வைரஸ் தொற்று சங்கிலியை சீனா எவ்வாறு உடைத்தெறிந்தது
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடனே, சீன அரசாங்கமும், சீன சமுதாயமும் அந்த நோயின் பரவலுக்கு எதிரான மகத்தான பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கின.
2020 ஏப்ரல் 14
விஜய் பிரசாத், டு சியாஜுன், வெயன் ஜு
விஜய் பிரசாத் இந்திய வரலாற்றாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர். சுதந்திர ஊடக நிறுவனத்தின் திட்டமாக இருக்கின்ற குளோப்ட்ரோட்டரில் எழுதி வருவதோடு அதன் தலைமை நிருபராகவும் இருக்கிறார்.
டு சியாஜுன் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிகிறார், ஷாங்காயில் வசித்து வருகிறார். இவரது ஆய்வுகள் சர்வதேச உறவுகள், கலாச்சாரங்களுக்கிடையிலான தொடர்பு கள், பயன்பாட்டு மொழியியல் ஆகியவை தொடர்பானவை.
வெயன் ஜு பெய்ஜிங்கை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வழக்கறிஞர். சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஆர்வம் உள்ளவர்.
2020 மார்ச் 31 அன்று, சைன்ஸ் என்ற ஆய்விதழில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் பெய்ஜிங்கில் உள்ள நார்மல் பல்கலைக்கழகம் வரை உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்களைக் கொண்ட குழு மிகமுக்கியமான கட்டுரையை வெளியிட்டது.
’சீனாவில் கோவிட்-19 தொற்றுநோயின் முதல் 50 நாட்களில் நோய் பரிமாற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு’ என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், வூஹானில் ஊரடங்கு மற்றும் தேசிய அவசரகால நிலையை சீன அரசாங்கம் அறிவித்திருக்கவில்லை என்றால், வூஹானுக்கு வெளியே கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் 7,44,000 கூடுதலாக இருந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்குத் தேவையான பாடங்களைக் கொண்டிருந்தன என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள் தங்களுடைய வாதத்தை முன்வைத்துள்ளனர்.
’இதற்கு முன்னர் அறியப்படாத வைரஸை எதிர்கொண்டு, வரலாற்றில் மிகுந்த பேராவலும், விரைதிறனும், தன்னுறுதியும் கொண்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை சீனா உருவாக்கியுள்ளது’ என்று சீனாவுக்கு சென்று வந்த உலக சுகாதார அமைப்பின் குழு உறுப்பினர்கள் தங்களுடைய பிப்ரவரி மாத அறிக்கையில் எழுதியுள்ளனர்.
வைரஸ் மற்றும் நோய் பரவலைத் தடுப்பது பற்றிய அறிவை அறிவியலாளர்கள் திரட்டத் தொடங்கியிருந்த நேரத்தில், கோவிட்-19க்கான தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சையோ இல்லாது அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், சீன அரசாங்கத்தின் பல்வேறு நிலைகள், சமூக அமைப்புகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்துள்ளோம்.
திட்டத்தின் தோற்றம்
2020 ஜனவரியின் ஆரம்ப நாட்களில், அப்போது ’அறியப்படாத காரணத்தால் உருவான வைரஸ் காய்ச்சல்’ என்பதாக கருதப்பட்ட நோயைச் சமாளிப்பதற்காக நோயறிதல், சிகிச்சை மற்றும் ஆய்வக சோதனைகள் போன்ற நடைமுறைகளுக்கான நெறிமுறைகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) மற்றும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஆகியவை நிறுவத் தொடங்கின. ஹூபே மாகாணத்தில் உள்ள என்.எச்.சி மற்றும் சுகாதாரத் துறைகளால் தயாரிக்கப்பட்ட சிகிச்சை கையேடு வூஹான் நகரத்தில் இருந்த அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் ஜனவரி 4 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதே நாளில் நகர அளவிலான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 7க்குள், சீன சி.டி.சி புதிய கொரோனா வைரஸை தனித்து பிரிந்த்து கண்டறிந்தது. மேலும் மூன்று நாட்களுக்குள், வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (சீன அறிவியல் அகாடமி) மற்றும் பிறரும் இணைந்து பரிசோதனைக்குத் தேவையான கருவிகளை உருவாக்கினர்.
வைரஸின் தன்மை பற்றி ஜனவரி இரண்டாவது வாரத்தில், மேலும் நன்கு அறியப்பட்டதால், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வடிவம் பெறத் தொடங்கியது. ஜனவரி 13 அன்று, விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உடல் வெப்பநிலை அறியும் சோதனைகளைத் தொடங்குமாறும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் குறைக்குமாறும் என்.எச்.சி வூஹான் நகர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியது. அடுத்த நாள், தொலைதொடர்பு மூலமாக என்.எச்.சி தேசிய அளவிலான மாநாட்டை நடத்தியது. அதன் மூலம் கொடூரமான புதிய கொரோனா வைரஸ் திரிபு குறித்தும், பொது சுகாதார அவசரகால நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறும் சீனா முழுவதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜனவரி 17 அன்று, ஏழு ஆய்வுக் குழுக்களை சீனாவின் மாகாணங்களுக்கு என்.எச்.சி அனுப்பியது. வைரஸ் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜனவரி 19 அன்று சீனாவின் பல சுகாதாரத் துறைகளுக்கும், பரிசோதனைக் கருவிகளுக்குத் தேவையான நியூக்ளிக் அமில சோதனைப் பொருளை என்.எச்.சி விநியோகம் செய்தது. ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய நாட்களில், சீன மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜாங் நன்ஷான் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உயர்மட்ட குழு ஒன்றை வழிநடத்தி வூஹான் நகரத்திற்குச் சென்றார். .
அடுத்த சில நாட்களில், வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதையும் இந்த பரவலை எவ்வாறு நிறுத்தலாம் என்பதையும் என்.எச்.சி நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கியது. ஜனவரி 15 முதல் மார்ச் 3 வரையிலான காலகட்டத்தில், என்.எச்.சி தன்னுடைய வழிகாட்டுதல்கள் அடங்கிய நூலின் ஏழு பதிப்புகளை வெளியிட்டிருந்தது. வைரஸ் பற்றிய அறிவின் துல்லியமான வளர்ச்சி, வைரஸைத் தணிப்பதற்கான திட்டங்கள் ஆகியவை பற்றி அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரிபாவைரின் பயன்பாடு மற்றும் சீன மற்றும் அலோபதி மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைக்கான புதிய முறைகளும் அதில் அடங்கியுள்ளன. 90 சதவீத நோயாளிகளுக்கு பாரம்பரிய மருந்து அளிக்கப்பட்டதாகவும், அவர்களில் 90 சதவீதத்தினருக்கு அந்த மருந்து பயனுள்ளதாக இருந்ததாக கண்டறியப்பட்டதாகவும் பாரம்பரிய சீன மருத்துவத்திற்கான தேசிய நிர்வாக அமைப்பு அறிக்கை சமர்ப்பித்தது.
வூஹானுக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது ஜனவரி 22க்குள் தெளிவாகிவிட்டது. வூஹானுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களிடம் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் அன்றைய தினம் வலியுறுத்தியது, அடுத்த நாள் நகரம் முழுமையாக அடைக்கப்பட்ட போது, அனைவருக்கும் வைரஸின் கடுமையான யதார்த்தம் தெளிவாகி இருந்தது.
அரசு சட்டங்கள்
லி கெக்கியாங் மற்றும் வாங் ஹுனிங் ஆகிய இரு தலைவர்களுடன் கோவிட் -19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மத்திய குழுவின் முன்னணி குழுவை ஜனவரி 25 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) உருவாக்கியது. சிறந்த அறிவியல் சிந்தனைகளைப் பயன்படுத்தி, வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், இருக்கின்ற ஒவ்வொரு வளத்தையும் பயன்படுத்தி, பொருளாதாரத்தை முன்னிறுத்தாமல் மக்களின் ஆரோக்கியத்தையே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்தக் குழுவைப் பணித்தார்.
ஜனவரி 27க்குள், வைரஸ் கட்டுப்பாட்டு குறித்த புதிய தீவிரமான நடவடிக்கையை வடிவமைப்பதற்காக மாநில கவுன்சிலின் துணைப் பிரதமர் சன் சுன்லான், மத்திய வழிகாட்டல் குழுவை வூஹான் நகரத்திற்கு வழிநடத்திச் சென்றார். காலப்போக்கில், அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து வைரஸைக் கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கியிருந்தன. அதை நாம் நான்கு வகைகளில் சுருக்கமாகக் கூறலாம்:
- மாகாணத்தில்ஊரடங்கைப் பராமரிப்பதன் மூலம் மட்டுமல்லாமல், மாகாணத்திற்குள் போக்குவரத்தை குறைப்பதன் மூலமும் வைரஸ் பரவுவதைத் தடுப்பது.
சீன புத்தாண்டு இடைவேளை ஏற்கனவே தொடங்கியிருந்ததால் இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது; குடும்பங்கள் ஒருவருக்கொருவர் சந்திப்பது மற்றும் சந்தைகளுக்குச் செல்வது (சீனாவில் உள்ள 140 கோடி மக்களும் தங்களுடைய வீடுகளில் கூடுவதற்காக, மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மனித இடப்பெயர்வாக உள்ளது).
என்று இவை அனைத்தையும் தடுக்க வேண்டியிருந்தது. தொற்றுநோய்களின் மூலத்தைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்கும், அது பரவும் வழியைக் கண்டுபிடிப்பதற்கும் உள்ளூர் அதிகாரிகள் மேம்பட்ட தொற்றுநோயியல் சிந்தனையை ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு இது மிகவும் அவசியமானது.
- தொழிலாளர்களுக்கானபாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது
இரண்டு முழுமையான மருத்துவமனைகள் (ஹூஷென்ஷன் மருத்துவமனை மற்றும் லீஷென்ஷன் மருத்துவமனை) உள்ளிட்ட தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும். அதிகரிக்கப்பட்ட பரிசோதனைகளுக்காக கூடுதல் பரிசோதனைக் கருவிகள் தேவைப்பட்டதால், அவற்றை உருவாக்கி, தயாரிக்க வேண்டியிருந்தது.
- மாகாணத்தில் ஊரடங்கின்போது, குடியிருப்பாளர்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.
- வதந்திகளின்றி, அறிவியல்உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை பொதுமக்களுக்குத் தருவதை உறுதி செய்தல்.
இந்த நோக்கத்திற்காக, முதல் நோயாளியிலிருந்து ஜனவரி இறுதி வரையிலும் உள்ளூர் அதிகாரிகள் எடுத்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் குழு விசாரித்தது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சீன அரசாங்கத்திடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் இருந்த அணுகுமுறையை இந்த நான்கு வகையான நடவடிக்கைகளே வரையறை செய்தன. தொற்றுநோயின் சங்கிலியை உடைப்பதற்கான போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு, பரந்த அளவிலான அதிகாரத்துடன், என்.எச்.சியின் தலைமையின் கீழ் ஒரு கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டது. ஏப்ரல் மாத துவக்கம் வரையிலான 76 நாட்களுக்கு வூஹான் நகரம் மற்றும் ஹூபே மாகாணம் முழுவதும் முழுமையான ஊரடங்கு நிலையிலேயே இருந்தன.
பிப்ரவரி 23 அன்று, சீனாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள 1,70,000 மாவட்ட மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகளுடன் அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். ’இது ஒரு நெருக்கடி மற்றும் பெரிய சோதனை’ என்று ஜி அப்போது கூறினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமே சீனா முக்கியத்துவம் தந்தது. மக்களை முதலிடத்தில் வைத்து கவனித்த அதே நேரத்தில், தன்னுடைய நீண்டகால பொருளாதாரத் திட்டங்கள் சேதமடைந்து விடாமலும் சீனா உறுதிப்படுத்திக் கொண்டது.
அக்கம்பக்க குழுக்கள்
சீன சமூகத்தை வரையறுக்கின்ற பொது நடவடிக்கையில் வைரஸ் குறித்த நடவடிக்கைகள் மிக முக்கியமான, கவனத்தில் கொள்ளப்படாத பகுதியாக இருந்தன. பரஸ்பர பாதுகாப்பு மற்றும் உதவிகளை அக்கம்பக்கங்களில் வசிப்பவர்களிடமிருந்து பெறுவதை ஒழுங்கமைப்பதற்கான வழியாக நகர்ப்புற சிவில் அமைப்புகள் – ஜுவீஹுய் – 1950களில் உருவாக்கப்பட்டன. வூஹானில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், அந்த அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் உடல் வெப்பநிலைகளைச் சரிபார்க்கவும், உணவை வழங்கவும் (குறிப்பாக வயதானவர்களுக்கு), மருத்துவப் பொருட்களை வழங்கவும் வீடு வீடாகச் சென்றனர்.
சீனாவின் பிற பகுதிகளில், உள்ளேயும், வெளியேயும் சென்று வருபவர்களைக் கண்காணிப்பதற்காக, இந்த குழுக்கள் தங்களுடைய சுற்றுப்புறங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை சோதனைச் சாவடிகளை அமைத்தன. இந்த நடவடிக்கை அடிப்படை பொது சுகாதாரத்தை பரவலாக்குகின்ற வகையில் இருந்தது. மார்ச் 9 வரை, இந்த குழுக்களில் பணிபுரிந்த 53 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் 49 பேர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள்.
சீனாவில் உள்ள 6,50,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் இவ்வாறான பொது நடவடிக்கைகளை வடிவமைக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 9 கோடி உறுப்பினர்கள், 46 லட்சம் அடிமட்ட கட்சி அமைப்புகள் உதவினர். கட்சி உறுப்பினர்களாக இருந்த மருத்துவ ஊழியர்கள் வூஹானுக்கு சென்று, அங்கே மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக. முன்னணியில் நின்று செயல்பட்டனர். மற்ற கட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அக்கம்பக்க குழுக்களில் பணியாற்றினர். அல்லது இந்த வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புதிய தளங்களை உருவாக்கினர்.
இவ்வாறான பரவலாக்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைளுக்கு வழிவகுத்தது. சாங்ஷா, ஹுனான் மாகாணம், யுஹுவா மாவட்டம், தியோமா நகரம், தியான்சின்கியாவோ கிராமத்தில் கிராம அறிவிப்பாளராக இருக்கின்ற யாங் ஷிகியாங் என்பவர் 26 ஒலிபெருக்கிகளின் உரத்த குரலைப் பயன்படுத்தி, கிராமவாசிகள் புத்தாண்டு வருகைகளை தங்களுக்குள் மேற்கொள்ள வேண்டாம் என்றும், ஒன்றாக இருந்து இரவு உணவை சாப்பிட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள நானிங்கில், ஊரடங்கு உத்தரவை மீறக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக, ஊதுகொம்பின் ஒலியை இசைப்பதற்கு காவல்துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தினர்.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டுவில் இருந்த 4,40,000 குடிமக்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்கின்ற வகையில் பலவிதமான பொது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்தனர்: அவர்கள் சுகாதார விதிமுறைகளை விளம்பரப்படுத்தினர். உடல் வெப்பநிலையைச் சரிபார்த்தனர். உணவு மற்றும் மருந்துகளை விநியோகித்தனர்.
ஹுனான் மாகாணம்
அதிர்ச்சியில் இருந்த பொதுமக்களை மகிழ்விப்பதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். வணிகங்கள், சமூக குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து உள்ளூர் சுய மேலாண்மை கட்டமைப்பை கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் உருவக்கினர். வைரஸ் குறித்த எச்சரிக்கைகளை அனுப்புகின்ற செயலியை உருவாக்கி, அதில் பதிவு செய்த பயனர்களுக்கு நகரத்தில் வைரஸின் பரவலைக் கண்காணிக்க உதவுகின்ற தரவு தளத்தை பெய்ஜிங் குடியிருப்பாளர்கள் உருவாக்கித் தந்தனர்.
மருத்துவ தலையீடு
ஆரம்பத்தில் வூஹானுக்குள் நுழைந்த மருத்துவர்களில் பெண் மருத்துவரான லி லான்ஜுவானும் ஒருவராக இருந்தார். அவர் அங்கு சென்ற போது, மருத்துவ பரிசோதனைகளைப் பெறுவது கடினம், பொருட்கள் கிடைப்பது மிகவும் மோசமானது என்ற நிலைமை இருந்ததை அவர் பின்னர் நினைவு கூர்ந்தார். சில நாட்களிலேயே, 40,000 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் அந்த நகரத்திற்கு வந்தனர்.
லேசான அறிகுறிகளுடன் இருந்த நோயாளிகள் தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற பொருட்கள் விரைந்து வந்து சேர்ந்தன. இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டது என்றும் இரண்டே மாதங்களில், வூஹானில் தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றும் டாக்டர் லி லான்ஜுவான் கூறினார்.
சீனா முழுவதிலும் இருந்து 1,800 தொற்றுநோயியல் குழுக்கள் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு அணியிலும் இருந்த ஐந்து பேர் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர். தன்னுடைய குழு வீடு வீடாகச் சென்று தொற்றுநோயியல் கணக்கெடுப்புகளை எடுக்கின்ற ஆபத்தான பணியை மேற்கொண்டது என்று ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த அந்த அணிகளில் ஒன்றின் தலைவராக இருந்த வாங் போ கூறினார். சில வாரங்களுக்குள் தங்கள் குழு 374 பேரிடம் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், 1,383 நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிந்து கண்காணித்ததாகவும் ஜிலின் அணிகளில் ஒன்றின் உறுப்பினராக இருந்த யாவ் லைஷூன் கூறினார்.
நோய்த்தொற்று இருந்து சிகிச்சையளிக்கப்பட்டவர்கள், இன்னும் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிராதவர்கள் அல்லது நோய்த்தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டவர்கள் இவர்களில் யாரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிவதற்கு, இது மிகவும் அவசியமான வேலையாகும். பிப்ரவரி 9 வரை, வூஹானில் சுகாதார அதிகாரிகள் 42 லட்ச வீடுகளில் இருந்த 1.059 கோடி மக்களை, அதாவது 99 சதவீத மக்கள்தொகையை ஆய்வு செய்து மிகப் பெரிய பணியைச் செய்து முடித்திருந்தனர்.
மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி ஆச்சரியமூட்டுகின்ற வேகத்தில் இருந்தது. ஜனவரி 28 அன்று,ஒரு நாளைக்கு 10,000 க்கும் குறைவான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) சீனா தயாரித்தது. ஆனால் பிப்ரவரி 24க்குள், அதன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 200,000 என்ற அளவைத் தாண்டிச் சென்றது. பிப்ரவரி 1 அன்று, ஒரு நாளைக்கு 773,000 பரிசோதனைக் கருவிகளை அரசாங்கம் உற்பத்தி செய்தது; பிப்ரவரி 25க்குள், ஒரு நாளைக்கு 17 லட்சம் என்ற அளவில் உற்பத்தி அதிகரித்தது. மார்ச் 31க்குள், ஒரு நாளைக்கு 42.6 லட்சம் பரிசோதனைக் கருவிகள் என்ற அளவில் தயாரிக்கப்பட்டன.
அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் மூலமாக பாதுகாப்பு கவசங்கள், ஆம்புலன்ஸ்கள், வென்டிலேட்டர்கள், எலக்ட்ரோ கார்டியோகிராஃப் மானிட்டர்கள், சுவாச ஈரப்பதமூட்டும் சிகிச்சைக்கான இயந்திரங்கள், ரத்த வாயு பகுப்பாய்விகள், காற்று கிருமிநாசினி இயந்திரங்கள், ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வெளியேற்றும் வகையில் தொழில்துறை ஆலைகள் செயல்பட்டன. எந்தவொரு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தியது.
2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்றுநோய் குறித்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தவரும், 2015ஆம் ஆண்டில் சியரா லியோனுக்குச் சென்று உலகின் முதல் எபோலா தடுப்பூசியை உருவாக்கியவரும், சீனாவின் முன்னணி வைராலஜிஸ்டுகளில் ஒருவருமான சென் வீ, தனது குழுவுடன் வூஹானுக்கு விரைந்தார். ஜனவரி 30க்குள் சிறிய சோதனை ஆய்வகம் ஒன்றை அவர்கள் அமைத்தனர்; மார்ச் 16க்குள், அவருடைய குழு புதிய கொரோனா வைரஸுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்து, அதனை மருத்துவ பரிசோதனைகளுக்காக அளித்தது. அந்த சோதனையின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் ஒருவராக சென் இருந்தார்.
நிவாரணம்
இரண்டு மாதங்களுக்கும் மேலாக 6 கோடி மக்களைக் கொண்டதொரு மாகாணத்தை அடைத்து வைப்பதும், 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டை கணிசமாக மூடி வைப்பதும் எளிதான காரியமல்ல. அதன் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் எப்போதுமே மிகப் பெரிய அளவில் இருக்கும். ஆனால் தன்னுடைய ஆரம்ப உத்தரவுகளில், வைரஸுக்கு எதிரான நடவடிக்கையை நாட்டிற்கு ஏற்படவிருக்கும் பொருளாதார பாதிப்பு வரையறுக்கப் போவதில்லை என்றும், எந்தவொரு கொள்கையையும் வகுப்பதில் மக்களின் நல்வாழ்விற்கே முக்கியத்துவம் தரப்படும் என்றும் சீன அரசாங்கம் கூறியிருந்தது.
ஜனவரி 22 அன்று, முன்னணி குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு, அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. கோவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உத்தரவாதம் அளிக்கப்படுவதாகவும், அது இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் வகுக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டைத் திருப்பிச் செலுத்தும் கொள்கையில், கோவிட்-19க்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளின் செலவுகள் அனைத்தும் காப்பீட்டு நிதியத்தால் முழுமையாக ஈடுசெய்யப்படும் என்றும், எந்த நோயாளியும் அந்த சிகிச்சைகளுக்காக எந்த பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊரடங்கின் போது, சாதாரண விலையில் உணவு மற்றும் எரிபொருள் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறையை அரசாங்கம் உருவாக்கியது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான சீனா எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் நிறுவனம், சீனா தானிய இருப்பு குழு, மற்றும் சீனா தேசிய உப்பு தொழில்துறை குழு ஆகியவை அரிசி, மாவு, எண்ணெய், இறைச்சி மற்றும் உப்பு விநியோகத்தை அதிகரித்துத் தந்தன. நிறுவனங்கள் விவசாயிகளுக்கான கூட்டுறவு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான உதவிகளை அனைத்து சீன விநியோக மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவு கூட்டமைப்பு அளித்தது.
பொருட்களை வழங்கல் மற்றும் விலை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதாக, சீனா வேளாண்தொழில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் போன்ற பிற நிறுவனங்கள் உறுதியளித்தன. பிப்ரவரி 3 அன்று கூடிய பொது பாதுகாப்பு அமைச்சகம் விலையுயர்வு மற்றும் பதுக்கல் ஆகியவற்றைக் குறைத்தது; ஏப்ரல் 8 வரை, சீனாவில் அரசு தரப்பு சட்ட அமைப்புகள் தொற்றுநோய் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்த 3,158 வழக்குகளை விசாரித்தன.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்கியது; அதற்குப் பதிலாக, வணிக நிறுவனங்கள் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக தங்கள் நடைமுறைகளை மறுசீரமைத்தன (எடுத்துக்காட்டாக, குவாங்சோ லிங்கன் கேபிள் நிறுவனம், மதிய உணவு இடைவேளையை மாற்றியமைத்தது, தொழிலாளர்களின் உடல்வெப்பநிலையை சோதித்தது, வேலை செய்யும் பகுதிகளில் அவ்வப்போது கிருமி நீக்கம் செய்தது, வென்டிலேட்டர்கள் வேலை செய்வதை உறுதிசெய்தது, மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கண்ணாடி, கை லோஷன் மற்றும் ஆல்கஹால் கொண்ட சுத்திகரிப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.
ஊரடங்கு
வூஹானின் ஊரடங்கு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், ஹூபே மாகாணத்திற்கு வெளியே தொற்றுநோய் பரவுவதைத் தடுத்து நிறுத்தியதாக ஹாங்காங்கைச் சேர்ந்த நான்கு தொற்றுநோயியல் நிபுணர்களால் தி லான்செட் ஆய்விதழில் எழுதப்பட்ட கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட பகுதி ஊரடங்கின் விளைவாக, இரண்டு வாரங்களுக்குள்ளாகவே பெய்ஜிங், ஷாங்காய், ஷென்ஜென் மற்றும் வென்ஜோவின் போன்ற முக்கிய நகரங்களில் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டதாக அவர்கள் எழுதியுள்ளனர்.
இருப்பினும், கோவிட்-19 இன் வைரஸின் தீவிரத்தன்மை மற்றும் அதற்கெதிரான கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததன் விளைவாக, இரண்டாவது அலைகளை அந்த வைரஸ் கொண்டு வரக்கூடும் என்று அந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருந்து வரும் சீன அரசாங்கத்தை கவலையடையச் செய்கின்ற விஷயமாக அந்த எச்சரிக்கை இருக்கின்றது.
ஊரடங்கு அகற்றப்பட்டதால் வூஹான் முழுவதும் கொண்டாட்டத்தின் அறிகுறியாக விளக்குகள் மின்னின. மருத்துவப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தன்னிடமிருந்த கணிசமான வளங்களை – அதன் சோசலிச கலாச்சாரம் மற்றும் நிறுவனங்களை – பயன்படுத்தி சீனாவால் அந்த தொற்று சங்கிலியை விரைவாக உடைக்க முடிந்திருக்கிறது.
https://peoplesdispatch.org/2020/04/14/how-china-broke-the-chain-of-infection/