தொடர் 29: ஆராயி – பாக்கியம் சங்கர் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்வட சென்னையின் தற்கால வாழ்க்கையையும் அதன் அறியப்படாத மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளையும் சொல்லும் விதத்தில் மிகமிக முக்கிய இலக்கியப் படைப்பாளியாகப் பாக்கியம் சங்கர் திகழ்கிறார்.

ஆராயி

பாக்கியம் சங்கர்

கோயில் சுடுகாடு கொம்புலித்தோல் நல்லாடை எனும் மாணிக்கவாசகரின் பாடல்தான் எங்கள் வாசஸ்தலம்.  எங்களுக்கான நந்தவனம் சுடுகாடு.  மணிக்கட்டு எலும்புகளில் சிக்ஸர் அடித்து, மண்டையோடுகளை உருட்டி கோல் அடிப்பதென்பது எங்களுக்கான பொழுதுபோக்குகள்.

மலம் கழிப்பது முதல் காதல் களியாட்டங்கள் நடைபெறுவதுவரை இந்த நந்தவனத்தில்தான்.  சுடுகாட்டை ஒட்டினாற்போல் இருக்கும் சுலாப் இண்டர்நேஷனலை ஆராயி அக்காதான் காண்டிராக்ட் எடுத்திருந்தது.  எல்லோரும் மலம் கழிக்க சுடுகாட்டு மைதானத்தையே தேர்வு செய்து கொண்டிருந்ததால், ஆராயி மாநகராட்சி அதிகாரியிடம் போட்டுக் கொடுத்து விட்டது.  மறுநாள் ஆய் போய்க்கொண்டிருந்த எல்லாருக்கும் செமத்தியான அடி.  ‘அதான் கார்ப்பரேசன் கக்கூசு கட்டிக் கொடுத்திருக்குல்ல.  அங்கப் போயி உங்க குண்டிய வைக்க மாட்டிங்களோ பப்ளிக் நியூசன்ஸ் பண்ணிக்கிட்டு’ காவலர் செவ்வனே அவர் பணியைச் செய்து முடிக்க, அன்றிலிருந்து ஆராயிக்கு கல்லா கட்ட ஆரம்பித்தது.  கல்லா கட்டி யாருக்காகச் சம்பாத்தியம் பண்ணப் போகிறாள் என்றால் யாருக்காகவும் இல்லை.  அவளுக்கென்று சொல்லிக் கொள்ள யாருமில்லை.

“எவன்ட்டயும் பிச்ச எடுக்கலல்ல.  எவன் சொத்துலயும் கை வக்கலல்ல.  நா சம்பாதிக்கிறேன்.  நா வாழ்றேன்.  எந்த டாபருக்கும் இந்த ஆராயி கொறஞ்சவ இல்லடா” என்று போதையில் எவனையாவது பிடித்து வம்பிழுத்துக் கொண்டிருப்பாள்.  “நல்லதுங்கலாம் சாவுது.  இந்த முண்டைக்கு ஒரு சாவு வராதா? இவளால பேட்டையே அவமானப்பட்டுகினு கெடக்குது” என்று அவளைப் பார்த்து காரி உமிழ்ந்து செல்லும் சில மனிதக்குல மாணிக்கங்கள் அகாலங்களில் யாருக்கும் தெரியாமல் “ஆராயி ஒரு நூறுரூபா வேணும் ஆராயி.  கொய்ந்தக்கி ஸ்கூல் பீசு கட்டணும் உன்ன வுட்டா நா யாராண்ட போவன் சொல்லு” என்பார்கள்.  அவர்கள் கேட்ட பணத்தையும் கொடுத்து, “இந்த அம்பதுரூபால செவத்தகனி பிரியாணி வாங்கிகுடு புள்ளைக்கு,  நீ துண்றாத கொழந்தக்கி குடு” என்று போய்விடுவாள்.

இப்படி எதற்காகவும் யாருக்காகவும் தாழ்ந்து போகாத ஆராயி கலியனோடு ஒத்துப் போயிடுவாள்.  வெட்டியானாக ஊழியம் செய்து கொண்டிருப்பவன் கலியன்.  அவருக்கும் ஒரு குடும்பம் இருந்தது.  மனைவி இல்லாத குறையை ஆராயிதான் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.

நாங்களெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரின் ஒரே வாரிசான கோபி “கடைசியாக மொகத்த பாக்கறவங்கல்லாம் பாத்துருங்கப்பா” என்று கத்துவான்.  சிதை அரிசியில் சோறு பொங்கி தின்னும் கோபியைப் பார்க்க பயமாயிருக்கும்.  கோபிக்கும் சேக்காளிகள் இருந்தார்கள்.  அவன்களோடு கில்லியோ கோலியோ ஆடிக்கொண்டிருப்பான்.  ஆராயியைப் பார்த்தால் கடுப்பாகிவிடுவான்.  எப்போதும் சுலாப்பிலேயே குடித்தனம் நடத்துகிற தனது அப்பனை நினைத்து ஆராயியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்துவான்,

பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் திருவிழா வந்தது.  அன்றிரவு ராஜேஷ் ரிதம்ஸ் கச்சேரி வேறு.  ஜாபர்தான் ஆரம்பித்தான் “மச்சி இன்னைக்கு நைட்டு பீர் அடிக்கலாம்டா” எங்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூடவே பயமிருந்தது.  “கச்சேரி பத்து மணிக்கு ஆரம்பிக்கும், நாம பதினோரு மணிக்கு போயி அடிச்சுட்டு யாருக்கும் தெரியாம கலந்துக்கலாம்” என்றான் ஜாபர்.

ராஜேஷ் முதல் பாடலாக சங்கராபரணத்தைப் பாடலானர்.  ஜாபர் தம்ஸ் அப் காட்டினான்,  ஒருவர் ஒருவராகக் கச்சேரியிலிருந்து கழண்டு கொண்டோம்.  பௌர்ணமி வெளிச்சத்தில் சுடுகாடு நந்தவனமாக மாறியிருந்தது.  எரிமேடையில் பிணம் எரிந்து கொண்டிருந்தது.  ஒரு கல்லறையைத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டோம்.  ராஜேஷ் ‘மடை திறந்து தாவும் நதி அலை நான்’ பாடிக் கொண்டிருந்தார்.

கலகலப்பாக அடித்தோம்.  பயம் களைந்தது.  சுடுகாடு சொர்க்க பூமியாக ஆனது.  அடுத்த ரவுண்டில் எரிமேடையில் எரிந்து கொண்டிருந்த யாரோ ஒருவனுக்கு சியர்ஸ் சொன்னோம்.  ஏதோ ஒரு பெண்ணின் சிரிப்பு கேட்டபடி இருந்தது.

எனக்குக் கொஞ்சம் வியர்த்தது.  ஒரு வேளை போனவாரம் தூக்கில் தொங்கிய அஞ்சலையாக இருக்குமோ? ஜாபரும் ஆறுமுகமும் தைரியத்தோடு அந்தச் சிரிப்பின் இடத்திற்கு சென்றார்கள்.  நாங்களும் வேறு வழியில்லாமல் அவர்கள் பின்னால் சென்றோம்.  எரிமேடையில் அந்தப் பக்கமாக நாங்கள் பார்த்தது கலியனையும் ஆராயியையும்.  கலியன் மடியில் ஆராயி படுத்துக் கொண்டிருந்தாள்.  எரிமேடை திண்டில் மறைந்தபடி பார்த்துக் கொண்டிருந்தோம்.

இருவரும் ஆலிங்கனத்தின் ஒற்றைப்பாம்பென மாறிப் போனார்கள்.  ராஜேஷ் ‘மனசு மயங்கும் மௌன கீதம்’ பாடிக் கொண்டிருந்தார்.  இந்தக் கெடு நாற்றமடிக்கும் வாழ்விலிருந்து கடந்து அந்த ரெண்டு ஜீவன்களும் நிலவோடு பேசிக் கொண்டிருந்ததை இப்போதும் என்னால் மறந்துவிட முடியாது.

Diwali Malar - 31 October 2020 - எங்கள் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்! -  வடசென்னை படைப்பாளிகள் | conversation with Bakkiyam Shankar and Karan karki  and Shalin Maria Lawrence about North Chennai

கொஞ்ச நாட்களிலேயே நோய்மையில் கலியன் இறந்து போனார்.  இன்றுவரை அப்படியொரு சவ ஊர்வலத்தை நான் பார்த்ததே இல்லை.  ஒரு மாட்டு வண்டி பூக்களாலேயே அலங்கரித்து ஒரு தேர் போல மாறியிருந்தது.  தாரை தப்பட்டைகள் பேண்டு வாத்தியங்கள் என வெகு ஜோராய்க் கலியனின் ஊர்வலம் நடந்தேறியது.  லோட்டா சாராயத்தைக் குடித்து டப்பாங்குத்துவில் இறங்கினாள் ஆராயி.  தனது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கினாள்.  ஒரு பயலும் அவள் முன்னால் நிற்கமுடியவில்லை.  அவளோடு சேர்ந்து கோபியும் ஆடியபோதுதான் பேட்டையே ஸ்தம்பித்துப் போனது.  கலியனை எரிமேடையில் வைத்து “கடைசியா மொகம் பாக்கறவங்க பாத்துக்குங்கப்பா” என்று சொன்னதும்  கலியனையே பார்த்துக் கொண்டிருந்த ஆராயி கலியனை முத்தினாள்.  இந்த ஒரு முத்தத்தின் பரிசுத்தத்தால் கலியன் மோட்சமடைகிறான்.  ஆராயி பரிசுத்த காதலின் ஒரு சொல்லாகிறாள்.

போனவாரம் நூர்தீனிடம் இருந்து போன் வந்தது,  “மச்சி, பபாய் அப்பா செத்துட்டார்டா.  ஓட்டேரி சுடுகாட்டுக்கு வந்துர்றா” என்றான்,  அன்று நிறைய மரணம் என்பதால் மின்சார சுடுகாட்டில் வெயிட்டிங்கில் பபாயின் அப்பாவைக் கிடத்தி விட்டார்கள்.  பபாய் அப்பா ரொம்ப நேரமாக கேஸ் ரூமுக்கு செல்ல வெயிட்டிங்கிலேயே இருந்தார்.  இதைக் கண்டு வெகுண்டு போன நாங்கள் கேஸ் ரூமுக்கே சென்றுவிட்டோம்.  மார்பில் கற்பூரங்களை ஏற்றி “கோவிந்தா கோவிந்தா” வெனச் சத்தமிட்டபடி ஒரு கேஸ் ரூமில் அனுப்பிக் கொண்டிருந்தான் கோபி.  எங்கோ பார்த்ததுபோல் இருந்தது.  பாதி எரிந்த பிரேதத்தைப் போல சொள சொளவென்ற வழிந்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு எங்களிடம் வந்தான்.

“நீ வண்ணாரப் பேட்டை கலியனோட புள்ளதானே?” என்றேன்

“ஆமா சார், என்னை எப்படி உங்களுக்கு  தெரியும்?” என்றான்.

“ஆராயி.. அங்கதான் நானும் இருந்தேன்.  உன்ன நல்லா ஞாபகம் இருக்கு.”  ஆராயியைப் பற்றிச் சொன்னதும் முகம் இறுகியது அவனுக்கு.  “சார் வெளியே இருங்க.  வேலையை முடிச்சுட்டு வந்துர்றேன்” என்று உள்ளே சென்றுவிட்டான்.

பபாயின் கடமைகள் முடிந்து அவன் ஆட்டோவில் கிளம்பினான்.  நாங்கள் சுடுகாட்டு மைதானத்தில் வட்டமாக அமர்ந்து கொண்டோம்.  கோபிக்கும் சரக்கை ஏற்றினோம்.  கல்ப்பாக அடித்தான். “அப்றம் என்னாச்சு கோபி? ஆராயி உன்னடதான இருக்கு?” நானும் கொஞ்சம் இழுத்துக் கொண்டேன்.

“அதுவா அது செத்துப் போச்சு நண்பா” மிகவும் சாதாரணமாகச் சொன்னான்.  “குடிச்சி குடிச்சி செத்து போச்சு.  அத்த எடுத்துப் போட்டுட்டு நா இங்க வந்து செட்டிலாய்ட்டேன்.  தோ எதுதாப்புல இருக்குதே அந்த குவார்ட்ரஸ்லதான் வூடு.”

“கல்யாணம் ஆயுடுச்சா?” நூர்தீன் கேட்டான்.

“எவனும் பொண்ணு குடுக்க மாட்றான் நண்பா.  பொணத்த  எரிக்கறவன்னாலே மூக்க மூடிக்கிறானுங்கோ.”

“அப்போ சொந்தத்துலயாவது பாக்க வேண்டியதுதான?” என்றேன்.

“அப்பனுக்கு அப்றம் சொந்தம்னு இருந்தது ஆராயி அம்மாதான்.  அதுவும் போயிட்சு.”  அவன் ஆராயியை அம்மா என்றது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

“சரி நண்பா, ஏதாவது லல்வு கிவ்வுன்னு” போதையில் குமார் கேட்டான்.

“என்னியும் ஒரு பொண்ணு லவ் பண்ணுச்சு நண்பா.  ஒரு நாள் முத்தம் கொடுக்கலாம்னு கட்டிப் புடிச்சேன் நண்பா உன் மேல என்னமோ ஸ்மெல் வருதுன்னு தள்ளி வுட்டுட்டா.  சர்தான் போடின்னு வந்துட்டேன்” என்றான்.

ஒரு சின்ன மௌனம்.  அவனே தொடர்ந்தான். “எங்கப்பன் கொடுத்து வச்சவன்,  ஆராயின்னு ஒரு தெய்வம் அவன அப்படி பார்த்துக்குச்சு.  புரியாத வயசுல ஆராயிய பாத்தா காண்டா இருக்கும்.  இப்ப எல்லாம் புரியுது.  ஆனாலும் ஆராயி மாதிரி ஒருத்தி கெடக்க மாட்டாங்க” அவன் அழுதான்.

நாங்கள் அமைதியாக மதுவருந்திக் கொண்டிருந்தோம்.  கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தான்.

@ பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.