அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுதுபவர். கதைத் தெரு கதைசொல்லியென அழைக்கப்படும் மாதவன் எழுதிக் குவிக்காவிடினும், அவருடைய ஒவ்வொரு படைப்பும் அக்கறையோடு நுட்பமாய் வெளிப்படுகிறது.
நாயனம்
ஆ. மாதவன்
இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா வேஷ்டி அணிந்து கொண்டு நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன் நீட்டி நிமிர்ந்து அந்நியத் துயில் கொள்கிறார்.
“யென்னைப் பெத்த யப்போவ், யெனக்கினி ஆரிருக்கா” நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்குப் பச்சைக் கண்டாங்கிதான் பொருந்துகிறது.
கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டு வந்து முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகு மரம் வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகிக் கிடக்கிறது.
செத்தவரின் தடியன்களான ஆண் பிள்ளைகள் இரண்டும் அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி இப்பொழுது பழக்கமாகி சாதரணமாகி விடுகிறது.
“இப்படியே இருந்தா பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே காரியத்தை முடிப்போம்” யாரோ சொன்னார்கள்.
நாயனக்காரரை அழைக்கும் பொருட்டு வடிவேலுவும், சின்னண்ணணும் போயிருப்பதாகவும் மேலாத்தூரிலே அல்லாம் முத்துப்பாட்டி திருவிழாவுக்கு போயிருப்பதாலே, நாயனக்காரங்க ஆம்புட்றது கஸ்டம்னு பேசிக் கொண்டார்கள். சின்னனண்ணண் போயிருப்பதால் யாரையாவது நிச்சயம் இட்டுக்கிட்டு வருவான் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.
மழை வரும் போலிருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. வாய்க்காலைத் தாண்டி ஒரு கியாஸ் விளக்கை சுமந்து வந்தான். சலிப்பு எல்லோரது முகத்திலும் அசட்டுக் களையை விரவி விட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கறது? விடிந்ததிலேந்து யாரும் எதையும் சாப்பிடவில்லை. இது எப்ப முடிஞ்சு சாப்பிடறது என்ற சந்தேகம் அனைவரிடத்திலும்.
இருட்டை பொத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்தான். மேலாத்தூருக்கு போனவர்களுக்கு நாயனக்காரங்க ஆம்புடாததினால் தட்ராம்பட்டிக்கு போயிருப்பதாக சேதி சொன்னான். “இன்னும் ஒரு மணியோ ஒன்றரை மணியோ ஆகலாம்” என்றவுடன் கும்பல் முகம் சுணங்கியது.
“இந்தக் காலத்திலே யாருப்பா நாயனமும் பல்லாக்கும் வச்சுக்கறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்திரவு இல்லாமே காரியத்தை முடிக்கறதே விட்டுட்டு…”
“மூத்த பிள்ளைகிட்டே செத்தவரு முன்னாடியே தமக்கு சுடுகாடு யாத்திரை, தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு சொல்லியிருக்காரு, செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போட்டுமேண்ணுதான் இப்போ மேலாத்தூர் போய் அங்கேயும் ஆம்புடாம தட்ராம்பட்டு போயிருக்காங்க”.
![]()
மழை வந்தே விட்டது. ஹோவென்று. கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. எல்லார் முகத்திலும் சலிப்பும் விரசமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கிறது. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை என்ன பேசி நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை.
பாடை தயாராகி, உடம்பு சிவப்புப் பட்டு மூடிக் கொண்டு நீட்டி நிமிர்ந்து பந்தலில் தயாராக இருந்தது. நீர் மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும் மழையில் குளித்து, தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு பிணத்தில் தலைமாட்டில் வந்து முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.
“வாய்க்கரிசி போட இன்னும் உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம் நேரமிருக்குது” என்றார் தலையாரி.
“ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படப் போறமோ?”
எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தது. மரண சம்பவத்தைவிட நாயனம்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனதிலும் பெரிய உருக்கொண்டு நின்றது.
கியாஸ் விளக்கு வட்டத்தில் சின்னண்ணணும், வடிவேலுவும் வென்று வந்த வீரர்கள் போல முன்னால் நின்றனர். மேலாத்தூர் போய் அங்கே யாரும் இல்லாததினால், வீரண்ணன்சேரியிலே ஏற்கனவே உள்ளூர் கொடையில் வாசித்த முனிரத்னத்தையும் பார்த்திருக்கிறார்கள், அவன் சீக்கா படுத்ததிருப்பதால் தட்ராம்பட்டுலேபோய் இவர்களை அழைத்து வந்ததை சொன்னார்கள்.
காய்ந்துப் போன மூங்கில் குழாய்போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக் கொண்டு மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும் காவி மேலாப்புமாக ஒரு குட்டை ஆசாமி. இவனா என்று கருவுவதற்குள் இவனாவது இந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே என்ற சமாதானம் எல்லோருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது.
“வெட்டியானெக் கூப்பிடறது, நெருப்பெல்லாம் ரெடி சங்கை ஊதச் சொல்லு பொறப்படலாமா உள்ளே கேட்டுக்கோ”
பெண்கள் முட்டிக் கொண்டு தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். சகதியும் அதுவுமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லோரும் தயங்கினார்கள். பெண்மகள் மட்டும் “ங்கப்போ எனக்கினி யாரிருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள். பாடை தோளில் ஏறிற்று.
“யாருப்பா அது நாயனம்? உம் சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டடியாந்தோம், முன்னாடிப் போங்க. வௌக்குத் தூக்கிறவன் கூடவே போங்க. மேளத்தைப் பிடிங்க”>
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்து வந்த வேலண்ணன் அவன் காதருகில் ஏதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல நாயனத்தை உதட்டில் வைத்து பீ. . ப்பீ என்று சுத்தம் பார்த்தான்.
கூ ஊ ஊ என்று வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரனின் பீ. . பீ அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல வாத்தியத்தைத் தொப்பு தொப்பென்று மொத்தினான்.

கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான்.
பீ. . ப்பீ. . பீ.. பீ
எல்லோருக்கும் வயிற்றைப் புரட்டியது. ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள்வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில் கடத்து வஞ்சித் துறையிலிருந்து தவளைகள் குறோம் குறோம் என்று எதிர்ப்புக் குரல் போட்டுக் கொண்டிருந்தது. சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும் பீ. . ப்பீ. . பீ.. பீ
நாயனக்காரன் பக்கமாக தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார்.
இன்னும் பீ. . ப்பீ. . பீ.. பீ
“படவா ராஸ்கல், நாயனமா வாசிக்கறே?” ரொம்ப முரடான தலையாரி முத்தனின் அதட்டலை பாடை தூக்கிக் கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள்கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
தலையாரி நாயனக்காரர் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்துக் கால் முட்டின் மேல் வைத்து இரண்டு கைகளாலும் சடக் இரண்டு துண்டு. “ஓடிக்கோ பயமவனே” முத்தன் எச்சரித்தார்.
நாயனக்காரனும் தவுல்காரனும் ஆற்றின் இடதுபக்கச் சந்தின் இருட்டில் இறங்கி ஓடிக் கொண்டிருந்தனர். சனியன் விட்டுத் தொலைந்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கியது.
@கணையாழி ஏப்ரல் 1971
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.


நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். நன்றி. எனக்கு எஸ்.ரா வின் சஞ்சாரம் நாவல் நினைவுக்கு வந்துவிட்டது. அவர்கள் இருவரும் இறங்கி ஓடுகிறபோது ஏற்படுகிற உணர்வுதான் எழுத்தாளனின் ஒட்டுமொத்த சாராம்சமும் என்பது மாதிரியான முடிப்பு…. அருமை தோழர்.