எளிய மனிதர்கள் வாழ்வைப் பேசும் செறிவான கதைகளின் படைப்பாளி.
தப்புக் கொட்டை
மணிநாத்
“எல்லாரும் வந்தாச்சு, கூட்டத்த ஆரம்பிச்சுடுங்க” என்றான் மனோகரன்
கண்ணன் பேசத் தொடங்கினார். நேற்று சாதி சங்க தலைவரை பார்த்துட்டு வந்ததாகவும், ஒரு நாளைக்கு திடீர்னு ஆள தேடற மாதிரி சேரிக்குள்ள புகுந்து, உயிர் சேதம் இல்லாம தும்சம் பண்ணிட்டு வந்தாத்தான் நம்பமேல பயம் இருக்கும் என்றும், தனியா இருக்கற ஒன்னு ரெண்ட வீட்டை கொளுத்திவிட்டு, வீடு புகுந்து பொருட்களை சேதம் பண்ணிட்டு வந்தாத்தான் நம்ப பொண்ணுங்கள காதலிச்சு கடத்திப் போனா என்ன விளைவுகளை சந்திக்கனும்ங்கறதை காலத்துக்கும் அவனுங்க உணர்வாங்க என்றும், அந்தமாதிரி செய்திட்டு வரணும்னு தலைவர் சொன்னதாக கண்ணன் பேசினார். டிராக்டர்லே ஆளுங்க வந்து இறங்குவாங்க என்றும் உள்ளூர்லே பொம்பள ஆம்பளன்னு பார்க்காத எல்லோரையும் திரட்டணும்னு அவர் சொன்னார்
உள்ளூர்ல ஆட்களை திரட்டற வேலை வெங்கட்ராமனுக்கும் பலராமனுக்கும், வெளியூர்லேந்து கொண்டு வர்ற வேலை கண்ணனுக்கும், வீடு கொளுத்தறது வடிவேலுவுக்கும் முருகேசனுக்கும் மனோகரன் பகிர்ந்தளித்தான். “கொளுத்தறதுக்கு முன்னாடி கிழங்கெட்டுங்க இருக்கான்னு நல்லா பார்த்துக்கிடுங்க” என்று எச்சரித்தான். எல்லாத்தையும் வீடியோவில் படம்புடிச்சு தலைவர்ட காட்டணுங்கறதுனாலே, அதுக்கு பார்த்திபனை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கண்ணன் கூறினான்.
பொண்ணுக்கு அப்பன் கண்ணாயிரம் ஒன்னுமே சொல்லாம வாய தொறக்காம உட்கார்ந்திருந்தாரு. “மாமா கவலைப் படாதீங்க, இந்த சம்பவத்துக்குப் பிறகு பாருங்க தான இருக்க இடம் பொலம் வந்திடும் ஆளப்புடிச்சிடலாம்” என்று பழனி கூறினான்.
“இதுக்குத்தான் நான் அப்பவே படிக்க வைக்க வேணாம் கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு சொன்னேன். இன்னைக்கு தலை கவிழ்ந்துகிட்டு கிடக்கிறதில என்ன புண்ணியம்” என்றாள் அலமேலு.
கூட்டம் முடிஞ்சுது. மெல்ல மெல்ல கரைந்தது. அலமேலு மட்டும் வெங்கட்ராமனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாவிப் பொண்ணு கடைசி பரிட்சை முடிஞ்ச கையோட சேரிப்பையனை கூட்டிகிட்டு போயிட்டாளே! வந்தாலும் வெங்கட்ராமன் கட்டிக்குவானா? மனசுக்குள் புழுங்கினாள்.
வெண்ணிலாவைப் பெண் கேட்டு வெங்கட்ராமன் அப்பா வீடு ஏறிபோனபோது சொத்து பத்து இருந்தா மட்டும் போதுமா? படிப்பு வேணாமா? என்று கேட்டதோட பொண்ணை நல்லா படிக்கவச்சி உத்யோகத்திலே இருக்கறவனுக்குக் கொடுக்கப் போறேன்னு முடிவா கண்ணாயிரம் இருந்தாரு.
வெங்கட்ராமன் படிக்காம போனதுக்கு அவனா காரணம்?
அவன் சின்னப் புள்ளையா இருக்கும் போது கூத்துப் பார்க்கப் பக்கத்து ஊருக்குப் போனான். கூத்துக் களரியில் ஒரு அம்மா இவன கூப்பிட்டு மடியில இருந்த கொழுக்கட்டைய கொடுத்து கொஞ்சிட்டுப் போனாங்க. அப்பறம் பள்ளிக்கூடம் போகும் போது மாசத்துக்கு ஒரு முறை அந்த அம்மா வந்து பலகாரம் கொடுக்கும். இவன் கேட்டதுக்கு உங்க அம்மா மாதிரி நினைச்சிக்கோயேன் என்றார் அந்த அம்மா.
வெங்கட்ராமன் வீட்டுக்கு ஒத்தப்புள்ள. சொத்து சுகம் வீடு வாசல் ஆள் படைக்கு கொறவில்ல.
ஒருநாள் அவன் அம்மா அப்பா சாப்பிடும்போது இவனைக் காட்டி குசுகுசுனு பேசிட்டு இருந்திச்சு. அப்பா நடையில இவன் பக்கத்தில் வந்து படுத்துகிட்டு கட்டிப் பிடிச்சிகிட்டே கேட்டாரு.
“நீ பள்ளிக்கூடம் போவறச்சே பக்கத்து ஊர்லேந்து ஒரு பொம்பள வந்து தின்றதுக்குப் பலகாரம்லாம் தர்றாங்களாமே உண்மையா?”
இவனும் உண்மையயைச் சொன்னான். அவர் எங்க வச்சி கொடுப்பாங்கறதை கேட்டுக் கொண்டார். பத்து நாள் ஆகியிருக்கும். இவன் அவங்க கொடுத்த எள்ளடைகளை ஆசையா சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவன் அப்பா மறைவிலே வந்து திடீர்னு அந்த அம்மாவின் தலைமுடியைப் பிடிச்சிகிக்கிட்டு மறுகையில் வைத்திருந்த பூட்டாங்கயிறாலே அடியோ அடின்னு அடிச்சாரு. இவனுக்கு பயமாயிடிச்சி. “அய்யோ அம்மா, அய்யோ அம்மா”ன்னு கத்திகிட்டே ஓடினாங்க.
“புள்ளைக்கும் உனக்குந்தான் ஒட்டுமில்ல உறவுமில்லன்னு அன்னைக்கே சிக்கறுத்து விட்டாச்சே. புள்ள மனசை கலைச்சி ஒட்டிகிலாம்னு பாக்கறியா?” இவன் கையில் வைத்திருந்த பலகாரங்களைப் பிடுங்கி எறிந்தார்.
“நீ படிச்சது போதும், வாடா வீட்டுக்கு”ன்னு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். அன்னைக்கி நின்னதுதான் இவன் படிப்பு. ஒரு நாள் அம்மாவிடம் அவங்க யாரு ஏன் அப்பா அவங்கள அடிச்சாருனு கேட்டான். அசிங்கம் புடிச்சவ, அவ பேச்சு வேண்டாம் என்றாள்.
கார்த்திகை தீபம். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாரியம்மன் கோயில் எதிரில் சொக்கப்பாணம் எரியும்போது யார் முதலில் தாவி அதன் உச்சியில் நட்டு வைத்த கிளையை சாய்க்கிறார்களோ அவன்தான் அந்த ஆண்டின் மாவீரன். கிளையை வலிக்கப் போகிறேன் என்று ஓசுரான் மகன் சடகோபனும், வெங்கட்ராமனும் தீர்மானித்தார்கள்.
கிளையை சாய்த்த வெங்கட்ராமனை பூசாரி ஆசிர்வதித்தார். இறுதியாக அம்மா ஆலம் சுற்றி வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள். தீக்காயங்கள் இருக்கிறதா என ஆராய்ந்தாள். மறுநாள் கபடிப் போட்டி. சடகோபனுக்கும் வெங்கட்ராமனுக்கும் கைகலப்பு. “மட்டவெள்ளிக்கு பொறந்த பையா” என்று சடகோபன் திட்டிவிட்டான்.
மரகதம் அத்தை வீட்டிற்கு சென்று கேட்டான். “என்னை அவன் ஏன் மட்டவெள்ளிக்குப் பொறந்த பையன்னு சொல்லணும்?” அத்தை உள்ளே அழைத்துச் சென்றாள். யாரிடமும் தான் சொன்னதாக சொல்ல வேண்டாம் என்று கூற ஆரம்பித்தாள்.
ஆத்தங்கரையில் அடித்து விரட்டினதுதான் வெங்கட்ராமனின் பெத்த அம்மா. கல்யாணம் பண்ணி நீண்டநாளா பிள்ளை இல்லை. அவங்க அம்மா வீட்டில் படியாளா இருந்த சேரி மாரியோட கள்ளத்தனமா இருந்துதான் வெங்கட்ராமனை பெத்துக்கிட்டா. ஆனா ஆசை விடலை. நிறுத்தலை. மாரியை உதைச்சு ஊரைவிட்டே விரட்டியாச்சு. அம்மாவையும் சிக்கறுத்து விட்டுட்டு வெங்கட்ராமனோட அப்பா இரண்டாம் கல்யாணம் செஞ்சுகிட்டாரு.
வெங்கட்ராமன் முகம் சுருங்கி இறுகிப் போய் இருந்தது.
அத்தை தொடர்ந்தாள். “புள்ள இல்லன்னு நாட்டுல அப்படி இப்படின்னு நடக்கறது காலகாலத்துக்கும் இருந்திட்டுத்தான் இருக்கு, சில பேரு தேர்த்திருவிழான்னு கூத்து நாடகம்னு பக்கத்து பக்கத்து ஊர்களுக்குப்போய் சுமக்கமாக புள்ள வாங்கிக்கினு வந்திடுவாளுங்க. இதெல்லாம் ஊர் உலகத்திலே நடக்கிறதுதான். மதிப்பும் மரியாதையும் பொறப்பில் இல்ல. வாழ்க்கையில நாம் செய்யற நல்லது கெட்டதுலதான் இருக்கு “.
அப்பாவுக்கு புற்று நோய் கண்டிருந்தது. அப்போதுதான் வெண்ணிலாவைக் கல்யாணம் செய்ய பெண் கேட்டார்கள். அப்பா படுத்த படுக்கையாகி இறந்து போனார்.
பலராமன் வந்துவிட்டான். அம்மா சாப்பாடு போட்டுவர சமையலறையில் நுழைந்த போது பலராமன் வெங்கட்ராமன் மட்டும் கேட்கும்படி சொன்னான் “இன்னைக்கு சேரிய நிர்மூலமாக்கணும் மறந்திட்டியா?”
பத்து மணிக்கு கிளம்பினார்கள். எல்லோரும் தடிதாம்புகளை, கடப்பாறைகளை எடுத்துக்கிட்டு எல்லோரையும் அழைத்தனர். தெருத் தெருவா திரண்ட ஆண்கள் திரௌபதியம்மன் கோயில் முன் திரண்டனர். பக்கத்து ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வரும் இரண்டு டிராக்டருக்காக காத்திருந்தார்கள்.
பலராமனும் வெங்கட்ராமனும் முன்னால் செல்ல கூட்டம் சேரியை நோக்கி நகர்ந்தது. சேரி வெறிச்சோடிக் கிடந்தது. கிடைத்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். வெங்கட்ராமன் கதவைக் காலால் எட்டி உதைத்தான். சுவரில் மாட்டியிருந்த போட்டோக்களை அடிக்க தடியைச் சுழற்றியபோது அதிர்ந்து போய் நிறுத்தினான். போட்டோவில் இருந்த உருவம் இவனைப் போல் இருந்தது. மீசை கண் மூக்கு முகம் எல்லாம் அசல் வெங்கட்ராமன்தான்.
“வெங்கட்ராமா அடிக்காத! எதையும் உடைக்காத! நான்தான் மாரி உன்ன தூக்கி வளர்த்தவன்”.
அவர் உடம்பில் நடுக்கம் கண்களில் மிரட்சி. காலில் கட்டு போட்டிருந்தார். இவன் போட்டோவை உற்றுப் பார்த்தான்
“அது நான்தான் சின்ன வயசுல எடுத்து” என்றார் பெரியவர்.
இவன் மனசு கிறுகிறுத்தது. உடல் படபடத்தது. தடியைக் கீழே போட்டான். அமைதியாய் வெளியேறி வீட்டை நோக்கி நடந்தான்.
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.