தொடர் 25: நத்தைக் கூடுகள் – திலகவதி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்வாழ்வின் எல்லாப் பரப்புகளிலும் நேர்ந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் சரிவுகளுக்காக விசனப்படுகிற அதே சமயம், மிக மோசமான நெருக்கடிகளுக்கிடையிலும் மனித மேன்மைகளைப் போற்றுவதாக, நேசிப்பதாக திலகவதியின் படைப்புகள் அமைந்திருக்கிறது.

நத்தைக் கூடுகள்

திலகவதி

ஒரு நாளும் லதா இப்படி உடுத்திக் கொண்டு “ஸீ யூம்மா” என்று சொல்லி விட்டுப் போனதேயில்லை.  தோள் தெரியாமல் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஏதோ மன்னிப்புக் கேட்பவளைப் போல “மணியாச்சும்மா” என்பாள்.

படிப்பை முடித்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, மகள் அடக்க ஒடுக்கமாகவும் பணிவும் பவ்யமாகவும் நடந்து கொள்வதில் காமாட்சி அம்மாளுக்கு மனம் கொள்ளாப் பெருமை. பொண்ணு பார்வை கால் கட்டை விரல் மேலேதான் இருக்கணும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்த பெண்ணாயிற்றே!

அவள் அப்பாவுக்கு அகால மரணம் வராதிருந்தால், அவள் சம்பாதிக்க வேண்டிய கட்டாயமே நேர்ந்திராது.  அவர் இருந்த காலத்திலேயே காதலித்தவளை கைப்பிடித்து வீட்டை விட்டு வெளியேறினான் அண்ணன்.  இளையவன்  விபத்துக்குள்ளாகி மனநோய் மருத்துவ நிலையத்தில் இருக்கிறான்.

அன்றாடம் லதா பஸ் நிலையத்தை வந்து அடைந்ததும் கேலிகள், கிண்டல்கள். “மகளிர் ஸ்பெஷல் வரும்வரை நிற்கத்தான் வேண்டும் ஆர்டினரி பஸ்ஸில் போக வேண்டாம்” என்பாள் அம்மா.  பார்வைகள் கம்பளி பூச்சியாய் உடம்பெங்கும் நெளியும்.  உரசுவதில் ஜென்மப் பலனையே  சில அல்பங்கள் பெறுகின்றன.  வீடு வந்து சேரும் வரை மனப்பதட்டம் நிற்காது.

எவ்வளவுக்கெவ்வளவு கற்பையும்  ஒழுக்கத்தையும் காத்துக் கொள்ளப் பதறினாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் சந்தித்த ஆண்கள் அதைக் குலைப்பதில் குறியாய் இருந்தது மட்டுமல்ல அது ஆண்மையின் அளவுகோலாகக்கூடக் கருதினார்கள்.  கூட வேலை செய்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் இதே  அனுபவங்கள்.  சரளா “ஹ்யூமரே இல்லியே!  ஸ்போர்டிவ்வா எடுத்துக்கணும்” என்று சொல்வாள்.

ஆபீசிலும் நிலைமை ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அஸிஸ்டெண்ட் மானேஜர், சூப்ரிண்டெண்ட், அடுத்த சீட் ஆறுமுகம் ஒவ்வொருவரும் சளைத்தவர்களாக இல்லை.  உள்ளுக்குள் குமைந்து குமைந்து கூசிக்கூசி குறுகிப் போனாள்.  அச்சூழலில்தான் அந்த அலுவலகத்துக்கு மாற்றலில் வந்தாள் லேகா.  வெகு விரைவிலேயே அவளின் நெருங்கிய தோழியானாள். லதா அவளுடன் பல நூலகங்களுக்கும், பெண்கள் நலச்சங்க கூட்டங்களுக்கும் போகத் துவங்கினாள்.  தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டாள்.  அநாவசித் தொல்லையை விலைக்கு வாங்கும் தங்க நகைகளைத் தவிர்த்தாள்.  உடை, அலங்காரம் எல்லாம் சௌகரியமாகவும் எளிமையாகவும் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டாள்.

அவளுக்குள் இந்த மாற்றம் வந்த பிறகு உலகமே மாறிவிட்டதுபோல இருந்தது. அலுவலகத்தையும் வெளியையும் துணிச்சலுடன் எதிர்கொண்டாள். அன்று மாலை  அம்மா அவளுடைய புதிய போக்கை கண்டிக்கத் துவங்கியதும் அவள் இடைமறித்தாள். “வீடே உலகம்னு அடைபட்டிருந்த காலத்துலே விதிச்ச பழக்க வழக்கங்களை இன்னிக்கும் அப்படியே எப்படி அனுசரிக்க முடியும்?” என்று கேள்வியை எழுப்பினாள்.

அம்மா வாயடைத்துப் போனாள்.

“நத்தை சதா காலமும் கூட்டைச் சுமந்து கொண்டு காலும் தலையும் மட்டும் வெளியே தெரியறாப்பல  மெது மெதுவா ஊருமே, அது போலத்தான் இத்தனை காலம் நடமாடினேன்.  இன்னிக்குத் தேவை சுருண்டுக்கறதுக்கு கூடு இல்லை. கூட்டை ஒடைச்சு சிறகைப் பிரிச்சு வெளியே உள்ள பரபரப்பான உலகத்துக்கு ஈடு கொடுத்து வாழ தைரியமும் பலமும் நம்பிக்கையும்தான்.”

அன்று இரவு அவள் கனவில் கூடு சுமந்து மெல்ல ஊர்ந்து போகும் அழகற்ற நத்தைகள் எல்லாம் கண்ணைப் பறிக்கும் வண்ணமிகு சிறகுகள் தரித்து வான்  மறைத்து விண்ணளாவி பறந்தன,

1988