தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்ஈழத்தின் முற்போக்குச் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக டொமினிக் ஜீவா விளங்குகிறார். அவரது எளிய கதை மாந்தர் மட்டுமின்றி, எளிய மொழியும் வாசகர்களை வசீகரித்து வருகிறது.

பாதுகை

டொமினிக் ஜீவா

உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்த போது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடது கால் பாதத்தை  தூக்கி,  திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான் முத்து முகம்மது.  திரும்பித் தார்ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதியில் வீசி எறியப்பட்டிருந்த சிகரட் துண்டொன்று அவன் உள்ளங்காலைப் பதம் பார்த்துச் சுட்ட உஷ்ணத் தகிப்பு,  இன்னும் முற்றாக நீங்காத நிலை.   மனம் சரிந்தது.

ஒருகாலத்தில் செம்மா தெரு ஒழுங்கை என்ற பெயர்  மாநகர சபையாரின் ஜனநாயகக் கண்களுக்கு தவறாகத் தெரிந்த சாதிப் பெயர் அகற்றப்பட்டு, ஜூம் ஆ மொஸ்க்லேன்  என்ற தெரு வழியாக நடந்து கஸ்தூரியார் வீதியின் முகப்பிற்கு  வந்து திரும்பிக்  கொண்டிருந்த சமயம்தான், முத்து முகமதுவிற்கு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது.

டெலிபோன் கம்பத்தை பற்றிப் பிடித்த வண்ணம் இடது காலை மடக்கி மடித்து தலை குனிந்து பாதத்தை உற்றுப் பார்த்தான்.  சாம்பல் ஒரு சத நாணய அளவிற்கு படிந்து அப்பியிருந்தது.  வாயில் ஊறிய உமிழ்நீரைத் தொட்டு வழித்து இரண்டு மூன்று தடவை பூசிப்பார்த்தான்.  உள்ளங்காலை நிலத்தில் அழுத்தி வைத்துப் பார்த்தான்.  சுடுபட்ட எரிவு ஓரளவு குறைந்து சுகம் கண்டது போன்ற பிரமை. 

நண்பகல் தொழுகைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.  தலையில் கட்டியிருந்த கைக்குட்டையைகூட இன்னமும் அவிழ்க்கவில்லை.   நாளை வரப்போகும்  ஹஜ்ஜுப் பெருநாளைப் பற்றிய மன அவசத்தைச் சற்றே மறந்தான்.  வீதியை கடக்கலாம் என்று எத்தனித்தான்.  புத்தம் புதிய நீல நிறக் கார் ஒன்று காலோரம் ஊர்ந்து போய் அப்பாள் நின்றது.  இரண்டு நாகரிக நவயுக நாரிமணிகள் காரிலிருந்து குதித்தனர்.

ஒருத்தி ஷுபாலஸில் நுழைந்தாள்.  இன்னொருத்தியின் காலில் அணிந்திருந்த புத்தம் புதுக் காலணியில் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒருமுகப்பட்டுக் குவிந்தன.   இதைப் போன்ற லேடி பலரினா ஷுஸினால் ஏற்பட்ட மனவுலைச்சல் காரணமாக காலையிலிருந்து அவன் பட்டுவரும் நெஞ்சத் தவிப்பு  என்றுமே அறிந்திராதது.

எட்டி முப்பது சுவடு தெற்குப் பக்கமாக வைத்து நடந்தான்.  அவன் தொழில் பார்க்கும் கடையை கடையென்று பொன்னாம் பெரிய பெயரில் அழைப்பதைவிட புறாக்கூடு என்று சுருக்கமாக அழைக்கலாம். அந்த சப்பாத்துக் கடை கிழிந்து அறுந்து துவைந்து போன செருப்புச் சப்பாத்துகளுக்கு புனர்வாழ்வளிக்கும் தொழிற்சாலை இது.  வாடகை 30  ரூபாய்.  அதன் ஏகபோக உரிமையாளன் சாக்ஷாத் முத்து முகமதுதான். அவனுக்கு மவுசு  அதிகம். உதவிக்கு ஒரு சிறுவன்.

காலை எட்டு மணிக்கு பட்டறையில் குந்தினால் சாப்பிட தொழுகைக்குப் போகவென்று எழும்புவான்.  மற்றபடி கடையின் முன்பக்கத்து பட்டறையில் இருந்த வண்ணம், போவோர் வருவோரது முகங்களையும் பாதங்களையும் பார்த்துச் சலிப்பது தான் தினசரி வேலை.

15 நாட்களுக்கு முன் ஒரு மாட்டுக் கடதாசியில் இங்கிலீஷ் பலரினா லேடி ஷுஸ்களைப் பத்திரமாக மடித்து வந்தவர், கடதாசியைப் பிரித்து ஷுஸ்களைப் பட்டறைப் பலகை மீது வைத்தார்.  “இது சிங்கப்பூரிலை எடுத்தது, வார் ஒண்டு விட்டு போச்சு.  மற்றதுக்கு இரண்டு ஆணி வைச்சுத் தர வேணும்”.  அவற்றை திருப்பியும் புறட்டியும் வார்ப்பட்டைகளை இழுத்தும் அசைத்தும் பரிசோதனைகள் நடைபெற்றன.  “இந்த செஞ்சு தந்திடுவன் ரூபா ஒண்ணு குடுத்திடுங்கோ”.

பேரம் முடிவடைகிறது.  “உதாலை சுத்திக் கொண்டு வாறன். கெதியாய்ப் பார்த்து முடிச்சு வையன்”. 

போனவர் வரவில்லை.  அன்றும் வரவில்லை அடுத்த நாளும்,  அதற்கு அடுத்த நாளும் கூட.

பெருநாள் நெருங்கிக் கொண்டிருந்தது.  மனதில் ஒரு நப்பாசை.  இனி அந்த அறாம் பிடிச்ச மனுசன் வரமாட்டான் போல இருக்கு.  அதை ரகீலாவுக்கே பெருநாள் பரிசா கொடுத்து விட்டால்.  கடந்த மௌலத் மாதமே அவர்கள் இருவருக்கும் நிக்காஹ் நடந்தேறியது.  ஒரு வருடம் கூட ஆகவில்லை.  இந்த பலரினா லேடி ஷுஸ் ஞாபகத்தில் தட்டுப்பட்டது.  ஒழுங்கை பூராவிலுமுள்ள அத்தனை  முஸ்லீம் பெண்களும்  தொழுகை இடத்தில் கூடுவார்கள்.  அந்த இடத்திலை நம்ம பீபி மதிப்பா இல்லையண்டா, நாளைக்கு நம்மளை இவங்கள் மதிப்பாங்களா என்ன?   நகாசு பண்ணி புதிது போல சிருஷ்டித்து விட்டான்.  அன்புப் பரிசாக கொடுத்துவிட்ட மனப்பூரிப்பில் அவன் களித்தது நேற்று.இன்று காலையில் அவர் வந்துவிட்டார்.  கடைப் பையன் தான் கடையில் இருந்தான். தேனீர் குடிக்கச் சென்றவன் குடித்து விட்டு பீடியை பற்ற வைத்துக் கொண்டு, அவருடைய தலைக் கறுப்பைக் கண்டதும் மறைந்து கொண்டான். இதற்காக முழு நாளுமே கடைக்கு வராமல் இருந்து விட முடியுமா?  

கடைப்பட்டறையில் ஏறிப் பட்டறையில் அமர்ந்ததே நினைவில் இல்லை.  பையன் சப்பாத்துகளையும், செருப்புகளையும் முன்னால் வைத்து வேலையைச் சொன்னான். அவனை “சோறு தின்னுட்டு வா” என்று ஊட்டுக்கு அனுப்பினான். தொடர்ந்து வேலை நடக்கின்றது.

“இந்தாப்பா உன்னட்டை எத்தனை தடவை அலையிறது?”

நிமிர்ந்து பார்த்தான் 

“அண்டைக்குத் தந்த அந்தச் செருப்புச் சோடியை எடு.”

அலட்சியமாக பார்த்த வண்ணம் நடித்து “எதைக் கேட்கறீங்க? எந்தச் செருப்பு?” என்றான்.

“அது தானப்பா …. அண்டைக்குத் தந்தேனே அந்த செருப்புகளைத்தான்…”

“தவணை தப்பிப் போச்சானால் செருப்பு இங்கே இருக்காது. வெளியிலை குப்பை கூடைக்கை எறிஞ்சிருப்பம்” குரலில் கூச்சம் சற்று அச்சமும் நிழலாடியது.

“புத்தம் புதிசு குப்பேக்கை எறிஞ்சு போட்டன் என்கிறாயே, பதினெட்டு ரூபாயல்லவா” என்றார்.

“ஆமா இப்ப என்ன செய்யச் சொல்றீங்க?” போலி கோபத்தொனி  ஒலித்தது.

“என்னப்பா இப்படி படுபொய் சொல்லுறியே? சத்தியம் பண்ணிச் சொல்லுவியா எறிஞ்சுபோட்டனென்டு?   உன் தாயைக் கொண்டு சத்தியம் பண்ணுவியா?”

“உம்மா மேலாணையா எறிஞ்சு போட்டன்”.

“உன்ரை அப்பனைக் கொண்டு சத்தியம் பண்ணு”.

“வாப்பா மேலாணையா குப்பேக்கை எறிஞ்சிட்டன்”.

ஏமாற்றுகிறானே என்ற நினைப்பில் ஒரு வித ஆக்ரோஷம், “உன்ரை கடவுளைக் கொண்டு சத்தியம்” என்று ஆத்திரமாகக் கத்தினார்.

“ஆண்டவன் ஆணையாக எறிஞ்சுபோட்டான்”.

அட படுபாவி, கடைசிலை கடவுளைக் கொண்டு கூடச் சத்தியம் பண்ணிப்போட்டானே!  தன்னுடைய சுய கௌரவத்தை எப்படியாவது நிலை நிறுத்தியாக வேண்டுமென்ற அசட்டுப் பிடிவாதத்துடன் சுற்று முற்றும் பார்க்கின்றார்.  தனது காலில் அணிந்திருந்த செருப்புகளைக் காலை விட்டு நகர்த்திக் கழற்றினார்,  என்னத்தைத்தான் செஞ்சு கிழிச்சிடப் போறார் பார்ப்போமே இப்படி நினைத்திருந்த முத்து முகம்மதுவின் காதுகளில் அவர் உச்சரித்த வார்த்தைகள் தெளிவாக விழுந்தன. 

“இதுதான் கடைசித் தடவை ஓமோம், கடைசி முறை எங்கை, இதை தொட்டுச் சத்தியம் பண்ணு பார்ப்பம்? உனக்குச் சோறு போடுகிற இந்த செருப்பைத் தொட்டு சத்தியம் பண்ணு, உண்மையாய் எறிஞ்சு போட்டாயென்று”.

கண்கள் தரையில் தாழ்ந்து பதிந்து தரையோடு உறவாடிக் கொண்டிருந்த, கீழே அனாதையாக விடப்பட்டிருந்த அந்தச் செருப்புகள் இரண்டையும் அர்த்தத்தோடு வெறித்துப் பார்த்தன.

இதைத் தொட்டா நான் சத்தியம் பண்ணறது? எனக்குத் திங்கச் சோறு தாற இதைக் கொண்டா நான் பொய் பேசுறது?

“என்ன பேசாமல் சும்மா இருக்கிறாய்? ஹும் சத்தியம் பண்ணன்”.

“ஏலாது,  இதைக் கொண்டு நான் சத்தியம் பண்ண மாட்டேன்” என்றான் முத்து முகம்மது.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.