தொடர் 26:கள்ள நாணயம் – கிருஷ்ணன் நம்பி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்படைப்பின் அளவைவிட அதன் குணம் முக்கியம்.  படைப்பில் மொழியில் பங்கு முக்கியம்.  துல்லியம் முக்கியம்.  தனித் தன்மை முக்கியம்.  இந்தக் குணங்களைக் காட்டக்கூடிய எழுத்துக்களை  எழுதுவதைத்தான் கிருஷ்ணன் நம்பி விரும்பினார்.  

கள்ள நாணயம்

கிருஷ்ணன் நம்பி

அன்று ஞாயிற்றுக்கிழமை.  நாகராஜா கோயிலை அன்றுதான் பார்க்க வேண்டும்.  கூட்டம் உச்சிகால பூஜைவரை ஓய்வதில்லை.  கோயில் அர்ச்சகருக்கு பிரசாதமும், தீர்த்தமும் கொடுத்து மாளாது.   எல்லாம் வல்ல இறைவன் இந்த அர்ச்சகர்களுக்கு மாத்திரமாவது இரண்டொரு,கைகள் உபரியாக அருளியிருக்க வேண்டும்.  

கோயில் உண்டியலுக்குள் நாணய டங்காரம் சதா கேட்டபடி இருக்கும்.  சன்னதிக்கு முன்னே கபந்தம் போல் உட்கார்ந்திருக்கும் வெண்கலப்பானையில், பால் சொம்புகள் கவிழ்ந்த வண்ணமிருக்கும்.  கேட்டதைக் கொடுக்கும் வரப்பிரசாதியான நாகராஜாப் பெருமாளுக்கு இவற்றைக் கொடுப்பதால் மட்டுமே குறைந்துவிடப் போகிறது?

ஆரத்தி மணி கிணுகிணுத்ததும், சின்னையா முதலியார் இரண்டு கைகளாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.  கை விரல்களில் வைர மோதிரங்கள் பளபளத்தன.  மனைவி ரங்கம்மா பட்டுப்புடவை வைரத்தோடு இத்யாதி செல்வப் பெருமையில் மிதந்தபடி, தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.  அவர்களின் ஆறுவயதுக் கடைக்குட்டிப் பிள்ளை அம்மாவின் அருகில் நின்று கொண்டிருந்தான்.

அர்ச்சகர் பிரசாதத்தை அளித்தார்.  நெற்றிக்கு சந்தனம் இட்டுக் கொண்டு தட்டை மனைவியின் பக்கம் நீட்டினார்.   தன்னிடம் எட்டணாத் துட்டாத்தான் இருப்பதாகவும் சில்லறைத் துட்டு இருந்தா தரும்படியும் மனைவியிடம் கோரினார்.  தன்னிடமும் சில்லறையில்லை என்பதை அந்த அம்மாள் தெரிவித்தாள்.  முதலியாரின் பிள்ளை தன் பர்ஸிலிருந்து ஒரே நாலணா துட்டை எடுத்து அம்மா “இதைப் போடும்மா பொறவு அஞ்சணாவாக் கொடுத்திரு” என்று நீட்டினான். முதலியார் மனைவியின் கையை எட்டிப் பிடித்து “சீ பைத்தியம் அது கள்ள நாணயம்னு ஒனக்குத் தெரியாதா? செல்லாத துட்டை உண்டியல்லெ போட்டா தோசமில்லா புடிக்கும்”  சிறிது தயக்கத்துடன் தமது பர்ஸிலிருந்து எட்டணாத் துட்டு ஒன்றை எடுத்து உண்டியலில் சேர்த்தார். 

வீட்டிலிருந்து கோயிலுக்குப் புறப்படும்போது தனது புத்தம் புதிய பர்ஸ் காலியாயிருப்பதில் கௌரவனஹீனம் கண்ட முதலியார் மகன் துட்டு தட்டு என்று நச்சரித்தபோது சில தினங்களாக மாற்றப்படாது கிடந்த செல்லாத கள்ள நாணயமான நாலணாக் காசை அவன் கையில் கொடுத்திருந்தார். இப்போது செல்லாக் காசு என்று தெரியவந்ததும் அடம் பிடிக்கத் தொடங்கினான்.  

பல வருஷங்களுக்கு முன்னால் கோட்டாற்றுச் சங்கர முதலியார் கடையில் மாச சம்பளத்திற்கு கணக்கெழுதிக் கொண்டிருந்த  சின்னையாவை இரண்டாவது உலக யுத்தமும் கள்ள மார்க்கெட்டும் மாற்றிவிட்டதை ரங்கம்மா அறியாள்.  கணவனின் சாமர்த்தியம் அதிர்ஷ்டம் என்று நம்பினாள்.

வெளிப்பிரகாரம் வந்தாகி விட்டது,  சளசள சத்தம் காதைத் துளைத்தது.  “அம்மா மிட்டாயி” என்று வேறு திசையில் திருப்பினான் பிள்ளை. இருபுறமும் கடைகளைப் பார்த்து வந்த முதலியார் கண்களில் ஒரு அபூர்வ ஒளி மின்னியது.

 “எலே அந்தக் கால் ரூபாயைக் கொடு வேர்க்கடலை வாங்கித் தாரேன்”

“எனக்கு மிட்டாய்தான் வேணும்”னு சிணுங்கியவதை அவர் கண்டு கொள்ளவில்லை.  

எண்பதைக் கடந்துவிட்ட அந்தக் கிழவி கண் பஞ்சடைந்து கூனிக்குறுகிக் கட்டையாக  அவள் எதிரில் கந்தல் துணியில் நாலைந்து வேர்க்கடலை கூறுகள், பக்கத்தில் இருந்த ஓலைப் பெட்டியில் மேலும் கொஞ்சம் வேர்க்கடலை.

நாலணாவைக் கொடுத்து இரண்டணாவுக்கு கடலை வாங்கிக் கொண்டார். பாக்கிச் சில்லறைக்காக கொட்டாங்கச்சியில் பொறுக்கிக் கொண்டிருப்பதற்குள் “சட்னு கொடு கெழவி”  என்று வாங்கிக் கொண்டார்.  அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை பூத்தது.

பையனின் சொக்காய்ப் பையில் கொள்ளும் அளவுக்குக் கடலையை நிரப்பி விட்டார்.  “என்னங்க அந்தக் குருட்டுக்  கெழவியையா ஏமாத்தறது?” அவள் மெதுவாக கேட்டாள்.

“ரங்கம்மா நான் இம்பிட்டு சம்பாதிச்சதெல்லாம் எப்படின்னு நெனச்சிட்டிருக்கே? எல்லாம் ஏமாத்தும் பெரட்டுந்தான்.  இந்தக் காலத்திலே உருப்படியா நாலு காசு சம்பாதிக்கணும்னா நாணயத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிர வேண்டியதுதான்”  பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.  

கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை 'மருமகள் வாக்கு' – ஏகாந்தன் Aekaanthan

“பாவமில்லையா? தெய்வத்துக்கு பொறுக்குமா?” என்று ரங்கம்மா கேள்விகளை எழுப்பியபோது “சீச்சீ வாயை மூடிட்டுப் பேசாம வா” என்று விறுவிறுவென்று நடந்தார்.

“சாமி, சாமி” குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினார்.  கிழவியின் ஆளாகத்தான் இருக்க வேண்டுமென நொடியில் ஊகித்துக் கொண்டார்.  கிழவியின் பக்கத்து வீட்டுக்காரனின் மகன் கிருஷ்ணன் சற்று தூரத்தில் கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்தான். காசு மொளு மொளுண்ணு இருப்பதைப் பார்தததுமே அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது.  நிழல் வடிவம்போல் சென்று கொண்டிருந்த முதலியாரை  கிருஷ்ணணுக்கு அவள் காட்டினாள்.

“பெரிய மனிசனுக்கு இதுதான் அழகா?” கிருஷ்ணன் கூச்சல் போடத் தொடங்கினான்.

“என்ன உளர்றே?” எடுத்த எடுப்பில் முறைத்தார் முதலியார்.

ரங்கம்மா மனம் புழுங்கினாள். “வேற காசைத்தான் குடுத்து போகச் சொல்லுங்களேன்” கெஞ்சாத குறையாக சொன்னாள்.  கூட்டம் சேர்ந்து விடுமோ என்ற பயம்.   சுய கௌரவம் தன் மனைவி மக்களின் முன்னிலையில் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் இருந்தது.  

“இந்த  காசை வைச்சிண்டுதான் நீ சீமானாகப் போறே?  இந்த எடுத்துக்கிட்டுப் போ” என்று எட்டணா நாணயத்தை விட்டெறிந்தார்.   

“நில்லு சாமி எனக்கு என்னாத்துக்கு உன் காசு?”  என்றவாறே தன் மடிச்சீலையிலிருந்து மீதிக் காசை முதலியாரிடம் வீசினான். முதலியார்  மீது அஸ்திரம் போல் வந்து மோதி விழுந்த அந்த காசைக் குனிந்து எடுத்தவாறே  முதலியார் “போடா பெரிய கணக்குச் சொல்ல வந்துட்டான்” என்று சினந்து கொண்டார்.

“ஏஞ்சாமி, எங்க நாணயம் என்னைக்கும் நல்ல நாணயம்,  உங்க நாணயம்தான் கள்ள நாணயம் தெரிஞ்சுதா?”

கோயிலுக்கு வெளி வாசலில் அவரது சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் மயிலைக் காளைகள் பூட்டிய வில் வண்டி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

“அப்பா அப்பா இனிமே செல்லாத துட்டைக் குடுத்து ஏமாத்தப் பாக்காதே” செல்வச் சிரஞ்சீவி புத்திமதி சொல்லத் தொடங்கினான்.

@சாந்தி, மே 1955

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.