தொடர் 30: ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு மஞ்சள் சட்டையும் – வண்ணதாசன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்ஆரவாரமும் கலகமும் அற்ற ஒரு அமைதியான உலகத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த நாட்களில் வண்ணதாசனுடைய சிறுகதைகள் அந்த அமைதியான உலகை நோக்கி வாசகர்களை இட்டுச்செல்லக்கூடிய தகுதி பெற்றவை

ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு மஞ்சள் சட்டையும்

வண்ணதாசன்

அவனுக்கு ரொம்பப் புதிது இது.  இந்த ஊரில் இப்படி அனாதைப் பிணத்தை ஊதுவத்தி கொளுத்தி வைத்து வசூல் பிரிப்பதைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை.  வந்து கொண்டிருந்தவனை மறித்து ஒரு பையன் “அனாதைப் பெணம், அனாதைப் பொணம்” என்று கையேந்தினான்.  படித்த கதைகள் ஞாபகம் வந்தது.  ஊதுவத்தி வாசனை பிசாசாக விரட்டியது. அந்தக் காட்சியையே மறந்துவிட வேண்டும் போல அவன் விலகினான்.   யாரோ சத்தம் போட்டார்கள்.  “வெள்ளை வேட்டி கட்டின பாவி, இரக்கமத்த பாவி, ஈரமத்த பாவி” வார்த்தை ஒவ்வொன்றும் கடித்தது

இவனுக்கு இரக்கம் இல்லாமலில்லை.  ரெண்டு நாளைக்கு முன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.  வெளியே கண்டக்டர் பிரயாணிகளைக் கூப்பிட்டு இரைந்தபடி கன்னம் குழிவாங்க ஆழமாய்ப் பீடியிழுத்துக் கொண்டு இருந்தான்.  காறித் துப்பினான்.  சத்தத்தை அருவருத்துத் திரும்பும்போது  ஒரு கை இவன் சீட்டுப் பக்கம் நுழைந்து கொண்டிருந்தது.  கையில் நிறையச் சில்லறை நாலணா, பத்து பைசா, ஐந்து பைசா இப்படி ஒரு மஞ்சள் சட்டை போட்ட கிராமப்புறத்தான். தன்னுடைய வாய்ப்புண்ணுடைய அசிங்கமான கடைவாய்களை அசைத்தபடி “ஊருக்குப் போகணும்  இன்னம் முப்பது பைசா குறையுது” கெஞ்சினான்.  பக்கத்தில் நிற்கையிலேயே ஒரு புழுங்கின வாடை அடித்தது.  சட்டென்று ஒரு முழு நாலணாவை எடுத்துப் போட்டான்.  

அப்படிப்பட்டவன்தான் இன்றைக்கு உதவ முடியவில்லை.  கையில் காசில்லை.  வீட்டிலேயே இருக்க முடியாமல் கசந்துபோய் இருந்தது.  லாண்டரியில் இருந்து துணி வாங்கினது போக மிச்சம் கொஞ்சம் சில்லறை பர்ஸில் கிடந்தது. சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் அங்கே எப்போதும் படுத்திருக்கிற அந்த இளவயதுப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தான்.   ஒரு திணித்த தபால் பையைத் தலைக்கு வைத்தபடி இந்த நெரிசலுக்கு நடுவில் அவள் சில சமயம் மூட்டைக் கட்டிக் கொண்டே உட்காந்திருப்பாள். இப்படி வேலையில்லாமல் உட்கார்ந்து கரையான் அரிக்கரதைவிட அவளுடைய கஷ்டத்தைக் குறைக்கலாம்.  பகிர்ந்து கொள்ளலாம்.  இன்றைக்கு எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என மனதுள் விழைந்து தோற்று நின்றவன்தான்.  கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட நினைவு தாமதமாய் வந்திருக்கிறது. அந்தப் பத்திரிகையைக் கண்டதும் வாங்கினான்.  பர்ஸில் துளிகூட மிச்சமில்லை.

பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டே நடந்தவனுக்கே இவ்வளவும்.  “பாவி, பாவி, பாவி” என்ற வார்த்தை மறுபடி மறுபடி அவனைக் காயப்படுத்தியது.   கலகலப்பாக மெயின் ரோட்டை விட்டு விலகிச் சந்து சந்தாக கடந்து நடந்தான்.  தெருத்திருப்பத்தில்  குழாய் கீறல் விழுந்து மண்ணுக்குள் இருந்து தண்ணீர் பெருகி நடைபாதைப் பக்கம் போய்க் கொண்டிருந்தது.  அதைத் தாவி அப்புறம் போய்விட எண்ணி அகட்டிக் குதித்தும், பின்னால் தண்ணீர் தெறித்து விட்டது,  வேட்டி பாழ்.  வெளுப்பு வேட்டி கட்டின மூன்று நாளைக்கு இருக்கிற சந்தோணம் ஒரு நாளுடன் சரி.  யாராவது முக்கியமான பெரியவர்களைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் மூன்று நான்கு நாளைக்கு வராமல் இருக்க வேண்டும்,  அதற்கிடையில் லாண்டரிக்காரனும் பாக்கி உருப்படியை கொடுக்க வேண்டும்  கிழியாமல்.

ஆஸ்பத்திரிப் பக்கம் கனல் கனலாகச் சிவந்து கிடந்த பூக்களைப் பார்த்தபடி போனான்.  கிழவன் வராந்தா விளிம்பிற்குத் தேய்த்துத் தேய்த்து வந்து கொண்டிருந்தான்.  ஆஸ்பத்திரி நெடி குமட்டியது.  கண்ணில் படுகிற எல்லாமே ஏன் இப்படி அமைகிறது?  மனம் குமைந்தது.  பெட்ரோல் பங்கிற்கு முந்தின பஸ் ஸ்டாப்பில் ஜனங்கள் திரளாகக் காத்திருந்தனர்.  அவர்கள் இருந்த திசையை வெறுத்தான்.  

அந்த மஞ்சள் சட்டைக்காரனை அவன் சுலபமாகக் கண்டு  கொள்ள முடிந்தது.  அவன் கையில் இன்றைக்கும் சில்லறையிருந்தது.   “ஊருக்குப் போகணும், பஸ் சார்ஜுக்கு சில்லறை குறையுது” என்று வாய்ப்புண் நுரைக்கிற அசிங்கமான வாயை அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

கைவிரிசலில் பத்திரிகை நழுவி விழ முரட்டுத்தனமாய் அவன் தலையைப் பிடித்து உலுக்கி வலது கையால் ஓங்கி அறைந்தான்.  “இன்னமுமா ஊருக்கு வழி தெரியலே?” என்று மேலும் அறைந்தான். சிதறின சில்லறையைக் குனிந்து பொறுக்கிய அவன் முதுகில் முஷ்டியால் குத்தினான். திமிறவிடாமல் விரல்களை அகற்றி நடுமுதுகில் பதித்து அவனுடைய மஞ்சள் சட்டையைக் கொத்தாகப் பிடித்து ஆவேசமாக இழுத்தபோது “சட்டை, சட்டை கிழிந்து விடப் போகுது சார்” என்று நிமிர முடியாமல் தலையைப் பார்த்து மடிந்தபடி அவன் பதைத்துக் குரலெழுப்பினான்.

இதைக் கேட்ட பிறகு அவனுக்கு அடிக்கத் தோன்றவில்லை.

@ பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.