The politics of tamil short story (Ki. Rajanarayanan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam“போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும் கூட.

இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர். இந்த நாடு நம்மை எங்கே அழைத்துக்கொண்டு போகிறது என்று யோசித்தார். சந்தேகமில்லாமல் சுடுகாட்டுக்குத்தான் என்று சொல்லிக்கொண்டார்.”

கி.ரா.வின் ’விடிவு’ கதையின் துவக்க வரிகள் இவை. கரிசல் கிராமங்களில் உழலும் நடுத்தர விவசாயியின் குரலாகத்தான் அவர் சிறுகதைகள் அத்தனையும் அமைகின்றன.விவசாயியின் பொருளாதார வாழ்க்கையின் இல்லாமைகளை மட்டும் பேசவில்லை. அரசின் பாராமுகத்தையும் அது விவசாயிகளுக்கு இழைத்துவரும் அநீதிகளையும் பேசினார். அவர்களின் தாம்பத்திய வாழ்வும் பாலியல் தேட்டங்களும் ஏக்கங்களும்  சேர்ந்தே எந்தக்கழிப்பும் இல்லாமல் அவர் கதைகளில் இடம் பெற்றன. ஒவ்வொரு மனிதர், மனுஷியின் தனித்த பண்புகளையும் இயல்புகளையும் மென்மைகளையும் மேன்மைகளையும் கீழ்மைகளைப் பற்றியும் பேசினார்.  

“சம்சாரி உற்பத்தி செய்யிற எதுவும் விலையில்லாமலும், சம்சாரி வாங்குகிற எதுவும் அகாத விலையில் இருப்பதுக்கும் யார் காரணம்?எல்லா லகானும் சர்க்கார் கையிலெ இல்லாமல் நம்ம பாட்டனார் கையிலெயா இருக்கு…..விலையை நிர்ணயிக்கிற சக்தி இந்த வியாபாரிகளிடம் இருக்கிற வரை சம்சாரி பாப்பர்தான்  என்று நினைத்தார்” என்று கி.ரா. 1980இல் எழுதிய கதைதான் இன்றைக்கும் தொடர்கிறது. இப்போது வேளாண்சட்டங்கள் வந்து சர்க்கார் கை லகானை கார்ப்பொரேட்டுகளிடம் ஒப்படைத்துள்ள கதை நடந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வேளாண் அரசியல் பார்வையுடன் அவருடைய பல கதைகள் இயங்குவதைக்காண முடிகிறது.

நடந்து முடிந்த வரலாறெல்லாம் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே.வர்க்கங்களுக்கிடையில் உணர்வுப்பூர்வமாகவும் உணர்வற்ற நிலையிலும் வர்க்கப்போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டே வருவதுதான் வரலாறு. வர்க்கப்போராட்டத்தில் தொழிலாளி வர்க்கமே ஒரு முன்னணிப்படையாகவும் முற்போக்கான வர்க்கமாகவும் திகழும்.புரட்சிப்பயணத்தில் விவசாயி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் சக பயணியாக நடைபோடவேண்டும்.தொழிலாளி வர்க்கம் விவசாயிகளைத் திரட்ட வேண்டும்.ஆனால்,அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

“அவன் எங்கு சென்றாலும் கல்லில் நார் உறித்தமாதிரி இருந்தது. விவசாயிகளைத் தன் ஆவேசமான பிரசங்கத்தினால் ஒன்று திரட்டி விட முடியும் என்று நினைத்திருந்தான். கூட்டமும் பரவாயில்லை பேச்சும் நன்றாகவேதான் அமைந்திருந்தது. ஆனால் முடிவு என்னசரிதான், நன்றாகத்தான் இருக்கிறதுஎன்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள் விவசாயிகள்! அவர்கள் தொழிலாளர்களைப்போல்அதெப்படி?” என்று கேட்கவில்லை. ‘எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்என்ற ஆசீர்வாத மனப்பான்மை கொண்டிருந்தார்கள் அதுவும் கரிசல்காட்டு விவசாயிகளைப்பற்றிக் கேட்கவா வேண்டும். அவர்களுக்கு. வழிகாட்டுதல் தேவையாக இருந்தது. தலைமையும் தேவையாக இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தை எப்படி வகிப்பது என்பது தான் ஒருவருக்கும் புரியவில்லை. அந்த ஜில்லாவுக்கே அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.”

மேற்கண்ட பகுதி கி.ரா.வின் ”தோழன் ரங்கசாமி” கதையில் வரும் பகுதியாகும்.தொழிலாளி வர்க்கம் கேள்வி கேட்பதைப்போல விவசாயிகள் கேள்வி கேட்பவர்களாக இல்லாமல் ‘ஆசீர்வதிக்கும் மனப்பான்மை’ உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கி.ரா.வின் முக்கியமான கணிப்பு.கண்டுபிடிப்பு.உழுதும் உழுவித்தும் அவர்கள் உருவாக்கும் விளைச்சல்களைப் பிறருக்கு வழங்கியே பழகிய சமூக மனம் அது. ஆனாலும் போர்க்குணமும் கொண்ட வர்க்கம் அது என்பதை டெல்லியை முற்றுகையிட்டு இன்று 2020-21இல் 200 நாட்களுக்கும் மேலாக அவ்வர்க்கம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.இந்தக் கோபத்தையும் கி.ரா தன்னுடைய ’ஒரு வெண்மைப்புரட்சி’ ‘அவுரி’ போன்ற  கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கி.ரா 1940களில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராகச் செயல்பட்டவர்.போராட்டங்களில் பங்கேற்றவர்.தோழர் பி.சீனிவாசராவ் போன்ற தலைவர்களின் வகுப்புகளில் அமர்ந்து மார்க்சியம் கற்றவர்.இரண்டு முறை சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்.

அதனால் அவர் மனக்கட்டமைப்பில் இயங்கியல் பூர்வமான கண்ணோட்டமும் முற்போக்கான மற்றும் இடது திசை நோக்கி நகரும் உந்துதலும் எப்போதும் (அவருடைய இறுதி நாள் வரை) இருந்து கொண்டிருந்தது-எழுத்திலும் சொந்த வாழ்விலும். அதே நேரத்தில் தன்னை ஒரு சம்சாரியாக –நடுத்தர விவசாய வர்க்கத்தின் பிரதிநிதியாக-அடையாளம் கண்டுகொண்டவராக-உணர்பவராக- இருந்ததால்  அந்த வர்க்கத்துக்குரிய முற்போக்கு மற்றும் பிற்போக்குப் பார்வைகளும் அவருடைய சிறுகதைகளில் ஊடும்பாவுமாகப் பரவிக்கிடப்பதையும் காண முடியும்.

கி.ரா எழுதியுள்ள இரண்டு குறுநாவல்கள் உள்ளிட்ட 82 சிறுகதைகளின் பாடுபொருளும் விவசாய வாழ்க்கைதான்.விதிவிலக்காக அசல்,திரிபு,இளைய பாரதத்தினாய்..,மோசம்,சொந்தச்சீப்பு,ஒரு காதல் கதை போன்ற ஐந்தாறு கதைகளைத்தான் பார்க்க முடிகிறது.கரிசல்காட்டு விவசாயம் எப்போதுமே மழையை நம்பிய விவசாயம்.பின்னர் மின்சாரம் வந்த பிறகு சில பகுதிகளில் கிணற்றுப்பாசனம்.அது கரண்ட்டை நம்பிய விவசாயம்.ஆனாலும் பெரும்பகுதி இன்றைக்கும் ’மானம்பார்த்த பூமி’தான். ஆகவே இயல்பாகவே இயற்கையுடனான போராட்டமே இன்னும் முடிவுக்கு வராத ஒரு வாழ்க்கைதான் கரிசல் வாழ்க்கை.

“அதோ மேகங்கள்

மழையைக்கொண்டுபோகிறது

நம்முடைய குளங்கள் வறண்டுவிட்டன

நம்முடைய பயிர்கள் வாடிவிட்டன

விடாதே

மேகங்களை மடக்கு

பணிய வை.” 

என்பது கரிசல் கவி சுயம்புலிங்கத்தின் வாக்கு.சுயம்பு கவிதையில் சொன்னதன் விரிவாக்கம் போல கி.ரா.வின் மாயமான் கதையில் வரும் இப்பகுதி இயற்கையோடு கரிசல் சம்சாரிகள் நடத்தும்  முடிவுறாப்போராட்டத்தின் ஒரு துளியாக : 

”பயிர் பொதிவுக்கு வந்த சமயத்தில் கிணற்றில் தண்ணீர் இல்லை. மழை பெய்வதாகக் காணோம். ஊரிலுள்ள தோட்டப்பயிர்களும் மானாவாரி புஞ்சைப் பயிர்களும் வாடின; கருகின.

ஊரார் எல்லோரும் சேர்ந்து மழைக்கஞ்சி எடுத்தார்கள்; கொடும் பாவி கட்டி இழுத்தார்கள். ஊர்தேவதைகளுக்கும் வனதேவதைகளுக்கும் கிடாய் வெட்டிப் பொங்கலிட்டார்கள். விராட பர்வம் வாசித்தார்கள். தினப்பத்திரிகைகளில் போட்டிருக்கும் காலநிலையை ஊன்றிப்படித்தார்கள்.சாதாரண ஜோஸியர்களிடம்கூடமழை எப்பொழுது பெய்யும்?” என்று கேட்டார்கள். மழை பெய்வதாக இல்லை. வெள்ளைவெயில் அடித்தது. என்றாவது ஒரு நாள் கருமேகங்கள் கூடி சூரியனை பலமாகப் பந்தல்போட்டு மறைக்கும். சூல்மேகங்கள் கனம் தாங்காது இப்போது பூமியில் இறங்கிவிடும் போலிருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பெருங்காற்று வந்து மேகங்களையெல்லாம் பாய் சுருட்டுவதுபோல் சுருட்டிக்கொண்டு போய்விடும். ஜனங்கள் முணுமுணுப்பார்கள். முகத்தைச் சுளித்துக் கொள்வார்கள். ஒருவரிடம் ஒருவர் மாறிமாறி ஒன்றுமில்லாமல் போய்விட்டதே இப்படி என்று கேட்டுக்கொள்வார்கள். “நாம் என்னத்தைப் பிழைக்கப் போகிறோம்என்று சலித்துக்கொள்வார்கள். செட்டியாரின் முகத்திலிருந்து கவலை மாறி பீதிபடர்ந்தது.

பயிர்கள் எல்லாம் கருகிச் சருகாக மாறின. விவசாயிகள் வெறும் தாளை அறுவடை செய்தார்கள். கால்நடைக்கு கொஞ்சம் தீவனம் கிடைத்துவிட்டது; மனிதனுக்கு என்ன செய்வது?

கிணறுகளில் குடிதண்ணீர் இல்லை. வாளிக்கு உழக்கு தண்ணீர் வந்தது. வயது முதிர்ந்த கிழவர்கள் தாதுவருஷ பஞ்சத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.”

இயற்கையுடனான போராட்டத்துக்கு விவசாயிகள் பக்கம் உற்ற துணையாக நிற்க வேண்டிய அரசாங்கம் ”கிணறு வெட்டிப் பிழைத்துக்கொள்ளுங்கள்” என்று லோன் கொடுத்து,அது கிணறு வெட்டப் போதாத தொகையானபடியால் விவசாயிகள் தனியாரிடம் மேலும் கடன் வாங்கி,வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் காட்டையே இழந்து வாழ்க்கைக்கான பிடிதாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

இப்போது அவர்கள் இயற்கையை எதிர்த்த போராட்டத்தோடு இரண்டாவது போர்முனையாக அரசாங்கத்தை எதிர்த்த போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.கி.ராவின் அரசியல் கதைகள் என இங்கு அடையாளப்படுத்தப்படும் 15 கதைகளில் பெரும்பாலான கதைகளில் சம்சாரிகளின் இவ்விரு போராட்டங்களுமே முக்கியப்பேசுபொருளாக இருக்கின்றன.  அரசியல் பேசிய கதைகள்

மாயமான் (சரஸ்வதி நவ 1958), கதவு (தாமரை-ஜன 1959) , தோழன் ரங்கசாமி (தாமரை ஜன 1960), கரண்டு (சாந்தி ஏப் 1962), குடும்பத்தில் ஒரு நபர் (சாந்தி ஏப்,1963), அவத்தொழிலாளர்கள் (1965), எங்கும் ஓர் நிறை (சாந்தி ஜூலை 1971)வேட்டி (தாமரை ஏப் 1972), பாரதமாதா (பாலம் 1977), ஒரு வெண்மைப்புரட்சி (ஜூன் 1980), விடிவு (நாற்றங்கால்-செப் 1980)அவுரி (தினமணி கதிர் ஜன 1982) தாவைப் பார்த்து (ஆக 1984 அன்னம் விடு தூது) நடிப்புச் சுதேசி (ஓம் சக்தி தீபாவளி மலர் 2007) ஆகிய கதைகளில் சமகால அரசியலைப் பேசியிருக்கிறார்.

மிகவும் பேசப்பட்ட கதை ‘கதவு’ வரிகட்டமுடியாத ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் கதை அது.சுதந்திர இந்தியாவில் கிராமப்புற மக்களிடம் வீட்டுத்தீர்வை கறாராக வசூலிக்கும் நடைமுறை அன்று இருந்தது.புதிய முதலாளித்துவ ஜனநாயக அரசிற்கு முக்கியமான வருவாய் வரிகளின் மூலம் வந்தது.வரிகளில் இரண்டு வகை உண்டு .ஒன்று நேர்முக வரி.இன்னொன்று மறைமுக வரி.நேர்முக வரி என்பது பணக்காரர்களிடம் வசூலிக்கப்படும் சொத்துவரி,வணிகவரி,வருமான வரி போன்றவை.மறைமுக வரி என்பவை மக்கள் வாங்கும் பொருட்களின் விலைகளுக்குள் முகம் புதைத்து ஒளிந்திருக்கும் வரிகள்.இவை போகவும் நிலத்தீர்வை,வீட்டுத்தீர்வை போன்றவையும் ஏழை மக்களிடம் நேரடியாக வசூலிக்கப்படும் வரிகள்..விளைந்தாலும் விளையாவிட்டாலும் வரி கட்டணும்.ஆண்டாண்டு காலமாய் மன்னர்கள் காலந்தொட்டு இன்றுவரை ஆட்சியாளர்கள் மக்கள் மீது தொடுக்கும் பொருளாதாரத்தாக்குதலின் முக்கிய ஆயுதம் இந்த வரி மற்றும் தீர்வை.

கதவு கதையில் வரும் தாய் தன் கணவன் கூலி வேலை தேடி மணிமுத்தாறு போய் ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட பின்னணியில், காட்டு வேலைக்குச் சென்று தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறாள்.வீட்டுத்தீர்வை கட்டாத காரணத்தால் வீட்டுக்கதவைக் கழற்றிக்கொண்டு போய்விடுகிறது நிர்வாகம்.கதவில்லாத வீட்டுக்குள் குளிர்ந்த காற்றும் மழைச்சாரலும் பாம்பும் பூச்சிகளும் வந்து போகின்றன.காய்ச்சி வைத்த கஞ்சியை நாய் குடித்துப்போகிறது.இதையெல்லாம் பிரச்சாரமாக இக்கதை பேசவில்லை.அந்தக்கதவை ஒரு  வண்டியாக பாவித்துக் குழந்தைகள் அதில் டிக்கட் எடுத்துக்கொண்டு ஏறுவதும் இறங்குவதுமான விளையாட்டைத் தினமும் ஆடுகிறார்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் தீப்பெட்டிப்படங்களை சோற்றுப்பசை தடவி அதில் ஒட்டுகிறார்கள்.அவர்களுடைய அப்பா சிறுவயதில் ஒட்டிய படம் கூட அக்கதவில் மங்கலாகத் தெரிகிறது.அப்பேர்ப்பட்ட கதவைத்தான் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

சத்யஜித்ரே யின் “பதேர்பாஞ்சாலி” படத்தில் வரும் குடிசையும், மழையோடு மல்லுக்கு நின்று, கதவில்லாத தன் குடிசைக்குள் தன் குழந்தைகளைக் காப்பாற்ற அந்தத்தாய் (கருணா பேனர்ஜி)போராடும் காட்சியும் கதவு கதையை வாசிக்கும்போது தவிர்க்கவியலாதபடி நினைவுக்கு வருகிறது.’70 களின் பிற்பகுதியில் இப்படத்தை கி.ரா. கோவில்பட்டியில் தோழர்கள் ’ஆதர்ச’ திரைப்படக்கழகத்தின் வழி திரையிட்டபோது பார்த்து வியந்திருக்கிறார்.

பெரியவர்கள் பார்வையில் அக் கதவின் அர்த்தம் வேறு.குழந்தைகள் பார்வையில் அர்த்தம் வேறு.அரசு எந்திரத்தின் பார்வையில் அதன் பொருள் வேறு.தங்கள் வீட்டுக்கதவை தலையாரி தூக்கிச்செல்லும்போது அதன் துயரம் புரியாமல், அதையும் ஒரு விளையாட்டாகக்கருதிக் கதவுக்கு முன்னால் பீப்பி ஊதி டண்டணக்கா போட்டு நடக்கும்  குழந்தைகள் உலகம் வாசக மனதை அதிரச்செய்கிறது.குழந்தைகள் மனதில் வறுமையையையும் பெரியவர் உலகத்து நீதிகளையும் ஏற்றுவதைப்போல ஒரு துயரம் உலகில் உண்டா? கஞ்சியை நாய் குடித்துவிட்டுப்போக, “தன் தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாளே  என்று நினைத்து உருகினாள் லட்சுமி” என்கிற ஒரு வரி நம்மை உருக்கி விடுகிறது.குழந்தைகளின் உலகத்துக்குள் இருந்து இந்தக்கதையைச் சொன்ன விதம்தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீண்ட காலத்துக்கு ’கதவு’ கதையே அவரது அடையாளமாக இருந்தது.அந்தக்கதையை எழுத நேர்ந்த கதையை விரிவாக ’கதைக்கு ஒரு கரு’(தாமரை-செப் 1965) என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.  

”ஒரு நாள், தீர்வை போடுவதற்கு நான் எங்கள் ஊர் கிராம முன்சீப் கச்சேரிக்குப் போயிருந்தேன். கிராம முன்சீப் ஐயர் உட்கார்ந்திருந்த அறைக்குப் பக்கத்து அறைக்குள் தற்செயலாக எட்டிப் பார்த்தேன். அங்கே தரையில் சுவரின் மேல் ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டு இருந்தது. உள்ளுக்குப் போய்ப் பார்த்தேன். அந்தக் கதவின் மீது கறையான் பற்றி ஏறி இருந்தது, ஐயரிடம் கேட்டேன் ஏது இந்தக் கதவு என்று. ஐயர் சொன்னார், தீர்வை பாக்கிக்காக இந்தக் கதவைப் பிடுங்கிக்கொண்டு வந்திருக்கிறோம் என்று. எனக்கு இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! எவ்வளவு பாக்கிக்காக என்று கேட்டேன். எட்டு அணா என்றார், “எட்டு அணாவுக்காகவா? இது என்னகூத்து‘! ஏன் கதவைப் பிடுங்கிக்கொண்டு வரணும்; வேறு எதையாவது செய்யக் கூடாதா?”

ஸ்தாவர, சங்கம சொத்துக்களில் முதலில் சங்கம சொத்தைத்தான் பறிமுதல் செய்து கொண்டு வரவேண்டுமென்று சர்க்கார் உத்தரவு எங்களுக்கு

ஸ்தாவரம் என்றால் அசையாப் பொருள்; சங்கமம் என்றால் அசையும் பொருள். கதவு அசையும் பொருளல்லவா!! 

என் சங்கடத்தைப் புரிந்து கொண்டு ஐயர் மேலும் சொன்னார். ”சாப்பிடுகிற வட்டில் அல்லது கும்பா, செம்பு ஏதாவதுதான் எடுத்துக்கொண்டு வருவோம், ஆனால், அந்த வீட்டில் கும்பாவோ, செம்போ ஒன்றும் இல்லை.”

அந்தக் கதவை இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன். கவனித்துப் பார்த்ததில் அதில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒட்டியிருப்பது தெரிந்தது. அதைப்பார்த்ததும் என் மனசு மிகவும் வேதனை அடைந்தது; அது அழுதது என்று சொன்னால் சிரிப்பீர்கள் நீங்கள்!

பிஞ்சு மனமும் பிஞ்சு விரல்களும் ஒட்டிய படம் அது. பால்ய வயசில் என் வீட்டுக் கதவில் நானும் அந்த மாதரி படம் ஒட்டியிருக்கிறேன். கதவில் ஏறி நின்றுகொண்டு தள்ளி ஆட்டி விளையாடி இருக்கிறேன், எல்லாக் குழந்தைகளையும்போல. இப்பொழுது நானே தீர்வை போடமுடியாத நிலையில் இருப்பதாகவும், என் வீட்டுக் கதவையே உருவிக்கொண்டு போவதைப் போலவும் ஒரு காட்சி என் மனக்கண் முன் தோன்றியது. அதற்காகத் துக்கப்பட்டேன்!

கச்சேரியில் பார்த்த இந்தக் கதவு விஷயம் ரொம்ப நாளாக என் மனசில் கிடந்து உறுத்திக்கொண்டே இருந்துகொண்டே இருந்தது.

ரொம்பநாள் கழித்து, லியோடால்ஸ்டாய், குழந்தைகளை வைத்து எழுதிய ஒரு கதைத் தொகுதியைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு கதை. ஒரு குழந்தை வாசலில் நின்று கொண்டிருக்கிறது. வரி வசூலிக்கிற அதிகாரி வரிபாக்கியைக் கேட்க அந்த வீட்டுக்கு வருகிறான். வீட்டில் வேறு யாருமில்லை அந்தக் குழந்தையைத் தவிர. “அப்பா வந்தவுடன் சொல்லு, வரி கேட்பதற்கு இன்னார் வந்திருந்தார் என்று?” என்று அதிகாரி குழந்தையைக் கேட்டுக் கொள்கிறார். சரி என்று தலையை ஆட்டிவிட்டு குழந்தை அவரிடம் ஒரு சந்தேகம் கேட்கிறது. ‘வரி என்றால் என்ன?” என்று வந்த அதிகாரிக்குச்சங்கடமாக போய்விடுகிறது இதை எப்படி இந்தக் குழந்தைக்கு விளக்கிச் சொல்ல என்று. ‘குழந்தேநம்முடைய ஜார் சக்கரவர்த்திக்கு நாம் எல்லோரும் கொடுக்கிற பணத்துக்குத்தான் வரி என்று சொல்லுகிறதுஎன்கிறார்.

ஜார் சக்கரவர்த்திக்காக! அவர்தான் பெரிய பணக்காரர் ஆச்சே, அவருக்கு ஏன் நாம் பணம் கொடுக்கணும்?’

சே, இது பொல்லாத விரியன் பாம்புக் குட்டியாக இருக்கும் போலிருக்கிறதே!’ என்று குழந்தையைப் பற்றி நினைத்துக் கொள்கிறார்.

நம்மைப் பாதுகாக்க போலீஸ் பட்டாளம் வைத்திருக்கிறார். நமக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க பள்ளிக்கூடங்கள் வைத்துத் தந்திருக்கிறார், நம்முடைய சக்கரவர்த்தி நம்முடைய நன்மைக்காக நம்மிடம் வரிவசூல் செய்கிறார்‘. ‘வரிகொடுக்க முடியாவிட்டால் என்ன செய்கிறது?’ ‘சே; சே. இது பொல்லாத சைத்தான் குட்டியாக வரும் போலிருக்கிறதே!’ என்று நினைத்துக்கொண்டு, ‘வரி கொடுக்க முடியாவிட்டால் உங்கள் வீட்டுப் பசுமாட்டை பிடித்துக்கொண்டு போய்விடுவோம்.”

நம்முடைய நன்மைக்காகத்தான் ஜார் சக்கரவர்த்தி நம்மிடம் வரிவசூல் செய்கிறார் என்று சொன்னீர்களே; எங்களுடைய பசு மாட்டையே பிடித்துக்கொண்டு போய்விட்டால் எங்களுக்கு என்ன நன்மை ?

அந்தக் குழந்தையின் இந்தக் கேள்வியோடு முடிகிறது கதை. இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன், என்னுடையகதவுகதையாக எழுதவேண்டுமென்ற தாகம் என்னைப் பிடுங்கித் தின்றது.

நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கதை எழுதப் போகிறேன், எழுதப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டே திரிந்தேனே தவிர எழுதிவிடவில்லை .

ரொம்ப நாளைக்குப் பிறகு, ஆனந்த விகடனில் ஒரு பெரிய சிறுகதைப் போட்டி வைத்தார்கள். சிறுகதைகள் எழுதியே பழக்கமில்லாத என்னை, என் மனைவி இந்தப் போட்டிக்கு ஒரு கதை எழுதும்படி தூண்டினாள்.

கதைக்கு மூணாவது பரிசுகூட கிடைக்காதது மாத்திரமல்ல சாதாரணக் கதையாகக்கூட அது பிரசுரமாகவில்லை என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை!

தாமரை யின் பொங்கல் மலரில் ஒரு வருஷம் கழித்துகதவுபிரசுரமானபோது தமிழ்நாட்டில் பிரபல எழுத்தாளர்கள் சிலர்சிறந்த கதை இதுஎன்று பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். என் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று!

பொதுவாக நான், கேள்விப்படும் விஷயங்களை வைத்துக் கதை எழுதுகிறதில்லை .”இந்த நீண்ட பகுதி ‘கதவு’ காலத்துக்  கி.ரா அவர்களின் அன்றைய (60 களின்) படைப்பு மனநிலையையும் பத்திரிகைகளின் தராதரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

கூடுதலாக கதவு கதைக்கு இன்னொரு அரசியல் பின்புலமும் இருப்பதாக தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் கூறியதாகக் கேள்விப்பட்டு 12-06-2021 அன்று அவரோடு பேசினேன்.அவர் என்னிடம் கூறியது:

”அன்றைக்கு ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருந்த கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரத்தில் இந்த மாதிரி கெடுபிடியான தீர்வை வசூலை அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்தது.மாடுகளைப் பிடித்துக்கொண்டுபோய் பவுண்டில் அடைப்பது.ஒன்றுமில்லாத வீடுகளில் கதவுகளைக் கழற்றிக்கொண்டு போய்விடுவது என்று அராஜகமாக நடந்துகொண்டிருந்தது.அதற்கு எதிராக 100 நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாத போராட்டம் நடத்தியது.”வரிவஜா இயக்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் விளாத்திகுளத்திலிருந்து சங்கரன்கோவில் வட்டாரம் வரை தீவிரமாகப் பரவியது.அந்தப்போராட்டத்தில் கி.ராஜநாராயணனும் பங்கேற்றார்.இந்தப் போராட்டத்தின் இலக்கிய விளைச்சலாக வந்ததுதான் ‘கதவு’ கதை.”

கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு எழுத்தாளராக அன்று இருந்த கி.ரா. இந்தக் கட்சிப்போராட்டம் பற்றியெல்லாம் கதைக்குள் எதையுமே கொண்டுவராமல் நேரடியாக ஒரு வரிகூட அரசியல் பேசாமல்,ஆனால் வாசக மனதில் என்ன உணர்வைத் தூண்ட வேண்டுமோ அதைத்துல்லியமாகத் தூண்டியுள்ளார்.கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்று இயங்கும் படைப்பாளிகளுக்கான பாடமாக இக்கதையை நாம் பரிந்துரைக்கலாம். 

அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் எப்படி விவசாயிகளுக்குக் கெடுதலையே கொண்டு வந்தன என்பதையும் அரசு எந்திரம் சம்சாரிகளை எப்படிப் புறக்கணித்தது என்பதையும் ஒவ்வொரு கதையிலும் கலாபூர்வமாகப் பேசுகிறார்.

‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெட்னரி டாக்டரைப் பார்க்கப்போய் வெறுத்துத்திரும்பும் தொட்டணக்கவுண்டரைப் பார்க்கிறோம்.

“பிளாக் டெவலப்மெண்ட் ஆபீஸில், கண்ட அதிகாரிகளையெல்லாம் தொட்டணன் ஏற்கனவே அவனுடைய ஊரில் வைத்துப் பார்த்தவர்கள் தாம். ஆனால் அதில் யார் யார் இன்னார் என்று தெரியாது. அவர்கள் கிராமத்துக்கு வருவதும் போவதும் பார்க்கவே ஒரு வேடிக்கையாக இருக்கும். என்ன சோலிக்காக வருகிறார்கள், என்ன சோலிக்காகப் போகிறார்கள் என்றே தெரியாது. சர்க்கஸில் ஒரு சைக்கிளில் கூடியபட்சம் எத்தனை பேரை ஏற்றமுடியுமோ அத்தனைபேரையும் ஏற்றிக்கொண்டு சுற்றிவருகிற மாதிரி இவர்கள் தங்கள் ஜீப்பில் எத்தனை பேர் அதிகம் கொள்ளுமோ அதற்கும் அதிகமானவர்கள் அதில் வருவார்கள். அவர்கள் கூட ஒரு பெண்ணும் வந்திறங்குவாள் ஜீப்பிலிருந்து. அந்தப் பெண் வரும்போதெல்லாம் ஒவ்வொருவிதமாகத்  தன்னுடைய கூந்தலை முடிந்திருப்பாள். அடேயப்பா சேலைகள் தான், அதில் கலர்கள் தான் எத்தனைவிதம்! அந்த அம்மாள் இறங்கி கைகளை அப்படியும் இப்படியும் வீசி ஒரு சின்ன யானைக்குட்டியே வந்தமாதிரி நடந்து வருவாள்.

தொட்டணன் இப்பொழுது வெட்னரி டாக்டர் மேஜைக்கு முன்னால் போய் நின்றான். இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு ஒரு கும்பிடு போட்டான். தலை அசைப்பாலேயே அதை ஏற்றுக் கொண்டார் டாக்டர். முதலில் ஊர், அப்புறம் மாட்டுக்கு என்ன செய்கிறது, இரண்டொரு அறிகுறிகளைச் சொன்னவுடனேசரி நிறுத்துஎன்ற பாவனையில் கையை அசைத்தார். உடனே தீப்பெட் டியை எடுத்து அதில் ஒரு குச்சியை ஒடித்து தன்னுடைய பல் இடுக்கு களிலுள்ள ஊத்தையை குத்தி இழுத்து இழுத்து நாக்கில் தடவிக் கொண்டார். அப்புறம் குச்சியை முகர்ந்து பார்த்து தூர எறிந்துவிட்டு, “சரி பீடிஓ இடம் போய்ச் சொல்லிவிட்டு வாஎன்று கை காண்பித்து அனுப்பினார். இந்த டாக்டருக்கும்பீடிஓவுக்கும் சதா தகராறு. அவசரக் கேஸ்களுக்கு ஜீப் கொடுத்து உதவமாட்டார். தொட்டணன் விஷயத்திலும் அப்படியே ஆயிற்று.”

கிராமத்துக்கு வந்து போகும் அதிகாரிகள் பற்றிய முதல்பத்தி சம்சாரிகள் உலகத்திலிருந்து அதிகார வர்க்கத்தைக் கேலி பேசும் பகுதி.இந்த நக்கல்பார்வை இன்றைக்கும் கிராமப்புறங்களிலும் நாட்டார் இலக்கியங்களிலும் தொடர்வதைப் பார்க்கிறோம்.இரண்டாவது பத்தியில் பல் ஊத்தையைக் குத்துபவராக ஒரு அதிகாரியைச் சித்தரிப்பது வாசக மனதில் அதிகார வர்க்கத்தின் மீது அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.தீர்மானகரமாக அவர்களெல்லாம் இப்படித்தான் என்று ஓங்கி முத்திரை குத்தும் சித்தரிப்பு.இது கி.ரா என்கிற சம்சாரியின் கலை அரசியல்.

‘மாயமான்’ கதை முழுக்கவே கிணற்று லோன் வழங்கி சம்சாரிகளைச் சீரழிக்கும் அரசுத்திட்டம் பற்றிய கதை.மானம் பார்த்த பூமியான கரிசல் நிலத்தில் வாழும் விவசாயிகளுக்கு “ மழை இல்லியே என்று இனி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.புஞ்சைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சர்க்கார் கிணறு தோண்ட  ஒரு கிணற்றுக்கு நானூறு ரூபாய் இனாமாகக் கொடுக்கிறரகள்” என்கிற அரசாங்க அறிவிப்பு இன்பத்தேனாக வந்து பாய்கிறது.ஆனால் எல்லோருக்கும் அழுதது போக அப்பாவுச் செட்டியாருக்கு முந்நூறு ரூபாய் மட்டுமே கை  வந்து சேர்கிறது.மீதிப் பணத்துக்கு, வட்டிக்கு விட்டு விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் ‘நல்லவரான’ ஸ்ரீமான்அய்யவார் நாயக்கரிடம் வந்து வசமாக மாட்டிக்கொண்டு நிற்கிறார்.வட்டி கட்ட முடியாமல் தன் நிலத்தை இழந்து பஞ்சம் பிழைக்க தஞ்சாவூருக்கு ரயில் ஏறுகிறது அப்பாவுச் செட்டியாரின் குடும்பம். கதையைக் கி.ரா. முடிக்கும் விதம் முக்கியம்.

சோழவந்தானைத் தாண்டி ரயில் போய்க்கொண்டிருக்கையில் ரயிலின் சகபயணி ஒருவர் பக்கத்தில் கிடந்த பத்திரிகையை எடுத்து பலமாக வாசிக்கிறார்:

கிணறு வெட்ட சர்க்காரால் இனாமாக ரூபாய் வழங்கப்படும் திட்டத்தை, விவசாயிகளின் நன்மையை உத்தேசித்து நீடித்திருக் கிறார்கள், இந்த வருஷம் கிணறு ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் இனாமாகக் கிடைக்கும். விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கி தேச சுபிட்சத்துக்குப் பாடுபடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

செய்தியைக் கேட்ட மற்றவர்கள் சந்தோஷப்பட்டார்கள். செட்டியாரின் ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் கோவைப்பழம் போல் ஜிவ் என்று சிவந்தன. வேகமாகப் பாய்ந்து பத்திரிகையைடபக்என்று பிடுங்கி சுக்குநூறாகக் கிழித்தார். எல்லோரும் திகைத்தார்கள். என்ன காரணம் என்று ஒருவருக்கும் ஒன்றும் விளங்க வில்லை! நல்லசிவம் செட்டியார் மாத்திரம் ஒரு கோணல் புன்னகை செய்தார்.”

கி.ரா.இக்கதையில் அரசாங்கத்தைத்தான் சுக்கு நூறாகக் கிழித்து எறிகிறார்..அழுத்தமான அரசியல் முத்திரையுடன் கூடிய ஒரு கதை முடிப்பு.

“கரண்டு” கதை கரிசக்காட்டுக்கு மின்சாரம் வந்து விவசாயத்தைச் சீரழித்த கதையைப் பேசுகிறது.”கரண்ட்டை நம்பிக் கலியாணம் வைக்காதே.எலக்ட்ரியை நம்பி எலை போடாதே” என்றொரு சொலவடையே கரிசல்காட்டில் உண்டு.சொலவடைகள் என்பவை மக்கள் மனங்களிலிருந்து இயல்பாக  வெடித்துச் சிதறும் வார்த்தைக் கங்குகள்.ராமசாமி நாயக்கர் தன்னுடைய நாலு ஏக்கர் தோட்டத்தில் சோளம் முளைக்கட்டி இருந்தார்.தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சணும்.இல்லாவிட்டால் எறும்புகள் தானியத்தைக் காலி செய்துவிடும்.ஆனால் இந்த எழவெடுத்த கரண்டு ஷிப்டு முறையில்தான் வரும்.பாதியில் கரண்டு போய்விட ,”படுபாவிப்பயல்கள்.இன்னும் கொஞ்ச நேரம் கரண்டு கொடுத்தால் என்ன;கொள்ளையா போகிறது?” என்று சொல்லி மண்வெட்டியை நங்கென்று ஓசையெழ விட்டெறிந்தார்.” விட்டெறிந்த அந்தத்திசையில் மின்சார அமைச்சரோ அல்லது மின்சார போர்டு கனம் மெம்பர்களோ இருந்தால் செத்தொழிந்திருப்பார்கள் என்று கடுமையான வார்த்தைகளில் கி.ரா. எழுதுகிறார்.

“நாள் முழுதும் கரண்டு வேண்டும்-சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள் பூராவும் கரண்ட் வேண்டும்  என்று ஒரு மனு எழுதிக்கொண்டு ராமசாமி நாயக்கர் கோவில்பட்டிக்கு வந்தார்” அங்கே மின்சார இலாக்கா அதிகாரிகளிடம் அவமானப்பட்டு அலைந்து திரிந்து நடந்தே ஊர் திரும்புகிறார்.”அவர் இன்னும் நகரத்தின்  மையத்தைத்தான் தாண்டி இருந்தார்.பையப்பைய இருள்பரவ ஆரம்பித்தது; ஜில்லென்று நகரமே மின்சார ஒளிவிளக்கில் மூழ்கிப் பிரகாசித்தது.

விளம்பர அலங்கார ஒளி எழுத்துக்கள். அவைகளில் தான் எத்தனை கலர்கள்; அணைந்து அணைந்து தானாகப் பொருந்திக் கொள்ளும் பல்புகளின் சரவரிசை வேறு; ஒரு, தெய்வலோகமாகக் காட்சி அளித்தது நகரம்.

எவ்வளவு பிரகாசம் வெளியில் இருந்ததோ, அவ்வளவு மன இருட்டில் புழுங்கித் தவித்தார் நாயக்கர்.

தண்ணீரில் விழுந்த கோழி, கரையேறி தன் இறக்கைகளை சட சடவென்று அடித்து உதறுவதுபோல், நாயக்கர் தன் மனதைக் கவ்வியிருந்த கோழைத்தனமான எண்ணங்களை உதறி எறிந்தார். வேஷ்டியை அவிழ்த்து இறுகக் கட்டித் தார் பாய்ச்சினார், கால்களை அகலப் பரப்பிக்கொண்டு மேல்த்துண்டை உதறி, அழுத்தமாகத் தலையில் லேஞ்சி கட்டிக்கொண்டு டிரான்ஸ்பார்மரை நோக்கிப் போனார்.

ஒன்றையும் தொடாமலேயே அவருக்கு ஒருஷாக்அடித்தது. செய்யவேண்டிய காரியம் இது அல்ல; அது இதைவிட முக்கியமானது என்று தோன்றியது. தன் சக விவசாயிகளை நோக்கி நடந்தார்!”

1962இல் இக்கதையை தோழர் எஸ்.ஏ.முருகானந்தம் நடத்திய ’சாந்தி’ இதழில் எழுதியிருக்கிறார்.கிராமத்தில் விவசாயத்துக்கே கரண்டு இல்லை இங்கே நகரத்தில் இப்படி வெட்டியாகச் செலவழிக்கிறார்களே என்கிற ஆத்திரம் தலைக்கேறி ட்ரான்ஸ்பார்மரை உடைத்து நகரை இருட்டாக்க வேண்டும் என்று ஆத்திரம் கொள்ளும் விவசாயியை அடுத்த வரியிலேயே கி.ரா ’நல்வழிப்படுத்தி’ தன் சக விவசாயிகளை நோக்கி நடக்க வைக்கிறார். தன் வர்க்கத்தை அணிதிரட்ட அனுப்பி வைக்கிறார்.ஒரு ‘முற்போக்கான’ முடிவைத் தயக்கமின்றி முன்வைக்கிறார்.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

ஆனால் விவசாயிகளை அவ்வளவு லேசில் திரட்டி விட முடியாது என்று தோழன் ரங்கசாமி கதையில் சொல்லியிருப்பது இங்கே நினைவுக்கு வருகிறது.அதை எழுதியது 1960இல்.கரண்டு எழுதியது 1962இல்.

”அவத்தொழிலாளர்கள்” கதையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இடைசெவல் கிராமத்துக்கு பஸ் எங்கே நிக்கும்?டிக்கட் எங்கே போடுறாக என்று பிச்சை கேட்பதைப்போல ஒரு ‘பட்டிக்காட்டுக் கிழவி’ கண்ணில்பட்ட கண்டக்டட் ,டிரைவரிடமெல்லாம் கேட்டுக்கொண்டு அலைகிறாள்.ஆனால் அந்தப் பேருந்துத் தொழிலாளர்களோ இவளுக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லாமல் ஒரு ஆனந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.அந்தப்பேருந்து நிலையத்தில் மூட்டைதூக்கிப்பிழைக்கும் ஒரு 18 வயதுச் சிறுவன்.கருத்து மொழு மொழுவென்று இருக்கும் அவனது திரேகத்தைப் பார்த்தாலே இந்தக் கண்டக்டர் டிரைவர்களுக்கு அவனை அடித்து விளையாட வேண்டும் என்று தோன்றிவிடும்போல.அவன் கோபத்தில் கல்லை எடுத்துக்கொண்டு எறிவது போல வருவான்.ஆனால் எறிய மாட்டான்.அவன் கல்லைக் கீழே போட்டதும் எல்லோரும் சேர்ந்து அவனை மொத்துவார்கள்.அவன் அழுதுகொண்டே எல்லோரையும் கண்டபடி திட்டுவான்.”இது தினம் தவறாமல் நேரம் தவறாமல் நடக்கும் கண்கொண்டு பார்க்க முடியாத ‘கங்காட்சி’”.

இக்கதையை முடிக்கும்போது 50 வருடங்களுக்குப் பின்னால் எல்லாமே மாறி கண்டக்டர்கள் தேவதூதர்களைப்போல பயணிகளிடம் அன்பாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ளும் காட்சியை ஒரு கனா போலச் சொல்லி முடிக்கிறார்.இக்கதையில் அரசியலாக ஒரு கனவு இருக்கிறது.அதைவிடக் கூர்மையாக அந்த கூலித்தொழிலாளியை பேருந்துத்தொழிலாளிகள் தேவையில்லாமல் அடித்து அழ வைக்கும் காட்சியைப்பற்றி கி.ரா. எழுதும் ஒரு வரி இயங்கியல் பூர்வமாக,  கதையின் மைய அச்சுப்போல நிலைக்கிறது.

அவ்வரி: “யார் யாரிடமோ தாங்கள் பட்ட துன்பங்களையும் யார் யார் மீதோ தாங்கள் காட்ட வேண்டிய ஆங்காரத்தையும் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் இந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் அனாதையிடம் காட்டிக்கொண்டிருந்தார்கள்”  

இன்னொரு வலுவான அரசியல் கதை “அவுரி”.கரிசல் காட்டுக்கு அவுரிச்செடி வந்தது ஆங்கிலேயர் காலத்தில்.அது நம் நாட்டில் பயன்படவில்லை.”அவ்வளவும் வெளிநாட்டுக்குத்தான்.இதனால் சர்க்காருக்குப் பவுன் பவுனா வெளிநாட்டுச் செலவாணி கிடைக்குது…இதை ஒழுங்குபடுத்தத்திராணி இல்லையே இவனுகளுக்கு,என்னவோ விவசாயிகளுக்குக் கிளிக்கப்போறதா பேச்சுத்தான்;காரியத்திலே ஒரு புண்ணாக்கையும் காணோம்.” என்று பொட்டில் அறைவதுபோன்ற வாசகங்களை இக்கதை முழுதும் எழுதிச்செல்கிறார், கி.ரா.அவுரிக்கு விலை இல்லாமல்போய் உழைத்து விளைவித்த அவுரி முழுவதையும் குப்பையில் கொட்டுகிறார் தாசரி நாயக்கர்.அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பகுதிகள் மனதைக் கலங்க வைக்கின்றன.

ஆனால் கதையைச் சோகமாக முடிக்காமல் இப்படி முடிக்கிறார்; “ இதுசரியில்லை.இப்படிச் செம்மறி ஆடுகளைப்போல சம்சாரிகள் ,வருகிற துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டு  தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கிடப்பது முறையில்லை.ஏதாவது செய்யணும்;செய்தே ஆகணும்” என்று தீர்மானித்தார்.’கரண்டு’ கதையில் வரும் விவசாயியைப்போலவே அவுரி கதையின் விவசாயியும் ஏதாவது செய்யணும் என்பதன் மூலம் அணிதிரளும் அரசியலையே முன் வைக்கிறார் கி.ரா. இந்த அவுரி கதையை அவர் ஜனவரி 1982இல் தினமணிக் கதிர் இதழில் எழுதியிருக்கிறர். ஆகவே வெகுசன இதழ்களுக்கு எழுதப்போனதால் அவர் தேய்ந்து போனார் ,அவர்களுக்கு ஏற்ற கதைகளை எழுதினார் என்று வரும் விமர்சங்களை ஏற்க இயலவில்லை.60 களுக்குப் பிறகு அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியபிறகு மக்கள் பிரச்னைகளை வைத்துக் கதை எழுதவில்லை என்கிற வாதமும் அடிபடுகிறது. 

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கக்காலத்தில் அரசு விதித்த தடையை மீறி ஒரு தலைமறைவு அரசியல்வாதிக்கு தன் குடிசையில் ஒளிந்திருக்க இடம் கொடுத்த தூங்கா நாயக்கர் பிரிட்டிஷ் காவல்துறையால் தாக்கப்படுகிறார்.”அடியென்றால் ,அது உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி அல்ல.பழைய பித்தளைப்பாத்திரக்கடைக்காரன் அருமையான பாத்திரங்களையெல்லாம் தெருவிலே போட்டு அடித்து நைப்பானே அந்த மாதிரி அவரைப்போட்டு அடி ‘நச்சி’ எடுத்தார்கள்.உட்கார்ந்தால் மிதி.எழுந்தால் அடி.” அடித்த போலீசுக்குக் காலும் கையும் வலித்ததால் பிழைத்துப்போ என்று விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால், அவரும் ஒரு ‘ஆகஸ்ட்டு தியாகி’ ஆகியிருப்பார்.

அப்பேர்க்கொந்த தூங்காநாயக்கருக்கு இன்று இருப்பது ஒரே ஒரு வேட்டிதான்.அதுவும் இன்று குனியும்போது பிய்ந்துவிட்டது.கிழியவில்லை பிய்ந்து விட்டது.சுதந்திர தினக்கொண்டாட்டத்துக்காக அவரிடம் நன்கொடை கேட்டு ஊர்ப்பிரமுகர்கள் வருகிறார்கள்.”தூங்கா நாயக்கருக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை.பரபரப்போடு எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார்”  வெள்ளையனை எதிர்த்து தேசபக்த உணர்வுடன் போராடிய எத்தனையோ தியாகிகள் சுதந்திர இந்தியாவில் மதிக்கப்படவில்லை.அன்றைக்கு கதை எழுதிய எல்லா எழுத்தாளர்களுமே இது பற்றி ஒரு கதையாவது எழுதியிருப்பார்கள்.பிரபஞ்சன் கூட தியாகி,தியாகராஜன் என்று இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.

தோழர் ஜீவானந்தம் ஒற்றை வேட்டியோடு வாழ்ந்த கதை உலகறிந்தது.மாற்றுச்சேலையோ மாத்து வேட்டியோ இல்லாத மக்கள் கரிசல் வெளியெங்கும் நிறைந்திருக்கிறார்கள்.அவர்களில் ஒருவராகத்தான் தூங்காநாயக்கரும் மதிக்கப்படுகிறார்.”கேவலம் ஒரு ‘குண்டி வேட்டிக்கு’இப்படியொரு ‘தரித்திரியம்’ வந்திருக்க வேண்டாம்.” என்கிற இக்கதையின் துவக்கவரி சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது காறி உமிழப்பட்ட வரி.

இப்படி இருக்கிற  இடம் தெரியாமல் வாழும் ஒரு தியாகிக்கு நேர்மாறாக  பொதுவாழ்வை வியாபாரமாக்கிய ஓர் அரசியல்வாதியை “நடிப்புச் சுதேசி” கதையில் காட்டியிருப்பார்.அவர் பேரே ‘காந்தி நாயக்கர்’.காந்தியைப்போல பேரீச்சம்பழம் சாப்பிடுவது,வறுத்த வேர்கடலையை உரித்துச் சாப்பிட்டுவிட்டு ஆட்டுப்பால் குடிப்பது,இராட்டையில் நூல் நூற்பது ,கதர் உடுத்துவது போன்ற அவரது நடைமுறைப் பழக்கவழக்கத்தை வைத்து ஊர்மக்கள் அவரைக் காந்தி நாயக்கர் என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள்.

இவரைப்போன்றவர்கள் உருவாகிவிடக்கூடாது.அதற்கான தளமாக காங்கிரஸ் கட்சி இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே மகாத்மா காந்தி ”காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ‘லோக் சேவா சங்’ என்கிற பேரில் அதை ஒரு மக்கள் சேவை அமைப்பாக மாற்ற வேண்டும் ’ என்று எழுதிவைத்துவிட்டுப்போனார்.அதை அவருடைய தளபதிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.காந்திநாயக்கர்கள் நாடு முழுவதும் எழுந்து வந்தார்கள்.அதில் ஒரு காந்தி நாய்க்கரின் கதையைத்தான் நடிப்புச்சுதேசி என்கிற கதையாக கி.ரா. எழுதியிருக்கிறா.

”தனது அய்ந்து பிள்ளைகளையும் கொண்டு வந்து நகரத்துத் தொழில்களில்பதியன்போட்டார். மைய்ய அரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி  பர்மிட், லைசென்ஸ் என்று பெற்றுத்  தொழில் துறையில் இறங்கினார். இதற்கு அவர் இருமுனை நாடாளுமன்ற உறுப்பினராக வகித்த பதவி பயன்பட்டது.

தான்மட்டிலும் காந்திகட்சியில் இருந்து கொண்டு, சிகப்புக் கட்சிகளில்  இரண்டு பிள்ளைகள், கருப்புக் கட்சிகளில் இரண்டு பிள்ளைகள், ராமர் கட்சியிலும் ஒரு பிள்ளை என்று பிரித்து விட்டு விட்டார்! பயல்கள் அந்த அந்த அரசியல் கட்சிகளில் பிரகாசம் அடைந்து சக்கைப்போடு போட்டார்கள்.” காங்கிரஸ்காரர்கள் நாட்டை ஆட்டையைப்போட்ட கதையைத்தான் கி.ரா. சொல்கிறார்.கம்யூனிஸ்ட் கட்சி உடைக்கப்பட்டதே அது என்றென்றைக்கும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது.அது எதிர்க்கட்சியாகவே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார் காந்தி நாயக்கர்.இருகட்சி ஆட்சி முறையைத் தொடரத்தான் ராமர் கட்சியும் நல்லவேளைக்கி வந்தது என்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அறிவுசார் இயக்கங்கள் இனி வளரமுடியாது.அதற்கான முழு ஏற்பாடும் பண்பாட்டுத்தளத்தில் இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு காந்தி நாயக்கர் ஒரு நேர்காணலில் விவரிக்கிறார்.

”தம்பீ, போதை என்பது என்னத்துக்காக இருக்கிறது. அபின் மட்டுந்தான்  போதையா. டாஸ்மார்க் கடைகள் என்னத்துக்கு இருக்கின்றன. மக்கள் தொகையில் சரிபாதிப் பெண்களை  தொலைக்காட்சிப்  பெட்டியின் முன்னால் உட்காரவைத்து மூக்கைச் சிந்திச் சிந்தி வீசவைத்தாகிவிட்டது. இளவட்டப் பிள்ளைகளைச் சினிமாவும் கிரிக்கெட்டும், போதெ வஸ்துகளும் பார்த்துக்கொள்ளும். கிழடு கெட்டை கொஞ்சம் காரசாரமாக விவாதித்துக்கொண்டு முதியோர் இல்லங்களுக்குப்  போய்விடும். பத்திரிகைகள் போன்ற ஊடகங்களெல்லாம் இடதுசாரிகளுக்கு  எதிர்ப்பக்கம்தான் என்பது உங்களுக்கும்  தெரிந்திருக்கும் (இலக்கிய இதழ்களெல்லாம் சினிமா இதழ்களாக மாறிவிட்டன). மீதி மக்களை பக்தி ,பஜனை, யோகா பார்த்துக்கொள்வார்கள். என்ன செய்யமுடியும் இந்த முற்போக்கு, நற்போக்குசொல்லிக்கொண்டு??”

பிற்காலத்தில் கி.ரா. அரசியல் கதைகளே எழுதவில்லை என்கிற குற்றச்சாட்டை இக்கதை மறுதலிக்கிறது. 2007 இல் இக்கதையை ஓம் சக்தி இதழில் (மீரா ஆசிரியராக இருக்கையில்) எழுதியிருக்கிறார்.

”பசுவைப்பேணி நாட்டைப்பேணு” என்ற முழக்கத்தோடு விவசாயிகளுக்கு சர்க்கார் மாட்டு லோன் கொடுத்தது. அதுதான் வெண்மைப்புரட்சி எனப்பட்டது.ஒருவாய் மோருக்கு ஊரெல்லாம் சுத்த வேண்டாமே என்று விவசாயிகளும் லோன் வாங்கி மாடுவாங்கினார்கள்.ஆனால் மாட்டுப்பாலை சொஸைட்டிக்காரனுக்கு ஊத்தித்தான் கடனைக்கழிக்கணும் என்று சொல்லிவிட்டபடியால் நாம வளர்க்கும் மாட்டுப்பாலை நாமளோ நம்ம பிள்ளை குட்டிகளோ குடிக்க முடியாது.இது சின்னப்பயலான தர்மருக்கு எப்படிப் புரியும்?மோர் இல்லைங்கிற கோபத்திலே மோர்ச்சட்டியை உடைச்சிட்டான்.அப்பன்காரன் வந்து அடி வெளுக்கிறான்.தர்மருக்கு யார் மீதெல்லாமோ கோபம் வருகிறது.பால்வெண்டரைன் மண்டையைக் குறி வைத்து கல்லெறிகிறான்.அது குறிதப்பி,பால் கேன் மீது விழுகிறது.பால் பண்ணைப்  பிரசிடெண்ட்டுக்குப் பழியாகக் கோபம் வருகிறது.பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்.அம்பலகார நாயக்கர் பையனின் கோபத்தின் பின் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்கிறார்.கல்லெறிந்தது சரிதான் எனப் புன்னகைக்கிறார்.ஆனா இவன் மேலே எறிஞ்சு என்னாகப்போகுது என்று சொல்கிறார்.எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் எனக் கச்சிதமான அரசியல் கதையாக வந்திருக்கும் இக்கதையை 1980இல் தாமரை இதழில் எழுதியிருக்கிறார்.

ஒருகட்டத்துக்குப் பிறகு அரசியல் கதைகள் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் என்று சொல்லவே முடியாது.1959இல் வெளியான கதவு கதை முதல் 2007இல் வெளியான நடிப்புச் சுதேசி வரை நேரடியான அரசியல் பிரச்னைகளை கலாபூர்வமாக எழுதும் போக்கில் ஒரு தொடர்ச்சி இருந்துள்ளது.

கரிசல்காட்டு விவசாயம் என்பது தஞ்சை,நெல்லை போன்ற தீரவாசத்து விவசாயம் போன்றதல்ல.நில உடமை வர்க்கம் என்பது பெரும்பாலும் நடுத்தர விவசாயிகளாகவும் பணக்கார விவசாயிகளாகவும் இருப்பார்கள்.தஞ்சை போல ஐயாயிரம் ஆறாயிரம் ஏக்கர் நிலத்துக்கு உடமையாளராக ஒருவரே இருப்பதோ, சைவ மடங்களின் உடமையாக நிலங்கள் இருப்பதோ, இங்கு இல்லை.எட்டயபுரம்,காடல்குடி போன்ற கரிசல் ஜமீன்களும் சிதைந்து சிதறுண்ட பிறகான வாழ்க்கையே கி.ரா.வின் படைப்புகளில் விரிகின்றன.வர்க்கப்பகைமை கூர்மைப்பட்ட ஓர் அரசியல் போராட்டம் இங்கு இல்லை.மாறாக சின்னச்சின்னப் பகைமைகள் தனிநபர் மோதல்கள் என இருக்கின்றன.ஆகவே முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டமே பிரதானமான பகை முரணாக கரிசல் பூமியில் நிற்கிறது.அதைத்தன் கதைகளில் கச்சிதமாகக் கொண்டு வந்த முன்னோடியாக் கி.ரா. திகழ்கிறார்.அவரது சமகாலத்து எழுத்தாளர்கள் எழுதியதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் இந்த முரண்களை கி.ரா. எழுதியிருக்கிறார். அப்படிக்கதைகளில் எல்லாம் மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்கிற முடிவையே முத்தாய்ப்பாக வைக்கிறார்.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

ஒரு சாதிக்கதைகள்  மட்டும்தானா?

அவர் எழுதியுள்ள 82 சிறுகதைகளில் குடும்பத்தில் ஒருவர்,மின்னல்,மாயமான்,எழுத மறந்த கதை, பலாப்பழம்,சிநேகம்,மனிதம்,ஒரு காதல் கதை,வந்தது,பேதை,புறப்பாடு,ஓர் இவள், ஜீவன், சந்தோஷம், கறிவேப்பிலைகள்,தான் போன்ற சுமார் 20 கதைகளில் நாயக்கர் சமூகம் அல்லாத கவுண்டர்,செட்டியார் மற்றும் சாதி குறிப்பிடப்படாத சாதிகளைச் சேர்ந்தோர் கதை நாயகர்களாக வந்துள்ளனர்.கி.ரா.வின் மணிவிழாவை ஒட்டி வெளியான கட்டுரைத்தொகுப்பான ‘ராஜநாராயணீயம்’ நூலில் தோழர் ராஜ்கௌதமன்,” ”கோவில்பட்டி சுற்று வட்டாரத்தின் நாயக்கர்கள் பற்றிச் சிறுகதைகள் பல தந்துள்ள ராஜநாராயணன் கோபல்ல கிராமம் என்ற நாவல் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.”என்று தன் கட்டுரையைத் துவக்கியிருக்கிறார்.இது நியாயமற்ற விமர்சனம் அல்லது கணிப்பு என்று நான் கருதுகிறேன்.மேலே குறிப்பிட்ட, அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் பற்றிய கதைகளையெல்லாம் ”நாயக்கமார்களைப் பற்றிய” கதைகள் என்று புறங்கையால் தள்ளுவதைப்போலத் தள்ளிவிட முடியுமா? அவர் அறிந்த வாழ்க்கையைப் பின்புலமாகக் கொள்ளும்போது சாதியும் சேர்ந்துதான் வரும்.எல்லா எழுத்தாளர்களுக்குமே இது பொருந்தும்.சாதிநீக்கம் செய்யப்பட்ட கதைகள் இந்திய சமூகத்தில் பொய்யானவையாகவே இருக்க முடியும்.தவிர அவர் நாயக்கமார் ஊர்களில் நடப்பதாகச் சொல்லும் இவ்விவசாயப் பிரச்னைகள் வேறு சாதியார் வாழும் கரிசல் கிராமங்களுக்கும் பொதுவான பிரச்னைகளாகத்தானே இருக்கின்றன? வட்டிக்குக் கொடுத்து விவசாயிகளின் நிலங்களை ஏப்பம் விடும் அய்யவ நாயக்கரையும், ஏமாற்றும் அரசியல்வாதி காந்தி நாயக்கரையும் நம் மனங்களில் வில்லன்களாகத்தான் அவர் விதைத்திருக்கிறார்.அப்பாவுச்செட்டியார் கதாநாயகன்.அய்யவநாயக்கர் வில்லன்.சாதி அல்ல வர்க்கம்தான் அவரது அரசியல். சாதிக்கோரிக்கைகளை ஒரு கதையில்கூட அவர் வைக்கவில்லையே.ஆகவே இவற்றைச் ‘சாதிக் கதைகள்’ என்று யாரும் லேசாகச் சொல்லிக்கடக்கக் கூடாது.

நவீன சிறுகதையாளர்கள் எல்லோரையும்போலவே கி.ரா.வும் தலித் மக்களின் வாழ்க்கையைத் தன் கதைகளில் எழுதவில்லை என்கிற விமர்சனத்தை அவர் மீது வைக்கலாம்.செத்த மாடுகளைத் தூக்கிப்போக இரண்டு கதைகளில் சக்கிலியர் சமூகத்தவர் வருகிறார்கள்.’நிலை நிறுத்தல்’ கதையில் வருகிற மாசாணமும் அவர் மனைவி மாசாணமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரோ என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது.ஆனால் தெளிவாகக் கதையில் குறிப்பு இல்லை.

இடைசெவல் கிராமத்தை ஒட்டியே ஒரு தலித் மக்கள் வாழும் சேரி இப்போதும் இருக்கிறது.பொதுவாகக் கரிசல் நஞ்சை விவசாயத்தில்  கூலிகளாக  கட்டி மிதித்தல்,நாற்று நடுதல்,களை பறித்தல், நீர்பாய்ச்சுதல்,கதிர் அறுப்பு,கதிர்க்கட்டு சுமத்தல்,கதிரடிப்பு,தூற்றுதல் என எல்லாப்பணிகளிலும் பெருவாரியாத் தாழ்த்தப்பட்ட மக்களே பங்கேற்பர்.கி.ரா.வின் கரிசல் புஞ்சைப்பகுதி என்பதால் பெரிதும் பருத்தி,நவதானியங்கள்,பயறு வகைகள், அவுரி,மிளகாய் வத்தல் போன்ற பணப்பயிர் விவசாயம் பெரிதாக இருக்கும்.நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் வந்து காடாகக்கிடந்த கரிசல் நிலப்பரப்பில் குடியேறிய நாயக்கர்,கன்னடக் கவுண்டர் போன்ற சமூகத்தினர் ’பண்டு விளைந்தறியாக் களர் நிலங்களைக் கழனிகளாக்கித்’ தங்கள் குடும்பத்தினரே உழைத்து விவசாயம் செய்தனர் .கூலிக்கு ஆள் வைத்து விவசாயம் பார்ப்பது பெருவழக்காக இல்லை என்பதும் ஓர் நடப்பு.பெரு நிலக்கிழார்கள் மட்டுமே கூலிக்கு ஆள் வைப்பது வழக்கம்.’கன்னிமை’ கதையில் பள்ளுப்பெண்கள் பருத்தி எடுப்பதுபற்றி ஓரிரு வரிகளில் கி.ரா.சொல்லிச்செல்கிறார்.

ஆனால் கரிசல் சம்சாரிகளிடம்-கம்மவ நாயக்கர் சாதி உள்ளிட்ட அனைத்து இடைநிலைச்சாதிகளிடத்திலும்  இன்றளவும் தீண்டாமை நடப்பில் இருப்பது உண்மை..அதைக் கி.ரா.வும் தன் கதைகளில் பதிவு செய்துள்ளார்.உதாரணமாக,”தாவைப்பார்த்து” என்கிற கதையில் ஊருக்குப் புதுசாக வந்த ஒரு ஆள் ஊர் மடத்தில் படுத்திருப்பதாகத் தாக்கல் கிடைக்கிறது.வேலைக்கு ஆள் கிடைக்காத இந்தக்காலத்தில் திடகாத்திரமான ஆள் என்று அறிந்து அவனை அமுக்கிவிட வேண்டும் என சுப்பா நாய்க்கர் வேகமாக மடத்துக்குப் போகிறார்.

கேள்விப்பட்டது சரிதான்; ஆள் வாட்டசாட்டமா ..ஒருப்பூட்டான ஆள்தான். மட்ட மல்லாக்கப் படுத்துக் கிடந்தான். செப்பையில்  சின்ன மாசத்துக்கு ஒரு மாசத்தாடி, வயசும் அப்பிடி ஒண்ணும் அதிகம் இருக்காது; முப்பதுக்கு உள்ளெதான் சொல்லணும். விரிந்து கிடக்கும் உள்ளங்கை நல்.. காய் காச்சி இருந்தது. வேலைக்காரன் தான்; பருத்த மார்பும் சிறுத்த வயிறும்; நாய் உடம்பு.

விரித்துப் படுத்திருந்த கந்தல்த் துண்டிலிருந்து விலகிக் கிடந்தது படம்பு.

என்னா தூக்கம்! அந்தத் தூக்கத்தையும் உடம்பையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

முகத்தைக் கவனித்து ஜாதியை யோசித்தார். நிதானம் பிடிப்பட வில்லை. தொட்டுக்கிடுற ஜாதியா இருந்தா தண்ணி வென்னி எடுக்கத் தோது; பார்ப்பம்….

”எந்த ஊரு?” பிள்ளையார் சுழி போட்டார் நாயுண்டு .

“கங்கரிசல்பட்டி யூரு”

சொல்லும் ஒலி உச்சரிப்பிலிருந்து இது தெலுங்கு நாக்கு என்று கண்டு கொண்டார்.தெலுங்கிலேயே தொயந்தார்.”

கதையின் இந்தப்பகுதி மிக முக்கியமான பகுதி.தீண்டத்தக்க சாதிதானா என்பதை அறிய சுப்பாநாயுண்டு துடிக்கும் துடிப்பு நிலவும் சாதியத்தீண்டாமையின் ஆவணமாகிறது.தமிழ்ச்சொல் உச்சரிப்பிலேயே தெலுங்கு நாக்கு என்பதை கரிசல் காட்டில் வாழ்பவர் எவரும் கண்டுகொள்வார்கள்.இது இன்றும் நடப்புத்தான். ஆனால் கி.ரா.வுடன் பழகியவர்களுக்குத் தெரியும் அவருடைய சொல் உச்சரிப்பில் தெலுங்கு நாக்கை நம்மால் அறிய முடியாது.அவருடையது சுத்தமான  பேச்சு மொழித்தமிழாக இருக்கும்.அவருடைய மொழி அரசியல் தனியாக விவாதிக்கப்படவேண்டிய முக்கியத்துவம் பெற்றது.

‘ஊர்க்காலி’ கதையில் மயானபூமியான சுடுகாட்டில் கூட சாதிவாரியான பிரிவினை இருப்பதையும் கிச்சம்மா ஓடைக்கு மேல்புறம் இருப்பவை மேல்சாதியார் சுடுகாடாகவும் கீழ்ப்புறம் இருப்பவை கீழ்ச்சாதியார் சுடுகாடாகவும் இருப்பதை லேசான கிண்டலுடன் எழுதியுள்ளார். 

நகர்ப்புறத் தொழிலாளி வர்க்கத்தின் கதையைக் கி.ரா. எழுதியிருந்தால் அது நிச்சயமாக நாயக்கர் சாதிப் பின்புலத்தோடு இருந்திருக்காது.புதுச்சேரிக்கு வாழப்போனபிறகு அவர் எழுதிய திரிபு,மோசம் போன்ற கதைகள் அதற்கு நல்ல உதாரணம்.ஆனால் 1989இல் புதுச்சேரிக்குப் போன கி.ரா. அந்த 30 ஆண்டு வாழ்க்கைக்குள்ளிருந்து கதைகளே எழுதவில்லை. புதுச்சேரி போன பிறகு 17 கதைகள் எழுதியிருக்கிறார்.அதில் கரிசல் அல்லாத கதைகள் ஒரு நாலு இருக்கலாம்.அவ்வளவுதான்.வாழ்ந்தது புதுச்சேரி என்றாலும் எழுதியது கரிசலைத்தான் என்கிற வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. ’வேதபுரத்தார்க்கு..’என்கிற தன்வரலாற்று நாவல்போன்ற ஒன்று அவரது புதுச்சேரி வாழ்க்காஇயைப் பதிவு செய்த நினைவுக்குறிப்புகள் என்று சொல்லவேண்டும்.

இடைசெவலில் இருந்தபோது எழுதிய கதைகளிலும் நகர்சார் கதைகளான புவனம்,அசல்,கிலி, இளையபாரதத்தினாய்,புத்தக உலகம் போன்ற பல கதைகளின் பாத்திரங்கள்  சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களாக வருவதைப் பார்க்கலாம்.அவருடைய முதல் கதை என்று சமீபத்தில் ‘கண்டு பிடிக்கப்பட்ட’ சொந்தச் சீப்பு என்னும் கதை 1953-54 வாக்கில் கு.அழகிரிசாமி ஆசிரியராக இருந்த “சக்தி” மாத இதழில் வெளியாகியுள்ளது.அதிலும் சாதியோ கரிசலோ இல்லை.இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டுதான் நாம் கி.ராவின் சிறுகதைகளை அணுக வேண்டும்.

கி.ரா. தன் கதைகளில் தன்னைச் சாதி நீக்கம் செய்தவராக அடையாளப்படுத்திக்கொள்ள எத்தனிக்கவில்லை எனலாம்.அது எதுக்குப் பொய்யி.. என்று விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

ஏன் தலித் வாழ்க்கையை நீங்கள் எழுதவில்லை என்கிற ஒரு கேள்விக்கு “அவன் வாழ்க்கை எனக்குத் தெரியாதே” என்று பதில் சொல்லி ’அவன்’ என்று சொல்லி இழிவு படுத்திவிட்டதாக ஒரு தரப்பினர் வழக்குத்தொடுக்கும் நிலைமை வந்துவிட்டது.பின்னர் நீதிமன்றம் அப்படி அவர் கூற்றை எடுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லி அவரை விடுவித்தது.வழக்கு ஒருபக்கம் இருக்கட்டும்.அவ்வாழ்க்கை தெரியாது என்று சொல்லித் தப்பிக்கிறார் என்கிற விமர்சனம் தலித் அல்லாத எல்லாப்படைப்பாளிகள் மீதும் வைக்க முடியும்-என் மீது உட்பட.அதேபோலச் சிறுபான்மை மக்களைப்பற்றியும் அப்பகுதிப் படைப்பாளிகளைத்தவிர பிறர் எழுதவில்லைதான்.வருங்காலத்தில் இது மாறவேண்டும்.

ஒரு படைப்பாளியை அவருடைய எல்லாப்படைப்புகள் வழியாகவும் அவர் வாழ்க்கையிலிருந்தும் அவர் வாழ்ந்த காலத்தில் வைத்தும் முழுமையாகப் பார்க்க வேண்டும். 

”தோழன் ரங்கசாமி” கதையில் ”கட்சியைச் சட்டவிரோதமாக ஆக்கப்போகிறார்கள் என்றும் ஊழியர்கள் எல்லோரும் தலைமறைவாகப் போய்விடும்படியும் கட்சியின் மேலிடத்திலிருந்து தகவல் கிடைத்தது.

இரவோடு இரவாக ரங்கசாமி படி இறங்கினான். புறப்படும் முன்பு முக்கியமான தஸ்தாவேஜுகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் தேடி எடுத்துத் தீயிட்டுக் கொளுத்தினான். ஆபிஸின்மேல் பறந்த கொடியை அவிழ்த்து மடக்கிச் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான். கொடியே, இப்படியே இரு. நீ கைவீசிச் சடசடத்து ஆரவாரத்தோடு பறக்கக் காலம் வரும்என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அதிகாலையில் பக்கத்து ஊரில் தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம் போனான். உடம்பைப் பரிசோதித்துவிட்டு, டாக்டர் அவனிடம் க்ஷயரோக நோய் முற்றியநிலையில் இருக்கிறதென்றும் எதாவது ஒருசானிடோரியத்தில்போய் உடனே சேர்ந்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமென்றும், அல்லது உயிருக்கு ஆபத்து நேருமென்றும், அது வரை முட்டை, பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய் போன்ற மஸ்தான ஆகாரங்களை ச் சாப்பிட்டுக்கொண்டு பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லி ஒரு சீட்டில் சிலவரிகள் எழுதி இதிலுள்ள மருந்துகளையும், ஊசிகளையும் தற்காலிக சிகிச்சையாகக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார், ரங்கசாமியோ சிரித்தான்.”

நடந்தே மாவட்டக் கட்சி அலுவலகத்துக்குப் பயணப்படும் ரங்கசாமி தாகத்தாலும் பசியாலும் வழியில் ரயில் தண்டவாளத்துக்கருகே மயங்கி விழுகிறான்.கதையின் அந்த இறுதிப்பகுதி மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்:

 “ அவன் கண்விழித்துப் பார்த்தபோது ஒன்றும் விளங்கவில்லை. முதலில் நிழல்களைப்போல் தெரிந்தவை மனித உருவங்களாக மாறின. அவர்கள் அவன் வாயில் நீத்துப்பாகத்தை ஊற்றிக்கொண்டிருந்தனர். தெளிவு கண்டது. விளக்கின் பிரகாசமான தெளிவு.

அண்ணன்மார்களே, நீங்கள் யார்? என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் தொண்டையில் நீர் வார்க்கும் நீங்கள் யார்?”

ஈனஸ்வரத்தில் எழுந்த இந்தக் கேள்வி அவர்கள் இதயத்தைத் தொட்டு, நீர்மல்கச் செய்தது

ஐயா, நாங்கள் காங்கித் தொழிலாளிகள்; ஹரிஜனங்கள்“.

இந்தப் பதில் அவன் காதுகளில் அமுததாரை பொழிவதுபோல் இருந்தது. ரங்கசாமி அவர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.

உணர்ச்சிவயத்தால் பேச நா எழவில்லை. கண்கள் பனித்து நீர் சிந்தின. தேவர்கள் வந்து காட்சியளிப்பதுபோல் இருந்தது அவர்கள் வருகை.

என்னுடைய தாயும், தந்தையரும் நீங்கள்.’  தன் மடியிலிருந்த கொடியை எடுத்து அவர்கள் கையில் வைத்தான். பிற்பகல் நான்கு மணிக்கெல்லாம் ரங்கசாமி இறந்துபோனான்.”

செங்கொடியைத் தலித் மக்கள் கையில் ஒப்படைத்துத் தன் உயிரை விடுகிறான் ரங்கசாமி என்று கதையை கி.ரா. முடித்திருக்கிறார்.1960 இல் இப்படி எழுதி இருக்கிறார் என்பதை மட்டும் முன்வைத்து இப்பகுதியை முடிப்போம்.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

நிலமற்ற விவசாயத்தொழிலாளர்கள் பக்கம்

கரிசல் விவசாய வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பவர்கள் கூலி உழைப்பாளிகள்.ஒவ்வொரு பெரிய சம்சாரி வீட்டிலும் பொறுப்பாகச் சுற்றுவேலைகள் பார்க்க ஒரு தொழிலாளி அல்லது தொழிலாளியின் குடும்பம் இருக்கும்.இது தஞ்சை மண்ணின் பண்ணையடிமைகள் போன்ற ஏற்பாடு அல்ல.வருடத்துக்கு இவ்வளவு கூலி என்று பேசுவார்கள்.வருட முடிவில்தான் கூலியை தானியமாக அளந்து கொடுப்பார்கள்.அடுத்த வருடமும் தொடர்வதும் எழுதப்படாத அந்த ஒப்பந்தத்தை முறிப்பது அந்தத்தொழிலாளியின் விருப்பம்.இத்தகைய தொழிலாளிகளைக் கதை நாயகர்களாக வைத்து கி.ரா ஏழு கதைகள் எழுதியுள்ளார்.

கதவு -1959,கறிவேப்பிலைகள்-1969,விளைவு-1974,பூவை-1975, நிலைநிறுத்தல்-1981,தாவைப்பார்த்து-1984, ஊர்க்காலி(ஆண்டு தெரியவில்லை) ஆகியன அக்கதைகள்.

புகழ்பெற்ற கதவு கதைபற்றி நிறையவே பேசிவிட்டோம்.ஆனால் இன்னும் கூடப் பேச இருக்கிறது.அக்கதையில் வரும் குடும்பத்தலைவி இப்போது காட்டுவேலைக்குப் போகும் கூலித்தொழிலாளி.சம்சாரியாக இருந்து நொடித்துப்போனால் பஸ் கீழே இறக்கிவிடுவதைப்போல கூலிவேலைக்கு வந்து இறங்கி விடுவார்கள்.ரொம்ப மானம் மரியாதை பார்க்கும் பெரிய சம்சாரிகள் மாயமான் கதையில் வருவதுபோல ஊரைவிட்டே போய் தஞ்சாவூர்ப்பக்கம் கூலி வேலைக்குப் போய்விடுவார்கள்.மழை தண்ணி இல்லாமல் பஞ்சம் என்று வந்துவிட்டால் எல்லோருமே ஊரைக்காலி செய்துவிட்டு ‘தஞ்சாலூரு’க்கு ரயில் ஏறிவிடுவார்கள்.

கதவு கதையில் குடும்பத்தலைவனாகிய லட்சுமி,சீனிவாசனின் அப்பா கூலிவேலைக்காக மணிமுத்தாறு போனவன் அஞ்சு மாசத்துக்கு மேலே ஆகியும் ஒரு தாக்கலும் இல்லை.மணிமுத்தாறுக்கு ஏன் போனான் என்கிற விளக்கம் கதைக்குள் இல்லை.ஆனால் வரலாற்றில் இருக்கிறது.1950 களில் சுதந்திர இந்திய அரசு உருவானதும் உணவு உற்பத்தியைப் பெருக்க நீர்ப்பாசனத்துக்காகவும்  நீர் மின்சார உற்பத்திக்காகவும் ஆறுகளை மறித்து அணைகள் கட்டியது நேரு அரசாங்கம்.பக்ரா நங்கல்,ஹிராகுட் போன்ற மகா அணைகளைப்பற்றிப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.அந்தப்பெரிய சஞ்சீவி மலைகளிலிருந்து சிந்திய சிதறிய சின்னச்சின்ன அணைகளில் ஒன்றுதான் மணிமுத்தாறு அணை.அணைகட்டக் கூலித்தொழிலாளிகள் கரிசல் மண்ணிலிருந்து  கிளம்பிப்போன கதைகள் நாட்டார் பாடல்களில் பதிவாகியுள்ளன.’எரியும் பனிக்காடு’ நாவலில் தேயிலைத்தோட்டத்துக்கு அடிமைகளாகப் போகும் கரிசல் உழைப்பாளிகள் கயத்தாற்றிலிருந்து புறப்படுவார்கள்.அப்படிப்போன ஒரு கூலி உழைப்பாளிதான் ‘கதவு’ கதையில் வரும் அப்பன்.வரலாற்றிலிருந்து உருவி எடுத்த ஒரு வரியைக் கி.ரா. எழுதிச்செல்கிறார்.

கூலித்தொழிலாளிகள் கதைகளின் சிகரம் என்று ‘கறிவேப்பிலைகள்’ கதையைச் சொல்ல வேண்டும்.பப்புத்தாத்தா,பப்புப் பாட்டி என்கிற ஒரு ஜோடி உழைப்பாளிகள்.

அந்தத் தம்பதியர் பஞ்சம் பிழைப்பதற்காகக் கீகாட்டிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்கள். அப்படியே இங்கேயே இருந்துவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எங்கிருந்தாலும் ஒண்ணுதான். அவர்கள் கூலி வேலை செய்யும் விவசாயக் கூலிகள். எந்த உடமையும் அவர்களுக்குக் கிடையாது. கைகள் ஒன்றுதான் அவர் களுடைய உடமை. அவைகள் தான் அவர்களுடைய மூலதனம். –

தலைக்கோழி கூப்பிட எழுந்திருக்கணும். எதாவது ஒருமகராஜன்வீட்டில் போய், பருத்திமாரால் தொழுவத்தைத் தூத்துப் பெரிய கூடைக்கு ஒரு நாலைந்து கூடை குப்பையைக் கொண்டுபோய்க் குப்பைக்குழியில் தட்டணும்.” என்று ஆரம்பிக்கும் கதை அவர்களின் முழுவாழ்க்கையையும் சொல்கிறது.ஐப்பசியில் அடைமழைக் காலத்தில் சாப்பிட ஒன்றுமில்லாமல் போகும்.ஈரத்துணியை வயிற்றில் மடித்துப் போட்டுக்கொண்டால் பசிக்கிறது தெரியாது

”தாத்தா சொன்னார்சன்னகுட்டி (தன்னுடைய மனைவியை அவர் பிரியமாகக் கூப்பிடும்போது இப்படிப் பெயர் சூட்டித்தான் அழைப்பார்!) இந்த ஈரத்துணிதான் வயித்துக்கு எம்புட்டு இதமா இருக்கு. இதைக் கண்டுபுடிச்ச அந்தப் புண்ணியவாளன் நல்லா இருக்கணும்.’”

பதினாறு வயதில் மேழிபிடித்த அந்த உடம்பு எழுபது வயதுக்குப்பிறகு தளர்ந்துவிட்டது.ஆகவே தன் ஒன்பது வயசில் செய்த மாடு மேய்க்கும் வேலைக்குப் போனார்.

”பாட்டியிடமிருந்து அவர் புறப்படும்போது அவள் அவருடைய உடம்பைத் தடவிவிட்டுக்கொண்டே சொல்லுவாள், ‘பெரியவரே, நீர் என்னைக் கட்டிக்கொண்டு ஒரு சொகத்தையும் அடையலை….’ என்பாள். அவளுடைய வயோதிக முகத்தில் சோகம் நிழலிடும். பார்வை எங்கேயோ நிலைக்கும்.

கோட்டிப் பொம்பளை! அப்படியெல்லாம் பேசாதேஉனக்குத் தான் நான் ஒரு சவுரியமும் செய்யலைஇப்படிச் சொல்லிவிட்டு, அவர் அடக்கமுடியாமல்நமக்கு ஒரு பிள்ளை இல்லை . இருந்திருந் தால், இந்தத் தள்ளாத வயசில் இப்படி நாம அல்லாடவேண்டாம்.’

அவர் இப்படிச் சொல்லும்போதுமட்டுமே பாட்டியால் தாங்கிக் கொள்ள இயலாது. கொஞ்சநேரம் உட்கார்ந்து அழுவாள். அப்புறம் மூக்கைச் சிந்தி எறிந்துவிட்டு வயத்துப்பாட்டைக் கவனிக்க ஆரம்பித்து விடுவாள்”

ஒரு காவியம்போல நகரும் இக்கதையில் நம்மை உலுக்கும் ஒரு இடம் “பப்புத்தாத்தாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதேனும்  சம்பவங்கள் நடக்கவில்லையா?” என்கிற கேள்வியை எழுப்பி மரத்திலிருந்து கீழே விழப்போன சிறுவனை அவர் காப்பாற்றியது,தீப்பிடித்த நேரங்களில் தன் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றியது மாடுகளைக்காப்பாற்றியது போன்ற சம்பவங்களைப் பட்டியலிடுவார் கி.ரா.

உண்மையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வாழ்க்கையே அவர்களுக்கு இல்லை.உழைத்தார்கள். சாப்பிட்டார்கள்.பட்டினி கிடந்தார்கள்.ஊருக்கெல்லாம் உதவினார்கள்.கடைசிக்காலத்தில் பிச்சை எடுத்தார்கள்.பிறகு செத்துப்போனார்கள்.அவர்கள் வாழ்ந்த சுவடே தெரியாமல் காற்றிலே கரைந்து போனார்கள்.இப்படி எத்தனை கோடி உழைக்கும் மக்களின் வாழ்க்கை முடிந்து போகிறது என்கிற பெருமூச்சையும் ஆவேசத்தையும் உருவாக்கும் மிக உக்கியமான கதை.கறிவேப்பிலையைப்போல இவர்களை இந்த நில உடமைச் சமூகம் பயன்படுத்திக்கொண்டு குப்பையில் எறிகிறது.ஒரே கதைக்குள் இத்தனைகோடி கூலி உழைப்பாளிகளின் வாழ்வையும் சொல்லிவிட முடிந்திருக்கிறதே கி.ரா.வால்!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கதை “பூவை”

பெரிய சம்சாரி வீட்டில் வேலைக்காரர்களாக இருக்கும் பேரக்காள்,குமரய்யா இருவரின் கதை இது.அனாதைகளாக அந்த வீட்டுக்கு அடைக்கலமாக வந்த அவர்கள் மாட்டுத்தொழுவத்திலிருந்து காடுகரை வரை வஞ்சனையின்றித் தம் உழைப்பை விதைத்தார்கள்.அவர்கள் இருவருக்கும் கலியாணம் செய்து வைத்து அவர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க அக்குடும்பம் முடிவு செய்கிறது.கலியாணத்திற்கு முன்னால் பெண்கள் கூடியிருந்த அந்த வீட்டுக் கூடத்தில் கூட்டத்துக்கு நடுவே பேரக்காள் மயக்கம் போட்டு விழுகிறாள்.வெளியே உட்கார்ந்து நமக்குக் கதை சொல்லும் இவருக்கு (கி.ரா?) என்ன ஏதென்று புரியாமல் தவிப்பு.நமக்கும்தான்.கொஞ்சந்ர்ரம் கழித்து உள்ளேயிருந்து பாட்டிதான் சிரித்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“கழுதை! ஒருநாளாவது தலையில் பூ வைத்திருந்தாலல்லவா;இண்ணைக்குச் சிங்காரிக்கும்போது பூ வாசம் தாங்காமல் மயக்கம் போட்டுட்டது”

பாட்டி சொன்னதைக் கேட்ட எல்லோருடைய முகங்களிலும் ஆச்சரியம் விரிந்து ,பிறகு அது சிரிப்பாக வழிந்தது.

எனக்குச் சிரிப்பு வரவில்லை” 

நமக்கும் சிரிப்பு வரவில்லை.என்ன ஒரு வாழ்க்கை அந்தப்பிள்ளைகளுக்கு என்கிற துக்கமே நம்மைத் தழுவுகிறது.ஒரு பூவுக்கும் வகையற்ற சாணி அள்ளும் வாழ்க்கை பெற்ற பேரக்காளின் கதைக்கு “பூவை” என்று பேர் வைத்து உழைக்கும் கரிசல் பெண்களின் வாழ்நிலையைத் தீட்டுகிறார்.பெண் என்றால் பூ வைத்துத்தான் ஆக வேண்டுமா என்பது 

இது குமுதம் இதழில்  1975 இல் வெளியான கதை.குமுதத்துக்கு எழுதப்போய் விட்டாரே என்று அவரை விமர்சித்தவர்கள் உண்டு.குமுதத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டுமல்லவா? 

கூலி உழைப்பாளிக் கதைகளில் இன்னொரு முக்கியமான கதை ‘நிலை நிறுத்தல்’ ஊரின் பெரிய முதலாளி வீட்டில் வருடக்கூலிக்கு இருப்பவன் மாசாணம்.அந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் மாசாணம்.தற்செயலாக அவனைப் பார்த்து,வீட்டுக்கு அழைத்துவருகிறார் பெரிய முதலாளி. அந்த வீட்டு அம்மா யார் முதல் முதலாக வேலைக்கு வந்தாலும் உட்கார வைத்து சட்டி நிறையக் கம்பஞ்சோறு வைத்துக்கொடுத்து அவன் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும்.மீண்டும் மீண்டும் சோறு வைக்க அவன் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான்.பெரிய முதலாளிக்குச் சந்தோசமாகிவிட்டது. ”சோத்தை அள்றதிலேருந்தும் நாத்தை அள்றதிலேருந்தும் தெரிஞ்சிரும் பூளாக்கு” என்பது சொலவம். மாடு பிடிப்பதுபோலத்தான் வேலைக்கு ஆளும் பிடிப்பார்கள்.அப்படிப்பிடிபட்டவன் தான் மாசாணம்.

வாரத்துக்கு ஒரு தலைமுழுக்கு உண்டு.வருசத்துக்கு ஒரு ஜோடி வேட்டி.சாப்பாடு போக மாசம் மூணு ரூபாய் சம்பளம்.அவன் வந்தது ஐப்பசி.ஆனால் வருகிற சித்திரையிலிருந்துதான் கணக்கு.அடுத்த சித்திரைவரை இருந்தால்தான்;பாதியிலேயே அரைகுறையாகப் போனால் போனதுதான்.சம்பளம் கிடையாது.

இந்தக் கூலி ஏற்பாடுதான் கரிசல் வட்டாரத்தில் அன்று நிலவியது.பெரிய முதலாளியின் நாற வசவுகளையும் அடிகளையும் சகித்துக்கொண்டு சித்திரையை விட்றக்கூடாது என்று சகித்துக்கொண்டு வேலை பார்த்தான்.

சாணிப்பால் கிடையாது.சாட்டையடி உண்டு.சாப்பாடு வயிற்றுக்கு கிடைக்கும்.வசவுகளும் வயிறு நிறையக்கிடைக்கும்.இக்கதையில் ஓர் அபூர்வநிகழ்வாக சாத்திரைப்பொங்கல் வருகிறது.ஏழுநாள் திருவிழாவில் ஏழுநாளும் ராத்திரி விடிய விடிய நாடகம் பார்க்கும் மாசாணம் பகலெல்லாம் வேலை ராவெல்லாம் முழிப்பு என்று இருக்கிறான்.ஏழாம்நாள் அதிகாலை தன்னுசார் இல்லாமல் வீடு வந்து, யாரும் புழங்காத ரெண்டு தானியப்பட்டரைகளுக்கு நடுவே தூசியில் துண்டை விரித்துப் படுத்துவிடுகிறான்.ஒருவாரம் தூங்குகிறான்.ஒருவாரம் கழித்து ஒருநாள் அதிகாலை கோழி கூப்பிட எழுந்து வழக்கம்போல வேலையைப்பார்க்கிறான்.ஒருவாரமா எங்கேடா போனே என்று முதலாளி சாட்டைக்கம்பால் அடிக்கும்போதுதான் அவனுக்கே தெரிகிறது.ஒருவாரமா என்று வியக்கிறான்.ஒருவாரம் தூங்காம இருந்தவன் ஒருவாரம் மொத்தமா தூங்கிட்டான் என்று ஊரே பேசிச்சிரிக்கிறது.அமெரிக்க எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் எழுதிய ’ரிப் வான் விங்க்கிள் ’ சிறுகதையை நினைவூட்டும் இக்கதை தூக்கத்துக்கும் விதியற்றுப்போன ஒரு கூலி உழைப்பாளியின் பொழுதுகளைப் பாடியுள்ளது.

மாட்டைப்போல நடத்தப்பட்ட தன்னை ஒரு மனிதனாக –அதி மனிதனாக-மாசாணம் நிலைநிறுத்தும் கதையே நிலை நிறுத்தல்.1981இல் கணையாழியில் வெளியான இந்தக்கதை கூலி உழைப்பாளியின் கோபத்தை சக தொழிலாளிகளை அணிதிரட்டும் திசையில் பயணிக்கவில்லை.வைத்தியம்,மாந்திரீகம் என்றுபோய் பெரிய முதலாளி உள்ளிட்ட ஊரையே வணங்க வைத்து ஊருக்கே திருநீறு பூசும் இடத்துக்கு வந்து நிலை கொள்கிறது.இது ஒருவகையான பழிவாங்கல்தான்.எதிர்க்கலாச்சாரப் போராட்டம்தான்.நேரடியான வர்க்க மோதலுக்கும் தீர்வுக்கும் வழி இல்லாத்போது இப்படி மக்கள் மதப்புரட்சிக்குப் போவார்கள் என்கிற வரலாற்றோடு இணைத்து இக்கதையை வாசிக்க இடம் உண்டு.

இந்த ஏழு கதைகள் போக கரிசல்காட்டுக்கு பருவ காலத்தில் அவ்வப்போது குடும்பங்களாக வந்து பொது இடங்களில் தங்கி,சமைத்துச் சாப்பிட்டுச் சிலகாலம் கழித்து தத்தம் ஊர் திரும்பும் கூலி உழைப்பாளிகளை வலசைத் தொழிலாளர் என்று கி.ரா.பல கதைகளில் குறிப்பிடுகிறார்.அப்படி வந்து ஊர்திரும்பும் குடும்பங்கள் தவறி விட்டுப்போகும் ஆணோ பெண்ணோ உள்ளூர் சம்சாரி வீடுகளில் வருடச்சம்பளத்துக்கு நின்று விடுவதையும் பல கதைகளில் எழுதுகிறார்.புகழ்பெற்ற ‘பேதை’ கதையில் வரும் பேச்சியும் கூட அப்படி வந்த ஒரு வலசைத்தொழிலாளர் குடும்பத்துப் பெண் தான்.

”மேகாட்டிலிருந்து பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து, பருத்தி எடுக்க  வரும் வலசைக்காரர்களில் ஒருத்தியே பேச்சி. அந்தக் கிராமத்துக்கு அந்த சீஸனில் நூற்றுக் கணக்கான வலசைப் பெண்கள் வருவார்கள். அவர்களில் சிலர் சம்சாரிகளின்  தொழுக்களில் தங்கிக் காய்ச்சிக் குடிப்பார்கள். இடம் கிடைக்காதவர்கள் பொது இடங்களிலும் வசிப்பார்கள். பகிர்ந்து கொண்டு வருகிற பருத்தியில் ஒரு பகுதியை சம்சாரிகளின் வீடுகளிலேயே ஒரு சாக்கில் போட்டுக் கட்டி வைத்துவிட்டு  மீதிப் பருத்திக்குக் கடைகளில் சீனிக்கிழங்கும், மொச்சைப் பயறும், கருப்பட்டியும் வாங்கித் தின்பார்கள். முக்கியமான உணவு அவர்களுக்கு மூன்று வேளையும் சீனிக்கிழங்குதான்.

அவர்கள் குளித்து யாரும் பார்த்ததில்லை. பருத்தி எடுத்துக் கொண்டு வெயிலோடு  வெயிலாக வந்ததும், தெருக்களில் இருந்து கொண்டு மாராப்புச் சீலையை மட்டும் நீக்கி கடுப்பில் சுற்றிக் கொண்டு ஒரு போகிணித் தண்ணீரினால் முகம், கக்கம், முதுகு, மார்பு, மக்கள் முதலியவைகளை மட்டிலும் கழுவிக்கொள்வார்கள். போகிணியில் மீந்த தண்ணீர் இருக்குமானால் பாதங்களையும் நனைப்பது உண்டு.”

வலசைத்தொழிலாளர்களின் வாழ்முறையை இப்படிச் சித்திரமாக நமக்கு வரைந்தே காண்பிக்கிறார் கி.ரா.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

கி.ரா படைத்த பெண்கள்

கி.ரா படைத்த பெண்கள் பற்றி யோசிக்கும் நேரத்தில் முந்திக்கொண்டு நம் மனதில் வந்து நிற்பவர்கள் கு.அழகிரிசாமியின் நரசம்மாவும் அவர் மகள் வெங்கட்டம்மாவும்தான்.’திரிபுரம்’கதையில் ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க தெற்கு நோக்கி வரும் ஒரு தாயும் மகளுமான அவ்விரு பெண்களுமே இடைசெவல் பெண்களின் முன்னத்தி ஏர்கள்.அவர்களுக்கு ஒரு வீரவணக்கம் செய்துவிட்டு கி.ராவின் பெண்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று ஏனோ தோன்றுகிறது.

எல்லோரும் கொண்டாடும் ’கன்னிமை’ கதையின் நாச்சியாரம்மா முதலில்.

ராஜாதான் கதையின் முதல் பாதியைச் சொல்கிறான்.இரண்டாம் பாதியை ரங்கையா சொல்கிறான்.இரண்டுபேருமே ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறார்கள்.நாச்சியாரம்மா அடியோடு மாறிவிட்டாள் என்கிற விஷயம்.

ராஜாவின் ஒன்றுவிட்ட சகோதரிதான் நாச்சியாரம்மா.இந்த வீட்டில் பெண் வாரிசு இல்லாததால் அவளைத் தத்து எடுத்து இந்த வீட்டில் வளர்க்கிறார்கள்.அழகிலும் புத்திசாலித்தனத்திலும் அவளுக்கு நிகர் அவளேதான்.அவள் பருவமடைந்து வீட்டுக்கே விளக்காக ஒளி ஏற்றிக்கொண்டிருந்தாள்.பிறருக்கு அள்ளிக்கொடுப்பதில் ஆனந்தம் காண்பாள்.வேலைக்காரர்களுக்குகூட அவள் கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி.

காட்டில் பருத்தி எடுக்கும் பள்ளுப்பெண்களுக்கும்  நாச்சியாரம்மா வந்துதான் கூலி கொடுக்க வேண்டும்.பருத்திதான் கூலி.மடிப்பருத்தி,பிள்ளைப்பருத்தி,போடுபருத்தி என்று நாச்சியாரம்மா அள்ளி அள்ளிக்கொடுப்பாள்.அவளை அதே தெருவில் ஐந்து வீடு தள்ளி இருந்த ரங்கையாவுக்குத்தான் கட்டிக்கொடுத்தார்கள்.இருவரும் ஒருவர்மீது ஒருவர் உயிரையே வைத்திருப்பவர்கள்தான்.”அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில் அர்த்தமில்லைதான்.ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்து அனுப்பியிருக்கிறோம்.அந்த ஒன்று இப்போது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை,அது அவளிடமிருந்து போயே போய்விட்டது.” என்று ராஜா சொல்வதை கதையின் இரண்டாம் பாகத்தில் ரங்கையா வழிமொழிகிறான்.எவ்வளவுக்கெவ்வளவு எல்லோருக்கும் அன்பை அள்ளிக்கொடுப்பவளாக இருந்தாளோ அவ்வளவுக்கவ்வளவு சுயநலமியாக நாச்சியாரம்மா மாறிவிட்டாள்.வாசலில் வந்து நிற்கும் ஏகாலிக்கும் குடிமகனுக்கும் சோறுபோட  முகம் சுளிக்கிறாள்.வேலைக்காரர்கள் என்ன தீனி தின்கிறார்கள் என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.மூன்று பிள்ளைகள் ஆகிவிட்டனகோவில்பட்டிக்குப்போய் வீட்டுச்சாமான்கள் வாங்கி வந்த ஒருநாள் ரங்கையா கய்ச்சலோடு கட்டிலில் விழுகிறான்.அவள் அதைப்பற்றி என்னான்னு கூடக் கேட்காமல் அவன் கொண்டு வந்த சிட்டைக்கும் மீதிக்காசுக்கும் கணக்கு உதைக்கிற்தே என்று சரி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.தன் நெற்றியில் கைவைத்து இதமான ஒத்தடம் கொடுப்பாள் என எதிர்பார்த்து ஏமாந்து கண்ணீர் வடிக்கிறான்.அவள் இன்னும் கணக்குவழக்கிலேயே இருக்கிறாள்.

அவள் எங்கே?அவள்தான்:என் அருமை நாச்சியாரு.

“நாச்சியாரு,என் பிரியே !நீ எங்கிருக்கிறாய்?” என்று கதையை முடிக்கிறார் கி.ரா.

கன்னிமை  என்று தலைபிட்டதன் மூலம் கி.ரா சொல்ல வருவது; நாச்சியாரம்மாவின் தயாள குணமும் பிறருக்கு அள்ளிக்கொடுக்கும் இயல்பும் எல்லோரிடத்திலும் அன்புகாட்டும் முகமும் எல்லாமே அவளது கன்னிமையின் பகுதியாக இருந்தவை.அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் உட்கார்ந்து அழுவார்கள்.நாச்சியாரம்மாவும் ஒரு மூணு நாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காக்கிறாள்.அந்தக் கண்ணீரோடு காணாமல் போகிறது ’கன்னிமை’.

ஆணைப்போல பெண்ணின் வாழ்க்கை ஒரு நேர்கோட்டில் தங்கு தடையின்றிச் செல்வதல்ல.அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பருவம் என்கிற காலநிலை வார்த்தையால் நாம் சொல்லப்பழகியிருக்கிறோம்.மாத விலக்கு,கருவுறுதல்,குழந்தைப்பேறு ,மாதவிலக்கு நிறுத்தம் என்று பல திருப்பங்களை அவள் உடல் சந்திக்கிறது.உடலியல் மாற்றங்கள் உண்டாக்கும் குணநல மாற்றங்களை ஆய்கின்ற கதையாகக் கன்னிமை நகரவில்லை.. ஏதோ ஒன்றைப் பெண் இழக்கிறாள்.அது என்ன என்கிற தேடல்தான் கதை.எல்லாப்பெண்களும் இப்படித்தானா என்பது ஆய்வுக்குரியது.ஆணும்கூட எவற்றையெல்லாமோ வழியில் தவறவிடுகிறான் தான்.ஒவ்வொருவருமே பயணத்தில் எதை எதையோ இழக்கிறோம்;விட்டுப்பிரிகிறோம்.பலதும் நம் தன்னுணர்வு இல்லாமலே வாடி உலர்ந்து உதிர்ந்து போகின்றன.அவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்க வைக்கும் நுட்பமான கதை இது.

17-04-1959இல் தீப.நடராஜனுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்குறிப்பிடுகிறார் கி.ரா ;”கன்னிமை கதையை எழுதத்தொடங்கி இருக்கிறேன்.ரொம்பவும் அருமையான கதையாக அமையலாம்.பெண்ணினுடைய பருவங்களிலே,அவள் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்னுள்ள கன்னிமைக்காலமே பொற்காலம்.அவளுக்கு மாத்திரமல்ல லொகத்துக்கே பெண்மையில் அதுவே சிறந்தது.அப்பொழுது இருக்கும் பெண்ணே பெண்.இதுதான் கதையின் கரு.”

இதே போல இன்னொரு ”ஆய்வு” மஞ்சம்மா என்கிற பெண்ணைப்பற்றி ‘ஓர் இவள்’ கதையில் நடக்கிறது..பத்து வருடம் அவளோடு குப்பை கொட்டியும் அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவனால்.அணைப்புக்கு அல்லாடும் இளங்காலையில் கழுத்தடியில் வந்து கிச்சமூட்டும் சில்லிடும் அல்லிக்கரம்.அந்தக்கரங்கள் இப்பொழுது எங்கே போயின என்று அவன் மனது ஏங்கித்தவித்தது.எதில் அவன் மனம் லயித்தாலும் அதுக்கு ஒருவகை எதிர்ப்பு இருக்கும் அவளிடம்.அப்படி மாறிவிட்டாள்.

வேலை..வேலையே வாழ்க்கை.. கதையில் கெங்கம்மாவை ஆய்வு செய்கிறார் கி.ரா. .”தலைக்கோழி கூப்பிட்டதும் வழக்கம்போல முழிப்புத்தட்டியது.தொழுவில் மாடுகள் மணியோசையும் அவைகள் கூளம் தின்னும்போது காடிப்பலகையின் சத்தமும் கேட்டது.கெங்கம்மா படுக்கையில் இல்லை.” அவள் எழுந்து வேலைகளைத் துவங்கிவிட்டாள்.ஒரு நாளின் பொழுது முழுவதும் வேலை வேலை எனக்கடக்கும் கிராமத்து விவாசாயக்குடும்பத்துப் பெண்ணின் வாழ்விலிருந்து தறித்து எடுக்கப்பட்ட ஒரு கீற்றாக இக்கதை விளங்கும்.அக்கதை முடியும் பத்தி முக்கியமானது;

“புருஷன் பக்கத்தில் வந்து படுக்கையை விரித்தாள்.லாந்தரை சுருக்குவதற்குமுன் நாகையா அவளை ஒருதரம் பார்த்தார்.அந்த முகத்தில் துளிகூடக் களைப்போ ஆயாசமோ இல்லை.எப்படி அவளால் இப்படித் திகழ முடிகிறது?அந்தக்கணத்தில் அவருக்குப் பளிச்சென்று மனசில் ஒன்று தட்டுப்பட்டது.’நாம் வாழ்க்கை வேறு வேலை வேறு என்று நினைக்கிறோம்;இவளோ வேலையே வாழ்க்கையாக விளங்குகிறாள்’.தன் அருகே தலை சாய்த்த தன் மனையாட்டியை இறுகப்பற்றி முகர்ந்தார்.பூசுப்பொடியோ சோப்பு வாடையோ முதலிய எதுவும் இன்றி சுயம்பான,தனீ மனுஷி வாடைதான் அவளிடம் இருந்தது.”

உழைக்கும் மக்களின் பண்பாடாக இருப்பது உழைப்பு.உழைப்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக அல்லது பெறுவதற்காக என்பது ஒருபுறம் இருக்க, அவர்களால் உழைக்காமல் சும்மா இருக்கவே முடியாது.உழைப்பே அவர்களின் குணம்.இயல்பு.அடையாளம்.பண்பாடு.இதைத்தான் கெங்கம்மாவை முன்வைத்துக் கி.ரா. விவாதிக்கிறார்.நாச்சியாரம்மாவையும் மஞ்சம்மாவையும் விட கெங்கம்மா வேறானவள்.உழைப்பின் மகள்.முந்தைய இருவருமே கடுமையான உழைப்பாளிகள்தாம்.ஆனால் அந்தக்குணம் அக்கதைகளில் விவாதிக்கப்படவில்லை.குணநல விசாரமாக அக்கதைகள் நின்று போகின்றன.எல்லோரும் கன்னிமையையும் ஓர் இவளையும் கொண்டாடினால் எனக்குக் கெங்கம்மாவே முக்கியமானவளாகப் படுகிறாள்.உழைக்கும் வர்க்கத்தின் பண்பாட்டு அரசியல்கூறு இதில் வெளிப்படுகிறது.

கொத்தைப்பருத்தி,உண்மை,காய்ச்சமரம், முதுமக்களுக்கு,கீரியும் பாம்பும்,இவர்களைப் பிரித்தது ஆகிய ஆறு கதைகளிலும் வரும் மருமகள்கள் ஒன்றாயிருக்கும் குடும்பங்களை ரெண்டாகவும் நாலாகவும் பிரிக்கிறார்கள்.முதுமக்களுக்கு கதையில் மட்டும் பெரியவர்களே முன்னின்று பிரித்துக்கொடுத்துவிடுகிறார்கள்.

‘கொத்தைப்பருத்தி’யில் “செங்கன்னாவின் குடும்பம் முந்தி கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது.அப்புறம் அவர் வீட்டுக்கு வந்த “மகாலட்சுமிகள்” ஒருத்தருக்கொருத்தர் பேச்சண்டை போட்டு,கூட்டுக்குடும்பத்தை உடைத்தார்கள்.பாத்தா ரொம்ப;பகுந்தா கொஞ்சம்”

‘காய்ச்ச மரம்’ கதையில் பாறைப்பட்டி கந்தசாமி நாயக்கரை மத்தியஸ்தராக வைத்து நாலுபிள்ளைகளுக்கும் சொத்தைப் பிரித்துக்கொடுக்கிறார் நிம்மாண்டு நாயக்கர்.சொத்து பூராத்தெயும் நாலு பாகமா வச்சி,சரிதானான்னு கேட்டார் பாறைப்பட்டி.அபிப்பிராயம் கேடக் அவனவன் பொண்டாட்டி கிட்டெப் போனாங்க.வந்து சரிதாம்னு சொன்னதும் கரசீட்டு எழுதிப்போட்டு எடுத்துக்கிங்கன்னாங்க. வீடுகளைப் பிரிக்கும்போது ”அந்த வேளையிலிருந்தே தம்பிமாரோட பொஞ்சாதிகளுக்கு வயித்தெரிச்ச தொடங்கி விட்டது.நவதானியங்கள்,வத்தல்,கோட்டைக்கணக்கிலே உளுந்து ,பருத்திப்பொதிகள் என எல்லாவற்றையும் பிரித்துக் கொடுக்கிறார்கள்.அப்புறம் உள்ளே போய் ஒரு தவலைப்பானையைத்தூக்கி வருகிறார் நிம்மாண்டு நாயக்கர்.அது நிறைய வெள்ளி நாணயங்கள்.அந்தப்பணத்தை அப்படியே கொட்டி 2000 ரூபாய் வெள்ளிக்காசுகளையும் நாலு பங்காக பிரித்துக்கொடுக்கிறார்கள்.

பிள்ளைக நெனைச்சாங்க;

நம்ம அப்பா மாதிரி இந்த ஊருல யாரு பிள்ளைகளுக்கு இப்பிடிப் பகுந்து கொடுத்துருக்காங்க!

மருமக்கமாரு நெனைச்சாங்க;

பொல்லாத கிழவம்.இத்தென நா யாரு கண்ணுக்குந்தெரியாம இம்புட்டுப் பணத்தைப் பொதைச்சி வச்சிருந்திருக்கே!இப்பிடி இன்னும் எம்புட்டுப் பணத்தெ எங்கென எங்கென பொதைச்சி வச்சிருக்குமோ;யாரு கண்டது “ 

கடைசிக்கட்டத்தில், நாலுபிள்ளைகளும் நாலு மருமக்கமாரும் கைவிட்டு நிம்மாண்டு நாயக்கரும் அவர் சம்சாரம் பேரக்காளும் ராமேஸ்வரம் கோயில்ல தலையெல்லாம் மொட்டையடிச்சி பிச்சை எடுத்திட்டிருப்பாங்க.தற்செயலாக அங்கே போன பாறைப்பட்டி நாயக்கர் அந்தக்கோலத்தில் இருவரையும் கண்டு கண்ணீர் உகுப்பார்.என்ன பேசுறதுன்னு யாருக்கும் தெரியலே.அப்போதும் பேரக்காள் மட்டும் வாயைத்திறந்து ஒரு வார்த்தை கேட்டா..

“ஏம் பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”

இந்த வரியில் கதை முடியும்.

உலகமே கொண்டாடிய கதை இது.பேரக்காள் என்னும் தாயின் அன்பைக்கண்டு வாசக உலகம் நெக்குருகி நின்றது.கி.ரா.படைத்த பெண்களில் தனித்துத் தெரிபவளாக அந்தப்பாட்டி இருக்கிறாள்.ஆனால் நாம் இங்கு விவாதிப்பது மருமகள்களை கி.ரா.எப்படிப் படைத்திருக்கிறாள் என்பது.

’கீரியும் பாம்பும்’ கதையில் வரும் மருமகள் லோகு இன்னும் கொடுமைக்காரியாக நிற்கிறாள்.”நீங்க என்னையக் கலியாணம் செஞ்சிக்கிட்டீங்களா உங்க அம்மாவைக் கலியாணம் செஞ்சிக்கிட்டீங்களா??” என்று ஒரு கேள்வியைக் கணவனைப் பார்த்துக் கேட்கிறாள்.அந்தக் கேள்வியைத் தாங்க முடியாமல் அந்தப் பூர்வீக வீட்டிலுள்ள மூதாதையரின் ஆவிகள் காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுத்தன.அவன் மயக்கம் வந்து தள்ளடுகிறான்.அம்மா வந்து தாங்கிப்பிடிக்கிறாள்.என்ன ஒரு கேள்வி?

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam. Gopalla Gramam, Gopallapurathu Makkal by ki ra

குடும்பத்தை ரெண்டாக்குவதற்காக என்றே பிறவி எடுத்தவர்கள் போல மருமக்கள்மாரைப் படைக்கிறாரே கி.ரா? இது நியாயமா? மாமியார்-மருமகள் முரண்பாட்டை அறிவியல்பூர்வமாக கி.ரா.அணுகவில்லையே? அரசியல் கதைகளில் தொழிற்படும் இயங்கியல்பூர்வமான அணுகுமுறையை மருமகள்களிடம் ஏன் காட்டவில்லை கி.ரா? என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.இதில் மட்டும் ஒரு சராசரி சம்சாரியாக-கிராமத்துப் பெரியவராக   மட்டுமே தங்கி நிற்கிறார்.எப்படி இருக்கோ அப்படியே ஆவணப்படுத்திவிட்டேன் என்று நாட்டார் கதைத்தொகுப்பில் சொல்லலாம்.ஆனால் சிறுகதைக்குள் வரும்போது அங்கே படைப்பாளியின் சார்புநிலை முக்கியமல்லவா?. மஞ்சம்மாளையும் நாச்சியாரம்மாவையும் நுணிகிப் பார்த்தது போல கரிசல் உலகத்து மருமகள்களை அவர் உற்றுநோக்கவில்லை.குடும்பத்தைப் பிரிக்கும் ஒரே முகத்தை மட்டுமே அவர்களுக்கு வழங்குகிறார்.

இந்தப் பிரச்னையே வேண்டாம் என்றுதான் ’முதுமக்களுக்கு’ கதையில் வரும் பொய்யாளி நாயக்கரும் நாணம்மாளும் தங்கள் சொத்தை ஒன்பது பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுக்கும்போது பத்துப்பாகமாகப் பிரித்து தங்களிருவருக்கும் என ஒரு பங்கை வைத்துக்கொண்டனர்.தம் வீட்டை இயற்கையோடு அமைந்த கூரைவீடாகவே வைத்துக்கொண்டு ஊருக்கே பொதுவான மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

காய்ச்ச மரம் கதையில் ராமேஸ்வரத்தில் நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் பிச்சை எடுப்பதோடு கதை முடியவில்லை.அதன் தொடர்ச்சியை ’முதுமக்களுக்கு’ கதையில் பொய்யாளி நாயக்கர் கூறுகிறார்:

“ராமேஸ்வரம் கோவிலுக்கு முன்னால் நிம்மதியாப் பிச்சை எடுத்து வாழ்ந்துக்கிட்டிருந்தவங்களெ அங்கெ போயி அழுது தொழுது ஊருக்குக் கூட்டீட்டு வந்தாங்களே என்ன ஆச்சி?”

“ஊருக்கு வந்ததும் நிம்மதியில்லாம பாழுங்கிணத்திலே விழுந்து செத்தாங்க”

காய்ச்சமரம் கதையையும் முதுமக்களுக்கு கதையையும் இரு எத்ர்வுகளாக வைத்துக் காட்டுகிறார் கி.ரா.பிள்ளைகள் என்றால் அதுகள் சொத்துக்குத்தான் வாரிசே தவிர பாசத்துக்கு அல்ல என்கிற பொய்யாளி நாயக்கரின் கண்டுபிடிப்பை கி.ரா. ஏற்றுக்கொள்கிறார்.ஒரு கட்டுரையிலும் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.”பாசம் என்பது வேர்போலக் கீழேதான் இறங்கும்.கொடிபோல மேல்நோக்கி வளராது” அதாவது தங்கள் பிள்ளைகள்,பேரன் பேத்திகள் என்றுதான் பாசம் கீழ்நோக்கியேதான் போகும்.அப்பா அம்மா,தாத்தா பாட்டி என மேல்நோக்கிப் படராது என்பது பொய்யாளி நாயக்கரின் தத்துவம்.

இதைக் கி.ரா. பொதுமைப்படுத்துவது சரியாகப்படவில்லை.எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் எந்த உறவும் நிலைக்கத்தான் செய்யும்.சொத்தோடு பிணைக்கப்படுவதால்தான் உறவுகள் விரிசல் காண்கின்றன.இங்கு பிரச்னை மனமா சொத்தா என்கிற கேள்விதான் எழுகிறது.

ஜடாயு,பேதை ஆகிய இரு கதைகளில் வரும் இரு பெண் கதாபாத்திரங்கள் பற்றிப் பேச வேண்டும்.அப்புராணி நாயக்கர் என்று பேர் பெற்ற தாத்தைய நாயக்கர் கோவில்பட்டிக்குப்போய் வீட்டுக்குத்தேவையான சாமான்களை வாங்கிக்கொண்டு ராத்திரி ஆகிவிட்டதால் ஊரின் கடைசியில் உள்ள தெரிந்த வீட்டில் சாமான்களை வைத்துவிட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்கிறார். அப்போது ஒரு பெண்ணை சில ஆண்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள்.யாரோ எவரோ. ஆனால் தப்பான நோக்கத்தோடு அவளைத் துரத்துகிறார்கள் என்பது தெரிகிறது.அந்தப்பெண்ணும் தாத்தைய நாயக்கரின் காலில் வந்து விழுந்து காப்பாற்றக் கோரிக் கதறுகிறாள்.அது ஏதோ புருசன் பெண்டாட்டி தராறு என்று பொய்சொல்லி அவளை இழுத்துப்போக முயற்சிக்கிறார்கள். தாத்தைய நாயக்கர் தலையிடுகிறார்.பெரிய யுத்தமே நடக்கிறது.அந்த ரவுடிகள் இவருடைய கைகளை வெட்டி எறிகிறார்கள்.அப்போதும் போராடுகிறார்.

“ஐயோ தாயே உனக்கு நான் உதவ முடியாமல் போய்விட்டதே,இவர்களைக் கொன்று உன்னை மீட்க வல்லமை இல்லாமல் போய்விட்டதே?கடவுளே நீ இருக்கிறாயா? என்று விம்மிக் கதறியபடி சாகிறார்.ராமாயணத்தில் ராவணனோடு போராடிச் சீதையைக் காக்க முடியாமல் செத்துமடிந்த ஜடாயு பேரைக் கதைத் தலைப்பாக வைத்துத் தாத்தைய நாயக்கரை காவியநாயகனாக உயர்த்துகிறார் கி.ரா.சிறப்பான கதை.ஆனால் அந்தப் பெண்? போலம்மாள் என்கிற அந்தப்பெண் கணவன் அடித்ததால் கோபித்துக்கொண்டு தனியாகக் கிளம்பி வந்து காமுகர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டாளே?காந்தி கனவு கண்டதுபோல் தன்னந்தனியாக ஓர் இளம்பெண் சுதந்திர இந்தியாவில் இரவு நேரத்தில் நடந்து வர முடியவில்லையே?எத்தனையோ பெண்களின் பிரதிநிதியாக அந்தப்பெண் போலம்மாள் நம்மை நோக்கிக் காப்பாத்துங்க..என்று கதறியபடி இழுத்துச் செல்லப்படுகிறாள்.அதோ…கதறல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போகிறதே…என்ன செய்யப்போகிறோம் என்கிற பதட்டத்தைக் கி.ரா. நமக்கு உண்டாக்கி விடுகிறார்.கதைக்குள் கி.ரா. எதையும் விவாதிக்கவில்லை.வாசக மனதில் விவாதங்களையும் குற்ற உணர்ச்சியையும் தூண்டுகிறார்.அதுதான் கலையின் வெற்றி.

’பேதை’ கதையில் வரும் பேச்சி ஒரு மறக்கமுடியாத பெண்.வலசைத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் அந்த ஊருக்கு காட்டுவேலைக்காக வந்த கன்னி அவள். மனவளர்ச்சி போதிய அளவுக்கு இல்லாத கன்னி அவள்.உடை மரத்தைப் போன்ற பறட்டை மயிர்த்தலை.வாயின் உதட்டோரங்களில் நீண்டு வெளி வந்திருக்கும் சிங்கப்பல்கள் என்று அவளுடைய உருவத்தை அகோரமாக வரைகிறார் கி.ரா. ஆனால் கோயில் சிற்பங்களையெல்லாம் விஞ்சக்கூடிய ஒரு அப்சரஸின் ஸ்தன்யங்களைப் பெற்றிருந்தாள் அவள். இது போதாதா ஆண்களுக்கு? அவள் திடீரென்று அவள் அறியாமலே கருவுற்றுவிடுகிறாள்.யார் காரணம் என்று அடித்துக்கேட்டாலும் அவளுக்குத் தெரியவில்லை.இதுகூடத்தெரியாம அப்படி என்ன உறக்கம்? என்று ஊர் பேசியது.அவளுடைய குடும்பத்தினர் அவளை அடித்து உதைத்து அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டனர்.அவள் ஊரார் கொடுக்கும் சாப்பாட்டை உண்டு உயிர் வளர்க்கிறாள்.அந்தக்கோட்டிக்காரி வயித்திலே முத்துக்குட்டிபோல ஒரு ஆண்பிள்ளை பிறக்கிறது.வீடுகளில் வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சாப்பாடு பத்தாமல் பிச்சை எடுத்தும் சாப்பிட்டாள்.மரத்தடியில் உட்கார்ந்து போகிற வருகிற ஆண்களின் முகத்தையும் தன் குழந்தையின் முகத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருப்பாள்.ஆனால் டிப்தீரியா வந்து அந்தக்குழந்தை இறந்துவிடுகிறது.அதை நம்பாமல், அவள் குழந்தையின் சடலத்தை இடுப்பில் வைத்துக் கொஞ்சிக்கொண்டு திரிந்தாள்.ஊரார் பிடுங்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தாலும் சுடுகாட்டில் வெந்துகொண்டிருக்கும் பிள்ளையை தோண்டி எடுத்து அணைத்துக்கொள்கிறாள். சுடுகாட்டிலேயே வாழ்கிறாள்.அவளுடைய குடும்பத்தார் வந்து இழுத்துச் சென்றாலும் மீண்டும் சில காலம் கழித்து அதே ஊருக்கு வருகிறாள்.பிறந்த மேனியாக மீண்டும் நிறை மாசமாக கர்ப்பிணியாய் வயிற்றைத்தள்ளிக்கொண்டு அந்தக் ’கோட்டிக்காரி’ ஸ்தனங்கள் ஆட ,ஒரு ஆணைப்போல் கைகளை முன்னும் பின்னும் வீசிக்கொண்டு திட் திட் என்று பூமி அதிர அந்தக் கிராமத்தின் நடுத்தெருவே நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

பேச்சியைக்காக்க ஒரு ஜடாயு தோன்றவில்லை.வாசிக்கையில் பேதை கதை நம் மனதை மருட்டுகிறது..குற்ற உணர்வை ஏற்படுத்தும்.ஒரு அறியாப்பெண்ணுக்கு என்ன கொடுமையைச் செய்து விட்டது சமூகம்.பெண்கள் வாழத்தகுதியற்ற நம் நாட்டின் இழிநிலையைக் குறியீடாகச் சொல்லும் கதை இது.இக்கதையின் வர்ணிப்புகள் கதை வெளியான சமயத்தில் விமர்சனத்துக்குள்ளானது.பேதை கதையின் விவரிப்புகள் ’அருவருப்பூட்டுவதாக ’பேராசிரியர் அ.மார்க்ஸ் ராஜநாராயணீயம் புத்தகத்தில் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.ஆனால் சுடலையில் தனித்து வாழும் பெண் பற்றிச் சித்தரிக்கும்போது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்கவே கி.ரா. அப்படி எழுதியிருப்பதாகத்தோன்றுகிறது.பெண் என்றால் இப்படி இப்படி இருக்கவேண்டும் என்று பல பவ்வியங்களையும் நாசூக்குகளையும் கற்பிக்கின்ற நம் சமூகத்தின் நடுத்தெரு வழியே திட் திட் என்று அவள் நடந்து போவது கி.ராவின் பண்பாட்டுக் குறுக்கீடு என்று பார்க்கலாம்.

அவர் புதுச்சேரி சென்ற பிறகு எழுதிய சின்னக்கதையான ‘மோசம்’ கதையில் வரும் எதிர்வீட்டுப் பெண் இன்றைய காலத்தின் அடையாளம்.”வலி வலி ” கதையின் ராதை இளவயதிலேயே கணவனை இழந்த பின் வலி வலி என்று தன் உடம்பில் ஏற்பட்டுள்ள புதிய புதிய வலிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கும் மனப்பிறழ்வுநிலைப் பெண்ணாகிறாள்.

ஊரில் தேவைப்படுவோர்க்குத் தன் உடம்பைத் தருகிற தொண்டைச் செய்கிற காமு என்கிற காமம்மா ஒரு வேறுபட்ட கதாபாத்திரம்.

விளைவு -சுப்பாலு,கனிவு -மல்லம்மா,பூவை -பேரக்கா ,குடும்பத்தில் ஒருவர்-அயிரக்கா,சினேகம்-ராமி,பலாப்பழம்-மாமி,மருமகள்,ஒரு காதல் தோவி- மேரி மற்றும் லட்சுமி,சாவு-ஜக்கு,வால் நட்சத்திரம்-ஜானு,புவனம்-புவனா,காலம் கடந்து-சன்னக்குட்டி,நிலை நிறுத்தல்-மனைவி மாசாணம்,முது மக்களுக்கு-நாணம்மா,கண்ணீர்- பூசாரி மாடத்தி,செவத்தம்மாள்,பேத்தி சப்பாணியம்மா,அரும்பு-ரோஸம்மா,கிடை-செவணி என்று கி.ராவின் சிறுகதைகள் வித விதமான இயல்புகள் கொண்ட பெண்களால் ததும்பி வழிகிறதைப் பார்க்கிறோம்.கரிசல் வானில் ஒளிரும் நட்சத்திரங்களாகக் கி.ரா. படைத்த பெண் கதாபாத்திரங்கள் தனீ மனுஷி வாசனையுடன் நம் மனங்களில் நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள்.

குடும்பத்துக்கும் ஆண்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்பட்ட மரபார்ந்த பெண்கள்தாம் கி.ராவின் பெண்கள்.ஆனால் உழைப்பாளிகள்.அதில் கம்பீரம் பெற்றவர்கள்.அசலானவர்கள்.,ஒரே ஒரு சிறுகதையில் மரபை மீறுகிறாள் ஒரு பெண்.”தொண்டு” கதையில் வரும் காமு தன் கணவன் மரணத்துக்குப் பிறகு வெள்ளைச்சேலை கட்ட மறுக்கிறாள்.அதில் உறுதியாக நிற்கிறாள்.ஊரை எதிர்த்தே நிற்கிறாள்.அந்தபோராட்டத்தை அவள் தொடரவில்லையே என ஊரின் முற்போக்கு வாலிபர்கள் வருத்தப்படுகிறார்கள்.

சிறுகதைகளில் இத்தனை பெண்களைப் படைத்தும் இன்னும் முழுமையாகச் சொல்லவில்லை என்கிற உணர்வு கி.ராவுக்கு இருந்திருக்கும் போல.”பெண்கதை என்னும் பெருங்கதை” என்று தனியாக ஒரு நூலை 2017இல்  .வெளியிடுகிறார்.அதில் சிறுகதைத்தன்மையுள்ள குட்டிக்கதைகள் வழியே கூனம்மாள் என்கிற கூனிப்பாட்டியின் கதையைச் சொல்கிறார்.இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும் ஆணை ’வெற்றி கொள்ள’வும் பல உபாயங்களை உருவாக்கிக்கொள்வதை .எழுதுகிறார்.செவ்வாக்கிழமை விரதம் அல்லது அவ்வை நோன்பு என்கிற பெயரில் பெண்கள் உருவாக்கும் ஆண்கள் நுழையமுடியாத ஒரு புதிய வெளியை உருவாக்கித் தங்களுக்குள் உரையாடுகிறார்கள்.எழுத்தைச் சொல்லித்தராத பள்ளிக்கூடங்களாக இந்த ராத்திரிச் சந்திப்புகளை அவர்கள் தக்க வைத்திருக்கிறார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு சமிக்ஞை மொழியையும்கூடப் பெண்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார் கி.ரா.

“ஒடுக்கப்பட்ட சீவன்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட கமுக்கங்கள் இப்படி இன்னும் எத்தனை இருக்குமோ தெரியவில்லை” என்கிற கி.ரா.வின் வாசகம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகவும் பண்பாட்டு வரலாற்றில் நம் தேடலைத் தூண்டுவதாகவும் அமைகிறது.

அவருடைய சிறுகதைகளுக்குள் அத்தனை பெண்கள் வந்து நம்மை ஆட்டுவிக்கிறார்கள் என்பது உண்மை.எல்லாவற்றுக்கும் மேலாக ’கன்னிமை’ கதையில் அவர் ஓரிரு வரிகளில் விவரிக்கும் ஒரு காட்சி மட்டும் மனதில் நின்றாடுகிறது.

பள்ளுப்பெண்கள் பருத்தி எடுத்து முடித்து கூலியாக வாங்கிய பருத்தியுடன் வீடு திரும்பும் அந்தக்காட்சி..

“ வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியுடன் நடந்துவருகிற பெண்டுகளின் கூட்டத்தைக் கடந்து கொண்டே வந்தது வண்டி.அவர்கள் வேண்டுமென்று குடிகாரர்களைப்போல தள்ளாடி நடந்து கொண்டே வேடிக்கைப்பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலி செய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள்” 

என்ன மனோரம்மியமான காட்சி.உழைத்துக்களைத்த இந்தப்பெண்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் சந்தோசத்தை ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் பாடிக்கொண்டும் குடித்ததுபோல தள்ளாடி நடித்துக்கொண்டும் போகும் காட்சி..அடடா எல்லாக்காலமும் எல்லா நேரமும் இப்படியான ஒரு பொழுது நம் நாட்டுப்பெண்கள் எல்லோருக்கும் அமைந்துவிடக்கூடாதா என ஏங்க வைக்கும் ஒரு காட்சி.

’கறிவேப்பிலைகள்’ கதையில் வரும் பப்புப்பாட்டி சந்தோசமாக இருக்கும் இரவுகளில் பக்கத்தில் படுத்திருக்கும் பப்புத்தாத்தாவின் காதுக்குள் கல்யாணப்பட்டைப்பாடுவாளாம்.அந்த சம்சாரித்தெருச் சந்தோசம் கமுக்கமானது.ஆனால் இந்த உழைக்கும் பெண்களின் ’விடுபட்ட உணர்வி’லிருந்து வரும் சந்தோசம் வெளிப்படையானது.கொண்டாட்டமானது.கூட்டாக அனுபவிப்பது.பெரிய சங்கீதக் கச்சேரியில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கும் இசைக்கலைஞர் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நேரத்தில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு ராகத்தின் கீற்றை வாசித்து சபையோரை அசத்துவது போல இக்காட்சியைக் கி.ரா. வாசித்துவிட்டார்.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

கரிசல் வாழ்வின் ஆவணமாக..   

50களின் பிற்பகுதியில் தன் முப்பது வயதுக்கு மேல் எழுதத்துவங்கிய கி.ரா. சமூகப்பிரச்னைகளையும் விவசாய வர்க்கப்பிரச்னைகளையும் இயங்கியல் பூர்வமாக எழுதிக்கொண்டிருந்தார்.ஒரு கட்டத்துக்குப் பிறகு ”பிரச்னைகளாக வாழ்வைப் பார்க்கக்கூடாது.ரசனையும் வேண்டும். எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.எதையும் கழிக்க வேண்டியதில்லை.எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை” என்கிற மனநிலை அவருக்கு   ஏற்பட்டுவிடுகிறது.ரசிகமணி டி.கே.சி அவர்கள் மீது கி.ரா.கொண்ட மயக்கம், அவரை வேறொருவராகத் தவமைக்கத் துவங்கியது.ஆனால் அப்படியே வெறும் ரசனை மட்டும் போதும் என்று சௌந்தர்ய உபாசகராகச் சுருங்கிவிடாமல்,கரிசல் வாழ்வை முழுமையாகப் பார்க்கணும்;அதை முழுதாக ஆவணப்படுத்தனும் என்கிற வேகம் அவருக்குள் வேர்விடுகிறது.

இலக்கியத்தை ஓர் அறிதல் முறையாகவும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் ஆவணப்படுத்தும் பணியையும் இலக்கியம் செய்வதில் ஆட்சேபம் இருக்க முடியாது.ஆனால் ஆவணப்படுத்தும் வேகத்தில் கலை அமைதி கெட்டுப்போவது பற்றிய பிரக்ஞை அற்றுப்போவது உண்டு.அந்த விபத்து கி.ராவுக்கும் நேர்ந்தது.

‘வேட்டி’ கதையில் ஒரு ஆகஸ்ட்டுப் போராட்ட தியாகிக்கே வேட்டி இல்லை என்பதுதான் கதை.ஆனால் அதில் எத்தனை விதமான வேட்டிகளை உள்ளுர்ப் பிரமுகர்கள் கட்டுகிறார்கள்,அவற்றை எப்படித் துவைக்கிறார்கள், எப்படி பராமரிக்கிறார்கள் என்கிற விளக்கத்துக்குள் விலாவாரியாக இறங்கிவிடுகிறார்.கன்னிமை கதையில் வேலைக்காரர்களுக்கும் கூட தன் அன்பைக் குறையில்லாமல் பரிமாறுவாள் நாச்சியாரம்மாள் என்பதைச் சொல்லவரும்போது, கி.ரா. அந்தச் சாப்பாட்டுக் காட்சிக்குள் ஆழமாக இறங்கிவிடுகிறார்.

”நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து, மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக  எண்ணெயில் வறுத்துக் கொண்டு வந்து வைத்து விடுவாள். சருவச்சட்டியிலிருந்து  வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, வந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால்  ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.

ஒரு நாளைக்கு உரித்த பச்சை வெங்காயம் கொண்டு வந்துகடித்துக்’ கொள்ள கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் காம்பைப் பறித்து விட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் கொண்டா கொண்டாஎன்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெது வெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாக பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டு வந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம்.ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.”

வேலைக்காரர்கள் கஞ்சி குடிக்கும் காட்சியில் நாச்சியாரம்மாவின் அன்பை விளக்க இவ்வளவு விவரணைகள் தேவையா என்கிற விமர்சனம் அப்போதே வந்தது.கதையின் போக்கிலிருந்து வாசகரை கஞ்சி குடிக்கும் அழகை நோக்கித் திருப்புகிறதல்லவா?கலை ஒருமை சிதைகிறதல்லவா என்பதே விமர்சனம்.சுருக்கமான வரிகளில் இதைச் சொல்லிச்செல்லலாமே.

அன்புள்ளம் கொண்ட முதலாளியம்மாக்களும் கரிசல் வாழ்வில் இருந்தார்கள்.அவர்கள் வேலைக்காரர்களுக்கு எப்படியெல்லாம் கஞ்சி ஊற்றினார்கள் என்பதற்கான ஆவணமாக இப்பகுதி திகழ்கிறதே?கரிசல் உணவு வகைகளும் உண்ணும் முறைகளும் பற்றிய பதிவாகவும் இக்காட்சி அமைகிறதே.அந்த லாபத்துக்காகச் சிறுகதை வடிவம் சற்றுச் சிதைந்தால்தான் என்ன?என்கிற மனநிலை கி.ரா.வுக்கு வந்திருக்க வேண்டும்.

நாட்டுப்புறவியல் அல்லது நாட்டார் வழக்காறுகள் மீது அவருக்கு ஈர்ப்பு வந்ததும் ரசிகமணியின் தாக்கத்தால் ரசனை மனோபாவம் இணைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் விலகியதும் ஏகதேசம் ஒரே காலத்தில் நடந்திருப்பதை அறிய முடிகிறது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஸி 1957 இல் எழுத்தாளர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார்.1857 சிப்பாய்ப்புரட்சியின் நூற்றாண்டு விழா மேடையிலிருந்து அவர் சொன்னது:”நாடெங்கும் சென்று உழைக்கும் மக்களின் நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரியுங்கள். எழுதப்பட்ட வரலாற்றில் இடம் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் பங்கும் பாத்திரமும் அவர்களின் உலகக்கண்ணோட்டமும் அவற்றில் பொதிந்திருக்கின்றன”. 

முன்னுதாரணமாக, தோழர் ஜோஷி தொகுத்து வெளியிட்ட 1857 புரட்சி என்கிற நூலின் பிற்சேர்க்கையாக அப்புரட்சி பற்றிய நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்திருப்பார்.அதன் தொடர்ச்சியாக,1961 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் அமைப்பு மாநாடு, நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்துத் தொகுப்பதற்கென்று ஒரு குழுவை (தோழர் ஜீவா ஆலோசனையின் பேரில்) பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் தலைமையில் அமைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினாலும் ஒரு கம்யூனிஸ்ட்டாக இந்த அறைகூவல் கி.ரா.வின் மனதில் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும்.

“பொதுவுடமைக் கொள்கையின் பேரில் உள்ள ஈர்ப்பு வேறெ,அந்தக்கட்சிகள் பேரில் உள்ள ஈர்ப்பு என்பது வேறெ.அந்தக் கொள்கையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால் பிற்பாடு-அனேகமாய்-அது மாறவே மாறாது.கட்சிகள் சமாச்சாரம் அப்படி இல்லை.சாரதி (ஓட்டுனர்) சரியில்லை என்றால்,அப்பா நிப்பாட்டு நா இறங்கிக்கிறேங்க என்று ஆகிவிடுவதில்லையா,அப்படித்தாம்.” 

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

கட்சியைவிட்டு விலகினாலும் மார்க்சியத்திலிருந்து விலக முடியாது என்பதே கி.ரா.வின் நிலைப்பாடு.ஆகவேதான் கதைகள் எழுதுவதைக்கூட நிறுத்திவிட்டு நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்துப் பதிப்பிக்கும் வேலையைக் கி.ரா. இறுதிநாள் வரை செய்து வந்தார்.இது குறித்த வரலாற்றுக்குறிப்பொன்று பேராசிரியர் நா.வா அவர்களின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் ”பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை ” என்கிற தன் நூலில் இவ்விதம் குறிப்பிடுகிறார்:

இம்முயற்சிக்கு வித்திட்டவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பி.சி. ஜோஷி என்று அழைக்கப்பட்ட பூரண சந்திர ஜோஷியாவார் 

1857இல் நிகழ்ந்த இந்தியச் சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957இல் கொண்டாடப்பட இருந்ததையொட்டி அது தொடர்பாகக் கருத்தரங்கு ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அக்கருத்தரங்கில் இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பான நாட்டார் பாடல்களை மையமாகக் கொண்ட கட்டுரையொன்றையும் எழுதிப் படிக்க முடிவு செய்திருந்தார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாட்டார் பாடல்களைத் தனக்கு சேகரித்துக் கொடுக்கும்படி பி.சி. ஜோஷி கேட்டதற்காக, ஒன்றிரண்டு பாடல்களைச் சேகரித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வானமாமலை அவருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த அனுபவம் நாட்டார் பாடல்களின் பக்கம் அவரைத் திருப்பியது. இக்கால கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் . மாணிக்கம் இம்முயற்சியில் அவர் ஈடுபடும்படி உற்சாகமூட்டினார். ” ஆகவே கி.ரா என்கிற நாட்டுப்புறவியலாளரின் பின்னணி இதுதான்.

இந்த ஆவணப்படுத்தும் ஆர்வம் அப்படியே அவரது சிறுகதைகள், நாவல்கள் என அவர் தொட்ட அனைத்து இலக்கிய வடிவங்களிலும் வெளிப்பட்டது.

சங்க இலக்கியம் தொட்டு நம் பழந்தமிழ் இலக்கியங்களின் அடித்தளமாக அமைவது “நிலமும் பொழுதும்”தானே?கரிசல் இலக்கியம் என்பது கரிசக்காட்டின் நிலமும் பொழுதுமன்றி வேறென்ன?

கி.ரா.வின் சிறுகதைகளில் கரிசலின் அதிகாலைப்பொழுதுகளும் மத்தியான வெயிலும் மாலைக் காற்றும் ராத்திரிக்குளிரும் வெக்கையும் அதனதன் அழகுகளோடு பதிவாகியுள்ளன.

”தலைக்கோழி கூப்பிட எழுந்திருந்து தொட்டணன் தொழுவைத்தூத்து சாணியைக் குப்பையில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு,பருத்திக்கொட்டையை ஆட்ட ஆரம்பித்தான்.” (குடும்பத்தில் ஒரு நபர்)

”காலையில் எழுந்ததும் ராமசாமி கால்கை கழுவிக்கொண்டு ஒரு லோட்டா நீத்து தண்ணீர் குடித்துவிட்டு,எருமை மாட்டை அவிழ்த்தான்.ஊர்க்கம்மாக்கரையில் பத்திவிட்டுவிட்டு ,கரையிலிருக்கும் நவ்வாப்பழ மரத்தின் மேல் ஏறிக்கொண்டன்” (ஜெயில்)

.”தலைக்கோழி கூப்பிட்டதும் வழக்கம்போல முழிப்புத்தட்டியது.தொழுவில் மாடுகள் மணியோசையும் அவைகள் கூளம் தின்னும்போது காடிப்பலகையின் சத்தமும் கேட்டது.கெங்கம்மா படுக்கையில் இல்லை.”(வேலை வேலையே வாழ்க்கை)

எல்லாக்காலைப்பொழுதுகளுமே வேலைதுவங்கும் பொழுதுகளாகவே கரிசல் வாழ்வில் அமைவதைச் சிறுகதைகளில் ஆவணப்படுத்துகிறார்.நிலக்காட்சிகளை அவர் பல கதைகளில் மனங்கொள்ளத்தக்க வகையில் விவரித்துச் செல்கிறார்.

”நினைத்ததும் முதல் ஞாபகத்துக்கு வந்தது அந்த மலைதான். மூணு சின்ன மலைகள்; நெருக்கமாக அக்கன்னா எழுத்து போல ஓட்டிப் பிறந்த பிறப்பு. உச்சியிலிருந்து கீழே வரையும் பெரிசும் சிறுசுமான பலவித உருண்டை வடிவிலான பாறைகள். மரமும் அல்லாத செடியும் அல்லாத உயரங்களில் நெடுகிலும் வளர்ந்து மண்டிக்கிடக்கும் தாவரக்கூட்டம். என்ன செடிகள் என்றே அடையாளம் தெரியாத பறட்டைத்தலைச் செடிகள்.

பாறை இடுக்குகளில் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் அகலச் | சோகைகள் கொண்ட புல்லைக் கிள்ளி முகர்ந்து பார்த்தால் வரும் மணம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தரம் முகர்ந்து பார்த்தாலும் அலுக்காது. அப்படி ஒரு ரஞ்சிதம். மலையின் நிறம் | கருப்பு, மழைகளினால் காலங்காலமாக நனைந்த கன்னங்கருப்பு. பல்லாண்டு மழையில் நனைந்த சுண்ணாம்புக்காரை வீடுபோலக் கருத்துப்போயிருந்தது.”(விடுமுறை நாளில்..)

நிலமும் பொழுதும் மட்டுமின்றி உள்ளே கரிசல் தாவரங்கள்,விலங்கினங்கள்,பறவைகள்,திருமண உறவுகள்,கல்யாணம்-கருமாதிச் சடங்குகள்,சிறார் விளையாட்டுக்கள் என அவர் எதை விட்டு வைத்தார்.கி.ரா.வை “உணர்வார்ந்த இன வரைவியலாளர்” என்றும் சுதேசி இன வரைவியலாளர் என்றும் அடையாளம் காணும் தமிழின் மூத்த மானுடவியலாளரான திரு.பக்வத்சலபாரதி ’கி.ராவின் கரிசல் பயணம்’ என்கிற தன் நூலில்,” பண்பாட்டு நெசவின் ஊடாக அர்த்தங்களைக் காணும் கி.ரா.வின் எடுத்துரைப்பு மகத்தானது. ஒரு பண்பாட்டை விவரிப்பதற்கு / எடுத்துரைப்பதற்கு இனவரைவியலர்கள் அவசியம் தேவைதானா என்பதைக் கி.ரா.வின் எழுத்து கேள்வி எழுப்புகிறது. ஏனெனில் அவருடைய பன்முகப் புலன் உணர்வு சார்ந்த விவரிப்பு பண்பாட்டு நெசவாகப் பரிணமித்திருக்கிறது. இதன் மூலம் படைப்பாளனும் இனவரைவியலராக முடியும் என்பதை நிரூபிக்கிறார்.

பண்பாடு என்பது மரபு வழியாக வழங்கி வரும் சமூக அறிவு. கி.ரா.வின் எழுத்துக்களில் கரிசல் மக்களின் பாரம்பரிய அறிவாக அறியக்கூடிய விடயங்கள் ஏராளம். கி.ரா.வின் எழுத்துலகத்துக்குள் செல்வது என்பது கரிசல் பண்பாட்டுக்குள் செல்வதாகும்.” 

கி.ரா வின் சிறுகதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் நாம் நுழையும்போதும் பக்தவச்சலபாரதி அவர்களின் இந்தக்கூற்று எவ்வளவு உண்மை என்பதை உணர்வோம்.கி.ரா.வின் படைப்புகளை முழுமையாகவும் நுட்பமாகவும் உள்வாங்கிக்கொள்ள பக்தவச்சல பாரதி அவர்களின் நூல் மிக முக்கியமான வழிகாட்டும் கருவியாக(காம்பஸ்) விளங்குகிறது.

கரிசல்வாழ்வின் அறங்கள் பல சிறுகதைகளில் பேசப்படுகின்றன.தன்னிடமிருந்த ஜோடிமாடு செத்துப்போனதால் கூட்டுமாட்டுக்காரனுக்கு வாக்களித்த ஒரு சொல்லைக்காப்பதற்காக மாட்டுக்கு ஜோடியாகத் தானே மேழி பிடித்து உழப்போகும் தொட்டணக்கவுண்டர்(குடும்பத்தில் ஒருவர்) துவங்கி 

“மாடுகள் தெருவில் நடந்து போகும்போது போடும் சாணியை அடையாளத்துக்குக் காலால் கொஞ்சம் புறட்டி வைத்துவிட்டால் யாரும் தொடமாட்டார்கள்.சாயந்திரம் வந்து பார்த்தாலும் கூட அப்படியே கிடக்கும்”(ஊர்க்காலி) வரை கரிசலின் வாழ்வியல் அறங்களைப் பதிவு செய்துள்ளார்.வாசிக்கிற புத்தகத்தில் மீண்டும் வாசிக்க நினைக்கும் பக்கத்தின் மூலையைச் சற்று மடித்து வைப்பதுபோல சாணியைக் காலால் புரட்டி வைக்கும் பழக்கம் அம்மக்களுக்கு. 

ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் மாடுகளை அவிழ்த்துக்கொண்டு வந்து மந்தையில் விடுவார்கள்.மந்தையிலிருந்து மாடுகளை புல்வெளி தேடி காடுகளுக்குள் மேய்க்க பத்திச் செல்வது ஊர்க்காலி எனப்படும் ஊருக்குப் பொதுவான மேய்ப்பர்.நாம் இன்று பள்ளிக்கூடப்பஸ்சில் குழந்தைகளை ஏற்றிவிடுவதும் சாயந்தரம் பஸ்ஸை எதிர்பார்த்து சாலையில் காத்திருப்பதுபோலவும்தான் அன்று மாடுகளுக்கான இந்த ஊர்க்காலி ஏற்பாடு.இப்படி வியப்பூட்டும் வகையில் எண்ணற்ற வாழ்வியல் மற்றும் வாழ்க்கை வட்டச் சடங்குகளை பதிவு செய்துள்ள ஆவணமாகவும் கி.ரா வின் சிறுகதைகள் அமைந்துள்ளன.

சிறுகதையே நோக்கமாக இருந்த ஒரு மனநிலை, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பண்பாட்டு ஆவணமாக எழுத்தை மாற்றுகிற நோக்கமாக அவருக்குள் புகுந்துகொண்டது.அதுவே சிறுகதை என்கிற வடிவத்துக்குச் செய்யவேண்டிய  அழகியல் நியாயத்தைச் செய்யவிடாமல் தடுத்தது. 

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

வரலாற்றுப் பதிவுகளாகச் சிறுகதைகள்

பாரதியைப்போல சொற்ப காலமே வாழும்படி ஆகாமல் தந்தை பெரியாரைப்போல நீண்ட காலம் வாழும் பேறு கி.ரா.வுக்கு வாய்த்தது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1922-23) பிறந்து ஒரு கால்நூற்றாண்டு காலம் அடிமை இந்தியாவில் வாழ்ந்து, 1947இல் சுதந்திரம் கிடைத்த பிறகு சுமார் 75 ஆண்டுகாலம் சுதந்திர நாட்டில் வாழும் பெருவாழ்வு அவருக்குக் கிட்டியது.21ஆம் நூற்றாண்டின் முழுவரலாற்றையும் தானே கண்கொண்டு பார்த்து எழுதிய மார்க்சிய வரால்லாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம் போல தமிழ்நாட்டின்,கரிசல் வட்டாரத்தின் நூறாண்டுகால பண்பாட்டு/அரசியல் வரலாற்றைத் தன் சிறுகதைகளில் எழுதியவராக கி.ரா இருக்கிறார்.

1958இல் மணிமுத்தாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அங்கே கூலி வேலைக்குப் போன ஒரு தொழிலாளியின் குடும்பம்தான் ‘கதவு’கதையில் வாழ்கிறது.கம்யூனிஸ்ட் ஊழியர்கள் பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கு ஆளாவதும் கட்சி தடை செய்யபடுவதுமான வரலாற்றைத் ’தோழன் ரங்கசாமி’கதை பேசுகிறது.காசுக்காக அல்லாமல் காமப்பசி தீர்க்கும் கருணைமனம் கொண்டவளான காமு (தொண்டு ) காப்பிக்கடை ஆரம்பித்ததைச் சொல்லும்போது சடாரென்று கதை வரலாற்றுக்குள் பாய்கிறது;

”அப்போது இரண்டாம் உலகப் பெரும்போர் நடந்துகொண்டிருந்த நேரம். இந்திய சுதந்திரப் போராட்டம் கடுமையாகச் சூடுபிடித்த காலம்,

அப்போதைய வெள்ளை அரசு, நாட்டை நிர்வகிக்கவும் போருக்கு ஒத்துழைக்கும்படியும் தலைவர்களையும் மக்களையும் கேட்டுக் கொண்டபோது இவர்கள் மறுத்துவிட்டதோடு, எந்தவிதத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்பதோடு நிற்காமல் மக்களிடம் போர் எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்தது அவனுக்கு மூக்குமுட்டக் கோபம் ஏற்பட்டிருந்தது. இதனால் அரசியல் அல்லாத சாதாரணக் கிரிமினல் குற்றங்களைக்கூடக் கண்மண் தெரியாமல் பயங்கரமாக ஒடுக்கி அடக்கி வந்தது.”

இந்திய வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் உள்ளூர் வரலாறும் தனிநபர்/குடும்ப வரலாறும் ஒன்றுடன் ஒன்று ஊடாடியும் ஊடறுத்தும் செல்வதாகக் கி.ரா.வின் சிறுகதைகள் பயணிக்கின்றன. கதையின் போக்கில் ஒரு வரியிலோ ஒரு பத்தியிலோ வரலாறு குறுக்கிட்டு வாசகரை ஒரு நிலைக்குக் கொண்டுவரும்.

வரலாறு கரிசல் கிராமத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த பல பொருட்கள்,பழக்கங்களை,நவீன கருவிகளை அவருடைய சிறுகதைகளில் பார்க்கலாம்.ஊருக்குள் வந்த முதல் நாற்காலி ‘நாற்காலி’ என்ற கதையில் வருகிறது.அந்த நாற்காலியை அந்த வீட்டார் ’பழக்கி’ வசத்துக்குக் கொண்டுவரும் பக்கங்கள் மிக ரசமானவை.ஊருக்குள் மின்சாரம் வருவதை ‘கரண்டு’ கதையும் நவீன கழிப்பறைகள் வந்தும் மக்கள் ஏற்காத மனப்போராட்டத்தை சுற்றுப்புற சுகாதாரம்,அங்கணம் போன்ற கதைகளும் தையல் மிஷின் வருகையை ‘புவனம்’கதையும் பழைய எடைக்கற்களுக்கு மாற்றாக புதிய கிலோகிராம் படிக்கற்கள் கறுப்புக் கோபுரமாகவும் மஞ்சள் கோபுரமாகவும் வந்து சேர்வதை ‘எங்கும் ஓர் நிறை’ (தலைப்பு வேறொன்றையும் இணைக்கிறது)கதையும் ம்மாடூக்குத் தடுப்பூசிகள் வந்ததை ‘குடும்பத்தில் ஒருவர்’ கதையும் தீப்பெட்டித்தொழிலின் வருகையை ‘ஒரு செய்தி’ மற்றும் சில கதைகளும் மாட்டுலோன்,கிணற்று லோன் போன்றவற்றை முறையே ‘ஒரு வெண்மைப்புரட்சி’’மாயமான்’ கதைகளும் பதிவு செய்கின்றன.

விவசாய வேலைகளுக்கு வெயிலில் போய் வதங்க விருப்பமின்றிப் பெண்கள் நிழல் வேலைகளான தீப்பெட்டி ஒட்டுதல் குச்சி அடுக்குதல் இவற்றில் சாய்மானம் பெற்றதை கொத்தைப்பருத்தி போன்ற கதைகள் பேசுகின்றன.சம்சாரிக்குப் பெண் கொடுக்க மறுக்கும் காலம் வந்த கதையைத்தான் கொத்தைப்பருத்தி பேசுகிறது.

ஒரு நூறாண்டுக் காலமாற்றம்,வரலாற்று மாற்றங்களைக் கி.ரா.வின் சிறுகதைகள் தன்னுள் கொண்டுள்ளன.

நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டைப்பற்றி கண்ணீர்,பொய் என்பதும் உண்மைதான்,குருபூசை போன்ற கதைகள் பேசினாலும் அந்த நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்குள்ளும் நடந்துள்ள சீரழிவுகளைப் பேசும் “குருபூசை” மிக முக்கியமான கதை.நேத்திக்கடனுக்காக சாமியார்களுக்குச் சாப்பாடு போடும் சடங்கில் சாப்பிட ஒரு ஆளுக்கு அஞ்சு ரூபா கொடுத்தால்தான் வருவோம் என்று சாமியார்கள் ‘ரேட்’ பேசுவதை சாமி சங்கதி கூட வியாபாரம் ஆகிப்போன கரிசல் நிலத்து மாற்றங்களை ’குருபூசை’ சுவையாகவும் வேதனையுடனும் விளக்குகிறது.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

பாலினம்-பாலியல்

கி.ரா.வின் மிக முக்கியமான கதை என யார் பட்டியல் போட்டாலும் அதில் ‘கோமதி’ கதை இருக்கும்.கோமதிச் செட்டியார் என்கிற இந்தக் கோமதி, சமையல்கலையில் மன்னன்.தன்னைப் பெண்ணாக உணர்பவன்.அவனுடைய சமையலில் மயங்கிய ரகுபதி நாயக்கர் அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.அங்கே நாய்க்கரின் பேரன் ரகுவின்மீது மையல் கொள்கிறாள் கோமதி.கோமதியின் கொஞ்சல்கள்,உரசல்களால் அருவருப்படைந்த ரகு ஒருநாள் அவளை நையப்புடைத்து நெஞ்சின் மீது காலால் எட்டி உதைக்கிறான்.ரகுவின் தங்கை சுலோச்சனா வந்து தடுக்கிறாள்.அன்றிரவு மூன்று பேருமே தூங்கவில்லை.இரவு முழுவதும் கோமதி ஒப்பாரி வைத்து அழுகின்ற குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.’டீபம்’ இதழில் 1964 இலேயே இக்கதை வெளிவந்துள்ளது.திருநங்கையர் வாழ்வு குறித்த புரிதல் இன்னும்கூட நம் சமூகத்தில் உருவாகாத பின்னணியில் வைத்துப் பார்த்தால் அந்தக்காலத்திலேயே இத்தனை பரிவோடும் நியாயமாகவும் கி.ரா.இக்கதையை எழுதியிருப்பது வியப்பளிக்கிறது.

இன்னொரு கதை ‘ஜீவன்’ கிராமமுன்சீப் பிள்ளையின் மூத்த மகன் அங்குப்பிள்ளை திருநங்கை அல்லன்.ஆனால் பெண்களோடே எப்போதும் பேசிக்கொண்டும் பழகிக்கொண்டும் இருக்கும் பையன்.”நல்ல இளவட்டமான அங்குவைக் குமரிப்பெண்டுகள் விஷமில்லாத தண்ணிப்பாம்பு போல் நினைத்து நடத்தி வந்தார்கள்.”அவன் வாய்பேசாத பையன்.மாமாவை ‘ஹாமா’ என்று சொல்கிற அளவுக்குப் பேச்சு வரும்.அவனுடைய அப்பா அம்மா உட்பட அவனுடைய வீட்டில் உள்ள யாருக்குமே அவனைப்பிடிக்கவில்லை.இப்படி நம்ம குடும்பத்திலே வந்து ஒரு ஊமையன் பிறந்துட்டானே என்று வெறுத்தார்கள்.சாப்பிட மட்டும்தான் வீட்டுக்குப்போவான்.அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதாகவும் சாத்தூரில் ஒரு மாமா பொண்ணு அவனுக்காகக் காத்திருப்பதாகவும் அவனுடைய அப்பா அபனிடம் சும்மா சொல்லி வைத்திருக்கிறார்.உண்மையில் அவனது தம்பிக்குத்தான் தடபுடலாக கல்யாண ஏற்பாடு நடக்கிறது.தனக்கும் சேர்த்து ஏற்பாடு இல்லை என்று தெரிந்ததும் தன் குடும்பமே தன்னை சாத்தூரில் பொண்ணு இருக்கு என்று சும்மா சொல்லி ஏமாத்திவிட்டார்களே என்று அழுகையும் ஆத்திரமுமாக வருகிறது.கல்யாணவீட்டைக் கலவர வீடாக மாற்றுகிறான்.எல்லாவற்றையும் உடைத்துப்போட்டுவிட்டு ஓர் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொள்கிறான்.தட்டி உடைத்துக் கதவைத் திறந்தால் அவன் தன் பிறப்புறுப்பைக் கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்தம் நனைய நிற்கிறான்.

மிக நுட்பமான உளவியல் சித்திரமாக படரும் இக்கதை உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் கச்சிதமான கதை.

பாலியல் சார்ந்த உணர்வுகள்,உறவுகள் இவைபற்றியெல்லாம் தன் சிறுகதைகளில் எவ்வித மனத்தடையும் இன்றி எழுதிச்செல்கிறார்.கிராமப்புற மக்களிடம் இயல்பாகப் புழங்கும் மறைவாய்ச்சொல்லும் கதைகளின் தொனியில் அவர் எல்லாவற்றையும் பேசிவிடுகிறார்.’கனிவு’ கதையில் முதலிரவுக்கு மாற்றாக அவர்களுக்கு முதல்பகல்தான் அமைகிறது.அதை நோக்கிச் செல்லும் கதை இயல்பான துவக்கமும் முடிப்பும் கொண்டு நெருடல் இல்லாமல் வெற்றி பெறுகிறது.

’விளைவு’ கதை பாவய்யாவின் கோவணத்தை சுப்பாலு அவிழ்த்துவிடும் கதை.அதை விரசமில்லாமல் கி.ரா.வால் சொல்ல முடிந்திருக்கிறது.’வால்நட்சத்திரம்’ கதை ஜானு ருதுவான கதையை பாவாவின் பாலியல் கோணல்பார்வையுடன் பேசுகிறது.அறுபது வயதுக்கு மேல் உடலிச்சை கொள்ளும் கணவனின் அவஸ்தையையும் அவனை வெளியே படுக்க வைத்து கடவடைத்து உள்ளே படுக்கும் அவனது சன்னக்குட்டியான கிழவியின் மனநிலையையும் சம அளவில் உணர்த்தும் கதை ‘காலம் கடந்து’.

எல்லப்பனும் இன்னும் வயதுக்கு வராத செவுனியும் காட்டில் சேர்ந்திருக்கும் விவரிப்புகளோடு விரியும் “கிடை” என்று பல கதைகளைச் சொல்ல முடியும்.

பாலியல் சித்தரிப்புகளை ஒரு கவன ஈர்ப்புக்காகச் செய்வதுதான் தவறு. அதைச் சரியான கோணத்தில் விவாதிப்பது சமூகத்துக்கு மிக மிக அவசியம்.பெண்கள் தங்களுக்குள் மிக விரிவாகப் பேசிக்கொள்ளும் இடமாக செவ்வாக்கிழமை விரத இரவுகள் அமைவதை ”பெண்கதை எனும் பெருங்கதை” என்கிற கூனப்பாட்டி கதையில் பேசியிருக்கிறார். 

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

பள்ளிக்கூடத்துக்கு வெளியே

மழைக்குக்கூடப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை என்பது பழம் மொழி.கி.ரா. சொன்ன புதுமொழிதான் இப்பப் பழமொழியாக இருக்கிறது.”மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன்.அப்போதும் மழையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்”.

சிறுவயதில் எழுத்தாளர் சுந்தரராமசாமியைப்போலவே உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் 7 ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்குப் போகமுடியாத நிலையில் கி.ரா.வுக்கு முறைசார்ந்த முழுமையான கல்வி கிட்டவில்லை.ஆனால் சொந்த வாசிப்பு மற்றும் வாழ்வனுபவத்தின் பலத்திலேயே அவர் மாபெரும் படைப்பாளியாக எழுந்து நின்றார்.ஒரு வகையில் இது நம்முடைய முறைசார் கல்வி முறைக்கு கி.ரா.விட்ட சவால் என்று சொல்லலாம்

அவருடைய சிறுகதைகளில் பள்ளிக்கூடத்தைச் சிறையாகப் பாவிக்கும் சிறுவர்கள் வருகிறார்கள்.’ஜெயில்’ என்றே ஒரு கதை எழுதியிருக்கிறார்.பள்ளிக்கூடம் போவதாக வீட்டில் பாவலா காட்டிவிட்டு காட்டுவழியில் உள்ள மரத்தில் ஏறுவது,மரத்திலேயே ஒரு தூக்கம் போடுவது,அப்பக்கம் ஒரு வீட்டுக்குள் பெற்றவர்களால் பூட்டிவைக்கப்பட்ட ஒருவயதுச் சிறுவனுடன் சன்னல் வழியே பேசி விளையாடுவது இடையில் ஊருக்குள் போய் பக்கடா வாங்கிட்டு வந்து தின்பது என்று ’பல கல்வி’ கற்றுக்கொண்டிருக்கும் ராமசாமியைப் பிடித்து பாளையங்கோட்டையில் கான்வெண்ட்டில் சேர்த்து ஹாஸ்டலில் போடுகிறார்.அப்பத்தான் நீ சரி வருவே என்று.அங்கிருந்து சுவரேறிக்குதித்துத் தப்பி ஊர் வந்து சேருகிறான்.வீட்டுக்குப் போகப் பயந்து தன் பள்ளிக்கூடமான அந்த மரத்துக்குப் போகிறான்.பக்கத்து வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் குழந்தையைப் பூட்டைக் கல்லால் உடைத்து விடுதலை செய்கிறான்.குழந்தை “நீ இத்தனை நாள் எங்கே போயிருந்தே என்று கண்கலங்கக் கேட்கிறது.இந்தக் கேள்வியை,பரிசுத்தமான அன்பை ராமசாமியால் தாங்க முடியவில்லை.குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் பெற்றோர் வருவதைப் பார்த்து அப்படியே ஓட்டம் எடுக்கிறான்.எங்கே போவதென்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருந்தான் என்று கதை முடியும்.

பாவம் அந்தப்பையன் எங்கே போவான்?என்ன ஆவான்? என்கிற பெரும் கவலையை நம் மனதில் ஏற்றிவிட்டுக் கதையை முடித்துக்கொண்டாரே என்று இருக்கும்.

’ஒரு சிறிய தவறு’ கதையில் பள்ளிக்கே போகாமல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஆறாவது வயதில் அடியெடுத்து வைக்கும்  ராகவலுவைக் குட்டி பாலர் வகுப்பில் கொண்டுபோய் உட்கார வைக்கிறார்கள். ”வகுப்பில் கொஞ்ச நேரம்தான் உட்கார முடிந்தது அவனால்.பக்கத்தில் வரிசையாயிருந்த பூச்செடியின் மலர்கள் அவனை வா வா என்று அழைத்தன.மெல்ல எழுந்திருந்து அதன்கிட்டே போய் இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.ஆசைப்பட்டு ஒரு பூவைப்பறித்தான்.அப்பொழுது அவனுக்குப் பின்னால் இடிமுழக்கம்போல் ஒரு உறுமல் கேட்டது.கையில் பிரம்புடன் ‘ருத்ராவதார’மாக வாத்தியார்நின்றுகொண்டிருந்தார்.குழந்தையின் கையிலிருந்து பூ நழுவி மண்ணில் விழுந்தது.” அத்தோடு ராகவலுவின் கல்வியிலும் மண் விழுந்தது.அவனை வீட்டுக்குத் தூக்கிச் சென்றபோது உடம்பு அனலாகச் சுட்டது.இந்த ஒரு மணிநேர நிகழ்வு அவனுடைய பிஞ்சு மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது.

அப்புறம் அவன் வீட்டாரின் நெருக்கடிகளுக்கு அஞ்சிப் பள்ளிக்குப் போவது போல கிளம்பிப்  பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் எங்காவது மாயமாய் மறந்துபோவான்.பகலில் ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள் காட்டு வேலைகளுக்குப் போய்விடுவார்கள்.

”ராகவலு மனித சஞ்சாரமற்ற தெருக்களில் திருடனைப்போல் யார் கண்ணுக்கும் தட்டுப்படாமல் சுற்றி அலைந்துகொண்டே இருப்பான்”

இந்த ஒருவரிதான்  இக்கதையின் மைய அச்சுப்போல நின்று நம் மனதை அலைக்கழிக்கிறது.ஒரு பச்சிளம் பாலகனை ஈர்க்கும் ஈரமும் கருணையும் வாஞ்சையுமற்ற,பள்ளிக்கூடம் மற்றும் துரத்தும் வீடு ஆகிய  நம் பெரியவர்கள் உலகம் அச்சிறுவனை இப்பிரபஞ்ச வெளியில் அனாதையாக உணர வைத்துவிட்டதே.. அவனை அவனுடைய பிரியமான அம்மா ”பள்ளிக்கூடத்துக்கு போவியா போவியா” என்று அடித்து அழுகின்ற காட்சியுடன் கதையை முடிக்கிறார் கி.ரா குழந்தைகளின் மீடு வன்முறை செலுத்தும் கூடங்களாகக் குடும்பங்களும் பள்ளிகளும் இருக்கின்றனவே.கற்பது கருப்பட்டியாக இருக்க வேண்டாமா?

‘விடுமுறையில்’ என்றொரு கதை.பள்ளி விடுமுறைக்கு மாமா வீட்டுக்குப் போகும் சிறுவன் அங்கே மலைகளையும் மரங்களையும் அங்குள்ள நண்பன் எங்கட்ராயலுவுடன் சேர்ந்து அனுபவிக்கிறான்.ஒருநாள் கண்மாய்க்கரையில் ஒரு வேட்டைக்காரரைச் சந்திக்கிறான்.ராமர் தோளில் வில் வைத்திருப்பதுபோல தோளில் தெப்பை வில்லைப் போட்டுக்கொண்டு மரங்களின் உச்சியை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்.நைசாய் அவரோடு பேச்சுக்கொடுத்து சினேகம் கொள்ள நினைத்தான்.அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் இக்கதையின் சாரமான பகுதி.சற்று நேரப் பேச்சில் அச்சிறுவன் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறான்.வேட்டைக்காரர் ஆசிரியராவதும் கண்மாய்க்கரை பள்ளிக்கூடம் ஆவதுமான மாயம் நிகழ்கிறது.வகுப்பறையில் மட்டுமே குழந்தைகள் கற்றுக்கொள்வதில்லை.குழந்தைகள் புழங்கும்வெளியெலாம் வகுப்பறைகள்தாம் என்கிற சோவியத் கல்வியாளர் மெகரங்க்கோவின் புகழ்பெற்ற வாசகம்தான் இங்கு கதை ஆகியிருக்கிறது.

பள்ளிக்கு வெளியே உள்ள வெளிகளில் சிறுவர்கள் கல்வி பெறும் கதைகளில் உச்சம் “ஊர்க்காலி”.அக்கதையில் வரும் மாடுமேய்க்கும் சிறுவனான கொத்தாளி ஒரு காட்டுவாசியாகவே அலைகிறான்.பள்ளிக்கு டேக்கா கொடுத்துவிட்டு அவனோடு சுற்றும் சிறுவன் அவன் வழியாகக் காடாறிகிறான்.இயற்கை அறிகிறான்.அந்தச் சிறுவன் தான் கி.ரா. என்பதையும் அறிகிறோம்.

கி.ரா.வின் கதைகளைப் படித்தால் பள்ளிக்கூடம் போறதே சுத்த வேஸ்ட் என்பது மாதிரி ஓர் உணர்வு வருவது தவிர்க்க முடியாது.ஆனால் அப்படிச் சொல்வது சரியா?முறைசார்ந்த கல்வி குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.உலகத்து அறிவையெல்லாம் நம் குழந்தைகள் பெற முறைசார் கல்விதான் வழி.அந்தக்கல்வியைக் கற்கண்டாகவும் கருப்பட்டியாகவும் தராமல் மனப்பாடம், தேர்வுகள், தோல்விகள்,தோல்வி பயங்கள்,தோற்ற அவமானம்,பிரம்புகள்,திட்டுகள் என்று வன்முறைக்களமாக ஆக்கி வைத்திருப்பதுதான் தப்பிதம்.இத்திசையில் கல்வி குறித்த விவாதத்தை முன்னெடுக்க கி.ரா.வின் உயிர்த்துடிப்பு மிக்க இத்தகைய கதைகள் உதவும்.சின்ன விஷயங்களின் கதைகள்

’ஓட்டம்’கதையில் வளரிளம்பருவத்துச் சிறுவனான வேம்புலுவின் மன உலகத்தைப் படம் பிடிக்கிறார்.சின்னக்குழந்தைகளும் அவனை ஆட்டைக்குச் சேர்ப்பதில்லை.அவனுடைய அண்ணன் ‘செட்’டும் அவனைச் சேர்ப்பதிஉல்லை.இரண்டுங்கெட்டானான தன் அன்றாடம் சகிக்கமுடியாத்தாகிக் கொண்டிருக்க ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப்போகிறான்.கோவில்பட்டியில் அவனுக்குத் தெரிந்த வீடு ஒன்று உண்டு.ஆனால் அந்த வீட்டுக்கு வழி தெரியவில்லை.அங்கே பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளவட்டங்களைப் பார்க்கிறான்.வழி கேட்கிறான்.ஏதாச்சும் அடையாளம் சொல்லு என்கின்றனர்.அவுத்துப் போட்ட தேர் ஒணு நிக்கும்.என்கிறான்.அவர்கள் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.தேரைப் பார்த்ததும் அவனுக்கு வழி தெரிந்துவிட்டது.அவ்வளவுதான் கதை.இது நான் எழுதீருக்க வேண்டிய கதையல்லவா என்று வண்ணதாசன் முகநூலில் எழுதினார்.”தெருவில் அந்தத் தேரைப் பார்த்ததும் வீடு தெரிந்து விட்டது” என்கிற கடைசிவரிதான் கதை.அவனுடைய வளரிளம் பருவக்குழப்பங்களுக்கும் எங்கே போவது என்கிற குழப்பத்துக்கும் எல்லாம் விடை கிடைக்காவிட்டாலும் இப்போதைக்கு அந்த வீட்டுக்காச்சும் வழி தெரிந்துவிட்டதே என்கிற ஆசுவாசம் நமக்கு ஏற்பட்டு விடுகிறதே.அவ்வளவுதானே கதை.

‘திரிபு’ கதையில் அந்த ஒருவயதுப் பெண்குழந்தைக்கு பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து கோழி அமுக்குவது போல அமுக்கி மொட்டை போட்டுக் காது குத்துகிறார்கள். ”அப்படி ஒரு எதிர்பாரா அவஸ்தை அவள் வாழ்நாளில் ஏற்பட்டதே இல்லை. அவள் பார்த்ததெல்லாம் சந்தோசமான முகங்கள், பிரியமான தடவுதல்கள், இனிமையான பார்வைகள் இவைதாம்.

இந்த வலுவந்தத்துக்குத் தன்னைப் பெற்ற அம்மாவும் அப்பாவுமே உடந்தையாக இருப்பதைக் குழந்தையால் செரித்துக்கொள்ள முடியவில்லை. மண்ணில் கீழே அவளுடைய கண்ணீரோடு சுருள்முடிகள் கொத்துக்கொத்தாக விழுந்தது.

குழந்தையின் மனசு உடைந்து, கண்ணீர் வற்றி ஏங்கி ஏங்கிக் கேவியது. அதைப் பார்த்துத்  தாங்காமல் அவள் தாயாரும் கண்ணீர் வடித்தாள்.” அந்த நாளுக்குப் பிறகு அந்தப்பாப்பா பழைய பப்லுப்பாப்பாவாக இல்லை.வேற்றுமுகம் விழுந்துவிட்டது.அதுதான் கதை.

கி.ரா.வின் முதல் கதையென இப்போது கண்டெடுக்கப்பட்ட ‘சொந்தச் சீப்பு’ கதையும் இதுபோல ஒரு சின்ன விஷயம் பற்றியதுதான்.நாலைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கும் மேன்சன் வாழ்க்கை.அவனுடைய சொந்தச் சீப்பை எல்லோருமே பயன்படுத்துகிறார்கள் அவனுக்கு அசூயையாக இருக்கிறது.சொல்லிப்பார்க்கிறான்.மாற்றமில்லை.நாள் செல்லச் செல்ல அவன் அதுக்குப் பழகி விடுகிறான்.அவ்வளவுதான் கதை.

ஒரு சிறுகதையில் இப்படி ஒரு சின்ன மனமாற்றத்தைச் சொன்னால்கூடப் போதும்தான்.இதையும் செய்து பார்த்திருக்கிறார் கி.ரா.

பேச்சு மொழி

கி.ரா.வின் சாதனைகளில் முக்கியமானதாகப் பேசப்படுவது பேச்சு மொழியை நவீன இலக்கியத்துக்குள் கொண்டு வந்து அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்று நிலை நிறுத்தியதுதான்.’நிலை நிறுத்தல்’ என்கிற சிறுகதையில் எல்லோரும் கீழாகப் பார்த்த தன்னைத் தன் கடும் தவத்தால் உயர்வான இடத்துக்கு உயர்த்திக்கொண்ட மாசாணம் என்கிற கதாபாத்திரம் போலக் கி.ரா.தன்னையும் தன் மக்கள் மொழியையும் உயர்த்தினார்.அதுக்காகப் போராடினார்.

அவருடைய சிறுகதைகளின் மொழி, அவருக்குப் பின்னர் எழுத வந்தவர்களைப்போல முற்று  முழுக்கவும்  கரிசல்காட்டு மொழியிலேயே, அமையவில்லை.பொதுத்தமிழும் எங்கே தேவையோ அங்கே கரிசல் வட்டார மொழியுமாகத்தான் எழுதியிருக்கிறார். கதவு கதையில் கதவைப்பிடுங்கிக்கொண்டு போகும் தலையாரி, முன்னால் ஆடிக்கொண்டு போகும் குழந்தைகளைப் பார்த்துச் சத்தம் போடும்போது “இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளா” என்றுதான் பேசுகிறார்.போறிகளா இல்லயா என்று எழுதலை.

‘தல மாட்டுல யாரோ வந்து நிக்கது போலத் தெரிஞ்சது’ என்று துவங்கும் ‘உண்மை’ கதையைப்போல சில கதைகளில் மட்டுமே முழுக்கப் பேச்சு மொழியைக் கைக்கொள்கிறார்.தூய தமிழ் என்பது அவருக்கு அலர்ஜியான ஒன்று.பேச்சுத் தமிழை முன்னெடுப்பது என்பது கம்யூனிஸ்ட்டான அவர் அடிமனம் உழைக்கின்ற அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்ட சாய்மானத்தின் தொடர்ச்சி.பிற்காலத்தில் பாமா உள்ளிட்ட படைப்பாளிகள் முற்றிலும் பேச்சுவழக்கிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகளை எழுதக் கதவைத்திறந்து வைத்தவர் கி.ரா.அவரே ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடுகிறார்.யாரும் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ இதுதான் உண்மை என்கிறார்.

ஜூனியர் விகடனில் அவர் எழுதிய ‘மக்கள் தமிழ் வாழ்க’ என்கிற அவருடைய தொடர் அவருடைய மொழிக்கொள்கையை ஒடைச்சுப் பேசுகிறது.

”பழம், பளம், பலம், பயம் இந்த நான்கும் தமிழ் மக்கள் பேசுகிற தமிழ்ச் சொற்கள் என்று அங்கீகரிக்கும் ஒரு மனது நமக்கு வரவேண்டும். பழம்தான் சரி, மற்றது மூன்றும் பிழை என்று நான் சொல்லமாட்டேன். முன்னே சொன்னதுபோலவே, தமிழ் அம்மைக்குப் பல முகங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு நாக்கு உண்டு. ஒவ்வொரு நாக்கும் அதன் ஒவ்வொரு அழகுடன் பேசும். இவைகள் அவ்வளவும் நூத்துக்கு நூறு சதம் தமிழ் நாக்குகளே என்பதைக் கவனிக்கவேண்டும்; இது முக்கியம், அகத்தியன் உட்கார்ந்து தமிழ் வளர்த்த இடமான பொதிகையில் வாழும் தமிழ் மக்கள்தான்வாளைப்பளம்என்று சொல்லுகிறார்கள். பரம்பரையான அசல்த் தமிழ் மக்கள் ஏன் தமிழினை இப்படி ஒலிக்கவேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

தமிழ் மக்கள் பேசும் தமிழைத் தமிழ் இல்லை என்று சொல்ல எவருக்குத் தைரியம் வரும்?

அவர்கள் தமிழ் மக்கள்தான் அதில் சந்தேகமில்லை . ஆனால் அவர்கள் பேசுவது செம்மையான தமிழ் இல்லை. அதெப்படி; தமிழ் மக்கள்சரியாகசெம்மையான தமிழ் பேச மாட்டார்கள் என்பது எப்படிச் சொல்லுகிறீர்கள். இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா;

நான் சொல்லுகிறேன் : இலக்கண சுத்தமாக வலிந்து பேசுவது சரியான இயல்பான தமிழ் இல்லை ; அவர்கள் பேசுவது மக்களிடமிருந்து அந்நியப்பட்ட ஒரு மொழி.”

 கி.ரா.கட்டுரைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 50 பக்கங்களுக்கு மேற்பட்ட இம்மொழி பற்றிய பகுதி அவர் நமக்குக் கையளித்துச் சென்றிருக்கும் ஆயுதம்-கைவாள்.

The politics of tamil short story article by Writer Sa. Tamilselvan

பெருவாழ்வின் படைப்புகள்

எழுத ஆரம்பித்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் துடிப்புமிக்க ஊழியராக இருந்து, இடைவழியில் பஸ்ஸை நிப்பாட்டு என்று (எந்த பஸ்ஸும் நிற்காத) இடைசெவல் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்ட கி.ரா, அடுத்த பஸ் ஏறி குற்றாலம் போகிறார்.ரசிகமணி டி.கே.சி யின் எட்டுவீட்டு வாசலில் போய் ஏக்கத்துடன் நிற்கிறார். ’சாப்பிடலாம்தானே’ என்று டி.கே.சி கேட்டதும் நெக்குருகி தீப.நடராஜனுடன் சேர்ந்து அமர்கிறார்.கடுதாசிகளாக எழுதிப்பெற்ற பயிற்சியும் விட்டகலாப் பொதுவுடமைக்கொள்கையும் ரசிகமணி அள்ளித்தந்த ரசனை மனோபாவமும் கு.அழகிரிசாமி என்கிற நண்பனுடன் சேர்ந்து கற்ற இலக்கியமும்  இசையும், விளாத்திகுளம் சாமிகளும் சாத்தூர் பிச்சக்குட்டியும் காருகுறிச்சியாரும் விரித்த இசைமகா சமுத்திரத்தில் முங்கிக்குளித்த குளிப்பும் என எல்லாமுமாகச் சேர்ந்த அவரது குரல், தன் இடைசெவல் மண்ணைப் பாடத்துவங்குகிறது.வள்ளிசாக எல்லாத்தையும் எழுதிப்போட்றணும் என்கிற ஆவேசமே அவரை வழி நடத்தியது.

50 வயதுக்கு மேல் முதுமை துவங்கிவிடுகிறது. கி.ராவுக்கு மிக நீண்ட 50 ஆண்டுகால முதுமை வாய்த்தது.முதுமை ஒரு எழுத்தாளனுக்கு வழங்கும் சுதந்திரங்களை அவர் முழுமையாகக் கொண்டாடினார். தன் சமூகத்தை நோக்கி விரல் நீட்டிப் பேசினார்.இது இப்படித்தான் என்று தீர்மானகரமாகச் சில விஷயங்களைச் சொல்ல ’முதுமை முகம்’ அவருக்கு உதவியது.

சிறுகதை என்கிற வடிவத்தில்தான் அவர் தன் பயணத்தைத் துவக்கினார்.பழைய கடுதாசிகள் நினைவுக்கு வரப்பின்னர் கரிசல்காட்டுக் கடிதாசிகள் எழுதினார்.கதைகள எழுதுவதை நிறுத்திவிட்டு நாட்டுக்கதைகளை(நாட்டுக்கத்திரிக்கா,நாட்டு மருந்து,நாட்டுச்சரக்கு மாதிரி) தேடித்தேடித் தொகுத்தளித்தார்.மீண்டும் சில கதைகளை எழுதினார்.ஆவணப்படுத்தும் மனம் காலப்போக்கில் சிறுகதை மனதின் மீது நிழலாகப் படியத்துவங்கியது. சிறுகதை, நாவல், கடுதாசி, கட்டுரை, நினைவுக்குறிப்புகள் என எல்லாக்கழுதைகளும் ஒண்ணுதான் என்கிற மனநிலைக்காட்பட்டு முன்னர் கட்டுரைத்தொகுப்பில் சேர்த்தது கடிதாசிகள் தொகுப்பில் சேர்த்தது நேர்காணலில் சொன்னது பலவற்றையும் கி. ராஜநாராயணன் கதைகள் தொகுப்பில் சேர்த்தார்.எல்லாமே கதைதான்.கதை சொல்லி என்று பத்திரிகையே ஆரம்பித்தார்.

ஆற்று நீர் சலசல என பாறைகளின் மீது ஆண்டுக்கணக்கில் ஓட ஓடக் கூழாங்கற்கள் உருவாகின்றன.எத்தனை அழகழகான கூழாங்கற்களை இயற்கை நமக்கு வழங்கி வருகிறது.ஆனால் அந்தக் கூழாங்கற்களை நாம் கலைப்படைப்பு என்று சொல்லுவதில்லை.ஏன்? அவற்றின் மீது மனித முயற்சி ஏதுமில்லை.மனிதனின் கை பட்டால்தான் எதுவும் கலையாகும். கி.ரா.வின் சிறுகதைகள் பலவற்றில் கரிசல் வாழ்வில் உள்ளதை உள்ளபடி எதுவும் செய்யாமல் அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுகிறார்-குடும்பத்தைப் பிரிப்பவர்கள் மருமக்கள்மார் என்பதைப்போல.அவை கூழாங்கற்கள்.அதில் கி.ராவின் கை படவில்லை.ஆவணப்படுத்தும் தன்முனைப்பு காலப்போக்கில் ஒரு சிறுகதையாளனை அழித்த கதை இது.

வட்டார வழக்குகளைப் பயன்படுத்திய முன்னோடி சண்முகசுந்தரம்தான்.” சண்முக சுந்தரத்தின் அக்கறையோ சொத்துடமையில் உழலும் மனித முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. பூமணி, பொன்னீலன், சின்னப்பபாரதி போன்றோரின் கிராமம் வர்க்க முரண்பாடுகளும் மோதல்களும் நிறைந்தது. ராஜ நாராயணனின் கிராமத்தில் வாழ்க்கைப்பிரச்சனை கள் இல்லாமல் இல்லை . வறுமையும், சுரண்டலும் கபடத்தனங்களும் இல்லாமல் இல்லை. ஆயினும் இவற்றுக்கெல்லாம் மேலாக அவரது அக்கறையெல்லாம் கிராமத்துப் பண்பாட்டம்சங்களை வெளிக்கொண்டு வரு வதிலேயே இருக்கின்றது. கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், நடத்தைக் கோலங்கள், மொழிவழக்குகள் முதலியவற்றை வெளிக் கொண்டு வருவதிலேயே இருக்கின்றது. கிராமத்தவர்களின் குணச் சித்திர விசித்திரங்களைப் பற்றிய சொல்லோவியங் களைத் தீட்டிக் காட்டுவதிலேயே இருக்கிறது. கிராமத் துப் பறவைகள், விலங்குகள் கூட இதில் இணைந்து விடுகின்றன. இதுவே இவருடைய தனித்துவத்தின் பலம் என்றும் அதே வேளை இதுவே இவருடைய பல வீனம் என்றும் எனக்குத் தோன்றுகின்றது. ஒருகணம் இவர் ஒரு உன்னதமான கலைஞனாகக் காட்சியளிக் கிறார். மறுகணம் இவர் ஒரு நுட்பமான நாட்டுப் புற வியலாளனாகத் (Folklorist) தோற்றம் கொடுக்கிறார். பல சந்தர்ப்பங்களில் இவருக்குள் இருக்கும் இந்த நாட்டுப்புறவியலாளன் அந்தக் கலைஞனை அமுக்கிக் கொண்டு மேலே வந்துவிடத்தான் செய்கிறான்.” என்பது எம்.ஏ.நுஃமானின் தீர்ப்பு (ராஜநாராயணீயம் நூலில்)

”வர்க்கங்களின் அமைப்பாகக் கிராமத்தைப் பார்த்துச் சரியான படிக்கு நான் எழுதியிருக்கிறேன் என்று என்னால் சொல்லமுடியவில்லை.இதை எனது இலக்கிய வாரிசுகள் பூமணி போன்றவர்கள் –சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்” என்று பேரா.க.பஞ்சாங்கத்தின் கேள்விக்குப் பதில் சொல்கிறார் கி.ரா.தன் எல்லையைத் தெரிந்துதான் இருந்தார் கி.ரா.

கு.அழகிரிசாமி சொன்னது போல கி.ரா. ஒரு அபூர்வம்தான்.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

தொடர் 1 ஐ வாசிக்க

https://bookday.in/tamil-short-stories-politics-writer-tamilselvan/

தொடர் 2 ஐ வாசிக்க

https://bookday.in/episode-2-on-tamil-short-stories-politics/

தொடர் 3 ஐ வாசிக்க

https://bookday.in/series-3-the-politics-of-tamil-short-story-tamilselvan/

தொடர் 4 ஐ வாசிக்க

https://bookday.in/series-4-the-politics-of-tamil-short-story-tamilselvan/தொடர் 5 ஐ வாசிக்க

https://bookday.in/series-5-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 6 ஐ வாசிக்க

https://bookday.in/series-6-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 7 ஐ வாசிக்க

https://bookday.in/series-7-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 8 ஐ வாசிக்க

https://bookday.in/series-8-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 9 ஐ வாசிக்க

https://bookday.in/series-9-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/தொடர் 10 ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-tamil-short-story-10-kandasamy-by-tamilselvan/

தொடர் 11 ஐ வாசிக்க

https://bookday.in/series-11-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 12 ஐ வாசிக்க

https://bookday.in/series-12-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 13 ஐ வாசிக்க

https://bookday.in/series-13-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

தொடர் 14 ஐ வாசிக்க

https://bookday.in/series-14-the-politics-of-tamil-short-story-by-tamilselvan/

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 4 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்”
  1. கி.ராஜநாரயணனின் விசுவரூபம் கண்டேன்.தோழர் தமிழ்ச்செல்வனுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  2. கி.ரா.வின் எல்லாக் கதைகளையும் படிக்கவில்லையே என்ற ஆற்றாமை இருந்தது! கதைகளுக்குள் கொண்டு போய் நம்மை சுழற்றி அடித்து மூச்சுத்திணற வைத்துவிட்டார் தமிழ்ச்செல்வன்! சுகமான திணறல்!
    ஒரு கண்ணில் கண்ணீர் மறு கண்ணில் கோபம்.. வரும்படியான கி.ரா.வைப் பற்றிச் சொல்ல இனிமேல் ஏதும் இல்லை என்கிற அளவுக்கு தமிழ்ச்செல்வன் தவிக்கத் தவிக்க எழுதியிருக்கிறார்! (கிழிந்த வேட்டி வேறு நைந்த வெட்டிவேறு என்பதான சொல் ஆய்வுக்குள் சில நேரம் மனசு சிக்கிக் கொள்கிறது!) மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கொலை கதையைப் பற்றி எழுதிய நான் இப்படி விலாவாரியாக ஒரு கட்டுரை கூட எழுதவில்லையே என்று எனக்கு பொறாமை வருகிறது.
    கி.ரா. நூல்களையெல்லாம் வெளியிட்ட அன்னம் கதிர் அல்லது பாரதி புத்தகாலயம் தமிழ்ச்செல்வனின் இந்தப் படைப்பையும் ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்! நன்றி தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *