ஸ்காண்டிநேவியன் சினிமா.
நார்வே டென்மார்க்- ஸ்வீடன்
நமது பயாஸ்கோப்காரன் ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்துவிட்டான். நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளைக் கொண்ட ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்திறங்கியதுமே அவனது சினிமா நினைவுகளில் புகழ்பெற்ற “வைகிங் ஸ்” (Vikings) வீரத்திரைப் படமொன்று திரும்புகிறது. பத்து – பதினோறாம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் ஸ்காண்டிநேவியா மற்றும் நார்டிக் (பின்லாந்து பகுதி) பகுதிகளில் வைகிங்க்ஸ் எனும் வீரம் மிக்க கடற்போர் வீரர் சமூகம் இருந்திருக்கிறது. இவர்கள் இங்கிலாந்து, வட அமெரிக்கா என்று கடல் கடந்து போரிட்டவர்கள் வைகிங்ஸ் கூட்டம் கடற் கொள்ளைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் பல பிரிவுகளும் ஒன்றோடொன்று தலைமைப் பதவிக்காகவும் பெண்ணுக்காகவும் என்றெல்லாம் உட்பூசலும் போருமிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்புகளுமுண்டு. ஸ்காண்டி நேவிய வீரர்களை வைத்து 1958-ல் வெளிவந்த ஹாலிவுட்டின் (Vikings) திரைப்படத்தை பயாஸ்கோப்காரன் சேலம் நியூசினிமா திரையரங்கில் பார்த்த நினைவு அலை புரண்டு வந்துவிட்டது. பயங்கரமான சாகசங்களைக் கொண்ட திரைப்படம் இது. Kirk Douglas Tony curtis கிர்க் டக்ளஸும் டோனி கர்டிஸும் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வைகிங்ஸ் வீரர்களாய் மூர்க்கமான வாட்போரில் ஈடுபடும் பாத்திரங்களில் நடித்தார்கள். இருவருமே இன்று உயிருடனில்லை.
ஸ்காண்டிநேவியாவின் டென்மார்கில் பிறந்த டேனிஷ் எழுத்தாளர் திருமதி கேரன் ப்ளிக்சென் ஐசக் டினேசன் (Isak Dinesan) என்ற புனை பெயரில் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் ஆப்ரிக்காவிலுள்ள கீன்யாவில் குடியேறி 1913 முதல் 1931 வரை காபி தோட்டங்களை விலைக்கு வாங்கி கவனித்து வந்தவர். இவரது கணவர் வெளிநாடு போனவர் திரும்பி வரவேயில்லை. ஆனால் உயிரோடிருந்தார். ஐசக் டினேசன் தமக்கு உதவியாக தம்மோடு காபித் தோட்டங்களை கவனித்துக் கொண்ட ஒருவரோடு மனைவியாக கொஞ்ச காலம் இருந்துவிட்டு பிறகு தனியாகவே வாழ்ந்து ஆஃப்ரிக்க பழங்குடி மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். அவர்களின் கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டார். அவர்களை நாகரிகமான குடிமக்களாய் கொண்டுபோனதோடு தோட்டங்களில் வேலைவாய்ப்பும் உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும்படி வழி செய்தார். அவர்களின் வளர்ச்சிக்கும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டார். தனது வாழ்க்கை வரலாறு தோய்ந்த Out of Africa எனும் அற்புத புனைவு நூலை 1937ல் எழுதி வெளிக் கொணர்ந்தார். பலமுறை இவரது பெயர் நோபல் இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும், ஸ்காண்டிநேவிய பகுதி எழுத்தாளர்களுக்கே திரும்பத் திரும்ப நோபல் பரிசு தருவது சரியாகாது என்று காரணம் காட்டி இவர் நிராகரிக்கப்பட்டவர். திருமதி ஐசக் டினேசனின் ‘‘அவுட் ஆஃப் ஆஃப் ரிகா’’ நாவல் 1985-ல் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். நடிகர் சிட்னி பொல்லாக் (Sydney pollack) இயக்கத்தில் அற்புதமான திரைப்படமாயிற்று. அவ்வாண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு ஆஸ்கர் பரிசுகள் பெற்றது.
டேனிஷ் பெண்மணி கேரன் ப்ளிக்சென் தான் விரும்பி மணம் புரிந்தவனோடு ஆப்ரிகாவில் கீனியாவில் காபித் தோட்டம் வாங்கி குடியேறுகிறாள். ஆனால் கணவன் அவள் பணத்தையும் அவளையும் மோசம் செய்துவிட்டு வெளிநாட்டுக்குப் போனவன் திரும்புவதே இல்லை. தன்னுடன் பணிபுரியும் இருவரில் ஒருவரை காதலித்த கேரன் அவனையே திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்கிறாள். பிறகு தனியாக வந்து ஆப்ரிக்க பழங்குடி கலாச்சாரம், அம்மக்களின் சகல நலன்களிலும் உட்சென்று உதவி முன்னேற வைக்கிறாள். இப்படத்தில் ஐசக் டினேசனாக [கேரனின் புனைபெயர்] மெரில் ஸ்ட்ரீப், ஓடிப்போன கணவனாக ராபர்ட் ரெட்ஃபோர்டு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சிட்னி பொல்ரொக்கின் சிறந்த இயக்கத்தையும் மிஞ்சும்படியிருப்பது ஒளிப்பதிவு. படத்தின் அற்புத காமிரா கலைக்காக ஒரு ஆஸ்கர் விருது ஒளிப்பதிவாளர் டேவின் வாட்கினுக்கு [DAVID WATKIN] அளிக்கப்பட்டது. கண்களை விட்டு அகலா அதியழகிய இயற்கைக் காட்சிகளால் படம் முழுக்க ஒவ்வொரு சட்டகமும் அமைந்துள்ளது.
ஐசக் டினேசனின் மற்றொரு புகழ்பெற்ற டேனிஷ் நூல் ஆப்ரிக்க அனுபவம் மேலிட்ட ‘SHADOWS ON THE GRASS” இந்நூல் சிறிதும் சுருக்கப்படாமல் முழுவதும் 60-களில் ‘IMPRINT” மாத இதழில் வெளியிடப்பட்டது. இந்நூலிலுள்ள கோட்டோவியங்களையும் ஐசக் டினேசனே தீட்டியிருந்தார். இம்ப்ரிண்ட் இதழ் அந்த கோட்டோவியங்களையும் சேர்த்தே வெளியிட்டது. இந்நூலையும் ஐசக்கின் பிற நூல்களையும் படித்துவிட்டு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே [ERNEST HEMINGWAY] கூறினார், “எனக்கு நோபல் பரிசு அளித்திருக்காமல் இவருக்கல்லவோ இலக்கிய நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும்”, என்று.
ஐசக் டினேசனின் மற்றொரு புகழ்பெற்ற டேனிஷ் நாவல், ‘BABETTE’S FEAST” – பேபெட்டின் விருந்து. திரைப்பட ரசிகர்களின் கண்களுக்கு விருந்து. இந்த டேனிஷ் – ஸ்வீடன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பேசும் திரைப்படம் சிறந்த அந்நிய மொழிக்கான திரைப்பட ஆஸ்கார் விருதை 1988-ல் பெற்றது. இந்நாவல் மிக மிக அருமையாகவும் சரியாகவும் தழுவப்பட்டு 1987-ல் டேனிஷ் – ஸ்வீடிஷ் – பிரெஞ்சு மும்மொழிகளிலும் பேசும்படியாக தயாரிக்கப்பட்டு கேப்ரியல் ஆக்ஸெல் [GABRIEL AXEL] இயக்கத்தில் அற்புதமான காமிர கலைஞர் ஹென்னிங் கிறிஸ்டியன்சென் [HENNING CRISTIANSEN]னின் ஒளிப்பதிவில் திரைப்படமானது. அவ்வாண்டு கான் திரைப்பட விழாவிலும் சிறப்பு பரிசு அளிக்கப்பட்ட படம்.
மூலக்கதை நார்வேயின் நகரத்தில் நடப்பதாக இருப்பதை இயக்குனரும் திரைக்கதை கர்த்தாவுமான கேப்ரியல் ஆக்ஸெல், டென்மார்க்கிலுள்ள ஜுட்லாந்து [JUTLAND] எனும் கடற்கரை கிராமமாக மாற்றியிருக்கிறார். உலக வரலாறு ஓரளவுக்கு அறிந்தவர்களுக்கு “பாரிஸ் கம்யூன்” [PARIS COMMUNE] பற்றி தெரிந்திருக்கும். பாரிஸ் கம்யூன் என்ற பிரெஞ்சு தொழிலாளர் இயக்கம் 1870-71–களில் இயங்கி தொழிலாளருக்கு எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்து போராட்டத்தை நடத்தியது. கிட்டதட்ட உள்நாட்டுப் போராகவே பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வந்த பாரிஸ் கம்யூன்களின் போராட்டத்தில் உயிரிழந்தோர் பலர். அனாதைகளாக அண்டை நாடுகளுக்கு கடல் கடந்து சென்று அகதிகளாய் புகலிடம் தேடியவர்கள் அனேகம். பாரிஸ் கம்யூன் ஓரிரு மாதங்களிலேயே அடக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. “பெபெட்டின் விருந்து” – கதை நடக்கும் காலம் பாரிஸ் கம்யூன் போராட்டம் நிகழ்ந்த 1871ம் ஆண்டு மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக பல்வேறு உபயோகங்களுக்கு கொண்டு செல்லப்படாத காலம். பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் அரசாங்க சிப்பாய்களின் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டு போயினர். தாய் தந்தை கணவன்மாரை இழந்தவர்கள் அகதிகளாக அக்கம் பக்கத்து கடற்கரை நகரங்களுக்கு படகுகளில் பயணித்துப் போய் தஞ்சமடைகின்றனர். டென்மார்க்கும் அதன் பல்வேறு சின்னஞ்சிறு கடற்கரை பட்டினங்களும் அங்குமிங்கும் வந்து சேரும் பிரெஞ்சு அகதிகளுக்குப் புகலிடமாகின்றன. அப்படியாக ஜுட்லாந்தும் ஒன்று. ஒரு மூல நூலைத் தழுவி நாடகம் திரைப்படமென்று, மறுவடிவம் தரும் தழுவல், கலைக்கு மிக நல்ல எடுத்துக்காட்டாக இப்படம் சொல்லப்படுகிறது.
இந்த ஊரில் ஒரு இருபது வயது முதிர்ந்த தம்பதிகள், ஒரு சிறிய பல்பொருள் அங்காடி என்று இருப்பவை. கடற்கரையிலிருந்து ஊருக்குள் வந்து போக கோச்சு வண்டி சேவையுமிருந்தது. ஊரில் தெய்வீக சேவை செய்து வந்த பாதிரியாருக்கு இரு புதல்விகள், பிரெஞ்சு ராணுவத்தில் சிறிய பதவியிலிருந்த ஒருவர் பாரிசுக்குப் போய்விட்டு வருவதால் இளைய சகோதரியிடம் சொல்லிவிட்டுப் போய் வருவதேயில்லை. ஒரு பிரெஞ்சு இசைக்கலைஞன் சின்னவளுக்கு இசைக் கற்று தருவதாக வந்து பயிற்சி தொடங்கி அவளை அடைய முயற்சிப்பதை மோப்பம் பிடித்த பாதிரியார் அவளை விரட்டிவிடுகிறார். பாதிரியாருக்கு தம் இரு பெண்களையும் கன்னியாஸ்திரீகளாய் வளர்த்து பயிற்சியளித்து தனக்குப் பிறகு ஊரில் பூஜை ஜெபக் காரியங்களைத் தொடரும்படிக்கு ஆளாக்குகிறார். அவர் இறந்ததும் சகோதரிகள் தந்தை வழியில் ஜெபம் செய்து வருகின்றனர். வருவாய் போதவில்லை. ஏழ்மை ஜீவனத்தில் காலம் கடந்து அவர்களும் முதுமையை அடைகிறார்கள். இந்த சமயம் பிரான்சில் பாரிஸ் கம்யூன் இயக்கப் புரட்சி – போராட்டம் நடந்து நிறையபேர் இறந்து போக, அனாதைகள் அகதிகளாய் அறிமுகக் கடிதங்களோடு விலாசம் வாங்கிக்கொண்டு ஒரு மழைக்காலத்தில் எங்கெங்கோ போகிறார்கள். அந்த வகையில் நடுத்தர வயது பிரெஞ்சு பெண்மணி ஒருத்தி பாரிசிலிருந்த படகில் பயணப்பட்டு ஜுட்லாண்டை அடைகிறாள். கடைக்காரர் பிரெஞ்சு அறிந்தவர். சகோதரிகளின் வீட்டைக் காட்டுகிறார். அவள் அங்கு சென்று தன்னை அறிமுகப்படுத்துகிறாள். சில ஆண்டுகளுக்கு முன் காதலில் தோல்வியுற்று போன பிரெஞ்சு இசைக் கலைஞன்தான் இந்த விலாசத்தைத் தந்து அனுப்பியது. வந்தவள் பெயர் பெபெட் [BEBETTE] சமைப்பது, துவைப்பது, கடை கண்ணிக்குப் போவது இன்னபிற வேலைகளை செய்து கொண்டு அங்கிருக்க புகலிடம் கேட்கிறாள். உள்நாட்டுக் கலவரத்தில் கணவனும் பெற்றோரும் இறந்து போனதாயும் கூறுகிறார்கள். அவளை வேலைக்கு வைத்துக்கொள்ள பணவசதி தங்களுக்கில்லை என்றும், அவளிடம் பணம் எவ்வளவு இருக்கிறதென்றும் சகோதரிகள் கேட்கிறார்கள்.
“ஊரில் என் பெயரில் ஒரு லாட்டரி டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். வேறு எதுவும் என்னிடமில்லை”, என்கிறாள் பெபெட்.
காலஞ்சென்ற தங்கள் தந்தையின் நினைவு நாளன்று வயதான குடும்பத்துக்கு வேண்டிய பத்து பேருக்கு ஒரு சிறு விருந்தை அளித்து பிரார்த்தனை நிகழ்த்துவது சகோதரிகளின் வழக்கம். பிரெஞ்சுக்காரி பெபெட் எல்லாருக்கும் அறிமுகமாகி விடுகிறாள். ஒருநாள் கடைக்காரரின் விலாசத்திற்கு பெபெட்டின் பெயரில் கடித உறையொன்று தபாலில் வருகிறது. பெபெட் அதைப் பிரித்துப் பார்க்கிறாள். சகோதரிகள் திகிலோடு பார்க்க பெபெட்டின் முகம் மலர்கிறது.
“என் பெயருக்கு லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது. பத்தாயிரம் ஃபிராங்க் பணம் பரிசுத்தொகை.” என்று கூறிவிட்டு காசோலையைக் காட்டுகிறாள்.
“நீ எங்களை விட்டு விட்டு ஊருக்கு போய்விடுவாயா?”
“இல்லை போகமாட்டேன்”
பாதிரியாரின் நினைவுநாள் விருந்தை தன் செலவில் ஏற்பாடு செய்வதாயும் அது ஒரு ‘FRENCH DINNER’ [பிரெஞ்சு இராச் சாப்பாடு] என்றும் அறிவித்து மூன்று நாட்கள் விடுப்பு பெற்று படகிலேறி பாரிஸ் போகிறாள் பெபெட். ஒரு பிரெஞ்சு இரவு விருந்துக்கான சகலவற்றையும் படகிலேற்றிக்கொண்டு பெரியப்பா பையன் ஒருவனை கூடமாட ஒத்தாசைக்கென அழைத்து வருகிறாள்.
விருந்துக்கான மூலப் பொருட்கள் படகிலிருந்து கொண்டுவரப்படுவதை தெருக்கள் கவனித்து அதிர்ச்சிக்குள்ளாகின்றன. காடைகள், முட்டைகள், கோழிகள், வாத்துகள், உரித்த ஆடு, உயிருள்ள ஆமை, நீரில் துள்ளும் மீன் வகைகள், காய்கறி பழ தினுசுகள், பால், வெண்ணெய் இத்யாதிகள், மது பாட்டில்கள், பெரிய ஐஸ் கட்டிகள் என்று ஏராளம்.
“உலகிலேயே பிரம்மாண்டமான விருந்து பிரெஞ்சு டின்னர்தான்”, என்கிறாள் பெபெட். தன் மகத்தான சமையலை ஆரம்பிக்கிறாள். படம் முன்பாதி, பெபெட் வந்து சேர்ந்த கதையாயும், பின் பாதி விருந்தாகவும் போகிறது. பிரான்சில் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலையும் அவர் மனைவியையும் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். இளைய சகோதரியை திருமணம் செய்து கொள்ளுவதாய்க் கூறிபோன ராணுவவீரன்தான் இந்த ஓய்வு பெற்ற ஜெனரல். பிரெஞ்சு ஆமை சூப் உலகப் புகழ் பெற்றது. அதற்காகவே பெரிய உயிருள்ள கடல் ஆமையை கொண்டு வந்திருக்கிறாள் பெபெட். ஆனால், அப்பாவித்தனம், மூடநம்பிக்கை மிக்க அவ்வூர் விருந்தினர்கள், இந்த விருந்தில் சந்தேகம் கொண்டு கற்பனையை வளர்க்கின்றனர். பெபெட் மீதும் அவளது இறை நம்பிக்கை மீதும் சந்தேகம் கொள்ளுகின்றனர்.
“இது ஏதோ பேய் வழிபாடாகத் தெரிகிறது. இதை அவள் நம்மைக் கொண்டு நடத்தத் திட்டமிட்ட பேய் வழிபாடு” என்று பேசிக் கொள்ளுகின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு சத்திய பிரமாணம் செய்து கொள்ளுகின்றனர். சாப்பிடலாம், ஆனால் பேய் வழிப்பாட்டையொட்டி படைக்கப்படும் பெரு விருந்தை வாய் தவறியும் புகழ்ந்து பாராட்டிப் பேசிவிடக்கூடாது. அத்தகைய விருந்தின் உணவு பதார்த்தங்களின் சுவையைப் புகழ்ந்து சொல்லிவிட்டால், பேய் வழிப்பாடு ஏற்கப்பட்டு வாழ்த்தப்பட்டதாகி உண்ட உணவு நஞ்சாகவும் மாறிவிடும் என்று பேசிக்கொண்டு, யாரும் எந்தப் பண்டத்தையும் ருசித்து சாப்பிட்டதாய்க் காட்டிக்கொள்ளலாகாது என்றும் பேசிக்கொண்டு சகோதாரிகள் வீட்டு விருந்துக்கு தயாராகினர். இந்த சமயம் வயதான இருவர் தம் பழைய சண்டையை நினைவுபடுத்திக் கொண்டு,
“நீ முதுகில் மோசமா கொடுத்த அடி, ஒரு விருந்தப்போதான். மறக்க முடியாது” என்கிறார்.
இன்னொருவர், “என்னிடம் பத்து வருஷம் முந்தி மூணு பிராங்க் கைமாத்து வாங்கினது ஞாபகமிருக்கா? இன்னும் திருப்பித் தர்ரே”, என்கிறார் இன்னொருவரிடம்.
பெபெட் நிற்க நேரமில்லாமல் தான் ஒருத்தியே உறவுக்காரப் பையன் உதவியோடு அந்த மாபெரும் இரவு விருந்தை தயாரித்து முடிக்கும் தருவாயிலிருக்கிறாள். நமக்கே படபடப்பு ஏற்படுகிறது. ஐஸ்கிரீம், புட்டிங், ஃப்ரூட் சால்ட் என்று ஒருபுறம், ஒரேயொரு பெண்மணி பன்னிரெண்டு விருந்தினருக்கு மாபெரும் பிரெஞ்சு இராபோஜனம் தயாரிக்கிறாள், யார் இவள்? யாராயிருப்பாள் இந்த பெபெட்? என்ற கேள்வி அங்கு ஒருவருக்குமே எழவில்லை.
“ஜாக்கிரதை, மறந்தும் உணவுப் பதார்த்தங்களை பாராட்டிப் புகழ்ந்து பேசிவிடக்கூடாது”, என்று அவர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்வதிலேயே கருத்தாயிருக்கிறார்கள்.
சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு ஜெனரலும் அவர் மனைவியும் படகில் வந்திறங்கி கோச்சு வண்டியில் வந்து சேருகின்றனர். கோச்சு வண்டியோட்டி 13-வது விருந்தாளியாக சமையலறையிலேயே போய் உட்கார்ந்து தானே எடுத்துப் போட்டுக் கொண்டு ஒரு கை பார்க்கிறாள்.
சமையற்கலையின் ஒழுங்கை – அழகை – சீரான வகைமையை அந்த உள்ளூர் ஏழை ஜோடிகள் பார்த்து மெய் மறக்கின்றனர்.
“உஷார், மனதுக்குள் பாராட்டிக் கொண்டு சாப்பிடலாம். எதையும் ரசித்து ருசித்ததாய் சொல்லி சாத்தானுக்கான SABBATH-ஐ நிரூபித்து உண்டது செரிக்காது விஷமாக்கி விடலாகாது.”
ஐரோப்பிய உணவுப் பரிமாறலும் உண்பதும் வேறொரு கலை. அது ஒன்றையடுத்து ஒன்றாக பல கோர்ஸ்” எனப்படுவது. எல்லாவற்றுக்கும் முன்பாக ஆரம்பம் [STARTER] என ஒரு சூப். அது கடல் ஆமை சூப். ஒவ்வொருவரும் அதை பிசாசுக்கான ரத்தப் படைப்பாக மனதுக்குள் கற்பித்தவாறு அருந்துகின்றனர். அதையும் மீறி அதன் சுவை அவர்களை அசத்துகிறது.
“ஆஹா! இது அசல் பிரெஞ்சு சூப்தான். எத்தனையோ வருடங்களாகிறது, இவ்வளவு தரமான பிரெஞ்சு கடலாமை சூப் ருசித்து” என்று பிறர் கேட்கும்படி சூப்பை சுவைத்து ரசித்து அதன் உசத்தியான சுவையைப் பாராட்டுகிறார் ஜெனரல். ஆனால், தம் ஆனந்த சுகானுபவத்தை சக விருந்தாளிகளோடு பகிர்ந்து கொள்ளலாமென அவர்களைப் பார்த்துச் சொல்லுகையில் அவர்கள் ஒவ்வொருவரும் வாய் திறவாதிருக்கின்றனர். ஜெனரலுக்கு எந்த தயக்கமோ பயமோ, கட்டுப்பாடோ மூடநம்பிக்கையோ கிடையவே கிடையாது. உள்ளூர் விருந்தாளிகளின் எச்சரிக்கை இவருக்குத் தெரியாது. அவர் பாட்டிற்கு ஒவ்வொரு பதார்த்தத்தையும் ருசித்து ரசித்துப் பாராட்டினபடியே பக்கத்தில் எதிர் வரிசையில் உட்கார்ந்திருப்போருடன் தம் ருசி ரசனையை பகிர்ந்து கொள்ளுகையில், அவர்கள் அதற்கெல்லாம் வெறும் ஒரு புன்சிரிப்போடு சமாளிப்பது ஜெனரலுக்கு விளங்கவில்லை. அதே சமயம் அவர்கள் பத்துபேரும் ஒவ்வொரு பதார்த்தத்தையும் சுவைக்கும் போதெல்லாம் காலஞ்சென்ற பாதிரியாரை, அவரது தெய்வபக்தியை ஜெபக்கிருபையை அன்புள்ளத்தை, அவருக்குப் புதல்விகளாய்ப் பிறந்து திருமணமே புரிந்து கொள்ளாமல் தந்தை வழியில் இறை நம்பிக்கையை, வழிபாட்டை, திருச்சபையை பேணிக்காத்து தொடரும் பாங்கையெல்லாம் சொல்லிச் சொல்லி பாராட்டிக் கொள்ளுகின்றனர். ஆமை சூப்பிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது வரை, வைன், ஜின், ஓட்கா, விஸ்கி, ரம் மதுபானங்களைக் கேட்டுக்கேட்டு குடிப்பது வரை பாராட்டத் துடிக்கும் மனதையடக்கி, அதற்குப் பதிலாக அதையெல்லாம் பாராட்டும் முகமாய் பாதிரியாரை அவரது தெய்வீக இருப்பை, ஆத்ம திருப்தியை, அவரது புதல்விகளை பாராட்டியபடி இருக்கின்றனர்.
“ஜெனரலின் பெரிய கண்ணாடி குப்பி காலியாகாமல் பார்த்துக் கொள். அதில் அவருக்கு மட்டும் இந்த பாட்டிலிலுள்ளதை ஊற்றிக் கொணடேயிரு; என்று பையனுக்கு சொல்லி வைக்கிறாள் பெபெட்.
விருந்து முடிகிறது. ஜெனரல் எழுந்து நின்று உலகாயத தத்துவம் ஒன்றைக் கூறி, இறையாண்மையை நறுக்கென செருகி பேசி முடித்து, பிரெஞ்சு விருந்து தயாரிக்கப்பட்டிருக்கும் பாங்கை அதி உயர்வாக விமர்சிக்கிறார். சகோதரிகளையும் பாராட்டி விட்டு கூறுகிறார்,
“சில வருடங்களுக்கு முன் நான் விருந்தினனாக ஒரு ராணுவ மரியாதை நிமித்தம் ஒரு மாபெரும் பிரெஞ்சு இராபோஜன விருந்துக்கு பிரபலமான ஓட்டலுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதுபோன்ற விருந்தையும் சுவையையும் அதற்குப் பிறகு இன்றுதான் இங்குதான் சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த மாபெரும் ஓட்டலின் சமையற்காரர்களின் தலைமைச் சமையற்காரர் ஒரு பெண்மணி என்றார்கள். அவளை நான் பார்க்க முடியவில்லை”, என்று கூறிமுடித்து இளைய சகோதரியைத் தனியாக அழைத்துச் சென்று, “நான் சொன்னபடி அன்று திரும்பி வரவில்லை. எங்கிருந்தாலும் உடல் ரீதியாக வாழ முடியாவிட்டாலும் என்றென்றைக்கும் என் மனதில் நீ ஜீவித்திருக்கிறாய்” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கோச்சு வண்டியில் மனைவியோடு ஏறி கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறார்.
பெபெட் தன் உறவுக்காரப் பையனோடு சமையலறையில் ஒரு மூலையில் அமர்ந்து மீதியுள்ள உணவுப் பதார்த்தங்களைச் சாப்பிட்டபடி சகோதரிகளிடம் கூறுகிறாள்.
“ஒரு காலத்தில் பாரிஸில் பிரபல உணவு விடுதியொன்றின் தலைமைச் சமையற்காரியாக நான் பணிபுரிந்திருக்கிறேன்.”
அவர்கள் கேட்கிறார்கள், “அப்படியானால் நீ பாரிசுக்கு திரும்பப் போய் விடுவாய்”
“இல்லை, என்னிடம் காசில்லை” என்கிறாள் பெபெட் பத்தாயிரம் ஃபிராங்க் லாட்டரி பரிசுப் பணம் வந்ததில் மீதியிருக்குமே?”
“இல்லை. எல்லாம் செலவழிந்து விட்டது. பன்னிரெண்டு பேருக்கு ஒரு பிரெஞ்சு டின்னர் தயாரித்து அளிக்க பத்தாயிரம் ஃப்ராங்க் ஆகிறது”, என்று கூறி புன்னகைக்கிறாள் பெபெட்.
இந்த அற்புதமான டேனிஷ் திரைப்படம் GABRIEL AXEL இயக்கத்தில் காமிரா கலைஞர் ஹென்னிஸ் கிறிஸ்டியென்சென் ஒளிப்பதிவில் கான் திரைப்பட விருதையும் ஆஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறது. ஸ்டீஃபன் ஔட்ரன் [STEPHANE AUDRAN] பெபெட் பாத்திரத்தில் அதி சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற எல்லா பாத்திரங்களுமே பழுதின்றி நடித்திருக்கிறார்கள். பெரும்பான்மை நடிக நடிகையர் இங்மர் பெர்க்மனின் ஸ்வீடிஷ் திரைப்படங்களில் நடித்திருப்பவர்களே டேனிஷ் படங்களிலும் நடிப்பது வழக்கம். இதை பிற டேனிஷ் படங்களிலும் காணமுடியும்.
வேலைவாய்ப்புகளை முன்னிட்டு தாம் கொண்டிருந்த பல்வேறு பந்தப் பிணைப்புகளை சட்டென உதறிவிட்டு வேறு இடங்கள் தேடிப்போக நிர்ப்பந்திக்கப்பட்டு வேறொரு இடத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் மனித வாழ்க்கையை ஜான் ஸ்டீன்பெக்கின் மகத்தான நாவல் GRAPES OF WRATH சித்தரிக்கிறது. இந்த அழுத்தமான நாவலை ஜான் ஃபோர்டு [JOHN FORD] அதியற்புதமாக திரைப்படமாக்கினார். இதற்கு இணையான டென்மார்க் ஸ்காண்டினேவிய நாவல் “PELLE EROBRENEN” என்பது. நான்கு பகுதிகளாய் அமைந்த இந்த நாவலை எழுதிய ஸ்காண்டினேவிய நாவலாசிரியர் டென்மார்க்கைச் சேர்ந்த மார்டின் ஆண்டர்சன் நெக்சோ [MARTIN ANDERSEN BNEXO] என்பவர். இந்நாவலின் முதற்பகுதியைக்கொண்டு “PELLE THE CONQUEROR” என்ற அரிய டேனிஷ் திரைப்படம் பில் ஆகஸ்ட் என்பவரின் சிறந்த இயக்கத்தில் 1988-ல் தயாராகி வெளிவந்தது.
19-ம் நூற்றாண்டின் இடையில் ஸ்வீடனில் ஒரு பஞ்சம் நிகழ்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. அதன்போது அண்டை நாடான டென்மார்க்கில் பண்ணைத் தொழில், மாட்டுப் பண்ணை, விவசாயம் எல்லாமே செழிப்பாக இருந்தது. ஸ்வீடனிலிருந்து குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக கப்பலில் பயணப்பட்டு டென்மார்க் துறைமுகத்தில் மக்கள் வந்திறங்கினபடியே இருந்தனர். இந்த ஆரம்பக் காட்சி திரைப்படத்தில் மனதை உலுக்கும்படியாக இருக்கிறது. ஸ்வீடனிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் இன்னும் தூங்கினபடியே கிடக்கும் வயதான தந்தையின் கையில் தான் கட்டிய கயிற்றை இழுத்தசைத்து எழுப்புகிறான் பத்து வயது சிறுவன் பெல்லே [PELLE] அந்த சிறுவனின் அறுபது வயது தந்தை லாஸ் காரல்சன் [LASS KARLSSON] அவர்கள் இருவரும் ஸ்வீடனிலுள்ள டோம்லில்லா எனும் ஊரிலிருந்து வந்திருப்பவர்கள். பையனுக்கு தாய் இல்லை. முதியவர் லாஸ் பையனையும் மூட்டையையும் சுமந்தபடி துறைமுகத்தில் வேலைக்கு ஆள் எடுக்குமிடத்தில் வரிசையில் நிற்கிறார். தன் விவரத்தைக் கூறுகிறார்.
“உனக்கு வயது அதிகமாகி விட்டது. பையனோ ரொம்ப சின்னவன். வேலைக்காகாது. வேண்டாம்”
இன்னொரு இடத்தை நெருங்கி “என் பெயர் லாஸ். மனைவியில்லை. நாடு ஸ்வீடன் என் பையன் இது” என்கிறார் லாஸ் காரல்ஸன்.
“அப்பால் போ, கிழவன் நீ. வேலையில்லை”
இப்படியாக பத்துபேரை அணுகியும் இருவரும் ஏற்கப்படாமல் வேலைக்கு வேண்டாமென நிராகரிக்க, அவர்களிருவரும் சோர்ந்து உட்காருகிறார்கள். இதில் கிழவனுக்கு வெற்று ஜம்பத்துக்கு குறைச்சலில்லை. ஒவ்வொரு முறை தான் நிராகரிக்கப்படும்போது, “பெல்லே, முதலில் வரும் வேலைக்கான அழைப்பை ஏற்க மாட்டேன். காத்து ஏங்கிக் கிடக்கிறவன் என நினைப்பார்கள்.”
இப்படியாக லாஸ் காரல்சன் மகனிடம் ஜம்ப வார்த்தை பேசுபவராகவே படம் சித்தரிக்கிறது. எல்லோருக்கும் வேலை கிடைத்து போய்விட இடமே வெறிச்சோடிக் கிடக்கிறது. தந்தையும் மகனும் மட்டும் உட்கார்ந்திருக்கையில் குதிரை வண்டியில் ஒருவர் வருகிறார்.
“வேலையா?”
“ஆமாம், என் பெயர் லாஸ். என் பையன் பெல்லே”
“டாகுமெண்ட்ஸ் எடு”
லாஸ் நம்பிக்கையோடு விரைப்பாக எடுத்து தருகிறார்.
“சரி சரி, இருக்கட்டும். இருவருக்கும் சேர்த்து வருஷத்துக்கு 100 க்ரோனா சம்பளம் தருவேன். தங்குமிடம் சாப்பாடு இலவசம். பண்ணை வேலை.”
சரியென்று கூற, அவர்களைத் தன் வண்டியிலேற்றிக்கொண்டு பண்ணையார் கோங்ஸ்டிரப் [KONGSTRUP] அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டையடைகிறார். அவருக்கு மூத்த மனைவி வழியாக நில்ஸ் [NILS] என்ற மகனும், குழந்தைப் பேறற்ற இரண்டாவது மனைவியும் இருக்கிறார்கள். பண்ணையிலிருக்கும் தொழிலாளரிடையே ஸ்வீடிஷ் ஜனங்களை அவ்வப்போது டேனிஷ்காரர்கள் சதாய்த்தபடியே இருக்கிறார்கள். “போங்க டா ஒங்க ஸ்வீடனுக்கு,” என்று சண்டை வந்தால் துரத்துவார்கள். பண்ணை முதலாளி கோங்க்ஸ்டிரப் பெண் பித்துப் பிடித்தவன். பெல்லேயும் அவன் அப்பாவும் மாட்டுப் பண்ணையில் பணிபுரிகின்றனர். மாட்டுக் கொட்டைகையிலே அவர்களுக்கு உறைவிடமும். இருபது வயது சட்டாம்பிள்ளை ஒருவன். பெல்லே மீது அவனுக்கு எரிச்சல். அவ்வப்போது துன்புறுத்துவான். முதலாளி மனைவிக்கு பெல்லே மீது கொஞ்சம் இரக்கமும் அன்புமுண்டு. கணவனுக்குத் தெரியாமல் பெல்லே மூலம் மது வரவழைத்து குடிப்பாள். அவனுக்கு பக்ஷீல்” தருவாள். ஒரு சமயம் முதலாளி இதைக் கண்டு பிடித்து மதுபுட்டியைப் பிடுங்கி கொட்டிவிடுகிறான். கணவன் மனைவிக்கு சண்டை இதை பெல்லே பார்க்கிறான். எல்லா நிகழ்வுகளையும் கவனித்து வரும் சிறுவன் பெல்லேயின் பார்வையில்தான் முழு படமுமே கொண்டு செல்லப்படுகிறது.
மூல நாவலின் ஆசிரியர் மார்டின் ஆண்டர்சன் நெக்சோவுக்கு சார்லஸ் டிக்கன்ஸனின் இலக்கிய பாதிப்பு இருப்பதை இப்படத்தின் வழியே அனுமானிக்கலாம். பண்ணை ஃபோர்மன் மகா கொடுமைக்காரன். அவனுக்குக் கீழுள்ள சட்டாம்பிள்ளைப் பையன் அதற்குமேல் துஷ்டன். அனுபவமும் வயதும் நிரம்பிய எரிக் [ERIC] என்பவனும் பெல்லேயும் சினேகிதர்களாகின்றனர். எரிக் நேர்மையும் நியாயமுமான அன்புள்ளம் கொண்டவன். தன் லட்சிய கனவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா என்று உலகம் சுற்றப்போவதாய்க் கூறுகிறான். தானும் வருவதாய் பெல்லேயும் சொல்லுகிறான். இந்த சமயம் ஃபோர்மன் எரிக்கிற்கு தண்டனை தருகிறான். அதை எதிர்த்து எல்லா தொழிலாளரும் ஃபோர்மனிடம் போகையில் உழவு ஆயுதத்தால் ஃபோர்மனைத் தாக்குகிறான் எரிக். அதற்குள் சட்டாம்பிள்ளை பெரிய கல்லால் எரிக்கின் மண்டையை அடித்து உடைக்கவும் மூளையில் அடிபட்டு மயங்கி விழுகிறான் எரிக். வாழ்நாள் முழுக்கு சுயநினைவையிழந்து நடைப்பிணமாகிறான். குற்றம் குத்த, ஃபோர்மன் இரக்கம் கொண்டு எரிக்கை உடனிருந்து கவனித்துக் கொள்ளுகிறான். கோங்க்ஸ்டிரப்புக்கு பல வைப்புகள். அதில் ஒருத்திக்கு முதலாளியின் உறவால் அவலட்சணமாய்ப் பிறந்த பையன் பெயர் ரூட் [RUT]. இவனும் மாடு மேய்ப்பவன், ரூட்தான் பெல்லேக்கு மாடுகளின் உளவியல் கூறையெல்லாம் சொல்லித் தருகிறான். எப்படி மாடுகளை அடக்கி சொன்னபடி கேட்க வைப்பதென்பதையெல்லாம் கற்றுத் தருகிறான், முதலாளியால் அனுபவித்து ஏமாற்றப்பட்ட பெண் அவ்வப்போது ரூட்டையும் இழுத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்கு வந்து, “கோங்ஸ்டிரப், வெளியேவாடா, உன் பையனப் பாருடா, குடுடா பணம்…”, என்று சத்தம் போட்டு பணம் கேட்பாள். அவளை ஆட்கள் அடித்து விரட்டுவார்கள். கோங்ஸ்டிரப்பின் மகன் நில்ஸ், மீன்களை வண்டியிலேற்றும் ஸ்வீடிஷ் இளம்பெண் அன்னாமீது ஆசை வைக்க இருவரும் காதலித்து இரவில் சந்தித்து உடலுறவு கொள்ளுவதையெல்லாம் பெல்லே கவனிக்கிறான். சில மாதங்கள் போனதும் கோழிகளையும் கவனித்துக் கொள்ளும் பெல்லே, காலையில் கணக்கிட்டு வைத்த முட்டைகள் மாலையில் குறைந்திருப்பதைக் கண்டு துணுக்குறும்போது ஒரு பெண்ணின் முனகல் கேட்டு போய்ப் பார்க்கிறான். வைக்கோல் மீது அன்னா படுத்திருக்கிறாள். அவளது வயிறு பெருத்திருக்கிறது. சோர்ந்து போனவளாய்ப் பேசுகிறாள்.
“நான் இங்கிருப்பதைக் காட்டிக் கொடுத்து விடாதே… நேரம் வரும் சமயம் நானே போய்விடுகிறேன். ஸ்வீடனுக்கே போய்விடுகிறேன்.” என்று கெஞ்சினாள். பெல்லே புரிந்தவனாக மேலும் கொஞ்சம் முட்டைகளை எடுத்து அவளுக்குத் தந்தான்.
ஒருநாள் முதலாளிக்கும் தொழிலாளப் பெண்ணுக்கும் பிறந்த அவலட்சணமான பையன் மூட் எங்கோ போய்விடுகிறான். அந்தம்மாள் மீண்டும் கோங்ஸ்டிரப் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு விரட்டப்படுகிறாள். முதலாளி மனைவி மனக் குமுறலோடு இதைப் பார்க்கிறாள். பெல்லே பள்ளிக்கூடம் போகிறான். ஒருநாள் மழையில் மாட்டிக் கொண்ட பெல்லே ஊர் கோடியிலுள்ள வீட்டில் ஒதுங்குகிறான். அந்த வீடு ஓல்சென் [OLSEN] எனும் சிப்பாயினுடையது. அவன் ஒரு வருடமாய் சண்டையிலிருந்து திரும்பவில்லை. திருமதி ஓல்சென் ஆண் துணைக்கு ஏங்கி காத்திருப்பவள். மழைக்கு ஒதுங்கிய பெல்லேயை உள்ளே அழைத்துச் சென்று அவன் கதையைக் கேட்டறிந்து கொண்டு காபி கேக்கெல்லாம் தருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் பெல்லே ஓல்சென் பற்றி விவரிக்கிறான். லாஸ் கார்ல்சனுக்கு கடைசிகால சபலம் ஒன்று. வழக்கம் போல ஓர் அதீத கற்பனையில் மூழ்குகிறான். தன்னையும் பையனையும் கவனித்துக்கொள்ள ஒரு பெண் துணை கிடைக்கும். நல்ல படுக்கை, இடம், சாப்பாடு, காலையில் படுக்கையிலேயே சூடான காபியெல்லாம் அளிக்கும் அற்புத வாழ்க்கையாக அது அமையும் என்றெல்லாம் மகனை அணைத்துக்கொண்டு பேசுகிறார். ஓல்செனை ஓரிரவில் சந்திக்கப் போகிறார் லாஸ். தன் பெட்டியைத் துழாவி தன் மனைவியின் அழகிய சால்வையை எடுத்து மடித்துக் கொண்டு ஓல்செனின் வீட்டுக்குப் போகிறார். அவளை கண்டு தன் கதையை சுருக்கமாய்ச் சொல்லி அந்த சால்வையை பரிசாக அவளுக்கு அளிக்கிறார். மதுவருந்துகிறார். அன்றிரவு தன்னோடு தங்கும்படி ஓல்சென் கேட்க, அவரும் தங்கியிருந்து காலையில் இருட்டில் வந்து விடுகிறார். இந்த உறவு தொடருகிறபோது ஊரில் பேச்சு அடிபடுகிறது. ஒரு நாள் பள்ளிக்கூட வகுப்பில் ஒரு சிறுமி பெல்லேயைச் சுட்டி காட்டி பேசிச் சிரித்துவிட்டு சிலேட்டில் எதையோ எழுதி ஒவ்வொருவரும் படிக்க அனுப்புகின்றனர். அதில் எழுதப்பட்டுள்ள வாசகம், பெல்லேயின் தந்தைக்கும் திருமதி ஓல்செனுக்குமுள்ள கள்ள உறவு குறித்தான செய்தி. அவமானத்தோடு வீடு திரும்பும் பெல்லேக்கும் சக மாணவர்களுக்கும் அது குறித்த சண்டை, கைகலப்பு ஏற்படுகிறது. மறுநாள் அவன் பள்ளிக்குப் போவதில்லை. வகுப்பாசிரியர் வகுப்பில் உறங்கினபடியே செத்துப் போகிறார்.
லாஸ் மீண்டும் கற்பனையில் பறக்கிறார். அந்தம்மாள் விவாகரத்து பெற்றால்தான் மணம் செய்து கொள்ளுவதாகக் கூறுகிறார். அப்பாவை அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் போக வேண்டாமென கூறுகிறான். ஸ்வீடிஷ் மக்களுக்கு அம் மண்ணின் விளையும் “காட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மீது மிகுந்த ஆசையும் பெருமையுண்டு. ஸ்வீடிஷ் திரைப்பட மேதை இங்மர் பெர்க்மன் தம் புகழ் பெற்ற திரைப்படம் ஒன்றுக்கு காட்டு ஸ்ட்ராபெர்ரிகள் [WILD STRAWBERRIES] என்றே தலைப்பிட்டவர். தம் நாட்டு பெருமை மிக்க WILD STRAW BERRIES விதைகளை தம்மோடு எடுத்து வந்த லாஸ் காரல்சன் அவற்றை ஆற்றங்கரையில் புல் நடுவே ஊன்றி விதைத்திருப்பார். டென்மார்க் மண்ணில் ஸ்வீடிஷ் பெருமையை நட்டு வளர்க்க முயற்சிப்பதாய் மகன் பெல்லேயிடம் கூறும் விதமும் அந்த ஊர்ப் பெருமை முகத்தில் ஒளிவிடும் பாங்கும் படத்தில் அருமையான காட்சி. ஸ்வீடிஷ் நடிகர் மாக்ஸ் வான்சைடோ [MAX VONSYDOW] இதுபோன்ற தருணங்களில் அற்புதமாக முகபாவம் காட்டி நடித்து விடுகிறார். சில தினங்களில் அவர் சோதிக்கையில் பெர்ரி பழங்கள் உயிர்பெற்று வந்திருப்பது கண்டு அவற்றைப் பறித்துச் சேகரித்து ஒன்றை வாயில் போட்டுச் சுவைக்கும் காட்சி அபாரம்.
ஆற்றில் பிறந்த குழந்தை அமுக்கப்பட்டு இறந்து மிதக்குகிற காட்சி – அப்பப்பா! போலீஸ் ஆணை கைது செய்து கொண்டு போகிறது, தான் பெற்ற குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக. புயலில் சிக்கிய கப்பலிலுள்ள மனிதர்களை காப்பாற்ற ஓடி எல்லோரையும் காப்பாற்றிவிட்டு தான் அடிபட்டு இறக்கிறான் முதலாளியின் மகன் நில்ஸ்.
இந்த சமயம் சிப்பாய் ஓல்சென் திரும்பி வந்துவிடுகிறான். எனவே பெல்லேயின் தந்தை போட்ட திட்டம் நடப்பதில்லை. அவர் திருமதி ஓல்செனை சந்திப்பதும் அத்தோடு நின்று விடுகிறது. கோங்ஸ்டிரப்பின் மச்சினி மகள் சிக்னே [SIGNE] என்பவள் பெரியம்மாவுடன் சிறிது காலம் இருக்கலாமென வருகிறாள். அந்த இளம்பெண் சிக்னே மீது கோங்ஸ்டிரப்பின் காமப் பார்வை ஆழப்பதிகிறது. ஊருக்கு வெளியில் நடக்கும் திருவிழாவுக்கு முதலாளி எல்லோரையும் வண்டிகளிலேற்றி அழைத்துச் செல்லுகிறான். திருவிழாவில் மலிவான சிறு சர்க்கஸ் ஒன்றை பெல்லே பார்க்கிறான். மேடையில் கோமாளிகள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோமாளிச் சிறுவன் மேடையில் குதிப்பதைக் கண்ட பெல்லே அடையாளம் கண்டு கொள்ளுகிறான். ரூட்! ஓடிப்போன ரூட்டேதான். ரூட்டும் பெல்லேயை கண்டு மகிழ்ச்சியில் ஓடி வந்து கட்டிப் பிடித்து இருவரும் நடனமாடுகிறார்கள். இந்த திருவிழாவை ஒரு சந்தர்ப்பமாக தனக்கு ஆக்கிக்கொண்டு கோங்ஸ்டிரப் மச்சினி மகள் சின்னேயை ஆளில்லாத ஆற்றோரமாய்ப் பார்த்து அழைத்துச் சென்று மயக்கி கெடுத்து விடுகிறான். அதிர்ச்சியடைந்த சிக்னே அதைத் தன் பெரியம்மாவிடம் சூசகமாய்த் தெரிவித்து அழுதுவிட்டு ஊருக்குப் புறப்பட்டு விடுகிறாள். அவளைக் கப்பலில் ஏற்றிவிட்டு வரும் தன் கணவன் கோங்ஸ்டிரப்பை சிரித்து வரவேற்ற அவன் மனைவி கதவைத் தாழிட்டுக் கொண்டு அவனைத் தாக்குகிறாள். அவன் அலறும் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் ஓடி வந்து கதவைத் தள்ளிப் பார்க்கிறார்கள். இடுப்புக்குக் கீழே இரு தொடைகளுக்கிடையில் பெருகும் ரத்தத்தை துணியால் அழுத்திக் கொண்டு கைகளால் மூடிக் கதறிக் கொண்டிருக்கிறான் கோங்ஸ்டிரப். அவன் மனைவி அவனுடைய ஆண்குறியை கத்தியால் வெட்டி விடுகிறாள். எல்லோரும் மருத்துவரை அழைத்து வர ஓடுகிறார்கள்.
பெல்லே ஊருக்கே திரும்பிப் போகலாமென்கிறான். லாஸ் மறுக்கிறார். தான் அங்கேயே இருப்பதாகக் கூறுகிறார். பெல்லே ஸ்வீடனுக்கு கப்பலேற நடந்தபடியிருக்கிறான். அவன் எரிக்கின் வார்த்தைகளை மறக்கவில்லை. உலக நாடுகளை பார்க்கும் ஆவலோடேயே நடந்தபடியிருக்கிறான்.
இந்த டென்மார்க் படத்திலும் நிறைய ஸ்வீடிஷ் நடிகர்களிருக்கிறார்கள். ஸ்காண்டிநேவிய சினிமாவில் அது சகஜம். முக்கிய பாத்திரம் லாஸ் கார்ல்சனாக குடிக்கும் பகழ்பெற்ற நடிகர் மாக்ஸ் வான் சைடோ [MAY VON SYDOW] இங்மர் பெர்க்மனின் சில புகழ்பெற்ற ஸ்வீடிஷ் திரைப்படங்களில் கதாநாயகனாய் நடித்திருக்கும் சிறந்த கலைஞர். இந்த டேனிஷ் படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாயிருக்கிறது. இப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக 1987-ன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் சிறந்த அயல் மொழிப் படத்துக்கான ஆஸ்கார் விருது அவ்வாண்டு PELLE THE CONQUEROR-கு அளிக்கப்பட்டது. பெல்லே – சிறுவனாக PELLE HVENE GAARD எனும் சிறுவன் நடிப்பால் நம்மை கொள்ளை கொள்ளுகிறான்.
PELLE THE CONQUEROR டேனிஷ் திரைப்படத்தை மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பில் ஆகஸ்ட் [BILLE AUGUST]. படத்தின் ஒவ்வொரு காட்சி சட்டகமும் 19-ம் நூற்றாண்டு நீர்வண்ண ஓவியங்கள் போலத் தோன்றுமாறு ஒளிப்பதிவாக்கியிருப்பவர் காமிரா கலைஞர் ஜோர்கன் பெர்சன் [JORGEN PERSSON]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.