தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்
வேடிக்கை மனிதர்கள்
******************************
ஆயுதங்கள்
உங்கள் கைகளில்
விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன
பொதுஜன முகமூடி
எங்கள் மூளையை அழுத்துகிறது
உங்கள் தொழில்நுட்ப
அதிநவீனத் தோட்டத்தில்
நாங்கள்
வெறும் செயற்கைப் புற்கள்
உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில்
எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம்
அரதப் பழசாகிவிட்டன
எங்கள் உடலுறுப்புகள்
இனி
உபயோகிக்கப் பட முடியாத
உலோக பாகங்களாய்
உதிர்ந்து கிடக்கின்றன
எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும்
எங்கள் வயிறுகள்
பசியின் பழைய மொழியை
மறந்தபாடில்லை
எங்கள் சஹாராத் தாகம் தணிக்க
வற்ற வற்றக் குளித்த
உங்கள் நீச்சல் குளங்களில்
ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை
நாங்கள் தாகம் என்கிறோம்
குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள்
நாங்கள் பசி என்கிறோம்
ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில்
பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும்
இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள்
போர் என்பது
பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற
இன்னொரு சூதாட்டப் பத்திரம்!
பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில்
நிராதரவு அறிவுஜீவிகள்
ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற
வெட்டுப்படப்போகிற
வெறும் சிப்பாய்கள்!
ஜனநாயகம்
சர்வாதிகாரம்
கேபிடலிசம்
சோசலிசம்
கம்யூனிசம்
எல்லாச் சொற்களுமே
உங்கள் அகராதிகளில்
அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன
எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது
எங்கள் அரிச்சுவடிகள்
உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன
எல்லைத் தகராறு வயல்களில்
பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று
இன்னும் நம்பிக் கொண்டிருக்கும்
உங்களின்
பழைய
சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்!
பொதுஜன முகமூடி
எங்கள் மூளையை அழுத்துகிறது
நவீன கட்டுமானமான
செயற்கை நுண்ணறிவு மாளிகையை
எங்களுக்கான சிறைச்சாலைகளாக
மாற்றி வருகிறீர்கள்
கேலிக்குரிய முரண் என்னவெனில்
எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும்
‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில்
அலைமோதி அலைமோதி
இடம்பிடிக்கப் போகும்
ஆடியன்ஸ்களும் நாங்கள்!
எழுதியவர் :
– நா.வே.அருள்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.