(குறிப்பு: இத்தொடரில் மூன்றாவது கட்டுரை இது.முந்தைய இரண்டும் ஒரு முன்னுரை போன்ற குறிப்புத்தான்.”தமிழ்ச்சிறுகதையின் அரசியல்” என்கிற நூலின் முதல் பாகம் நூல் வடிவம் பெற்று வருகிறது.அந்நூலின் சுருக்கக்குறிப்பே கடந்த இரு கட்டுரைகள்.நூலின் இரண்டாம் பாகம் இனித் தொடங்குகிறது.இரண்டாம் பாகத்தின் முதல் கட்டுரை இது.நன்றி.)
வண்ணநிலவன்
1965 முதல் 1972 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய மாத இதழான “தாமரை” யில் ஆசிரியர் பொறுப்பில் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் இருந்தார். மணிக்கொடி இதழில் பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த காலம் ’30 களில் எப்படிச் சிறுகதைகளுக்கு வளம் ஊட்டிய காலமோ, அதே போல 70களில் தி.க.சி.யின் ‘தாமரைக்காலம்’ தமிழின் நுட்பமான பல சிறுகதை எழுத்தாளர்களுக்கு மேடையாக அமைந்தது.படைப்புச் சுதந்திரத்தோடு எழுதும் களமாக அன்றைய தாமரை திகழ்ந்தது. பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம்.பூமணி,வண்ணதாசன்,ஆ.மாதவன் எனப் பின்னர் புகழ்பெற்ற இப்படைப்பாளிகள் தாமரையில் எழுதி அறிமுகமானார்கள்.’70 களின் சிறுகதை எழுச்சிக்கு வித்திட்ட அந்தப்படைவரிசையில் ஒருவராகத் தன் கதைகளுடன் முன்னணிக்கு வந்தவர் வண்ணநிலவன்.
தோழர் ரகுநாதன் நடத்தி நின்று போன ‘சாந்தி’ இதழை பின்னர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.முருகானந்தம் தூத்துக்குடியிலிருந்து கொஞ்சகாலம் நடத்தினார். அவ்விதழில் 1970 செப்டம்பரில் வண்ணநிலவனின் முதல் சிறுகதை ‘மண்ணின் மலர்கள்’ வெளி வந்தது. (இளையபாரதிக்கு அளித்த நேர்காணலில் வண்ணநிலவன் சொன்னது). ஆனால் அந்தக்கதையை அவருடைய எந்தத் தொகுப்பிலும் சேர்த்ததாகத் தெரியவில்லை. தாமரையில் 1970 இல் வெளியான யுகதர்மம் ,மயானகாண்டம் போன்ற கதைகளே அவரது துவக்கக்கதைகளாக அமைகின்றன. தாமரை,சாந்தி என்று கம்யூனிஸ்ட் பத்திரிகைகளில் எழுதியதால் அவர் கம்யூனிஸ்ட் அல்லர். கம்யூனிஸ்ட் கட்சி அரசியலை ஏற்றுக்கொண்டவரும் அல்லர். அரசியல் பற்றி ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பது:
“அரசியல்னு ஒண்ணு இல்லை. ஜெயகாந்தன் நேரடியாகவே கம்யூனிஸ்ட்களோட தொடர்புல இருந்திருக்கார். கலாப்ரியா தி.மு.க அனுதாபியாக இருந்திருக்கார். வண்ணதாசன் எந்தக் கட்சியையும் சாராதவராகத்தான் இருந்திருக்கார். எனக்கும் எந்தக் கட்சி சார்பும் கிடையாது. கேட்டது, பார்த்ததைவெச்சு எழுதறோம். அவ்வளவுதான். பெண்ணியம், தலித்தியமெல்லாம் 90-கள்ல வந்தது. நான் கோட்பாடுகளின் அடிப்படையில் கதை எழுதறதில்லை. எனக்கு எந்த அரசியலும் கிடையாது. ஓட்டு போடும்போதுகூட அந்தந்த நேரத்துல எந்தக் கட்சிக்குப் போடணும்னு தோணுதோ, அந்தக் கட்சிக்குப் போட்டிருக்கேன். மார்க்ஸியம் படிச்சிருக்கேன். அவ்வளவுதான். துக்ளக்ல பணியாற்றியதால மற்ற கட்சிகளின் அரசியல் என்னன்னு தெரியும். ஆனா, என் கதைகள்ல எந்த அரசியலையும் நான் சொன்னது கிடையாது.’’( நேர்காணல்-பாலு சத்யா-விகடன்- )
இலக்கியத்தில் ஒருவர் முன்னெடுக்கும் அரசியல் எப்போதும் கட்சி சார்ந்ததாக இருக்காது. எப்போதாவதுதான் ஒரு கட்சி சார்ந்ததாக இருக்கும்.அது அவசியமும் இல்லை.கூடாது என்றும் இல்லை.இலக்கியத்தில் அரசியல் என்பது யாருக்காகத் தன் படைப்பில் குரல் கொடுக்கிறார், யாரைப் பற்றி எழுதுகிறார்,அதில் யார் பக்கம் நின்று எழுதுகிறார் என்பதை அடையாளம் காண்பதுதான். கதைத்தேர்விலிருந்து, கதை சொல்லும் விதத்திலிருந்து, கதையின் தொனியிலிருந்து என ஒரு படைப்பாளியின் அரசியலைப் புரிந்துகொள்ளக் கதைக்குள்ளேயே பல தடயங்கள் இருக்கின்றன..
1970இல் துவங்கி 1980 வரையான முதல் பத்தாண்டுகளில் அவர் 31 கதைகள் எழுதியிருக்கிறார்.1980 க்கும் 1990க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் 20 கதைகள்.1990க்கும் 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் 37 கதைகள்.துக்ளக்கில் பணியாற்றிய காலத்தில் வேலைப்பளு காரணமாக கதைகள் எழுதுவது அப்பத்தாண்டுகளில் குறைந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். 2000த்துக்குப் பின்னும் கதைகள்,நாவல் என அவரது எழுத்துப்பயணம் தொடர்கிறது.
முதல் பத்தாண்டுகளில் எழுதிய 31 கதைகளில் ’பஞ்சம்,பசி,பட்டினி துரத்தும் மானுட வாழ்வு’ பற்றி எட்டுக்கதைகள் எழுதியிருக்கிறார்.பின்னர் 3 கதைகள். ஆக, 2000 வரை எழுதிய 88 கதைகளில் 11 கதைகள் பசியால் துரத்தப்படும் வாழ்வில் மனுஷிகளும் மனுஷர்களும் என்னவாகிறார்கள் என்பதைப் பேசுகின்ற கதைகள்.என் வாசிப்பில் பசிக்காக இத்தனை கதைகள் எழுதிய சிறுகதை எழுத்தாளர்,முற்போக்கு எழுத்தாளர்கள் உட்பட, வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வண்ணநிலவன் கதைகள் முன் வைக்கும் முக்கியமான அரசியல் இது.”முதல்ல மனுசங்களோட பசியை எழுதுங்கய்யா” என்கிற அழுத்தமான குரல் அது.
மயான காண்டம்,அழைக்கிறவர்கள்,மிருகம்,எஸ்தர்,இரண்டாவது சொர்க்கம்,குழந்தைகள் ஆண்டில்,நரகமும் சொர்க்கமும்,துன்பக்கேணி,இரண்டு உலகங்கள்,திருடன்,அவனுடைய நாட்கள் ஆகிய இந்தக்கதைகள் ஒவ்வொன்றும் ஒரு வண்ணம்.பசியைத்தான் இத்தனை ராகங்களில் பாடி இருக்கிறார்.
மயான காண்டம் கதையில்,பிணமே விழாத ஊரில், பஞ்ச காலத்தில், தொடரும் பட்டினியால் தவிக்கும் பிணம் எரிக்கும் பண்டிதன் தன் குல மரபுப்படி தன் குடும்பத்தின் பட்டினியை ஊருக்குத் தெரிவிக்கச் சங்கு எடுத்து மயானக்கரையில் நின்று ஊதும் காட்சி மனதை நடுக்கமுறச்செய்யும். பட்டினியை சங்கின் ஒலியாக மாற்றி ஆறு, வயல், வண்டிப்பாதை எனப் பரவவிட்டு இப்பிரபஞ்சமே பட்டினியைக் குரலாகக் கேட்க நேரும் மாயத்தை ‘மயான காண்டம்”கதை செய்திருக்கிறது.
“செல்லையாப் பண்டிதன் வீட்டில் அடுப்பு எரிந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டன.நேற்றும் முந்தா நாளும் ,பட்டினிக்கும் பசிக்கும் சமய சஞ்சீவியாக உபயோகப்பட்டு வந்த மரச்சீனிக்கிழங்கும் இன்றைக்குக் காலையோடு சரி.ஊருக்குள்ளிருந்து அழுகைச்சத்தம் கேட்கிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு பத்து நாட்களாகக் காத்திருந்தும் பார்த்தாயிற்று.ஊருக்குள் துஷ்டி விழுகிற பாட்டைக்காணோம்.”
என்று துவங்கும் கதை பண்டிதருக்கும் அவர் மனைவி செல்லம்மாவுக்குமான சண்டைகளுக்கூடாகப் பயணிக்கிறது. வாய்விட்டு யாரிடமும் கேட்கத் தன் மானம் இடம் தரவில்லை. இரட்டைச் சங்குகள் கட்டிய கயிற்றைத் தோளில் போட்டுக்கொண்டு வெளிக்கிளம்புகிறான்.
“பண்டிதனின் குலதெய்வம் சொள்ளமாடசாமி. ரொம்பவும் கஷ்டம் வரும்போது அந்தச் சங்குகள் இரண்டையும் வாயில் வைத்து சொள்ளமாட சாமியின் சந்நிதியில் நின்றுகொண்டு ஆங்காரத்துடன் அவன் ஊதுகிறது உண்டு. இந்தச் சங்கொலியில் ,தாங்கமுடியாத சோகம் கவிந்து மனசையே அலசிப்பிழிகிறபோது ,’சுடுகாட்டு வெட்டியானுக்கு ரொம்பக் கஷ்டம் போலிருக்கே .அதனாலதான் சாமிகிட்ட மொறையிடுதான்’ என்று ஊர் முழுக்கப் பேச்சு நடக்கும்.” மறுநாள் ஊர்ப்பெரியவர்கள் எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்து அவனுக்கு ஏதாவது பணமோ தானியமோ கொடுத்து உதவுவார்கள். அந்த நம்பிக்கையில் இன்று சங்கு எடுத்துக்கொண்டு போகிறார்.
“சாமி எங்கஷ்டத்தைத்தீருமய்யா..” என்று சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிறமாதிரி கத்தி விட்டு ,தோளில் கிடந்த சங்குகளை எடுத்து வாயில் வைத்து மூச்செடுத்து ஊதினான்.மரத்திலிருந்த நாரைகள் கிளைகள் முறிவது போல் சடசடவென்று இறக்கையடித்துக்கொண்டு பறந்தன. அக்கரையேறிவிட்ட வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். வயிற்றுப்பசியையெல்லாம் வாய்வழியே காற்றாக்கி சங்குகளை ஊதினான்.
செல்லம்மா வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.பண்டிதனின் சங்கொலி ஆற்றங்கரை மணல்,ஆற்றுத்தண்ணீர்,அக்கரையிலுள்ள பச்சை வயல் வெளிகள்,வண்டிப்பாத சுற்றிக்கொண்டு போகிற வெள்ளிமலைக்குன்று இதையெல்லாம் தொட்டுத் தாண்டிப் போய்க்கொண்டேயிருந்தது. அன்றைக்கு ரொம்ப அபூர்வமாய்,ஒரு சங்கீதக் காரனைப்போன்ற கம்பீரத்துடன் மூச்சடைக்க ,கண்களில் நீர் வழிய வழிய ஊதினான்.மனசில் கொட்டிக்கிடந்த ஆவேசம் தீரும் மட்டும் ஊதிவிட்டு நிறுத்தினான்.”
இத்தோடு கதையை முடித்திருந்தாலும் அற்புதமாகத்தான் இருந்திருக்கும்.கதைக்கு ஒரு காவியத்தன்மை கூடக் கிடைத்திருக்கும். ஆனால் அப்புறமும் மூணு வரி எழுதுகிறார் வண்ணநிலவன்.
“கொஞ்ச நேரத்துக்குச் சாமியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.ஆலமரத்தடியில் முழுவதுமாக இருட்டு கவிந்துவிட்டது. திடீரென்று சாமி முன்னால் நகர்ந்துபோய் ஆலமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய தகர உண்டியலைப் பிடுங்கி,இடுப்பில் வேஷ்டி முந்தியில் கட்டிக்கொண்டு,ஆலஞ்சருகுகள் சரசரக்க வீட்டை நோக்கி நடந்தான்.”
வண்ணநிலவன் பசியைக் காவியப்படுத்த விரும்பவில்லை.நாளை ஊர்ப்பெரியவர்கள் வந்து உதவுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கண் முன்னால் தொங்கும் உண்டியல்தான் சொள்ளமாடன் கைகாட்டியது என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.நாளை வரை காத்திருந்து கௌரவம் காக்க பண்டிதருக்கு முட்டுப்பசி அல்லவே?வயிற்றுப்பசி அல்லவா?
‘அழைக்கிறவர்கள்’ கதையில், இடையில் கண்பார்வை இழந்த ,உடல் நலம் குன்றிய குடும்பத்தலைவனை காலையில் மனைவியும் குழந்தைகளும் எழுப்பி , அழைத்துக்கொண்டு போய் குடும்பப் போட்டோவுடன் மாம்பலம் ஸ்டேசனில் உட்கார வைத்து,விரித்து வைத்த துண்டில் விழுகிற காசைக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அவரைக் காலையில் அவர்கள் எழுப்புகிற காட்சிதான் கதை.இன்று அவர் எழாமல்போனால்? என்கிற நித்ய பயத்துடன் எழுப்புவார்கள். அந்தப்பயம் பட்டினி என்னும் கத்தி தலைமேல் தொங்கும்போது உண்டாகும் பயம்.
’மிருகம்’ கதை ஜாக்லேண்டனின் ’உயிராசை’ கதையை ஒத்த ஒரு உன்னதமான படைப்பு. தோழர் லெனின் இறப்பதற்கு முன்னால் தோழர் குரூப்ஸ்காயாவை வாசிக்கச் சொல்லிக் கேட்ட கதை என்கிற பெருமை உயிராசை கதைக்கு உண்டு. பஞ்சத்தினால் மக்கள் வெளியேறியபின் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிற ஒரு மனிதனுக்கும் ஒரு நாய்க்குமான போராட்டம்தான் கதை.
”ஒரு வெள்ளை நாய் அந்த வீட்டுப் புறவாசல் கதவு இடைவெளிக்குள் முகத்தைச் சொருகித் திறக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தது. கதவு கொஞ்சங்கொஞ்சம் திறந்து திரும்பவும் மூடிக்கொண்டது. சிவனு நாடாருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. வேகமாக எழுந்து வீட்டைப் பார்க்க நடந்தார். இவர் வருகிற சத்தம் கேட்டு நாய் இவரைப் பார்த்துவிட்டு திரும்பவும் கதவைத் திறக்கப் பிரயாசைப்பட்டது. குனிந்து கல்லைத் தேடினார். எங்கேயுமே கல்லைக் காணவில்லை.
மழையில் கரைந்து போய் நின்றிருந்த மண் சுவரிலிருந்து துண்டுச் செங்கல், ஓட்டாஞ்சல்லி, ஜல்லிக் கற்களைப் பெயர்த்து எடுத்து நாயைப் பார்த்து எறிந்தார். நாய் தூர ஓடிப்போய் நின்றுகொண்டது. அது பக்கத்தில் வருவதற்குள் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டார். கதவைச் சாத்தினதும் நாய் ஓடிவந்து கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றது கேட்டது. வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அவருக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.”
”நெல் குதிர் இருந்த எதிர்த்த பக்கத்துக் கதவுக்குப் பின்னால் ஒரு பழைய ஓவல் டின் டப்பா உட்கார்ந்திருந்தது. ஆசையோடு அதைப் பார்க்க நடந்தார். அருகே போனதும் அதிலிருந்து எறும்புகள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. டப்பாவைத் தூக்கி மூடியைத் திறந்து பார்த்தார். அடியில் கொஞ்சம் கருப்புக்கட்டித் தூள் கிடந்தது. அந்தத் தூளை வைத்து இரண்டு வேளை காப்பி போடலாம். டப்பாவைத் தரையில் வைத்து கதவுக்கு முன்னால் உட்கார்ந்து தட்டினார். எறும்புகள் சிதறி ஓடின. அடுப்படிக் கதவு அவ்வப்போது கொஞ்சம் திறந்து மூடுவதும், திறந்த சமயங்களில் நாயின் கறுப்பு மூக்கு மட்டுமாகத் தெரிந்தது.”……
இந்தத் தடவை நாய் முகத்தை கதவுக்குள்ளே நுழைத்த போது கதவோடு சாய்ந்து தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அழுத்தினார். நாய் இதுவரை அவர் கேட்டிராதபடி புது மாதிரியான குரலில் ஊளையும், சத்தமும் கலந்து போட்டது. அந்தச் சத்ததைக் கேட்டு கதவின் இறுக்கத்தைத் தளர விட்டுவிடுவோமோ என்று அவருக்குப் பயமாக இருந்தது. ஏதோவொரு உலுக்கலுக்குப் பிறகு கதவு நன்றாகப் பொருந்தி நிலைச்சட்டத்துடன் மூடிக்கொண்டது. பயத்துடன் திரும்பி கதவைப் பார்த்து நின்றார். வெளியே அந்த வினோதமான சத்தமும், ஊளையும் கலந்து கேட்டுக்கொண்டே போய் சிறிது நேரத்தில் தேய்ந்து விட்டது. நாய் முகத்தைக் கொடுத்து கதவைத் தள்ளின இடத்தில் சில ரத்தத்துளிகள் சிதறிக் கிடந்தன. இன்னும் பயம் தீராமல் டப்பாவை இறுகப் பிடித்தபடியே உள்ளேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தார்.
நாய் ஒளிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு, ரொம்பவும் ஜாக்கிரதையாக, தன் கண்ணுக்கு எட்டின தூரம் வரை எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே தன் வீட்டுக்குப் போனார். தெருவில் எல்லா வீடுகளும் பூட்டிக் கிடந்தது அந்தப் பகலிலும் பயத்தைக் கொடுத்தது. அந்த நாய் எங்கேயாவது ஒளிந்து கிடந்து தன்னைத் தாக்கும் என எண்ணினார். நாய் வந்தால் ஏதாவது ஒரு பக்கம் ஓடித் தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக நடுத்தெருவில் நடந்து போனார். வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போது நார்ப்பெட்டியின் ஞாபகம் வந்தது.
வீட்டுக்குள் நுழைந்து கதவை அவசரமாகச் சாத்தினதும் இவ்வளவு நாளும் உணர்ந்திராத நிம்மதியை உணர்ந்தார். தீப்பெட்டியில் மூன்று குச்சிகளே இருந்தன. ஒரே குச்சியில் நெருப்பு நிச்சயமாகப் பற்றிக்கொள்ளும் என்று திருப்தியாகும் வரை தீயைப் பற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அன்று மாலையும் இரவிலும் அவர் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. காலையில் தூங்கி விழித்ததும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.
நாய் வாசலில் உட்கார்ந்திருந்தது.
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மொழியிலும் சுதி சுத்தமான கதை இது.
வண்ணநிலவனின் கதைகளில் அதிகம் பேசப்பட்ட,விவாதிக்கப்பட்ட கதை எஸ்தர்தான். பஞ்சத்தின் கொடிய கரங்கள் பின்னிருந்து இயக்க, தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் பஞ்சமே இயக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தும் உணராமலும் வாழ்வைக்கடத்தும் மனுஷர்களின் கதை. எஸ்தர் சித்தி என்னும் ஆளுமை மிக்க பெண்ணின் ஆளுகையின் கீழும் அரவணைப்பிலும் வாழும் ஆண்கள் பெண்களின் வாழ்க்கைக்கதை இது. பஞ்சத்தில் நீரின்றிப் பட்டுப்போன பயிர்களையெல்லாம் மாடுகளை விட்டு அழித்துவிட்டு வா என அவ்வீட்டின் வேலைக்காரன் ஈசாக்கை சித்தி அனுப்புவாள்.
ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்கிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவான். “மஞ்சள் வெயில் அடித்தால் நாளை மழை வரும்” என்று அவன் சொன்னால் மழை வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழைகாலத்து வெயிலின் நிறமும் பற்றி ஈசாக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்க்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும், ஆடுமாடுகளுக்காகவும் மட்டுமே உலகத்தில் வாழ்ந்து வந்தான்.
ஆனாலும் ஈசாக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாக திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப்போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தானே அவனைப் போகச்சொன்னாள் எஸ்தர் சித்தி. காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதென்றால் அவனுக்கு என்ன நஷ்டம்? ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம் கூட இல்லை தான் அது.
குழந்தைகள் ஆண்டில் என்றொரு கதை.பெற்ற குழந்தைகளுக்குச் சாப்பாடு போட வக்கற்ற தகப்பன் ஒரு பெண்குழந்தையைமட்டும் பாட்டி ஊருக்கு அனுப்பி வைக்கிறான். ஒரு சுமை குறையும் என்றும் அவள் ஒருத்தியாவது வயிறாரச் சாப்பிடட்டும் என்றும் நினைத்து. ஆரம்பத்தில் தாத்தாவும் பாட்டியும் அவளை நன்றாகத்தான் ஆதரித்து வளர்க்கிறார்கள்.
தாத்தா பக்க வாதம் வந்து படுக்கவும் அந்த வீட்டிலும் பஞ்சம் வந்துவிட, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டுப் பாட்டியோடு முள் விறகு வெட்டி, அதை விற்று ஜீவிக்கும் அன்றாடத்துக்குள் அக்குழந்தை தள்ளப்படுகிறாள். பள்ளிக்கூடத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி விறகைச் சுமந்து கொண்டே போவாள். சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு என அறிவிக்கப்பட்ட 1979 இல் வண்ண நிலவன் இக்கதையை இத்தலைப்பில் எழுதியிருக்கிறார்.
இதைவிட என்ன அரசியல் வேண்டும்.?
புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்கிற தலைப்பிலேயே வண்ணநிலவனும் ஒரு கதை எழுதியிருக்கிறார்.ஒரு கொலைக்கேசில் புருசன் ஜெயிலுக்குப் போய்விட,கர்ப்பிணியான இளம் மனைவி வண்டி மலைச்சி,பசிக்கொடுமை தீர, போலீசுக்குத் தெரியாமல் கள்ளச்சாராயத்தைக் கடத்தும் தொழிலுக்கு வருகிறாள்.ராத்திரிக் கடத்தும் போது போலீசிடம் பிடிபட்டு கோர்ட்டில் நிற்கிறாள்.அறிந்தே கிணற்றில் விழும்படி அவளைத்துரத்துவது எது?
இரண்டாவது சொர்க்கம் கதையில் பசிப்பிணியிலிருந்து விடுபடுவதற்காகவே மதம் மாறிக் கிறித்துவத்துக்குள் ஐக்கியமாகும் ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறார்.
இந்த எல்லாக்கதைகளிலும் எது அறம்?அது சரி அல்லது தவறு என்பதை கதையின் எந்த இடத்திலும் வண்ணநிலவன் குறுக்கிட்டோ கதாபாத்திரங்களின் மீதேறியோ ஒரு சொல்லைக்கூடச் சொல்லிவிடவில்லை.எல்லா அறத்தையும் நீதியையும் கதைகளே பேசுகின்றன.அங்கேதான் அது இலக்கியமாகிச் சுடர்கிறது.
வண்ணநிலவன் கதைகளின் ஒரு முக்கியமான முகம் இது.
அவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும் நாவல்களிலும் ”எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த சிநேகங்களும் பிரியங்களும்தான் காரணம்.” என்கிற செய்தியை விதவிதமான மொழியிலும் தொனியிலும் வாசத்திலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
சாதி அபிமானமோ சாதித் துவேஷமோ இல்லாத அவருக்குக் கிடைத்த வாழ்வனுபவம் திருநெல்வேலி சைவ வேளாளக் குடும்பப்பின்னணியிலிருந்து என்பதால், பல கதைகள் சைவ வேளாளச் சித்தரிப்புகளாகவும் அவர்களின் பேச்சு மொழியிலும் அமைந்து விடுகிறது. அந்த ’உள்ளூர்மயம்’ அவருடைய கதைகளுக்கு ஒரு அழுத்தத்தையும் நம்பகத்தன்மையையும் மண் வாசத்தையும் அளிக்கின்றன.கதை சென்னைக்குப் போனாலும் திருநெல்வேலி மொழியில்தான் பேசுகிறது.
திருநெல்வேலியின் வாழ்ந்துகெட்ட பிள்ளைமார் சமூகத்தின் வாழ்வைப் பல கதைகள் பேசுகின்றன. யுகதர்மம்,காரைவீடு, குடும்பச்சித்திரம், அந்திக்கருக்கல், அவர்கள், விடுதலை, விமோசனம், பிழைப்பு, ராஜாவும் வாரிசுகளும் போன்ற கதைகள் கீழிறக்கப்பட்ட வாழ்வைப் பேசுகின்றன.
கெட்டதுக்குக் காரணமாக அநேகமாக பொறுப்பற்ற குடும்பத்தலைவர்களே அல்லது அவர்களது ஆண் பிள்ளைகளே காரணமாக அமைகின்றனர். சிறு நில உடமைச் சமூகமாக இருந்த ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறையின் வீழ்ச்சியை,அந்த வீழ்ச்சி மனித உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை, உயிரோட்டத்துடன், விதம் விதமாக இக்கதைகளில் இசைக்கிறார்.
’காரைவீடு’ கட்டி வாழ்ந்த குடும்பத்தின் பெரியபிள்ளை அந்த வீட்டை விற்றுப் பத்திரம் எழுதப்போகிற அந்த ஒருநாளின் அதிகாலைப்பொழுதில் கதை துவங்குகிறது. குடும்பப்பொறுப்பும் சம்பாதிக்கத் துப்பும் இல்லாத இரண்டு ஆண்மக்களால் இக்கதையில் வீழ்ச்சி வருகிறது. ஊரே கொண்டாடிய அந்தக் காரைவீட்டை விற்றுக் கையெழுத்திட்ட பின் “வீட்டுக்கு வந்ததும் பெரியபிள்ளை,அந்தக்காரை வீட்டைத் தான் கட்டின பெருமையை விஸ்தாரமாக எல்லோருக்கும் சொல்ல ஆரம்பித்தார்.
அன்று முழுவதும் சொன்னார். அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் சொன்னார். அந்த வீட்டிலிருந்து தட்டாக்குடித்தெருவிலுள்ள ஒரு சின்ன வீட்டுக்குக் குடி வந்துவிட்ட பிறகும்கூட அந்தக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்-அதாவது ,அவர் அந்தக் காரை வீட்டைக் கட்டின கதையை.எல்லோரும் சொன்னார்கள்,அவருக்குப் புத்திக்குச் சரியில்லாமல் போனதென்று.”
இந்த வீடுகளில் கிடந்துழலும் பெண்கள் எல்லாவற்றையும் போட்டுடைத்தும்,ஆண்களை மட்டந்தட்டியும் பேசுபவர்களாக வருகிறார்கள். குடும்பச்சித்திரம் கதையில் வாசலில் நின்று செருப்பைக் கழுவ ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச்சொல்லிச் சத்தம் கொடுக்கிறார் ரங்கநாதபிள்ளை. தாய் மகளைச் சொல்ல, மகள் தாயைச் சொல்ல, பிள்ளைவாளுக்குத் தண்ணி வந்து சேரவில்லை.மகள் சொன்னதைச் செய்ய மறுத்ததும் தாய் செம்பகத்தம்மா கூப்பாடு போடுகிறாள்.
“ யய்யா…வாசல்ல நிக்க கவர்னரய்யா”கேட்டயளா கதய..?ஒரு சொம்புத் தண்ணி மோந்து கொடுக்கச்ச்சொன்னதுக்கு இத்தன கூத்து… கேட்டுக்கிட்டுத்தான நிக்கிய…? உங்களுக்குப் படிக்கட்டு ஏறயிலேயே வீட்ல எல்லாந்தாயாரா இருக்கணும்.. அவுரு சின்னக் கலைக்கட்டரு எங்க போயிருக்காரோ தெரியல.. அவருக்கு குளிக்க வென்னியில இருந்து பல்லுத்தேச்சு வுடுதது வரைக்கியும் இந்தப் பொம்பளதான் செஞ்சாகணும். இன்னும் அவர ஆபீஸ்ல கொண்டுபோயி விட்டுட்டுத்தான் வரல நான்.. இந்தச் செம்பகத்தம்மா ஒருத்தி கெடக்கப்போயித்தான் எல்லாரும் ஆளு ஆளுக்கு அதிகாரம் பண்ணுதீய…? அட ராமா…” இக்குரல் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் குரலாகவும் விரிவு கொள்வதைப்பார்க்கிறோம்.
”அவர்கள்” கதையில் பற்பனாத பிள்ளை ரெண்டு கத்திரி சிகரெட் வாங்க வக்கற்றுப்போய் மணி கடையில் கடனாக ரெண்டு சிகரெட் கேட்க அவன் …ச்சேய்…ஒங்களோட பெரிய தொந்தரவாப்போச்சே ” என்று கடை வாசலில் வைத்தே அவரை அவமதிக்கிறான்.
“பற்பனாத பிள்ளைக்கு கோபம் வரவில்லை. அவர் சிரித்தார்.”: சர்த்தாம்டே இன்னும் ஒரு வாரத்துல வய நெல்லு வித்து வந்துரும்..அப்பம் பைசா பாக்கி இல்லாமல் பைசல் பண்ணிருதம்ப்பா..ரெண்டு சிகரெட் குடு.”
“எத்தனை மாசமா நெல்லை வித்துத் தாரேன்.. நெல்லை வித்துத் தாரேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேரு!ஒம்ம வயல் பருவம் பாக்கிறவனக் கேட்டா.. அவருக்கு ஊர்ல ஒரு செண்டு நெலம் கூடக் கெடையாது,எல்லாத்தையும் வித்துச் சாப்புட்டாரு.. அப்படின்னு சொல்லுதான். நீரு என்னடான்னா நெல்லு வித்து ரூவா வரும்னு சொல்லுதேரு!ஆரு கிட்டக் காது குத்துதேரு?” என்றான்.
மரியாதையைக் குறைத்துவிட்டான். நேற்றும் இப்படித்தான்.’நீங்க நாங்க’என்று பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று ‘நீர்’ என்று பேச ஆரம்பித்துவிட்டான். ஆனால் கடைசியில், பிச்சை போடுகிற மாதி ஒரு கத்திரி சிகரெட்டை எடுத்துக் கையில் போட்டான்.
…..பற்பனாத பிள்ளைக்குக் கண்கலங்கி விட்டது.ஒரு காலத்தில் அதே மணி கடையில்தான் அவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது?அவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே போதும்.ஒரு பாக்கட் கத்திரி சிகரெட்டைத் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு நிற்பான்.
மெதுவாக நகர்ந்தார்.
நில உடமையாளர்களாகச் செழிப்பாக வாழ்ந்த இவர்கள் இப்படி வீழ்ந்திட்டார்களே என்பதல்ல வண்ணநிலவன் கதைகளின் கவலை. வீழ்ந்தாலும் இவர்கள் இன்னும் எப்படித் தெத்திக்கொண்டு திரிகிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி முன் வைக்கிறதுதான் அவர் செய்யும் வேலை. எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் சார்பு கொள்ளாத ஒரு இடத்தில் தன்னை வைத்துக்கொண்டு கதை சொல்கிறார். அவரவருக்கு அவரவர் கோணம் என எல்லாக்கோணங்களையும் நம் முன் வைத்து விடுகிறார்.
‘அந்திக்கருக்கல்’ என்னும் கதையில் வரும் பெரியவர், நடக்கமாட்டாத நிலையிலும் தன் மகன் கோவில்பிச்சையைத்தேடிப் போகிறார். அவன் தன் மனைவி ரெஜினாவை விட்டு விட்டு பரிமளம் என்கிற வேறொருத்தியோடு அதே ஊரில் வேறு தெருவில் இருந்து வருகிறான். அவனைச் சத்தம் போட்டு வீட்டுக்கு அழைத்து வரும் நோக்குடன் அவ்வீட்டுக்குப் போகிறார். இவர் வரவை அறிந்து அவன் மாடியில் போய் இருந்துகொள்கிறான்.அந்தப்பெண் பரிமளம்தான் அவரை வரவேற்று உபசரிக்கிறாள்.
“உங்கிட்டச் சண்டை போடணும்னு வந்தேன்” என்றார்.
“நல்லாச் சண்டை போடுங்க..!ஒங்க மருமவட்ட சண்டை போடதுக்கு ஒங்களுக்கு உரிமை இல்லியா..?காப்பியக் குடிச்சுப் போட்டுச் சண்டை போடுங்களேன்..ஒங்கள ஆரு வேண்டாமுன்னது..?” என்று அவள் கேலியும் சிரிப்புமாகச் சொன்னாள். தொடர்ந்து அவள் உரிமையோடு பேசிய பேச்சுக்களும் எனக்குன்னு இந்த ஊர்லே யாரு மாமா இருக்காங்க?பெத்து வளத்தவுக இருக்காகளா..,இல்ல கூடப்பொறந்ததுக இருக்கா?ஒருத்தருங் கெடையாது.. இவுக ஒருத்தரு இல்லன்னா இந்த ஊருல என்னை ஏன்னு கேக்க ஒரு நாதி கெடையாது”என்றாள்.
அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் அந்தக்காட்சி தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் தனித்த இடம் பெறும் காட்சியாகும். அவளை ஆசீர்வாதம் செய்துவிட்டுத் திரும்பி விடுகிறார்.
அன்பிலே எல்லாம் கரைந்து போவதை மீண்டும் இக்கதையில் சொல்லியிருக்கும் வண்ணநிலவன் எல்லாத்துக்கும் காரணமான அந்தப்பயல் கோயில்பிச்சை மீது நமக்குக் கோபம் உண்டுபண்ணாமல் விட்டு விடுகிறார். அந்த அரசியல் எனக்கு வேண்டாம் என்று கையைக் கழுவி விடுகிறார். இன்னின்ன மாதிரி இப்பிடியிப்பிடி இருக்காஹன்னு சொல்றதோட நிப்பாட்டிக்கொள்கிறார். இது நியாயமா அண்ணாச்சி என்று கேட்க வேண்டியது நம்ம அரசியல்.
நில உடமை உறவுகளில் அடிப்படையான ஒன்று நில உரிமையாளருக்கும் குத்தகை பார்க்கிறவருக்கும் இடையிலான உறவு. கு.ப.ராவுக்கு ஒரு ‘பண்ணைச் செங்கான்’ கதை அமைந்ததுபோல வண்ணநிலவனுக்கு அமைந்தது “மேட்டு வயல்” என்னும் கதை.
செல்லையாவுடைய அய்யா இருக்கும்போது தூதுவழி பத்தில் ஏழுவயல்களை அவனும் அய்யாவுமாக பருவம் பார்த்து வந்தார்கள். வீடெல்லாம்நெல்மூட்டைகளும் மாடுகளும் கன்றுகளுமாகக் கொழித்திருக்கும். அய்யாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்த பின் வீட்டிலிருந்த ‘வர்க்கத்து’ போய்விட்டது. இப்போது மூன்று வயல்கள்தான் இருக்கின்றன. பள் கம்பெனிகாரர் வீட்டு வயல்கள் இரண்டு. இன்னொன்று எட்வர்ட் ஐயா வீட்டு வயல்.
எட்வர்டு ஐயா வீட்டு வயலை அவனுடைய குடும்பம்தான் பருவம் பார்த்து வருகிறது. அந்த வயலுக்கு மேட்டு வயல் என்று பெயர்.
இப்போது அந்த ”மேட்டுவயல் அடவோலையை தவசிக்கி மாத்தியாச்சாம்ல….? ” என்று ஒரு தகவல் அவனுக்கு வருகிறது. எட்வர்டு அய்யா வீட்டுக்கே போய் அவரிடம் நியாயம் கேட்கிறான்.
“சண்டை போடணும்னு வந்து நிக்கியா?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் எட்வர்ட்.
“சண்டை எல்லாம் ஒண்ணும் போட வரலீங்க அய்யா..? பரம்பரை பரம்பரையா பருவம் பாத்துக்கிட்டு இருக்க வயலைப்புடுங்கி வேற ஆளு கையிலே குடுத்தா நாங்க எப்பிடிப் பொழைக்கது”
“இம்புட்டுப் பேசுதீயே?நீ அந்த வய நெல்லை ஒழுங்கா அளந்து எத்தனை வருஷம் ஆச்சு..?கேட்டா,தண்ணி ஏறலை,தண்ணி ஏறலைன்னு சொல்லி கட்டுக்குத்தகை நெல்லைக் கொறைச்சுப் போட்டே..பெறவு அடவோலைய மாத்தாம என்ன செய்யிறது?”
“அப்பம் ஒங்கிட்டே கேட்டுட்டுத்தான் செய்யணும்கிறீயா..? நீ எந்தக் கோர்ட்டுக்கு வேணும்னாலும் போ..ஒன்னால் ஏண்டதப் பாரு..”
கதையில் செல்லையா கோர்ட்டுக்குப் போகவில்லை. எட்வர்ட் அய்யாவின் சம்சாரம் ரோஸலின், செல்லையா மீது கொண்ட பரிவினால் அவள் அய்யாவிடம் பேசி அவனுக்கே அடவோலையை மாத்திக்கொடுத்துவிடுகிறாள்.
செல்லையாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.”நீங்க நல்லா இருக்கணும்மா..”என்று கையெடுத்துக் கும்பிட்டான்.அன்னத்தாயும் கும்பிட்டாள்.
கடைசியில் அன்புதான் சாதிக்கிறது. யாரும் அன்புக்கு எதிராக வாதாட முடியாது. அன்பினால் எல்லாமே முடிந்துவிட்டால் வேறு என்ன வேண்டும் மனித வாழ்வில்? ஆனால் குத்தகை விவசாயிகள் நிலம் சார்ந்த தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எண்ணற்ற போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்பதுதானே வரலாறு. அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அன்பினால் எந்த நில உடமையாளனும் மனம் இளகிவிடவில்லை. விதிகளைப் பேசாமல் விதிவிலக்குகளைப் பேசுவது யதார்த்தமாகுமா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.
உடமையாளரின் அன்பையும் கருணையையும் பரிவையும் எதிர்பார்த்து நிற்பதை விட சட்டப்பூர்வமான உத்தரவாதமான ஏற்பாடுகள்தானே செல்லையாக்களின் வாழ்க்கை தடுமாறி விழாமல் தொடர உதவியாக இருக்கும்?கதைத்தேர்வில் செல்லையாவின் பிரச்னையை எடுத்ததில்வண்ணநிலவனின் அரசியல் வெளிப்படை.அங்கு எழும் முரண்பாட்டை மேலே வளர்த்துக்கொண்டு போகவிடாமல் அவருடைய ’அன்புவழி’ அரசியல் குறுக்கீடு செய்து முடித்து வைத்துவிடுகிறது.
உடல் உழைப்புத் தொழிலாளிகளின் வாழ்வையும் அவர்களின் மேன்மையான மனநிலைகளையும் சில கதைகளில் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் வண்ண நிலவன். “கெட்டாலும் மேன்மக்கள்” அப்படி ஒரு கதை.
சோடா,கலர் தயாரிக்கும் சிறிய கம்பெனி ஒன்றின் ஊழியரான சுப்பையா சைக்கிள் கேரியரில் பாட்டில்களைச் சுமந்து கொண்டு சென்று ஊர் ஊராக,கடை கடையாகப் போட்டு வருபவன். கடையின் முதலாளி திடீரென இறந்துவிட,அவருடைய மனைவி பொறுப்பெடுத்துக் கம்பெனியை நடத்தும் சூழல். சுப்பையாவுக்கும் வேலைப்பளு அதிகரிக்கிறது.
சைக்கிளில் சுப்பையா போகும் பயணத்தில் கதை துவங்குகிறது.குறுக்கிடும் ஆற்று மணலில் பசியோடு லோடு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்கிறான்..
……எதிரே ஒரு பெண் கடகப்பெட்டியுடன் வந்துகொண்டிருந்தாள்.ஏதாவது வியாபாரமாக இருக்குமோ என்று தோன்றியது.தின்கிற பொருளாக இருந்தால் வாங்கிச் சாப்பிடலாமே என்று நினைத்து,சைக்கிளை எடுக்கமலே நின்றான்.
“பொட்டியிலே என்னம்மா?யாவாரமா…?”என்று கேட்டான்.
“யாவாரந்தா.மொச்சைப்பயறு.வேணுமா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் வந்தாள்.
“நல்லா இருக்கணும்மா நீ..நல்ல நேரத்தில வந்த..ஆழாக்குப் பயறு போடு”
அவள் பெட்டியை இறக்கி மணலில் வைத்தாள்.பயறை அளந்து கொண்டே,”பேப்பரு இல்ல.கையில வாங்கிக்கிடும்”என்றாள்.
“சும்மா போடு” என்று இரண்டு கைகளையும் அகல விரித்துப் பயறை வாங்கினான்.பயறு ருசியாக இருந்தது.இரண்டே வாயில் அவ்வளவையும் தின்று விட்டான்.
“இன்னொரு ஆழாக்குப் போடட்டா…” என்று கேட்டாள்.
“போதும் தாயி,,,”
எவ்வளவென்று விசாரித்துத் துட்டை எண்ணிக்கொடுத்தான்.கடகப்பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினாள். அவன் பின்னாலேயே போய் தண்ணீரில் இறங்கித் திரும்பவும் ஒருவாய் தண்ணீரை அள்ளிக்குடித்தான். ரொம்பத்தெம்பாக இருந்தது.காற்றுவேறு சுகமாக வீசிக்கொண்டிருந்தது.மணலுக்குள் சைக்கிளைத் தள்ளுவது கூடச் சிரமமாக இல்லை.
இது ஓர் அற்புதமான காட்சி. எங்கள் கரிசல் வட்டாரத்திலும் இப்படிக் காடு கரைகளில் வேலை பார்க்கும் ஜனங்களைக் குறிவைத்துப் பயறும் கிழங்கும் அவித்துக்கொண்டு கடகப்பெட்டியோடு பெண்கள் யாவாரம் செய்வதுண்டு. உழைப்பாளி மக்களின் பசியடக்கும் அமிர்தமாக இந்தப் பயறுகளும் கிழங்குகளும் எப்போதும் எல்லாப் பிரதேசங்களிலும் இருக்கும் போல. முதன்முறை இப்பகுதியை வாசிக்கும்போது எனக்குக் கண்கலங்கிவிட்டது.பசியடங்கியதும் காற்று சுகமாக வீசுவதும்கூட இயற்கையின் நீதி போலும். அல்லது பசியடங்கிய பிறகுதான் வீசும் காற்றும் உரைக்கும் போலும்.
இக்கதை முடியும்போது,ராத்திரி சுப்பையா ஊர் திரும்பி கம்பெனி வாசலில் சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்துகிறான். வாசல் படியிலேயே முதலாளியம்மா சந்திரா உட்கார்ந்திருக்கிறாள். கணவரை இழந்த பின் மனநிலை சரியில்லாத ஒரு குழந்தை உள்ளிட்டு இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு பாட்டில் தயாரிப்பிலிருந்து எல்லா வேலைகளையும் அவளே இழுத்துப்போட்டுப் பார்க்கிறாள். வீட்டுக்குக் கிளம்பும் சுப்பையாவை நிறுத்தி அவள் பேசுகிறாள்.
“ அய்யா போனம் பொறவு ஒனக்கு வேலை ஜாஸ்தியாப்போச்சு.லையனுக்கும் போய்க்கிட்டு கம்பெனிக்கு வேண்டிய சாமான்களும் நீதான் வாங்கிட்டு வாரே”
”அதனாலே என்ன தாயி..”
”கூட ஒரு ஆளாவது போடணும் இல்ல உனக்குச் சம்பளமாவது கூட்டித்தரணும்”
“அந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் நெனைக்காதியம்மா..”
“அடுத்த வாரத்தில இருந்து என்னால ஏண்டதக் கூட்டித்தாரேன்.ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கிடாத சுப்பையா…”என்றாள்.சொல்லும்போதே தொண்டை அடைத்தது.கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
“நான் ஒங்ககிட்ட சம்பளத்தைக் கூட்டித்தாங்கன்னா கேட்டேன்? ரெண்டு புள்ளைகளையும் வெச்சுக்கிட்டு நீங்க தனியா நின்னு தட்டழியதப் பாத்தா அந்த நல்லதங்காளக் கொடுமைப்படுத்துன மூளி அலங்காரி கூட மனசு தாங்க மாட்டாம்மா. நான் சம்பளத்துக்காக இங்கே வேலைக்கு நிக்கலம்மா.. செத்துப்போன அய்யாவையும் உங்களையும் ,இந்த ரெண்டு புள்ளைகளையும் நெனைச்சுத்தாம்மா வேலைக்கு நிக்கேன். ஒழைச்சுத் தாரதத் தவிர ஒங்களுக்கு ஒதவ எங்கிட்ட வேற ஒண்ணுமில்ல நாச்சியாரே …”
சந்திரா தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தாள்.
இதே போல இன்னொரு கதை ‘பிணந்தூக்கி’ அக்கதையில் பிணத்தைக் குளிப்பாட்டித் தூக்கிப் போகும் உள்ளூர்த்தொழிலாளி ரங்கன், போட்டோ ஸ்டூடியோ அதிபரான பாப்புப்பிள்ளை மரணமடைந்த வீட்டுக்கு வருகிறார். அவர் உயிரோடு இருந்தபோது அவனை மனுசனாக மதித்தவர்.ரங்கன் கல்யாணமாகிப் பெஞ்சாதியுடன் சேர்ந்து அவர் ஸ்டூடியோவில்தான் போட்டோ எடுத்துக்கொண்டான். முதல் குழந்தை பிறந்த போதும் அது குப்புற விழ ஆரம்பித்த சமயத்தில்,அது குப்புற விழுந்த நிலையில் எடுத்த படமும் பாப்புப்பிள்ளை எடுத்ததுதான்.”
அதுக்கு ஒரு பைசா கூட வேண்ட மாட்டன்னுட்டாவ..போடா போ..மொதப் பிள்ளைய அருமையா நெனைச்சுப் போட்டோ எடுக்கே..அதுக்குப்போயி துட்டுத் தாராராம் தொரை..!பேசாம படத்தை எடுத்துட்டுப் போயி பிரேம் பண்ணி மாட்டுடா’ன்னு சொல்லி கடேசி வரை துட்டு வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாவ அய்யா..” என்று பிணத்தைத் தோளில் சுமந்து போகும்போது சொல்லி அழுகிறார். சக தொழிலாளிகள் இறுதிச் சடங்குகள் செய்ததற்கான கூலிக்குப் பேசிகொண்டிருக்கையில் ரங்கன் சத்தமில்லாமல் கூலி ஏதும் வாங்காமல் ரோட்டைப் பார்க்க நடக்கிறார்.
இதுதான் வண்ணநிலவனின் முகம் என அறியப்பட்ட, ஆண்-பெண் உறவு,காதல்,பழைய காதல் சார்ந்த கதைகள் இன்னொரு முக்கியமான வகைமை.
அயோத்தி, பலாப்பழம், விமோசனம், மனைவி, ராஜநாகம், அவனூர், வெளிச்சம், துருவங்கள், உள்ளும் புறமும், பேச்சி, மைத்துனி, தேடித்தேடி, அரெஸ்ட் போன்ற கதைகள் உயிர்த்துடிப்பான மொழியில் அன்பையும் காதலையும் பேசுபவை.இக்கதைகள் பெரும்பாலானவற்றில் ஒரு கணவன் மனைவி (கூடுதலாக ஒரு கைக்குழந்தை இருக்கும்) மட்டுமே வாழுகின்ற வாழ்க்கைச் சூழலே விரிக்கப்படுகிறது..
’துருவங்கள்’ என்கிற கதை.“அவளுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷங்கள் ஆகிவிட்டன.ஒரு குழந்தை கூடப் பிறந்துவிட்டது. ஆனாலும் அவளுடைய மனம் பூராவும் ஊரில்தான் இருந்தது.ஏதோ பேருக்காக அவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவனுக்கும் அவளுக்கும் எதிலுமே ஒட்டவில்லை.இரண்டு பேருடைய ருசிகளும் ,ரசனைகளும்,விருப்பு வெறுப்புகளும் நேர் எதிராக இருந்தன .எதிலுமே அவள் மட்டுமேதான் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இந்த ஆறு வருஷத்தில்,எல்லா விஷயத்திலும்,அவனுக்காக,அவன் கோபிப்பான் என்று விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து அவளே இல்லாமல் போய்விட்டாள்.அவளுக்கென்று ஒரு மனமே இல்லாமல் போக்கி விட்டான் அவன்.இவ்வளவு தூரத்துக்கு ஆளாகியும் எதையாவது முன்னிட்டுச் சண்டை வேறு போடுவான்.எத்தனை நாள்தான் பொறுத்துக்கொள்வது?எதையென்றுதான் பொறுத்துக்கொள்வது?”
என்று துவங்கும் கதை அவள் தன் ஊருக்குப்புறப்படத் தயாராகும் மனநிலையை எடுத்துச்சொல்கிறது. தனக்கென ஒரு முகமே இல்லாமல் அவன் போக்கடித்த ஒவ்வொரு நிகழ்வையும் சண்டையையும் நினைத்துப்பார்த்தபடி துணிமணிகளை எடுத்து வைக்கிறாள்.
“அவனுக்கு உடல்,பொருள்,ஆவி,அத்தனையும் தத்தம் செய்து என்னைக் கருக்கிக்கொள்ள இனியும் முடியாது.நான் நளாயினி அல்ல.நான் மெழுகுவர்த்தி அல்ல.என்னைக் கரைத்துக்கொண்டு ஒளிதர.நான் மனுஷி.சாதாரண மனுஷி.ரத்தமும் சதையுமான மனுஷி.
1985இல் வண்ணநிலவன் இக்கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதை முடிவில் புருசன்காரன் சாயங்காலம் வந்து அவளை வெளியே அழைத்துப்போகிறான். அவளும் குனிந்தவாறே அவன் பின்னால் போய்க்கொண்டிருந்தாள். அவள் இன்றும் தப்பிச்செல்லவில்லை. தொடர்கிறாள் மீண்டும் அதே வாழ்வை.
அயோத்தி,அவனூர்,மனைவியின் நண்பர் போன்ற கதைகளில் வரும் கணவன்மார்கள் தம் மனைவிமாரின் பழைய காதலையும் நட்பையும் மதிக்கிற மாண்புமிக்கவர்களாக வருகிறார்கள். இக்கதைகள் பெரும்பாலானவற்றில் கணவர்களாக வரும் ஆண்கள் போதிய வருமானம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமை அல்லது போதாமை அத்தம்பதிகளைச் சோதித்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் காதலால் அதை வென்று வாழ்வைத் தொடர்கிறார்கள். திருமண பந்தத்தை மீறிய ஆண்-பெண் பாசத்தை (மைத்துனி,ஆதி ஆகமம்,அவனூர்,அயோத்தி என) கொண்டாடும்,மதிக்கும் தன்மை வண்ணநிலவனிடம் தொடர்ந்து இருப்பதைக் காண முடிகிறது.ஒரு கலைஞன் இப்படித்தான் இருக்க முடியும்.
எந்தக்கதையிலுமே ஒடுக்கப்படும் பெண் கட்டுக்களை உடைத்து வெளியேறுவதாகக் காட்சி இல்லை. பெண் மனதை மிக நுட்பமாகப் படம் பிடிக்கும் கதைகள் வண்ணநிலவனுடையவை.பெண் மீது ஆண் செலுத்தும் மறைமுகமான வன்முறையைக்கூட அநாயசமாக வெளிக்கொண்டு வரும் கதைகள்தாம் அவருடையவை. ’ராஜநாகம்’ என்கிற குறியீட்டுக்கதை இதற்கு நல்ல உதாரணம். வக்கிரம் பிடித்த ஆடவர் குலத்தைக் குரூபியான கணவனாக சித்தரிக்கும் இக்கதை அவளைப் பாடும் நாகமாக வரிக்கிறது. நாகம் பாடப்பாடக், கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு ஆணும், தன்னைக் குரூபியாக உணரத்தலைப்படுகிறான்.
“நாகமே பாட்டை முடித்துக்கொண்டு சீக்கிரமே போய்விடு.உன் கருணையினால் நாங்கள் உயிர் பெற்றுச் செல்கிறோம். தீவினைகளிலிருந்து தப்பிக்கவே உன்னைப் பாடச்சொன்னோம்.உன் தரிசனம் கிடைத்தது. கிடைத்ததே தவத்தை அழித்து விட்டது. எங்கள் மனைவி மக்களிடம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது.நெருங்கி நின்றாடிக்கொன்று விடாதே எங்களை. உன்னைப் பூஜிப்பது தவிர வேறு கதியில்லை. நாகமே உன்னைப் பூஜிக்கிறோம்.
குரூபியான புருஷனோடு வாழ்ந்த கசப்பை உமிழ்ந்து பாடினாள். எந்த வஸ்துவினாலும் அழிக்க முடியாத பாட்டினால் தானிருந்த இடத்தை இட்டு நிரப்பினாள்.”
இப்பத்தி உண்மையில் தன் குரூர முகத்தை அறிந்து கொண்ட ஆண் குலத்தின் கதறல் என்று கொள்ள வேண்டும். மகத்தான வரிகள் இவை. ஆண்கள் தம் அசிங்கங்களை ஏற்றுக்கொள்ளும் சுயவிமர்சனப்பார்வை கொள்வது எத்தனை அற்புதமான கற்பனை.
ஆனலும், பெண் விடுதலை குறித்து எழுப்பப்படும் ஓங்கிய குரல்களில் வண்ணநிலவனுக்கு அசூயை இருக்கிறது. தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் எழுந்த முதல் பெண்ணியக்குரலான அம்பையின் கதைகள் மீதே அவருக்கு இத்தகைய உணர்வு இருந்திருக்கிறது. அம்பயின் சிறுகதைகள் பற்றி அவர் எழுதியுள்ள இப்பகுதியே சான்று:
”பெரும்பாலான ஆரம்பக் காலக் கதைகளில், அவரது கதாநாயகியரை வதைக்கும், ஆணாதிக்கம் மிகுந்த ஆண் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. ’வல்லூறுகள்’ என்ற சிறுகதை ஷியாம் பெனகலின் பழைய படங்களை நினைவு படுத்தினாலும், இது மிக முக்கியமான அம்பையின் சிறுகதை. இதிலும் ஆணாதிக்கப் பாத்திரம் வருகிறது. ஆணாதிக்கத்தால் வதைபடும் அம்பையின் இந்த ஒற்றைப் பெண்முகம் பல சிறுகதைகளில் இடம் பெற்றுள்ளது. ’பெண்’ என்ற நிலையில், அவள் எதிர் கொள்ளும் மானுடத் துயரம் இது, எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் உள்ளது. பெண்ணின் உடம்பும், அவளது மனமும் பெரும்பாலான ஆண்களால் வதைக்கப்படுகிறது என்கிற உண்மையை அம்பை விதவிதமாகத் தனது சிறுகதைகளில் எழுதுகிறார்.
ஆனால், ஆண்களை மிக மோசமாக நடத்தும், காரண- காரியமின்றியே ஆண்களிடம் கோபப்படும், எரிச்சல் படும் (இது மாத விடாய் குறித்த உளவியல் பிரச்னை என்றாலும்) பெண்களும் சமூகத்தில் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அம்பையின் கண்களில் படுவதில்லையா?ஒரு வேளை, தன்னுடைய, ’ஆணாதிக்க எதிர்ப்பாளர்’ என்ற இமேஜ் குலைந்துவிடக் கூடாது என்று அம்பை, திரும்பத் திரும்ப பெண்கள் மட்டுமே ஆண்களிடம் அவதியுறுவதாகச் சித்தரிக்கிறாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது
‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை . ”
ரெண்டுபக்கமும் தப்பு இருக்கு என்று சமமாகப் பேசுவது பெண்கள் வாழத் தகுதியற்றதாகிவிட்ட இன்றைய உலகில் நியாயமே கிடையாது என்பது என் கருத்து.பெண்ணரசியலை வண்னநிலவன் ஏற்காதது உண்மையில் வருத்தமளிக்கிறது. நியாயமாக, நடுநிலையாக இருப்பதற்கும் ஒரு அளவில்லையா அண்ணாச்சி?
இப்படி நாலு வகைகளுக்குள் வண்ணநிலவனின் சிறுகதைகளை அடைத்துவிட முடியாது.ஒரு விவாதத்துக்காகவே இப்படி வகைப்படுத்துகிறோம். வகைப்படுத்திவிட முடியாத அளவுக்கு ஒவ்வொரு கதையும் தனித்தன்மையோடு ஒளிரும் கதைகள் என்பதை நாணயத்தின் மறுபக்கம் போல இங்கே குறிப்பிட வேண்டும்.
ஆண்-பெண் உறவில் சில அபூர்வமான கணங்கள் உண்டு.நம் வாழ்வில் எப்போதாகிலும் அதைச் சந்தித்திருப்போம். அத்தகைய தருணங்களைக் கைப்பிடித்த கதைகள் என அவன் அவள் அவன்,ராதா அக்கா,மெஹ்ருன்னிசா,வார்த்தை தவறிவிட்டாய்,சரஸ்வதி,மல்லிகா,யெவனவ மயக்கம் போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். ஆண் பெண்ணின் உடல் தாண்டிய நேசத்தை வண்ணநிலவன் அளவுக்குப் படம் பிடித்த இன்னொரு எழுத்தாளர் இல்லை.
’70களில் இந்தியா சந்தித்த மிக முக்கியமான சமூகப் பிரச்னை-வேலை இன்மை.வேலையற்ற வாலிபரின் வாழ்வையும் மன உலகையும் எழுத்தில் கொண்டுவந்த முதல் தமிழ்ப்படைப்பாளி வண்ணநிலவன் தான்.அவருடைய ‘கரையும் உருவங்கள்’ ஒரு கதை போதும்.ஒரே ஒருநாள் என்கிற நெடுங்கதையும் இவ்வாழ்வை விஸ்தாரமாகப் பேசுகிறது. அந்த நாட்களில் கரையும் உருவங்கள் கதையைப்படித்துக் கரைந்து அழாத வாசகர் இல்லை எனலாம். அப்படி ஒரு ‘உருக்குகிற’கதை அது. வேலையற்ற வாலிபம் பற்றி எண்ணற்ற முற்போக்கான கதைகள் அன்று வெளி வந்தன.ஆனாலும் இன்றுவரை அவை எதுவும் கரையும் உருவங்கள் கதைக்கு உறை போடக்கூடத் தகுதியற்றவை. ஒரு சமூகப்பிரச்னையை பிரச்சாரமாக அல்லாமல் வாழ்வுக்குள்ளிருந்து எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை வண்ணநிலவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவருடைய இரு முக்கியமான பஞ்சம் பற்றிய கதைகளான மிருகம்,எஸ்தர் இரண்டையும் எழுத அவருக்கு உந்துதலாக இருந்தது எது என்கிற கேள்விக்கு அவரது பதில்:
”பாண்டிச்சேரியில் ‘புதுவைக்குரல்’ என்ற பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம். பிரபஞ்சன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி போயிருந்தேன் தண்ணீர் கஷ்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. திரும்பி வரும் வழியில் தஞ்சாவூர் பக்கம் வண்டி, மாடுகள் என்று கூட்டம் கூட்டமாக ஊர்களை காலி செய்து போய்க்கொண்டிருந்தார்கள். ராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பாண்டிச்சேரி வந்தவுடன் ஒரே இருப்பில் ‘மிருகம்’, ‘எஸ்தர்’ இரண்டுக் கதைகளையும் எழுதிவிட்டேன்.’’
1949ஆம் ஆண்டு இன்றைய தூக்குக்குடி மாவட்டம் தாதன்குளம் கிராமத்தில் பிறந்த வண்ணநிலவன், பாளையங்கோட்டை,ஸ்ரீவைகுண்டம் ஊர்களில் பள்ளிக்கல்வி முடித்தவர்.குண்டூசிக் கம்பெனியில் தினக்கூலி,ஜவுளிக்கடை ஊழியர்,வக்கீல் குமாஸ்தா,பல சிற்றிதழ்களில் மற்றும் துக்ளக்கில் ஆசிரியர் குழுவில் எனப் பலவிதமான பணிகள் ஆற்றியவர். இல்லாமையும் போதாமையும் ததும்பும் வாழ்க்கையே அவரது நீண்ட காலப் பயணம். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

எளியவர்களின் மனச்சாட்சி என்று வண்ணநிலவனின் கதைகளைக் குறிப்பிடும் எழுத்தாளர் சு.வேணுகோபால் வண்ணநிலவனின் கதைகள் பற்றிக் குறிப்பிடும் இன்னொரு கருத்து:
“எண்பதுகளிலும், தொண்ணூறு களிலும் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் எழுபது களில் இருந்த இலக்கிய வீச்சு காணாமல் போய் விட்டது. தொண்ணூறுகளில் சில நேர்த்தியான கதைகள் எழுதியிருக்கிறார். பாத்திரங்கள் நுணுக்க மான அசைவுகளால் அழுத்தம் பெற்றவை அவை. ஆனாலும் எழுபதுகளில் கொந்தளித்த படைப் பெழுச்சி இல்லை.”
இந்தக்கருத்தை ஒட்டிய கேள்வி ஒன்றுக்கு வண்ணநிலவன் அளித்த பதில் முக்கியமானதும் எனக்கு உடன்பாடானதுமாக இருக்கிறது”
“எல்லோரும் அப்படிக் கருதுவதாகத் தெரியவில்லை.எண்பதுகள் வரை எஸ்தர் முதலான பல சிறுகதைகளில் உரத்த குரல் ஒலித்து வந்தது.’ 90களில் இந்த உரத்தகுரல் கூடாதென்று முடிவு செய்து எழுதினேன். உரத்த குரலில்,பைபிள் நடை போலெல்லாம் எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. இப்போதுகூட அந்த நடைக்குத் திரும்பிப் போகலாம். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை.
’90-க்குப்பிறகுதான் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் அவர்களின் மனச்சஞ்சலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் சித்தரித்துள்ளேன். நகைச்சுவையாக எல்லாம் எழுதிப்பார்த்திருக்கிறேன். எஸ்தர் கதை ஒன்றுதான் எழுத வேண்டும். எஸ்தர் மாதிரியே எண்பது கதை எழுதி என்ன பயன்….சினிமாவில் அப்பா வேஷம் போட ஆரம்பித்தால் சாகிற வரை அந்த வேஷம் அந்த நடிகனை விடாது.இதே போக்கு தமிழ் இலக்கிய உலகிலும் இருக்கிறது.”
2000த்துக்குப் பிறகு அவர் எழுதிய பயம்,ஒரு உரையாடல்,ஜன 2020 இல் எழுதிய ’பல்’ போன்ற கதைகளையும் வாசித்தேன். இன்றும் துடிப்புமிக்க கதைகளை அவர் தந்துகொண்டிருக்கிறார். அவர் படைப்பின் அரசியல் பற்றிய பதிவு இது என்பதால் அதற்குள் செல்லவில்லை.
கட்சிகள்,கட்சி அரசியல் பற்றி அவருக்குக் கருத்து உண்டு.சிறுகதைகளில் அல்லாமல் அவருடைய நேர்காணல்கள்,சமீபத்திய நாவலான ”எம்.எல். ” போன்றவற்றில் அது வெளிப்பட்டுள்ளது.
நக்சல்பாரி இயக்கத்தின் மூலவரான தோழர் சாருமஜூம்தார் நேரடியாக மதுரைக்கு வந்து இயக்கத்தைக் கட்டும் பணியில் ஈடுபடுவதாக விரிகிற “எம்.எல்.” நாவலின் கதாநாயகனான சேது கூறுவதாக வரும் சில பகுதிகள் இவை:
”ஆவணி மூல வீதி முனையில் தி.மு.க. வின் சுவரொட்டி ஒட்டியிருந்தது. மதுரை முத்து தலைமையில் திலகர் திடலில் பொதுக் கூட்டம். அமைச்சர் செ. மாதவன் பேசுகிறார். சிவகங்கை சேதுராசனின் கச்சேரியும் இருந்தது. அந்தச் சுவரொட்டியைப் படித்ததும் மீண்டும் அரசியல் ஞாபகம் வந்தது. தி.மு.க. வில் சேர முடியுமா? தி.மு.க. ஆளும் கட்சி. தி.மு.க.வில் சேர்ந்து என்ன செய்வது?தி.மு.க.வை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு அந்தக் கட்சி என்ன செய்து விட்டது? காங்கிரஸ் ஆட்சியின் தொடர்ச்சியாகத்தானே தி.மு.க. வும் ஆட்சி செய்கிறது. வர்க்கமில்லாத சமுதாயம் அமையவில்லையே. ஆனால் ரஷ்யாவிலும், சைனாவிலும் கூட வர்க்க பேதம் ஒழியவில்லை என்கிறாரே சபாபதி. ஒரு வேளை அது வெறும் மாயையோ? எந்தச் சமுதாயமாக இருந்தாலும், ஒருத்தனுக்கு மேலே ஒருத்தன் என்று அதிகாரம் செய்கிறவன் இருக்கத்தானே செய்வான்? நாம் இத்தனை நாளும் நம்பி, மார்க்சியத்தின் பின்னே அலைந்தது வெறும் கானல் நீரைத் தேடி அலைந்தது போலத்தானா?”
”சீனப்புரட்சி, மாஸே துங், மார்க்ஸ், லெனின் இவர்களுடைய கொள்கைகள், வழிமுறைகளில் இருந்த அவர்களுடைய கண்மூடித்தனமான பற்றுதலும், நம்பிக்கையும் அவர்களை வழி நடத்தியது. தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், உலகிலுள்ள எல்லா மக்களையும் போல அவர்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதுவே சதம் என்றுதான் வாழ்ந்தார்கள்”
நாவலின் கடைசி வரிகளில் வண்ணநிலவனின் ‘அரசியல் பார்வை’ வெளிப்படுகிறதாகக் கொள்ளலாம்.
“இந்த 2018 லும் எத்தனையோ கட்சிகள், கருத்துக்கள் உருவாகி மனிதர்களைப் பீடித்துள்ளன. அரசியல் கருத்து, ஆன்மீகக் கருத்து, பொருளாதாரக் கருத்து, கல்வி பற்றிய கருத்து என்று ஆயிரக் கணக்கான கருத்துக்களும், நிறுவனங்களும் பல்கிப் பெருகியுள்ளன. தங்களுக்குப் பிடித்தமான கருத்துக்களே சதமென நம்பி, மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.”
இதுதான் அவரது அரசியல் பார்வை. உலகம் தன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இயக்கங்கள், கட்சிகள் அதை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற தொனி இதில் வெளிப்படுகிறது. வரலாற்று ரீதியாகவே இது சரியான பார்வை அல்ல.தன் போக்கில் உலகம் செல்ல அனுமதிக்காத சக்திகளை எதிர்த்த போராட்டம்தான் மனிதகுல வரலாறு என்று நாம் சொல்வோம்.
நிறைவாக அவரது கூற்று ஒன்றைச் சொல்லி முடிக்கலாம்.
“நான் மார்க்சியம் கற்றிருந்தாலும் இலக்கியத்துக்கும் அதற்கும் காததூரம் என்பதை உணர்ந்தே இருந்தேன் . மௌனி, லாசரா, நகுலன் போன்ற தமிழின் அபூர்வமான உரைநடைக்காரர்களை மார்க்ஸிஸ்டுகளோ, கம்யூனிஸ்டுகளோ பாராட்டியதில்லை.”
அவர்கள் எப்படி எழுதினார்கள் என்பதை விட என்ன எழுதினார்கள் என்பதை முக்கியமாகக் கருதும் கம்யூனிஸ்ட்டுகள் இம்மூவரையும் எப்படிக் கொண்டாடுவார்கள்?என்பது நமது எதிர்க்கேள்வி.
இத்தகு சிறிய விமர்சனங்களைத் தாண்டி, வண்ணநிலவன் நம் இலக்கிய முன்னோடி.ஒவ்வொரு சிறுகதையிலும் நாம் கற்றுக்கொள்ள ஒன்றையேனும் விட்டுச் சென்றிருப்பவர். ”பதில் வராத கேள்விகள்” என்கிற கதையில் வர்க்க அரசியலையே வலுவான குரலில் பேசியவர். இந்த தண்டவாளத்தை நீயும் அப்பாவும் தானம்மா போட்டீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் தன் மகனுடன் ரயில் ஏறி, படித்த மனிதர்களால், டிக்கெட் இல்லாமல் ஏறியதற்காக,அடுத்த ஸ்டேஷனில் இறக்கி போலீஸ் ஸ்டேஷனில் விடப்படும் அந்த ஏழை உழைப்பாளிப் பெண்ணின் கதை எவ்வளவு பெரிய அரசியலை சத்தமில்லாமல் பேசியது?
“ஹரியின் புத்திரி” என்கிற கதையில் தாழ்த்தப்பட்ட பெண்ணொருத்தி சாதிக்கலவர நாளில் அடைக்கலம் தேடி ஓடும் அவலத்தை எழுதியிருப்பார்.தீண்டாமையையும் சாதிகளைத் தாண்டிய மனித அன்பையும் ஒருசேரச் சொல்லியிருப்பார்.
பசியையும் வறுமையையும் இல்லாமையையும் போதாமையையும் அதே உக்கிரத்துடன் தன் கதைகளில் சொன்ன, நமக்கு மிக மிக நெருக்கமான படைப்பாளி.
” மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்புவழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்.” –’கடல்புரத்தில்’-நாவலுக்கான முன்னுரையில் வண்ணநிலவன்.
(அன்பு வழி நாவல்-பாரபாஸ் )
(தொடரும்)

முந்தைய தொடர்கள்:
தொடர் 1 ஐ வாசிக்க
தொடர் 2 ஐ வாசிக்க
தொடர் 3 ஐ வாசிக்க
தொடர் 4 ஐ வாசிக்க
தொடர் 5 ஐ வாசிக்க
தொடர் 6 ஐ வாசிக்க
தொடர் 7 ஐ வாசிக்க
தொடர் 8 ஐ வாசிக்க
தொடர் 9 ஐ வாசிக்க
தொடர் 10 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 11 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 12 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 13 ஐ வாசிக்க
தொடர் 14 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 15 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வண்ண நிலவன் கதைகள் அனைத்தையும் படித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவரது அரசியலில் வேறுபாடு இருப்பினும் சார்பு ஏதுமின்றி அவரது கதைகளை விமர்சித்திருப்பது சிறப்பு.வாழ்த்துக்கள் தோழர்!
நன்றி தோழர்