தொடர் 28: யுத்த காலம், ஸார் – தேவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்தமிழில் நகைச்சுவை எழுத்துக்களின் முன்னோடிகளில் தேவன் ஒருவராவார்.  குழந்தைகளும், அசட்டு மனிதர்களும் நிரம்பியது அவர் உலகம்.  வாழ்வின் சகல அம்சங்களையும்  சர்வ சாதாரணமாக தனது கதைத் தளமாக்கிக் கொண்டவர்.  யாருடைய பாதிப்பும் இல்லாத வகையில் துப்பறியும் கதைகளை எழுதியவரும் அவரே.

யுத்த காலம், ஸார்

தேவன்

சுப்பராமன் குழந்தையாக இருந்து முதற்கொண்டே புத்திசாலி என்று பெயர் வாங்கி விட்டான்.  அவனே கண்ணாடி போட்ட படங்கள், ரிப்பேர் செய்த பெஞ்சு, பைண்டு செய்த புத்தகங்கள், தைத்த சட்டை சுண்ணாம்பு அரைத்துக் கட்டிய சுவர்கள் 

“அடே அவைகள் பார்வையாக இல்லை என்றுதானே சொல்கிறாய்? பார்வையில் என்னடா இருக்கிறது உபயோகமாயிருந்தால் சரிதானே?” என்பான்.

அவன் என்ன சொன்னாலும் சரி நாற்காலியில் உட்காரவும், சுவரண்டை போகவும் பயமாகத்தான் இருக்கும்,  எனக்கும் சம்ரட்சிக்க ஒரு பெரிய குடும்பம் இருக்கும்போது, என் உயிரை நான் திரணமாக மதிப்பது சரியாகுமா?

இதெல்லாம் எட்டு வருஷங்களுக்கு முந்திய சமாச்சாரம்.  ஹோட்டல் வாசலில் சந்தித்தோம்,  ஜோராக ஸூட் போட்டுக் கொண்டு மிடுக்காக இருந்தான்.  விசாரித்தேன்

காப்பிக் கொட்டையைப் பற்றி கேள்விப் பட்டிராத ஊரிலேயே இந்தக் காப்பியை தயார் செய்து விட முடியும் என்று சொன்னதோடு இல்லாமல் அதை யுத்த கால தந்திரம் என்றும் சொன்னான்.

“ஜெர்மனியில் பெட்ரோல் இல்லை என்பதற்காக நிலக்கரியிலிருந்து பெட்ரோல் தயாரிக்கிறார்கள்.  ரப்பரை வேறு பொருளிலிருந்து உற்பத்தி செய்கிறார்கள். அதை மாதிரி நானும் ஆரம்பித்து விட்டேன்” என்றான்.  

“உன் யோசனை பலித்ததா?” என்றேன்

எடுத்தவுடன் வெற்றி பெற்றுவிட முடியுமா? அதுவும் யுத்த காலம் ஆச்சே என்று பெருங்காயம் தயாரிக்கப் போன கதையைச் சொன்னான். கள்ளிப் பலகையிலிருந்து பெருங்காயம் தயாரித்து யுத்த காலத்தில் லாபம் ஈட்டலாம் என்று இறங்கியிருக்கிறான்,  ஒரு வகை கோந்துதான் வந்திருக்கிறது, முயற்சியை விடவில்லை.  பெண்கள் பூசிக் கொள்ளும் முகப்பவுடரை நெய்யிலிருந்து தயாரித்து பீப்பாய் பீப்பாயாக விற்றிருக்கிறான். ஸ்டாக்கே தீர்ந்து விட்டிருக்கிறது.  இவன் உளவு பார்த்தான்.  ஜனங்கள் யுத்த காலத்தில் நெய் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்பதால் இன்னொரு வியாபாரி இவன் முகப்பவுடரிலிருந்து நெய் தயாரித்து வியாபாரம் செய்திருக்கிறான்,  இது ஜனங்களுக்கு தெரிந்த பின் இவன் முகப்பவுடர் வியாபாரமும் போச்சு அவனுடைய நெய் வியாபாரம் போச்சு.இவ்வளவு புத்திசாலியான சுப்புராமனுக்கு தோல்வியா வருத்தப்பட்டேன். 

“கிடக்கடா கழுதை இதெற்கெல்லாம் நான் வருத்தப்படுவதில்லை,  வேறு யோசனை தோன்றி அதன் படி செய்ய ஆரம்பித்து விட்டேன்” என்றான்.

“ஒரு பெரிய கம்பெனியில் காண்ட்ராக்ட் செய்து கொண்டிருக்கிறேன்,  அவர்கள் பெரிய எழுதும் மசி வியாபாரிகள்,  அதுதான் கடுக்காய் மசி.  இப்ப தேனிலிருந்து அவர்கள் மை செய்கிறார்கள்”.

“நாசமாய்ப் போச்சுபோ, இதை என்னை நம்பச் சொல்லுகிறாயா?”

“பின் பொய்யா சொல்கிறேன்.”

“அவ்வளவு தேனுக்கு அவர்கள் எங்கேடா போவார்கள்? அது கட்டுமா?”

“அவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு அண்டா தேன் ஸப்ளை செய்கிறேன்”.

“உனக்கு அவ்வளவு தேன் ஏது?”

“நான் கடுக்காய் மசியிலிருந்து தேன் உற்பத்தி செய்கிறேன்,  அதுதான் இப்போது என் தொழில்” என்றான் சுப்பராமன்.

*

யுத்த காலம் ஸார்! இப்போது காலம் தலைகீழாக இருப்பது மட்டும் அல்ல, குட்டிக்கரணமும் போடுகிறது.  

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.