“இவர் எழுத்துக்களை படிக்கையில், மகான்களுக்கு இன்னும் கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்கு கொஞ்சம் கிடைத்துவிட்டது மாதிரிப் படுகிறது” என்கிறார் சுந்தர ராமசாமி.

எங்கள் ஊர்

ஜி.நாகராஜன்

எங்கள் ஊருக்கு நீங்கள் வர வேண்டும்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை ஓரமாக இருக்கும் எங்கள் ஊருக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்.  கடற்கரைப் பக்கம் சென்று குச்சிக் காலுடன் நெடிது வளர்ந்து பழுப்பும் பச்சையுமாய் விட்ட தங்களது கைகளை காற்று போனபடி அலைக்கும் அந்தத் தென்னை மரங்களையும், முடிவிலாது விரிந்து கிடக்கும் கடலையும் பார்த்துவிட்டால் எங்கள் ஊரை விட்டுப் போக உங்களுக்கு மனமே வராது.

ஊருக்கு  வடகிழக்கே மூங்கிற்காடொன்று உண்டு.  நானும் மாதவனும் அந்தக் காட்டுக்கு சென்றோம்,  கும்மிருட்டுக்குள் மாட்டிக் கொண்டோம். என்னவோ வாடை மூக்கைச் சாடியது,  கொழும்புக்குப் போகத் துடிப்பவர்களை  படகுக்காரர்கள் இரவில் ஏற்றிச் சென்று கடலில் அலைக்கழித்து இறுதியில் அந்த மூங்கில் காட்டில்தான் இறக்கி கழுத்தை நெறித்துக் கொல்வார்களாம்.

எங்கள் ஊரில் உள்ள இருளாடிவிட்ட பிள்ளையார் கோயிலை பிழைக்க வைத்தது எஸ்.பி.ஏ.ராமனாதன் செட்டியார்தான்.  தங்க பிஸ்கெட்டுகளை தனியாளாய் மூட்டையில் எடுத்து வருகையில் இலங்கை போலீசு கொடுத்த மூன்று ரவைகளையும்  உடம்பில் வாங்கி மூங்கிற்காட்டில் காத்துக் காத்துப் பார்த்தான் மாரியப்பன். அவன் செத்த பின்பு செட்டியார் உள்ளூர் போலீசோடு வந்து  மூட்டையை எடுத்துச் சென்றார். ஆயிரம் ரூபாய் செலவில் பிள்ளையார் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

அடுத்த வருஷம் அதே கோயில் ஐயாயிரம் செலவில் ஒளியாடவிடப்படக் காரணம் மருதையனின் சாவுதான். பதினாறு வயது நிரம்பிய சுப்பையா ரெட்டிமீது பரிவு கொண்ட மருதையன் அவனை மூங்கிற் காட்டில் இறக்கிவிட்டு  கொல்லாமல் விட்டு விட்டான்.  அவனோ காசு பணம் சேர்த்ததோட இல்லாம சிங்களச்சி ஒருத்தியை கல்யாணம் செய்து கொண்டு, ஒரு தமிழச்சியை வைத்துக் கொண்டு கொழும்புவில் ஹோட்டல் நடத்துவதோட இல்லாமல்  இலங்கைப் போலீசுக்கு மருதையனைப் பற்றி  துப்புக் கொடுத்தான். இலங்கை போலீசு அவனை சுட்டுக் கொல்ல, சொக்கி தெருவில் நின்றாள்.

ஜி.நாகராஜன் - விளிம்புநிலை மனிதர்களின் அக உலகை விவரித்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் 23 | Life history of Tamil writer G.Nagarajan

ஏற்கனவே மருதையன் ஷேக் ராவுத்தரை இலங்கையிலிருந்து திரும்பியபின் கொலை செய்வதாக  எச்சரித்திருந்தான்.  அதனால் அவன் இறந்த செய்தி கேட்டதும் தன் கணக்குப் பிள்ளை ராமசாமி மூப்பனார் மூலமாக கோவிலைப் புதுப்பிக்க ஐயாயிரம் செலவழித்தார். 

எங்கள் ஊருக்கு நீங்கள் வர வேண்டும்.  கடற்கரைப் பக்கம் சென்று குச்சிக் காலுடன் நெடிது வளர்ந்து பழுப்பும் பச்சையுமாய்விட்ட தங்களது கைகளை காற்று போனபடி அலைக்கும் அந்தத் தென்னை மரங்களையும் முடிவிலாது விரிந்து கிடக்கும் கடலையும் பார்த்துவிட்டால் எங்கள் ஊரை விட்டுப் போக உங்களுக்கு மனமே வராது.

சொக்கியின் வீடு வடமேற்கே சற்று விலகி நிற்கும் பெரிய வீடு.  பிள்ளையார் கோயிலின் இரு புறமும் உள்ள வீடுகளைத்தான் நாரண அய்யங்கார் அக்கிரகாரம் என்கிறார்கள்.  ஆனால் சோழவந்தான் சொர்ணம் சாஸ்திரிகளின் கனிஷ்ட புத்திரி அரவிந்தா என்னவோ அக்கிரஹாரத்தில் இல்லை.  சொக்கியின் பெரிய வீட்டில்தான் இருக்கிறாள்.  அதேபோல்தான் அறந்தாங்கி மங்களாவும், கேரள நாட்டு பிரமிளாவும் சொக்கியின் வீட்டில்தான் இருக்கிறார்கள்,  வருவோர் எல்லோருக்கும் சொக்கி மேல் ஒரு கண்தான்.  ஆனால் அவள் இடம்  கொடுத்தால்தானே. சொக்கி ஒரு குட்டி முதலாளி.  நாலு காசு சேர்த்து விட்டாள்,  என்றாலும் ஒன்றும் இல்லாததுபோல் நடித்துக் கொள்கிறாள்.

யார் எப்படிப் போனாலும் எது எப்படி இருந்தாலும் எங்கள் ஊருக்கு நீங்கள் நிச்சயம் வரவேண்டும்.  எங்கள் ஊரிலே நேரான மகடமைஸ்டு ரோடுகள் கிடையாது.  போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் யார் வம்புக்கும் வரமாட்டார்கள்.  இந்த ஊருக்கு வந்த யாருமே நஷ்டப்பட்டு போனதில்லை.   இருக்கிறார்கள் மூங்கிற்காட்டுக்குப் போனவர்கள். கொழும்பில் என்ன கொட்டிக் கிடக்கிறது.  இருநூறையும் முன்னூறையும் கொடுத்து அங்கே போகப் பார்க்க? அங்கேயுந்தான் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.சுகப்படுகிறார்கள்.  சாகிறார்கள்.

ஜமீன்தார் ஒருவர் தனது மனைவிகளில் ஒருத்தியை அடைத்து வைத்திருந்த பங்களா செட்டியாருக்கு சொந்தமாகியது.  அதற்கு சொக்கி என்ன வாடகை தருகிறாள் அவளுக்கும் செட்டியாருக்கும் என்ன சம்பந்தம் எல்லாமே புதிர்தான். 

பங்களாவிற்கு அப்பால் ஒரு ஒற்றை மாமரம் நிற்கிறது.  சொக்கி வீட்டுக் கிளிகள் அங்கே தான் ஓய்வு  நேரங்களில் ஏதாவது விளையாடிக் கொண்டிருக்கும்.

சற்று முன்னர் வந்த பஸ்ஸில் வந்த லெட்சுமி அம்மாள் தன் மகள் அரவிந்தாவுடன் அந்த மரத்தடியில்தான் பேசிக் கொண்டிருந்தாள். எழுந்து நடமாட முடியாத அப்பா, எலும்பும் தோலுமாய் பள்ளிக்கூடம் போகாமல் அசடாய் இருக்கும் தம்பி, ரெண்டாங்கெட்டானாக இருக்கும் தங்கை பற்றி அம்மா சொல்கிறாள்.  தொலைதூரத்தில் இருக்கும் அக்காவாவது  சீரும் செரப்புமா இருக்காள் என்று கூறி  இவள் நிலையை எண்ணி தாய் அழுகிறாள்,

சொக்கி வந்தாள்.  சின்னையன்  தன் மகளை இங்கே கூட்டிண்டு வந்ததைப் பற்றி லட்சுமி அம்மாள் வருத்தமுறுகிறாள்.   தன் கணவனை போலீஸ் சுட்டுக் கொன்ற பின் தன் நிலை மாறியதை சொக்கி சொன்னாள்.  லட்சுமி அம்மாள் சொக்கியிடமிருநது ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்கிறாள்.



“அரவிந்தா வா வூட்டுக்குப் போகலாம்,  மொகத்தெக் களுவிக்கிட்டு ரெடியாயிரு சின்னையன் வந்துட்டுப் போனான்” சொக்கி அழைத்தாள்.

“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்கோ நான் எப்படியும் மீண்டுடுவேன்”  அம்மாவிடம் அரவிந்தா விடைபெற்றாள். 

மன்னிக்கவும்,  இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் உங்களைச் சொக்கி வீட்டருகே அழைத்து வந்திருக்கவே மாட்டேன்.  இதை வைத்துக் கொண்டு  எங்கள் ஊரைப் பற்றி நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது.  இந்த மாதிரி அசிங்கங்கள் எந்த ஊரிலும் நடக்கலாம்.  ஆனால் பழுப்பும் பச்சையுமாய்விட்ட தங்களது கைகளை காற்று போனபடி அலைக்கும் அந்தத் தென்னை மரங்களையும் முடிவிலாது விரிந்து கிடக்கும் அந்தக்  கடலையும் பார்த்துவிட்டால் எங்கள் ஊரை விட்டுப் போக உங்களுக்கு மனமே வராது.

உண்மையிலேயே சொல்லுங்கள் கடலையும் வானையும் விடப் பெரிய அற்புதங்கள் உண்டா?

கண்ணதாசன், ஜூலை 1968

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *