ஸ்பானிஷ் சினிமா
விட்டல்ராவ்
ஸ்பெயின் என்றதும் உயர்ந்த திராட்சை மது, மாட்டை அடக்கி கொல்லும் ஆட்டம் (Matadar) Tap Donce) நடனம், கால் பந்து மற்றும் மிக முக்கியமானவை (Pablo Picaso, Salvedor Dali) என்ற இரு ஓவியர்களுக்கு அது பிறப்பிடம் என்பவை நினைவுக்கு வருபவை. தென்னமெரிக்க நாடுகளைத் தன் வசம் நீண்ட காலம் ஸ்பெயின் வைத்திருந்ததால் தென்னமெரிக்க நாடுகளின் புழங்குமொழி ஸ்பானிஷ் ஆக இருந்து வருவதும் இதனால் கலாச்சாரம், பழக்க வழக்கங்களும் பரிமாற்றமாகியுள்ளன. எல்லாவற்றும் மேலே இலக்கிய வாசகர்களுக்கு ஸ்பெயின் என்றதும் நினைவுக்கு வருவது டான் க்வைஜோடே (Don Quixote) எனும் உலகப் புகழ் பெற்ற அங்கத நாவல். எழுதியவர் (Miguel de Cervantes) மிகுவெல் L செர்வாடிஸ்) ஸ்பெயின் நாட்டுக்கு இதிகாசம் போன்றது இது. ஐரோப்பிய நாடுகளில் முக்கியமாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகளில் மத்திய கால வாக்கில் அரசனால் அங்கீகரிக்கப்பட்டு, தங்கள் உயரிய வீரச் செயல், பராக்கிரமம், சேவைகளுக்காக Sir முதலில் விருதுகளைப் பெற்று வந்த சாகச வீரர்கள். (Knights Errants) இந்த வீரர்கள் சகல ஆயுதங்களையும் பயன்படுத்தும் வல்லுனர்கள். இந்த நைட் வீரனுக்கு விதிப்படி ஸ்கொயர் (Squire) எனும் உதவியாளர் இருப்பார்.
லா மன்சா என்ற ஊரைச் சேர்ந்த டான் க்வைஜோடே (DON QUIXOTE DE LAMANCHA) என்பவன் ஏராளமான நைட் வீரர்களின் வீரச் செயல்களைப் படித்து புத்தி பேதலித்து தன் காலத்தில் ஆங்காங்கே நிலவும் அநியாயத்தை அக்கிரமத்தை, அடிமைத்தளையையெல்லாம் சண்டையிட்டு ஒழிக்கப் போகிறேன் பேர்வழியென்று எலும்பு தூக்கின ரோசினான்டியென்ற (Rosinanti குதிரை மீதேறி, நைட் உடையில் வலம் வருகிறான். நாவிதர் åருவரை தனக்கு ஸ்கொயராக ஆக்கி அவருக்கு சாங்கோ பாஞ்சா (Sacho Panza) என்று பெயரிட்டு டாப்பிள் (Dapple) என பெயரிட்ட கழுதை மீது அமர்த்தி அழைத்துப் போகிறான். இரவு ராணியாகத் திரிந்த (Street walker) ஒரு வேசியை நான்கு குடிகாரர்கள் சூழ்ந்ததைக் கண்ட க்வைஜோடே அவர்களை மிரட்டி அடித்துவிட்டு தான் சிறைபட்டதொரு இளவரசியென நினைத்த வேசி அல்டான்ஸோ லோரன்ஸா (Aldonzo Loranza)வை மீட்டு தனக்கு மனைவியாக்கி அவளை டல்சீனியா டல்புகர்கீ (Dulsenia Dulbugarque) என பெயரிட்டழைக்கிறான். சாக்கு மூட்டைகளும், காற்றாலையும் பூதங்களாயும் ராட்சதர்களாயும் அவனுக்குத் தோன்றுகிறார்கள். குதிரை மீது பாய்ந்து காற்றாலையைத் தாக்கி ஈட்டி மழுங்கி வளைந்து அவனும் குதிரையும் அடிபடுகிறார்கள். இறுதியில் சாகுந்தருவாயில் சுய அறிவு பெற்றவனாகிறான். இந்நாவல் சுருக்கப்பட்ட சிறுநூலாக பலருக்கும் காலந்தோறும் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பாடத்துக்கு (Nondetailed Text) ஆக வைக்கப்பட்டு வந்திருக்கிறது. எங்கள் குடும்பத்தில் என் மகன் உட்பட மூவருக்கு இவ்வாறு உட்பாடமாயிருந்திருக்கிறது. எனக்கும் 9ம் வகுப்பில் (IV Form) உபபாடமாயிருந்த நினைவில் அந்த பெயர்களை கொடுத்துள்ளேன் இந்நாவல் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகியிருக்கிறது. நான் பார்க்கமுடியவில்லை. இந்த ஸ்பானிஸ் நாவலை 1972-ல் ஓர் உயர்ந்த இசை ரூப திரைப்படமாய் ஹாலிவுட்டில் எடுத்திருக்கிறார்கள். ஆர்தர் ஹில்லர் (Arthur Hiller) என்பவரின் இயக்கத்தில் பீட்டர் ஓடூல் (Peter O Toole) டான் க் வை ஜோடேயாகவும் சோஃபியா லாரன் டல்ஸீனியாகவும் ஜேம்ஸ் கோகோ (James CoCO) சாஞ்சோ பாஞ்சாவாகவும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர்.
1930ல் ஸ்பெயின் தேசத்தில் மன்னராட்சி அகன்று ஜெனரல் ஃப்ராங்கோவின் தலைமையிலான ஃபாசிஸ ஆட்சி தொடங்குகிறது. ஃப்ராங்கோ, ஹிட்லரின் துதிபாடகராயிருந்தவர். ஸ்பெயின்ஸ் ஃபாசிஸம் உதயமாகி வளர்ந்து உள்நாட்டுப் போர் ஏற்பட முக்கிய காரணமாயிருந்தவர் என அறியப்படுபவர். இந்த சமயத்தில்தான் பாப்லோ பிகாஸோ, சால்வெடார் பாலி ஆகிய ஓவியக் கலைஞர்களெல்லாம் ஸ்பெயினிலிருந்து வெளியேறி பாரிஸில் குடியேறினார்கள். ஸ்பெயினின் முக்கிய நகரமான குவார். க்வார்னிகா Guernica உள்நாட்டுப் போரில் தன் சொந்தக் குடிகளான ராணுவத்தால் குண்டு வீச்சுக்காளாகி நாசமாக்கப்பட்டது. ஒரே நாட்டுக்குள் அகதிகளாக அந்நாட்டுப் பிரஜைகள் அங்குமிங்கும் ஓடி ஒளிந்து உயிர் பிழைக்க வேண்டியிருந்தது. ஸ்பெயின் ராணுவப் பிரிவுகளில் ஒன்றான கோண்போர் படைப்பிரிவு (Kondor Division) க்வார்னிகா நகர் மீது குண்டுமாரி பொழிந்தது உயிரிழந்தோர், மூடமானோர் பிராணிகளின் பிணக்குவியல், இடிபாடுகள் என இந்த உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய கலக்கம், கண்ணீர் என்பவை ஓவியர் பிக்காஸோவையும் விட்டுவைக்கவில்லை. அவரது உள்நாட்டுப் போர் குறித்த பாதிப்பின் உச்சமாக 1937ல் பிக்காஸோ, படைத்த உலகப் புகழ்பெற்ற கியூபிரிவு பணியிலான பெரிய கான்வாஸ் ஓவியம் க்வார்னிகா க்வார்னிகாவை அவர் படைத்தபோது அவருக்கு வயது 56. அதுதான் அவர் தீட்டிய கடைசி பிரமாண்ட அளவிலான ஓவியம். அங்கஹீனமான பெண் செத்த குழந்தையோடு மேல் நோக்கிக் கதறும் தாய், வாய் பிளந்த குதிரை, சூரியன்போல் மேலே எரியும் மின்சார பல்பு, மாட்டுத் தலை என்று சகல அழிவுகளையும் சித்தரிப்பது பிக்காஸோவின் ஓவியம் க்வார்னிகா.
ஃபாசிஸ சர்வாதிகாரி ஃப்ராங்கோவின் முக்கிய எதிரிகளில் கம்யூனிஸ்டுகளும் அடங்குவர். ஒரு கம்யூனிஸ்டாகக் கருதப்பட்ட உலகப் புகழ்பெற்ற மாபெரும் நவீன ஓவியர். (PABLO DIEGO JOSE FRANCISCO DE PAULA JUAN NEPOMUGENO CRISPIN CRISPINIANo DE LA SANTICIMA TRINIDAD RUIZ PICASO) (1881) என்ற நீண்ட பெயர் கொண்ட பிகாஸோவும் நாட்டைவிட்டு வெளியேறினார். இந்நீண்ட பெயரிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் என்பதைவிட தலைமுறை வரலாறு, இடம், பொருள், ஏவல், சொந்தபந்த உறவு மேலிட்ட மனித அடையாளங்களே முக்கியம்.
1931-ல் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது, இராணுவத்தை உதறித் தள்ளிவிட்டு (WAR DE SERTER) ஃபெர்னாண்டோ எனும் அழகிய இளைஞன் சிற்றூர் ஒன்றின் காட்டில் ஒளிகிறான். விரைவில் இரு ராணுவ வீரர்களால் பிடிபட்டு விலங்கிடப்படுகிறான். அப்போது நிகழும் மூடத்தனமான வாக்குவாதத்தில் இரு சிப்பாய்களும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சாகின்றனர். விலங்கோடு தப்பியோடிய ஃபெர்னாண்டோ உணவு மற்றும் விபச்சார வசதியுள்ள விடுதியில் வயதான ஓவியர் ஒருவருடன் நட்பு கொண்டு அன்றிரவு அவரோடு தங்கி அவரது விருப்பப்படி டான் க்வைஜோடே நாவலைப் படித்துக் காட்டுகிறான். மறுநாள் அவருடைய நான்கு அழகிய இளம் பெண்கள் ஊரிலிருந்து புயலைக் கிளப்பியவாறு வருகின்றனர். காதலுக்கும் காமத்துக்கும் ஏங்கி எதிர்பார்த்து வேற்றூரிலிருந்துவிட்டு வீடு திரும்புகின்றனர். இந்த நான்கு பெண்களும், ஃபெர்னாண்டோவும்தான் படம். நால்வரில் மூத்தவள் க்ளாரா இளம் விதவை. அடுத்தவளான வயோலெடா பெண்ணோடு பெண் உடலுறவு கொள்ளும் ‘லெஸ்பியன்’ ஓரினப் பாலுறவு கொள்பவள். மூன்றாமவள் ரோஸியோ காம இச்சை மிக்கவள். இவளுக்காக உயிரையே விடும் பணக்கார இளைஞன் தன் பெற்றோர்களால் பாதிரியாராகப் பயிற்சி பெற அனுப்புவதிலிருப்பவன். கடைசிப் பெண் லஸ் அமைதியும் சாதுவானவள், ஸ்பானிஷ் படங்களில் செக்ஸ் விசயம் மிக அபரிதமாகவே இடம் பெறுகின்றன.
முதிய ஓவியரின் மனைவியும் கலைஞரே. நாடகக் கலைஞரான அந்தம்மாள் ஊர் ஊராகச் சென்று முகாமடித்து நாடகம் போடும் குழுவிலிருக்கிறாள். நாடக உரிமையாளருக்கும் அவளுக்கும் கள்ள உறவு. எனவே தன் வீட்டுக்கு வந்து போவது அபூர்வம், ஓவியர் சர்வ சுதந்திர உணர்வு கொண்டவர். மனைவியின் போக்கை அறிந்தும் கண்டுகொள்ளாதவர், ஓவியரின் வரவேற்பின் ஃபெர்னாண்டோ அவர் வீட்டுக்கு வருகிறான். நான்கு பெண்களும் அவனும் பரஸ்பரம் மனம், உடல் ரீதியாக ஏங்கத் தொடங்குகின்றனர்.
‘‘ராணுவத்தில் நீ என்னவாயிருந்தாய்?’’ என்று பெண்கள் கேட்க, ‘‘நான் ப்யூகிள் வாசிப்பேன்’’ என்கின்றான் ஃபெர்னாண்டோ அவர்கள் கேட்டதற்கிணங்கி ராணுவ இசைக்குழுவைச் சேர்ந்த அவன் தன் ப்யூகிளை எடுத்து ஊத, பெண்கள், மகிழ்ச்சியில் கையைத் தட்டுகிறார்கள். பெரியவர், இளைஞன் ஃபெர்னாண்டோ தன் பெண்களில் யாரை விரும்புகிறானோ அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தயாராகிறார். வீட்டுப் பரண் மீது அவனுக்கு படுக்கை தயார் செய்த ரோஸிவை அவன் முத்தமிட முயல்கையில் தன்னை ஓர் இளைஞன் காதலிப்பதாய்க்கூறி நழுவுகிறாள்.
இரண்டாவது பெண் வயோலேட் ஓரினப் பாலுறவுக்காரி அவளுக்கு ஃபெர்னாண்டோவின் முகம் அழகிய பெண்ணாகத் தோன்றுகிறது. åரு திருவிழாவுக்கு எல்லோரும் போயிருக்கையில், அங்கே எல்லோருமே அவரவர் விருப்பம்போல வேடமணிந்து நடனமாடலாம். வயோலேடா ஃபெர்னாண்டோவின் ராணுவ சீருடையைப் போட்டு, மீசை வைத்துக்கொண்டு அவனுக்கு தன் பெண் உடையை அணிவித்து நடனமாடுகிறாள். பிறகு அவனை தனியான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனோடு உடலுறவு கொள்ளுகிறாள். பாதிரியார் பயிற்சிக்குத் தன்னாலாகாதென்று பிடிவாதம் செய்யும் பையன் ரோஸியோவுக்காக நாயாக அலைகிறான்.
இதனிடையில் ஓவியரின் நடிகை மனைவி தன் காதலனோடு வந்துவிடுகிறாள். தாம்பத்ய தருமத்தைப் பேணியாக வேண்டுமென்ற சித்தத்தில் அன்றிரவு காதலன் வெளியில் காத்திருக்க கிழ நடிகை தன் வயதான ஓவியக் கணவனோடு படுத்து சுகம் தருகிறாள். மறுநாள் புறப்பட்டு போய்விடுகிறாள். ஃபெர்னாண்டோ பேரில் காதலும், பாசமும் கொண்ட மூத்தவளும் விதவையுமான க்ளாரா ஒரு நாள் ஆற்றங்கரையில் அவனிடம் தன் சோகக் கதையை விவரிக்கிறாள். இதே ஆற்றங்கரையில் அதே இடத்தில் அவளும் அவள் கணவனும் காதலிலீடுபட்டிருக்க க்ளாரா முத்தமிட முனைகையில் அவள் கணவன் தடுமாறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்ததைக் கூறியழுகிறாள். ஃபெர்னாண்டோ அவள்பால் ஈர்க்கப்பட்டு முத்தமிட முனைகையில் அதிகமாய் நெருங்கிய க்ளாராவின் அழுத்தத்தில் தடுமாறி ஆற்றில் விழுந்து தத்தளிக்கிறான் ஃபெர்னாண்டோ. எப்படியோ தப்பித்து கரையேறிவிட்ட அவனும் அவளும் சந்தோசத்தில் உடலுறவு கொண்டுவிடுகின்றனர். ஆனால் இறுதியில் தன்னோடு உறவே வைத்துக்கொள்ளாத நான்காவது பெண் லஸ் மீதுதான் உண்மையான காதல் ஏற்படுகிறது. லஸ் ஐ அவன் திருமணம் செய்வதாகப் படம் முடிவுறுகிறது.
1992ல் வெளிவந்த மேற்சொன்ன இந்த ஸ்பானிஸ் திரைப்படம் (Belle EpoQUE (Beautiful time) அல்லது (AGE OF BEAUTY)- அழகான பொழுதுகள் எனப்படுவது, இந்த ஸ்பானிஷ் மொழிப்படம் 1993ன் சிறந்த அயல்மொழிப் படத்துக்கான ஆஸ்கர் அகாடெமி விருது பெற்றது. இப்படத்தை ஸ்பெயின் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஃபெர்னாண்டோ ட்ரூபா (FERNANDO TRUEBA) என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மிக அழகிய காட்சிகளைத் தம் காமராவில் வண்ண åஒளிப்பதிவாக்கியவர் ஜோஸ் லூயி ஆல்கேய்ன் (JOSE LUIS ALKAINE) இப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இளம் நடிகை பெனலோப் க்ரஸ் கடைசி பெண் லஸ் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். பிறகு ஸ்பானிஷ் சினிமாவின் முடிசூடா இளவரசியானதோடு இத்தாலியிலும் நடிக்கிறார்.
செர்வாண்டிஸ், அவரது நாவல் டான் க்வைஜோடே டோலவே- ஆனால் வெளியில் அதிகம் தெரிய வராது, ஸ்பெயின் நாட்டுக்குள் பிரபலமான நாவல் “லா செலஸ் டினா” (LA CELESTINA என்பது இந்நாவல் 1499ல் ஃபெர்னாண்டோ டி ரோஜாஸ் (FERNANDO DE ROJAS) என்பவரால் எழுதப்பட்டது. செலஸ்டினா என்பது 15ம் நூற்றாண்டில் ஸ்பெய்னில் வாழ்ந்த புகழ்பெற்ற வயதான சூனியக்காரியின் பெயர். அவ்வூரில் நன்கு அறியப்பட்ட சூனியக்காரி செலஸ்டினா ஒரு காலத்தில் தன் இளமையில் மிக அழகான வேசி. வயதாகி மாயாஜால மாந்திரீகம் புரிந்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதோடு பெண்களை வைத்து விபச்சாரவிடுதியும் நடத்தி வந்தவள்,
இவளை முக்கிய கதாபாத்திரமாய்க்கொண்டு அதே பெயரிலான நாவலை அதே தலைப்பில் ஸ்பானிஸ் மொழி திரைப்படமாக 1996ல் ஜெரார்டோ வேரா (GERARDOVERA) என்பவரின் சீரிய இயக்கத்தில் திரைப்படமாய் வெளியானது. காலிஸ்டோ (CALISTO) என்ற இளம் நைட் எர்ரண்ட் வரனும் அவனது வேலைக்காரன் செம்ப்ரோனியோ (SEMPRONIO) என்பவனும ஓர் ஊருக்கு வருகிறார்கள். அவ்வூர் பணக்காரப் பிரபு ஒருவரின் அழகிய இளம் மகள் மெலிபியா Melibea என்பவன். மெலிபியா மீது வீரன் காலிஸ்டோவுக்கு ஆசை. அவளைக் காணவே தன் வேலைக்காரனோடு வந்து åரு வீட்டில் தங்கியிருக்கிறான். தேவாலயத்தில் அவளை நெருங்க முயற்சிப்பதைத் தடுத்து ஒதுக்கியதோடு கடும் சொல்லால் திட்டியனுப்பிவிடுகிறாள். இந்த ஒரு நிமிடக் காட்சியில் காலிஸ்டோவாக நடிக்கும் இளைஞன் மிக அற்புதமாக, மிக லாவகமாக முகபாவம் செய்து காட்டி நடிக்கிறான். இம்மாதிரியான முகபாவ நடிப்பு இந்திய நடிகர்களில் எஸ்.வி. சகஸ்ரநாமத்துக்கும் நசிருதின்ஷாவுக்கும் மிக இயல்பாக மிகையின்றி வந்திருக்கிறது. காதல் ஜுரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காலிஸ்டோ மெலிபியாவின் காதலைத் தான் எப்படியாவது உடைந்துவிட வேண்டுமென்று, செம்ப்ரோனியோவிடம் கூறுகிறான். செம்ப்ரோனியாவுக்கு உள்ளூர் நண்பன் பார்மெனோ (PARMENO) என்பவன். இவனது காதலியும் சூனியக்காரி செலஸ்டினாவின் விபச்சார விடுதியிலிருப்பளே: செம்ப்ரோனியோ, தன் பாஸ் காலிஸ்டோவிடம் சூனியக்காரியின் சாமர்த்தியம் பற்றி எடுத்துச் சொல்லி அவளது உதவியை நாடலாமென்று யோசனை தரவும் வீரனும் சரியென்கிறான். ஆனால் இந்த யோசனையை பார்மெனோ விரும்பவில்லை. அவனது தாயை செலெஸ்டினா கொன்றுவிட்டவள் என்பதால் அவளை அவன் வெறுக்கிறான். வேறு வழியின்றி செம்ப்ரோனியோவுடன் பார்மெனோவும் சூனியக் காரியின் வீட்டுக்குப் போகிறான். தங்கக்காசு கிடைக்கும் என்றவுடன் விசயம் என்னவென்று கேட்டு விவரமறிகிறாள் செலஸ்டினா. தன்னால் மெலிபியாவை வசியம் செய்து காலிஸ்டோ மீது பைத்தியமாக பிரேமை கொள்ள வைக்க முடியும் என்கிறாள். சூனியம் வைக்கிறாள். அது வேலை செய்கிறது. தீய சக்திகளை கிளப்பி ஏவுகிறாள்.
மெலிபியா காலிஸ்டோவை எண்ணி காதல் ஜுரத்தால் துடிக்கிறாள். இதையெல்லாம் அறிந்த காலிஸ்டோ மகிழ்ச்சி வெள்ளத்தில் சூனியக்காரிக்கு தங்கக் காசுகளோடு விலையுயர்ந்த தங்கச் சங்கிலியொன்றைப் பரிசாகத் தருவதோடு மெலிபியாவை அடைந்தபின் மேலும் பரிசுகளைத் தருவதாகக் கூறியனுப்புகிறான். செபஸ்டினா தங்கச்சங்கிலியுடன் போவதை செம்ப்ரோனயோவும் பார்மெனோவும் பொறாமையுடன் பார்க்கின்றனர். அவளது இருப்பிடம் சென்று தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று கேட்க, அவள் மறுக்க பார்மெனோ, செலஸ்டினாவைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறான். இருவரும் தங்கச்சங்கிலியோடு ஓடுவதை, செலெஸ்டினாவைக் கொன்றதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துவிடும் சூனியக்காரியின் வளர்ப்புப் பெண், சிப்பாய்களிடம் சொல்லவும், இருவரும் கைதாகி கொலை புரிந்ததற்காக பொதுவிடத்தில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். பார்மெனோவின் காதலி தன் காதலனைக் கொன்றதற்குப் பழிவாங்கத் துடிக்கிறாள். காலிஸ்டோவும் மெலிபியாவும் நள்ளிரவில் தோட்டத்தில் சந்தித்து இன்புறுகின்றனர். தொடர்ந்து நள்ளிரவுகளில் காதல் சந்திப்புகள் நடந்தேறுகின்றன. சூனியக்காரியும் விபச்சார விடுதிக்காரியுமான புகழ்பெற்ற செலஸ்டினா கொலையுண்டதின் முக்கிய காரணம் இவர்களின் காதல் விவகாரம்தான் என்றும் அதன் தொடர்ச்சியாகவே தன் காதலனும் அவன் நண்பனும் சிரச்சேதம் செய்யப்பட்டு மாண்டனர் என்று தொடர் கொலைகள் ஏற்படக் காரணமான இவர்கள் இருவரின் காதல் மீது பார்மெனோவின் காதலி அடங்காத பொறாமை கொண்டு பழிவாங்குகிறாள். சிரச்சேதமுற்ற தன் காதலனை பார்மெனோவின் நண்பன் ஒருவனை காமக்கணை தொடுத்து தன் படுக்கையில் இடம் தருவதாய் ஆசை காட்டி, காலிஸ்டோவைத் தாக்கி முடமாக்கும்படி கேட்கிறாள். அவனும் நள்ளிரவில் காலிஸ்டோவோடு சண்டையிடும்போது, காலிஸ்டோ காலிடறி மிக உயரத்திலிருந்து விழுந்து கழுத்து அறுபட்டு இறந்துபோகிறான். மெலிபியா மனமுடைந்து தன் மாளிகையின் உச்சியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளுகிறாள்.
காதலை மையப்படுத்தி åரு கொலை – தொடர்பாக அடுத்தடுத்து கொலைகளை நடத்தி காதலும் இறந்துபோவதுதான் இந்த சுவாரஸ்யமான ஸ்பானிஷ் திரைப்படத்தின் வண்ண ஒளிப்பதிவு மிக மிக அற்புதமானது. ஒவ்வொரு காட்சி சட்டகமும் ஓவியம்போல தோன்றுமளவுக்கு åஒளிப்பதிவாளர் ஜோஸ் லூயி லோபெஸ் லினாரெஸ் (Jose LVis Lopez Linares) தன் காமராவைக் கையாண்டிருக்கிறார். மெலிபியாவாக பெனலோப் க்ரஸ் (PENELOPE CRUZ) தகுந்தளவு நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் தத்ரூபமாய்ச் செய்திருக்கிறார். மற்றவர்கள் பரவாயில்லை. சூனியக்காரி செலஸ்டினாவாக நடிக்கும் டெரெல் போவெஸ் (TEREL POVEZ) அற்புதமாய்ச் செய்திருக்கிறார்.
செக்ஸ் என்று வரும்போது, வன்கொடுமை, வல்லுறவு பால் மாற்றம், ஓரினப் பாலுறவு என்று ஏராளமான சங்கதிகள் வந்து போகும் கதைகளாகின்றன. இந்தப் பாலியல் உறவு தொடர்பான சங்கதிகளைத் தொடுத்து வெவ்வேறு பார்வையோடு, கண்ணோட்டத்தோடு திரைப்படங்கள் ஆக்கம் பெறுவதில் இத்தாலி, பிரான்சு என்று சொல்ல முடிகிறது. அந்த அணியில் ஸ்பானிஷ் திரைப்படங்கள் நிறையவே முக்கியமாக சேர்கின்றன. நாம் எதிர்பார்க்காத கோணங்களிலும் கண்ணோட்டத்துடனும் பாலியல் விஷயங்களை மையப்படுத்தி திரைப்படமாக்கும் சினிமா வகையைக் கொண்டுள்ள ஸ்பெயின் திரைப்படகர்த்தா பெட்ரோ ஆல்மொடோவர் (PEDRO ALMODOVAR).
ஆல்மோடோவர், கால்ஜாடா டி கலாட்ரவா லா மன்சா எனும் ஊரில் (CALZADA DE CALATRAVA LA MANCHA) 1949ல் பிறந்தவர், தமது 16வது வயதில் மாட்ரிட் நகருக்குப்போய்விட்டார். அந்த சமயம் சர்வாதிகாரி ஜெனரல் ஃப்ராங்கோ திரைப்படக் கலை பயிற்றுவிக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடத்தை மூட வைத்துவிட்டார். ஆல்மோடோவர் நிறைய கதைகள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். அத்தோடு ராக் இசையிலும் பயிற்சி பெற்ற ஆல்மோடேவர் ஒரு இசைக் குழுவில் சேர்ந்து இசையும் பொழிந்து வந்தார். இவர் 60களின் இறுதிமுதல் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்பெயின் தேசிய தொலைபேசி கம்பெனியில் பணிபுரிந்திருக்கிறார். அதில் வருமானத்தில் தன் முதல் சூப்பர்- 8 காமராவை வாங்கி குறும்படங்கள் எடுத்து வந்தார். ஆல்மோடோவர் ‘பெபி-லூசி- பாம் மற்றும் பிற பெண்கள்’
(PEPI LUCI-BOM AND OTHER GIRLS) எனும் தம் முதல் கதைத் திரைப்படத்தை 1980-ல் இயக்கி வெளியிட்டார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. இவர் நிறையவே விருதுகளைக் குவித்துள்ளார். 1990ல் ஸ்பெயின் நாட்டின் தேசிய திரைப்பட ஒளிப்பதிவாளர் விருது இவருக்குக் கிடைத்தது. ப்ரெஞ்சுக் கலாச்சார அமைச்சரிடமிருந்து 1994ல் ‘OFFICER DES ARTS ET DES LETTERS’ எனும் விருது ஆல்மோடோவருக்கு கிடைத்தது. 1997ல் ஃப்ரான்ஸ் நாட்டின் ‘சவாலியர்’ விருதும் 1999ல் ஃப்ரெஞ்சு அகாடெமி இவருக்கு கெளரவ ‘CESAR’ பட்டம் வழங்கியது. 1999ல் இவர் இயக்கிய ‘ALL ABOUT MY MOTHER’ திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது.
பாரிஸ் போலவே, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரமும் பெண்ணுலகின் பல்வேறு தளங்களாலானது. ஆல்மோடோவரும் பெண்களை முன்நிறுத்தியே திரைப்படங்களாக்குபவர் என்றும் பெயர் பெற்றவர். இவரது படங்களில் பளபளக்கும் ஒப்பனையில் பவனிவரும் பெண்கள் நிறைந்த தெருக்கள் முன்னால் வரும். போலரோ (BOLERO) நடனக்காரிகள், போதை மருந்து உட்கொண்டு மிதப்பிலிருக்கும் பெண்கள், அதை விற்பனை செய்யும் பெண்கள்; தெருவில் அலைந்து வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் இரவு ராணிகள், திருநங்கைகள் என்று பல்வேறு தரப்பட்ட பெண்கள் ஆல்மோடோவரின் திரைப்படங்களில் வந்து போகிறவர்கள்.
1950-ல் வெளிவந்த ஹாலிவுட் கருப்பு- வெள்ளைப் படம் ‘ALL ABOUT EVE’ புகழ் பெற்ற படம். பெட்டி டேவிஸ் (BETTI, DAVIS) எனும் அந்நாளின் புகழ் பெற்ற நடிகை அருமையாக நடித்திருப்பார். இப்படத்தை ஓர் அம்மாவும் 17 வயது அழகிய மகனும் பார்த்துக் கொண்டிருப்பதிலிருந்து ஆல்மோடோவர் தமது ‘ALL ABOUT MOTHER’ படத்தை தொடங்குகிறார். பிறகு அவர்கள் ஒரு மழைநாளில் டென்னிசி வில் லியம்ஸின் புகழ்பெற்ற நாடகம், (A STREET CAR NAMED DESIRE) ஐ பார்க்கையில் பையன் ஈஸ்டபனுக்கு (ESTEBAN) 17 வயது முடிகிறது. பெற்ற தாயைப் பார்த்து 17 வயது மகன் கேட்கும் கேள்வி நம்மைத் தூக்கிவாரிப் போட வைக்கும்.
‘‘நீ வயிற்றிலிருக்கும்போது உன் அப்பன் என்னை விட்டு விட்டு ஓடிப்போனான். எங்கு போனானோ, பதினெட்டு வருஷமாகப்போது,’’
‘‘அதற்குப்புறம் நீ விபச்சாரியாகவில்லையா?’’
‘‘இல்லை மகனே, என்னைப் பல பேர் பல முறை வல்லுறவு கொண்டிருக்கிறார்கள்.’’
விடிந்தால் ஈஸ்டபனுக்கு 18 வது பிறந்த நாள். ஈஸ்டபனுக்கு தான் எழுத்தாளனாக வேண்டுமென்ற பேரவா. ஒரு குறிப்புப் புத்தகத்தில் எதையெதையோ உருப்படியாக நிறைய எழுதி வைத்து அம்மாவுக்குக் காட்டுகிறான். அவனது அம்மா மனுவெலா (Manuvela) அனுபவமிக்க நர்ஸாக இருந்தவள். தன் பள்ளி நாள் நாடகத்தில் இதே ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசைர்-ஐ மேடையேற்றியபோது இவள் நடித்த பாத்திரத்தில்தான் இன்று பார்க்கும் நாடகத்தில் அன்றைய புகழ் பெற்ற ஸ்பானிஷ் நாடக நடிகை ஹ்யூமா ரோஜா HVMo Rojo நடிக்கிறாள். பள்ளி நாடகத்தில்தான் மனுவெலாவின் எதிர்காலக் கணவனும் ஈஸ்டபனின் தந்தையுமானவனையும் அவள் சந்தித்தது. மனுவெலா இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருக்கையில் அவளை விட்டு விட்டு ஓடிப் போன அவளது கணவன் பால் மாற்றம் செய்துகொண்டு லோலா என்ற பெயரில் பார்சலோனா நகரில் இருக்கிறான். இது எதுவும் மனுவெலாவுக்குத் தெரியாது. ஈஸ்டபன் பிறந்து பதினேழு வயது முடியும் அழகிய பையனான காலத்தில் பணத்துக்காக விபச்சாரத்திலீடுபட்டு பிறகு அதை விட்டு விட்டவள் மனுவெலா. நடிகை ஹ்யூமா பெண்ணோடு பெண் உடலுறவு கொள்ளும் லெஸ்பியன் வகைப் பெண்மணி. அவளது அற்புதமான நடிப்பால் ஈர்க்கப்பட்ட சிறுவன் ஈஸ்டபன் அவளது கையெழுத்தைப் பெறும் பேராவலில் இருக்கிறான். நாடகம் முடிய, கனத்த மழை பிடிக்கிறது. மனுவெலாவும் ஈஸ்டபனும் வெளியில் வருகையில் நடிகை ஹ்யூமா டாக்சியிலேறிப் புறப்படுகிறாள். கார் ஜன்னலைத் தட்டி ஆட்டோகிராப் கேட்கிறான் ஈஸ்டபன். கார் அலட்சியமாய் போக, ஆட்டோகிராப் வெறிப்பிடித்து மழையையும் பொருட்படுத்தாமல் பின்னாலேயே ஓடும் ஈஸ்டபன் பின்னால் வந்த காரில் பலமாய் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துபோகிறான். மனுவெலா உடைந்து போகிறாள்.
இப்போது தன் கணவனைத் தேடி பார்சலோனாவுக்குப் பயணமாகிறாள். அவள் கணவன் பெண்ணாக பால் மாற்றம் செய்துகொண்டு லோலா என்ற பெயரில் இருப்பதையறிந்து அந்நகரின் பள்ளத்தாக்குப் பகுதியில் பால் மாறிய திருநங்கைகள், விபச்சாரிகள், அவர்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களெல்லாம் இரவில் கூடும் இடத்துக்கு வருகிறாள் மனுவெலா. படத்தில் இந்தக் கட்டமும் காட்சியும் சிலிர்க்கச் செய்கிறது. வழியிலேயே திருநங்கை ஒருத்தியை தடியன் ஒருவன் துன்புறுத்துவதைக் கண்ட மனுவெலா டாக்சியிலிருந்து இறங்கி அங்கே ஓடிப் போய் தடியனைத் தாக்கிவிட்டு திருநங்கையைக் காப்பாற்றுகிறாள். ஆனாலும் அந்தத் திருநங்கை பரிதாபம் கொண்டு அடிபட்ட தடியனை எழுப்பி சாலைவரை அழைத்துப் போய் யாரிடமோ அனுப்புகிறாள். தன் பெயர் அக்ரடோ என்று சொல்லி உதவி கேட்கச் சொல்லியனுப்புகிறாள். திருநங்கை அக்ரடோவின் முகம் அங்கங்கே அடிவாங்கி வீங்கி ரத்தக் களரியாகத் தோன்றுகிறது.மனுவெலா அக்ரடோவை மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள், தனக்கொரு மகன் இருந்து விபத்தில் மாண்டுபோன கதையை அக்ரடோவுக்குச் சொல்லுகிறாள். மனுவெலாவின் கணவன் 18 வருடங்களுக்கு முன் ஈஸ்டபன் வயிற்றிலிருக்கையில், தன்னை விட்டு விட்டு ஓடிப்போய் பாதிக்குத் திருநங்கையாகித் திரியும் அவன் லோலா என்ர பெயரிலிருப்பதாய் கூறுகிறாள். போதை மருந்து, குடிபோதைக்கு அடிமையானவர்கள், விபச்சாரிகள் ஆகியோருக்கு நல்வழி வகுத்து நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி வைக்க முயற்சிக்கும் சேவை அமைப்பு ஒன்றிருக்கிறது.
அதில் முக்கியமானவள் தேவாலயக் கன்னியாஸ்திரியான ரோஸ்ஜா (ROSZA) எனும் இளம் பெண், அக்ரடோவின் இணையோடு மனுவெலா அந்த மையத்துக்குச் சென்று ரோஸ்ஜாவை சந்திக்கிறாள். ரோஸ்ஜாவுக்கும் லோலாவுக்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அக்ரடோவின் உதவியுடன் நாடக நடிகை ஹ்யூமா, ரோஜோவை சந்தித்து அவளுடைய நாடகத்தின் முடிவில் தன் åரே மகன் ஈஸ்டபன் மழையில் அவளது கையெழுத்துக்காக காரைப் பின்தொடர்ந்து ஓடி காரில் அடிபட்டு இறந்ததைக் கூறுகிறாள்.
இதனிடையில் கன்னியாஸ்திரி ரோஸ்ஜா அதிலிருந்து வெளியேற்றப்பட்டவள் என்றும் காரணம் அவள் கள்ள உறவால் கருவுற்றிருப்பதும்தான் என்பதையும் ஹ்யூமா தெரிவிக்கிறாள். ஆனால் கர்ப்பத்தைக் கலைக்க ரோஸ்ஜா மறுத்துவிட்டதையும் கூறுகிறாள். ‘‘அந்தக் கர்ப்பத்தைச் செய்தவன் யார் என்று மனுவெலா கேட்க, ‘‘உன்னைவிட்டுப் பிரிந்துப் போன உன் கணவன் லோலாதான்,’’ என்று கூறி திடுக்கிட வைக்கிறாள் ஹ்யூமா. முழுமையாக திருமங்கையாக மாறுமுன் லோலாவுக்கும் ரோஸ்ஜாவுக்கும் உறவு ஏற்பட்டு அவள் கருவுற்றிருப்பதை ஹ்யூமா சொல்லுகிறாள். இதுவரை இந்தப் படம் சொல்லப்பட்டு வரும் நிகழ்வுகளின் தொடுப்பினூடே கதையுருகொண்டு சுவாரசிய நிலையில் நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.
மனுவெலா ஒரு முடிவுக்கு வருகிறாள். ரோஸ்ஜாவுக்கு மருத்துவம் பார்த்து பிரசவம் ஆகும் வரை செலவைத் தானே ஏற்று தன் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுவதாய் ஏற்பாடு செய்கிறாள். ரோஸ்ஜாவின் தாயார் விவரமறிந்து வந்து பார்த்துவிட்டு செலவுக்குத் தானும் உதவுவதாகக் கூறுகிறாள். தனியே குடியிருக்கும் தன் வீட்டில் மனுவெலா, ரோஸ்ஜாவை அழைத்து வந்து விடுகிறாள். பிறக்கும் குழந்தை ஆணாயிருந்தால் அதற்கு ஈஸ்டபன் என்று பெயரிடப்போவதாக ரோஸ்ஜா கூறுகிறாள். ஒரு கட்டத்தில் ரோஸ்ஜா கேட்கிறாள், ‘‘லோலா ஓர் எய்ட்ஸ் நோயாளி, அவன் மூலம் எனக்கும் தொத்தியிருக்கலாம். அந்தப் பரிசோதனையும் செய்யுங்கள்’’ என்று அந்த சோதனையும் செய்யப்படுகையில், ‘‘ரோஸ்ஜாவுக்கு HIV-POSITIVE’’ எனும் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியாகிறது. பிரசவம் முடிந்து ஆண் குழந்தை பிறக்கவும், ரோஸ்ஜா இறந்து போகிறாள். குழந்தைக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்து பார்க்கையில் நெகடிவ் (இல்லை) என்று தெரிய வர புதிய ஈஸ்டபனை மனுவெலா எடுத்துக் கொள்ளுகிறாள். ரோஸ்ஜாவின் அடக்கத்தின் நாளன்று லோலா வந்து பார்க்கிறான்.
மிகுந்த உணர்ச்சிகரமான மனப் போராட்டங்கள் மிக்க பெண் பாத்திரங்களும் திருநங்கைகளும் கொண்ட ALL ABOUT MY MOTHER சிறந்த அயல் மொழித் திரைப் படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்றது. சிறுவன் ஈஸ்டபனாக எலோய் அஜாரின் (ELOY AZARIN) அதி சிறப்பாக நடிக்கிறான். மனுவெலாவாக செசிலியா ரோத் (CECILIA ROTH) மிக மிக அருமையாகச் செய்திருக்கிறார். அக்ரடோ எனும் திருநங்கைப் பாத்திரம் பிரம்மாதம். அதையேற்று நடித்துள்ள அண்டோனியா சான் ஜுவான் (ANTONIA SAN JUAN) மிகச் சிறந்த நடிகர் என்பது ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் பிற உடல்மொழி வெளிப்பாட்டின்போதும் தெரிகிறது. ரோஸ்ஜாவாக பெனலோப் கீரிஸ் (PENELOPE CRUZ) தேவலை மிகச் சிறப்புற படத்தை இயக்கியிருக்கும் பெட்ரோ ஆல்மொடோவருக்கு உற்ற துணையாயிருப்பது சிறந்த åஒளிப்பதிவு. காமரா கலைஞர் ஃபான்ஸோ பியட்டோ (AFFONSO BEATO) அந்தப் பெருமைக்குரியவர். சிறந்த இயக்குனர் விருது கான் திரைப்பட விழாவில் ஆல்மோடோவருக்கு அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் பால் மாற்றம் செய்யும் முதல் படமாய் (ALL ABOUT MY MOTHER)-ஐ சொல்ல முடியாது. ஆல்மோடோவரே இந்தக் கருத்தும் நிகழ்வும் கொண்ட தமது 1980ன் படமான “(THE LAW OF DESIRE)” -ன் மூலம் முக்கிய பாத்திரமும் இச்செயலை மேற்கொள்ளுவதாகக் காட்டியிருக்கிறார்.
ஒரு பாத்திரம் ஆண் நர்ஸ் (MALE NURSING ORDERLY) அவன் மற்றவனிடம் கூறுகிறான், ‘‘பெண்களிடம் நாம் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் பேசாவிட்டாலும் நாம் பேச வேண்டும்.’’
(TALK TO HER) அவளிடம் பேசு. மேற்கண்ட நிகழ்வு பெட்ரோ ஆல்மோடோவரின் சர்ச்சைக்குரிய 2002-ம் ஆண்டில் இயக்கித் திரையிடப்பட்ட ஸ்பானிஷ் திரைப்படத்தில் இடம் பெறுகிறது.
EL BOSQUE- ஸ்பெய்னிலுள்ள நல்லதொரு மருத்துவமனை. பேசின – பேசாத உறவுகள், இரு ஜோடிகளின் வாழ்வையும் காதலையும் இணைத்து வைத்தவை.
பினா பாஷ் (PINA BAUSCH) சிறந்த நடனக் குழு. இக்குழுவின் மிகவும் சிக்கலான நடன நிகழ்வை. அதில் பங்கேற்கும் பாத்திரங்கள் மிக அரிதாகவே ஒருவரையொருவர் பேசிக்கொள்ளும்படியும் மேடையில் சலனிக்கவிட்ட மிக அரிய நடனக் கோர்வை நாடகம் படத்தின் தொடக்கத்தில்… இருக்கைகளில் அறிமுகமில்லாத இருவர் அருகருகே உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து இவ்வாரம்பக் காட்சி முழுவதுமே முழு படத்தின் சாரமாக – இசைக் கச்சேரியில் ஒரு பாட்டின ராக ஆலாபனையை அரைமணிநேரம் புரட்டியிழுப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இருவர் – பெனிக்னோ மார்டின் (BENIGNO MARTIN) மற்றும் மார்கோ ஜுலோவகா (MARCO ZULOVAGA) என்பவர்கள். பெனிக்னோ ஸ்பெயின் தேசத்து நர்ஸ். மார்கோ அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பத்திரிகையாளன். காட்சியின் சோக நிகழ்வு- முடிவு கொண்ட இசை நாடகம் இருவருக்கும் வெவ்வேறு விதமான உணர்வை ஏற்படுத்துகிறது. பெனிக்னோ கை தட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். மார்கோ கை எதுவும் தட்டுவதில்லை. அவனது கண்களிலிருந்து கண்ணீர் தளும்பி வழிகிறது. இதுவும் முழு திரைப்படத்துக்குமான குறியீட்டு அறிமுகம். அவனது கண்ணீரை பெனிக்னோ கவனிக்கிறான். அவ்வளவுதான், எல்லோரும் எழுத்து போகையில் இவர்களிருவரும் எழுந்து வெவ்வேறு திசையில் போய் விடுகின்றனர். மாட்ரிட் நகர் மெக்சிகோ போலவே மாட்டையடக்கிக் கொல்லும் அல்லது மாட்டால் கொல்லப்படும் MATADOR வீர விளையாட்டுக்குப் பெயர் பெற்ற நகரம், படம் எல் பாஸ்க் மருத்துவமனையிலிருந்து தொடருகிறது. பெனிக்னோ நர்ஸ் பயிற்சி பெற்ற இளைஞன். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியனாய் வசிப்பவன். ஜன்னலைத் திறந்தால் எதிரில் பாலே நடனப் பயிற்சிக்கூடம். வெறும் கண்ணாடிச் சுவர்களாலானது. தினமும் காலையில் பார்ப்பான். அதில் ஏராளமான அழகிய ஆண், பெண், இளம் மாணவ, மாணவிகள் காலை மாலைகளில் பாலே நடனப் பயிற்சிக்கு வந்து போகின்றனர். அதன் பயிற்சியாளர் காட்டரினா (KATERINA) எனும் ஆசிரியை. அங்கு பயிற்சி பெறும் அழகிய இளம் பெண் அலிசியா (Alicia) பெனிக்னோவைக் கவர்ந்து அலைக்கழிக்கிறாள். அலிசியாவின் தந்தை மனநோய் மருத்துவர். அவரை சந்தித்து பெனிக்னோ எல் பாஸ்கில் நர்ஸ் வேலையிலமர்கிறான்.
இந்த சமயம் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு அலிசியா கோமாவில் ஆழ்ந்த நிலையில் எல்பாஸ்க் மருத்துவமனையில் படுத்திருக்கிறாள். இரவும் பகலும் அவளருகில் நர்ஸ் இருந்தாக வேண்டும். இரவுப் பணிக்கு வரும் பெண் நர்சுக்கு வீட்டில் நிறைய குடும்பப் பிரச்சினைகள். அவளது வேண்டுகோளுக்கு இணங்கி பெனிக்னோ தொடர்ந்து இரவுப் பணியைப் பார்த்துக் கொள்ளுகிறான். நான்கு ஆண்டுகளாக ஓர் இளம் பெண் கோமா- ஆழ்ந்த மயக்க நிலையில் கிடக்கிறாள். உடல்பூர்வமாக மற்ற வளர்ச்சிகளும் மாற்றங்களும் நடக்கின்றன. பெனிக்னோ, அலிசியாவை உணவூட்டி, உடலைச் சுத்தம் செய்து குளிப்பாட்டி விடும்போதெல்லாம் அவளோடு பேசுவான். தான் படித்த, பார்த்த புத்தகம், நாடகம், சினிமா குறித்தெல்லாம் அவளோடு பேசுவான். அவன் மட்டும் பேசுவான். கோமாவில் அவள் அசைவற்று படுத்திருக்க இவன் மட்டும் அவளோடு பேசுவான். தனக்குத்தானே பேசிக்கொள்ளுவது போலத்தான். என்றாலும் அவளோடு பேசுவான். சக பெண் நர்சுடன் சேர்ந்து அவளுக்கு சேவை செய்கையில் அலிசியாவின் நிர்வாண உடலை உணர்ச்சியற்றவனாக தீண்டுவான். அல்லது, தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளமாட்டான். இதற்காகவே பெண் நோயாளிகளோடிருக்கும் பட்சத்தில் அவனது ஆண்மையை பரிசோதிக்கும் விதமாய் மனநிலை மருத்துவர் கேட்பார்,
“உனக்குக் கல்யாணமாகிவிட்டதா?”
“இல்லை.”
“காதலியுண்டா?”
“இல்லை.”
“உன் பாலுணர்வுக்கு என்ன மாதிரி வடிகாலைக் கொண்டிருக்கிறாய்?”
“ஆண் உறவுகளிருக்கிறார்கள்?”
“கேயா?”
“ம்…”
என்று பொய் சொன்னவன், உண்மையில் பெனிக்னோ ஓரினப்பாலுறவாளன் அல்ல.
இந்த சமயத்தில் மற்றொரு விபத்து நேரிடுகிறது. மாட்டையடக்கிக் கொல்லும் சில சமயம் மாட்டால் கொல்லப்படும் ‘மாட்டடார்’ வீராங்கனைகளுமுண்டு. அப்படிப்பட்ட சாகச வீராங்கனை லிடியா கான்ஸலஸ் (LYDIA GANZALEZ) என்பவள். இவளது காதலன் ஆண் மட்டடார் வீரன் எல்நினோ என்ற வசீகரன் (EL NINO). அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மார்கோ ஜுலோவகா (MARCO ZULOAGA என்பவன் (VEL PAIS) எனும் ஸ்பானிஷ் பத்திரிகையின் நிருபர். அவன் தன் பத்திரிகைக்காக பெண் மட்டடார் லிடியாவை சிறப்புப் பேட்டி கண்டு வெளியிட மாட்ரிட் நகருக்கு வந்திருக்கிறான். அவளது மாட்டு விளையாட்டைப் பார்க்கிறான். அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடி உணவருந்துகிறான். இந்த சமயம் லிடியாவின் காதலன் எல் நினோ கருத்து வேறுபாட்டில் அவளிடமிருந்து ஒதுங்கிப் போய் விடுகிறான். அந்த இடத்தை மார்கோ பிடித்துக்கொள்ளுகிறான். லிடியாவுக்கும் மார்கோவுக்குமிடையே உறவேற்படுகிறது. இந்த சமயம் ஒரு மாட்டுச் சண்டையில் முரட்டு மாட்டால் முதல் சுற்றிலேயே கோர விபத்துக்குள்ளாகும் லிடியாவின் கழுத்தெலும்பு பலமாய்ச் சேதமடைந்து அவள் கோமா நிலைக்குப் போய் விடுகிறாள். அவளையும் எல் பாஸ்கில் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அவளை இரவு, பகலாக அருகிருந்து பார்த்துக்கொள்ளுவதாய் மருத்துவமனை அனுமதி பெற்று மார்கோ துணையிருக்கிறான். நர்ஸ் பெனிக்னோவும் மார்கோவும் சந்திக்கின்றனர். நாடகக் காட்சியின்போது அருகருகே அமர்ந்திருந்தபோது மார்கோ உணர்ச்சிமேலிட்டு கண்ணீர் உகுத்ததை நினைவுபடுத்துகிறான் பெனிக்னோ. அது எதுவும் தனக்கு நினைவில்லை என்கிறான் மார்கோ.
“அவளோடு பேசு. பேசிக் கொண்டேயிரு. அவள் பேசாமலிருப்பதை லட்சியம் செய்யாமல் பேசு. பெண்களோடு பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுவே ஒரு வித மருத்துவம்’’ என்று மார்க்கோவுக்கு கூறுகிறான் பெனிக்னோ.
ஒரு நாள் பகலில் பெண் நர்ஸ் பெனிக்னோவிடம் அலிசியாவுக்கு மாத விலக்கு ஏற்பட்டிருப்பதை தெரிவிக்கிறாள்.
‘‘பீரியட் வந்திருக்கு. இந்த முறை சீக்கிரமே ஆயிருக்கு’’ என்கிறாள். உடனே சுத்தப்படுத்துகிறார்கள். அலிசியாவின் மார்பகங்கள், ஜனன உறுப்பு, தொடைகளையெல்லாம் சுத்தப்படுத்துகையில்தான் உணர்ச்சிவசப்படுவதை மிகவும் சாமர்த்தியமாய் வெளியில் காட்டிக்கொள்ளாது அடக்கிக் கொள்ளுவான் பெனிக்னோ. இது, படத்தின் ஓட்டத்தில் மிக முக்கியமானதும் அரிதானதுமான ஆல்மோடோவரின் சிறப்பான இயக்கத்துக்கு எடுத்துக்காட்டு. ஒரு காட்சி கார்டூன்- அனிமேஷன் கொண்டதாய்- அதே சமயம் சர்ச்சையைக் கிளப்பிவிட்ட காட்சிகளில் ஒன்றாகவும் இயக்குனரால் இடம் பெற்றுள்ளது. படம் முழுக்க அலிசியா போன்ற இளம் பெண்ணுருவம் படுக்கையில், எதிரே தீக்குச்சி நீளத்துக்கு நிர்வாண இளைஞன் உருவம். ஜொனாதன் ஸ்விஃட் (JONATHAN SWIFT) எழுதிய (GULLIVERS TRAVELS) நாவல் படித்தவர்களுக்கு ‘லில்லிபுட்’ எனும் தீவு – அத்தீவின் கைப்பிடியளவு பிரஜைகள் நினைவுக்குவர வேண்டும். அப்படியொரு கைப்பிடியளவு மனித மனித உருவம் அனிமேஷன் படி சலனிக்கிறது. அடுத்து திரை முழுக்க அந்தப் பெண்ணின் ரோமம் கூடிய பிறப்புறுப்பு காட்டப்படுகிறது. லில்லி புட் மனிதன் பெண்ணின் மார்பகங்கள் மீது துள்ளித் துள்ளி நடந்து தொடைமீது வழுக்கி பெண்ணுறுப்பை அடைகிறான். ஒருமுறை திரும்பி நம்மைப் பார்த்துவிட்டு உறுப்பைத் திறந்து உள்ளே நுழைந்து போய்விடுகிறான். அவன் திரும்பி வெளியே வருவதேயில்லை என்ற வாசகம் வந்துபோகிறது. இது ஆண் நர்ஸ் பெனிக்னோ உட்கார்ந்தவாறே போட்ட சிறு தூக்கத்தில் கண்ட கனவு.
அடுத்து அலிசியாவுக்கு மாத விலக்கு நின்று போகிறது. இரு மாதங்கள் கழித்து நான்கு வருடங்களாய் கோமாவிலிருக்கும் அலிசியா கர்ப்பமாயிருப்பது தெரிய வருகிறது. பெனிக்னோவை விசாரணைக்குட்படுத்தி கேட்கவும் அவன் உண்மையை ஒப்புக்கொள்ளுகிறான், கோமாவிலிருந்த – தான் ஆசைப்பட்ட அலிசியாவுடன் இரவுப் பணியில் இருக்கையில் இரு மாதங்களுக்கு முன்பு உடலுறவு கொண்டதாய் கூறுகிறான். கோமாவிலிருந்த பெண்ணை வல்லுடலுறவு கொண்ட குற்றத்துக்காக பெனிக்னோ ஆயுள் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்படுகிறான். மார்கோ போய் பார்த்து வருகிறான். ஒரு நாள் மாட்டுச் சண்டைக்காரி லிடியா கோமாவிலேயே இறந்து போகிறாள். பெனிக்னோ தன் வீட்டுச் சாவியை மார்கோவிடம் கொடுக்கச் சொல்லி அங்கு தங்கிக்கொள்ளும்படி கூறுகிறான். அவனும் அங்கு போய் தங்கியிருக்கையில் காலையில் ஜன்னலைத் திறக்க, எதிரே பாலே நடனப் பள்ளியின் ரஷ்ய பாலே நடன ஆசிரியை காட்டரினா ஆண், பெண் நடனப் பயிற்சியாளர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த வாரத்தில் அலிசியாவுக்குப் பிரசவம் நடந்து ஆண் குழந்தை இறந்தே பிறக்கிறது. ஆனால் உடலின் பிரசவத் தொழில் அவஸ்தையில் அலிசியாவின் கோமா நிலை முற்றிலுமாய் நீங்கி, புனர் ஜென்மம் பெறுகிறாள். இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லி விடுதலைக்கு முயற்சி செய்ய சிறைக்கு ஓடுகிறான் மார்கோ. முன்தின இரவில் மார்கோ மூலம் பெற்ற தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்ட பெனிக்னோ மீளா உறக்கத்தில் இறந்துபோய் கிடக்கிறான்.
இந்த சர்ச்சைகளைக் கிளப்பிவிட்ட அரிய ஸ்பானிஷ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் காமரா கலைஞர் ஜேவியர் அகுர்ரெசரோபே (JAVIER AGIRRESAROBE) சிறந்த கதை மற்றும் திரைக்கதை வடிவமைக்கான ஆஸ்கர் விருது 2002ல் ஆல்மோடவருக்கு இப்படத்துக்காகக் கிடைத்தது. 2002-ன் சிறந்த அயல் மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதும் 2002ன் மிகச் சிறந்த திரைப்படம் என்ற ‘டைம்’ மற்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ விருதும் (TALK TO HER) படத்துக்குக் கிடைத்தது.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

