The politics of tamil short story (Gobi Krishnan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamகோபி கிருஷ்ணன் தமிழ்ச் சிறுகதை உலகில் வேறெவரும் சஞ்சரித்திருக்காத ஓர் மனப்பரப்பில் தனித்தலைந்த ஆளுமை. மனப்பிறழ்வுக்காளான மனிதர்கள்-மனுஷிகளின் ‘ஆட்டிப்படைக்கும்’ உள்மன உலகையும் உள்ளிருந்து இயக்கும் குரல்களையும் அதே பித்தநிலையில் எழுதிச்சென்ற படைப்பாளி என்கிற அடையாளமே எப்போதும் முதலில் முன் வைக்கப்படும், அவரே மனப்பிறழ்வுக்கு ஆளாகி சில ஆண்டுகள் மாத்திரைகள் எடுத்து வந்தவர் என்பதும் உளவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்பதும் மனநோய்க்கூறுள்ள மனிதர்களுக்கு உதவும் ஒரு மையத்தில் பணியாற்றிப் பல பிறழ்மனநிலைக் காரர்களைச் சந்தித்து உரையாடியவர் என்பதும் அவருடைய அவ்வகைப் படைப்புகளுக்கான வலுத்த மூலாதாரங்களாக அமைகின்றன. ஆனால் அது மட்டுமே கோபி கிருஷ்ணனின் அடையாளம் என்று சுருக்கிவிட முடியாது.

அவர் 1945 இல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ரா குடும்பத்தில் பிறந்து 2003 மே 10 இல் சென்னையில் காலமானார்.அவர் 1983 இறுதியில் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். 20 ஆண்டுகளில் எழுதப்பட்ட அவருடைய 86 சிறுகதைகள் 4 குறுநாவல்களை இரு பெரும் வகைமைகளுக்குள் கொண்டுவரலாம். பிறழ்மனநிலை சார்ந்த கதைகள் ஒருவகை.வறுமை, இல்லாமை, போதாமை, கைவிடப்பட்ட ஒரு நிலை, ஒரு கௌரவமான வாழ்க்கைக்கான ஏக்கம், எதிர்பார்ப்புகளற்ற மனித உறவுகளுக்கான பெரு விழைவு இவற்றைப் பேசிய கதைகள் இன்னொரு வகை.. இரண்டுக்கும் இடையில் ஊடாட்டம் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல் | திண்ணை

நல்லவண்ணம் வாழ ஏங்கிய கதைகள்

அவர் சமாதானமான மனநிலையோடு எழுதிய கதைகளை முதலில் பார்க்கலாம். அவற்றில்தான் அவருடைய படைப்பு மனதின் இயல்பும் அரசியலும் வெளிப்பட்டிருக்கும்.

முதல் கதையாக நாம் எடுத்துக்கொள்வது “வேரற்ற தோழர்கள்”

பிரதான சாலையிலிருந்து கிளை பிரியும் பாதை ஓரத்தில் சாக்கை விரித்துப் போவோர் வருவோர் போடுகிற காசுகளைப் பெற்று வாழ்கின்ற ஒரு பெரியவர் முதலில் அறிமுகம் ஆகிறார். அம்மா தாயே பிச்சை போடுங்க.. என்று ஒருபோதும் அவர் கேட்பதில்லை.”ஆட்கள் அவரைக் கடந்து செல்லுமுன் வலது கையை உயர்த்துவார். புறங்கை வானை நோக்கியும் உள்ளங்கை பூமியைப் பார்த்தும் இருக்கும். கிட்டத்தட்ட ஆசீர்வதிக்கும் நிலை. வறியவராய் இருந்தால் ஆசீர்வதிக்கக்கூடாது என்பது என்ன சாஸ்திரம்? பைசா கிடைக்கும்போது மட்டும் கை திரும்பும்.”பத்துப்பைசா போட்டவரையும் ஒரு ரூபாய் போட்டவரையும் காரில் வந்திறங்கி ஐந்து ரூபாய் போடுபவரையும் காசே போடாமல் கடந்து போகிறவரையும் சமமான முகபாவத்துடன் எதிர்கொள்ளும் அவரது இயல்பே கதைசொல்லும் இவரை ஈர்க்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அவர் மனம் கடந்திருக்க வேண்டும். சமத்துவ மனோபாவம் வருவது என்பது எவ்வளவு சிரமமான சமாச்சாரம்! என்று வியக்கிறார். தினமும் அவரைக் கடந்து செல்கிறார்-அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றபடியே-காசுகள் இட்டபடியே.

இன்னொரு நாள் இரவு ஏழரை மணி வாக்கில் அதே நடைபாதையில் இன்னொரு வயோதிகரைச் சந்திக்கிறார். அவர் கையில் ஒரு தாங்கு அட்டையும் பேப்பர் பென்சிலுமாக நிற்கிறார். ”சார்..நா ஒங்களோட படத்தை வரைகிறேன். ஒங்களுக்கு விருப்பப்பட்டதெக் குடுங்க”என்கிறார். இவர் வேண்டாம் என மறுத்து இரண்டு ரூபாய் கொடுக்கிறார் “ஒங்க சாப்பாட்டுக்கு என்னால் ஆனது…” என்றபடி. ஆனால் பெரியவர் மறுக்கிறார். தான் உழைக்காமல் சாப்பிடுவதில்லை என்றும் , தன் உழைப்பான படம் வரைதலுக்கு ஈடாகப் பணம் கொடுத்தால் போதும் என்கிறார்.

இந்த இரண்டு பெரியவர்களையும் கண்டு வியக்கிறார் கோபி கிருஷ்ணன்.

“அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மௌனமான பாடங்கள்தான். ஆனால் விலை மதிப்பு மிக்கவை. எதுவுமே செய்ய இயலாத நிலையில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் கூட வாழ்க்கையை நேரிய முறையில் எப்படி ஏற்றுக்கொள்வது என்கிற பாடம். ஒருவேளை நான் அவருக்கு இடும் காசுகள் குருதட்சிணையாகக்கூட இருக்கலாம்.”

இந்தக்கதையின் கடைசி வரிகளும் முக்கியம்:”என் அறைக்குத் திரும்பினேன். என் அறைத்தோழர்-அவர் ஒரு கிறித்தவர்-சுவரில் மாட்டியிருந்த”அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்”என்கிற விவிலிய வாசகம் என் உணர்வில் கலந்தது.”

வறுமையிலும் செம்மையாக வாழ்தல் பற்றிய தூய கனவு இது. நடப்பு வாழ்வில் அப்படி வாழ்ந்துவிட முடியாது. ஒரு வறிய வாழ்க்கையைத்தான் கோபி கிருஷ்ணன் பெற்றிருந்தார். அதை நேர்மையாக வாழ்ந்துவிடவே அவர் போராடினார் என்பதை அவருடைய நண்பர்களின் பதிவுகள் காட்டுகின்றன. அவரோடு அறிமுகம் எனக்கும் இருந்தது.சிறு உரையாடல்களும் தேநீர்ப்பழக்கமும் அவர் பாளையங்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் உண்டு.தன்னுடைய முதுமையைத்தான் கால எந்திரத்தில் பயணித்து அந்த இரு பெரியவர்களிடமும் அடையாளம் கண்டிருக்கிறார் கோபி. அந்தப் பெரியவருக்கும் வாழ்வு என்று ஒன்று இருந்திருக்கும். வேலை, குடும்பம், லட்சியங்கள் அதற்காகப் போரிடுதல்கள் சகலமும். கடைசியில் தன்னால் எதையும் மாற்ற முடியாது என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவரை யாருடைய உணர்வுகளையும் குலைக்காமல் அமைதியே உருவான நிலையில் தன் வயிற்றுப்பாட்டைக் கழுவிக்கொண்டிருக்கிறார். பிறருடைய இரக்க உணர்வைத் தூண்டவோ குற்ற உணர்வைத்தூண்டி அதன் வழி காசு பெறவோ அவர் முயற்சிக்கவில்லை. உண்மையில் அவர் யாசிக்கிறாரா என்பதே தெரியவில்லை என்று எழுதுகிறார் கோபி.

ஓர் உன்னத மனநிலையோடு வாழும் வாழ்க்கைக்கான கோபி கிருஷ்ணனின் உட்டோப்பியன் விழைவே இக்கதை.

கோபிகிருஷ்ணனின் பல கதைகளில் வெளிப்படும் இத்தகைய தனிமனித அறம் சார்ந்த ‘வற்புறுத்தல்’கள் கவனத்துக்குரியவை.ஏற்றத்தாழ்வுகள் மிக்க இச்சமூகத்தில் லாபம் ஒன்றையே குறியாகக்கொண்ட ஓட்டப் பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கும் தனிமனிதர்கள் அதே வழியில்தான் அடித்துச்செல்லப்படுவார்கள். சுதந்திரமான காற்றோடு கூடிய ஏகாந்த நடைக்கான ஏக்கம் மட்டுமே அவர்களுக்கு மிஞ்சும்.

இந்தத் தனிமனிதர் எதிர் சமூகம் – முரண்பாடுகள் அவருடைய பல கதைகளின் அழுத்தமான பேசுபொருளாக அமைகின்றன.

அவருடைய புகழ்பெற்ற கதைகளில் ஒன்று ‘காணி நிலம் வேண்டும்’ 1980இல் புதிதாகத் திருமனம் ஆன ஒரு தம்பதியர் சென்னை மயிலாப்பூரில் ஒரு சந்தில் புதுவாழ்வைத்துவக்குகிறார்கள்.”வீடு என்பது ஒரே ஒரு அறை.ஜன்னல் என்பது வெளிச்சம் வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு திறப்பு.அதற்குக் கதவு இல்லை. வெளிச்சம் சிறிதளவு எப்படியோ உள்ளே வரும். காற்று என்பது விந்தை.மழை பெய்தால் திறப்பின்வழியே தாராளமாக உள்ளே தண்ணீர் வரும். மழை நீர் சுத்தமானது…இரண்டு கழிப்பறைகள். ஒன்று வீட்டுக்காரர்களுக்கு.இன்னொன்று குடித்தனக்காரர்களுக்கு. கழிப்பறையில் வாந்திதான் வரும்.” என்கிற மாதிரி எள்ளலுடன் அந்த ’வீட்டுத்துயர’த்தைச் சொல்லி நகரும் கதை, புதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு’ கு.அழகிரிசாமியின் ‘காற்று’ போன்ற கதைகளுக்கு ஈடான கதையாக நிற்கிறது. வாடகைக்கு விட்ட அந்த வீட்டு ஓனரம்மா போடும் உத்தரவுகள், குடியிருப்பவர்களின் சொந்த விருப்பங்கள், சுதந்திரத்தில் அத்துமீறித்தலையிடும் ஆணவம் இவற்றை வாடகைக்காக எத்தனை காலம் பொறுத்திருப்பது என்று வேறு வீடு பார்த்துப் போனால் அங்கு வேறு மாதிரிச் சித்ரவதைகள்.கீழ் நடுத்தர வர்க்கத்துச் சென்னை வாழ்வையும் அது ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகளையும் வாசகருக்கு மன அழுத்தம் உண்டாகும் படியான ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார்.

வீட்டுச்சொந்தக் காரக் கிழவிகள் இதுபோன்ற எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள்.”அது ஒரு கிழம்.துஷ்டக் கிழம்.பொல்லாத கிழம்.தேகமெல்லாம் நஞ்சு.வயது கூடக் கூட விஷத்தின் வீரியத்தில் கூடுதல் விறுவிறுப்பு.விறுவிறுப்பின் அதிகரிப்பு. ஆக்டன் நாஷ் சொன்னானே, எறும்புபோல் உங்களுக்கும் ஸிட்ரிக் அமிலம் இருந்தால் அதுபோல நீங்களும் கடித்துக்கொண்டுதான் இருப்பீர்கள் என்று.உள்ளதைப் பிரயோகிக்காவிட்டால் தரிசாய்ப் போய்விடுமே” ( Frederic Ogden Nash-அமெரிக்கக் கவிஞர்-1902-1971)

சென்னையில் இன்றளவும் கூட வீட்டு ஓனர்களாக இப்படிக் ‘கடிக்கும் பெண்கள்’ இருப்பதைப் பார்க்கிறோம். ஸிட்ரிக் அமிலம் இன்னும் வற்றிவிடவில்லை போலும்.கோபி கிருஷ்ணனின் சென்னை வாழ்க்கை முழுதும் பல வீடுகள் மாற்றி மாற்றிக் ‘கடி’ பட்டவர்.

காணி நிலம் வேண்டும், மிகவும் பச்சையான வாழ்க்கை,ஒவ்வாத உணர்வுகள்,அணிகலன்,ஒரு வயசாளியும் இரண்டு கள்ளக்காதலிகளும், ஒரு பேட்டியின் விலை முப்பத்தைந்து ரூபாய் போன்ற கதைகளில் குறைந்த வருமானத்துடன் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டில் ஒரு கணவன் -மனைவி-ஒரு பெண்குழந்தை (ஒரு கதையில் கூட ஆண் குழந்தை என்று எழுதக் கை வரவில்லை.) என்கிற அளவான குடும்பம் காலம் தள்ளக் கொள்ளும் தவிப்பை சுய எள்ளல் மொழியில் சோகத்தின் சாயல் இல்லாமல் சமூகத்தின் மீது புகாராக அல்லாமல் கோபமில்லாத மொழியில் அப்படியே சொல்லிச் செல்கிறார்.கோபம் இல்லாவிட்டால் என்ன எழுதிய விதத்தில் இச்சமூக அமைப்பின் மீது நமக்குக் கோபத்தை வரவழைத்து விடுகிறார்.

86 கதைகளிலும் அவரேதான் கதை சொல்கிறார். சொந்த வாழ்க்கைக்கும் கதைக்கும் இடையே மெல்லிய இழை வித்தியாசத்தைத்தான் அவர் கதைகளில் காண முடியும்.

”என் எண்ணங்களை,அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் எழுதுகிறேன்.எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிரது. உங்களுக்கு எப்படி… என்பது போலத்தான்.” என்று நேர்காணலில் குறிப்பிடுகிறார். சக மனிதர்களுடனான பகிர்தல் தொனி அவர் கதைகளில் தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம் இதுவே.

கோபி கிருஷ்ணன் படைப்புகள்- ஒரு பார்வை! | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories

ஆண்-பெண் உறவில் உன்னதம் தேடும் கதைகள்

கோபியின் கதைகளில் பெரிதும் பேசப்படுவது ஆண்-பெண் உறவு, நட்பு, காதல், காதலல்லாத மடை திறக்கும் வெள்ளமெனப்பெருகும் நேசம். அப்பா-மகள்,தோழன் -தோழர், நட்பு என எத்தனை விதமான பெயர்களில் மற்றும் பெயரற்ற உறவுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சாத்தியமோ அத்தனை குறித்தும் கதை எழுதிய ஒரே தமிழ்ப்படைப்பாளி கோபி கிருஷ்ணன் தான் என்று அடித்துச் சொல்லலாம்.

தாரா என்கிற பெயரில் மனைவியும் வாணி என்கிற பெயரில் ஒரு பெண் குழந்தையும்தான் எல்லாக்கதைகளிலும் வருவார்கள். ”பிறழ்வு-விடிவு” குறுநாவலில் மட்டும் பிரபு என்கிற ஆண் குழந்தை. வாணியைத்தன் மகளாக அல்லாமல் ஒரு நண்பரைப்போல நடத்த விழைகிறார்.

(அ)

”வாணியை என் மகளாகக் கருதுவதில்லை.அவள் எனக்குக் குட்டி சிநேகிதி.தகப்பன் என்கிற ஸ்தானம் வந்துவிட்டாலே,என்னை அவள் மீது திணிக்க ஆரம்பித்துவிடுவேன். என் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நிர்ப்பந்திப்பேன்.நான் அடையாததை அவள் அடைய ஆவேசிப்பேன். என் “செய்”களை என் “செய்யாதே”க் களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன். என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம்?…. வாணி என் வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டாம். ஆரோக்கியமாகத் தங்குதடையின்றித் தன்னிச்சையாக சுதந்திரமாக வளரட்டும்”(உடைமை கதையில்)

கதையின் இன்னொரு இடத்தில் கூறுகிறார்,”குழந்தைகள் தெய்வத்துக்குச் சமானம்.பெரியவங்ககிட்ட இருக்கிற வியாபாரச் சிந்தனை, நாசூக்கான கயமை, பிறர்கிட்டெ காட்டிக்காத சூதுவாது,களங்கமான இச்சைகள் இதெல்லாம் இல்லாத பரிசுத்த ஜீவிகள். இதுதாங்க உண்மையான கடவுள்கள். ஆண்டவனை வேறெங்கெயும் நான் தரிசிச்சதில்லெ.”

(ஆ)

பெற்ற மகள் என்றில்லை.வயது மிகக்குறைந்த பெண்கள் மீதும் தந்தைமை பொழிகிற சில கதைகள் உண்டு.”இனிமையான வக்கிரம்” கதையில் “இயற்கையாகவே எனக்கு அவள் மீது ஒரு பாச உணர்வு அந்த உணர்வு ஒரு தந்தை மகள் மீது கொள்ளும் பாசமாகவே எனக்குப் பட்டது. அவளை நான் child என்றே கூப்பிட ஆரம்பித்தேன். அப்படி அழைத்தபோதெல்லாம் அவள் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்பட்டன. கண்களில் ஒரு திடீர் பிரகாசம். இதழ்களில் ஒரு புன்முறுவல்.

என்னை அவள் daddy என்னை அழைக்க ஆரம்பித்தாள். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.32 வயதான நானும் 22 வயதான அவளும் இப்படி ஒரு உறவுடன் பழகுவது என் சக ஊழியர்களுக்கு விசித்திரமாகப் பட்டது என்று எனக்குத் தோன்றியது.

கதையின் போக்கில் அந்தக் ‘குழந்தை’க்குச் சில ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவருகிரது.குமார் அவளைக் காதலிக்கிறான்.அவனை இவர் மாப்பிள்ளை என்றே அழைக்கிறார். குமாரும் அவளும் இஷ்டம்போலச் சுற்றுகிறார்கள்.இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இவர் ஆசைப்படுகிரார்.அதற்குள் சுந்தர் குறுக்கிடுகிறான். சுந்தருடன் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதாகவும் இப்போது கர்ப்பவதியாக இருப்பதால் அம்மா ஊருக்குப் போகிறாள் என்றும் ஒருநாள் போன் தகவல் வருகிறது. குமாரைப்போலவே இவரும் அதிர்ச்சியாகிறார்.சில மாதங்கள் கழித்து காஞ்சிபுரத்தில் இருப்பதாகவும் டாடியைப் பார்க்கணும்போல இருப்பதாகவும் ஒரு கடிதம் எழுதுகிறாள்.. இவர் உடனே லீவுபோட்டு ஓடுகிறார். அங்கேயும் அவளுக்கு பாய் பிரண்ட்ஸ்.

திரும்பிய பிறகு சக ஊழியரான லில்லி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நீ குழந்தையைத் திருத்த முயலவேண்டும் என்று சொல்கிறாள்.அப்போதுதான் நீ உன் கடமையைச் செய்தவனாவாய் என்கிறாள்.

“ஒரு நபரை அப்படியே மன அளவில் ஏற்றுக்கொள்வதுதான் என் பழக்கம்.லில்லிக்கு ஒரு உதாரணம் சொன்னேன்.ஒரு ஹோட்டலில் தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறோம். இளம் பெண் ஒருத்தி எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருக்கிறாள்.அவள் முகம் ரொம்பவும் அழகாக இருக்கிறது.ஆனால்,அந்த மூக்கு மட்டும் நன்றாக அமையவில்லை. அதை நாம் என்ன செய்ய முடியும்?”

(இ)

பெற்ற மகளோ, சக ஊழியராகக் கூடப்பழகும் மகளோ கூட வேண்டாம்.தற்செயலாக பஸ்ஸில் சந்திக்கும் ஒரு பெண் ‘பூச்சிகள்’ கதையில் வருகிறாள்.அவள் ஒரு பாரத நீக்ரோப்பெண்.மிதமான கருப்பு. அலை அலையான முடியைக் கிராப் செய்துகொண்டிருந்தாள். மலிவான பெரிய காதணிகள். எடுப்பான தோற்றம்.பாரதப் பெண்களைவிடச் சற்று உயரம்.

நாலு வாலிபப்பசங்க அவளை நெடுகிலும் டாவடித்துக்கொண்டே வருகிறார்கள்.உட்கார்ந்திருக்கும் ராமன் எழுந்து ‘பெண்ணே உட்கார்’ என்றார்.’ நன்றி சினேகிதரே’ என்று அமர்கிறாள் அவள். பையன்களின் கலாட்டா தொடர்கிறது.அவள் செல்லும் திருநின்றவூருக்கே ராமனும் டிக்கட் எடுத்துப் பாதுகாப்புக்காகப் பயணிக்கிரார். பையன்கள் இடையில் இறங்கிவிடுகிறார்கள். இருவருக்கும் ஒரு நிம்மதிப்பெருமூச்சு.

திருநின்றவூரில் அவளும் ராமனும் இறங்கிக்கொண்டார்கள். பேருந்து காலியானது. அதுதான் கடைசி நிறுத்தம்.

“பெண்ணே இனி உன் இடத்துக்குப் பாதுகாப்பாகப் போய்விடுவாயல்லவா?”என்று கேட்டான் ராமன்.

”நன்றி சினேகிதரே”என்றாள் அவள் மீண்டும்.

“என்னை அப்பா என்று அழைக்க மாட்டாயா?”என்றான் ராமன்.

அவளது புருவங்கள் லேசாக உயர்ந்தன.கண்களில் கூடுதல் பிரகாசம். “நன்றி அப்பா” என்றாள் அவள்,ரமனின் வலது தோள்பட்டையைப் பாசத்துடன் அழுத்தியவாறே. இந்த இடத்தில் கதையை முடிக்கவுல்லை.

இன்னும் தொடர்கிறார் கோபி கிருஷ்ணன்: “அவள் வயதில் அவளுக்கு நிறைய கனவுகள் இருக்கும்.அவளது கனவுகள் நிறைவேற வேண்டும் என்று மனதுக்குள் கடவுள் கலக்காத கலப்படமற்ற பிரார்த்தனை செய்து கொண்டான் ராமன்.ராமனின் மனது நிறைந்தது.பேருந்து பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

மனதில் நெகிழ்வுணர்வுகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த இடத்தில் கூட கோபி கிருஷ்ணன் கதையை முடிக்கவில்லை. இன்னும் ஒரு உயரத்துக்கு இதை எடுத்துச் செல்ல ஆசைப்படுகிறார்.கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் எழுதிய கவிதையைக் கொண்டு வருகிறார்.

“ராமன் இரண்டாவது முறையாக அந்தக் கவிதையை வாசித்துக்கொண்டிருந்தான். ஒரு பூச்சி வந்தது.சிறியது.தீங்கிழைக்காதது.’நான் ஒரு உயிர்’ என்ற கவிதை வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. முதலில் அதைத்தட்டி விடலாம் என்று தோன்றியது. அப்படிச்செய்ய முடியவில்லை ராமனால்.அந்தப் பூச்சி ‘நான் ஒரு உயிர் ‘என்று அவனிடம் சொல்வது போல் இருந்தது. ராமன் பூச்சியை அதன்போக்கில் விட்டுவிட்டான். அது பறந்து போய்விட்டது.

சற்றுக்கழித்து அதே பூச்சி மீண்டும் வந்தது.”நாம் பேசலாம்” என்ற கவிதை வரி மீது உட்கார்ந்து கொண்டது.

…..அந்தப்பூச்சி தனக்கு சினேகமாகி விட்டதுபோன்ற தோழமை உணர்வு மனதில் வியாபித்தது.’நான் ஒரு உயிர்’…நாம் பேசலாம்’ என்று அது தன்னிடம் சொல்வதுபோல் இருந்தது ராமனுக்கு. பேருந்தில் வந்து அமர்ந்த அந்த இளம் சிநேகிதியும் இந்த வரியில் வந்தமர்ந்த சிறுபூச்சியும் சமமான நேசத்துக்குரியவர்களாகிவிடுகிறார்கள். தன்னை ஒரு நாடகத்தனமானவன் என்று ஓரிடத்தில் குறிப்பிடும் கோபி கிருஷ்ணன், 50 வயதுக்கு மேல் ஏற்படும் இத்தகைய ’தந்தை உளவியலை’ SUBLIMATION என்றும் இது ஒரு தெற்கத்திச் சிக்கல் என்றும் விளக்கமளிக்கிறார்-அதே கதைக்குள்.உளவில் கற்றுக்கொண்டதால் தனக்கு வாழ்க்கையின் மீது ரொமான்ஸே இல்லாமல் போய்விட்டதாகவும் ஒவ்வொரு உணர்வுக்கும் விளக்கம் தேடியே மனம் சலிப்பதாகவும்கூட இன்னொரு கதையில் அங்கலாய்க்கிறார்.

கோபி கிருஷ்ணன் – பகுதி 2- Dinamani

(ஈ)

’தணிக்கையிலிருந்து தப்பிய கதை’யில் ஃபிலோமினாவின் மூக்கு மீது காதல் கொள்கிறார்.ரோமானியச் சாயல்கொண்ட அவளுடைய மூக்கின் மீது மாதம் ஒரு முத்தமாவது பதிக்க ஆசைகொண்டு அவளிடமே சொல்கிறான்.”நான் அவளைப் பார்த்துக் காமுறுவது தவறு என்றும் கர்த்தர் கோபித்துக்கொள்வார் என்றும் சொன்னாளது காமம் இல்லை என்றும் நூதனமான ஓர் ஆராதனை என்று கர்த்தரிடம் நான் சொல்லிச் சமாளித்துக்கொள்வேன் என்றும் சொன்னேன். மூக்கை முத்தமிடத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

அப்படியானால் முறைப்படி என்னைத்திருமணம் செய்து கொள்ளுங்கள் என் மூக்கைத் தினம் தினம் முத்தமிடலாமென்றாள்….அவளைக் கட்டிக்கொள்ள யார் வேண்டுமானாலும் உடனே முன் வந்து விடுவார்கள். எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.ஏனென்றால் எங்கள் ப்ராஜக்ட் நிரந்தரமானதல்ல. அடுத்த வேலை எப்போது கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அவளுக்கும் அதே நிலைதான் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் திருமணம் செய்துகொள்வது அபாயமாக முடியும்.

ப்ராஜக்ட் முடிந்து ஃபிலோமினா ஊருக்குக் கிளம்பும் காட்சி.

ரயில் கிளம்பும் ஆயத்தங்கள் தென்பட்டன. அழுத்தம் திருத்தமாக உறுதியுடன் சொன்னேன், இந்தக் கோபி இறக்கும்வரை உன் மூக்கை உணர்வு பொங்கக் காதலித்துக்கொண்டிருப்பான். சாகும்போது உன் மூக்கின் இனிய நினைவில் பரம சந்தோஷத்தோடு சாவான் ஃபிலோமி என்று. மறக்காமல் உன் மூக்கின் புகைப்படத்தை எனக்கு அனுப்பு; அசட்டையாக இருந்துவிடாதே என்று மன்றாடி வேண்டிக்கொண்டேன்.

கதை அப்புறமும் அவளுடைய கல்யாணம் வரை நீண்டு செல்கிறது.

மூக்கைக் காதலிக்கும் வினோதம்தான் கதையின் சாராம்சம்.இதை அத்தனை சீரியஸ்ஸாக கோபி எழுதிச் சென்றாலும் பெண்ணின் முகம், கழுத்து, மார்பகம், இடை, கொலுசணிந்த கால்கள் என காலம் பூராவும் வர்ணித்து வரும் ஆண் மனதை மூக்கை வைத்துப் பகடி செய்யும் கதையாகவே பார்க்கலாம். மூக்கை வைத்து மூக்கை உடைத்திருக்கிறார்.

(உ)

‘இதுவும் சாத்தியம்தான்’ என்றொரு கதை.காமத்தேட்டம் துளியும் இல்லாத ஓர் உன்னதக்காதலைப் பேசுகிறது.மருத்துவமனையின் சக ஊழியரான ஒரு செவிலியர் பெண் மீது ஈர்ப்பு. அவளுக்கும் மெல்ல இவன் மீது கவனம். கொஞ்ச நாளில் ஒரே தட்டில் சாப்பிடுகிற அளவுக்கு நட்பாகி விடுகிறார்கள். அவனுக்கு ஒரு காதலியும் இருந்தாள். அது அவளுக்கும் தெரியும். அது குறித்து அவளுக்கு எந்த அசூயையும் தோன்றியதில்லை.

ஒருநாள் கடற்கரையில் அவன் மடியில் தலை வைத்து மருத்துவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதைச் சொல்லி அவள் கண்ணீர் உகுத்தாள். அவன் தேற்றினான்.”அழுது தீர்த்து விடுங்கள்.அழுவது மிகவும் ஆரோக்கியமானது.உணர்வுகளின் கொந்தளிப்பிலிருந்து விடுபடச் சிறந்த வழி. மருத்துவரின் போக்குக்குக் காரணம் நீங்கள் மிகவும் அழகாக இருப்பதுதான். எழிலைக் கலாபூர்வமாக ரசிக்கத் தெரியாமல் அடைய யத்தனிப் பது உணர்வுகளில் ஏற்படும் இசைகேடான சிக்கல். இந்த விஷ யத்தில் நம் மருத்துவர் ஒரு வெறும் பாமரன்தான். உங்களுக்கு மீண்டும் இந்நிலை வரக்கூடாது என்பதே நான் மிகவும் விரும்புவது.”
அவள் விசும்பலுக்கிடையே சொன்னாள், “உங்களுடன் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். என்னால் இதைக் காரணரீதியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.”

அவன் வலியுறுத்தும் குரலில் கூறினான். “வேண்டாம். உணர்வுகளை அப்படியே தக்கவைத்து வடியவிடுங்கள். அலசுவது, ஆய்வது என்பதெல்லாம் மிகவும் சங்கடத்தில்தான் போய் முடியும்.”

கதையின் பிற்பகுதியில் தன் காதலி தன்னைக் கைவிட்டதைப் பற்றி அவளிடம் பேசுகிறான்:”அந்தப் பெண் திடீரென்று ஒரு நாள், நீங்கள் என் உடன்பிறவா சகோதரர் மாதிரி என்று சொல்லிவிட்டாள். அன்றிலிருந்து அவளுடன் பழகுவதை விட்டுவிட்டேன். ஒரு உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப் பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல். என்னைப் பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனித மானவையே. இப்படிப் பார்க்கும்போது உங்கள் தோழமையை பவித்திரம் வாய்ந்ததாகவே நான் உணர்ந்துகொள்கிறேன்.”

(ஊ)

ஆண் பெண் உறவு பற்றி இத்தனை கதை எழுதியவர் தன் முதல் காதல் எனப்படும் infatuation பற்றி எழுதாமல் விடுவாரா? “இந்த நெஞ்சம் என்ற ஒன்றைப்பற்றியும் இதன் நிறைவு பற்றியும்…” என்கிற கதை அது.” முதன் முதலில் அனுராதாவைப் பார்த்தபொழுது அவளுக்கு வயது பதின்மூன்று. என் வயது பத்தொன்பது.பார்த்த மாத்திரத்திலேயே அவளை ஆழமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். அனுராதாவுக்கு நான் இந்தி கற்றுக்கொடுக்கும் ட்யூஷன் மாஸ்டர்.அப்பொழுது நான் பி.ஏ.இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில் டபுள் ரூம்தான் என் வசிப்பிடம்”என்று கதை துவங்குகிறது.அனுவின் முக்கிய அழகம்சம் புருவம்தான் .புருவங்களின் நடுவில் , பிறருக்கு உள்ளதைப்போல, இடைவெளி இருக்காது. அங்கும் புருவமுடி அடர்த்தியாக இருக்கும்.விட்டால் நாள் கணக்கில் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

வகுப்பில் விரிவுரையிலிருந்து பாடக்குறிப்பு எடுத்துக்கொள்ளுமுன் நோட்டுப்புத்தகத்தின் நடு ஆரம்பத்தில் அ என்று போட்டுக்கொள்வேன். அ என்றால் அனுராதா என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

அப்படியே பயணிக்கும் கதை இப்படி முடியும்:-

“விளையாட்டுப்போல ஆகிவிட்டது . என்னுடைய இன்றைய வயது 53.அனுவுக்கு 47 போல இருக்கும். குடும்பமும் குழந்தை குட்டிகளும் கணவனுமாய் வசதியாக இருப்பாள்.நான் சொல்லிக்கொடுத்த இந்தியை அவள் மறந்திருக்கக்கூடும்.ஒருக்கால் என்னையும். ஆனால், நான் அனுவை மறக்கவில்லை.எது எப்படியாக இருந்தாலும், அப்பாவித்தனமான முதல் காதல் அனுபவத்தை எந்த ஆண் மகனால் மறக்க முடியும்?”

இக்கதையின் இன்னொரு சிறப்பு முதல் காதலின் காய்ச்சல் ஒரு பக்கம் மயங்க வைத்தாலும் தன்னுடைய வறுமை நிலை பற்றிய தன்னுணர்வும் கூடவே வந்துகொண்டிருப்பதைப் பதிவு செய்திருப்பதுதான்.

“கோரமான வறுமை. காலையில் முரளி கஃபேயில் எனக்காக இரண்டு இட்லிகள் சாம்பாரில் மிதந்து கொண்டிருக்கும். ஓட்டல் சிப்பந்தி ஒருவர் என் நிலைமையை நன்கு அறிவார். மதியம் வெற்று வயிறு. மாலை அனுராதாவின் வீட்டில் அற்புதமான ஒரு லோட்டா காப்பி. அது எனக்கு உணவு போல. இரவில் பெரிய தெரு அண்ணா பால் கடையில் இரண்டு பன்கள், ஓர் அரை கிளாஸ் பால்.

புகுமுக வகுப்பில் என்னுடன் படித்த மணியும், கன்னையனும், ஏகாம்பரமும் மேற்கொண்டு படிக்காமல் நல்ல வேலையில் அமர்ந்து விட்டிருந்தார்கள். ஏகாம்பரம் விமானப் படைப் பிரிவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந் தான். மூவரும் சேர்ந்து எழுபத்து ஐந்து ரூபாயை எனக்குக் கடன் கொடுத்து உதவிக்கொண்டிருந்தார்கள்.”

(எ)

இன்னொருவகையான உறவைச்சொல்லும் கதை “போதை” .ரேஷன் கடையில் மெல்ல நகரும் வரிசையில் அரிசி,பருப்பு,கெரசின் வாங்க சலிப்புடன் நின்றுகொண்டிருக்கிறான்.

”பெண்கள் வரிசையில் முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண். அவளைத் தற்செயலாகப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். ஒரு வேளை அவள் என்னை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். உற்றுப் பார்ப் பது அநாகரிகம். முகத்தைத் திருப்பிக்கொண்டேன். மீண்டும் எதேச்சையாகப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். வாழ்க்கை என்பது புலனுணர்வு. அதுதான் நிஜம். புலனுணர்வில் சிந்தனை கலக்காமல் இருக்கும்வரை மனநிலை பவித்திரமானது தான். காத்துக்கொண்டிருந்த 15 நிமிடங்களில் குறைந்தது 10 தடவையாவது இந்தப் பார்வைகளின் பரிவர்த்தனை, கண்களின் நேர் சந்திப்புகள் நிகழ்ந்தன. இப்பொழுது எனக்கு ஏற்பட்டது புலனுணர்வு மட்டுமில்லை. அவள் கண்கள் என்னுள் எதையோ தேடின. நான் அவளுள் எதையோ எதிர்பார்த்தேன். சாமான்கள் வாங்குவதற்குக் கடையினுள் நுழைந்தாகிவிட்டது. திரும்பிப் பார்த்தபொழுது அவள் என் பின்னால் இருந்தாள். மீண்டும் அவள் என் கண்களைச் சந்தித்தாள். நானும்தான். அவளை அழைத்துக் கொண்டு ஓர் உயர்தரச் சிற்றுண்டி சாலையில் அருகருகே அமர்ந்து காபி அருந்திவிட, அவளுடன் கை கோர்த்து நீண்ட தூரம் நடந்து, கடற்கரையில் உட்கார்ந்து இனிமையான அன்னியோன்னியத்தை உணர வேண்டும் என்ற மென்மையான, வெறித்தனமான, சமூக மதிப்பீடுகளைத் தகர்த்து எறியும் வேட்கை ஆட்கொண்டது. மென்மை உணர்வு, சேர்ந் திருத்தல், சிநேகம், லேசாக இழைந்தோடிய பாலுணர்வு முதலி யவை கொண்ட ஒரு இனிமையான கலவையில் என்னுள் ஒரு உற்சாகமான ‘நான்’ உருவாகியது. அவளுள் அன்பின் பரிபூரண ஆளுமையை என்னால் முழுமையாகக் காண முடிந்தது. அவளருகில் 4 வயதில் ஒரு பையனும் 6 வயதில் ஒரு பையனும் இருந்தனர். அவளது குழந்தைகளாக இருக்கக்கூடும்.

அரைமணி நேரம் கழித்துப் பொருட்களைப் பெற்றுச் கொண்டு கடை வாசலருகில் நின்றேன். அந்தப் பெண்ணைக் கடைசியாக ஒருமுறை பார்க்க அடக்க முடியாத ஆவல் உந்தியது. திரும்பிப் பார்த்தேன். அவளும் அதை எதிர்பார்த் திருக்க வேண்டும் தனிந்து கெரோ டின்னைப் பிடித்து கொண்டிருந்தவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் ஈரம் கசிந்திருப்பதை என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. 45 நிமிட உறவு புற உலகைப் பொறுத்தமட்டில் நிசப்தமாக இறுதி பெற்றது.”

இப்படி ஒரு 45 நிமிடக் ’காதல்’ பற்றியும் எழுதியிருக்கிறார் கோபிகிருஷ்ணன்.அத்தோடு கதையை முடிக்காமல் நீட்டிக்கிறார். வீடு திரும்பி, இரவு, தாரா எனக்கு உணவு பரிமாறும்போது என்னுள் சகித்துக்கொள்ள இயலாத குற்ற உணர்வு ஏற்பட்டு சரிவரச் சாப்பிடாமல் படுக்கையில் கிடந்தேன்.

என் மனநிலையை அலசிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி காசில்லாத என் நிலையைச் சுட்டிக்காட்டி எரிச்ச லூட்டும் தாராவை, ரேஷன் கடையில் சந்தித்த அந்தப் பெண் மூலம் ஒரு வேளை நான் பழி தீர்த்துக் கொண்டிருக்கலாம்.

நிராசை,அதிருப்தி முதலியன வன்முறைக்கு அடிகோலும். ஆனால், ஏன் அந்தப்பெண்ணும் என்னைப் பார்க்க வேண்டும் ? ஒத்த மனநிலையா ? அது புதிராகவே இருந்தது.” என்று முடிக்கிறார்.

இப்படி ஒரு உளவியல் விளக்கத்தை கதைக்குள் அவர் வைத்தாலும், எனக்கு அவருடைய இன்னொரு கதையான ”குற்றமும் தண்டனையும்” கூறும் ஒரு வரிதான் இக்கதையின் மீதேறி வந்து நிற்கிறது:”ஆண்கள் முறைகேடாக நடக்க நம் சமூகம் மகத்தான சௌகரியங்கள் செய்து கொடுத்திருக்கிறது” இக்கதையில் செயல்பூர்வமாக முறைகேடு ஏதும் நடந்துவிடவில்லை என்றாலும் வீட்டில் மனைவி தாராவும் குழந்தை வாணியும் இருக்கும் போதே வரிசையில் கண்ட இன்னொரு பெண் மீது அந்த நேரத்தில் எந்தக் குற்ற உணர்வுமின்றி சுதந்திரமாக ஈர்ப்புக்கொள்ள அந்த ஆணால் முடிகிறதே.

கூடவே கதைக்குள் கையிருப்பு 45 ரூபாய்தான். அதற்குள் அரிசி,பருப்பு,கெரசின் எல்லாமே வாங்கியாக வேண்டும் என்கிற போதாமை நிலையும் மறக்காமல் பேசப்படுகிறது.கோபியின் அடையாளமாகவே இது அமைகிறது.

உஷாதீபன்: “டேபிள் டென்னிஸ்” - கோபி கிருஷ்ணன் நேர்காணல்-யூமாவாசுகி-வாசிப்பனுபவம்-

(ஏ)

‘இதுவும் சாத்தியம்தான்’ கதை ஒரு தூய ப்ளேட்டோனியக் காதலைப் பேசுகிறது.கு.ப.ராஜகோபலனின் ‘மெக்ருன்னிஸா’ போன்ற கதை இது.அம்மன் விளையாட்டு கதையில் வரும் வழுக்கைத் தலையர் சக ஊழியரான பார்வதி மீது கொண்டிருப்பது காதல்தானா என்ற சந்தேகமே கதை முழுக்கப் பரவியிருக்கும்.அவர் அதைக் காதல்தான் என்று நம்புகிறார்.

86 கதைகளில் 20க்கு மேற்பட்ட கதைகளில் இந்த விதவிதமான காதல் உணர்வுகளைப் பேசி ஆய்வுக்குட்படுத்துகிறார்.உளவியல் விளக்கமளிக்கிறார். எல்லாக் கதைகளிலும் இந்தக் காதல் கிறக்கத்தின் மீது தவறாமல் கீழ் நடுத்தர வர்க்கத்தின் வறிய வாழ்க்கைச் சுமையை ஏற்றி வைத்துக்கொண்டே வருகிறார். முற்றிலும் அகவயமாகவே அமிழ்ந்துவிடாமல் அவ்வப்போது பொருளாதார நிலைமையை நினைவு படுத்திப், பறக்கும் மனதைக் காலைப்பிடித்து இழுத்துத் தரையில் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவ்வகையில் இவர் பொருள்முதல்வாதியாகவே காணப்படுகிறார். அல்லது கீழே பிடித்திழுக்கும் வறிய பொருளாதாரச் சூழலிருந்து விடுபட முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற நேசங்கள்,காதல்கள்,புனித உறவுகள் என்கிற அக உணர்வுகளின் உதவியுடன் எதிர்கொள்கிறார் என்றும் சொல்லலாம். அந்த வகையில் அன்பை முன் வைக்கும் வண்ணநிலவனின் தத்துவத்துடன் நெருங்கி நிற்கிறார். இந்த ஆறுதலும் இல்லாவிட்டால் வாழ்வதுதான் எப்படி என்று கேட்கிறார்.

திருமண உறவுகள் பற்றி அவருக்கு அழுத்தமான கருத்து உண்டு.யூமா வாஸுகிக்கு அவர் அளித்த நீண்ட நேர்காணலில் அவர் குறிப்பிடுகிறார்:-
“சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்தால் சமூகப் பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது பாது காப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும் வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயது வரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு.

பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக்கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ஆம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும்.”

அவரே முதலில் ஒரு காதல் திருமணமும் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த திருமணமுமாக இரு உறவுகளிலும் ஒன்றிரண்டு கூடுதல் காதல்களுடனும் வாழ்ந்தவர் என்பதை நேர்காணலில் குறிப்பிடுகிறார். இவரை ஒரு ஃபிராய்டியவாதி என்றும் ஒன்றுக்குள் அடைத்துவிட முடியாது. பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள மனிதன் நான் என்கிற தன்னுணர்வு எப்போதுமே அவருக்கு இருந்து வந்துள்ளதை அவருடைய கதைகள் காட்டுகின்றன. அகம், புறம் என இருவித நெருக்கடிகளையும் முழுமையாக அனுபவித்த மனிதர் கோபிகிருஷ்ணன்.

உழைப்பும் சுரண்டலும்

’காணி நிலம் வேண்டும்’ கதையில் ஒண்டுக்குடித்தன வாடகை வீட்டு மகாத்மியங்களைப் பேசும்போது சுரண்டலைப் பற்றிப் பேசுகிறார்:

”ஒரே ஒரு பம்ப். வரும் தண்ணீ ரைக் குடிநீராகப் பயன் படுத்த முடியாது. தெருக் குழாயில்தான் ஒரு தவலை பிடித்துக்கொள்ள வேண்டும். வேலைக்காரி ஒரு தொண்டு கிழம். அவள்தான் அதைச் செய்தாள். அதைச் செய்வதற்கு அவளுக்கு மாதம் ரூ. 5 சம்பளம். உடலுழைப் புக்கு ஏனோ நம் நாட்டில் அதிக ஊதியம் தருவதில்லை . எனக்கு அதைவிட அதிகம் தர இயலாத நிலை. சமூகம் பரவலாக அங்கீகரிக்கும் உழைப்புச் சுரண்டலில் நானும் சேர்ந்துகொள்ள வேண்டிய அவல நிலை. அந்தக் கிழத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஒரு குற்ற உணர்வு. அதைப் போக்கிக்கொள்ளவே வாரம் இருமுறையாவது அவள் டீ செலவுக்கு 30 பைசா கொடுத்து வந்தேன்.”

புதுமைப்பித்தனின் ‘விநாயக சதுர்த்தி’ கதையில் வரும் வேப்பிலைக்கு விலை பற்றிய பொருளாதாரப் பத்தியைப்போன்ற பத்தி இது. இதெல்லாம் கோபிக்குத் தெரியும் என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

‘வர்க்கம்’ என்றே ஒரு கதை எழுதியுள்ளார்.”நிர்வாகிகள் அனைவரும் விதிவிலக்கில்லாமல் பணியாளர்களுக்கு இம்சை செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.” என்று அந்தத் தொண்டு நிறுவனம் பற்றிக்குறிப்பிட்டுச் சொல்கிறார்.அங்கே கழிப்பறைகளில் இரண்டு வகை.ஒன்று உயர் பணியாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு.மற்றது பணியாளர்களுக்கு.

இரண்டு மாதங்கள் கழித்து கீழே புதிதாக ஒரு கக்கூஸ் கட்டப்பட்டது. கக்கூஸின் உள்ளே ஒரு குழல் விளக்கு. எப் பொழுதும் வாசனையாக இருப்பதற்கு ‘லேவெண்டர் ஓடோனில்’ பெட்டி ஒன்று. கக்கூஸ் பூட்டப்பட்டு சாவி கதவின் மேலே இருந்த ஆணியில் மாட்டப்பட்டிருந்தது. அந்த கக்கூஸ் நிர்வாகிகளுக்கு மட்டும் என்றாயிற்று.

நிர்வாகக் கிழசு எதற்காவது ஒன்றுக்கு வந்தால் கொண்டையாதான் ( சுகாதாரப் பணியாளர்)கக்கூஸைத் திறந்துவிட்டு அது போன பிறகு பூட்டி வைக்க வேண்டும்.
ஒரு நாள் கொண்டையா என்னிடம் கேட்டான், “ஏன் சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்ல போல. பன்னீர்தான் பெய்றாங்களா சார்?” என்று..
சுரண்டப்படும் வர்க்கத்தின் கோபமே இப்படிக் கிண்டலாக வெளிப்படுகிறது.

இதே கொண்டையா ‘சென்னை உழைப்பாளிகள் சங்கம் உழைப்பாளிகளின் செய்தி மடல்’ என்கிற கதையிலும் வருவார்.எந்தவித ஊதிய உயர்வும் இல்லாமல் தொடர்ந்து மூன்று வருடங்களாக மாதம் பதினைந்து ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு அலுவலகக் கக்கூஸைக் கழுவும் எம்.கொண்டையா, “சரியாக் கழுவுறதில்லே””இங்கே சரியாத் தண்ணி ஊத்தல்லெ” “எங்கெ ஃபெனால் போட்டிருக்கே?” போன்ற இம்சைகளைப் பொறுக்காமல் “ஒங்க கக்கூஸை நீங்களே கழுவிக்கங்க “என்று சொல்லிவிட்டு வேலையைத் துறந்தார்.

அதே கதையின் இன்னொரு பகுதி:

19.1.’90: அலுவலக அரசியல் தன்னைப் பலிகடாவாக்கித் தன்னை எந்த நேரத்திலும் வெளியே துரத்தும் நிலை அலுவலகத்தில் உருவாகி இருப்பதால் என்.ஆர். மாதவன் இன்று காலை முதல் (காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை) நடுத் தெருவில் நின்று பழகிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தினமும் இவ்வாறு நின்று ஓர் ஒரு மாதம் பழகிக்கொண்டால் அலுவலகம் தன்னை வெளியே துரத்தித் தான் நடுத் தெருவில் நிற்க வேண்டி வரும்போது, அது ஒரு பெரும் அதிர்ச்சியாக இராது என்று கருதுகிறார் இவர். இவர் பழக்கத்தில் அதீத நம்பிக்கை கொண் டவர். உயிரோடு இருப்பதே ஒரு பழக்கம்தான் என்கிறார் இவர்.

இக்கதையின் தலைப்பு சென்னை உழைப்பாளர் சங்கம்…என்று இருப்பினும் முழுக்க நடுத்தர வர்க்க அலுவலகப் பணியாளர்களின் அன்றாடப் பிரச்னைகளையே பேசுகிறது.ஒன்றிரண்டு பதிவுகள் மட்டும் பொருளாதாரச் சுரண்டலைப் பேசுகிறது.

ஆட்டோ தொழிலாளிகளின் புகழ்பாடும் “உழைப்பாளர்கள்” என்கிற கதையிலும் சவாரி போன ஆட்டோக்காரர்களின் பெருந்தன்மை,கருணை,நல்ல குணம் போன்றவற்றையே பேசுகிறார்.அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்த எந்தப் பேச்சும் கிடையாது.அதைப் பேசுவது அவரது படைப்பின் நோக்கமாக எப்போதும் இருந்ததில்லை.”தத்துவங்களை எழுதுவதற்குக் கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்துவிடலாம்.” என்று நேர்காணலில் அவர் குறிப்பிடுவதால் அவர் படைப்பின் நோக்கம் எந்த அமைப்பு சார்ந்ததும் அல்ல வாழ்வாதாரம் சார்ந்ததும் அல்ல என்பது தெளிவு.

ஒரு அலுவலகத்தில் உதிரி வேலைகள் செய்ய 50 ரூபாய் மாதச்சம்பளத்தில் சேரும் புதியவர் ஒருவரைப்பற்றிய ‘ஆசான்’ என்னும் கதை உழைப்புச் சுரண்டலைப்பற்றிக் கூர்மையாகப் பேசுகிறது. அந்தப்புதியவர் தன்மானம் மிக்கவராக இருப்பதால், தொடர்ந்து உயரதிகாரி செய்யும் அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேலையை விட்டு விலகுகிறார். கோபி கிருஷ்ணனின் பெரும்பாலான கதைகளில் பிரச்னை வந்தால் வேலையை விட்டுப் போய் விடும் வழியைத்தான் எல்லாக்கதாபாத்திரங்களும் தேர்ந்தெடுப்பார்கள்.

வேலையை விட்டுப்போகிற அந்தத் தொழிலாளியைப் பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கக் கூடாதா என்று இவர் கேட்க அவர் அழுத்தமான ,தீர்மானமான குரலில் பேசுகிறார்:

”நிறைய நாட்டு நடப்புகளை அவர் தெரிந்து வைத்திருந்தார். அலுவலக அநியாயங்களைப் பற்றி நிறையவே பேசினார். நான் கேட்க எண்ணியதை அவர் ஊகித்திருக்க வேண்டும். இதெல் லாம் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என்றும், முதலாளிகளுடைய பூடகமான உழைப்புச் சுரண்டல் என்றும், ஒருவரை ஒரு வேலைக்கு என்று அமர்த்திவிட்டுப் பிறகு வேறு வேலைக்குப் பயன்படுத்திக்கொள்வது முறைகேடு என்றும், தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னார். பொதுவாக அவருடைய வாழ்க்கையைப் பற்றி விசாரித்தேன். அவர் வறுமையில் வாடு பவராக இருந்தபோதிலும் தான் சாப்பிடும் சோறு தன்மானச் சோறு என்று பெருமிதத்தோடு சொன்னார். தான் வாழ்க்கை யில் இதுவரை எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை என்று அவர் சொன்னபோது அவரது குரலில் கம்பீரம் தெறித் தது. எனக்கு நேரமாகவே பேச்சை ஒரு கட்டத்தில் முடித்துக் கொண்டு அலுவலக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

இப்பொழுது என் மனதில் ஒருவிதமான உறுத்தல் ஏற்பட்டிருந்தது. எனது உத்தியோகப் பெயர் ஆய்வு உதவியாளர்; செய்யும் வேலையோ முழு நேரத் தட்டெழுத்தாளன். அப்படி பானால் நான் சாப்பிடும் சோறு ஓர் ஈனத்தனமான சமரசச் சோறு. “நாமெல்லாம் எடம் குடுத்துக் குடுத்துத்தான் இந்த நிர்வாகம் இண்ணெக்கி அநியாயமாகத் துளுத்துக் கெடக்கு” என்று புதியவர் சொன்னதை நினைத்துப் பார்த்தேன். அன்று மதியம் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தபோது அது ஓர் அவ மான ஊட்டமாகத் தோன்றவே அதைக் குப்பைத் தொட்டியில் விட்டெறிந்தேன்.”

உழைப்புச் சுரண்டல் குறித்துப் பல கதைகளில் இதுபோல ஆங்காங்கே கோபி பேசுகிறார்.அவர் இதைப்பற்றிய ஞானம் உள்ளவர்தான்.உணர்வு உள்ளவர்தான் என்பதன் வெளிப்பாடுகளே இவையெல்லாம். அவருடைய படைப்பின் நோக்கம் என அவர் கொண்டது வேறு என்பதால் இத்திசையில் அவரது பயணம் இல்லை.
’பிறழ்வு-விடிவு’என்கிற குறுநாவலில் ஓரிடத்தில் வரும் ஒரே ஒரு வரி “தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாமா என்று சில அலுவலகங்களில் பணி புரிந்தபோது யோசித்ததுண்டு. ஆனால், அவருக்குக் குழுக்களில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டிருந்தது” ஆகவே ராஜினாமக்கள் தொடர்கதை ஆயின.

மீண்டும் ‘இடாகினிப் பேய்களும்…”குறுநாவலில் ஓரிடத்தில் இப்படி வரும்: “மரியா என்ற ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருத்தி பாரதத்தைச் சுற்றிப் பார்க்க வந்தாள். எங்களுடன் ஒரு வாரம் தங்கினாள். அவள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,”இங்கு ட்ரேட் யூனியன் ஏதும் இல்லையா?”என்பதுதான்.

நான் சொன்னேன்,”இங்கு காக்காய் பிடித்து அதிகாரிகளின் கருணையில் வாழ்கிறவர்களே அதிகம்” என்றேன் சோகத்துடன்.
“கேட்க மிகவும் வேதனையாக இருக்கிரது” என்றாள்.

இந்த இரண்டே இடங்களில் மட்டும்தான் தொழிற்சங்கம் பற்றிய குறிப்பிடல் இருக்கிறது. ஒரு தொழிற்சங்கம் இருந்து அது கோபி கிருஷ்ணனுக்கு ஆதரவாக இருந்திருந்தால் அலுவலகம் காரணமாக அவருக்கு ஏற்பட்ட உளவியல் நெருக்கடிகளையேனும் தவிர்த்திருக்க முடியும் என்று படுகிறது.

டேபிள் டென்னிஸ் - யூமா.வாசுகி - நல்லநிலம் | panuval.com

உள்ளேயிருந்து கேட்கும் குரல்கள்

பேய்,முடியாத சமன், எப்படியோ எல்லாம் மர்மமாக இருந்தால் சரி,தூயோன்,ஆத்ம தரிசனம், ஆதி..அந்தம்,ஊனம்,ஜீவகாருண்யம், குறுக்கீடு, கலக்க மறுத்த கண்கள் எனப்பல சிறுகதைகளும் பிறழ்வு-விடிவு, காத்திருந்தபோது, டேபிள் டென்னிஸ், இடாகினிப் பேய்களும் சில உதிரி இடைத்தரகர்களும் ஆகிய நான்கு குறுநாவல்களும் பிறழ்வு என்று சமூகம் சொல்கிற ஒரு மனநிலை பற்றியே பேசுகின்றன. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும், குடும்பம், அலுவலகம், சமூகம் போன்ற அமைப்புகள் எவ்வளவு காரணமாக உள்ளன என்பதையும் இன்று நிலவும் மன நோய்க்கான சிகிச்சைகள் எவ்வளவு குரூரமாகவும் தவறாகவும் இருக்கின்றன என்பதையும் அவரது பல கதைகள் விவரிக்கின்றன.

”உறவுகள் பொதுமையானவை.உடைமை இல்லாதவை.தயாரிக்கப்பட்ட உறவுகளை விட நேரும் உறவுகள் நேர்மையானவை” என்கிற வரிகளையே முதல் பந்தாகப் போட்டு லவ் ஆல் என்று துவங்கும் ’டேபிள் டென்னிஸ்’ குறுநாவல் ’TWENTYFIVE TWENTYSEVEN’ என்கிற கேம் கணக்குடன் முடிகிறது. காமம், காதல் சார்ந்த வெளிப்படையான பதிவுகள் கொண்ட இப்படைப்பு பின்நவீனத்துவப் படைப்பு என்றும் சிலரால் குறிக்கப்படுகிறது.ஒரு அத்தியாயத்துக்கும் இன்னொன்றுக்கும் தொடர்போ தொடர்ச்சியோ இல்லை. மாதிரிக்கு ஒரு அத்தியாயம்.

TWENTY EACH

என் கணவரின் உடம்பு பூரா ரோமம் கரடி போல என்றாள் ரேகா ரெட்டி. Bestiality நினைவுக்கு வருகிறதா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டாள். தங்கள் மனைவி எந்த விலங்கு என்று கேட்டாள். ஆட்டுக்குட்டி என்றேன். தாங்கள் என்றாள். ஓநாய் என்றேன்.

ஓநாய்கள் தனிமைநாடிகள் என்றாள். அத்தனை தோழர்கள் இருந்தும் மனதளவில் நான் ஒரு தனியன் என்றேன். சிகரெட் இந்தத் தனிமையை ஓரளவு தணிக்கிறது என்றேன். தங்களைத் திருத்தவே முடியாது என்று கடிந்துகொண்டாள். நான் மாற விரும்பவில்லை; என் கொச்சைதான் என் புனிதம் என்றேன். அயானாவின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரெட்டியை அழைத்தேன். அவள் குழம்பிப்போனாள்.

எனக்குள் இருக்கும் இன்னொருவன். என் மறுபகுதி. இந்தப் பிளவு.

Id தளத்திலேயே ஒரு வாரம் கழிந்தது.

டேபிள் டென்னிஸ் முதல் பதிப்பில் கோபி கிருஷ்ணன் எழுதிய என்னுரை இக்குறுநாவல் என்ன பேசுகிறது என்பதைச் சூசிகையாகச் சொல்கிறது:

“டேபிள் டென்னிஸ் பிப்ரவரி 93 முதல் மே 93 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. நான் அப்பொழுது முற்றிலும் வேறொரு மனோநிலையில் இருந்தேன். நாற்பத் தெட்டு வயது ஆகியிருந்தும் நான் அச்சமயம் மிகவும் இளமையான நெஞ்சத்துடன் வானில் உயரப் பறந்து கொண்டிருந்தேன்.

வறட்டுப் பண்பாடு பேசிக்கொண்டு காய்ந்துகிடக்கும் இந்தச் சமுதாயத்தினருக்குள் இந்த Erotica நிறைய கிளர்ச்சியை உண்டு பண்ணலாம். இது முனிபுங்கவர்களுக்காகவோ துறவிகளுக்காகவோ சன்னியாசினிகளுக்காகவோ செக்ஸைப் பாவம் என்று கருதும் மனநோயாளிகளுக்காகவோ எழுதப் பட்டதல்ல. உள்ளங்களிலும் உணர்வுகளிலும் இயல்பான நம்பிக்கை வைத்திருக்கும், எளிதில் கசிந்துருகிவிடும் இளகிய மனது படைத்தவர்களுக்காக எழுதப்பட்டது. பாலுணர்வும் பரவசமும் காதலும் எத்துணை ரம்மிய மானவை! காதலியிடமிருந்து பெற்ற இன்பத்துக்கு ஈடாகத் தன் காதை அறுத்துத் தந்தவனை நான் பைத்தியக்காரன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். மாபெரும் காதலன் அவன்.

இந்தப் படைப்பில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் மனப் பதிவுகளாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது என் வேண்டு கோள். இது ஒரு முக்கியமான உளவியல் ஆவணம்.”

– கோபிகிருஷ்ணன்

நிறைய ஆங்கிலச்சொற்கள் சரளமாகப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்நாவலை சாமானியப்பட்ட நம் போன்ற வாசகன் அகராதியின் துணை கொண்டே முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும். மனப்பிறழ் நிலைக்கு அடித்தளமிடுவது அடக்கப்பட்ட பாலியல் தேட்டம்,பாலியல் வக்கிரம் என்பதை எவ்வித மனத்தடையுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறது டேபிள் டென்னிஸ்.

மகள் வாணி படிக்கும் பள்ளியின் பொன்விழா நிகழ்வுக்குள் மனைவி தாராவும் வாணியும் இருக்க, அவர்கள் வரும்வரை வெளியே ரோட்டோரம் காத்திருக்கும் இவர் காணும் காட்சிகளும் மனதின் ஓட்டங்களுமே “காத்திருந்தபோது” குறுநாவலின் பேசுபொருள். மனப்பிறழ்வு-மனத்தெளிவு என்கிற இருவித மனநிலைகளுக்குள்ளும் பயணிக்கும் சமூகத்தின் வரைபடமாக இந்தக்குறுநாவல் விரிகிறது. போலித்தனங்களால் ததும்பி நிற்கும் சமூகம் அவருக்குத் தலைவலியை உருவாக்குகின்றன. 2 மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்து குடும்பத்துடன் வீடு திரும்பினால், சாதம் ஊசிப்போயிருந்தது.

பசியுடன் படுத்துக்கொண்டோம். எனக்கு நீண்ட நேரம் நின்றதில் கால் வலித்தது. தாராவுக்கும் கால் வலி. யார் காலையும் யாரும் பிடித்துவிட முடியவில்லை.இருவருக்கும் பயங்கர சோர்வு. ஒத்த நிலைகள் சில வேளைகளில் யாருக்கும் சாதகமில்லாமலேயே அமைந்து விடுகின்றன.”காத்திருந்த நேரத்துக் காட்சிகளும் நினைவலைகளும் கால் வலியும் ஊசிப்போன சோறும் பட்டினியும் என எல்லாத்துயரும் ஒரே நேர்கோட்டில் வந்து முடிகின்ற கதை. எல்லாமும்தான் ஊசிப்போய்க் கிடக்கின்றன.

பிறழ்வு-விடிவு குறுநாவலில் வரும் ராமனுக்கு ஓரிரு தினங்களாக சம்பந்தா சம்பந்தமில்லாத தொடர்புபடுத்தல்கள் மனதில் நிகழ்ந்துகொண்டிருந்தன.காரண ரீதியில் விளக்க முடியாத அநேக சம்பந்தப்படுத்தல்களுக்கும் அறிவுபூர்வமாக இல்லாத அநேக உள்மன உந்துதல்களுக்கும் அவர் செயல் வடிவில் இணங்கிக்கொண்டிருந்தார். இந்த அகச்சிக்கல் அவர் மனைவி வசுவுக்கும் மகன் பிரபுக்கும் தெரியாது.

வசு மீது ராமனுக்குப் பொறாமையாக இருந்தது.வசுபோல எல்லாம் ஆண்டவன் செயல் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தானும் அதிமாகப் படிக்காமல் பாமர நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டு சராசரிகளில் ஒருவனாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! வாழ்க்கை யில் ராமனுக்கு அடிப்படைப் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் ஏதோ பீதி மனதுக்குள் இருந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. போதாக்குறைக்குக் கொஞ்ச நாட்களாக இந்தக் கோரமான மனப் பிரச்சனைகள் வேறு. ‘எனக்கு விடிவு காலமே கிடையாது’ என்று அவர் மனம் அரற்றிற்று. சுரேஷ் அடிக்கடி சொல்வது அவர் நினைவுக்கு வந்தது; ‘உங்களிடம் இருக்கும் ஒரே பிரச்சனை நீங்கள் godless ஆக இருப்பதுதான்.’ ராமன் ரொம்பவும் குழம்பிப் போனார்
எதைக் கடவுள் என்று எடுத்துக்கொள்வது? விபூதி, குங்குமம், மதப் புத்தகங்கள், சாமி சிலைகள் இவை அனைத்தும் அவருக்குப் படு எரிச்சலைத் தந்தன.
இந்தக்குழப்பமெல்லாம் ஒரு சாலை விபத்தில் அவர் அடிப்பட்டு விழுந்த ஆஸ்பத்திரி நாட்களில் இல்லாது மறைந்தது. சரியாகி வேலைக்குப் புறப்படுகையில் மீண்டும் பிறழ்வாகுமோ என்கிற ஐயப்பாடு வந்தது என்று கதையை முடிக்கிறார்.உள்ளிருந்து கேட்கும் குரல்களை மிகத்தெளிவாகப் பதிவு செய்துள்ள இக்குறுநாவல் தமிழ் இலக்கியப்பரப்பில் அபூர்வமானது.

சமூகப்பணி என்ற பேரில் நடத்தப்பட்டுவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களில்தான் கோபி கிருஷ்ணன் அதிக காலம் பணியாற்றி உள்ளார்.அவர் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த 20 ஆண்டுகளில் 17 நிறுவனங்களில் பணி பிரிந்திருக்கிறார்.தொண்டுநிறுவனங்களின் மூலம் உதவி பெறும் எளிய மக்களுக்கு ஆதரவாக உறுதியுடன் செயல்பட்டதாலேயே அத்தகை நிறுவன அதிகாரிகளான கறுப்பு ஆடுகளால் பழிவாங்கப்பட்டவர் கோபி கிருஷ்ணன்.அந்த அனுபவங்களையெல்லாம் நேரமும் நேசமும், அம்மன் விளையாட்டு, வர்க்கம், சடங்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு கதை,இரு உலகங்கள் ஆகிய சிறுகதைகளில் எழுதியிருப்பார். இந்த ஆறு கதைகளிலும் சொல்லப்பட்ட புள்ளிகளையெல்லாம் ஒரே கோலமாக விரித்து வரையப்பட்டதுதான் ”இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும்” என்கிற குறுநாவல். தன்வரலாற்றுத் தன்மை உள்ள இக்குறுநாவலை “வாசகா, வாசகி, நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். எதற்கும் இந்தப் படைப்பை ஒரு புனைவு என்றே எடுத்துக்கொள்” என்று முடித்திருப்பதே சான்று.

மனநோய்க்கூறு உள்ள 59 பேரிடம் நேர்காணல் செய்து ஆவணப்படுத்தி எழுதப்பட்ட ”உள்ளேயிருந்து சில குரல்கள்” என்கிற நீள் கட்டுரை ஒரு நாவலின் பல அத்தியாயங்கள் போன்ற இலக்கியத்தன்மை மிக்கது. உளவியல் மருத்துவ உலகுக்கும் உளவியல் பிரச்னைக்கு ஆளானவர்களை மீட்கத்துணை நிற்பவர்களுக்கும் ஆகச்சிறந்த கையேடாக அது திகழ்கிறடு. கோபி கிருஷ்ணனின் அரிய பங்களிப்பு இந்த ஆவணம்.

”மனநோய் என்பது வேறொரு மனநிலை. அவ்வளவே.சிகிச்சை தேவை என்றாலும் அது துர்ப்பாக்கியமானதோ துரதிருஷ்டமானதோ அபாக்கியமானதோ அல்ல.உண்மையில் நோய்க்குறிகளைத் தனக்கு அனுகூலமானதாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால் அதுவே ஒரு வரப்பிரசாதமாகவும் அமைய வாய்ப்புண்டு” என்று ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை’ என்கிற கதையில் கோபி எழுதியிருப்பார். ஆனால் இந்தப்புரிதல் இல்லாமல் மனநோய் சிகிச்சை மையங்கள் கொடூரங்களின் கூடாரங்களாக இருப்பதை அவருடைய கதைகளும் உள்ளேயிருந்து சில குரல்கள் ஆவணமும் உரக்கப்பேசுகின்றன.
இந்த சமூகம் எப்படி நல்லா இருக்கும் ஒருவரை மனநோய்க்குள் தள்ளுகிறது என்பதையும் பக்குவமாக அவரை எப்படி மனத்தெளிவை நோக்கித் திருப்ப முடியும் என்பதற்குமான ஆகச்சிறந்த உதாரணமான கதை “கலக்க மறுத்த கண்கள்”

இவருக்கு எதிர்வீட்டில் வசிக்கும் திருமதி. கமலா நடராஜன் ஒவ்வொரு ஞாயிறு காலையும் இங்கு வந்து இவருன் சற்றுக் கதைத்துவிட்டுப் போகிற பழக்கம் உள்ளவர். இருவருக்கும் பேசுவதற்கு ஒரு பொதுதளம் பரஸ்பரம் இருந்தது.குறிப்பாக சங்கீதம். திடீரென்று கமலா வருகையை நிறுத்திவிட்டார். என்னான்னு விசாரிக்கப்போனால் குனிந்த தலையை நிமிர்த்தாமல் உடனே போயிடுங்கோ.என் பார்வை பட்டால் உங்களுக்கு ஏதாச்சும் கேடு வந்து விடும் என்று துரத்துகிறார்.

மெல்ல மெல்ல விசாரித்தால், மைசூரில் உள்ள மாமானார் மாமியாரைப்பார்க்க இவர்கள் குடும்பத்துடன் போயிருக்கிறார்கள். அங்கே சோபாவை நகர்த்தும்போது மாமியாரில் காலில் இடித்துக் காயமாகியிருக்கிறது.தன்னுடைய மாட்டுப்பெண் தன்னுடைய ஆரோக்கியத்தின் மீது கண் வைத்ததால்தான் கண்ணேறு பட்டு அந்தக்காயம் ஏற்பட்டது என்ற பழியைத்தூக்கி கமலா மீது போட்டிருக்கிறார் மாமியார். இரு தினங்களில் இவர்கள் ஊர் திரும்பியதும் மறுநாளே மாமனாருக்கு இதய அதிர்ச்சி. மீண்டும் இவர்கள் மைசூருக்குப் போனால்,”ஒங் கண்ணு பட்டுத்தான் அவருக்கு இப்படி ஆகியிருக்கு.திரும்பவும் ஏன் வந்தே? ஒன்னாலே இன்னும் என்னென்ன ஆக வேண்டியிருக்கோ, பகவானே!” என்று மாமியார் அரற்ற கமலாவுக்குப் பீதி பற்றிக்கொண்டது.பின்னர் ஊர் திரும்பியபிறகும் அடுத்தடுத்து நடந்த தற்செயல் சம்பவங்கள் தன் கண் பார்வை பட்டதால்தான் நடந்தது என்று இவரே நம்பத்துவங்குகிறார். அப்படியே உள்ளுக்குள் ஒடுங்கிப்போகிறார்.

இப்படித்தான் சமூகம் ஒரு மனநோயாளியை உருவாக்குகிறது.

அடுத்த மூன்று மாதங்கள் இவர் தன் தோழியான கமலாவுடன் பேசிப்பேசிக் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க வைத்து ,அவர் பார்த்ததால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதை நிரூபித்து, அவரை நம்ப வைத்து மீட்பதுதான் கதை. தாமதித்திருந்தால் கமலா முழு மனநோயாளியாகவே ஆகியிருப்பார்.

கோபிகிருஷ்ணன் – Dial for Books

பிற

அன்பே சிவம், மகான்கள், ஆண், நானும் அதுகளும் போன்ற கதைகள் அவர் பூச்சிகளிலிருந்து நாய்கள் வரை சிற்றுயிர்கள் மீது கொள்ளும் பரிவைப் பேசுகின்றன. பரஸ்பரம் என்கிற கதை பத்துநாட்கள் பல விதமான பூச்சிகளோடு போராடி பதினோராவது நாள் அவற்றோடு சமாதான சக வாழ்வு வாழப் பழகிக்கொள்ளும் மனிதரைப் பற்றிய அற்புதமான கதை.

ஆழ்மன உலகில் எப்போதும் சஞ்சரிக்கும் மனிதராகவும் பிடுங்கித்தின்னும் பொருளாதாரப்பின்புலம் கொண்ட மனிதராகவும் அவர் வாழ நேர்ந்ததால் இந்த வாழ்வு குறித்து அவர் பல படைப்புகளில் தெறிப்புகளாகச் சொல்லியிருக்கும் சில வாசகங்கள் அர்த்தச்செறிவுள்ளவை. சான்றாகச் சில வரிகள் இங்கே:

“இந்தத் தப்பு,ரைட் எல்லாங்கூட மனசோட சித்து விளையாட்டுத்தான்.எண்ணத்தோட எதிர்மறை இல்லாம ஒரு விஷயத்தை மனசு புரிஞ்சிக்காது. சாமி இருந்தாக் கூடவே பிசாசும் இருக்கும்”

“வாழ்க்கை என்பது புலனுணர்வு. அதுதான் நிஜம். புலனுணர்வில் சிந்தனை கலக்காமல் இருக்கும்வரை மனநிலை பவித்திரமானதுதான்”

“ஒரு தேசத்தின் ராணுவன் தன் நாட்டின் மீதுள்ள நாட்டத்திற்காக வேறொரு தேச ராணுவனைக் கொன்று குவிக்கும் குதூகலம்.தேசியம்.”

“கையிலிருந்த கிளாஸை ஓங்கித்தரையில் போட்டு உடைக்க ஒரு வன்முறை உந்துதல் என்னைப் பிடித்தாட்டிற்று.அருவருப்பைப் போக்கிக்கொள்ள, ஆத்திரத்தைக் குறைக்க, ஜட வஸ்துக்கள் மீதேனும் காட்டிக்கொள்ள வேண்டும். அடக்கி உள்ளுக்குள் இரித்திக்கொள்வதில்தான் மனச்சிக்கல்களே”

“மனப்பிழிவு உடலையும் பிழிந்தெடுத்திருந்தது”

“ஒன்றைச் சார்ந்திருக்கும்போது அதைச் சுற்றியே உங்கள் நியாயங்கள் இருக்கும்.பொது நியாயங்கள் அஸ்தமித்துப் போகும்”

“எனக்கு டீ சாப்பிடாவிட்டால் மிகவும் தாமதமாகவேதான் சமாச்சாரங்கள் புரியும்”

“துவேஷம் என்று வந்துவிட்டாலே மனம் மிகவும் தெளிவில்லாமல்தான் செயல்பட்டுத் தொலைக்கிறது. இதன் காரணமாகத்தான் அநேக ஆங்கிலேயர்களுக்கு எல்லா நீக்ரோக்களும் ஒரே மாதிரியான தோற்றமுடையவர்களாகத் தோன்றுவது”

“உணர்ச்சிவசப்படும்போது செயல்வடிவ நிகழ்வுகளை ஒத்திப்போடு”

“மனிதனுக்கு வாழ்க்கையில் உழைப்பது ஓர் அர்த்தத்தைக் கொடுப்பதுபோல ,சிலந்திக்கு வலை பின்னுவதில் தன் ஜீவிதத்திற்கு ஒரு பூர்ணத்துவம் கிடைத்துக்கொண்டிருக்கிறது”

“உண்மையில் உறவுகள் வரையறுக்கப்பட்டவை அல்ல.எல்லா உறவுகளுமே ஏதோ ஒரு தளத்தில் ஆரம்பித்தாலும், பரிச்சயம் வலுப்படத் துவங்கியதும் சொந்த உறவுகளாக மாறுபவைதான்”

இதுபோன்ற பல வாசிப்புகளை அவர் பதிவு செய்கிறார். இவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் நமக்கு.ஆனால் இவை அவர் வாழ்ந்து கண்ட உண்மையின் தெறிப்புகள் என்கிற அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வாழ்வும் இலக்கியமும்

இந்த அளவுக்குச் சொந்த வாழ்வைத் தன் படைப்புக்குள் வைத்துத் தைத்துவிட்ட இன்னொரு படைப்பாளியைத் தமிழில் காண முடியாது.” எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மையிருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுது கிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப் பட்டிருக்கிறது.” என்பது அவர் இலக்கியக் கொள்கை.அப்படியேதான் வாழ்ந்திருக்கிறார். அதனாலேயே ஓரிடத்தில் டிக்கானா இல்லாமல் அலைகடல் மிதவை போல வாழ நேர்ந்திருக்கிறது.வேலைகளிலும் வீடு மாற்றுவதிலும் மட்டுமல்ல. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மதம் மாறியிருக்கிறார்.பின்னர் மண முறிவு ஏற்பட்டதால் மீண்டும் மதம் திரும்பியிருக்கிறார்.

ஒரு சராசரி நடுத்தர வர்க்க வாழ்வை வாழ்ந்துவிட ஏங்கியிருக்கிறார்.உயர்கல்வி கற்ற அவருக்கு இந்த சமூகம் அதை உத்தரவாதம் செய்து தர முடியவில்லை. விளிம்பு நிலை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினர்,பெண்கள்,குழந்தைகள் என இவரது கதாபாத்திரங்கள் இந்தச் சமூகத்தின் போலிமைகளை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒரு அம்சத்தை ஆய்வு செய்யும் சமூக மற்றும் உளவியல் ஆய்வாகவே இருப்பது இக்கதைகளின் பலமும் பலவீனமும் ஆகின்றன.

வாசிப்பின் போக்கில் நாமும் அவர் திறந்து வைக்கும் மன உலகங்களுக்குள் உழலும் ஒரு பிரஜையாக ஆகி நெருக்கடிக்குள்ளாகிறோம். இது இலக்கியமா வாழ்க்கையேதானா என்கிற சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். புற உலகின் தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்ட அக வாழ்வாகப் பல சமயங்களில் கோலம் பூண்டு நிற்பதுண்டு. புறத்துடனான இணைப்பை நாம்தான் கொடுத்து வாசித்துக்கொள்ள வேண்டும்.

பிறழ்வைத் தெளிவாக்கும் பயணத்திற்கு இவரது எல்லாப்படைப்புக்களுமே வெளிச்சம் தரக்கூடிய ஒளிவிளக்குகளாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. தமிழ்ச்சமூகத்துக்குக் கோபி கிருஷ்ணன் அளித்துள்ள மிகப்பெரும் கொடைகள் இவை.

”வாழ்க்கையை ஒரு சில வாக்கியங்களில் அடக்கிவிடலாம். இவ்வளவு பேச்சு அவசியம்தானா என்று தெரியவில்லை. மிகவும் ஆழமான உறவுகள் அநேகமாக அமைதியாகவே இருக்கும். நேசத்தையும், மென்மை உணர்வுகளையும், தோழமையையும் வெளிப்படுத்த இனிய முகபாவம் மட்டும் போதுமானதே. வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளாமலேயே ஒருவருடைய எண்ணங்கள் மற்றவரைச் சேர்ந்தடையும். வாழ்க்கை மிகவும் நிசப்தமாக இருப்பதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனாலும், இரைச்சல் ஏனோ எப்பொழுதும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.”

(ஒவ்வாத உணர்வுகள் கதையில் கோபி கிருஷ்ணன்)

அவரது நிறைவேறாக்கனவுகளின் ஏக்கபெருமூச்சு நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறது.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *