தொடர் 23: கோணல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா) | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்



அறுபதுகளின் இறுதியில் அதுவரை எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப்படாத நால்வரின் பன்னிரெண்டு சிறுகதைகளைக் கொண்ட  கோணல்கள் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற மூன்று கதைகளையுமே  ஒரு பரிசோதனை முயற்சியாக ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.   ஆயின் பின்னர் அவர் அதிகம் எழுதாததும், தொகுக்காததும் ஆச்சரியமளிக்கிறது.  

கோணல்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா)

 மணி ஒன்பதரை அடித்துவிட்டது.  வீட்டில் எல்லோரும் படுத்தாகிவிட்டது.  சங்கரன் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டிருந்தானே தவிர அவன் கவனமெல்லாம்  புத்தகத்தில் இல்லை.  இலேசாக சப்தம் எழுப்பிக் கொண்டிருந்த வட்டவடிவமான சுவர் கடிகாரத்தின்  முட்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

கீழே வாசற்கதவு திறக்கும் ஓசை கேட்டதும் பரபரத்து எழுந்து தெருப்புறம் பார்த்து சன்னலருகே போய் கீழே பார்த்தான்.  சுந்தரராமன்தான் வந்துகொண்டிருந்தான்.  அவசர அவசரமாகக் கீழே போய் கதவை மெல்ல ஓசையின்றித் திறந்தான்.  சுந்தரராமன் உள்ளே வந்ததும், அவன் கைகளை அணைத்துப் பிடித்து அழுத்தி வரவேற்றான்.  உடம்பெல்லாம் என்னவோ செய்தது.  இவனைத் தொடும்போது மட்டும், இவனை இப்படி அருகே பார்க்கும்போது மட்டும் சங்கரன் உள்ளத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் ஏற்படுகிறது.  

சுந்தரராமன் கிழக்கே சன்னலையொட்டி போடப்பட்டிருந்த கட்டிலில்போய் அமர்ந்து முழங்கால்களைக் கட்டிக் கொண்டான்.  பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் சங்கரன்.  சுற்றும் முற்றும் பார்த்த சுந்தரராமன் “இந்த விளக்கெதுக்கு அணைச்சுடலாமெ” என்றான்.  மறுபேச்சின்றி எழுந்த சங்கரன் விளக்கை அணைத்தான்.  அவ்வறையில் சில கணங்கள் மறுபடியும் மௌனம் நிலவிற்று.  

சங்கரன் ஆரம்பித்தான்.  “ம் .. நாளைக் காலையில் புறப்பாடா?”

சுந்தரராமன் தலையை அசைத்தான்.  

“உங்கம்மா இதைப் பார்க்க இப்போ இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான்னு யோசிக்கறேன்”.

“என்னாலே நிச்சயமாக சொல்லமுடியாது.  அவ சந்தோஷப்பட்டுமிருக்கலாம் இல்லை படாமலே இருந்திருக்கலாம்.  இன்னுங் கொஞ்சம் யோசிக்கப் போனா அவ சந்தோஷப்பட்டிருப்பாளான்னுதான் என்னாலே கேட்க முடியறது”.

மறுபடியும் இலேசாகச் சிரித்தான் சுந்தரராமன்.

“உனக்குத் தெரியாது அவளெப்பத்தி, ஏன் எனக்கே சரியாகத் தெரியாது.  எனக்குத் திரும்பத் திரும்ப தெரியறதெல்லாம் அவ அவநம்பிக்கையாகப் பேசினதுதான்.  அவ குணமே அப்படி.  அதிகம் போனால் அவ உயிரோட இருந்திருந்தா, நீ என்ன வெளிநாடு போயிட்டு வந்த என்னெக் காப்பாத்தப் போறியோன்னு அலட்சியமாக் கேட்பான்னுதான் எனக்குப் படறது.  என் அண்ணனெ நீ பார்த்திருக்கயே, அவனில்லே. அவனுக்கும் பெரியவன் அவன் பேரு சிவராமன். ஆள் நன்றாக இருப்பான்.  அவன் எங்களெ விட்டுப் போனதுலேர்ந்து அம்மா மோசமாயிட்டா.  எப்ப பார்த்தாலும் அவளுக்கும் எங்களுக்கும் ஏதோ கடன் சுமையா உறவு ஒட்டிண்டு வந்துடுத்துன்னுதான் பேசிண்டே இருப்பாள்.  எங்கிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச பிரியமும் அவளுக்க மற்ற குழந்தைகள் பேர்ல இல்லே.”

“என் பெரிய அண்ணனெ வீட்டுக்கு அடங்காத பிள்ளைன்னு எல்லாரும் சொல்லுவா.  அவனெ அப்பா எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுத் திட்டிண்டேயிருப்பார்.  ஒருநாள் அவனை ஈஸிசேர் கழியை உருவிண்டு செம்மையா அடிச்சார்.  “வராதே போ” ன்னு அலறினார்.  அவன் அப்போ போனவன் வீட்டுக்க வரவேயில்லை.  அப்போ அவனுக்கு பதினெட்டு பத்தொன்பது வயசிருக்கும்.  அவன் போனதிலேர்ந்து வீட்டிலே அம்மாவும் அக்காவும் ஒரே அழுகைதான்.   நாலைஞ்சு மாசம் போன பிறகு, யாரோ அவன் சென்ட்ரல் ஸ்டேஷன்லே அநாதைப் பையன்போல் ப்ளாட்பாரத்துல இருக்கிறதாச் சொன்னா.  அம்மா ரெண்டு நாள் முரண்டு பிடிச்சு சாப்பிடாம அழுதா, அப்பா கடைசில அவளைத் திட்டிண்டே கூட அழச்சுண்டுபோய் அவனெத் தேடிப் பிடிச்சு கூட்டிண்டு வந்தார்”. 



“அதற்கப்புறம் அம்மா தினமும் சிவராமனை கவனத்தோட பார்த்துண்டா.  நீராகாரம்  வெச்சு அவனெக் குடிக்கச் சொல்லி அவன் உடம்பெத் தேச்சுவிட்டு அவன் கேட்டதச் செய்து போட்டு எங்கேயும் அனுப்பாம வெச்சிண்டுருந்தா.  இப்படிக் கொஞ்ச நாளெக்குத்தான் நடந்தது.  மறுபடியும் அவனுக்கும் அப்பாவுக்கும் சண்டை.  அக்கம் பக்கத்தார் எல்லார் மத்தியிலும் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிட்டு, உனக்கு நான் அப்பனுமில்லே நீ எனக்கு மகனுமில்லே  அப்படின்னுட்டார்.  ஆனா இந்த தடவை அவன் எங்கேயும் போயிடல்லே.  அப்பா வீட்டிலில்லாத சமயம் பார்த்து வீட்டுக்கு வருவான்.  அப்பா வீட்டிலேயிருந்துட்டா மாடிப்படி வளைவிலே யாருக்கும் தெரியாம அம்மாவும் அக்காவும் அவனுக்குச் சாப்பாடு போட்டு ஒளிச்சு வைச்சு அனுப்புவா.  கொஞ்சநாள் போச்சு.  அவன் வீட்டுக்குத் திரும்பிவிட்டதா ஒருநாள் காட்டிண்டான்.  அப்பா ஒண்ணுமே சொல்லலே.  எங்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.  கொஞ்ச நாள்லே அப்பாவே மாறிவிட்டார்னுகூட எனக்குப் பட்டது. எல்லாம் சுமுகமாகவே இருந்தது.  அவனுக்கு வேலை கூட பார்த்து வைக்க ஏற்பாடு பண்ணினார்.”

“என்னோட ரெண்டாவது அக்கா காதல் கல்யாணம் பண்ணிண்டா.  ஆனா எங்க ஜாதிக்குள்ளேயேதான்.  இருந்தாலும் எங்க வீட்டிலே யாருக்குமே முக்யமா அம்மாவுக்கு இது பிடிக்கவேயில்லே.  லவ் மாரியேஜ் செஞ்சுண்ட பிறகு அம்மாவுக்கு கரிச்சுண்டு வந்தது.  இதுலே தமாஷ் என்னன்னா கல்யாணம் என்னவோ சம்பிரதாயப்படி பெரியவாளே வச்சுத்தான் நடந்தது.  ஆனாலும் தான்பார்த்துச் சொல்லாத ஒரு பிள்ளையைத்தானே கல்யாணம் செஞ்சுண்டாள்னு ஒரு ஆத்திரம்.  அவளுடைய கல்யாணமான ஒரு வாரத்துக்கெல்லாம் சிவராமன் வீட்டுக்கு வர்ரதேயில்லை.  எண்ணைக்காவது வருவான் சாப்பிடுவான் தூங்குவான் போயிடுவான் அப்பறம் இதுவும் நின்னுடுத்து.  ஒரு நாள் அப்பா ஆபீஸிலேர்ந்து வந்து உன் மகன் யாரையோ ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிண்டுட்டானாமே ன்னார்.  அம்மாவுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாத்தானிருந்திருக்கணும்”.

“ஒரு பாட்டு அழுவாள்.  அவனெ வைதுகொண்டேயிருக்கத் தொடங்கினா.  எப்பப் பார்த்தாலும் அவனெ சபிச்சா.  அவளோட ஏமாத்தமெல்லாம் வேற திசையிலே போக ஆரம்பிச்சுது.  அப்பா மேலே குற்றங் கண்டுபிடிக்க ஆரம்பிச்சா.   அவ அப்பாவைத் திட்டறதுக்கும் எங்களைச் சபிக்கறதுக்கும் காரணம் இதுதான்னு ஒண்ணு தேவையில்லை.  இப்படி வருஷக் கணக்கில நடந்தது.  எங்களுக்கெல்லாம் வீடே வெறுத்துப்போச்சு.  பிரியமா ஒர வார்த்தை பேச யாருமில்லே.  எது பேசினா என்ன ரகளையாகுமோன்னு பயந்திண்டேயிருக்க வேண்டியாச்சு.  அம்மா அப்பாவைக் குத்தஞ் சொல்றது நாளுக்கு நாள் அதிகமாச்சே தவிர குறையவேயில்லே.  அதோட வீட்டுச் சிரமங்களெல்லாம் சேர்ந்து அவளெ மோசமாக்கிடுத்து.  அப்பா பதில் சொல்லாம சும்மாவே இருப்பார்.  அவர் கோபமெல்லாம் எங்கே போச்சுன்னு எங்களுக்கு ஒரே அதிசயமாயிருந்தது.   எதிர்ப்பேச்சே பேச மாட்டார்.  ரொம்ப மீறிப் போச்சுன்னா ஒரு வார்த்தை சொல்லுவார்.  ஆனால் அந்த ஒரு வார்த்தையைப் பிடிச்சுண்டு வர நாட்களுக்கெல்லாம் அம்மா சொல்லிக் காண்பிப்பா.”

“ஒரு ஞாயிற்றுக்கிழமை.  வாசல்லே சிவராமன் குரல் மாதிரி கேட்டது.  நான் எழுந்து போய் பார்த்தேன்.  அப்பாவின் மடியிலே ஓர் ஆண் குழந்தை இருந்தது.  அப்பா அந்தக் குழந்தையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தார்.  சிவராமன் நின்னமாதிரியே எதோ சொல்லிக் கொண்டிருந்தான்.  “அவ இப்படி என்னெயும் கொழந்தையையும் விட்டுட்டுப் போயிடுவாள்னு நினைக்கவேயில்லை.  ஏதோ ஜுரம்னார் டாக்டர்.  ஒருநாள் கூட தாக்குப் பிடிக்கல்லே.”  அவனுக்குப் பேசும்போதே தொண்டை கரகரன்னது.”  

“இதுக்குள்ள அம்மா உள்ளேயிருந்து வந்தா.  வராண்டாவில் நொழஞ்சதும்தான் சிவராமனெப் பார்த்தா.  சடேர்னு உள்ளே திரும்பிட்டா.  சிவராமன் அவசரமாக் கொழந்தையை வாங்கிண்டு வந்து அவ பின்னாலே வெச்சான்.  அம்மா என்னெப் பார்த்துச் சொன்னா “டே சுந்தரம், அவனை இங்கேருந்து போகச் சொல்லு.  அவிசாரி பெத்த பிள்ளைக்கு இங்கே எடமில்லே”.   அப்பா திடுக்கிட்டு அவளெப் பார்த்தார்.  எனக்கு வார்த்தையே தடுமாறித்து.  சிவராமன் ஒரு செகண்டு இடி விழுந்தவனைப்போல தடுமாறிட்டான்.  சரேல்னு கொழந்தய வாரி எடுத்துண்டு அப்பாகிட்டகூட ஒரு வார்த்தை சொல்லாம வெளியே எறங்கிட்டான்.”

“அம்மா அடுத்த நாள்லேந்து ரொம்ப மோசமாப் பேச ஆரம்பிச்சா.  தன்னோட வாழ்க்கையிலே துன்பத்துக்கும் ஏமாற்றத்துக்கும் அப்பாவும், நாங்களும்தான் காரணம்னு அடிச்சுப் பேசினா.    எது கேட்டாலும் அவநம்பிக்கையை அப்படியே தூக்கி நம்ம முகத்திலே அடிப்பா. “நீ என்ன கிழிக்கப்பேறே உனக்கு முன்னாடி மத்தவாள்லாம் கிழிச்சாச்சு” ன்னு எரிவா. அப்பா வீட்டில் பேசறதையே கொறச்சிண்டார்.  ஆபீஸ் விட்டதும் ரொம்பத் தாமதமா வந்தார்.  அவர் வீட்லே தங்கதில்லேன்னு வச்சுண்டமாதிரியிருந்தது.”  



“இப்படி ஒருநாள் அவர் வந்ததுமே அம்மா “இப்படி லேட்டா வந்து என் பிராணனே வாங்கறேளே உங்களுக்கு  நன்னாயிருக்கா” ன்னு ஆரம்பிச்ச தான் புக்ககம் புகுந்ததுலேந்து  இப்படியே தன்னை எல்லோரும் பாடாய் படுத்தியதை அண்ணைக்கு நூறாவது தடவையா சொல்ல ஆரம்பிச்சா.  சாதத்தைப் பிசஞ்சுண்டிருந்த அப்பா ஒருதரம் அவளெ ஏறிட்டுப் பார்த்தார்.  கையை உதறிட்டு அப்பிடியே எழுந்து கையெ அலம்பிண்டு வெளியே எறங்கிட்டார்.  அதுதான் நான் கடசி தடவையா அப்பாவைப் பார்த்தது.  ரெண்டு நாள் அம்மா சாப்பிடமா குளிக்காம மௌனமா அழுதுண்டிருந்தா. ரெண்டு நாளெக்கப்புறம் எல்லாம் சதாரணமாச்சு.  அம்மா அப்பாவைப் பத்திக் கவலைப்பட்டதாவே தெரியல்லை.”

“நாலஞ்ச மாசத்துக்கப்பறம் யாரோ அப்பா இருந்த எடத்தச் சொன்னா.  ஆனால் அவர் தனியா இல்லை,  எங்க தூர ஒறவுக்காரப் பொண்ணோடையும் அவ அம்மாவோடயும் இருந்தாராம். எங்க அண்ணன் ஒரு நாள் அம்மாவுக்குத் தெரியாம போய் அவரைக் கூப்பிட்டான்.  அவர் வரமாட்டேன்னு சொன்னாராம்.  அம்மாவுக்கு தெரியாதுனு நெனச்சிண்டு இருக்கும்போது இந்த விஷயம் தெரியவந்தது.  “அது அன்னிக்கே தெரியுமே.  அவர் யாரோட இருக்கார்னுகூட தெரியுமே அவர் வரமாட்டார்” னு  சொன்னதும் எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அப்பா போனதுக்கப்புறம் முதல் தடவை அவரப் பத்திப் பேசினது.  அதுக்கப்பறமும் பேசவேயில்லை”.

சுந்தரராமன் நிறுத்தினான்.  தொண்டை எரிந்த மாதிரி அவன் சைகை செய்தான்.  சங்கரன் எழுந்துபோய் மூலையிலிருந்த பானையைச் சாய்த்து தண்ணீர் கொண்டு வந்தான்.   பிறகு உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து சாய்ந்து படுத்த நிலைக்கு வந்தான்.  கையைச் சன்னல் மேல் மடக்கி வைத்துக் கொண்டு காலை நீட்டி உடம்பைச் சாய்த்துக் கொண்டான்.  

சுந்தரராமன் புன்னகைத்துக் கொண்டே சங்கரன் கையைத் தொட்டான்.

“இத்தனையிலும் அம்மா ஒண்ணுமட்டும் சொல்லிண்டிருந்தா.  நான்தான் அவளெக் கடைசி காலத்திலே காப்பாத்துவேன்னா. ஆனா அது நடக்காமப் போயிடுத்து.  நான் வீட்டைவிட்டு வந்தாப் போறும்னு ஓடி வந்துட்டேன்.   என் அண்ணனோ அவ சாகறமட்டும் அவளுக்கு எல்லாம் செஞ்சான்”.

அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே சங்கரனும் சாய்ந்து படுத்துக் கொண்டான்.  அந்த அறையில் நிசப்தம் நிலவியது.  நீண்ட நிசப்தம் தொடர்ந்தது.  சுவர்க்கோழியின் ரீங்காரத்திடையே, கட்டிடத்தின் மேலே நிலவு பொழியும் இரவில் காகத்தின் கரைகிற ஒலி அவ்வப்போது கேட்டது.



கட்டில் முனகலுக்கிடையே இரவின் அமைதி தொடர்ந்தது.

சட்டென் எழுந்தான் சங்கரன்.  சங்கரன் நீட்டிய கரத்தைப் பிடித்துக் கொண்டு பதில் பேசாமல் எழுந்தான் சுந்தரராமன்.  கீழே விழுந்திருந்த வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான்.  விளக்கைப் போடமலே இருவரும் வெளியே வந்தார்கள்.  கீழே வாசற்கதவுவரை வந்தான் சங்கரன்.  பிறகு ஆதுரத்துடன்  சுந்தரராமன் கையைப் பற்றி அழுத்திவிட்டு “காலையிலே புறப்படுவதற்கு முன்னே பார்ப்போமா” என்று கேட்டான்.

தலையை ஆட்டிக் கொண்டே சுந்தரராமன் தெருவில் இறங்கி நடந்தான்.  

கதவைத் தாழிட்டு விட்டு நேரே குளியலறைக்குப் போய் நன்றாக உடம்பைத் தேய்த்துக் குளித்தான்.  பிறகு வேறு உடைகளை மாற்றிக் கொண்டுவந்து கட்டிலில் படுத்தான்.  மூடிய கதவைத் திறந்து வெளியே இணைத்தான்.  நிலவொளி மறுபடியும் உள்ளே விழுந்தது.  காற்று லேசாக உள்ளே வந்தது.  சங்கரன் கண்களை மூடிக் கொண்டான்.

ஜூலை, 1966

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.