நாற்பதுகளில் வெளியான கதை. வணிக ரீதியிலான பத்திரிக்கைகளிலும் இம்மாதிரியான கதைகளை கல்கி எழுதி வெளியிட்டார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கேதாரியின் தாயார்
கல்கி
சமீபத்தில் அம்மாமி அப்பளாம் என்ற விளம்பரத்தைப் பார்த்தவுடன் பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணியபோது, மனித யத்தனத்தில் நம்பிக்கை குன்றி விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது.
கேதாரி நோய்ப்பட்டுக்கிடந்தபோது பரிசோதனை செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. என்ன வைத்தியம் செய்தும் அவன் இறந்துதான் போனான். இதனால் என்ன வைத்திய சாஸ்திரம்? என்ன டாக்டர்கள்? எல்லாம் வெறும் படாடோபந்தான் என்று ஜனங்கள் சொன்னார்கள்.
அவனுடைய நோயின் வேர் மனோவியாதியில் இருந்தது என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாக கொண்டதென்பதும் டாக்டர்களுக்கும், அருமைத் தாயாருக்கும், இளம் மனைவிக்கும்கூட தெரியாத விஷயமே. அவன் இறந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆத்ம சினேகிதனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன்.
கேதாரியின் தந்தை சுந்தரராமையர் அவன் மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போது ஒரு நாடகக்காரியின் மையலில் அகப்பட்டு தம்முடைய இளம் மனைவியையும் குழந்தையையும் அநாதையாக விட்டுவிட்டுப் போனார். கேதாரிக்கு பெண்பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி சொன்னபோதுதான் இக்கதையே தெரியவந்தது. நீ சொல்லும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றான் கேதாரி.
பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணித்தான் தபாலாபீஸில் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் நாடகக்காரி ரங்கமணியின் மீது மையல் கொண்டு ரங்கூன் சென்று விட்டார். அதனால் இருவர் சம்மதமும் வேண்டும் என்ற பாகீரதி அம்மாள், அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டுவிட்டாள்.
நேற்று நடந்தது போல் தோன்றுகிறது, திருச்சிராப்பள்ளி மாத்ருபூதம் ஸ்டோரில் நானும் என் பெற்றோர்களும் குடியிருந்தோம். எங்களுக்கு எதிர் வீட்டிற்கு புதியதாக கேதாரியின் குடும்பம் குடி வந்தது. தாத்தா, பாட்டி, அம்மாவுடன் வந்து சேர்ந்தான். தங்கக் காப்பு போட்டுக் கொண்டு, தலை பின்னி, குல்லாய் வைத்துக் கொண்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
நான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் கேதாரியைச் சேர்த்தார்கள். நாங்கள் இணை பிரியாத சிநேகிதர்கள் ஆனோம். படிப்பில் அவனும், வம்பு தும்பில் நானும் முதலிடத்தில் இருந்தோம். திருச்சிக்கு வந்த மூன்று வருஷத்திற்கெல்லாம் தாத்தா காலமானார். உபகாரச் சம்பளமும் ஊரிலிருந்து வரும் நெல்லும் உதவிகரமாக இருந்தாலும், வீட்டு வாடகைக்கும் மேல் செலவுக்கும் என்ன செய்வது? அம்மாமியும் பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தார்கள்.
பாட்டியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு இறந்து போய்விட்டாள். ராஜதானியிலேயே முதலாவதாக பிஏ பரீட்சையில் கேதாரி தேறினான்.
கேதாரி தேர்ச்சி பெற்றதுமே ஏற்கனவே எங்கள் காலேஜ் பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்த மணிபுரம் பண்ணையார் கேதாரிக்கு பெண்ணை கொடுப்பதென்று பேசத் தொடங்கினார். மாமி ஐயாயிரம் வேண்டாம், பத்தாயிரம் வேண்டாம் சீர் வகையரா எல்லாம் உங்கள் இஷ்டம், ஆனால் பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ் படிக்க வைப்பதற்கு மட்டும் ஒப்புக் கொண்டால் போதும் என்றாள்.
பண்ணையார் நரசிம்மமையர் வைதீகப் பற்று உள்ளவர். முதலில் தயங்கினார். கடைசியில் சாஸ்திரங்களில் சமுத்திரப் பிரயாணத்துக்கு பிராயச்சித்தம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். இதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண் பார்த்து வரும்படி அம்மாமி சொன்னது.
கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி இங்கிலாந்துக்கு பிரயாணமானான். பம்பாய் சென்று கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன்.
மணிபுரத்தார் அம்மாமியை தங்கள் வீட்டில் வந்திருக்க வேண்டும் என்று அழைத்தார்கள். அம்மாமி கேட்கவில்லை. இறந்து போன சித்தியின் இருகுழந்தைகளை கிராமத்திலிருந்து அழைத்து வந்து, அவர்களைப் பராமரித்து வந்தாள். சம்பந்திகளின் கௌரவத்தை உத்தேசித்து அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள்.
கேதாரி சீமையில் இருக்கும்போது ரங்கூனிலிருந்து சுந்தரராமையர் தான் ஜன்மதேசம் வரவிரும்புவதாகவும் அதற்காக பணம் அனுப்ப வேண்டும் என்று நரசிம்மமையருக்கு கடிதம் எழுதினார். மாமியிடம் அக்கடிதத்தை அவர் கொடுத்தனுப்பினார். அவரை பணம் அனுப்ப வேண்டாம் என்று சொன்ன அம்மாமிஇ அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இருந்ததை அவருக்கு அனுப்பும்படி என்னை கேட்டுக் கொண்டார்.
பத்து நாளைக்குள் மணியார்டர் திரும்பி வந்தது. ரங்கூனிலேயே சுந்தரராமையர் காலஞ்சென்றுவிட்டதாக கடிதம் வந்தது. பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காக பாகீரதி அம்மாள் துக்கம் காத்தாள். பத்தாம் நாள் பிராமண சாதியில் வழக்கமான அலங்கோலங்கள் அம்மாமிக்கும் செய்யப்பட்டன. கேதாரி ஊருக்கு வந்தபிறகு தெரிவித்தால் போதும் என்று அம்மாமி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.
எதிர்பார்ததது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐசிஎஸ் தேறினான். தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் திடுக்கிடச் செய்யாத விதத்தில் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்தபடியால், கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிந்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த என்னை கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு உள்ளே போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின்மேல் அவன் பார்வை விழவில்லையோ அல்லது விழுந்தும் அடையாளம் தெரியவில்லையோ நான் அறியேன். “அம்மா, அம்மா” அழைத்தவாறே உள்ளே சென்றான். “என்னடா இதோ இருக்கிறாள் தேடுகிறாயே?” என்றேன்.
வெள்ளைப் புடவையணிந்து மொட்டைத் தலையை முக்காடிட்டு உட்கார்ந்திருந்த அம்மாமியை உற்றுப் பார்த்தான். “ஐயோ அம்மா” என்று அலறினான்.
கேதாரிக்கு கடுமையான ஜுரம். சிகிச்சை பயன்படவில்லை. உடம்பும் உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது.
“சங்கரா என்ன சாஸ்திரம்டா? அநாதையாய் விட்டுப்போய் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமல் இருந்த புருஷன் செத்தற்காக மொட்டையடித்துக் கொள்ளும் சாஸ்திரம். அதைத் தீயில் போட்டுக் கொளுத்துவோம்” என்பான். எவ்வளவோ சமாதானம் சொன்னேன். “இந்த சாஸ்திரத்துக்கு எதிராக ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம்முடைய சாதிக்கு வேண்டாம்” என்றான். ஆனால் கேதாரி உடல் குணமடையாமலே சீமையிலிருந்து வந்த இருபத்தோராம் நாள் காலஞ்சென்றான்.
கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் தரும்படி சொல்லியிருந்தார். படத்தை சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு போனேன். கேதாரியின் மனைவி கிளி என்று சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்.
@பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

