தொடர் 15: பலாப்பழம் – கி.ராஜநாராயணன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாட்டார் கதைகளில் சரித்திரத்தைத் தேடக்கூடாது, அதே சமயத்தில் ஒரு ஓரையாக சரித்திரம் வைரத்தினுள் நீரோட்டமாகத் தெரியவும் செய்யும் என்கிறார் கி.ரா

பலாப்பழம்

கி.ராஜநாராயணன்

குழந்தை பிறந்து விட்டது,  சங்கரம்மாளுக்கு கல்யாணமாகி ஆறு வருஷங்களுக்கு அப்புறம் தலைப்பிரசவம்,  ஆண் குழந்தை.  

மருத்துவச்சி குழந்தையை குளிப்பாட்டி கை நாழிக்கு மூன்று படிக் கம்பம் புல்லை ஒரு களகில் போட்டுப் பரப்பி அதன் மேல் மெல்லிய ஒரு மஞ்சள் துணியை விரித்து குழந்தையைப் படுக்க வைத்துக் கொண்டு வந்தாள் சேனை வைக்க.

வாடை தாங்க முடியாமல் குழந்தை கிடுகிடுவென்று நடுங்கியது,  கறுப்பு நிறம்.  கைகளிலும் கால்களிலும் ஆறு விரல்கள். இரண்டு காதுகளிலிருந்தும் வெண்மையான சீழ் வடிந்து கொண்டே இருந்தது.  பெண்கள் ஒருவருக்கொருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டனர்.

குழந்தையின் தகப்பனாரையே சேனை வைக்கக் கூப்பிடுவது என்று தீர்மானமாயிற்று. பொன்னையா வலது கையை இடது கையால் தாங்கி,  மூன்று முறை எழுத்தாணியின் நுனியால் தன் அருமை மகனின் நாக்கில் பதனமாகச் சேனை வைத்தார்.

எல்லாரும் போய்விட்டார்கள்,  வீட்டில் குழந்தையைச் சேர்த்து நால்வரே இருந்தனர்.  “நீ மசக்கையோடு இருக்கும்போது உனக்கு என்ன குறை வைத்தோம் அப்படி ஏதாவது வேண்டி இருந்தாலும் எங்களிடம் சொல்லியிருந்தாலென்ன?” அத்தையம்மாள் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சங்கரம்மாளைப் பார்த்துக் கேட்டாள்.

சங்கரம்மாள் பரிதாபத்தோடு தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.  பொன்னுசாமி தலை குனிந்து கொண்டார்.  ஒரு தடவை குழந்தையின் காதுகளையும் கைகால்களையும் பார்த்தார்.  மீண்டும் தலை குனிந்து கொண்டார்.  

மசக்கை சமயத்தில் சங்கரம்மாவின் வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக பக்ஷணங்கள், பலகாரங்கள் எல்லாம் வந்தது வாஸ்தவந்தான்.  புக்ககத்திலும் அவளுக்கு ஒரு குறையும் கிடையாது. ஆனாலும் ஒரே ஆசைதான்.  ஒரு பலாச்சுளையாவது தின்ன வேண்டுமென்பதுதான்.

அந்த கரிசல் பூமியில் பலாப்பழத்துக்கு எங்கே போவது?

கொறித்த ஒரு பருக்கைகூட வயிற்றில் நில்லாது ஆயாசம் மிகுந்து சதா நாக்கில் உமிழ் நீர் கொப்பளிக்க, வறட்டு வாந்தியே எடுத்துக் கொண்டிருந்த சமயம்.  எத்தனை வகை ஊறுகாய்களும், மண் வகைகளும், சாம்பல்களும் இருந்தென்ன ஒரே ஒரு சுளை ஒரு அருமையான கம்மென்று மணம் வீசும் ஒரு பலாச்சுளை மட்டும் இருந்தால்.

அவள் சின்னப் பெண்ணாக இருக்கையில் எதிர்வீட்டில் இருந்த வாத்தியாரம்மா இலஞ்சி கிராமத்துக்கு கூட்டிப் போகையில் முதன் முதல் பலாப்பழம் சாப்பிட்டாள்,  தேனில் தோய்த்துத் தின்ற அந்த பலாப்பழத்தை இந்த ஜென்மத்தில் மறந்துவிட முடியுமா?

பொன்னுசாமி கழுகு மலை திருவிழாவிற்குப் போய் ஒரு முறை சாப்பிட்டு விட்டு மட மடவென்று வாந்தி எடுத்து விட்டார்,  அதிலிருந்து தூரத்தில் பலாப்பழம் வருகிறது என்றால் ஓட்டம்தான்.

இப்பவோ மனைவி கர்ப்ப சங்கை, அவள் ஆசை.  அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்தார்.  கழுகுமலை கோயில்பட்டி சாத்தூர் எங்கெல்லாமோ போய் வந்தார்.  ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலி போனார்.

How to Draw Jackfruit Step by Step (Very Easy) - YouTube

கடைக்காரன் கண்டு கொண்டான். ரெண்டு ரூபாய்க்கு பழத்தைக் கொடுத்து வேப்பங்குச்சியை அடித்து வைத்தால் ரெண்டு நாளில் பழுத்துவிடும் என்றான்.  ஆசாரியிடம் சொல்லி குச்சியையும் வாங்கி அடித்தான். மேலும் நாலைந்து குச்சிகளை பொன்னுச்சாமியும், சங்கரம்மாளும் அடித்தார்கள்.  பழுக்கவேயில்லை.  அப்பறம்தான் சீமையிலிருந்து வந்த வாத்தியார் அது பிஞ்சு பழுக்காது என்று சொன்னார்.

இந்த அற்பவிஷயத்திற்கெல்லாமா மனசை விடுவது என்று சங்கரம்மா மனசைத் தேற்றிப் பார்த்தாள்.  எப்போழுதாவது நடு இரவில் சங்கரம்மா தூக்கத்திலேயே குலுங்கி அழுவாள்.

குழந்தை ஈனஸ்வரத்தில் அழுதது.  கிணற்றுக்குள்ளிலிருந்து துயரம் தாங்காமல் ஒரு பூனை அழுவதுபோல் கேட்கும்.  அதன் ஒலியில் ஒரு ஏக்கம் 

எத்தனை நாளைக்குத்தான் விஷயத்தை மறைக்க முடியும்.  குழந்தையின் நலனை உத்தேசித்து மாமியார் வற்புறுத்தலின்பேரில் தான் பலாப்பழத்தின் மீது ஆசைப்பட்டதை சங்கரம்மா ஒப்புக் கொண்டாள்.

பொன்னுசாமியை தாயார் தனியாகக் கூப்பிட்டு எப்படியாவது எங்கிருந்தாவது பலாப்பழம் வாங்கி வந்துவிடு.  அப்போதுதான் குழந்தைக்கு சீழ் வடிவது நிற்கும்.  குழந்தையும் பிழைக்கும் என்றாள்.

இரண்டு மூன்று நாள் கழித்து ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும் கதவு தட்டும் ஓசை கேட்டு சங்கரம்மாள் விழித்துக் கொண்டாள். அத்தையம்மாள் தூங்கிக் கொண்டிருப்பதால் இவளே எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். பொன்னுசாமி சிரித்துக் கொண்டு தெருவில் நின்று கொண்டிருந்தார்.

மடியிலிருந்த வாழை இலையால் மூடிக் கட்டப்பட்டிருந்த சின்ன பொட்டணத்தை அவிழ்த்து சங்கரம்மாவின் முன்னால் நீட்டினார். பரிவோடு இரு கைகளாலும் ஏந்தித் தன் மனைவியின் முகத்தருகே கொண்டு போனார்.

திரும்பவும் அதே மௌனம்,  சங்கரம்மா அவர் கைகளை தூரத் தள்ளினாள்.  தள்ளிய வேகத்தில் பலாச்சுளைகள் கீழே சிதறி விழுந்து உருண்டன.  கைகளால் முகத்தை மூடிக் கொண்டு சங்கரம்மா மௌனமாக அழுதாள்.

தாமரை , பிப்ரவரி 1962

@

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.