The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamமுற்போக்கு இலக்கியத்துக்குத் தன் சிறுகதைகளின் வழி அழுத்தமான, வளமான, இயன்றவரை கலாபூர்வமான பங்களிப்பைச் செய்த படைப்பாளி ஜெயந்தன். எழுபதுகளில் ஊற்றெனப் பொங்கிப் பிரவகித்தவை அவரது எழுத்துக்கள். ’நினைக்கப்படும்’ என்கிற முழுநீள நாடகப்பிரதியின் வழி முதலில் கவனம் ஈர்த்த, ஜெயந்தனின் முதல் கதைத்தொகுப்பான ‘சம்மதங்கள்’ இடிமுழக்கமென வந்திறங்கிப் பேரதிர்வலைகளை உண்டாக்கியது. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருக்கென தனித்த இடம் எப்போதும் இருக்கும்.

சிற்றிதழ்களில் எழுதத்து வங்கிப் பின் வணிக இதழ்களில் எழுதப்போவது ஒரு வழமை எனில் ஜெயந்தனின் பயணம் தலைகீழானது. அவரது ‘நினைக்கப்படும்’ நாடகம் குமுதம் இதழில் ஓரங்க நாடகங்களாக வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. அவரது சிறுகதைகளும் ஆரம்பத்தில் குமுதம், விகடன், கல்கி எனப் பல வணிக இதழ்களிலேயே வெளியாகின. ’ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது’ போன்ற சில கதைகளும் நெடுங்கதைகளும் தாமரை, செம்மலர் இதழ்களில் 80களில் வெளியாகின. சில ஆண்டுகள் அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் (1981 முதல் 1986 வரை) செயல்பட்டுள்ளார். தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பள்ளித்தோழரான இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணப்பாறை. 1937 இல் பிறந்த இவர் 2010 பிப்ரவரி 7 ஆம் நாள் மணப்பாறையில் காலமானார். கால்நடை ஆய்வாளர் சங்கத்தில் ஈடுபாட்டுடன் பங்காற்றிய தொழிற்சங்க அனுபவமும் அவருக்குண்டு.

அவருடைய 58 சிறுகதைகள் இப்போது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன.

எல்லாக்கதைகளுக்கும் மேலாக என் மனதில் -அன்றும் இன்றும் -எப்போதும் மேலெழும்பி நிற்கும் கதை “அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்”. ஜெயந்தனின் எழுத்தின் அடையாளமான கதையாக இக்கதையையே சொல்லலாம். 70களின் பிற்பகுதியில் இக்கதையை முதன்முதலாக வாசித்தபோது ஏற்பட்ட அதே புத்துணர்ச்சியை இப்போது வாசிக்கையிலும் இக்கதை தருகிறது. (வம்சி வெளியிட்டுள்ள முழுத்தொகுப்பில் கதைகள் வெளியான ஆண்டும் இதழும் குறிப்பிடப்படவில்லை. அடுத்த பதிப்பில் சரி செய்வார்களாக.) இனி அந்தக் கதை..

”புதிய சரித்திரம்” என்கிற ஒரு கோபம் கொண்ட யுவதிகள் அமைப்பில் சிறிதுகாலம் இயங்கி விட்டு ஊருக்கு வந்திருந்த கஸ்தூரியின் அக்கா தனத்துக்கு அப்போதுதான் திருமணம் நடந்திருந்தது. அக்காவின் புதுக்குடும்பத்துடன் நாலுநாள் சுற்றுலாவுக்கு அவளும் வருகிறாள். கஸ்தூரியும் அக்கா தனமும் மட்டும் மாடி அறையில் குளித்துத் தயாராவதில் கதை துவங்குகிறது. கணவருக்கும் மாமியாருக்கும் விருப்பமான அழகுப் பதுமையாகத் தன்னை அக்கா தனம் மணிக்கணக்காகச் சிங்காரித்துக்கொள்ளும் காட்சி கஸ்தூரிக்குக் கோபத்தை உண்டாக்குகிறது.

“அவள் அழகாயிருப்பதைவிட வேறு எதற்காவது தான் லாயக்கு என்று அவள் முகத்தில் தெரிகின்றதா ? தாகூர் ஒருமுறை கேட்டாரே, கைதியே உனக்கு இந்த விலங்கைப்பூட்டியது யாரென்று; அதற்குப் பதில் வருமே, இந்தப் பொன்விலங்கைக் கவனமாகச் செய்தது நான்தானென்று;”

நான் உழைக்க லாயக்கில்லை. போகப் பொருளாக இருக்கத்தான் லாயக்கு என்று வேஷம் கட்டி வர்றதை விடப் பெரிய கெடுதல் பெண்ணுக்கு உண்டா?

தன்னை அழகுபடுத்திக் கொள்வதை எப்படி வேஷம் கட்டுவதாகச் சொல்லலாம் என அக்கா தனம் சீறுகிறாள்.

”ஏதோ ஒண்ணு ரெண்டுன்னா அழகுக்காகன்னு சொல்லலாம். இருபது முப்பது அயிட்டங்களைத் தூக்கி மேலே போத்திக்கிட்டா வேஷம்னு சொல்லாம என்னா சொல்றது?”

கஸ்தூரி வந்து அக்காள் பக்கத்தில் நின்று பட்டியலிடுகிறாள். கதையின் இந்தப் பத்தி 70களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

என்னான்னானு கேக்கிறியா? கேளு. பாதத்தில் மருதாணி, கால் வெரல்ல சதங்க மெட்டி, காலுக்குக் கொலுசு, பட்டுச்சேல, ஒரிஜினல் எப்படியிருந்தாலும் இலக்கணப்படி இருக்கறதா காட்ற பிரா. அது மேல அது மேல டெய்லர் கைத்திறமைக் காட்ற டிரான்ஸ்பேரன்ட் ஜாக்கெட், கையில வளையல், மோதிரம் நெயில் பாலிஷ், கழுத்துல ரெட்டவடம் பத்துவடம் சங்கிலி, நெக்லஸ், காதுல மூக்குல தங்கம் வைரம், கண்ணுக்கு மை, முகத்துக்குக் கிரீம், கலர் கலரான பவுடர்கள், தலையில பொய்முடி, சாயம், வளையம், அதுல நவநவமான அலங்காரம், அதுக்கு மேல ஒரு கூடப் பூவு, இதெயெல்லாம் வேஷம்னு ஏன் சொல்லக்கூடாது? இதகள வெறும் செவத்துல ஆணி அடிச்சு மாட்டினாலும் கண்ணப் பறிக்கத்தான் செய்யும், இல்லியா?”

கீழே ஆண்கள் சீட்டாடிக்கொண்டிருக்க மாமியாரும் பிற பெண்களும் அடுப்புக்கூட்டிச் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். கஸ்தூரி அதைக் கேள்விக்குள்ளாக்குகிறாள். அக்கா தனத்தின் மாப்பிள்ளையிடம் வாதம் செய்கிறாள். பெற்ற தாய் இடுப்பு வலிக்க நின்று சமைக்கும்போது அதைப்பற்றிச் சட்டை செய்யாமல் வெத்திலை போட்டுக்கொண்டு சீட்டாடிக்கொண்டிருக்கும் ஆணாக நீ இருக்கிறாயே என்று குத்திக்காட்டுகிறாள். வாதம் எதிர்வாதம் எனச் சூடாகிறது சூழல். அப்போது தனத்தின் நாத்தனார் குழந்தை தனத்தின் கணவன் மடியில் இருந்தவன் அவன் சட்டையில் ஆய் போய் விடுகிறான். அவன் அய்யே என்று சட்டையைக் கழற்றித் தனத்திடம் கொடுத்துத் துவைக்கச் சொல்கிறான். கஸ்தூரி “ஏன் நீங்க துவைக்கலாமே? நீ துவைக்காதே அக்கா” என்கிறாள். தனம் விளையாட்டுப்போக்கில் ஆமா நான் மாட்டேன் என்று அந்தச் சட்டையை ஒரு செடியின் மீது பொய்யான அசூயை காட்டித் தூக்கி லேசாகப் போடுகிறாள். கணவன் ஆங்காரமெடுத்த கோபக்குரலில் எடுடி அதை என்று கத்துகிறான். தனம் முடியாது என்கிறாள். அவனுடைய அம்மா அட விடுடா நான் துவைக்கிறேன் என்று எடுக்கப் போகிறாள். நீங்க சும்மாருங்கம்மா.. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாக்கணும் என்று கத்துகிறான். தனம் நான் துவைக்க மாட்டேன் என்று மீண்டும் சொல்லுகிறாள். அவள் இதை வழக்கமான ஒரு விளையாட்டுச் சண்டை என்றுதான் வெள்ளந்தியாக நினைக்கிறாள். யாரும் எதிர்பார்க்காதபடி அவன் தனத்தைக் கன்னத்தில் அறைகிறான்.

கஸ்தூரி படபடப்போடு அக்காளோடு சேர்ந்து ஒரு போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். ஆனால் நடந்தது வேறு. தனம் சிறிது நேரத்தில் அந்தச்சட்டையை எடுத்து அலச ஆரம்பிக்கிறாள்.

கதையின் கடைசி வரிதான் கதையின் தலைப்புக்கு உயிரூட்டுகிறது:

“அவள் தங்கை கஸ்தூரி, மடித்த உதடுகளோடு கண்களில் அனலும் புனலும் கொப்பளிக்க இதைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அங்கிருந்தவர்கள் யாரும் அதைக் கவனிக்கவில்லை”

இப்போது நடைபெறும் அளவுக்கு பெண் நிலை குறித்த சமூக உரையாடல்களெல்லாம் 70களில் துவக்க நிலையில்தான் இருந்தன. அன்றைக்கே எழுதப்பட்ட ஜெயந்தனின் இக்கதை எழுந்து வரவிருக்கும் பெண்விடுதலைக் குரலை முன்னுணர்ந்த ஓர் கலை வெளிப்பாடாக மதிக்கப்பட்டது. இதை ஒரு பிரச்சாரமாகச் செய்யாமல் குடும்ப வாழ்க்கைச் சித்திரத்தின் பகுதியாக கச்சிதமாகப் பொருத்திப் பேசியிருப்பதுதான் கதையின் வெற்றி. வாசிக்கும்போதே வாசக மனதில் கோபம் கனன்றெழும் வண்ணம் எழுதப்பட்ட கதை. இதுபோன்ற கதைகளைக் குடும்பங்களில் வாசித்து உரையாடல்கள் நடத்த வேண்டும். சமூக வெளியில் எழும் கேள்விகளோ உரையாடல்களோ குடும்பங்களுக்குள் நுழைவதே இல்லை. பிறகெப்படி மாற்றங்கள் சாத்தியமாகும்? கதைகள் வழி அச்சுவரை உடைக்கலாம் என்னும் நம்பிக்கையை இக்கதை தருகிது.

இந்தக் கோபமும் அறச்சீற்றமும் தான் ஜெயந்தனின் அத்தனை கதைகளின் அடித்தளமாக இருப்பதைக் காண்கிறோம்.

சமூகப்பிரச்னைகளைக் கையிலெடுத்த கதைகள்

ஏதேனும் ஒரு சமூக நிகழ்வை, பிரச்னையை, சமூகத்தின் உளவியலை எடுத்துப் பேசாத கதையே கிடையாது அவரிடம். எனினும் சில கதைகள் குறிப்பாகச் சில பிரச்சனைகளை எடுத்துக் கதைக்குள் விவாதிக்கின்றன. சமகால வாழ்க்கைப் பிரச்சனைகளை, அதன் அரசியலை எழுதுவதெல்லாம் இலக்கியமே கிடையாது, அது வெற்றுப் பிரச்சாரம்  என்கிற குரல் நவீன இலக்கிய உலகில் ஓங்கி உரத்துப் பெரும் பிரச்சாரமாக ஒலித்த காலத்தில் ஜெயந்தன் இக்கதைகளை எழுதினார் என்பது குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது, பகல் உறவு, நான்காவது பரிமாணம், சம்மதங்கள், ஊமை ரணங்கள், அரும்புகளை.., தீண்டாமை 79, எங்கும் மனிதனே, இண்டர்வியூ, பஸ், மனச்சாய்வு, மரம், பைத்தியம் போன்ற கதைகளை அவ்வகைக்கதைகள் எனலாம்.

கி. ராஜநாராயணன் அவர்கள் வாசித்துக் கொண்டாடிய கதை ’ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது’. கதையை படித்ததும் நிலை கொள்ளாத அனுபவம் கி.ரா.வுக்கு ஏற்படுகிறது. இந்தக் கதையைப் பற்றி, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது நண்பர்களுக்கு எழுதுகிறார். ஜெயந்தன் என்ற பெயரில் அடுத்த கதை எப்போது வரும் எனக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டாராம்..

ஒற்றை அறையும் ஒரு சிறிய சமையல் கட்டும் கொண்ட வாடகை வீட்டில் நகரத்தில் குடி இருக்கும் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, அக்கா, அக்கா குழந்தைகள் இரண்டு,யுவதியான தங்கை பார்வதி, தம்பி கோபால், கடைசித்தம்பி கணேசன், இத்தனை பேருக்குமான எல்லாப் புழக்கத்துக்கும் படுக்கைக்கும் அந்த ஓர் அறைதான். இவர்கள் கல்லுப்பட்டியில் ரொம்ப காலம் இருந்தபோது பழகிய குடும்பத்துப் பையன் ‘காக்கா’ என்று செல்லப்பெயரால் அழைக்கப்படும் சந்தானம் ஒருநாள் இந்த வீட்டுக்கு அதிதியாக ஊரிலிருந்து வந்து சேர்கிறான். ஓரிரவுதான் தங்குகிறான். அவனை எங்கே படுக்க வைப்பது. வயசுக்கு வந்த ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு அந்த ஒரே அறையில் கண்ணியமான இடைவெளியில் எப்படிப் படுக்க வைப்பது? அதிலும் பார்வதிக்குச் சின்ன வயசிலிருந்து உறங்கும்போது கொஞ்சம் அசடு. குடும்பமே தத்தளிக்கிறது. கோபால் சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்துப்போகிறான். வந்து சாப்பிட்டுப் படுக்கும் அந்த இரவின் திக் திக் தான் கதை.

காலையில், எந்த அசம்பாவிதமும் இன்றி இரவு கழிந்த நிம்மதியில், அம்மா குட்டித்தம்பி கணேசனைக் கட்டிக்கொண்டு ”கணேசன் தலையெடுத்துத்தான் பெரிய வீடாகக்கட்டுவான்” என்று கனவு விரிப்பதாகக் கதை முடியும். அஞ்சலக ஊழியரான ஒரு தகப்பனால் இத்தனை பிள்ளைகளை வளர்த்தெடுக்கத்தான் முடிந்தது. சொந்த வீடு கட்டுவது அவருடைய அம்மாவின் கனவாக இருந்தது ஒருகாலத்தில். இன்று அவரது மனைவியின் கனவாகத் தொடர்கிறது. ஒரு கௌரவமான வாழ்க்கைக்கான ஊதியத்தைத் தன் ஊழியர்களுக்குக் கூட வழங்கத் துப்பில்லாத அரசாகத்தான் ஒன்றிய அரசு இன்றுவரை இருக்கிறது. கடன் வலையில் சிக்க வைக்கும் பன்னாட்டு வங்கிகள் வந்த பிறகு இன்று சொந்த வீடும் கடன் பத்திரமும் இவர்களுக்குக் கை வந்து சேர்ந்துள்ளது. இதையெல்லாம் மீட்டும் ஒரு உணர்ச்சிகரமான கதையாகச் சொல்ல ஜெயந்தனால் முடிந்திருக்கிறது. இளம் முற்போக்குப் படைப்பாளிகள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இக்கதையில். பிரச்னையைச் சொல்வதற்குத் தோதாக கதாபாத்திரங்கள் வார்க்கப்படாமல் அவர்கள் அவரவர் இயல்பில் கதைக்குள் வாழ்கிறார்கள்.தன்போக்கில் கதை முடிகிறது. ஆண்-பெண் உறவின் எல்லைகள் குறித்த சமூக உளவியல், அக்காலத்திய பண்பாட்டு அடையாளங்கள், காலப்பதிவுகள் எனப் பலவும் கதைக்குள் இழைகளாகப் பின்னி இருப்பது கூடுதல் அழகு.

இன்றைக்கும் அழிக்க முடியாத சமூக வியாதியாக நம்மைப் பீடித்திருக்கும் வரதட்சிணை பற்றிய கதை ‘ஊமை ரணங்கள்’. நேரடியாக எந்த விமர்சனத்தையும் கதைக்குள் கொண்டுவந்துவிடாமல் அது உண்டாக்கும் உளவியல் அழுத்தத்தை வாசகனுக்குக் கடத்திவிடும் மாயத்தை இக்கதை செய்துவிடுகிறது.

சரியான திட்டமில்லாமல், நல்ல வரன் வருகிறது என்பதற்காக மகள் மல்லிகாவின் கல்யாணத்தேதியை முதலில் நிச்சயித்துவிட்டுப் பிறகு பணத்துக்கு நாயோட்டம் ஓடிய முத்துவேல், எல்லா அவமானங்களும் பட்டு எங்கெல்லாம் கடன் கிடைக்குமோ அங்கெல்லாம் வாங்கித் திருமணத்தை முடிக்கிறார். இப்போது  தலைத் தீபாவளி வந்து விட்டது. செலவுக்கு என்ன செய்வது என்று பிதுங்கி நிற்பதுதான் கதை. என்கிட்டே கேட்டிருக்கலாமே என்று சொன்ன நண்பரும் கை விரித்துவிட்ட பிறகு, அவருடைய மனைவி சொன்ன ஆலோசனை,

”ஒண்ணு வேண்ணா செய்வோங்க”

“என்னா?”

“மொத ரெண்டு மாசம் மல்லிகா நம்ம வீட்ல இருந்துகிட்டுதான வேலைக்கிப் போனா?”

”ஆமா”

”அப்பவே சம்பளம் வந்திருந்தா அத நாமதான வாங்கியிருப்போம்?”

”ஆமா”

“அப்பத்தான் ஜீ.ஓ.வுல என்னமோ தகராறு. அது இதுன்னு சொல்லி சம்பளத்த இழுக்கப் போட்டானுக. போன வாரம்தான் எல்லாத்தையும் பில் போட்டு ஆறு மாதச் சமபளத்தையும் ஒட்டுக்கா குடுத்திருப்பானுக போலிருக்கு”

“ம்”

“அதுல, அந்த ரெண்டு மாச சம்பளத்த நாம கேட்டா என்னா?”

“கேக்கலாம்னா சொல்றே?”

அதைப்போய் மகளிடம் கேட்கும் பொறுப்பை முத்துவேல் தலையில் கட்டிவிடுகிறார் மனைவி. மகள் ஊருக்குப் போய் இறங்கியபோது இன்னும் மகளிடம் சொல்லும் தீர்மானமான வாசகங்களை உருவாக்கிக் கொள்ளாமலேதான் இறங்கினார்.

நெடுநேரம் மகளிடம் பல பேச்சுப் பேசிக் கடைசியில் இதைச் சொல்லியே விடுகிறார். ஆனால் மகள் ஒத்த வரியில் அதை முடித்து விடுகிறாள்,

“சீச்சி, அதெல்லாம் நல்லா இருக்காதுங்கப்பா. இந்த நானூறு ரூவா நொள்ளக் காச கணக்குப்பண்ணி கேக்க வந்துட்டாங்கன்னு நெனப்பாங்க”என்றாள். பின்பு குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள் ”நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அத நமக்குள்ளேயே வச்சுக்கணும். பாரு, இவ அப்பன் வீட்ல தலைத் தீபாவளிக்கி செய்றதுக்கே வக்கத்துப் போச்சுனு அவங்க நாலு பேத்துக்கிட்ட சொல்றமாதிரி வச்சுக்கக்கூடாது”

அவருக்குப் புரிந்தது. அவள் கௌரவம் அவளுக்கு.

கதையின் கடைசிப்பத்தி மனதை உருக்குவதான வரிகளுடன் முடியும்.

“வீட்டை விட்டு வெளியே வந்ததும் நெஞ்சில் ஏதோ புகைவது போலவும் லேசாக நெஞ்சை அடைப்பது போலவும் ஓர் உணர்வு. வெளியே வானம் இருண்டிருக்கிறதா அல்லது தனது கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றனவா என்ற லேசான சந்தேகம். இருந்தாலும் பிடி கொடுத்து விடக்கூடாது என்ற உள்ளார்ந்த வீம்பில் சமாளித்துக்கொண்டு நடந்தார்.”

அமரர் கு. அழகிரிசாமியின் “தேவ ஜீவனம்” கதைதான் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. வாழப்போன பெண் குழந்தைகள் கணவன் வீட்டில் படும் துன்பங்களைப் பேசிய அளவுக்கு நமது இலக்கியங்கள் பெண்ணைப்பெற்றவர் பாடுகளைப் பேசுவதில்லை. பெற்றவர்களின் கண்ணீர்க் கடலில்தான் மகள்களின் திருமணக்கப்பல்கள் மிதந்து செல்கின்றன. எண்ணற்ற போராட்டங்களைப் பெண்ணிய இயக்கங்களும், சமூக இயக்கங்களும் இந்த மண்ணில் நடத்தியிருந்தாலும் இந்த நிலைமையில் இன்றைக்கும் மாற்றமில்லை. ஸ்டவ் வெடித்து மருமகள்கள் இறக்கும் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

வெளியில் சொல்ல முடியாத (சொன்னா சிரிப்பாங்க.. மகள் சம்பளத்தைக் கேக்கப் போயிருக்காம் பாரு..என்று) மன நெருக்கடியை இத்தனை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்ட ஜெயந்தனால் முடிந்திருக்கிறது. திருமணங்கள் இரு மனங்களின் இணைவாக, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு முக்கியமான திருப்பமாக நம் சமூகத்தில் என்றைக்கு மாறப்போகிறது என்கிற ஏக்கத்தை இக்கதை வாசக மனங்களில் ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சமூகப்பிரச்னையை, தனிமனித உளவியல் நெருக்கடியாக முன்வைத்து, உணரச் செய்யும் இந்த உத்தியை ஜெயந்தனின் பல கதைகளில் நம்மால் பார்க்க முடியும்.

சாதி என்கிற இந்தியாவுக்கேயான-இந்து மதத்துக்கேயான- பெருவியாதி மீதான கடுமையான விமர்சனத்தை பல கதைகளில் எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். தீண்டாமை 79, பஸ், மனச்சாய்வு, எங்கும் மனிதனே போன்ற கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

ஜெயந்தன் கதைகளின் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், ஒவ்வொரு கதைக்குள்ளும் எடுத்துக்கொண்ட பொருள் குறித்த ஆழமான, அறிவார்ந்த விசாரணையும் விவாதமும் நடத்தப்பெறுவதுதான். அவர் கதைகள் எழுதுவதன் நோக்கமே அதுதானோ என்று தோன்றுமளவுக்குக் கூர்மையான சமூக விசாரணை இருக்கும். இந்தச் சாதி குறித்த எல்லாக்கதைகளுமே அத்தகைய விசாரிப்புகளைக் கொண்டுள்ளன. முன்னர் ஜெயகாந்தன் தன் நாவல்களில் நீண்ட விவாதங்களை நடத்துவதுண்டு. அதுபோலச் சிறுகதைக்குள் அறிவார்ந்த விவாதங்களை ஜெயந்தன் முன்னெடுத்தார்.

‘மனச்சாய்வு’ கதையில் இளம் டாக்டர்களான ராஜசேகரும், வள்ளியம்மையும் காதல் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ராஜசேகரின் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் சாதி. அப்பா நாகசுந்தரத்தின் பால்ய நண்பரான சிதம்பரநாதனைச் சந்தித்து அப்பாவிடம் பேசி ஒப்புதல் பெற்றுத்தர வேண்டுகிறார்கள் இருவரும்.

அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டார்: ”கோவிச்சுக்காதே அம்மா. இவன் அப்பாவோட பேச வேண்டிய ஒரு புள்ளி விபரத்துக்காக தேவப்படுது.. உங்க ஜாதிப் பெயர் என்னா?”

அந்தப்பெண் பட்டென்று அழுத்தம் திருத்தமாக, பொட்டில் அடித்த மாதிரி சொன்னாள், ”பறையர்”.

ஒரு கணம் திகைத்தாலும் மறுகணம் சபாஷ் என்றது அவரது உள்ளம். இது ஆண்மை.”

ஒரு டாக்டர் என்கிற இடத்துக்குக் கல்வியால் உயர்ந்துவிட்ட அப்பெண் மற்றவர்களைபோலத் தயங்கிப் பேசாமல், பொட்டில் அடித்தமாதிரிச் சொல்கிறாள். அதற்கு அர்த்தம் இவள் ஜாதியை அங்கீகரிக்கிறாள் என்பதல்ல, ‘வரலாற்றில் நீங்கள் எங்களுக்குக் கொடுத்த ஸ்தானத்தை நாங்கள் மறக்கவில்லை’ என்பதையே அப்படி உட்கோபம் கொப்பளிக்கச் சொல்கிறாள். இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை எங்கள் கோபாக்கினி தணிவதாய் இல்லையென்று சொல்கிறாள். இது அந்தக் கோபத்தின் சொல் வடிவம் – அதன் சவாலும் கூட.”

இந்த வரிகளில் கொஞ்சம் ஜெயந்தன் மைக் பிடித்துவிட்டார்தான். என்றாலும் 70களில் இவ்வசனங்கள் புதிதுதான்.

ராஜசேகரனின் அப்பா நாகசுந்தரம் இளமைக்காலத்தில் ஒரு கோபம் கொண்ட இளைஞராக சாதியத்துக்கு எதிரான ஆவேசம் மிக்கவராக இருந்தவர்தான். அதனால் தான் சிதம்பரநாதனுக்கு அதிர்ச்சி.

ஆனால் சிதம்பரநாதன் போய் அப்பாவுடன் பேசுவதற்கு முன்பாகவே வீட்டில் அப்பாவுக்கும் ராஜசேகரனுக்கும் கடுமையான விவாதம் நடந்துவிடுகிறது. நாகசுந்தரத்துக்கு சாதி ஒரு பிரச்னை இல்லை என்று கூறுகிறார். கலாச்சாரம் தான் பிரச்னை என்கிறார். ”கலப்புத் திருமணம் தாராளமாக நடக்கட்டும். ஆனா அது மொதல்ல ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்கற ஜாதிகளுக்குள்ள நடக்கட்டும்”என்கிறார். அப்பா சுற்றி வளைத்துச் சொல்ல வருவது தாழ்த்தப்பட்ட சாதிகள் ஒரு கலாச்சார வளையம். மிகவும் பிற்பட்ட சாதிகள் ஒரு கலாச்சார வளையம். பிற்பட்ட சாதிகள் ஒரு கலாச்சார எல்லை. உயர்த்திக்கொண்ட சாதிகள் ஒரு கலாச்சார எல்லை. இவர்கள் முதலில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்யட்டும். அப்புறமா கலாச்சார எல்லைகள் தாண்டிய சாதிகளுக்குள் நடக்கட்டும் என்கிறார்.

பையன் பார்த்திருக்கும் பெண் பறையர் என்பதுதான் உண்மையான பிரச்னை. அதை மூடி மறைத்துப் பூசி மெழுகுகிறார். பையன் சொல்கிறான்: கலாச்சாரம்தான் பிரச்னைன்னு சொன்னா பிரச்னை ரொம்ப சுலபமா தீர்ந்து போகுதுங்க அப்பா. கலாச்சாரத்தில் அவங்க நம்மளவிட மேம்பட்டவங்க அப்ப. அவங்க தாத்தாவே  ஸ்கூல் ஹெட்மாஸ்டர். அப்பா தாசில்தார். அண்ணன் ஆர்மியிலே கேப்டனா இருக்காரு. அக்காவும் ஒரு டாக்டர்தான். அமெரிக்காவுல இருக்காங்க. அவங்க யாரும் வந்து நம்ம வீட்டு சோபாவுல உக்காந்துகிட்டு வெத்தில எச்சிய எங்க துப்பறதுன்னு முழிக்க மாட்டாங்க அப்பா.

நாகசுந்தரம் விதிர்விதிர்த்துப் போனார். முகம் வெளுத்துவிட்டது.”  என்று மேலும் கதையை வளர்த்துச்செல்கிறார் ஜெயந்தன். இன்று 2021இல் இக்கதையை நாம் வாசிக்கும்போது இந்த வாதம் சரியானதாகப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து டாக்டர், தாசில்தார், கலெக்டர் என்று இந்த வெளங்காத சமூகம் பெரிதெனக்கருதும் இடத்துக்கு வந்தால் காதலிக்கலாம் கல்யாணம் செய்துக்கலாம் என்கிற மாதிரி ஒரு தொனி இதில் இருக்கிறது. வெத்திலை எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தாலும் விவசாயக்கூலியாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் கலாச்சாரமாவது மண்ணாவது ஒரு ஆண்-ஒரு பெண் அவ்வளவுதான் என்று தான் வாதிட்டிருக்க வேண்டும்.

இதைப்போலவே வள்ளியம்மை தன்னைப் பறையர் எனப் பொட்டென்று சொன்னதை ‘ஆண்மை’ என்று ஜெயந்தன் பாராட்டுவதும் நெருடுகிறது. வேறொரு சொல்லைப் போட்டுப் பாராட்டியிருக்க வேண்டும். ஜெயந்தனை வாசிப்பவர்களுக்கு அவர் இத்தகைய பின்னோக்கிய பார்வை உடையவர் அல்ல என்பது நிச்சயமாகத்தெரியும். வாதம்-பிரதிவாதம் என்று வேகமாகப்போகும் போக்கில் ஏற்படுகின்ற சின்னச் சின்ன மொழிச்சறுக்கல்கள் என்றே கூற வேண்டும். அப்பாவை அவர் போக்கிலேயே போய் மடக்க வேண்டும் என்கிற மகனின் பதட்டத்தில் வந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்வோம். இதையும் கூட 70களில் வாசித்தபோது நமக்கு நெருடவில்லை. 2021இல்தான் நெருடுகிறது என்பதை நாமும் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

எப்படியானாலும் சாதி குறித்த முக்கியமான உரையாடலைக் கிளப்பி விட்ட கதை அது.

தீண்டாமை 79 கதையே ஒரு ஊர்ப்பஞ்சாயத்தை மையமாகக் கொண்டது. இரண்டு வழக்குகள் அங்கே விசாரிக்கபடுகின்றன. ஒன்று பெரிய சாதிக்காரரான சின்னயாவை சின்ன சாதிக்காரரான முத்தன் எதிர்த்துப் பேசிய வழக்கு. இன்னொன்று தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் டீக்கடையில் வந்து எல்லோருக்கும்போல எங்களுக்கும் வட்டா செட்ல குடுங்க என்று கேட்க கடையில் இருந்த ஆதிக்க சாதிக்காரர்கள் தகராறு செய்ய தீண்டாமை ஒழிப்பு ஸ்பெஷல் போலீசார் வர நீதிமன்றம் அபராதம் விதிக்க என்று போகிறது. கட்டைப் பஞ்சாயத்துக்கும் நீதிமன்றத்தீர்ப்புக்கும் ஒரே எதிர்வினைதான் இந்தச் சாதிய சமூகத்தில் என்பதைக் கதை சொல்கிறது. கதை என்று பார்த்தால் அவ்வளவுதான். ஆனால் கதைக்குள் நடக்கும் விவாதம்தான் கதை.

எங்கும் மனிதனே கதை சாதி உணர்வு ஆட்டிப்படைக்கும் மனிதர்களைப் பற்றி வெகு இயல்பான மொழியில் பேசும் கதை. நல்ல நண்பர்களாக, பிரியமான உறவுகளாக, மனிதர்களாக பழகிக்கொண்டிருக்கும் ஆட்கள் அவர்களின் சாதிக்காரன் ஒருவன் வந்து வம்பு செய்தபோது அடித்துவிட்டான் என்பதற்காக ஒரு நிமிடத்தில் பகை உறவுகளாக மாறிப்போகும் கேவலத்தை இதைவிட யதார்த்தமாகச் சொல்ல முடியாது. நம் சமூகத்தில் நல்ல மனிதர்களாக இருப்பவர்களையும் சாதி எப்படி மாற்றிவிடுகிறது?

ராஜப்பா என்கிற உயர்ந்த மனிதரின் வீழ்ச்சிதான் கதையின் மையச்சரடு.

“நான் அடிச்சத சொல்றீங்களே, நடந்தது என்னனு எங்கிட்டக் கேட்டிங்களா?”

“கேக்கணும்னு அவசியம் இல்ல, அவன் தப்பே செஞ்சிருப்பான். நியாயம் ஒம்ம பக்கமே இருக்கும். ஆனா அதுக்காக அவன அடிக்க ஒமக்கு உரிமையில்லை. எங்க ஊர்ல வந்து எங்க ஜாதிக்காரன் மேலே ஒருத்தன் கைய வச்சுட்டு திரும்பிப் போயிட முடியாது.”

அவர் எழுதி 50 ஆண்டுகள் கழிந்த பின்பு இப்போது படிக்கும் போதும் கதை சமகாலக்கதையாக நமக்குப் புதுசாக இருக்கிறது. எனில், நம் சமூகம் எத்தகைய கேடுகெட்ட சாக்கடைக்குள்ளேயே அப்படியே காலாதி காலமாக அமிழ்ந்து கிடக்கிறது என்கிற வருத்தமும் கையறு மனநிலையும் ஒண்ணுமே செய்ய முடியலியே என்கிற இயலாமை உணர்வும் முன் வந்து உறுத்துகிறது. தமிழ்ச்சமூக உளவியலின் அப்பட்டமான படப்பிடிப்பு இக்கதை.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

ஊருக்குள் பஸ் வந்தால் எல்லாச் சாதிக்காரனும் சமதையாக உட்காருகிறானே என்பதற்காக பஸ்ஸை வரவிடாமல் தடுக்கும் வக்கிர புத்தியுடைய ஊர்த்தலைவரின் மனநிலையில் சொல்லப்பட்ட கதை “பஸ்”. இந்த பஸ்ஸை வைத்துத்தான் எத்தனை ஊர்களில் எத்தனை கலவரங்கள் (தாழ்த்தப்பட்டவர் மீதான தாக்குதல்களைக் “கலவரம்” என்று மாற்றுப்பெயரில் குறிப்பிடுவது தமிழர் மரபு). அத்தனையையும் நம் நினவுக்குள்: மீண்டெழ வைக்கும் கதையாக இந்த ‘பஸ்’ அமைகிறது.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட, ஒரே அலுவலகத்தில் பணி புரியும் தம்பதிகளுக்கிடையில் இரவு நேரங்களில் ஏற்படும் கைகலப்பில் அவன் அடிக்க அடிக்க அவள் அவனுடைய சாதிப்பேரைச் சொல்லி ”….பயலே” என்று சொல்லால் தாக்குகிறாள். சாதி மறுத்துக் கல்யாணம் கட்டிக்கொண்டு ஒன்றாக வாழ்ந்தாலும் சாதியை அவள் கடக்கவில்லை என்பதுதான் கதை. கடந்துவிட்டதாக உலகத்துக்குக் காட்டிக்கொண்டாலும், காதலையும் தாண்டி அந்தக் கிருமி நெஞ்சுக்கூட்டில் பத்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை வெகு நுட்பமாகவும் அனாயசமாகவும் தூக்கிப் போடுகிற கதை. சாதியின் எண்ணற்ற முகங்களில் இது ஒரு முகம் என்று காட்டுகிறார் ஜெயந்தன். சாதியின் வேர்களை இத்தனை துல்லியமாகப் புரிந்துகொண்டு எழுத்தில் கொண்டு வந்த இன்னொரு தலித் அல்லாத எழுத்தாளரைக் காண முடியாது.

குழந்தைத் தொழிலாளி ஒருவனை முன் வைத்து முதலாளி-தொழிலாளி உறவைக் கச்சிதமாகச் சித்தரிக்கும் கதை “அரும்புகளை…” ஒரு லாட்ஜில் ’ரூம் பாய்’ என்கிற உத்தியோகத்தில் இந்த சமூகம் நியமித்த பையன் பரணி. வெள்ளை மனதுடன் எல்லோருக்கும் ஓடி ஓடி சேவகம் செய்யும் அவனை பெண்களை வாடிக்கையாளர்களுக்கு அழைத்துக்கொடுக்கும் பணியாளாக மாற்றிவிடுகிறார்கள். அவனுக்கு அதில் கூடுதலாகக் காசும் கிடைக்கிறது. ஆகவே வேறு வேலைக்குப் போகவும் விரும்பாதவனாக அவன் மாறிப்போகிறான்.”ஓர் ஆத்ம கொலை நடந்துவிட்டது. அதைக்கொன்றுவிட்டார்கள். கக்கூஸ் கழுவுவதற்குக் கூசிய ஒரு பிஞ்சு மனத்தை ஒன்றிரண்டு காசுகளைக் காட்டி அவர்கள் மனமலக் கூடைகளையே கூசாமல் தலையில் சுமந்து போகப் பழக்கி விட்டு விட்டார்கள்”என்று ஜெயந்தன் கதையில் குமுறுகிறார். 

இக்கதையின் போக்கில் இன்னொரு முக்கியமான பொருள் குறித்தும் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஜெயந்தன். அந்த லாட்ஜில் கழிப்பறை சுத்தம் செய்கிற துப்பரவுத் தொழிலாளி முனியம்மா. (இந்த இடத்தில் ஆதவன் தீட்சண்யாவின் ‘தர்க்கமற்ற கதைகள்’ நினைவுக்கு வருகிறது. துப்புரவுத் தொழிலாளிகளுக்கு விஜயலட்சுமி, அங்கையர்க்கண்ணி, பங்கஜம் என்று உயர்சாதிப் பெயர்கள்(!) வைத்துப் பகடி செய்திருப்பார்) அந்த முனியம்மா எப்போதெல்லாம் கூலி உயர்வு கேட்கிறாரோ அப்போதெல்லாம் இந்த லாட்ஜ் முதலாளி அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டு இந்தப்பையன் பரணியை நாலு நாளைக்குக்  கக்கூஸைக் கழுவச்சொல்வார். அது பரணிக்குப் பிடிக்காது.” நிச்சயமாக இது ஒரு கேவலமான தொழில் இல்லைதான். ஆனால் அதை இன்னமும் அப்படியே கருதிக்கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூகத்தால் வளர்க்கப்படுகின்ற ஒரு பாலகன் அப்படியொன்று தன் மேல் திணிக்கப்படுவதைக் கண்டு மிரண்டு போவதில் ஆச்சரியமொன்றுமில்லை” என்று எழுதிச்செல்லும் ஜெயந்தன் நாலுநாள் கழித்து முனியம்மா “சரி குடுத்தத கொடுங்க” என்று இறங்கி வந்த பிறகு எழுதுகிறார்: “அவள் மிஞ்சிப்போனால் எவ்வளவு கூடுதலாகக் கேட்டிருப்ப்பாள்? மாதம் இரண்டு ரூபாய் கேட்டிருப்பாள். இந்த போர்டிங் அண்ட் லாட்ஜிங்கின் ஒரு மாதத்திய வரவு-செலவு-லாபத்தில்  இந்த இரண்டு ரூபாய் ஒரு கடுகாகுமா? ஆனால் அவளது இந்த அற்பக் கோரிக்கையையும் எதிர்ப்பையும் இந்தச் சின்னத் தொழிலாளியைக் காட்டியே இந்த முதலாளி சமாளித்து விட்டானே!” முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத பகுதியாக வேலையில்லாப்பட்டாளம் இருப்பதன் அரசியலைத்தான் ஜெயந்தன் பேசியிருக்கிறார்- ஒரு சிறிய உதாரணத்தின் மூலம்- துருத்திக்கொண்டு சொல்லாமல் கதையின் போக்கிலேயே சொல்லிச் செல்கிறார். இதுபோலப் பல கதைகளில் ஊடுபயிரைப்போலச் சில அரசியல் விஷயங்களைச் சொல்லிச் செல்வது அவரது எழுத்தின் ஒரு பரிமாணம்.

அவருடைய புகழ்பெற்ற ‘துப்பாக்கி நாயக்கர்’ கதையின் பிரதான சாலை நாயக்கரின் அடாவடிகளைப் பேசிக்கொண்டு பயணிக்கும்போதே ஒரு கிளைப்பாதை பிரிந்து 70களின் கிராமப் பஞ்சாயத்து முறை இயங்கிய விதம் பற்றிக் காட்சிப்படுத்துகிறது.

”நாயக்கர் ஊரில் எந்தப் பதவியும் வகிப்பது கிடையாது. ஆனால் எல்லாப் பதவிகளின் கிங்மேக்கர் அவர்தான். அவர் பார்த்துவைத்தால் அது யாராயிருந்தாலும் சரிதான் ஜெயித்தவர்கள் தான். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் சுப்பையாவும். இவர் தலைவராக வந்ததே ஒரு வேடிக்கை.

இவருக்குமுன் சர்க்கரை நாயக்கர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். இந்தச் சுப்பன் என்கிற சுப்பையா அப்போது சாதாரண உறுப்பினர். இவர் சேரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பஞ்சாயத்துக் கூட்டங்களில் மற்ற உறுப்பினர்கள் தலைவர் மேஜைக்கு முன்னால் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும்போது இவர் ஓர் ஓரத்தில் ஒரு மூலையில் எப்போதும் ஏதோ சங்கடப்பட்டவர்போல ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். தலைவரையும் மற்றவர்களையும் இவர் சாமி சாமிஎன்று விளிக்கும்போது அவர்கள் இவரைடாபோட்டுத்தான் பேசுவார்கள்……………

…….சுப்பையாவுக்கு இவர்கள் முன்னால் உட்கார்ந்து கூட்டம் நடத்தும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் அதிகாரிகளின் முன்னாலும் யூனியன் கூட்டத்திலும் பிரமாதமாக உட்கார வாய்ப்புக்கிடைத்ததே போதுமானதாகப்பட்டு, அதைத் தக்க வைத்துக்கொள்ள நாயக்கர் பேச்சுக்குத் தாளங்களும் அவர் நீட்டிய இடங்களில் கையெழுத்தும் போட்டு வந்தார்.”

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் தலித் தலைமையை ஏற்றுக்கொள்ளாமல் அவ்வூர்களின் சாதிய சக்திகள் ஆடிய தப்பாட்டங்களை நாமும் பார்த்திருக்கிறோம். இன்னும் நாம் அறியாத லட்சோபலட்சம் இந்தியப் பஞ்சாயத்துகளின் கதையும் இப்படித்தானே.

வாசிப்பவர்களின் மனங்களில் குற்ற உணர்வை ஏற்படுத்தும் கதை ‘சம்மதங்கள்’ அப்பாவிப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் செய்யும் வீரநாச்சியார் சாம்ராஜ்யத்திலிருந்து  தப்பி ஓட நினைக்கும் எந்தப்பெண்ணையும் அவள் சும்மா விடுவதில்லை. சுற்றுப்பாட்டிகளிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் அவளுக்கு ‘ஆள்’ இருக்கிறது. அப்படித்தப்பி ஓடிய ஒரு பெண்ணை 10 கிலோமீட்டருக்குள் பிடித்துக் கொண்டு வந்து பூட்டி அடைத்து வைத்திருக்கிறார்கள். சக பெண் தோழியின் மனக்குரலாக ஜெயந்தன் எழுதும் ஒரு பத்திதான் கதையின் சவுக்குச் சொடுக்கு.

”மாலை ஐந்து மணி சுமாருக்கு தன் தோழியின் வேதனையினால் என்றுமில்லாத அளவுக்கு அதிர்ந்து போன வள்ளி, தன் குடிசைக்கு முன்னால் நின்று மெயின் ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரோட்டில் சைக்கிள்கள் போயின. ஒரு போலீஸ் லாரி கூட போனது. மனிதர்கள் போனார்கள்.

அவளுக்கு வேதனையும் ஆச்சரியமுமாக இருந்தது. இவ்வளவு பக்கத்திலேயே கூப்பிடும் தூரத்திலேயே இருந்தும், இந்த மனிதர்கள் எப்படித் தங்களுக்கு ஒரு சம்பந்தமுமில்லாது அவர்கள் பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்? ஒரு சமயம் அவளுக்கு, தான் ஒரு குரல் கொடுக்க வேண்டியது தான், பாக்கி எல்லோரும் ஓடி வந்து இந்தக் குடிசைகளுக்கெல்லாம் தீ வைத்துக் கொளுத்தித் தங்களுக்கு விடுதலை தந்து விடுவார்கள் என்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த கணமே அதெல்லாம் நடக்காது. நடப்பதாயிருந்தால் இந்த ராட்சசி இந்த ரோட்டோரத்தில் வந்து கூடாரம் அடித்துக்கொண்டு உள்ளே ஒருத்தியைப் போட்டு பூட்டியும் வைத்திருப்பாளா என்ற நிதர்ஸன உணர்வு தோன்றி முன்னதைக் கேலி செய்யும்.”

70களில் இக்கதையை வாசித்தது. கதையின் மற்ற பகுதிகள் மங்கலாகத்தான் நினைவில் நிற்கின்றன. ஆனால் இந்த ஒரு பத்தி மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக என் கூடவே வந்துகொண்டிருக்கிறது. எத்தனை அநீதிகளுக்கு நாம் மௌன சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எனில் நம் சம்மதங்களுடன் தானா இவையெல்லாம் நடக்கின்றன என்கிற குற்ற உணர்ச்சியும் இவ்வரிகளோடு கூடவே பயணிக்கிறது. ’சம்மதங்கள்’ ஜெயந்தனின் உன்னதப்படைப்புகளில் ஒன்று.

அரசியல் கதைகள் 

அவருடைய எல்லாக்கதைகளுமே அரசியல் கதைகள் தாம் என்றாலும் அலிபாபாவும் அறுநூறு கோடித் திருடர்களும், சர்வாதிகாரியும் சந்நியாசினியும், நிராயுதபாணியின் ஆயுதங்கள் போன்ற சில கதைகளைப்பற்றித் தனியாகப் பேச வேண்டும்.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam”நிராயுதபாணியின் ஆயுதங்கள்” வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கனமான கதை. இளம் கிறித்துவப் பெண் ஒருத்தி பாதிரியாரிடம் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்புக் கோர வந்துகொண்டே இருக்கிறாள். ஒவ்வொரு முறையும் ஒரு கொலை செய்துவிட்டு வந்து பாவமன்னிப்புக் கோருகிறாள். ஒவ்வொரு கொலையும் சமூக அநீதிக்கு எதிராக அவளே வழங்கிய தீர்ப்பாக அமைகிறது. அவளுடைய தோழி ஒருத்தியை வரதட்சிணை காரணமாக அவளுடைய கணவனும் மாமியாரும் சேர்ந்து விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார்கள். அதற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக கணவனையும் மாமியையும் இவளும் இவள் தோழிகள் ஐந்துபேரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொல்கிறார்கள். பாவமன்னிப்புக் கிடைக்குமா? பாதிரியாருக்குக் குழப்பமாக இருக்கிறது.

மீண்டும் சில நாள் கழித்து வருகிறாள். மீண்டும் ஒருவனைச் செருப்பால் அடித்தே கொலை செய்துவிட்டோம்.

”யாரை?”

”சிதம்பரம் பத்மினியைத் தெரியுமா ஃபாதர்?

இப்போது அந்தப் பெண்ணின் குரல் உணர்ச்சியை அள்ளிக்கொண்டு உயர்ந்தது. பாதிரியார் திடுக்கிட்டார். பாவமன்னிப்புக்காக மன்றாடும் குரல்களில் இவ்வளவு கனத்தை அந்த அறையின் சுவர்கள் எப்போதும் கேட்டிருக்காது.

அந்த போலீஸ் ஸ்டேஷனில் அவள் கணவனை அடித்தே கொன்று போட்டார்கள். பாவிகள் அவளைக் கூட்டாகக் கற்பழித்தார்கள். அப்படி அவள் மேல் அவமானத்தை அம்பாரமாக ஏற்றியும் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை. ஃபாதர், இதை உங்களிடம் சொல்ல நேர்ந்ததற்காக மன்னிக்க வேண்டும். அந்த ஸ்டேஷனின் ஏட்டு, ‘இவளுக்கு எவ்வளவு ஆழம்தான் இருக்குனு பாத்துடுங்கடானுசொல்லி அவள் பிறப்பு உறுப்பில் லத்திக் கம்பைச் சொருகிப் பார்த்தான். இப்படி ஒரு அராஜகத்தை மனித சரித்திரம் எப்போதாவது கண்டிருக்குமா ஃபாதர்? அந்த பத்மினி பின்னாட்களில் ஒரு முறை பேச நேர்ந்தபோது, தான் பட்ட துயரம், அவமானம், தனது ஆத்திரம் ஆங்காரம், தனது ஆத்மாவின் அலறல் எல்லாவற்றையும் ஒரே வாக்கியமாக்கிச் சொன்னாள், ‘அந்த ஏட்ட நான் ஒரு தடவ செருப்பால ஒரு அடி அடிக்கணும்.’ அந்தக் குரலை நீங்கள் கேட்டிருந்தால், ஒரு எழுத்தாளன் சொன்னது போல் உங்கள் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போயிருக்கும் ஃபாதர். ஆனால் அது அவளுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதால் நாங்கள் போனோம். ஒரு அடியல்ல. ஆளுக்கு நூறு அடி. மொத்தம் ஐநூறு செருப்படி. அவன் அப்படியே சுருண்டு விழுந்தவன் செத்தே போய்விட்டான் ஃபாதர்.” –

பாதிரியாருக்குபத்மினியால்பாதிக்கப்பட்டு உடல் லேசாக நடுங்குவது போலிருந்தது. இருந்தாலும் இவள், இவளும் இவளது தோழிகளுமாகச் சேர்ந்து செய்ததாகச் சொல்வது ஒரு பொதுப் புத்தி பார்வையிலேயே நம்பக்கூடியதாக இல்லையே. ஆனால் இவள் எதற்காக இப்படி இங்கே வந்து சொல்லி பாவமன்னிப்பும் கேட்கிறாள் என்பதும் தெரியவில்லை.

மூன்றாவது முறை  அவள் தொலைபேசியில் பாவமன்னிப்புக் கேட்கிறாள். தங்களை போலீஸ் தேடுவதால் நேரில் வர இயலவில்லை என்கிறாள். இம்முறை 30 பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டோம் என்கிறாள். யார் அவர்கள்? ஒரிஸ்ஸாவில் 1999 ஜனவரியில் வேனுடன் எரித்துக்கொல்லப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியாரும் அவரது இரு புதல்வர்களும் நினைவிருக்கிறதா? அவர்களைக் கொன்ற இந்துத்துவ வெறியன் தாரா சிங்கையும் அவனைச் சுற்றிப் பாதுகாத்து நின்ற 30 பேரையும்தான் சுட்டுக்கொன்றோம்..

நான்காவது முறை அவள் வந்தபோது இம்முறை தாங்கள் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டதாகச் சொல்கிறாள். அவ்வளவு பெரிய வேலையைச் செய்து முடிக்க கர்த்தரே தங்களுக்கு வல்லமையைத் தந்தார் என்றும் கூறுகிறாள். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்க என்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் அவை. ஆனால் அக்கிராமங்களின் ஆதிக்க சாதியார் தலித் தலைமையை ஏற்க மறுத்து 20 முறை தேர்தல் நடத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் கேலிக்கூத்தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையில் இக்கதை அப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதீத மனப்பிறழ்வும் அதன் விளைவாக அவள் கற்பனை செய்யும் ‘நியாயத்தை’ நிசமென நம்பிப் பாவமன்னிப்புக்கு வருவதும் பற்றிய கதைதான். இதை அப்பாதிரியார் புரிந்துகொண்டு அவளை அம்மனச்சிக்கலிலிருந்து விடுவிப்பது எப்படி என்று யோசிக்கிறார்.

ஒரு புதிய உத்தியில் சொல்லப்பட்ட நேரடி அரசியல் கதை இது. இவ்வளவு நேரடியாகவும் துணிச்சலாகவும் சமகால அரசியலை 70-80களில் யாரும் தம் கதைகளில் பேசியதில்லை. ஆனால், கொலைகளை நியாயப்படுத்தும் கதையாக இருக்கிறது. சட்டத்தை ஒவ்வொருவரும் கையில் எடுத்துக்கொள்வது என்றால் உங்களைப் போல நல்லவர்கள் மட்டுமல்ல, கெட்டவர்களும் கையில் எடுப்பார்கள் அல்லவா? என்று பாதிரியார் கதையில் கேட்கவும் செய்கிறார்கள்.

“இதென்ன கேள்வி ஃபாதர்? அவர்கள் ஏற்கனவே கையில் எடுத்துக்கொண்டு விட்டதால்தானே இப்போது நாங்கள் எடுக்கிறோம். இனிமேல் என்ன புதிதாக எடுப்பது?” என்று ஜெயந்தன் எதிர்க்கேள்வி போட்டு வாயடைக்கிறார். 2006க்கு முன்பாக ஜெயந்தன் இக்கதையை எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் 2006 இல் அந்தக் கிராமங்களில் தேர்தல் நடத்தப்பட்டு தலித் மக்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாக முழுக்காலமும் பொறுப்பில் இருந்துவிட்டார்கள். திரு.உதயச்சந்திரன் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இது நிகழ்த்தப்பட்டது. அரசு எந்திரம் சரியாகச் செயல்பட்டால் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்று நிரூபித்த கதை அது. ஜெயந்தன் வாழ்ந்த காலத்திலேயே அக்கிராமங்களில் இது நடந்தது. ஆனால் மற்ற பிரச்னைகள் அப்படியேதான் உள்ளன. வன்முறையைக் கலைஞன் சிபாரிசு செய்யலாமா எனில் செய்யலாம். நடைமுறை வாழ்வில் இது சாத்தியமில்லை என்பது தெரிந்தாலும் கலை நியாயம் (POETIC JUSTICE) என்று ஒன்று இருக்கிறதல்லவா?

அலிபாபாவும் 600 கோடித்திருடர்களும் கதை சமகாலத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் (ஜெயலலிதாவை நினைவூட்டும் வரிகளோடு) அவர்களின் பணப்பேராசை பற்றியெல்லாம்  பேசும் கதை. அலிபாபாவின் கதையையே சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டி ஊழலுக்கும் சொத்துக்குவிப்புக்கும் எதிராகக் கோபத்துடன் பேசிய கதை.

எதிரெதிர் வீட்டில் ஒரு சர்வாதிகாரப் போக்குடைய அண்ணனையும் ஜனநாயகவாதியான தங்கையையும் குடிவைத்து சமகால அரசியலை விவாதிக்கும் கதை ’சர்வாதிகாரியும் சந்நியாசினியும்’. ரவீந்திரநாத் தாகூர், வினோபாவே, இரட்டைமலை சீனிவாசன், வ.ரா., பி.இராமமூர்த்தி, முசோலினி, மனு போன்றவர்களெல்லாம் கதாபாத்திரங்களாகி தமிழ் ஈழம், இரட்டை வாக்குரிமை, காந்தியார் உண்ணாவிரதம் எனச் சமகால அரசியல் போக்குகளை விவாதிப்பதான ஒரு புதிய பாணியில் இக்கதையை எழுதியிருக்கிறார்.

இந்தக்கதைகளில் விவாதங்கள் நீண்டுகொண்டே போவது கதைகளின் கலை அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றன.

காதல்/காமம் குறித்த உரையாடல்கள்

எல்லாவற்றையும் விவாதத்துக்கு உட்படுத்தும் முனைப்பும் வேகமும் ஜெயந்தன் சிறுகதைகளின் இன்னொரு முக்கிய முகம். சமூக, அரசியல் பிரச்னைகளை விவாதிப்பதுபோலவே காதல், காமம் குறித்து அவர் விவாதித்த கதைகள் அதிகம். அளவி ரீதியாக இதுகுறித்து அவர் நிறையவே எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

வெள்ளம், வயது பதினாறு, எழுதியவனும் படித்தவளும், கவிமூலம், வானவில், வசந்தகாலம், நானும் என் மனக்குறளியும், டாக்கா மஸ்லின் போன்ற கதைகள் இத்தகையவை.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamகிராமத்தின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த கல்யாணமான பையனான சேகரனின் மன விகாரங்களை அலசும் கதை ‘வெள்ளம்’ அவனுடைய மனைவி ஆறு மாதத்துக்கு ஒருதரம் பிறந்த வீட்டுக்குப் போய் ஒரு மாதம் டேரா போட்டுவிட்டு வரும் வழக்கமுடையவள். அவனே நண்பர்களிடம் சொல்வான். ”வீட்ல கெளம்பியாச்சு, இன்னும் ஒரு மாசத்துக்கு ஊர்ல உள்ள கழுதையெல்லாம் ரதியா தெரியும்” ஒரு மழைநாளில் தோட்டத்தில் பம்பு செட்டுக்கு முன்னல் கட்டில் போட்டுப் படுத்திருக்கும் சேகரன் மழை வரவுல் எழுந்து பாதுகாப்பாய் ஒதுங்கி நிற்கிறான். அப்போது மழைக்கு ஒதுங்க அங்கு வரும் பெண்கள் ஒவ்வொருவர் மீதும் இவன் கொள்ளும் ஈர்ப்பு, வக்கிரமான எண்ணங்கள் மழை வடியும்போது அதுவும் வடிந்து போகிறது. அவ்வப்போது இவன் மீது கண்பார்வை வீசும் புது மணப்பெண், அவளை அழைத்துச் செல்லக் கணவன் குடையோடு வரவும் இவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல்,”போடா மண்டு, இப்ப நான் வேற ஒருத்தியாக்கும்” என்று சொல்வதுபோலக் கணவனோடு புறப்படுகிறாள்.

ஒரு அரைமணிநேர நிகழ்வுதான் கதை. பேசப்படுவதும் பேசப்படாததுமான இயற்கை உபாதையாகக் காமம் இங்கு விவாதத்துக்குள்ளாகிறது.

’கவிமூலம்’ கதை திருமணமாகாத ஓர் இளைஞனுக்கு எதிர்வீட்டு அண்ணனுக்கு மனைவியாக வரும் பேரழகியான ஒரு அண்ணியார் மீது ஏற்படும் ஈர்ப்பும் ‘என்னா கொழுந்தனாரே..” என்று அவளும் கொண்டாடுவதும் கதையின் நிகழ்வாகிறது.

“ஏன் கொழுந்தனாரே, இப்படி நாம பேசிக்கிறது தப்பா?”

“பேசறதே எப்பிடித் தப்பாப் போகும் அண்ணி”

“அப்பிடி சொல்லு. கொலைக்கிற நாயி கடிக்காது. சும்மா உம்முனு இருக்கறதுதான் எல்லா லோலாயம் பண்ணும்”

“இது இன்னொரு தப்பு அண்ணி. பேசறவங்கள சொல்றதுக்கு போட்டியா பேசாதவங்க மேலயும் சொல்றது. தப்பாப் போறதுன்னு முடிவு பண்ணிட்டவுங்க பேசிக்கிட்டும் தப்பு செய்யலாம். பேசாமயும் தப்பு செய்யலாம்?”

“என்னமோப்பா, நீ நல்ல பிள்ளேன்னு நெனச்சுத்தான் நான் ஒன்கிட்ட இவ்வளவு பேசுறேன்”

இப்படியான ஓர் உரையாடலும் கதைக்குள் போகிறது. அந்தப்பையனின் மனச்சாட்சியும் ”சரியில்லே” என்று இதிலிருந்து விடுபடணும் என்று போராடுகிறது. கடைசியில் இவன் மனசுக்குள் ஒரு கவிதை முளைப்பதோடு கதை முடிகிறது:

மனசுக்குப் புத்தியில்லை
ஓடி ஓடிப் போகிறது
அவள் பின்னால்
மூளை கூப்பிட கூப்பிட
இழுத்து வந்து
செருப்பால் அடித்துக் கட்டிப்
போடுவதே
இங்கு நித்திய தொழிலாச்சு”

ஆண் மனதின் வக்கிரமும் பெண் மனதின் மெல்லிய சலனமும் இக்கதைக்குள் விவாதமாகின்றன.

சீதாபதி என்கிற ஆண் பேய் மனுசனாக இருந்தபோது காதலித்த ரேகா என்கிற பெண் நினைப்பைப் பேயான பின்னாலும் விட முடியாமல் தவிக்கிறது. அப்போது அங்கே ரேகா பேயும் (சாலை விபத்தில் காலமாகி) வந்து சேர்கிறது. இரு பேய்களின் உரையாடல் வழியாக மனுச ஜென்மத்தில் நடந்தவை எல்லாம் அலசி ஆராயப்படுகின்றன.

தன்னைக் காதலித்து அப்பா, அண்ணனின் மிரட்டலுக்குப் பயந்து கைவிட்டுவிட்டுக் கொஞ்ச நாளிலேயே இன்னொருவனிடம் நீ ஈர்ப்புக் கொண்டது சரியா என்று சீதாபதி பேய் கேட்கிறது. அப்போது ரேகா பேய் தான் கொண்டிருந்தது காதலே அல்ல என்று மறுக்கிறது.

“காதல் என்றால் ஒருத்தி, தன்னையே அவனிடத்தில் கண்டு கொள்ள வேண்டும். அல்லது தான் மகத்தானதா நினைக்கிற ஒரு விஷயத்தை அவனிடத்தில் கண்டு நிலைகுத்திப் போக வேண்டும். அதன் காரணமாக தன்னை இழந்தாலும் சரி என்ற நிலைக்குத் தயாராகிவிட வேண்டும். அதுதான் காதல். எனக்கு அப்போது மகத்தான என்ற சொல்லுக்குரிய சரியான அர்த்தம்கூடத்தெரியாது.”

ஆனால் ஆண்களுடனான பார்வைப்பரிமாற்றங்கள், பேச்சுப்பழக்கம் இவை எனக்குப் பிடித்திருந்தன. அந்த சந்தோஷங்கள் எனக்கு Addict ஆகிவிட்டன. அது இல்லாமல் சுவாரஸ்யமே இல்லை. சீதாபதியின் இடத்துக்கு சுந்தரராமனோ, ஜோசப் பெர்னாண்டாவோ வர ஆரம்பித்தார்கள்”

ஏன் அது இல்லாமல் இருக்க முடியவில்லை?”

“அதுதான் என் வயது. 16 வயது. அந்த ரத்தம் கொதித்துக் கொப்பளிக்கக் கூடியது. பாய்ந்து ஓட வடிகால் தேடக்கூடியது. எனக்குக் கிடைத்த வடிகால் இதுவாக அமைந்தது”

காதலை ப்ளாட்டோனியக் காதலாக ஜெயந்தன் மாற்றுவதில்லை. உடல்சார்ந்த ஒன்றாக வைத்தே விவாதிப்பது முக்கியம். ”எழுதியவனும் படித்தவளும்” கதையில் பொருளாதார அடித்தளம் இல்லாமல் காதல் கொள்வதும் கல்யாணம் முடிப்பது சரியல்ல என்று விவாதித்திருப்பார்.

மனித மனதின் கீழ்மைகள்-மேன்மைகள்

வீடு, பாஷை, உப்பு விலையும் நியாயாதிபதிகளும், மாரம்மா, உபகாரிகள், புலம்பல், முனியசாமி போன்ற கதைகள் மனித மனதின் மேன்மையான குணங்களையும் கீழ்மைகளையும் பற்றிப் பேசுகின்றன.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamபாஷை என்கிற கதை மிக நுட்பமான குழந்தை மனதின் புரிதல் ஊடாகப் பயணிக்கிற கதை. இக்கதையை இயக்குநர் பாலுமகேந்திரா தன் கதை நேரம் தொடரின் ஒரு பாகமாக இயக்கியிருந்தார். வீட்டில் ஒரு மோதிரம் காணாமல் போச்சு. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வெளியிலிருந்து யாரெல்லாம் வீட்டுக்கு வந்து போனார்கள் என்று கணவனும் மனைவியும் மூளையைக் கசக்குகிறார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தை மட்டும்தான் வந்து போயிருக்கிறது. அடிக்கடி வந்து விளையாடிவிட்டுப் போகும் சின்னக்குழந்தை அது. அதை அழைத்து கணவனும் மனைவியும் விசாரிக்கிறார்கள்.

கௌரிக்கண்ணு ஓடியா..ஓடியா..
என்ன சாப்டிங்க..
தோச, இட்லி
எத்தினி தோச,எத்தினி இட்லி?
பதினஞ்சு இட்லி பதினஞ்சு தோச
அம்மாடி!பெரிய ஆளுதான்.பாபு?
அவனும் பதினஞ்சு இட்லி பதினஞ்சு தோசதான்.

………………..

கௌரி நீ நேத்து இங்க வெளையாட வந்தே இல்லே?
(உற்சாகமாக) ஆமா.
எப்ப வெளையாட வந்தே
தெரியலியே
மத்தியானம்தான..
(மீண்டும் உற்சாகமாக) ஆமா.
அப்ப இங்க மேஜை மேலே ஒரு மோதிரம் இருந்தது பாத்தியா?
ம்…?
(சிரிப்புடன்) ஹேய் பார்த்த இல்லே?என்னங்க அத்தான், கௌரி சமத்துக்குட்டி, பாத்திருப்பா. என்னா கௌரி?
ம்.ம்.பாத்தேன் ஆண்ட்டி
குட் குட் அத எடுத்துக்கூட பாத்தே இல்லே?
ஆமா
சரி அப்புறம் அத எங்க வச்சே?
வக்கலையே
வக்கலியா?பின்னே என்ன பாக்கட்டுல போட்டுக்கிட்டியா?(மீண்டும் சிரித்தபடி) அய். பாக்கட்லதானே போட்டுக்கிட்டே? நேத்துப் போட்டுட்டு வந்த கவுன்லே கூட பாக்கட் இருந்துச்சே.
ம். இருந்துதே.
அதுலதானே போட்டே?
ம்.
அயே அது ஒனக்கு எதுக்காம்? இப்ப அது எங்கே?
தெரியலியே.
தெரியலியா? அத யாருகிட்டயாவது கொடுத்தியா?
ம்
யாருகிட்டே கொடுத்தே?
ம்.. அம்மா கிட்டே.
(உற்சாகமாக)ம்  பாத்திங்களா அத்தான். கௌரி சமத்துப்பொண்ணுங்கறதனாலே யார்கிட்டேயும் கொடுக்காம அம்மாகிட்டே பத்திரமா கொடுத்திருக்கா.
ஆமா அங்கிள்.

அதன் பிறகு இதே பதில அவர்கள் வீட்டில் இவர்கள் போய் விசாரிக்கும்போதும் குழந்தை சொல்கிறாள். அவளுடைய அம்மாவோ என்னிடம் தரவில்லையே என்கிறார். சந்தேகமும் குரோதமும் பறிகொடுத்த பெண்ணுக்கு வருகிறது. உண்மையில் குழந்தை எடுத்துக் கொடுக்காவிட்டாலும் அதற்குரிய பணத்தைத் தான் தந்துவிடுவதாக குழந்தையின் தகப்பனார் காசை நீட்டுகிறார். இவர் வாங்க மறுத்து வந்து விடுகிறார்.

ஒரு சில நாள் கழிந்து அந்த மோதிரம் கிடைத்து விடுகிறது. ஆனால் இதற்குள் பக்கத்து வீட்டார் மனக்கஷ்டத்துடம் வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். காரணமில்லாமல் அவர்களைக் காயப்படுத்திவிட்ட் குற்ற உணர்வு இவர்களுக்கு மிச்சம்.

பெரியவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக மோதிரம் தொலைத்த ஆண்ட்டி பேசிய மொழிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததுதான் குழந்தையின் மனப்போக்கு. பாஷையாலேயே தன் வழிக்கு இழுக்கும் பெரியவர்களின் கீழ் மனநிலை துல்லியமாக வெளிப்படும் கதை. ஜெயந்தனின் மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamகுழந்தைகள் உளவியலைக் கச்சிதமாகப் புரிந்துகொள்ள  இக்கதை ஒரு முக்கியமான பங்களிப்பாக இருக்கிறது. ஜெயந்தன் கதைகளில் குழந்தைகள் நடமாட்டம் மிகக் குறைவுதான். இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால் இந்த ஒரு கதையில் குழந்தைகள் உலகத்துக்குள் புகுந்து பெரியவர்கள் எப்படி வளைக்கிறார்கள் அவர்களை என்பதை ஒரே ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் சொல்லிவிட்டார்.

ஒரு வீடு தன் கதையைச் சொல்லும் பாணியில் சொல்லப்பட்ட ‘வீடு’ கதை, எழுத்தாளன் குடியிருந்த அந்த வீட்டைப் புதுப்பித்து விரிவாக்கி ஒரு முதலாளி அவனுடைய வைப்பாட்டிக்காகக்  கொடுக்கிறான். அவனுடைய மேனேஜரின் மனைவிதான் அவள். அந்த மேனேஜரை வெளிவேலைகளுக்கு அனுப்பிவிட்டு முதலாளி இந்த வீட்டுக்கு வந்து அவளுடன் கொண்டாடும் இரவுகளை வீடு கொதிப்புடன் சொல்கிறது. இதெல்லாம் அந்த புருசன்காரனான மேனேஜருக்கும் தெரியும். அவன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் பொண்டாட்டியுடன் சண்டைதான். முதலாளியையும் அவளையும் கண்ணதுண்டமாக வெட்டி எறிவதைப்போல அடிக்கடி கனவு காண்பான். ஆனால் முதலாளி தூரத்தில் வந்தாலே வேட்டியை இறக்கி விட்டு வரவேற்கக் காத்திருப்பான் மரியாதையோடு. இவனெல்லாம் என்ன ஈனப்பிறவி என்று வீடு கொந்தளிக்கும். முதலாளி-மேனேஜர்-அவள் மூவருமே கீழ்மைகளில் காலூன்றி நின்று பொய்யாக வாழ்கிறவர்கள்.

ஊரில் நடத்தை சரியில்லாதவள் என்று பேர் வாங்கிய, வீட்டு வேலைகள் செய்யும்  மாரம்மா என்கிற பெண்ணின் கதை ‘மாரம்மா’. அவளுக்குத் திருமணம். மண்டபத்தில் நடக்கும் அத்திருமணக்காட்சியே கதைக்களம். தன் வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்க்கிற அவளது கதையை நமக்குச் சொல்பவர் பாலசேவிகாவாகப் பணியாற்றும் பெண்மணி.

மாரம்மாவை அவர் அறிமுகப்படுத்தும் விதம் அழகானது.

“நானும் முதலில் அப்படிப்பட்டவள் வேண்டாமென்றுதான் நினைத்தேன். எதற்கு,’விருதுபட்டிக்குப் போற சனியனை வீட்டு வரைக்கும் வந்துட்டுப் போ’என்று.ஆ னால் கடைசியில்  வேறு ஆள் கிடைக்காததாலும், கிடைத்த பிறகு நிறுத்திக்கொண்டால் போகிறது என்ற எண்ணத்திலும் அவளை வரச்சொன்னேன்.

“இவள் முதல் நாள் என் வீட்டிற்கு வரும்போதே, அப்போது எதற்காகவோ வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்துக் கொண்டே வந்தாள். வந்ததும் சம்பிரதாயமாக ஒன்றுமேயில்லாமல்வாளி எங்கக்கா இருக்கு?” என்றாள். இந்த மூன்று வார்த்தைகளிலேயே கொள்ளைக் களிப்பும் சிரிப்பும் அலையாடி நின்றன. அவள் நான் எதைச் சொன்னாலும் சிரித்தாள். ஏதாவது சிறு வேடிக்கைப் பேச்சுக்களுக் கெல்லாம் கூட ஏதோ நாணமும் வெட்கமும் ஆளைக் கீழே சாய்ப்பது போல் சிரித்தாள். இவளிடம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே மிகக் குறைவாகவே இருக்க வேண்டுமென்று தோன்றியது. இதை வைத்துப் பார்த்த போது, ஊரார் சொல்வது போல் இவளொருசெக்ஸ்குற்றவாளியாக இல்லாமல் இவளது இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆண்கள் உண்டாக்கிவிட்டசெக்ஸ் விக்டிம்ஆக இருக்கலாம் என்று பட்டது. இந்த ஆண்களை எனக்குத் தெரியாதா?

சரியான திடசித்தமுள்ள நானே வெளியே புறப்பட்டேன் என்றால், நான் நானாக வீடு திரும்புவதற்கு என்னென்ன ஆயுதங்களையும் கவசங்களையும் சுமந்து போக வேண்டியிருக்கிறது.”

மாரம்மாவின் திருமணத்துக்கு ஊரின் பெரிய ஆம்பிளைகள் எல்லோருமே வந்திருக்கிறார்கள். மாப்பிள்ளை ஒரு அப்பாவி என்பது பாத்தாலே தெரிகிறது. மாரம்மாவின் முகத்தில் ஏனோ ஒரு இறுக்கம். அது ஏன்? ஏன்? என்கிற கேள்வியுடனே கதை முடிகிறது. ஆண் மனதின் கீழ்மைகளை மாரம்மாவை முன் வைத்து இக்கதை விரித்துப்பேசுகிறது.

ஓர் அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக இருக்கும் முனியசாமி, தன் அதிகாரிக்காகவும் அவர் குடும்பத்தினருக்காகவும் செருப்பாகத் தேய்ந்து தன்னலமற்று உழைக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பற்ற அக்கறையையும் உழைப்பையும் அந்த அதிகாரி (தாசில்தார் குமரய்யா) எல்லோரிடமும் பேசிப்பேசி மாய்கிறார். ஆனால் மற்றவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது அவருக்கும் புரியவில்லை. கடைசியில் அவருக்கு வேறு ஊருக்கு மாறுதல் உத்தரவு வர, எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்புகிறார். அந்தக் காட்சியை ஜெயந்தன் விவரித்திருக்கும் பாங்கிலேயே அந்த ஊழியர் முனியசாமியின் இயக்கத்தின் அடிப்படை நமக்குப் புரிந்து விடுகிறது.

”நிலைப்படி வந்ததும் புதிய தாசில்தார் அங்கேயே நின்று கொண்டு குமரய்யாவின் கையைக் குலுக்கினார்.  “விஷ் யூ பெஸ்ட் ஆப் லக்!” “தாங்க்யூஇதற்குப் பிறகு புதியவர் உள்ளே போக, இவர்கள் வெளியே வரத் தொடங்கினார்கள். ஒரு பத்து விநாடி கழிந்திருக்கும். அப்போதுதான் அது நடந்தது.

உள்ளே சென்று நாற்காலியில் உட்கார்ந்த புதிய தாசில்தார் தற்செயலாக ஒரு பியூன் தேவைப்பட்டு மேஜை மணியை அடித்தார்.

எஜமான்‘ – இங்கே முனியசாமியின் வாயில் அனிச்சையாக எழுந்து ஆஜர் சொன்னது இந்தச் சொல். அப்புறம் ஓர் அரை விநாடி திகைப்பு. பின் அவர் இரு கை பொருட்களையும் அங்கேயே சட்டென வைத்துவிட்டு விரைந்து உள்ளே போய்விட்டார்.

இவர்கள் குண்டு விழுந்த மாதிரி திகைத்து நின்று விட்டார்கள். யாருக்கும் என்ன பேசுவதென்று கூடத் தெரியவில்லை . –

குமரய்யாவிற்கு முகம் பேயறைந்து போய் விட்டது. இவ்வளவு பெரிய அவமானம்! இந்த ஊரில் அவரது மொத்த ஊழியமுமே பங்கப்பட்டு, மூக்கறுப்பட்டுப் போன மாதிரி. மிக மிக கனமான சில மௌன நொடிகள்.”

தாசில்தாருக்குத்தான் அவர் சேவகமே ஒழிய அது குமரய்யா என்ற மனிதருக்கல்ல என்பதை குமரய்யா இப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்.இன்னொரு கச்சிதமான கதை இந்த ’குமரேசன்.’

ஆணாதிக்க மனோபாவங்கள்

பல கதைகளில் ஆணாதிக்க மனோபாவங்களைத் தோலுரித்துச் சென்றாலும் குறிப்பாகச் சொல்லப்படவேண்டிய கதைகளென கடலடிப்பிரவாகம், இவன், மிஸ், காவேரி ஆகிய கதைகளைச் சொல்ல வேண்டும்.

’பார்வதி அக்காளுக்குப் பேய் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது’ என்று துவங்கும் கதை 12 வயதுப் பையனின் பார்வையில் சொல்லப்பட்டாலும் அது பார்வதி அக்காள் புருசன் துரைச்சாமி அண்ணனின் பாலியல் சேட்டைகளால் பாதிக்கப்பட்ட பெண்களான சுரும்பாயி எனப்படும் பேச்சிமுத்து மற்றும் பார்வதி அக்காளின் கதைகள் தாம். ஆணின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அல்லது அதன் காரணமாகப் பெண் எழுப்பும் சண்டைகளை திசை மாற்றி அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சு என்றோ பேய் பிடிச்சிருக்கு என்றோ திசை மாற்றுவது அன்றைய கிராமத்து ஆண்களின் வழக்கம். அடிக்கடி சண்டை எனில் அடிக்கடி பேயோட்டுவது நடக்கும். இது அன்றைய ஆணாதிக்கத்தின் ஒரு உத்தி. ஒரு வடிவம்.

ஆனால் இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று உள்ளூர் பகுத்தறிவுவாதியான சதாசிவம் மாமா வாயிலாக ஜெயந்தன் கூறுகிறார்:

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamசதாசிவம் மாமா பதில் சொல்கிறார்:  “இதெல்லாம் நரம்புத் தளர்ச்சி, மனத் தளர்ச்சிய சேந்ததுங்க. பலவீனமான மனம் உள்ளங்களக் கூப்புட்டு இப்படி உக்கார வச்சு, உடுக்கு அடிச்சு எருக்கம் குச்சியிலயும் அடிச்சா அவங்களுக்கே என்ன நடக்குதுனு வௌங்காம தோணுனதப் பேச ஆரம்பிச்சுடுவாங்க.”

பேயி மனுஷனா இருந்தப்ப எப்பிடி அவன் செத்தான்னு எல்லாம் சொல்லுதே. அந்த செல்லப்பன் ரயில்லே அடிபட்டு செத்ததுதான் நமக்கெல்லாம் தெரியுமில்ல? ஊருக்குப் புதுசான இந்தப் பொண்ணுக்கு எப்பிடித் தெரியும்?”

அதெல்லாம் கேள்விப்பட்ட கதைங்க பெரியசாமி, இங்கதான் இந்த மாதிரி கதைங்களுக்கு பஞ்சமேயில்லியே. கூப்புட்டு உக்கார வச்சு அடிச்சா அப்புறம் ஏதோ ஒண்ண சொல்ல வேண்டியதுதான்.” அவர் கூட இருந்தவர்களில் ஒருவர் கேட்கிறார், “இந்தப் பொண்ணுக்கு மனக்கோளாறு இருக்கும்னு சொல்றீங்களா?” “இருக்கலாம். இருக்கணும்.” “எத வச்சுச் சொல்றீங்க?” – இது பெரியசாமி அண்ணன். சதாசிவம் மாமா குரலை இறக்கிக் கொண்டு, “கொஞ்சம் வயசான புருஷன். அதுலயும் போட்டிக்கி ஒருத்தி. சண்டை , வெக்கம் எல்லாம் தான்,” என்கிறார்.

வெளிப்பாட்டுக்கு வழியின்றி அடக்கப்பட்ட பாலுணர்வுத்தேட்டமே அடிப்படை என்கிறார் .முற்போக்கான சமுதாயப்பிரச்னைகளோடு இவற்றையும் அலசியிருக்கிறார் ஜெயந்தன்.

”மிஸ்.காவேரி” கதை ஒரு ஊரே ஆணாதிக்க வக்கிரத்தோடு சில நாட்கள் அலைந்ததைப் படம் பிடிக்கிறது. ஒரு கிராமத்துக்கு ஓராசிரியர் பள்ளி வருகிறது. அதற்கு ஆசிரியராக மிஸ். காவேரி என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊருக்குத் தகவல் வருகிறது. அந்தக் கல்யாணமாகாத இளம் டீச்சரை முன் வைத்து ஊரின் ஆண்கள் மனதிலும் வாய்களிலுமாகக் கட்டியெழுப்பும் வக்கிரக் கோட்டைகள்தாம் கதை. கடைசியில் வந்து சேர்வது மிஸ்டர் காவேரி என்கிற ஆண் ஆசிரியர். டைப்பிங் மிஸ்டேக்கினால் மிஸ். காவேரி ஆனவர். ஊரின் ஏமாற்றத்தை எள்ளி நகையாடுவது கதை.

பிற

புதுமைப்பித்தன் பாரதியின் ‘சந்திரிகையின் கதை’ நாவலில் வரும் கோபால அய்யங்காரையும் பணிப்பெண் மீனாட்சியையும் மீண்டும் தன் “கோபாலய்யங்காரின் மனைவி’ கதையில் வாழ வைத்துப் பார்த்தது போல ஜெயந்தன் புதுமைப்பித்தனின் ”கடவுளையும் கந்தசாமிப் பிள்ளையையும்’ மீண்டும் சந்திக்க வைக்கிறார். முடிந்தவரை புதுமைப்பித்தனின் கிண்டல் மொழியைக் கைக்கொண்டிருக்கிறார். நமக்கும் ஒருவித நோஸ்டால்ஜிக் உணர்வுடன் கந்தசாமிப்பிள்ளையுடன் பயணம் செய்யப் பிடித்திருக்கிறது. ஆனாலும் சினிமாத்துறையைச் சாடும் கதையாக சுருங்கிவிடுவதால் புதுமைப்பித்தனின் வீச்சு,பிற்பகுதியில் மங்கி விடுகிறது.

கிராமங்களில்தான் இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்பதாக “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்” என்கிற கதை கிராம வாழ்வை உயர்த்திப் பேசுகிறது.சாய்மானம் போன்ற கதைகளில் கிராமங்கள் சாதியக் கிட்டங்கிகளாக இருப்பதைச் சொன்ன அதே ஜெயந்தன் தான் இக்கதையையும் எழுதியிருக்கிறார்.ஒருபகுதி உண்மையை கூடுதலாக உயர்த்திச் சொல்லிவிட்டாரோ என்று தோன்றவைக்கும் கதை.

சில வித்தியாசமான அழுத்தமான கதாபாத்திரங்களை ஜெயந்தன் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார். துப்பாக்கி நாயக்கர் கதாபாத்திரம்,’ஜாதிமான்’ கதையில் ஒரு அருவாளையும் வேல்கம்பையும் வைத்துக்கொண்டு தனியாளாக போலீஸ் பட்டாலத்தை எதிர்கொள்ளும் வரதராஜன் மாமா, மொட்டை கதையில் வரும் பெண் மொட்டை,ஆசை கதையில் நடுராத்திரியில் ஓடுகளின்மீது கல்லெறியும் ஆசை கொண்ட முனியாண்டி என்று சிலரைக் குறிப்பிட வேண்டும்.

பிற்காலத்தில் ஞானக்கிறுக்கன் கதைகள் என்கிற பேரில் ஞானக்கிறுக்கன் என்கிற ஒரு தத்துவார்த்தக் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு கதைகள் சொல்ல ஆரம்பித்தார். நாஞ்சில்நாடன் பிற்காலத்தில் கும்ப முனி கதைகள் என்று ஆரம்பித்துள்ளார். தனுஷ்கோடிராமசாமி தன் பிற்காலத்தில் செந்தட்டிக்காளை கதைகள் என்று எழுதினார்.

ஞானக்கிறுக்கன் கதைகள் மொத்தம் பதினொன்று.அவற்றில் கதைத்தன்மையுள்ள கதைகள் என 542, நாய் வளர்ப்பு, உனக்கு ஒரு அய்யோ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

முற்போக்கு இலக்கியம் என்கிற வகைமையின் கீழ் வரும் கதைகள்தாம் பெரும்பாலான ஜெயந்தனின் கதைகள்.சமகால சமூகப் பிரச்னைகளை அப்பட்டமான பிரச்சாரமாக இல்லாமல் கலாப்பூர்வமாக, கலை அமைதி கெடாமல் சொல்லப் பெரிதும் மெனக்கெட்டிருப்பது அவரது கதைகளின் பலம்.அப்படியும் கதைகளில் எழுத்தாளனின் குரல் உரத்துக் கேட்பதை அவராலும் தவிர்த்துவிட முடியவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், கந்தர்வன், ஜெயந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி எனத்தொட்டுத்தொடரும் முற்போக்குப் பாரம்பரியத்தின் சிறுகதைத்தடத்தை உற்று நோக்கிக் கொள்வன கொண்டு தள்ளுவனவற்றை, மிக முக்கியமாக, சரியாக அடையாளம் கண்டு தள்ளுவதிலும்தான்  முற்போக்குச் சிறுகதைகளின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

The politics of tamil short story (Jeyanthan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 5ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 10ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 16ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 16: கோபி கிருஷ்ணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *