருத்துக்கள் மேல் அவருக்கு இருந்த மதிப்பும் மிக இறுகியது.மிக அகன்றது.சாமிநாதனும் மிக நேசித்த நண்பர் ப்ரகாஷ்” 

”வெ.சா.எ. (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்)” என்கிற பெயரில் அவருக்காக தன் செலவில் ஒரு இதழையே நடத்தியவர் ப்ரகாஷ்.சாகும்வரை எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்த வெங்கட்சாமிநாதனைத் தன் குருவாகக் கொண்டவர் ப்ரகாஷ் என்பது வியப்புக்குரியது.அவருடைய கருத்துலகம் பற்றிப் புரிந்து கொள்ள இதுவும் ஒரு தடயம். ப்ரகாஷ் இறந்தபோது அவர் நாவல்களெல்லாம் எழுதியிருக்கிறாரா என்று கேட்டாராம் வெங்கட் சாமிநாதன் என்று சாருநிவேதிதா எழுதுகிறார்.

”தஞ்சாவூர் பிராமண வாழ்க்கையைத் தாண்டாத தஞ்சை  எழுத்தாளர்களின் அந்த முதல் தலைமுறை எட்டாத கலை வெற்றியை ப்ரகாஷே சாதித்துக் காட்டினார்.ஒரு முழுமையான தஞ்சையின் முழு விஸ்தீரணத்தைப் ப்ரகாஷின் எழுத்தே அளந்து காட்டியது” என்று பிரபஞ்சன் கணிக்கிறார்.( கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம் நூலில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரையிலிருந்து).

10-06-1943 இல் பிறந்து 27-07-2003 இல் மறைந்த ப்ரகாஷ் கள்ளம்,கரமுண்டார் வீடு,மீனின் சிறகுகள்,மிஷின் தெரு ஆகிய நாவல்களையும் பல கட்டுரைகளையும் சுமார் 50 சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.இதில் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் சிறுகதைகள் 32.காவ்யா வெளியிட்ட முழுத்தொகுப்பில் 31 கதைகளும் ஜாகீர்ராஜாவின் தொகுப்பில் ஒரு நெடுங்கதையும்(அகழ்மோடு) கிடைக்கின்றன.அவருடைய படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சாரு நிவேதிதாவின் முன்முயற்சியில் ஜீரோ டிகிரி பதிப்பகத்தார்   Boundless and Bare என்கிற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்துள்ளனர்.

இக்கதைகளில் காமம் சாராத கதைகள் என ராவணன் சீதை,வடிகால் வாரியம்,திண்டி,ஆல மண்டபம்,நியூசென்ஸ்,என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம்,உனக்கும் ஒரு பக்கம்,தஞ்சையின் முதல் சுதந்திரப்போராட்டம் ஆகிய ஏழு கதைகளைக் குறிப்பிடலாம்.ஏழு கதைகளைத்தான் குறிப்பிட முடியும்.

ஆகவே அவரது படைப்புகள், பிற படைப்பாளிகள் எழுதத்தயங்குகிற, பாலியல் மீறல்கள், பிறழ்வுகள், கற்பனைகளை மனத்தடை ஏதுமின்றி உடைத்துப் பேசுகிறவை என்று சொல்லலாம்.நாவல்களிலும் இத்தன்மை தொடர்வதைப் பார்க்க முடியும்.”தி.ஜானகிராமன் பெண்களைக் கிளுகிளுப்போடு பார்த்தார் என்றால்,ப்ரகாஷ் அவர்களின் கண்களுக்குள் பார்த்து அவர்களின் அசல் பரிமாணங்களை வெளிக்கொண்டு வருகிறார்.” என்பது பிரபஞ்ச வாக்கு.

கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL (Tamil Edition) eBook: THANJAI PRAKASH, தஞ்சை ப்ரகாஷ்: Amazon.in: Kindle Store

1.காமம் செப்பாத கதைகள்

இந்த ஏழு கதைகளில் ‘திண்டி’ மற்றும் ‘தஞ்சையின் முதல் சுதந்திரப்போர்’ இரண்டும் மிக முக்கியமான கதைகள்.திண்டி கதையில் வரும் திண்டி நல்ல திடகாத்திரமான ஆள்.திண்டின்னா என்ன? திங்கிறது!நல்லா திங்கிறவனுக்குப் பேரு திண்டி..திண்டிப்பயல் பொடியனாக இருந்தப்பவே அவனை ஊர்ப்பொதுவுல உட்டுட்டு செத்துப்போயிட்டா அந்த ஆயி.அவ கள்ளப்பொம்புல….அய்யோ பாவம் கள்ளப்புள்ளே என்று கள்ளவீட்டுப் பொம்பளயெல்லாம் ஆளுகொரு உருண்டையாகப் போக வர திண்டிப்பயலுக்கு ஊட்டிவிட்டு ,அவனும் கஷ்டம் தெரியாம திமு திமுன்னு வளர்ந்துவிட்டான்.திண்டி சும்மா சாபிடவில்லை.ஒவ்வொரு வீட்டிலேயும் காட்டுமாடு மாதிரி வீட்டு வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டுச் செய்துவிட்டுத்தான் சாப்பிடுவான்.சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் எல்லோருமே சோறு போட்டார்கள்.காலம் ஆக ஆக அந்த வழக்கம் தேய்ந்துகொண்டே வந்து இப்போது அவனுக்கு 20 வயதாகையில் நிரந்தரமாக நின்று போனது.ஊர் பஞ்சாயத்து,ஆலமரம்,குளத்தங்கரை ,கோயில் மரத்தடி என்று கண்ட இடத்திலெல்லாம் பட்டினியாய் சுருண்டு கிடந்தான்.

பத்துநாள் இருபது நாளாச்சு.வாள் கத்தியாரு வீட்டு தென்னந்தோப்புலே ஐம்பது இளநீர்க்காயை ஒரே நேரத்தில் வெட்டிக் குடிச்சான்.அண்ணாமலை ரெட்டியாரு வாழைக்கொல்லையிலிருந்து முப்பதுதார் வாழைக்காயை வெட்டிக்கிட்டுப்போய் சந்தையில் வித்துப்போட்டான்.படுகையில் இறங்கி வெத்தலைக்கொல்லையிலிருந்து ஐம்பது கவுளி   வெத்தல, கர்ணக் கிழங்கு வெட்டி குமுச்சு கிடந்ததிலிருந்து இரண்டு வண்டி கிழங்கு காணும், அறுபது கிலோ வெண்டைக்காய், இன்னும் கண்ணுக்கெட்டுன தூரத்திலிருந்து மாங்காய், தேங்காய்ன்னு இப்டி ஏகப்பட்ட அழிமானம் செய்தான் திண்டி. ஊர் கிடுகிடுத்துப் போய்ட்டு! யார் இதையெல்லாம் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.

 அடுத்தநாளே செட்டியார் வீட்டு மாந்தோப்புல இரண்டு லாரி மாங்காய் காணும். ‘ஒரு மனுசன் செய்யிற வேலையா இல்லெ இதெல்லாம் என்று ஊர் பூரா இதே பேச்சா இருந்தது. பகல்லயே நாயக்கர் வீட்டு அம்மா, கொல்லையில இருந்த பத்து சுரக்காயும் கொல்லையில கட்டிக் கிடந்த கன்னுக்குட்டியையும், தாய் பசுவையும் காணுமாம். ஊரே அல்லோல் கல்லோலப்பட்டுக்கிட்டு இருந்தது. யார் செஞ்சிருப்பாங்கன்னு ஒருத்தருக்கும் புரியல.

துப்புத் துலக்குறவங்களை ஊரார் க்கூட்டி வந்தா அன்னிக்கு அதே துப்புத் துலக்குறவன் வீட்டிலே கொள்ளை நடக்கும்.போலீசைக் கூட்டி வந்தார்கள் கடைசியில்..

போலீஸ்காரங்களும், இன்ஸ்பெக்டரும் கிராமத்த சல்லடை போட்டுச் | சலிச்சாங்க. கேள்வி மேல் கேள்வி கேட்டாங்க திண்டிய! கொண்டு போய் குறுக்கும் மறுக்குமா விசாரணை பண்ணினாங்க. ஒன்றும் தேறல! ஆனா ஊர்க்கு வெளியேயிருந்த முசாரி பங்களாவுல நிறுத்தி வச்சிருந்த இன்ஸ்பெக்டரோட ஜீப் கார் மின்னல் வெட்டிய நேரத்துல காணும், திண்டிக்கி எப்படி ஜீப் கார் ஓட்ட தெரிஞ்சுது? காவலுக்கு அங்க நின்ன நாலு போலீஸ்காரங்களையும் கண்ணில மண்ண தூவிட்டு எப்படி ஜீப்ப அவனால கொண்டு போக முடிஞ்சுது? போலீஸ்காரங்களுக்கும் திண்டியப் பாக்க பயம்மா இருந்தது; ஏன்னா கையும் மையுமா அவனைப் புடிக்க முடியல. முடியாது அப்படிங்கிறதும் அவனப் பார்த்ததுமே தெரிஞ்சிக்கிட்டாங்க.

சாதாரணமா பெருந்தீனி திங்கிறவங்களுக்குப் பொதுவா சுறுசுறுப்பு இருக்காது. கூர்மையான அறிவு இருக்காது. சமயோசிதமா எந்தக் காரியமும் செய்ய மாட்டாங்க. ஆனா இங்க திண்டி அதுக்கு நேர் எதிர்மாறா இருக்கிறத இன்ஸ்பெக்டர் பாத்தார். திண்டி ஏராளமா திங்கிறத்தான் பாக்க முடிஞ்சதே தவிர அவன் திருடுறதெ பாக்கவே முடியலை! கன்னா பின்னான்னு திங்கிறவங்க கிட்ட இருக்கிற மந்த புத்தி திண்டிகிட்ட இல்ல. மின்னல்தான். மின்னல் வெட்ற நேரத்துல யாரும் கண்டு பிடிக்க முடியாம எல்லாரும் திகைச்சு நின்னுருக்கும்போது ஒரு ஊரையே கூட திண்டியால தூக்கிக்கிட்டு போயி ஒளிச்சு வச்சு வித்துட முடியும்.

போலீஸ்காரங்க அந்த ஊர் பொம்புளயள கூப்பிட்டு விசாரிச்சப்ப எல்லாம் ஒரே முட்டாதிண்டி இல்லங்க இதுக்கெல்லாம் காரணம்! அவன் நம்பூட்டு புள்ளஅப்படின்னு சொல்லிட்டாங்க .பிறகு ஊரார் எல்லாம் சேர்ந்து அவனுக்கு கமலம்பாள் என்கிற பெண்ணைக் கல்யாணம் கட்டி வைக்கிறார்கள்.கால்கட்டுப் போட்டாச் சரியாகிவிடுவான் என்கிற நம்பிக்கையில்.ஆனால் அதுவும் நடக்கவில்லை.நாலுநாLiல் மறுபடி ஊரில் களவு.பின்னர் ஊரே கூடி அவனைப் பிடித்துச் சங்கிலியால் கட்டி பஞ்சாயத்தில் நிறுத்துகிறார்கள்.அவனை மாறுகால் மாறுகை வாங்கணும் என்று தீர்ப்புச் சொல்கிறார்கள்.அப்போது அவன் பேசுகிறான்:

நான் எப்பவுமே ரொம்ப பேசுறவன் இல்லீங்க. தப்புன்னா யார் செஞ்சாலும் தப்புதான். நான் செஞ்சன்னு ஆனா ஒத்துக்க கூடாதுங்க! ஏன்னா ஒத்துக்கிட்டா ஊர் உலகத்தில இருக்கிற முக்காவாசி பேர் நாங்களும் திருடங்கதாங்க அப்படின்னு ஒத்துக்கவேண்டி வரும். ஏன் மேல பத்துபேர் பிராது கொடுத்து இருக்கிறான். ஆனா அத நிரூபிக்கணுமில்லீங்க? அத இந்த ஊர்ல இருக்கிற ஆளுங்க மட்டுமல்ல எவன் வந்தாலும் முடியாது! இதோ வாள் கத்தியார் மாமா இருக்கார்.. பத்து ரூபாய்க்கு வேலை வாங்கிட்டு பரம்பரையா எம் பண்ணைக்காரன் எம் பண்ணைக்காரன்னு சொல்லி ஒன்னார் ரூவா கூலி கொடுக்கிறாரு. அது திருட்டு இல்லையா? கேட்டாக்கா அதாண்டா வழக்கங்கிறீங்க! அண்ணாமலை ரெட்டியார் ஊர்ல உள்ள அத்தனை கோயிலுக்கும் தர்மகர்த்தா. அதப்பத்தியெல்லாம் நீங்க யார்ரா பேசிறது? அப்படிம்பீங்க. என்ன பத்தியும் யாரும் பேசாதீங்க! சாமி காசு, சாமி காசுன்னு வாங்கின காசுல்லாம் தர்ம காசா நெனைச்சிக்கிட்டு அவர் ஊட்டு பெட்டிக்குள்ள கொண்டு வச்சிக்கிடார்ல்ல? பணத்தையெல்லாம் யார் போய் திருடிக்கிட்டு வாறது? நான் திருடுறேன் நான் திருடுறேன்னு சொல்றியே? ஊர்ல எவந்தான் திருடல. நான் எல்லோரோட திருட்டயும் பாத்துக்கிட்டே இருக்கிறவன். ஆனா எந்திருட்ட நான் திருடுவேன்னு உங்களால் நிரூபிக்க முடியாது.”

கட்டிய சங்கிலியெல்லாம் திராவகத்தில் உருகி வழிய மின்னல்போல திண்டி மறைகிறான்.ஆனால் அதற்குப்பிறகு அவன் உள்ளூரில் கை வைப்பதை விடுகிறான்.அடுத்த ஊர்களில் கொள்ளை தொடர்கிறான்.இப்போது ஊரே அவன் திறமையைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறது.”பாத்தியா எல்லோருக்கும் தண்ணி காட்டுறான் நம்ப திண்டி.

ஊர்ப்பொதுக்காரியத்துக்கு உதவி கேட்டு அவன் வீட்டு வாசலில் நிற்பவர்களாக ஊரார் மாறுவதோடு கதை முடிகிறது.

இக்கதை ஒரு மாயாஜாலக்கதைபோலப் பயணிக்கிறது.யாராலும் பிடிக்க முடியாத ஒரு திருடன் என்பது நம் தொன்மக்கதைகளில் வரும் கதாபாத்திரம்.அதைச் சமகாலத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஊராரின் சமூக உளவியலைத் திறந்து காட்டப் பயன்படுத்துகிறார் ப்ரகாஷ்.ஊர் மனதுக்கு என்று ஒரு நியாயமும் அறமும் இல்லை.பயன்படுத்தி எறியும் மனோபாவத்துடன் திண்டியை வேலை வாங்கி ஊதியம் தராமல் வெறும் சோற்றை மட்டும் போட்டு ஏமாற்றிய ஊர்,அவன் பெரியவனாகி அதிகமாகத் தின்னும் கட்டம் வரும்போது தூக்கி எறிகிறது.அவனுக்குச் சோறூட்டி வளர்த்த ஊர்ப்பெண்கள் மட்டும் எப்போதும் அவனைக் காப்பவர்களாக இருக்கிறார்கள்.இதில் காமம் இல்லை.ஆனால் கள்ளவூட்டுப் பயல் என்கிற தன் சாதி உணர்வு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தஞ்சைப்பகுதியின் கள்ளர்சாதி மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தை விமர்சிக்கும் கதையாக ‘தஞ்சையின் முதல் சுதந்திரப்போர்’ இருக்கிறது. சதா சர்வ காலமும் யாரேனும் ஒரு வம்சத்தின் கொள்ளைக்கும் கொடிய ஆட்சிக்கும் உள்ளாகிய வரலாறு கொண்ட தஞ்சையின் துயரத்தை அமர்சிங்கின் கடைசி நாட்களை முன் வைத்துப் பேசும் கதை இது.எந்த ஒரு நிலப்பரப்பிலும் வாழ்ந்த போர்க்கலையில் விற்பன்னர்களான (Warrior Caste எனப்படும்) சாதியாருக்கு எடுப்பார் கை அடியாட்களாக,இதுதான் கதியும் வரலாறும்.கள்ளர் குலத்தலைவர் ஆதிரியார் பேசும்காட்சி இதன் விளக்கமாக அமைகிறது.

 “மஹாராஜா! ஆறாயிரம் தலக்கெட்டா இருந்த நம்ம நாட்டுக் கள்ளக்குடி ஊருக்கு சேவுகம் செஞ்சு உசிர்வுட்டே முன்னூறு தலக்கெட்டா ஆயிப்போனது உங்களுக்கு தெரியாதுல! வடுக ஜனம் வந்தப்போ மடங்கமாட்டேன்னு செத்தது ஏராளம். அப்பறம் எந்த வடுக ஜனத்துக்கு எதுத்து நின்னானோ, அதே வடுக ஜனத்துகிட்டேயே போயி சண்டைக்கி ஆளு சேத்தப்போ சேனையில போயி சேந்தோம். தெலுங்கனுவளாவது ஆளுவானுவன்னு ராமநாதபுரம் தேவிப்பட்டிணம் மஹாதேவ பட்டணம் எல்லாம் கள்ளனுவ வடுகனுவளுக்கு தொணையா நின்னு சண்டை போட்டோம். ஆனா என்ன ஆச்சு? துலுக்கனும் நவாப்பும் வந்து வடக்க இருந்தும் தெக்கயிருந்தும் லட்சக்கணக்குல கள்ளனுவளோட சண்டை போட முடியாம ஓடுனானுவளா? ஒங்க மிராட்டியங்க வந்தப்போ திரும்பியும் வடுவ சனம் நெருப்புல பொசுங்கி மன்னர் கோட்டையிலும் மஹாதேவபட்டண கோட்டையிலயும் கொளுத்திகிட்டு வெள்ளக்காரனுக்கும் துலுக்கனுக்கும் ஈடுகுடுக்க முடியாம அழிஞ்சுதவ! அப்பவும் கள்ளன் தான் படை முழுக்க வெள்ளைக்காரனோட சண்டை போட்டான். நீங்க வந்திய!”

கள்ளர் சாதிப்பெருமித உணர்வைத் தூண்டி விட்டு ஆள்பவர் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் யுக்தியும் கதையில் வெளிச்சமிடப்படுகிறது.

தஞ்சை மண்ணின் வரலாற்றுக்குள் இயல்பாகப் பயணிக்கும் இக்கதை தஞ்சை ப்ரகாஷின் வரலாற்று உணர்வையும் வரலாற்று ஞானத்தையும் அடையாளம் காட்டும் முக்கியமான கதை.ஆட்சியைத்துறக்கும் நிலையில் நிற்கும் அமர்சிங்கின் அந்தக்கடைசி ஓரிரு தினங்களில் நிலைகொள்ளும் கதை ஒட்டுமொத்தத் தஞ்சை மண்ணின் வரலாற்றையும் நம் நினைவுகளில் மீட்டெடுக்கிறது. அமர்சிங் நள்ளிரவில் தனித்து நிற்கும் காட்சி விவரிக்கப்படும் விதம் மனங்கொள்ளத்தக்கது:

”இருள் விலகாத உப்பரிகையிலிருந்து இருளில் நம்பிக்கையை எதிர்பார்த்து நின்ற அமர்சிங்கை தேடிய ஆங்கில துருப்புகள் மழபாடியில் அலைந்துலைந்த அதே நேரத்தில் அமர்சிங்கை வீழ்த்துவதற்கு சென்ஜார்ஜ் கோட்டை நோக்கி ஸ்வாட்ஸ் பாதிரியாரும் அவரது குதிரை வண்டியும் புறப்பட்டு இருளில் விரைந்தது. தார்சா உப்பரிகை சற்று உயரமானது. துளஜா மஹாராஜா கட்டிய தூபி! அங்கிருந்து சீரங்கம் ரங்கநாதர் விமான கோபுரம் தெரியும். தஞ்சாவூர் இருளில் முணகுவது அமர்சிங்கின் நெஞ்சுக்கு மட்டும் கேட்டது. வெள்ளைப்பறங்கியர் சிதைத்த தஞ்சாவூர் காவேரி கிளை விரித்து கால் ஊன்றி பாயும் வண்டல் விளைச்சல் பூமி விளைந்ததை எல்லாம் கேட்கிறார்கள் வெள்ளைக் கொள்ளைக்காரர்கள்!

ஒரு பக்கம் ஆர்காடு நவாப் படையுடன் பசுமையான விளைச்சலை அள்ளிப் போக சூறையாட வருகிறான். மறுபுறம் பட்டாணி முஸ்லீம்கள்! தரங்கம் பாடியிலிருந்து போர்த்துகீசியர்கள் வியாபாரம் என்ற பெயரில் தஞ்சையை சூறை உடைக்கிறார்கள். மேலே வடக்கு மராட்டியர்கள் மிரட்டி மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள். இல்லையென்றால் கொள்ளை கொலை கொளுத்தி எரிய விடுகிறார்கள். ஹா! மறுபுறம் சின்ன ஜமீன்களும் தஞ்சாவூரை எரித்து கொள்ளையிடுகின்றன. தடி எடுத்தவன் தண்டல்காரன். தஞ்சை ஒரு விவசாய பூமி……...”

இருள்பிரியாத தஞ்சை அதன் மாயாத நெல்வளம் குறையாத நீர்வளம் எல்லாம் வெள்ளைக் கொள்ளையராலும் துரானியராலும் எப்படி எல்லாம் நாசம் ஆயிற்று. பெண்களைத் தேடித்தேடி கற்பழித்தார்கள். வந்தவன் எல்லாம் வீடு வீடாகப் புகுந்து வேட்டுத்தீர்த்து கொன்றார்கள். கோவில்களைத் துரானிய பட்டாளங்கள் சூறையிட்டன. நாயக்கர் காலத்து தர்மங்கள் யாவும் அடியோடு முடங்கின. சத்திரங்கள் சாவடிகள் எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். இடுப்பு கௌபீனம் /கோமணம் ஒன்று தவிர எல்லாவற்றையும் கொள்ளையிட்டனர். அமர்சிங்கும் துளஜாவும் ராஜ்ய பாரம் ஏற்ற பின்னர்தான் இந்தப் பத்தாண்டுகளாக ! வெள்ளைப் பறங்கியர் கூட அஞ்சி விலகி நிற்க ஹிந்து மராட்டா தஞ்சாவூர் எழுந்து தர்மத்துடன் காத்து நின்றது. பாடசாலைகள் திறக்கப்பட்டன. தர்மசாலைகள் இயங்கின. அமர்சிங்கின் துணிச்சலில் சூறையாட முடியாமல் விரட்டப்பட்ட எதிரிகள் கண்கள் கரிக்க மீண்டும் தஞ்சை செழித்தது.

வந்தவன் போனவனால் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைக்கப்பட்டு ஒட்டச் சுரண்டப்பட்ட  பின்னரும் எஞ்சி நிற்கும் மிச்சம் மீதிதான் நாம் இன்று காணும் ’தமிழக நெற்களஞ்சியமாம்’ தஞ்சை பூமி என்கிற உணர்வு நம்மை ஆட்கொண்டு பெருமூச்செறிகிறோம்.ப்ரகாஷின் கலையின் வெற்றி இது.

இன்னொரு வரலாற்றுக்கதை “ஆல மண்டபம்” தமிழ்வாழ்வையே ஒரு ஆலமரமாக வரித்து எழுதப்பட்ட ஒரு குறியீட்டுக்கதையாக விரியும் இக்கதையில் உயிருள்ள ஓர் ஆலமரமே காலப்போக்கில் ஒரு மண்டபமாக அதன் விழுதுகளே ஆயிரம்கால்களாக,தூண்களாக மாறி அதைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பதான கற்பனையில் தொடர்கிறது.கீழ்வரும் இரு பத்திகள் இக்கதை சொல்லிச்செல்லும் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட இரு கீற்றுகள்:

”பத்தாயிரம் வருஷமா எந்த மரம் நிக்குமாம்? பயலுவளுக்கு அதான் பெரிய்ய கொண்டாட்டமாய் போச்சு. கல்லும் மண்ணும் தோணாத காலத்துலயே கட்டுனதுன்னு எவனோ சொல்லி வைக்ய, அவனவனுக்கும் மயக்கம் தாங்கல. மண்டபம் இப்பமும் மரம் மாதிரியும் கோயில் மாதிரியும் அரண்மனை மாதிரியும் காச்சிகுடுக்குது. அஞ்ச அஞ்ச ஜனங்க பூந்து குடும்பம் நடத்துதுவொ. ஒரு ஊரு ஜனம்ல்லெ பல ஊரு பலசாதி கூட்டம். எடையனுவ தொடையனுவ கடையவனுவ பாப்பானுவ கூட்டம் திமிறி கிட்டு பிரிஞ்சு மண்டபத்துக்குள்ள பொழைக்கிதுவல்லெ? எத்தினு பொசலு, எத்தினி சூறக்காத்து சொழலு, வெள்ளம், தீன்னு எத்தினி விக்கினம் வெள்ளத்துல புடுங்கீட்டு அரிச்சி ஓடிப் பள்ளமாப் போனப்பவும் ஆலமண்டபம் அப்புடியே நிக்கிதே! எத்தனை பேரு வெறகு தறிச்சி, எத்தனை பேரு கெளை வெட்டி, உத்திரம் பண்ணி, ஊடு கட்டி, அடிமரத்தெக் கூறு போட்டு தேருக்கும், சாமி ரதத்துக்கும், ஊஞ்சலுக்கும் எத்தனை விழுதெ வெட்டிக் கொண்டு….”

அப்பப்ப ஆழ்வானுவ நாயன்மாருங்கன்னு மண்டபத்துக்குள்ள விதானத்தை தாங்குறாப்ல நெறைய தேக்கந்தூணுகளெக் கொண்டாந்து நட்டாலும் தூணு நிக்கலியே! மண்டபம் சாஞ்சு கோணலா அஞ்சஞ்சா பொளந்து கிட்டு நிக்கிது அப்படீங்கிறதெ யாரும் ஒண்ணும் பண்ணலை. சமணனுவ புத்தனுவ சோனகன்க கிரேக்க யவன ரோமனுங்க சீனமிலேச்சனுவன்னு எத்தினியோ பயலுவ வந்து மண்டபத்துலதான் போனானுவ! ஆனா மரத்து உசிரு பெய்கிட்டேதானே இருக்கு? மரம் உசிர விடும்னு தோணுறப்ப எல்லாம் எவனாவுது கவிஞனா வந்து மண்டபமே நில்ன்னு பாடி வெச்சுட்டுப் பெய்கிட்டே இருந்தானுவளா?”

தமிழ்வாழ்வின் வரலாற்றை இப்படிச் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று ப்ரகாஷுக்குத் தோன்றியிருக்கிறது.தமிழர்கள் தம் வாழ்வுகுறித்தும் வரலாறு குறித்தும் கொண்டிருந்த எண்ணற்ற கற்பிதங்கள்,வீண் பெருமிதங்கள் எல்லாவற்றையும் நாட்டார் வழக்காற்று மொழியில் கலைத்துச் சொல்கிறார் ப்ரகாஷ்.

‘நியூசென்ஸ்’ என்கிற கதையில் வேலையற்ற இளைஞன் ஒருவனின் அதீதச் செயல்பாடுகள் அவனை நியூசென்ஸ் கேஸில் உள்ளே தள்ள வைக்கின்றன.ஆனால் ப்ரகாஷ் இந்த சமூகம்தான் இதன் போக்குதான் நியூசென்ஸ் ஆக இருப்பதாகவும் அது இத்தகைய இளைஞர்கள் உருவாக அடிப்படைக்காரணமாக இருப்பதாகவும் முழுமைக்குள் ஒரு பகுதியாக அந்த இளைஞனின் கதையைக் கொண்டு நிறுத்துகிறார்.இது முக்கியமான ஒரு கோணம்.பொருள் முதல்வாதக் கோணம்.

’வடிகால் வாரியம், கதை உண்மையில் தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராகத் தனியாகப் போராடிச் சாகும் ராமுப்பாட்டியின் கதை.நடுத்தர வர்க்கத்தினர் தண்ணீர்க்கொள்ளை பற்றி வெறுமே புலம்பிக் கொண்டிருக்க, ராமுப்பாட்டிதான் இறுதிவரை போராடுகிறாள்.சாகடிக்கப்படுகிறாள்.ஏப்ரல் 1992 இல் ப்ரகாஷ் இக்கதையை எழுதியிருக்கிறார்.காவிரிபாயும் தஞ்சை மண்ணில் இந்தத் தண்ணீர் வியாபாரிகளால் தண்ணீர்ப்பஞ்சம் வரும் என்பதை அன்றைக்கே எழுதியிருக்கிறார்.பேசப்பட வேண்டிய கதை இது.  

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ் - வாசகசாலை பதிப்பகம் | panuval.com

2.காமம் போற்றும் கதைகள் 

காமத்தைப் பாடுபொருளாகக் கொண்டு எழுதிய முதல் தமிழ்ப்படைப்பாளி என ப்ரகாஷைச் சொல்ல முடியாது.தொ.மு.சி.ரகுநாதனின்  முதல் நாவலான `முதலிரவு‘, `காம உணர்ச்சி, மனிதனின் இதய உணர்ச்சியை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான உணர்ச்சிஎன்ற பழங்கொள்கையைத் தவிடுபொடியாக்குவதற்காக எழுதப்பட்டது. அன்று அது தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.ரகுநாதனின் சிறுகதைகளான ’ஆனைத்தீ’,’வென்றிலன் என்றபோதும்’,’சுருதி பேதம்’ போன்ற கதைகளும் புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ ந.பிச்சமூர்த்தியின் ‘பதினெட்டாம் பெருக்கு’ தி.ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தனின்  பல நவீன கதைகள் எனக் காமம் பாடிய கதைகள் ஏற்கனவே நம்மிடம் உண்டு.

தஞ்சை ப்ரகாஷ் எங்கே வேறுபடுகிறார் அல்லது தனித்து நிற்கிறார் எனில் ,அவருடைய படைப்புலகின் மைய அச்சாகவே காமத்தைக் கைக்கொண்டிருப்பதில்தான்.காமத்தின் பாடலை விதவிதமான ராகங்களிலும் வர்ண மெட்டுக்களிலும் பாடித் தீர்த்திருக்கிறார் ப்ரகாஷ்.

‘அங்கிள்’ கதையில் மிஷன் தெருவில் வசிக்கும் சாளிப்பிள்ளை என்கிற சாள்ஸ் பிள்ளை பெண்களைப் பொறுத்தவரை பேதமில்லாத மனிதர்.ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவம் பூண்டவர்.பதினெட்டு வயதில் இண்டர் பாஸ் செய்தபின் அவர் போட்ட ஆட்டங்களுக்கு அளவே இல்லை.பத்தோடு பதினொன்றாக பக்கத்து வீட்டு ஏழைப்பெண் குழந்தை லிடியின் மீது கை வைக்கிறார்.அவளுக்குப் பதினெட்டு வயது.இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்து தனித்திருக்கும் கிழவர்.விகற்பமின்றி அங்கிள் அங்கிள் என்று அவரைச் சுற்றி வரும் லிடியைச் சேர்த்தணைக்கிறார்.

“வாண்டாம் அங்கிள்!”

”வாண்டாங்கிள்”

“உட்டுடுங்களேன்!உட்டுடுங்களேன்!” 

என்று துடித்து அவரிடமிருந்து தப்பி ஓடுகிறாள் லிடி.இந்த சின்னக்கதறல் பின்னர் அவருடைய மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.”நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும் ,உன் மாமிசத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு.இளவயதும் வாலிபமும் மாயையே.” என்கிற தேவ வாக்கியம் அவரைத் தன் செயலுக்காகக் குற்ற உணர்வு கொள்ள வைக்கிறது.லிடி என்னை மன்னிச்சுடு என்று மானசீகமாக அழுகிறார். லிடி அவள் வயதுப்பையன் பாண்டியுடன் உறவு கொண்டு கர்ப்பமுற்று நிற்கிறாள். பாண்டிப் பயலை அடித்துத் துரத்தியதும் சாளிப்பிள்ளைதான்.லிடியின் ஏழைத்தாய் அவளை அழைத்துக் கொண்டு வந்து சாளிப்பிள்ளையிடம் ஒப்படைக்கிறாள்.நீங்க அவளை என்ன பண்ணுவீங்கட்டு எனக்குத் தெரியாது மாமா..ஆனா,ஒங்ககிட்ட இவளெ உட்டுட்டுப் போறேன்.”

“மெதுவாக நடந்து சென்று சுவரோடு சாய்ந்து கிடந்து  விம்மிக்கொண்டிருந்த லிடியை இரு கைகளையும் கொடுத்துத் தூக்கி நிறுத்தினார்.அவள் கண்களைப் பார்த்தார்.கண்ணீர் பொங்கி வடிந்து கொண்டே இருந்தது.அவள் அவர் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தாள்-அலை பொங்கி மோதிப் புரண்டது.”அங்கிள்” –ஒரு விம்மலுடன் அவரைத் தழுவிக்கொண்டாள்.இந்தப் பிணைப்பில் அந்த வயசு செத்தது!இந்த அணைப்பில்’ அந்த சுகம் ‘ செத்தது.இந்த மடியில் அந்த அமைதி அமர்ந்தது.

“அங்கிள்”-மீண்டும் ஒரு விசும்பல்.

“வாண்டாங்கிள்..உட்டுடுங்களேன்..உட்டுடுங்களேன்..” என்று கதைக்குள் கேட்கும் சின்னக்கதறல் கதையை வாசித்து முடித்தபிறகும் வாசக மனதில் மோதிக்கொண்டே இருக்கிறது.இன்றைய பொள்ளாச்சியில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்களின் “அடிக்காதிங்க அண்ணா..” என்கிற கதறலுடன் வந்து இணைகிறது லிடியின் குரல்.

ஆனால் இக்கதையில் இயங்கும் ஆணின் குற்ற மனம் மற்றும் கிளர்ந்தெழும் நியாய உணர்வு ப்ரகாஷின் எல்லாக் காமம்சார் கதைகளிலும் இயங்கிவிடவில்லை.

“சுயம்” கதையில் வித்யாசாகர் என்கிற சிற்பி எட்டு வயதே ஆன கான்வெண்ட் செல்லும் சிறுமியான கார்த்தியாயினி மீது காமம் கொள்கிறார்.அது குறித்து அவருக்குக் குற்ற மனம் எதுவும் இல்லை.அந்த எட்டு வயதுச் சிறுமியைப் பார்க்கும்போது நெஞ்சுக்குள் ஒலிகும்’ஐயோ’ எனும் குரல் யாருக்குக் கேட்கப்போகிறது.தெய்வ உருவங்களிலிருந்து மனித உருவங்களைத்தான் தான் செதுக்கி எடுப்பதாகக் கருதினார்.இந்த எட்டு வயதுப்பெண்ணைச் சிற்பமாக வடித்துவிட முடியாத சவால் அவள் பின்னால் அவரை ஓட வைப்பதாகக் கருதுகிறார்.

ஆனால் கதை அப்படியே சிற்பம், கலை என மட்டும் பாய்ந்துவிடாமல் அச்சிறுமியின் மீது காமம் கொள்ளும் மனநிலை பற்றிப் பேசுகிறது.

”இன்னும் கொஞ்ச நாளில் கார்த்தியாயினியின் கான்வென்ட் கவுன் பெரியதாய் விரிந்து உயர்ந்துவிடும். இந்த அழகு சுயநலமாகும். தனக்கென்று முட்டிக் கனியும் கூர்மையும், ஆழமும் உடலை வடிக்கும் யாரோ ஒருவனின் செதுக்கலில் நுணுங்கிச் சிதறும் விரகத்தில் பசலை படரும். உடலும் உள்ளமும் கன்னத்தில் விண்டு போகும். வித்யாசாகருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. தெருவிலிருந்த ரிக்க்ஷாவிலிருந்து அவரை நோக்கி அல்லஇந்த உலகையே விரிந்த ஆச்சர்யத்துடன் பெருகிய கண்களுடன், அகன்ற நெஞ்சத்தின் ஆச்சர்யக் கனவுகளுடன், எல்லாவற்றையும் பார்த்து, வியந்து கொண்டே இருந்த கார்த்தியாயினியை இன்னும் காமக் கண்களுடனும், கோணல் மாணலாக தனது குதர்க்க புத்தியுடனும், அந்த எட்டு வயதுச் சிறுமியை அள்ளி விழுங்கி விடுகிற காமத்துடனும், கரை கடந்த அன்புடனும் பார்த்த அவரை அந்தச் சிறுமி புரிந்து கொண்டாளா? என்பது மற்றவர்களுக்குச் சந்தேகமாயிருக்கலாம். ஆனால் அறிவறியாப் பருவத்தில்தான் விந்தைகள் நேர்கின்றன. அவள் அவரை அனுகிரகித்தாள். தீச்சுடர் போன்ற அந்த உதடுகள் கேலியாகச் சுழித்து சிரித்தன. அவள் கண்களிலிருந்து பெருகி வரும் பசியை அவர் மட்டுமே அனுபவித்தார். நிரம்பிய புன்னகை தனித்தனியாய் திவலைகளாய் மாறி படர்ந்து வந்து அவரை அடைந்தன. அந்த மோகனச் சிரிப்பின் மாயம் புரியவிலலை. புரிந்திருந்தால்தான் அவர் உலகை வீழ்த்தியிருப்பாரே…! அவள் சிரிப்பில், அவள் கண்களில் கனிந்த திருட்டுப் பழம் சொரிந்தது. வித்யாசாகரின் நரம்புகள் முறுக்கேறின. மூளை செத்தது. உடலும் மனமும் ஒன்றையொன்று பாம்பாய் பின்ன ஒன்றையொன்று கொத்திக் கொண்டு விஷம் கக்கின. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் பக்தன் போல் எழுந்து அவளை நோக்கி விழப்போனார்

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கென போக்சோ சட்டம் போட வேண்டிய நிலையில் இன்றைய இந்தியா வளர்ந்திருக்கிறது.சிறு பெண்ணானாலும் காமம் கொள்ளும் மனநிலையை ஆண் அடைகிறான் என்கிற உண்மை இக்கதையில் வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 13 வயதுப்பெண்ணின் மீது மையல் கொள்ளும் கதையை(அழியாச்சுடர்) மௌனி எழுதியிருக்கிறார்.மௌனி காலத்தில் குழந்தைத் திருமணங்கள் இயல்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையின் வழி அன்றைய மரபின் பிடிக்குள் நின்ற மௌனியின் ஆண் மனநிலையைப் புரிந்துகொள்கிறோம்.90 களில் கதை எழுதும் ப்ரகாஷ் சமூகத்தின் ஆண் மைய உளவியலைப் புரிந்துகொண்டு எழுதினாரா என்கிற கேள்வி எழுகிறது.இக்கதை எந்த இதழிலும் வெளிவரவில்லை.அவர் அனுப்பவில்லையா? யாரும் பிரசுரிக்கவில்லையா என்பது தெரியவில்லை. எப்படியானாலும் வித்யாசாகர் வாகனத்தில் அடிபட்டுச் சாவதாகக் கதையை முடித்திருந்தாலும் ” அவள் சிரிப்பில், அவள் கண்களில் கனிந்த திருட்டுப் பழம் சொரிந்தது.”என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை பற்றி எழுதி வைப்பதை ஏற்க இயலவில்லை.ஆண்மனதின் வக்கிரம் தோலுறிக்கப்பட்டிருப்பது சரி.ஆனால் அக்குழந்தையும் அனுக்கிரகித்ததாக எழுதியது(அவள் கண்களிலிருந்து பெருகி வரும் பசியை அவர் மட்டுமே அனுபவித்தார்  என்றெல்லாம் எழுதியது)எப்படி சரியாகும்? “இதையெல்லாம் எழுத வேண்டுமா என்று கேட்காதீர்கள்.இதெல்லாம் இந்த சமூகத்தில் ஏன் இருக்கிறது என்று கேளுங்கள்” என்கிற ஜி.நாகராஜனின் பிரகடனத்திற்குள் இதைக் கொண்டுசேர்த்துச் சமாதானம் கொள்ள முடியவில்லை.

திருமணத்துக்கு அப்பாலான பாலுறவு,அதை ஒட்டி எழுகின்ற உறவுச் சிக்கல்கள் பற்றி ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்,நாகம், அஞ்சுமாடி, புலன் விசாரணை,எரித்ததும் புதைத்ததும் ஆகிய கதைகள் பேசுகின்றன.

’சோடியம் விளக்குகளின் கீழே’ ஒரு பாலியல் தொழிலாளியான அகிலாவின் பொழுதுகளைப் பேசினாலும் கதையின் மையமாக இருப்பது வெளிச்சமும் இருட்டும்.பங்களாக்களில் வாழ்பவருக்கும் அங்கு சென்று

தன் உடலைத் தருபவளாக அகிலா இருந்தாலும் அவள் வாழ்வது எப்போதும் தெருவில்தான்.அவள் ஒரு ‘தெருப்பெண்’ என்பதாகத்தான் தன்னைத் தான்  அடையாளம் காண்கிறாள்.ஆகவே அவள் தொழிலுக்கு இருட்டே துணை ஆகிறது.தஞ்சாவூரில் நிர்வாகம் ஏற்பாடு செய்து பொருத்திய சோடியம் விளக்குகள் எங்கும் ஒரு மஞ்சல் நிற வெளிச்சத்தை வாரி வழங்கி அவளுக்கான இருட்டைத் துரத்தியடிக்கிறது.அவள் தொழில் இல்லாமல் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படுகிறது.சோடியம் விளக்குகளைக் கல்லால் அடித்து அவள் உடைப்பதோடு கதை முடிகிறது.பாலியல் தொழிலாளி பற்றிய கதையானாலும் இக்கதை காவல்துறை,நீதிமன்றம்,ஆணாதிக்க சமூகத்தின் பல்லிளிப்பு என்று கூர்மையான சமூக விமர்சனமாக விரிகிறது.

’மேபல்’ கதை ஒரு காவியம்போலப் படைக்கப்பட்ட கதை.தான் சொல்வதை மட்டுமே குடும்பத்தில் எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என்று உத்தரவு போடும் முன்னாள் ராணுவத்தினரான ஒரு தகப்பன்.பிள்ளைகள் விருப்பப்படி அல்லாமல் தன் முடிவுப்படி திருமணங்களை நடத்தி வைக்கிறார்.எல்லாப்பிள்ளைகளும் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள்.கடைசி மகளான ‘மேபல்’ மட்டும்-அவளுக்கும் ஒரு காதலன் உண்டு என்றாலும்- கடைசிவரை அப்பாவுடனே இருக்கிறாள். தகப்பனுக்கும் மகளுக்கும் இடையில் அப்படி ஓர் ஈர்ப்பு.இதைக் காமம் என்கிற தளத்துக்கு ப்ரகாஷ் எடுத்துச் செல்லவில்லை.ஒரு வினோதமான பிணைப்பு இருப்பதை நுட்பமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் ‘அழகம்மாள்’ கதை போல மனித மனதின் பிடிபடாப் புதிர்களில் ஒன்றைப் பேசும் கதை ‘மேபல்’.இதைப்போலவே ‘பேய்க்கவிதை’ யில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் ஏற்படும் உடல்சார் ஈர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது.பிறழ்வின் வகைகள் அத்தனையையும் பேசிப்பார்த்துவிடவேண்டும் என்று ப்ரகாஷ் தீர்மானித்ததுபோல விதவிதமாக எழுதிச்செல்கிறார்.

‘இருட்டின் நிறங்கள்’ கதை பெண் தன்மையுள்ள கல்லூரி மாணவன் ஒருவனை சமூகம் எப்படி பாலியல் தொல்லை கொடுக்கிறது,எப்படிப் பயன் படுத்தி நுகர்கிறது என்பதை வலி மிகுந்த அவனுடைய குரலில் சொல்கிறது.கல்லூரி விடுதியில் அவனுக்குப் பெயர் ‘வார்டன் பொண்டாட்டி’.வார்டன் லாசரஸ்ஸின் அக்கா டோரா ஆண்டி அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று கூடவே வைத்துக்கொள்கிறாள்.மூச்சு முட்டுது..மூச்சு முட்டுது..ஆண்ட்டியோட கட்டில்ல என்று கதை முடியும்.பெண்மீதான பாலியல் வன்முறையின் நிழல் இத்தகைய ஆண் உடல் மீதும் படரும் சமூக யதார்த்தம், உறைக்கும் விதமாகப் பேசப்பட்டுள்ளது.

3.கண்ணனும் கோபியரும்

ஆணைக் கண்ணனாகப் படைத்து கண்ணனைக் காமுற்று அவன் பின்னால்  சுற்றித்திரியும் கோபியராகப் பெண்களைப் படைக்கும் ஓர் உந்துதல் தஞ்சை ப்ரகாஷின் நாவல்களில் போலவே சில சிறுகதைகளிலும் வெளிப்படுவதைக் காண்கிறோம்.ஆண் மையப் பார்வையுடன் தான் ப்ரகாஷ் கதைகளைப் படைக்கிறார் என்று   விமர்சிக்க இடம் தருபவை இக்கதைகள்.பெண்ணின் காமத்தைப் பேசக்கூடாதா என்பதல்ல இங்கு பிரச்னை.பின்னால் திரிபவர்களாகப் படைப்பதுதான் கேள்வி.

கடைசிக்கட்டி மாம்பழம்,பூகோஸ்,அகழ்மோடு,பொறா ஷேக்கு ஆகிய கதைகள் இந்த ரகமானவை.

இக்கதைகளில் ’கடைசிக்கட்டி மாம்பழம்’ ஒரு செவ்வியல் முழுமையுடன் சுடரும் கதை.வீட்டின் ஒரே ஆண் ஆன குடும்பத்தலைவன் இறந்து போக ‘ஆண் துணை இல்லாத வீட்டில்’ அடியெடுத்து வைக்கும் கலியராஜன் அந்த வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுச் செய்கிறான்.அவனுக்கென ஊரில் ஒரு சொந்த வீடும் உத்தியோகமும் இருந்தாலும் ராத்திரி தூங்க மட்டுமே அந்த வீட்டுக்குப் போவான்.மற்ற எல்லா நேரமும் ஒன்பது பெண்குழந்தைகளும் தாய் மதுரம்பாளும் ஆக பத்துப் பெண்கள் உள்ள இந்த வீட்டிலேயே கிடப்பான்.தர்மு,லலிதா,நாகலஷ்மி,ஜோதி,ராஜலஷ்மி,சுநந்தா என ஒன்பது பெண்களும் கலியராஜனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு என்னைக் கட்டிக்கோ மாமா என்று கொஞ்சுகிறவர்களாக இருக்கிறார்கள்.கதையில் சஸ்பென்ஸாக இருப்பது அவன் எந்தப்பெண்ணைக் கட்டிக்கப்போகிறான் என்பதாகவே இருக்கிறது. ஆனால் அவன் ஒரு தகப்பனைப் போலப் பொறுப்பாக இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கிறான்.பத்துப்பிள்ளை பெற்ற மதுராம்பாள் மீதுதான் காதலும் காமமும் அவன் கொண்டிருப்பதைக் கடைசியில் போட்டு உடைக்கிறான்.அவளுக்கும் அது தெரியும்.ஆனால் தனக்குள் மூடி வைத்திருக்கிறாள்.அவன் இந்த வீட்டுக்குள் நுழையும் முன்பே அவனை அவள் ‘ஏறிட்டுப் பார்த்தவள்’தான்.

‘தினமும் சிங்கப்பெருமாள் குளத்தில் குளிக்கும்போது அவனைப் பார்க்கிறவள்தான் இவள்.ஒரு பார்வையிலேயே பெண்கள் ஆம்பளைகளைக் கண்டுபிடித்து விடுவார்கள்.கலியராஜனை மிக நன்றாகப் புரிந்தது மதுரம்பாளுக்குத்தான்.அவனுடைய தோற்றமே வித்தியாசமாக இருந்தது அவளுக்கு.மதுரத்துக்கும் அவனுக்கும் 20 வயது வித்தியாசமிருந்தாலும் ,ஒரு ஆம்பிளைய இன்னும் திரும்பிப்பார்க்க அவளுக்கு இருந்த திமிரைப்பற்றி அவளே வருத்தப்பட்டு,எட்டு நாள் விரதமிருந்து ,தண்ணீரோட அம்பாளுக்கு வேண்டுதல் செய்து விரதத்தை முடிச்சது இன்னும் ஞாபகமிருக்கு” என்று கதையின் துவக்கத்தில் ப்ரகாஷ் எழுதிச் செல்லும் வரிகளில் கதையின் முடிச்சு மறைந்திருக்கிறது.

காரணம் பிடிபடாத வினோத ஈர்ப்புகள் மனித வாழ்வில் இருக்கும்.அதில் இது ஒரு வகை.இப்படி ஒரு வரியில் கதைச்சுருக்கம் சொன்னாலும், வாசித்து அனுபவிக்க வேண்டிய – பாத்திரப்படைப்பிலும் கதை சொன்ன விதத்திலும் பல அழகுகளும் நுட்பங்களும் உள்ள  முத்திரை பதித்த கதை இது.

’பூகோஸ்’ என்கிற கதை  ஓவியன் வித்யாசாகருக்கு மாடலாக பணியாற்ற முன் வரும் ஏகப்ஜானாவின் மனைவி மீரா மெல்ல மெல்ல ஓவியனின் மீது காமுற்று,கலையாக மட்டுமே அவள் உடம்பைப்பார்க்கும்  அவனைத் தன்பால் இழுக்கும் கதை.’அவர் விரல்கள் அவள் உடலைக் காகிதத்தில் ஸ்கெட்ச் ஆகக் கீறக் கீற அவள் உடல் சிலிர்த்துத் தன்னை இழக்க ஆரம்பிக்கிறாள். அவள்தான் முதலில் அவனை காமத்தின் பாதையில் இழுக்கிறாள்.”அவர் வழுவிப் பிரிய முயன்ற போது மீரா வித்யாசாகரை முறுக்கித் தழுவி தழுவி பாய்ந்து ..வியர்வை ரத்தமாய் வடிய வடியப் பாய்ந்து மோதி மோதி…” 

இன்னொரு கண்ணனாக,கோபியர் கொஞ்சும் ரமணனாக,இன்னொரு வித்யாசாகர் ‘அகழ்மோடு’ நெடுங்கதையில் வருகிறார்.சின்னா என்கிற தோட்டிப் பெண்ணை அடைய அந்தக் காலனியில் பல ஆண்கள் முயன்று தோற்றுக்கொண்டிருக்க, அவளோ வித்யாசாகரைத்தான் நாடுகிறாள்.இந்தக் கதையில் பெண்களை அடமானம் வைத்துப் பணம் பெறும் வழக்கமுள்ள, துயர்மிக்க ஒரு காலனி வாழ்க்கை கதையின் பின் திரையாக அமைகிறது.ஆனால் அதை விவரிப்பது அல்லது அப்பொருளியல் வாழ்வு குறித்துப் பேசுவது  ப்ரகாஷின் நோக்கமல்ல என்பதால் அத்திசையில் பயணிக்காமல் அந்தப் பின் திரையிலும் காமத்தின் வர்ணங்களையே தீட்டுகிறார்.உயர்குலத்து மனைவி லலிதாவைப் பிரிந்து இந்தக் காலனியில் ஒரு சிமிண்டுக்குழாய்க்குள் சின்னாவுடன் உறவு கொண்டு வாழ்கிறார் அந்த வித்யாசாகர்.

 “ நிஜமாவே ஆச்சரியத்தில் அவளைப் பார்த்து அயர்ந்து போனார் வித்யாசாகர்!

அவளது கொச்சைத் தெலுங்குதோட்டிப்பன்றிவாடை. அற்புதமான உடம்புஆச்சர்யமான உயிர்வேகமான வெறியும் தாகமும். எல்லாவற்றையும் அமுக்கிக் கீழே அடக்கும் சுடர் போன்ற அவளது இளமையும் புத்தியும் !

எல்லா ரகசியங்களையும் உடைத்து இந்தா நான்டா! எல்லாம் நான்டா என்று அள்ளி அள்ளித்தந்த இந்த ரகசியம் இந்த இளமையுடையதுதானா?! அது மட்டுமல்ல இவளுக்கும் அவருக்கும் வேறு எந்தக் காரணமும் இல்லாமலே இணைந்த ரகசியம் எது? லலிதாவை விட்டு வந்ததே இதே காரணத்துக்காக அல்லவா? லலிதாவும் இப்படித்தான் நேசித்தாள் அல்லவா ! ஆனால் அவள் ராஜகுமாரி! அந்தஸ்த்தோடு ஜாதியோடு முறையோடு சிரமமாய்த்தான் எதையும் செய்யக் கூடும் அவளால் இது முடியாது! கூடாது. சின்னாவின் கூர்மையும் வேகமும் முரட்டுத் தனமும் சின்னாவை கெடுக்கவில்லை. எல்லாவற்றிலும் அவளுக்கு வித்தியாசாகர்தான் வேணும்! வேறு ஒண்ணும் வேண்டாம் எல்லாமே வித்யாசாகருக்குத் தான். இவள் ராஜகுமாரி அல்ல தெரு போதும் இவளுக்கு! இருட்டு போதும்! மண்டபத்தில் அகழி ஆற்று புதாற்றுக் காற்றில் கிடந்த வெற்றுடம்பை வந்து எழுப்பியவள். அவளேதான் சின்னா!  ”

’கள்ளம்’ நாவலில் வரும் பத்மராஜுவை நினைவூட்டும் ஒரு கதாபாத்திரமாக இந்த வித்யாசாகர் படைக்கப்பட்டிருக்கிறார்.எளிய மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் காமத்தைப் பிரதான அம்சமாகக் கவனப்படுத்துகிறார் ப்ரகாஷ் பக்கவாத்தியமாக அவர் வாசிக்கும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வு குறித்த பதிவுகள் இதை முன்னிலைப்படுத்தி எழுதாமல் போனாரே என்று நினைக்க வைக்கின்றன.

Thadam Vikatan - 01 January 2018 - கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன் | Life history and creations of Thanjai Prakash - Vikatan Thadam

4.மீறும் பெண்கள்

நம் சமூகம் வார்த்தெடுக்க நினைக்கும் வடிவத்தை,சட்டகத்தை உதறிச் சுய அடையாளத்துடன் நிற்கத் துடிக்கும் மூன்று பெண்களை ப்ரகாஷ் படைத்திருப்பது கவனத்துக்குரியது.”பள்ளத்தாக்கு” கதையில் வரும் மைதிலி, ”பற்றி எரிந்த தென்னை மரம்” கதையின் லோச்சனா அப்புறம் “உம்பளாயி” கதையின் உம்பளாயி.

ஊருக்கு வெளியே காவேரி ஆற்றுக்கு அந்தப்புறம் புத்தாற்றின் சரிவில் யாரும் அண்டாத ஒரு தனி வீட்டில் தனித்து ஒண்டியாக வாழும் மைதிலி தனக்கென சொந்த ருசிகள் கொண்டவள்.

“லாமினேட்டட் மேஜைப்பரப்பில் ஆவி பறக்கும் சூப்!வத்தக்குழம்பு!நெய்!புட்டிங்!சம்பந்தமில்லாத ருசிகள்!இஷ்டம் போலக் கொறித்துத் தள்ளுவாள்.ஒருத்திக்குச் சமைத்தது.சூப்பும் வத்தக்குழம்பும் புட்டிங்கும் இல்லாவிட்டால் ஸாண்ட்விச்சும் ரசமும்!”

சாப்பாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் தனக்கென வித்தியாசமான ருசிகள் கொண்டவள்.அப்பாவால் வளர்க்கப்பட்ட அவள் சுதந்திரமாக வளர்ந்தாள்.அப்பா எதையும் அவள் மீது திணிக்காமல் அவளுக்கான வாழ்வை அவளே தேர்ந்து கொள்ளப் பழக்கியிருந்தாள்.அந்த சுதந்திரத்திலிருந்து அவளால் விடுபட முடியவில்லை.பகலில் வேலைக்குப் போய்விட்டு இரவிலும் விடுமுறை நாட்களிலும் மட்டும் அந்தப்பள்ளத்தாக்கு வீட்டில் தனித்திருப்பாள்.அவளைப்பொருத்தவரை அவள் இதுவரை சந்தித்த ஆண்களெல்லாம் புழுக்கள்.புழுக்களுடன் ஜீவிக்க முடியுமா? ஆனாலும் அவளுடைய அப்பா அவளிடத்திற்கு மாப்பிள்ளைகளையும் ஜாதகங்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

நாலு கேள்வியில் அந்த மாப்பிள்ளைகள் புழுக்களாக நெளிவதைக் கண்டு பிடித்துவிடுவாள் மைதிலி.யாரையாவது ஒரு பையனை லவ் பண்ணக்கூடாதா என்று அவளுடைய அப்பாவே கேட்டார் ஒருநாள்.அப்பா பரவாயில்லையே என்று ஒரு நிமிடம் நினைத்தாள்.ஆனால் அடுத்த நிமிடம் அப்பா புழுவாகி நின்றார்.” லவ் பண்றது தப்பு இல்லே!ஆனா நம்மளவளா இருக்கணும்.கோத்திரமறிஞ்சு பொண்ணைக்குடுன்னு பெரிவா சொல்லீருக்காளே!” அப்பா புழு அல்லாமல் என்ன?

தனித்து வாழும் தைரியமான பெண்ணாக மைதிலியைப் படைத்திருப்பதும் ஆண்களின் புழுத்தன்மையை சட்டென அவள் அடையாளம் கண்டு விலக்குவதுமான அவள் போக்கு என நகரும் இக்கதை ப்ரகாஷின் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று.

எல்லோரும் கொண்டாடும் கதை என “பற்றி எரிந்த தென்னை மரம்” கதையைச் சொல்ல வேண்டும்.இக்கதையின் லோச்சனாவும் ஒரு பிராமணப்பெண்.வண்ணங்களோடு வாழும் ஓவியரான அவளுக்குக் குழந்தை பிறக்கிறது.தாய்ப்பால் ஒவ்வாமை காரணமாக அவள் உடல் முழுக்க சிவப்பு சிவப்பாய் தடிப்புகள் பரவ,குழந்தைக்கும் அது பரவ அவளிடமிருந்து குழந்தை பிரிக்கப்படுகிறாள்.எல்லா டாக்டர்களும் இது மதர் அலெர்ஜி என்று சொல்கிறார்கள்.எல்லோரும் இருந்தும் எல்லோருடன் இருந்தும் அவள் கொல்லையில் ஒரு குடிசையில்  தனித்திருக்க நேர்கிறது.கணவன் ராகவன் உட்பட குடும்பத்தார் யாரும் அவள் கிட்ட நெருங்குவதும் இல்லை.ஒருநாள் அவள் எல்லோரும் தடுத்தும் கேளாமல் வீட்டை விட்டுக் கிளம்பி அஞ்சினி என்கிற காவிரிக்கு அப்பால் தீவு போல தனித்திருக்கும் இடத்தில் தானே வீடு கட்டி அங்கே வாழத்துவங்குகிறாள்.எட்டு ஆண்டுகளாகியும் அவள் அங்கேயேதான் இருக்கிறாள்.

”தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பொண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் தமக்கையில்லை. தங்கை இல்லை. மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி! ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும். சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட்டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது…..   வீடுகளின் வாசல்கள் எட்டுப்புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை. சுவர்களில்லை ஆலய வாசல்கள் போல் சிற்பச் சாதுரியமாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும் பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? யாருக்குப் பிடிக்க வேண்டும்? ஆனால் அந்தப் பக்கத்து மீன் பிடிக்கும் வலையர்களுக்கும் ஆடு வளர்க்கும் கிதாரிகளுக்கும் லோச்சனாவை ரொம்பப் பிடித்தது. அவள் தரும் காரமான டீயும் உப்புச் சுவை மிகுந்த எலுமிச்சை பழச்சாறும், பல காய்கறிகள், கீரைகள் மிதக்கும் சாம்பாரும், சோறும் அவர்கள் எங்கும் ருசித்ததேயில்லை. அந்தத் தொழு நோயாளிப் பெண்ணின் நோய் அவர்களுக்குத் தெரியவேயில்லை. ஏகாலிப் பெண்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளைத் துணியிலும் அவள் மெழுகால் வரைந்து கொடுத்த Batic (பேத்திக்) டிசைன்கள் அபாரமாய் இருந்தன. அந்த வீட்டுச் சுவர்கள் எங்கும் அவள் வரைந்த காளியின் உருவங்கள் சாந்தமாகிச் சிரித்தன.

கீழ்த்தட்டு உழைப்பாளி மக்கள் அவளை மனுஷியாக மட்டுமே பார்த்து இயல்பாகப் பழக,வெள்ளான அய்யர் வீட்டு ஆட்கள் அவளை நோயாளியாக மட்டுமே பார்த்தனர்.நோய் சரியான பின்னும் அவளை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தனர்.எட்ட இருந்து கருணை பொழிந்தார்கள்.அவள் தன் உடம்பெங்கும் தூரிகையில் வண்ணங்களைக்குழைத்து பசிய இலை தழைகளை ஓவியமாக வரைந்து கொண்டிருந்தாள். தொழுநோயை  வர்ணங்களால் பூசி மறைத்தபோதும் வலையர்களும் கீதாரிகளும் மீன் பிடிக்கும் குறவர்களும் அவளுடன் அட்டகாசமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.அவள் ஊற்றும் கஞ்சியில் அவர்கள் எப்போதும்தொழுநோயின் அருவருப்பைக் காட்டவில்லை.

உண்மையில் இக்கதை பெண்மையின் எழுச்சிமிக்க அத்தியாயம் போல அமைந்துள்ளது.தன் மீது வர்ணம்பூசி மறைப்பதை ஒரு குறியீடாகக் கொண்டால்,கதை மனித குல வரலாற்றில் பயணிக்கும் பெருங்கதையாக ரூபம் கொள்வதைக் காணலாம்.உழைக்கும் மக்களின் இயல்பான பார்வைக்கும் நடுத்தரவர்க்கத்தின் பொய்மைக்கும் இடையில் துல்லியமான கோடு கிழிக்கும் கதையாகவும் இதை வாசிக்கலாம்.

குடும்பச்சிறைக்கு வெளியே இவ்விரு பெண்களையும் வாழ வைத்த ப்ரகாஷ் உம்பளாயி என்னும் பெண்ணை சாதிக்கு வெளியே நிறுத்தி வாழ வைக்கிறார்.கள்ளர் சாதிப்பெண்ணான உம்பளாயிக்கு சகவாசம் எல்லாம் பள்ளப் பையன்களோடும் தன் மீது காதல் (அல்லது காமம்) கொண்ட ‘பாப்பாரப் பையன்’ சாரநாதனுடனும்தான். தினசரி சேற்றில் உழன்று சேற்று மீன் பிடித்து அவளே சமைத்து உண்டால்தான் அவளுக்குத் தூக்கம் வரும்.இது ஒரு மன வியாதி போல அவளைப் பீடித்துள்ளதாக அவள் வீட்டார் நம்பினர்.இவள் இப்படிச் சாதி பாராமல் பழகுவதும் சேற்றிலேயே கிடப்பதும் பெண் பார்க்க வரும் அவள் சாதிப் பையன்கள் யாருக்கும் பிடிக்கவில்லை.அது பற்றி அவள் கண்டுகொள்வதில்லை.ரவிக்கை போடும் பழக்கமில்லாத அவளுடைய உடல் மீது ஆயிரம் கண்கள்.ஆனாலும் அவள் அம்பி சாரநாதனின் கண்களின் அழைப்பை மட்டுமே ஏற்கிறாள்.

சாரநாதனுடன் முற்றிலுமாக இழையும் அவள் அவனுடனான கலவியின்போது அவன் இவள் உடம்பின் நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு இயங்குவதைப் பார்த்துவிடுகிறாள்.தன் மீதிருந்த அவனைப் பிய்த்து எறிந்து :”போடா! பாப்பார நாயே!கம்மனாட்டி!அருவருப்பா இருக்கா.தேடி வந்து பொறுக்கும்போது தோணலியா நாத்தம்.இனிமே இங்க வந்தியின்னா செருப்படிதான் வுழுவும்.எந்திரிச்சி ஓடு பொறுக்கி நாயே!” என்று கத்துகிறாள்.காமத்தைப் பேசினாலும் இக்கதை கள்ளர் மற்றும் பார்ப்பனர் சமூகங்களின் வாழ்க்கை முரண்களையும் லேசாகத் தொட்டுச் செல்வதைக் காண்கிறோம்.அடர் வண்ணத்தில் தீட்டப்பட்ட அழுத்தமான படைப்பு ‘உம்பளாயி’

Thadam Vikatan - 01 January 2018 - கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன் | Life history and creations of Thanjai Prakash - Vikatan Thadam

5.அடிக்கும் ஆண்கள் அல்லது உதைபடும் பெண்கள்

கூசாமல் பெண்களைக் கைநீட்டி அடிக்கும் ஆண்கள் மீண்டும் மீண்டும் ப்ரகாஷின் கதைகளில் வந்துகொண்டே இருக்கிறார்கள்.ஆண்களின் இந்த அதிகாரத்திமிரை,ஆதிக்க மனோபாவத்தை  எத்தனை எழுதினாலும் தீராது என்பதனால்தான் ப்ரகாஷ் பல கதைகளிலும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

அங்கிள் கதையின் சாளிப்பிள்ளை,மேபல் கதையில் வரும் அப்பா,வடிகால் வாரியம் கதையின் மங்கையின் கணவன்,அங்குசம் கதையின் மின்னியின் அண்ணன் நாராயணன்,பூகோஸ் கதையின் மீராவின் கணவன் ஏகப்ஜானா,வெட்கங்கெட்டவன் கதையின் காத்தையன்,வத்ஸலி கதை நாயகி வத்ஸலியின் கணவன் தேவராஜ் என்று ஏழுகதைகளில் பெண்களுக்கு அடி விழுந்துகொண்டே இருக்கிறது.இதெல்லாம் இந்திய வாழ்வில் சகஜம்.உலகமே நம்மைப் பார்த்து,நாம் பெண்களை நடத்தும் விதம் பார்த்து கோபத்துடனும் கவலையுடனும் என்ன நடக்கிறது உங்க நாட்டில் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று காட்டுகிறார் ப்ரகாஷ்.இக்கதைகளில் அடிவாங்கும் அப்பெண்கள் யாரும் திருப்பி அடிக்கவில்லை.கோபப்பட்டு “போடா” என்று அவர்களை உதறிவிட்டு வந்துவிடவும் இல்லை.அடிகளையும் வாங்கிக்கொண்டு அங்கேயே அதே வாழ்க்கையின் பொந்துக்குள்ளேயே கிடக்கிறார்கள்.இக்கதைகளை வாசிக்கும்போது நம் கண்முன்னால் நடக்கும் அந்த வன்முறையைத் தடுக்க முடியாமல் நிற்கிற தவிப்பு நமக்கு வந்துவிடுகிறது.அந்த வகையில் இது ப்ரகாஷின் கலையின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.

‘அங்குசம்’ கதையில் மின்னி என்றழைக்கப்படும் மீனாட்சிக்கு ரத்தன் ராஜுடன் காதல்.பஸ் நிலையத்தில் சந்தித்து ஏதேனும் ஒரு பஸ்ஸில் பயணித்தபடி பேசிப் பின் இறங்கிக்கொள்வதே அவர்கள் காதலின் இயங்குதளம்.அப்பா பேச்சற்றுப்போன பிறகு அண்ணன் நாராயணந்தான் அவளைக் கேள்வி கேட்பவன்.

“மொளச்சு மூணெல விடல்லே உனக்கு!அதுக்குள்ள ஆம்படையான் வேணுமாமில்லே?”

….அடி விழப்போவது தெரிந்தும் அமைதியாகிப் போகும் மின்னியைத் தாங்க முடியாது நாராயணனுக்கு! வெறி பிடித்து விடும்.அடித்து நொறுக்குவான்.இரண்டு கால்களுக்கு இடையில் துவைத்து எடுப்பானந்த வீட்டில் யாரும் தடுப்பதில்லை.”சாதி கெட்ட பயலைத் தேடிண்டு போவியா?”என்று சாத்தும்போதும் ஆத்திரம் அடங்காது அவனுக்கு.”

அண்ணன் நாராயணன் அவளை அடிக்கும்போது அவளுக்குத் தன் காதலன் ரத்தன் ராஜுவின் நினைப்பே அவளுக்கு வரும்.பலர் முன்னிலையில் அடிப்பவன் நாராயணன் என்றால் பலர் முன்னிலையில் -பஸ்ஸில்-ரயிலில்-அணைப்பவன் ரத்தன்ராஜூ.சாதாரணமாய்ப் பக்கம் பக்கமாய் இருந்தே உரசி தீ கனன்று நசுங்கும் அந்த வேளைகளின் இரக்கமற்ற வெறும் கசங்கல்பயங்கரமாய் நாராயணனையே நினைவூட்டி பயங்கரம் தரும்.

அங்குசம் கதையின் மையச்சரடாக இருப்பது இதுதான்.அடிக்கிற கையும் அணைக்கிற கையுமாக இருக்கும் ஆணின் கை வழியே வெளிப்படும் வன்மம்,வன்முறை பெண்ணை,அவள் காதலை-காமத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அங்குசம் என்கிறார் ப்ரகாஷ்.ஆண் பெண் உறவுக்குள் ஊடாடும் இதுபோன்ற ரகசியங்களைத் தேடித்தான் ப்ரகாஷ் பயணிக்கிறார்.

ஒரு காரணத்தை முன்வைத்தும் ஆண் அடிப்பான்.ஒரு காரணமும் இல்லாமெலும் பெண்ணை அடிப்பான் என்று பேசுவது ”வெட்கங்கெட்டவன்”.

‘ரங்கம் நிம்மதியாய் அழுதுகொண்டிருந்தாள்’ எனத்துவங்கும் அக்கதையில் ரங்கம் வயசுக்கு வந்த பத்தாவது நாள் அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

ரங்கம் அழுதா போகமாட்டேன்னு. ரூமுக்குள்ளே அம்மா கழுத்த கட்டிகிட்டு அழுதா. சாரங்கபாணி கோயிலுக்குப் போறோம்னு கூட்டிகிட்டுப் போயி, காத்தையங்கிட்ட உட்டுட்டு வந்துட்டாங்க எல்லாரும். கும்மாணம் சாரங்கபாணி கோயில் அவளுக்குப் ரொம்ப பிடிக்கும். வில்லோட ராமர்! “ நாங்க தஞ்சாவூருக்குப் போறோம் ரங்கம்! சாத்தையா! பொண்ணு புதுசு! அம்மா இது ஒங்க பொண்ணு. முதல் முதல் பால் கொண்டு போயி குடுக்கணும்!” சொல்லிக்குடுத்ததைதான் செய்தாள் ரங்கமும். பளீர்! அறை விழுந்தது. எதுக்கு அடிச்சான்னு! இப்பகூட தெரியாது. உறுமினான். அவனே போய் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுட்டு வந்தான். பாவி! லைட்டெ அணைச்சதும் எதுவும் தெரியலை. பயம் ஏண்ணுதான்இண்ணைக்குப் பயம்தான்! ராத்திரி மட்டும்தான் அவன் ஆம்பளை!….குளிச்சிட்டு இருப்பான். துண்டு எடுத்துகிட்டு போற வழக்கமே கிடையாது. அலறுவான். ஓடிப்போயி துண்டெ குடுப்பாள் ரங்கம். பாத்ரூம் கதவு வழியாவே பளிச்சின்னு அறை விழும்! துண்டெ வரிஞ்சு கட்டிகிட்டேஏண்டி இவ்வளவு நேரம்…. செறுக்கி…. ம்?” கன்னத்திலும் ஒரு மிருகத்தனமான நிமிண்டல். சாயங்காலம் வரைக்கும் வலிக்கும். ஏன் கண்ணாடியில் ரெண்டு மூணு நாள் வரைக்கும் நீலம் பாரிச்சிருக்கிறது தெரியும்! அவன் விரல் நகம் புரியும்…. அழக்கூட நேரம் தரமாட்டான்!…… அவன் சாப்பிட்டுகிட்டிருக்கும்போது திடீர்ன்னு கையெப்பிடிச்சு இழுக்கிறது புரியிறதுக்குள்ள தலைல நறுக்குன்னு ஆணியால குத்தின மாதிரி ஒரு கொட்டு! “உப்பு ஜாஸ்த்தி

 இன்னொருநாள்…. ராத்திரி பத்து பதினோரு மணிக்கு தூக்க கலக்கத்தோட வந்து கதவெ திறப்பா ரங்கம். கழுத்தெப் பிடிச்சு ஒரு உந்து! பளார்ன்னு முதுகுல அறை! நேரம் கழிச்சு கதவெத்திறந்தா வுன்னெ! ….வெக்கக்கேடு! சாயங்காலம் திடீரென்று ரங்கத்தெப் பிடிச்சு கதவுகிட்டேயே சாச்சு ரெண்டுமூணு!! உதட்டெ துடச்சிக்கக் கூட இல்லெஇடுப்புல குறடு போட்ட மாதிரி ஒரு பிடுங்கு! ஜன்னலெ சாத்தல்லியாம். எதிர் வீட்டு மாடியிலிருந்து எவனோ இத பாத்துட்டானாம். கண்களில் நீர் சுவர திரும்பி அப்படியே திரும்பி எதிர்வீட்டு மாடியப் பாத்தாயாரையும் காணும். மறுபடியும் அறை! “அஞ்ச என்னடி பார்வை!” உறுமல்தேவடியா!”

கையில் குழந்தை இருந்தப்போ எத்தனை தடவை வயிற்றிலேயே உதை! வலி சுருளும் நாள் முழுதும், மனுஷனா அவன்?! கால்ராயரு ஊட்டுப் பொண்ணு! ஓடியாந்துடுச்சு வாழாமெ! இந்தக் காலத்திலியும் சொல்வாளுங்க. யாரும் சொல்லக்கூடாதாம். தொண்டையெ அடச்சது. குலுங்கி அழுதாள் ரங்கம்.

இப்பக்கூட பயமில்லாமெவெக்கமில்லாம பின்னாலியே வந்து அடிச்சிட்டுப் போறவரைக்கும் எல்லாருந்தான் இருந்தாங்க, தடுக்கலியே!”

எல்லோரும் பார்த்திருக்க,சமூகம் மௌனம் சாதிக்க பெண் அடி வாங்கிக்கொண்டிருக்கிறாள்-காலம் காலமாக-இந்த தேசத்தின் எல்லாத் தெருக்களிலும் எல்லா வீடுகளிலும்.அதை உணர வைக்கும் கூர்மையான கதைகளை ப்ரகாஷ் எழுதிவிட்டார்.ப்ரகாஷ் என்றால் பாலியல் கதைகளை எழுதியவர் என்றே பேராகிவிட்டது.ஆனால் என் வாசிப்பில் அவருடைய எழுத்தின் முக்கியமான அடையாளமே ’பெண்ணை வதைக்கும் இந்திய வாழ்வு’ என்பதுதான்.காமமானாலும் காதலானாலும் இல்லறம்(அறம்?) ஆனாலும் உதைகள் தின்னும் வாழ்க்கையை அவளுக்கு நாம் அளித்திருக்கிறோம்.அந்தப் பதை பதைப்பையும் குற்ற உணர்வையும்  உண்டாக்கும் பெண்ணரசியலை ப்ரகாஷ் இந்தக் கதைகளில் பிரமாதமாக முன்னெடுக்கிறார்.

கல்யாணம் என்றால் பெரும் பணப்பரிவர்த்தனை என்று ஆகிவிட்ட நம் சமூக நடைமுறையை ‘வைரமாலை’ கதையைப்போல கூர்மையாக விமர்சித்த வேறு தமிழ்க்கதை உண்டா என்று தெரியவில்லை.வரதட்சிணைக்காகத் தன் சொத்துக்களையெல்லாம் விற்று மகள் சாவித்திரியை பார்த்தனுக்குக் கலியாணம் பண்ணி வைக்கிறார் அப்பா.பார்த்தனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.ஆனாலும் பெரியவர்கள் முன்னால் வாய் பேசிப்பழகாத அவனது சுபாவம் அவனை மௌனியாக்குகிறது.நகை,நட்டு,பணம் என்று உழலும் இந்த வாழ்க்கையிலிருந்து அறுத்துக்கொண்டு அவனும் சாவித்திரியும் மட்டும் உலவுகின்ற எளிய இயற்கையோடியைந்த வாழ்க்கைக்காக ஏங்குகிறான்.

சாவித்திரி இன்னம் எதுக்கடி இந்த நகையெல்லாம் பணம், காசு எல்லாம் மதிப்பா மனுசமேல தொங்கிக்கிட்டேயிருக்கணுமா, எனக்கு நீ இருந்தா போதுண்டி சாவித்திரி! ஒரு நூல்புடவை, ஒரு முழம் பூ இது போதாதா அம்மனுக்கு பூ சாத்திப்பாத்தா போதாதா“.

என்ன ஒள்ர்ரீங்க! நூல் புடவையாவுது. பூவாவது ஒங்கப்பாவும், அம்மாவும் ஒவ்வொரு வேளைக்கும் மாட்டி, மாட்டி கழட்டிவிடுராங்க தெரியுமா! நாத்தினாருவளும், கொழுந்தியாலுவளும், இதுதா பொண்ணான்னு கேட்டுகிட்டு வந்து என்னோட நகையைத்தான். புடிச்சு புடிச்சு பாக்கிறாளுவோ உங்களுக்கென்ன மாப்பிள்ளையாச்சே மணவறையில உட்கார்ந்தப்பக்கூட கையில் பத்து பவுன்ல ஒரு மகரச் சங்கிலி போட்டிருந்தீங்க, யாரு பாக்கப்போறா ஆனா ஏங்கத அப்படியா? ஒவ்வொருத்தரும் பொண்ணு எத்தின பவுனு நகைப் போட்டிருக்கு. வைரம் எத்தன லெட்சத்துக்கு போட்டிருக்கு அப்படின்னு கையாலெ தூக்கி தூக்கி பாப்பாளுவ” – என்று ஆக்குரோஷமாக கேட்டாள் சாவித்திரி!

பார்த்தன் அவள் முதற்கோபத்தின் முதற்கனலை மிகக் கஷ்டத்துடன் வாங்கிக் கொண்டான். அவன் அருவிக்கரையோரம் மலைப்பாறைகள் பிளந்து விழுந்தன. மலைக்குடில் அவனே கட்டிய அமைதியான பிளவிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. பூக்களும் புல்வெளிகளும் சிதறுண்டு போயின.

முதல் பார்வையிலேயே தன் மனதில் ஓவியமாக வந்தமர்ந்துவிட்ட சாவித்திரியை வரதட்சிணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கொள்ள தன் வீட்டுப் பெரியவர்களிடம் குரல் எழுப்பாத கோழையான பார்த்தன் மீது நமக்கு எரிச்சல் உண்டாகிறது.ப்ரகாஷின் வெற்றி இது.இந்தப் பண்பாட்டுக்கு நடுவே எதிர்நீச்சல் போடத் தெம்பில்லாதவர் கனவு மட்டும்தான் காண முடியும்.அதுவும் கூடப் பள்ளத்தாகில் இடிந்துதான் வீழும் என்கிறார் ப்ரகாஷ்.6.அடியாட்களின் வாழ்விலிருந்து இரண்டு பக்கங்கள்

தஞ்சை வட்டாரத்தில் வாழ்ந்த தொழில்முறை அடியாட்கள் இருவரையும் அவர்களைச் சார்ந்து வாழ நேரும் இரு பெண்களின் மண மற்றும் மன வாழ்வு பற்றி “கொலைஞன்” “க்யாமத் எனும் இறுதித்தீர்ப்பின் நாள்” என்று இரண்டு கதைகளை எழுதியிருக்கிறார்.

க்யாமத் என்னும் இறுதித்தீர்ப்பின் நாளில் வரும் அடியாளான ரங்கராஜன் மேல் மையல் கொண்ட நூரி என்கிற இஸ்லாமியப் பெண்ணுக்காக மதம் மாறி முத்தலீப் என்கிற கணவனாக மாறுகிறான் ரங்கராஜன்.கல்யாணத்துக்குப் பின்னும் அவன் வியாபார உலகின் பெருந்தனக்காரர்களுக்காக கொலைகள் செய்வதைத் தொடர்கிறான்.நூரியால் சகித்துக்கொள்ள முடியவில்லை அந்த வாழ்க்கையை.தெருவிலேயே பிறந்து தெருவிலேயே அடியும் வெட்டும் குத்தும் எனப் பழகிய அவனை உயிர்த்தலத்தில் மிதித்தே ஒருநாள் கொன்று போடுகிறாள்.

அவன் யார் என்ன ஜாதி அவனுடைய தந்தை யார் என்பது யாருக்குமே தெரியாது.ஆஸ்பத்திரியில் அவனைப்பெற்ற தாய் இறந்துபோக நர்ஸ் ராஜம் அவனை எடுத்து வளர்க்கிறாள்.

இன்னொரு கதையான ‘கொலைஞன்’ கதையில் வருபவன் பெயரும் ரங்கராஜன்.அவன் அப்பா அம்மா இரண்டு பேரும் இல்லை.பீடிக்கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லி சகுந்தலாவைக் கல்யாணம் கட்டிக்கொண்டு போகிறான்.தனிக்குடித்தனம்.அவன் அடியாள் என்பது மெல்ல மெல்லப் புரிகிறது அவளுக்கு.அடிக்கடி ஒரு வீடு மாற்றிக்கொண்டே இருக்கிறான்.பலநாள் வராமல் இருப்பான்.ஒரு இரவில் வருவான்.அவன் யார்?என்ன மாதிரியான ஆள்? என்னதான் செய்கிறான்? என்று எதுவுமே தெரியாத புதிருடன் சகுந்தலா வாழ்கிறாள்.

“எனக்கு உங்க உடம்பைத்தவிர வேற என்ன தெரியும்?வேற எதையும் நீங்க எனக்குக் கொடுக்கவும் இல்லை” என்று அவனிடமே ஒருநாள் கேட்கிறாள் சகுந்தலா.அவன் அப்போதும் தன்னைப்பற்றி ஏதும் சொல்லவில்லை.இரவுகளில் வந்து அவன் அவளைப் புணரும்போது, அவனை அவள் தழுவும்போது கையில் பிசிபிசுக்கும் ரத்தம்.சற்றுமுன் அவன் பெற்ற காயத்திலிருந்து வழியும் ரத்தம்.காயத்துக்கு ஒரு கட்டுக் கூடப் போடாமல் வந்து தன் மீது சாயும் அவனைப் பார்க்க அச்சத்தில் உறைவாள் சகுந்தலா.

உண்மையில் அவன் யார்?இளம் வயதில் பட்டினியால் அவனது குடும்ப மொத்தமும் செத்துப் போன நினைவு அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.அந்தக்காட்சியை ப்ரகாஷ் எழுதிச்செல்லும் விதம் நம்மை உறையச்செய்வது.

”வீடு முழுவதும் ஒழுவுகிறது. வெளியே மழை பெய்யவில்லை. வீட்டிற்குள்ளே தான் மழை கொட்டுகிறது; எங்கு பார்த்தாலும் ஜலம் பசி வேகம் காதைத் துளைக்கிறது. பசி வயிற்றில் எரிப்பதைத்தான் சகுந்தலா கேள்விப்பட்டிருப்பாள். பசி காதை குடைவது, பசி நெஞ்சில் அதிர்வது கடைசியாக உயிரைக் குடிப்பது, சகுந்தலா கேட்டுகூட தெரிந்திருக்க மாட்டாள்! இருபத்தி எட்டாவது நாள்! மழை நிற்கவில்லை. தொண்ணூறு வயது தாத்தா திண்ணையில் மல்லாந்து விட்டார். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் கைகால்களை அசைக்க முடியாமல் செத்துக் கிடந்தனர். அப்போதும் தரை எல்லாம் மழை ஓடிக்கிடந்தது. அம்மா லோகாம்பாள் முற்றத்தில் மழையில் விறைத்துக் கிடந்தாள். உயிர் இரவே கூட்டைவிட்டு கடந்திருந்தது. அப்போதும் அத்தனையும் கொலைகள் தான் என்று தெரிந்து கொண்டான் ரெங்கராஜன். தன்னை மட்டும் இவர்கள் யாரோ தப்பிக்க விட்டுவிட்ட ரகசியம் மட்டும் இன்றுவரை புரியாத புதிராகவே இருந்தது

பசியால் மரணம் என்பது லேசான விஷயம் அல்ல. வேறு எதனால் நேர்ந்தாலும் அது கொலை அல்ல சாவுதான்! பசியால் நேர்ந்தால் அது கொலைதான்! கொலை மட்டும் அல்ல படுகொலை!! என்று சகுந்தலாவிற்கு அவளால் சொல்ல முடியுமா, சொன்னாலும் அவளுக்குப் புரியுமா? முதலில் பசி பின்னர் வயிற்றில் தீ, அதன் பின் காடு எரிவதுபோல் உடம்பின் ஒன்பது வாசல்களிலும் தீ சரங்கள் பறக்கும், உடல் வியர்வையில் குளிக்கும். பின்னர் பசித் தீ வயிற்றில் அடங்கிவிடும். காதுகள் இரையும் விம்மென்று ஓங்கார ஓலம் கேட்கும். நெஞ்சு துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசைக்குள் அடங்கும்போது உடம்பின் சத்து முழுவதும் வெளியேறும், உடம்பு உயிரை பிரிய முடியாமல் வெட்டி வாங்கும்.

 கொட்டும் மழையில், இந்தப் பட்டினி விடாயை அந்த குடும்பம் முழுவதும், இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பஞ்ச பூதங்களில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை தானும் செத்துக் கொண்டே அனுபவித்த கோரத்தை எப்படி யாரிடம் சொல்ல முடியும் யாருக்கு விளங்க வைக்க முடியும். யாரும் ஒத்துக் கொள்ள வேண்டாம். சட்டம் சொல்கிறது. கொல்லாதே, சட்டம் சொல்கிறது திருடாதே. ஆனால் இந்த கொலைகளைச் சட்டம் ஏற்றுக் கொள்ளாது. எனவேதான் அன்று அந்த சாவின் விளிம்பில் அந்த வாடாத உடம்புடன் ரெங்கராஜன் சக்தியோடு போராடினான். பசி, அவனைக் கொலை செய்ய முடியவில்லை ! வீடு முழுவதும் எட்டு ஒன்பது, பிணங்கள் மாறிக் கொண்டிருக்க, அங்கிருந்து ஏனென்று தெரியாமல் படி இறங்கி மழையில் கொலையில் இருந்து தப்பி ஓடினான் ரெங்கராஜன். அவனை இன்றுவரைத் துரத்தும் கொலை வெறியை அவன் யாரிடம் சொல்வான்.சகுந்தலாவிடமா? சகுந்தலாவிற்குப் புரியுமா? ” 

இது ஒரு புறம் எனில், இக்கதை முன்வைக்கும் மிக முக்கியமான இன்னொரு பார்வை என்னவெனில், கணவன் யார் எப்படிப்பட்டவன்,வெளி உலகில் அவன் என்னவாக இருக்கிறான்  என்கிற மர்மம் விலகாமலே அவனோடு வாழ்ந்து பல பிள்ளைகளும் பெற்று  முடித்துவிடுகிற பெண்களின் வாழ்வை ஒரு சகுந்தலாவின் வழியாகச் சொல்ல முயற்சிக்கும் கதையாக இதை வாசிக்கலாம்.கடலின் ஆழத்தை அறிந்தாலும் அறியலாம் பெண்ணின் மன ஆழத்தை அறியவே முடியாது என்று ஏதோ ஒரு காலத்தில் ஆண்களால் அவுத்து விடப்பட்ட கற்பிதத்தை நொறுக்கி அது ஆணைப்பற்றியதாகத்தான் இருக்க முடியும்.அவன் தான் தன்னை முழுவதுமாகப் பெண்ணுக்குத் திறந்து காட்டாதவன் என அதற்கான பின்புலத்தோடு  வைத்துப் பேசும் முக்கியமான புள்ளி இக்கதையில் இருக்கிறது.

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்: கத்திமேல் நடக்கும் கதைகள் | தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்: கத்திமேல் நடக்கும் கதைகள் - hindutamil.in

7.பொறா ஷோக்கு

இது ஒரு முற்றுப்பெறாத கதை.இக்கதையில் என்னவெல்லாம் எழுதவிருக்கிறேன் என்று அவர் நண்பர்களோடு பேசிய பேச்சுக்கள் ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தது.ஒரு நாவலாக விரிவுகொள்ளும் பறத்தலுக்கான யத்தனிப்புகளை இப்போது கிடைத்திருக்கும் இந்த 27 பக்கப் பிரதியில் காண முடிகிறது.காசீம் ராவுத்தர் வானத்தைப் பார்த்தபடி நிற்பதில் கதை துவங்குகிறது.75 வயது அவருக்கு.அவரைப்போலவே ஒரு நூற்றாண்டு வயதான தஞ்சைப் புழுதியின் மீது ஓடிய குதிரைகள்தாம் எத்தனை….அப்புழுதியின் மீது நின்று வானத்தில் தஞ்சையின் வரலற்றையே வாசிப்பது போல நிற்கிறார் காசீம் மொகைதீன் ராவுத்தர்-தூய்மையின் வடிவமாக.

“இருநூறு வருடங்களுக்கு முன் தஞ்சைக்குள் நுழைந்த மாலிக்காபூரின் படை துரத்தித் துரத்தி அடித்துத் தஞ்சாவூர் மக்களின்  உடுதுணிகளையும் சேலைகளையும்பிடுங்கி முதுகில் கொறடாவால் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை போட்டுவிட்ட ரத்த அடையாளம்.கொள்ளை அடித்துச் சென்ற கோடிக்கணக்கான கோயில் சொத்துக்கள். இதே அகழ்நீரில் மிதந்த நூற்றுக்கணக்கான பிராமண உத்தமர்களின் சடலங்கள் பின்னர் விரட்டி வந்த காலத்தில் மூன்றரை லட்சம் போர் வீரர்களோடு தஞ்சையைச் சூறையாடிய மாதவராவ் சிங்ளே அவனைத் தொடர்ந்து இந்தப் புழுதி மண்ணை நோண்டி இதில் …………… கழுதை கட்டி ஏர் உழுது விளைச்சலைப் பார்த்து மறுபடியும் உழுது தஞ்சை மண்ணைப் பூண்டற்றுப் போக பிராமனார்கள் சொல்லிய வானகத் திணையின்படி குலநாசம், ஸ்தலநாசம், பூமிமாதா நாசம் செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆடிய ஆட்டம் அந்தப் புழுதிக்குத் தெரியும் வரலாற்று ஆசிரியர்கள் உணர மாட்டார்கள். –

அடுத்துக் குறுக்கில் வந்த ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து திண்டுக்கல் வழியே தஞ்சையைக் கவிழ்க்க பாய்ந்து வந்த முஸ்லீம் படைகள். அங்கே தஞ்சையில் வெடித்துச் சிதறிய பீரங்கிக் கங்குகள். தஞ்சை பலமுறை சுடுகாடாகி ,வந்ததெல்லாம் விற்றுப் பறித்ததை எல்லாம் தின்று, சாலையோரத்துப் புளியமரத்தில் இருந்த புளியைக் கரைத்துக் குடித்து இந்த அகழ் தண்ணீரில் இறங்கி எத்தனை பெண்கள் மானமிழந்த உடல்கள், எத்தனை நூற்றாண்டுகளாக மிதக்கின்றன. ‘ஹோஎன்று அலறும் காளியின் நர்த்தன வீரியம் நூற்றாண்டுகளுக்குப் பின் இன்னும் தஞ்சையில் சுடர்விடுகிறது.

நூற்று இருபத்தியொரு பள்ளிவாசல்கள் ஒருபுறம் பாங்கொலி எழுப்ப ஒரு நேரம் நகராவின் பேரிடி ஓசை லாஇலாஹா கூக்குரலும் தொடர்ந்து மருட்டும் இருளும் தஞ்சையின் நிசும்ப சூதினியாகிய ராவுகால காளிகளும் சம்மதம். இது ராவுத்தருக்குத் தெரியும். ஒரு நூற்றாண்டாக அவர் காளியமர்த்தனத்தையும் வானத்தில் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.”

வானத்தையே பார்ட்துக்கொண்டிருக்கும் அந்த முதியவரைப் பூமியைப் பார்க்க வைத்தது ஜைத்தூன் என்கிற 17 வயதுப்பெண்ணின் பேரழகும் அவளை அவர் கையில் பிடித்துக்கொடுத்த அவளுடைய தாய் ஷம்சாத்துவின் சாகசம்.கல்யாணமான அன்றைக்கு ராத்திரியே சைக்கிள் கடை மஸ்தானுடன் ஜைத்தூன் ஓடிப்போகிறாள்.சில நாள் கழித்து மீண்டும் காசீம் ராவுத்தரிடமே திரும்பி வந்து அவருக்கு ஒரு பிள்ளை பெறுகிறாள்….என்று கதை போகிறது.

தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் என அறியப்பட்ட ஜாம்பவான்கள் எவருக்கும் இல்லாத வரலாற்றுணர்வைக் கொண்டவர் ப்ரகாஷ். தஞ்சை மண்ணில் பதிந்த அத்தனை கால்தடங்களையும் தன் தீட்சண்யமிக்க கண்களால் கண்டவரும் இம்மண்ணின் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குதிரைகளின் குளம்படிகளையும் பெண்களின் இறுதிக்கதறல்களையும் பீரங்கிச் சத்தங்களையும் செவிகொடுத்துக் கேட்டவர் ப்ரகாஷ்.அவர் பறக்கத்துவங்கும்போதே காலத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டார்.

அவர் ஒரு தனிமனிதராக இலக்கிய உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம். . நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டவர். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே தஞ்சையில் ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர். பல சிறுபத்திரிகைகளையும் நடத்தியவர். . ‘ஒளிவட்டம்’, ‘சும்மா இலக்கியக் கும்பல்’, ‘கதைசொல்லிகள்’, ‘தளி’, ‘தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை’, ‘தனிமுதலி’, ‘தாரி’, ‘கூடுசாலைஎன ஏராளமான இலக்கிய அமைப்புகளை நடத்தினார் ப்ரகாஷ் .

ப்ரகாஷ் நிறைய இதழ்களை நடத்தியிருக்கிறார். இதழ்களையும் ஓர் இயக்கம்போலவே நடத்துவார். இதழ்களின் செலவுக்கென எவரிடமும் போய் நிற்க மாட்டார். ‘குயுக்தம்இதழின்  இரண்டாவது அட்டையில் கொட்டை எழுத்தில் இப்படி அறிவிப்பு இருக்கும்: “நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞராஉங்கள் படைப்புகளை  பத்திரிகைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வ சிரோன்மணிகள் மறுக்கின்றனரா? இதோ, குயுக்தம் அதற்கென வெளியிடக் காத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். யாருடைய எழுத்தும் எந்தப் புரட்சியையும் எந்தக் காலத்திலும் செய்ததில்லை. செய்வோம் நாம். மறுப்பவர்களை மறுப்பதே அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். மறுப்போம், எதிர்ப்போம். எந்தத் தலையாட்டி மாடுகளுக்கும் நாம் துணை  அல்ல. குயுக்தமாய் தவறு செய்வதில்லை. ஜெயிப்போம்!”

அவரைப்பற்றி விகடன் இதழில் வெ.நீலகண்டனுக்கு அளித்த நேர்கணலில்,” எந்த இழப்பும் அவரைப் பாதிக்காது. இந்த வீடு மட்டும்தான் மிச்சம். தொடக்கத்துல அவரைப் புரிஞ்சுக்கிறதே கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவர் போக்குல விட்டுட்டேன்.

எப்பவும் இந்த வீட்டுல ஏதாவது ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அவர் இறந்த பிறகு என்னால இந்த அமைதியைத் தாங்க முடியலேரொம்பச் சிரமப்பட்டேன். காலப்போக்குல பழகிடுச்சு. பல நேரங்கள்ல வீட்டுல விளக்குகளைக்கூட போடத் தோணாது. இருட்டும் அமைதியும் பழகிடுச்சு. அவரோட மூக்குக் கண்ணாடியை மட்டும் எப்பவும் என் கைக்குப் பக்கத்துல வெச்சிருப்பேன். அவரே கூட இருக்கிற மாதிரி தோணும்.  

சிகரெட், தண்ணினு எந்தக் கெட்டப் பழக்கமும் அவருக்கு இல்லைஎந்தச் செலவும் பண்ணிக்க மாட்டார். நல்லா சமைப்பார். மீன் பிரியாணி, இறால் பிரியாணி ரொம்ப ருசியா செய்வார். உருண்டைக் குழம்பு பிரமாதமா வைப்பார். ஏதாவது ஸ்பெஷலா சமைச்சார்னா, நண்பர்களுக்கெல்லாம் டிபன் கேரியர்ல எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுப்பார். அவர் எழுதியதைவிட, அவருடைய கதைகளைப் பதிப்பித்ததைவிட, நண்பர்களை எழுதத் தூண்டி அவற்றை இவருடைய முனைப்பிலேயே புத்தகங்களாக்குவார். அதனால்தான் இன்றைக்கும் அவருடைய பெயரை எங்கோ, யாரோ உச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க…” என்று தன் கணவரைப் பற்றிய நினைவுகளைப் பல்வேறு உணர்வுகளினூடாகப் பகிர்ந்துகொண்டார் மங்கையற்கரசி.

அவரை ஒரு செக்ஸ் எழுத்தாளர் என்று இலக்கிய உலகம் புறக்கணித்தது.காமத்தைப் பிரதான பாடுபொருளாக எழுதியது உண்மைதான்.அதில் சில கதைகளில் கலை வெற்றியும் பலவற்றில் தோல்வியும் அடைந்திருக்கிரார்.ஆனால் எல்லா எழுத்தாளர்களும் அந்த விஷயத்தில் நாசூக்கான எல்லையில் நின்றுவிட ப்ரகாஷ் இன்னும் ஆழமாக அதனுள் ஊடுறுவிச் சென்றார்.சமூக வாழ்வு என்கிற முழுமையின் பகுதியாக காமத்தை வைத்துப் பார்க்காமல் அதையே முழுமைபோலச் சித்தரித்தார் என்று அவரை விமர்சிக்கலாம்.அப்படி அவரை விமர்சிக்கவும் வேண்டும்.பல கதைகள் ஆண்மையப்பார்வை கொண்டிருந்தன என்றும் விமர்சிக்கலாம்.

ஆனால் காமம் தாண்டி, பன்முகக் கலாச்சார அடையாளங்களைக் கொண்ட தஞ்சை மண்ணை அதன் அத்தனை அழகுகளோடும் சிதைவுகளோடும் முழுமையாகக் கண்டுணர்ந்த முதல் தமிழ்ப்படைப்பாளி அவர்தான் என்பது உண்மையிலும் உண்மை.அதை எவரும் மறுக்க முடியாது.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 3 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்”
  1. ப்ரகாஷை இதுவரை யாரும் இந்த அளவுக்கு முழுமையாக பார்க்கவில்லை என்றே கருதுகிறேன்.

    அவரது பெரும்பாலானா படைப்புகளில் பெண்கள் ஆணாதிக்கத்தை ஒடுக்கு முறையை விரும்பி ஏற்பதாகவே சித்தரிக்கப்படுவதும், இதன் நீட்சியாகவே கரமுண்டார்வீடு அமைந்துள்ளதும் சற்று நிரடலாகவே உள்ளது.

    அஞ்சு மாடியும் குறிப்பிடத்தக்க சிறுகதைதான்.

  2. தஞ்சைமண்ணிற்கு பெருமை சேர்த்த தனித்த இலக்கிய இயக்கம் தஞ்சை ப்ரகாஷ் .அந்த பிரவாகம் பல ஊற்றுகளின் இலக்கிய கண்களைத் திறக்க ச்செய்தவர்.அவரதுபலமுகங்களை புழுதிவிலக்கி அடையாளம் காட்டி தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ப்ரகாஷின் இடத்தை சுட்டிக் காட்டிய கட்டுரை. காமத்தைஎழுத்தில் கொணரத் தடுமாறுபவர்களுடன் ப்ரகாஷை முன் நிறுத்தி உரையாடல் நடத்தும் கட்டுரை. வாழ்த்துகள் தோழர் தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *