தொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்



இவர் எழுத்தினால்  வானம் மட்டுமல்ல, மண்ணும் வசப்படும்.

வர்க்கம்

பிரபஞ்சன்

வாசுதேவன் பூங்காவிற்குள் நுழைந்தவுடனேயே  காலி பெஞ்சைப்  பார்த்து சந்தோஷம் கொண்டு கிருஷ்ணா முகுந்தா என்று முனகியவாறே அமர்ந்து கொண்டார்.  

“என்னடா வாசுதேவா எப்படி இருக்கே?” வயதுக்குச் சற்றும் பொருந்தாத இடிக்குரலில் கேட்டார் ராமாச்சார். “இன்னும் ஆலையைத் திறக்கலையாடா? சோத்துக்கு என்ன பண்றேள் எல்லாரும்?”

இன்னும் திறக்கவில்லை என்பதையும், அங்கே இங்கே புரட்டியும், அண்டா குண்டாவை அடகு வைத்தும் ஒப்பேற்றி வருவதை வாசுதேவன் தெரிவித்தார். 

“பிராமணனா பொறந்துட்டு, ஆலை வேலையும் கூலி வேலையும் செஞ்சுண்டு வயித்தைக் கழுவிக்கனும்னு உன் தலை எழுத்து”  ராமாச்சார் கூறினார்.

வாசுதேவனுக்கு எரிச்சல் இருந்தபோதும் குரலில் தென்படாதபடி சகஜமாக சொன்னார். “பெரியவா நீங்களே தர்ப்பைத் தூக்கி எறிஞ்சுட்டு, கறுப்புக் கோட்டைப் போட்டுண்டு பொய்யைச் சொல்லிண்டு கள்ளன், திருடன், கேப்மாரிப் பயல்களோட காசை வாங்கி சீவிச்சிண்டுதானே மாமா பெரிய மனுஷன் ஆனேள். அப்புறம் நான் மட்டும் ஏன் ஆலையிலே பஞ்சு புடுங்கற உத்யோகம் பண்ணப்படாது.  ஊன் உங்க பிள்ளை பாட்டாவிலே வறவன் போறவன் காலைப் புடிச்சு செருப்பை மாட்டிண்டுதானே ஜீவனம் பண்றார்.  சக்கிலியனை நாமதானே நாலு அடி தள்ளி நில்லுடான்னு சொன்னோம்.  இப்ப நாலு காசு கிடைக்குதுன்னு தெரிஞ்சப்பபோ நாமதானே செருப்பை மாட்டி விடப் போறோம்.  பிராமணன் என்ன பிராமணன்? நமக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?”

ராமச்சார் பேச்சை மாற்றினார். பேச்சு குடும்பம் குழந்தைகள் பற்றி திரும்பியது.

2

வாசுதேவன் வேலை செய்து கொண்டிருந்த பஞ்சாலையில் போனஸ் தகராறு என்று விவகாரம் ஆரம்பித்து, உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்தினார்கள்.  சொந்தக்காரன் மில்லை அடைத்தான். இரு தரப்பிலும் தீர்வை எட்ட முடியவில்லை,  பேச்சு வார்த்தை நடந்து கொண்டேதான் இருந்தது.

தட்டுத் தடுமாறிக் கொண்டு நடந்து கொண்டிருந்த குடும்பம் அது.  மனைவி அலமேலு.  பெரியவன் +2 படிக்கும் நாணா, சின்னவள் எட்டாவது படிக்கும் ஹரிணி. எண்பது வயதைக் கடந்து கண்பார்வையின்றி படுத்த படுக்கையாய் இருக்கும் அம்மா.  

மாசம் ஆயிரத்து அறுநூறு சம்பள வரவு நின்றது.  முதலில் பலரிடம் உதவி பின் கடன்,  அலுமேலுவிடம் நகைநட்டு ஒன்றும்  பெரிதாக இல்லை  எனவே தாக்குப் பிடிப்பது சிரமமாகத்தான் இருந்தது.

3

வாசுதேவனைப் பற்றி மட்டுமல்ல, அவரது தோப்பனார் வரத தேசிகனைப் பற்றிக்கூட ராமாச்சாருக்கு மரியாதை கிடையாது.  சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த அவர் பெரும்புகழ் பெற்றிருக்கும் பார்சல் கம்பெனியின் துவக்ககால ஊழியர்களில் ஒருவர். அலுவலகத்தில் பல சலுகைகள் அளிக்கப்பட்டாலும் இவர் அவற்றை பயன்படுத்திக் கொள்வதில்லை.

வாசுதேவன் அப்பாவிடமிருந்து பாசுரங்களைப் பெற்று வாசிக்கத் தொடங்கினான்.  அந்த சமயத்தில்தான் பீட்டார் அல்ஃபோன்ஸ் வைஷ்ணவம் பற்றி அறியும் பொருட்டு வரத் தொடங்கினார்.  இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது,  அருகருகே உட்காட்ந்து சாப்பிடத் தொடங்கினர்,   மாடு திங்கறவரோட சேர்ந்து சாப்பிடறார்னு ராமச்சார் பேசத் தொடங்கினார்.

4

வாசுதேவன் எழுந்து காலாற நடக்கத் தொடங்கினார். ஆயி மண்டபத்தைக் கடந்து வணிகர் அவைக்கு முன்பாக சிலை நாட்டப்பட்டிருந்ததை கண்டார். தலைவரின் சிலையாக இருக்குமோ என்று தடுமாறினார்.   ஒரு காலத்தில் கோயில் மக்களாலோ பிற சமயத்தாராலோ அழிகையில் மண்ணுக்குள் புதைகின்றன, அப்படித் தோண்டிக் கிடைத்தவற்றை பூங்காவுக்குள் வைத்திருந்தார்கள்.

பெருமாள் திருமேனி, மேல் யாரோ ஒரு நபர் தோளில் மேல் அழுக்குத் துண்டைப் போட்டிருந்தார்.  காக்கையின் எச்சம் விக்ரகத்தின் உச்சந்தலையில் இருந்து வழிந்து கன்னத்தில் கோடு இழுத்து காய்ந்து விட்டிருந்தது,

5

அலமேலு தந்த பாலில்லாத டீயைக் குடித்து முடித்தார்.  சில நிமிஷங்களில் வேலை செய்யும் சகா காளிமுத்து வந்து சேர்ந்தான். வரவேற்றார்.  ஆலை நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.   காளிமுத்துவிற்கு கசலை கோவிந்தன் அளித்த கோதுமையில் பாதியை  அலமேலு பெற்றுக் கொண்டாள்.  

இருவரும் டீக்கடைக்கு சென்றனர்,   சக தொழிலாளியின் மனைவி கடன் தொல்லையால் தூக்கு மாட்டிக் கொண்டதை  காளிமுத்து சொன்னான்.  

அலமேலு கோதுமை தோசை வார்த்திருந்தாள்.  வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்டார்கள்.  பூங்காவில் தாம் பார்த்த பெருமாளைப் பற்றி வாசுதேவன் சொன்னார்.

6

சொம்பை கையில் எடுத்துக் கொண்டு போகையில் சக தொழிலாளி சோமு அவரைப் பார்த்துவிட்டான். அடமானம் வைப்பதை பையில் எடுத்துச் செல்லுமாறு யோசனை சொன்னான்.

சமுத்திரக் கரையிலிருந்து நீரைக் கொண்டு வந்து சிரசில் வார்த்து தம் மேல் துண்டால் துடைத்தார்.  அருகில் ஒருவர் நின்றார். ரங்கசாமி எனதன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.  சாயங்காலம் சுவாமிக்கு புஷ்பம் சாத்தி ஏதாவது பிரசாதம் செய்யுங்கோ  நூறு ரூபாயைக் கொடுத்துச் சென்றார்.

7

மனைவியுடன் ஆலோசித்தார். சாயங்காலம் ரொம்பத் தயக்கத்துடன் செம்பு, பிரசாதம், தட்டு, ஒரு பை முதலான சாமக்கிரியைகளுமாக பையன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.  திருமேனியைக் கழுவி சந்தனம் கொண்டு உடம்பில் பூசி, திருமண் காப்பு சாத்தி, அரக்கு நிறக்கரை துண்டை இருப்பில் சுற்றி, மாலை அணிவித்ததும் பெருமாளின் தேஜசை அவராலேயே நம்ப முடியவில்லை. பாசுரத்தை முணுமுணுத்தார்.

கூட்டம் சேரத் துவங்கியது.  வாசு கரண்டியில் கற்பூர ஆரத்தி எடுத்தார்,  அனைவருக்கும் துளசி தீர்த்தம் கொடுத்தார்.  மிச்சக் காசை ரங்கசாமி வாங்க மறுத்து விட்டார்.

பூங்காவனப் பெருமாளானார்.

காளிமுந்து வந்தான். நடந்த கதையை வாசுதேவன் சொன்னார்.   “சாமி பணத்தை செலவுக்கு எடுத்துக்கலாமா?” கேட்டார்.

“சாமியை உருவாக்கி இருக்கே, உழைக்கிறே, அதுக்கு கூலி வேண்டாமா?” 

வீட்டாண்ட வந்தப்புறம் சங்கச் சந்தாவை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் காளிமுத்து.

8

பெருமாள் காசை பயன்படுத்துவது பற்றி குடும்பத்தில் சர்ச்சை.

அரசாங்க உத்யோகஸ்தர் சுந்தரவரதன் வீட்டிற்கு வந்து வாசுதேவனை அழைத்துச் சென்றார்.  தாம்பூலத்தில் பணத்தை வைத்து காலில் விழுந்து ஆசியும் பெற்றார்,  

பூங்காவனப் பெருமான் மிகவும் பிரபலம் ஆனார். ஒரு கர்ப்பிணியின் கணவர் வேண்டிக் கொண்டு சடாரி செய்து கொடுத்தார். 

9

தூங்கிக் கொண்டிருந்த வாசுவை எழுப்பி கண்ணையன் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சேதியை காளிமுத்து சொன்னான்.

குழந்தைகள் பிச்சையெடுப்பதைக் கண்டு மனம் பொறுக்கமால் இந்த நிலை எடுத்தது துக்கத்தை தந்தது.  “கண்ணையனும் அவர் பெண்ஜாதியும் போயிட்டாங்க.  குழந்தைகள்ள அஞ்சு போச்சு.  பெரிய பொண்ணு இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்காம்,  அவரோட அம்மா சீக்கா படுத்துக் கிடக்கு”.

வாசு அலமேலுவிடம் ஐம்பது ரூபாய் தரச் சொல்லி காளிமுத்துவிடம் தந்தான்.  வாசுவும் கிளம்பினான்.

“சாமி வேலை?” காளிமுத்து கேட்டான்.  “கிடக்கு,  இதுதான் அதைவிட முக்கியம்”. 



10

வாசுவுக்கு தூக்கம் வரவில்லை.  

சுமார் முப்பது உயிர்களைக் கொள்ளை கொண்டபின், நாற்பது ஐம்பது குடும்பங்கள் ஊரைவிட்டுச் சென்றபின், முன்னூறு நானூறு தொழிலாளர்கள் வேறு வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டபின் ஒரு வழியாக இரண்டு இரண்டரை வருஷங்களுக்குப்பின் ஆலையை நாளைத் திறக்கிறார்கள்.

ஆலைத் தொழிலாளியாவதா? பட்டாச்சாரியாராக இருப்பதா? கேள்வி முன்னுக்கு வந்தது,  அலமேலு இப்படியே இருந்து விடுங்கள் என்றாள்.  

விடிந்ததும் காளிமுத்து வீட்டுக்கு நடந்தே சென்றார்.

“என்ன ஐயரே?  ஐயரா ஐயங்காரா?  இப்ப என்ன முடிவெடுத்திருக்கே?”

“அதுதான் ரொம்ப யோசனையா இருக்கு”.

சுவரில் இருந்த படங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.  கண்ணையனின் இறுதி ஊர்வலம்.  அந்த ஆயிரக்கணக்கானோரில் அவரும் இருந்தார்.  

“என்ன முடிவு பண்ணியிருக்கே?”

“பெருமாளை யார் பார்த்துப்பா காளிமுத்து?”

“பெருமாள் உம்ம தயவிலதான் இருக்காரா?  உன் வீட்டுச் சோத்தாலத்தான் ஜீவிக்கிறாரா? உன்னை மாதிரி ஒருத்தன் வருவான்.”

செக் ஷனில் பணியாற்றும் தாமோதரன் வந்தான்.  “நான் என் மாமனார் வீட்டிலே இருந்துட்டேன்.  வாசு பிள்ளைகுட்டிக்காரர் என்ன பண்றாரோன்னு இருக்கும்”.

வாசுவுக்கு கண்களில் நீர் சுரந்து விட்டது,

காளிமுத்து புகையை இழுத்து விட்டவாறே “ம் என்ன யோசிச்சே?” என்றான்.

“உன் கூட ஆலைக்கே வர்றேன்”.

“உன் சாமி. . . “

“அதைவிட கஷ்ட காலத்துல கோதுமை கொடுத்த காளிமுத்து பெரியவனாப்படுது”.

அவர்கள் ஆலை வீதியை நோக்கி நடந்தார்கள்.



 

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது.  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *