புதுமைப்பித்தன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த பயணம் வண்ணநிலவனின் பயணம்.  ஆயின் இவரின் திசை வேறு, இலக்கு வேறு.  முன்மாதிரிகள் இல்லா கலா ஆளுமையின் உச்சமாய், இவர் எழுதிச் சென்ற கதையின் சுவடுகள் தமிழ்ச் சிறுகதை வெளியின் நெடுகிலும் ஆழப்பதிந்திருக்கின்றன.

மயான காண்டம் 

வண்ணநிலவன்

செல்லையா பண்டிதனுக்கு தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில் கூட சலிப்பு ஏற்படுவது மயானத்திற்கு சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான்.   அத்தருணங்களில் இது வரையிலும் பரம்பரை பரம்பரையாகச் சோறுபோட்டு வந்திருக்கிற தொழில் என்கிற நன்றியுணர்வெல்லாம் செல்லுபடியாகாது.  

“நம்ப எனத்தான் எவ்வளவு பேரு ஜோரா பார்பர் ஷாப்பு வச்சுக்கிட்டு நாலுபேர் தலையைத் தடவி காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கானுவ” என்று பத்தினி செல்லம்மாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்ப்பான்.

பண்டிதன் வீட்டில் அடுப்பு எரிந்து இரண்டு மூன்று நாட்களாகி விட்டது.  ஊருக்குள்ளிருந்து அழுகைச் சத்தம் கேட்கிறதா என்று காதைத் தீட்டிக் கொண்டு பத்து நாட்களாக காத்திருந்தும் துஷ்டி விழுகிற பாட்டைக் காணோம்.  ஏகபத்தினியான செல்லம்மாளுக்கு வயிற்றைக் கடிக்கிற கடியில் பண்டிதரய்யாவுக்கு மத்தியானம் சாமம் என்று நேரங்காலமில்லாமல் கொடை கொடுத்துக் கொண்டிருந்தாள். “அடப் பாவி மட்டையோ,  எல்லாருக்கும் சாவே இல்லைன்னு ஆயிப்போச்சா?” அடிக்கடி தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் பண்டிதன்.

சுடுகாட்டு தகர ஷெட்டுகளைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு, அச்சலாத்தியாகத் தன் வீட்டுச் சாய்மானத் திண்ணையில் சாய்ந்தான். இந்த திண்ணைபண்டிதனின் அன்றாட ஜீவிதத்தில் ரொம்பவும் முக்கியமான அம்சம். சேர்ந்தாற்போல் நோவுகண்டு  ஊர்ப்பிணங்கள் வந்து குவிகையில் சின்ன மச்சினனை துணைக்கு அழைத்துக் கொள்கிற அளவுக்கு சில்லறைக்கு பஞ்சமிராது.  மச்சினனை குஷிப்படுத்த பக்கத்து ஊர் டூரிங் கொட்டகைக்கு அனுப்பிவிட்டு, நிலா வெளிச்சத்தில்  நாற்பத்திச் சொச்சம்  வயசான செல்லையாவும், புளி போட்டு விளக்கிய சொம்பைப் போல் தகதகக்கிற செல்லம்மாவும் உல்லாசமாய் உருள்வார்கள்.   பண்டிதனின் பரம்பரைப் பாத்தியமாய் தொடர்வது சுடுகாட்டுக் குத்தகையும், இந்த சாய்மானத் திண்ணை போட்டுக் கட்டிய வீடும்தான்.

சாணம் போட்டு மெழுகி நாளாகிவிட்டதால்  திண்ணை பல்லிளித்தது.  “ஆக்கங்கெட்ட மூதேவி,  குடிக்கக்கூழு கெடைக்காமப் போகுமேட்டீ சவமே”  தன் ஆங்காரத்தையெல்லாம் செல்லம்மாவின் மீது கொட்டித் தீர்த்து விட்டு திண்டில் சாய்ந்து கொண்டான்.  பழங்கனவுகளில் லயித்துக் கிடக்கும்போதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கறமாதிரி பீறிட்டது.   “மயிரே, வீடு மொழுகலைன்னு ஆடுதீரே, மூணு நாளாகுது சோத்துப் பருக்கையைப் பாத்து, தூ  மயிரே, சோறு போட வழியில்லை; ஒனக்கு பொண்டாட்டி ஒரு கேடா?” பொரிந்து தள்ளினாள்.  ஏதோவொரு பாத்திரத்தை தொபீரென்று தரையில் வைத்துவிட்டு  பின்வாசலில் துப்பிவிட்டுச் சுவரோரமாய் ஒதுங்கி நின்று சளசளவென்று பெய்தாள்.   திண்ணைத் தவநிலையைக் கலைத்து எழாமலேயே பண்டிதனும் பதில் கொடுத்தான்.



சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி மண்சுவரில் கதவு நிலைக்கருகே பம்பரக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்த இரட்டைச் சங்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் செல்லையா. இரண்டையும் துடைத்து  மார்பில் தொங்கவிட்டுக் கொண்டு சொள்ளமாடசாமி கோவிலைப் பார்க்க நடந்தான்.

அந்தச் சங்குகள் இரண்டையும் வாயில் வைத்து மூச்சடக்கி துஷ்டி விழுந்த வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டால் சுடுகாட்டை அடைவதற்கு முன்னால் ஒரேயொரு தடவைதான் இடையே நிறுத்தி மூச்சை இழுப்பான். இது அவன் பாட்டன் அப்பன் வழியாக அவனை வந்தடைந்த பூர்வீக சம்பாத்தியம்.

பண்டிதனின் குலதெய்வம் சொள்ளமாடசாமி.  வெறுங்களிமண் பொம்மைக்கு உயிர் கொடுத்ததில் பாண்டிய வேளாளருக்குப் பாதிப் பங்கு சேரும்.  ஆலமரத்தடியில் தலைக்கு மேல் ஆணியடித்த தகர உண்டியல் தொங்கிக் கொண்டிருக்கிறது.   சுடுகாட்டுச் சாமியைப் பற்றி கதைகள் பல இருந்தாலும் சின்னஞ் சிறுசுகள் கள்ளத்தனமாய் சந்திப்பது இந்த ஆலமரத்தடிதான். ரொம்பவும் கஷ்டம் வரும்போது சாமியின் சந்நிதியில் நின்றுகொண்டு ஆங்காரத்துடன்  பண்டிதன்  ஊதுகிறது உண்டு.  இந்தச் சங்கொலியின் தாங்கமுடியாத சோகம் கவிழ்ந்து மனசையே அலசிப் பிழிகிறபோது சுடுகாட்டு வெட்டியானுக்கு ரொம்பக் கஷ்டம் போலிருக்கு என்று ஊர் முழுக்கப் பேச்சு நடக்கும்.

பண்டிதனுக்கு ஏழு வயசிருக்கும்போது அவன் தகப்பன் ஊதினதைப் பார்த்திருக்கிறான்.  தகப்பன் செத்துப்போன பிறகு இவ்வளவு வருஷங்களுக்கிடையில் செல்லையா பண்டிதன் இப்போதுதான் முறையீடு செய்யப் போகிறான்,  சாமி முன்னால் நின்று இழவுச்  சங்கெடுத்து ஊதுவது கேவலமானதுதான்.  வேறு வழியில்லை.  தன் கஷ்டத்தை தெரிவிக்க அவன் குல வழக்கப்படி இதுதான் கடைசி முயற்சி. நாளைக் காலை ஊர்ப் பெரியவர்கள் அவன் வீட்டுக்கு வந்து ஏதாவது பணமோ தானியமோ கொடுத்து உதவுவார்கள்.  



“சாமி எங்கஷ்டத்தை தீருமையா!” என்று சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிற மாதிரி கத்தி விட்டு தோளில் இருந்த சங்குகளை எடுத்து வாயில் வைத்து மூச்செடுத்து ஊதினான். வயிற்றுப் பசியையெல்லாம் வாய் வழியே காற்றாக்கி சங்குகளை ஊதினான். மனசில் கொட்டிக் கிடந்த ஆவேசம் தீரும் மட்டும் ஊதிவிட்டு நிறுத்தினான்.

ஆலமரத்தடியில் முழுவதுமாக இருட்டு கவிந்துவிட்டது.  திடீரென்று சாமி முன்னால் நகர்ந்து போய், தொங்கிக் கொண்டிருந்த சிறிய தகர உண்டியலைப் பிடுங்கி இடுப்பில் வேஷ்டி முந்தியில் கட்டிக் கொண்டு ஆலஞ் சருகுகள் சரசரக்க வீட்டை நோக்கி நடந்தான்.

தாமரை 1970



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *