தொடர் 34: கனவுக் கதை – சார்வாகன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்எழுதிக் குவிக்காத எழுத்தாளர் என்றே சார்வாகனைச் சொல்ல முடியும். அவர் தொழுநோய் மருத்துவத்தில் மகத்தான சாதனை புரிந்த மருத்துவரும் கூட.  சுதந்திரத்திற்குப் பிந்திய கால கட்டத்தில்  நிறைவுறா எதிர்பார்ப்புகள் அவரது படைப்புகளில் அடிக்கீற்றாக இருக்கிறது,  வெளிவந்த ஆண்டின் சிறந்த சிறுகதையென இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது இக்கதை.

கனவுக் கதை

சார்வாகன்

நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம்,  அங்கே எப்பவும் கூட்டம் நெரியாது.  கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர் மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன் புட்டியில்லாமல் அளந்து, சோப்பு, சீப்பு.  நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது.  க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக் கொள்ள, நரை மயிரை கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை  நந்நாலு என்று விதம் விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள் இன்னும் எத்தனையோ சாமான்கள் எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத நடேசனின் கடையில்  மளிகை சாமான், மருந்து சாமான், பால் பவுடர் தவிர எதை வேண்டுமானாலும் ரொக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம்.  

எப்போது சென்றாலும் “எங்களை வா” என்று சொல்லும் நடேசன் “என்ன வேணும்?” என்று ஒரு போதும் கேக்க மாட்டான்.  சாதாரணமாக வாங்குவதற்கு கூட எங்களிடம் காசு இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.

அன்று சென்ற போது வழக்கம் போல் வரவேற்று “இது என்ன சொல்லுங்க பார்ப்பம்?” என்றவாறே ஒரு தராசை எடுத்துக் காட்டினான்.  அது சாதாரண தராசுதான்.  ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டும் இருந்தது. “இது என்னனு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தரேன்” என்ற போது எங்களுக்கு புரியவில்லை.  “பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றபடி பாட்டிலிலிருந்து ஸ்வீட்டை எங்களுக்கு அளித்தான்.

ஒரே சமயத்தில் மூணு பேர் வந்து ஒரே சாமானைக் கேட்டு நெருக்கினால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை நிறுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, ஒரே முறையில் நிறுத்து நேரச் செலவையும் சக்திச் செலவையும் குறைக்கும் சாதனம் அது. நடேசன் கடை வைத்த நாள் முதல் பார்த்து வருகிறேன், ஒரே நேரத்தில் மூணு பேர் வந்து உடனே கொடு என்று ரகளை செய்ததை ஒரு நாள் கூட நான் பார்த்ததில்லை.அந்த சமயத்தில்தான் அந்த ஆள் கடைக்கு வந்தது.  வந்த ஆசாமி சாமியார் போலவுமில்லை குடும்பி போலவுமில்லை.  நாற்பது வயதிருக்கும்.  கரளை கரளையாக கட்டு மஸ்தான தேகம்.  தலைமயிர் கறுப்பாக நீண்டு வளர்ந்து பிடரிமேல் புரண்டு கொண்டிருந்தது.  அடர்த்தியான புருவம், நெற்றி மேல் கம்பளிப் பூச்சி போல் ஒட்டிக் கொண்டிருந்தது.  கண்கள் கறுப்பு வைரங்கள் போல ஜ்வலித்தன.  இருப்பில் ஒரு நாலு முழத் தட்டுச் சுற்று வேட்டி, முழங்கால் தெரிய அள்ளிச் சொருகிக் கட்டியிருந்தது.  வேட்டி காவியாயிருந்தது.  வர்ணம் போனதோ அல்லது வெள்ளையாயிருந்து பழுப்பாக மாறிக் கொண்டிருந்ததோ ஆண்டவனுக்கே தெரியும்.  புஜத்தில் தோளிலிருந்து முழங்கை வரை சுண்ணாம்புக் கறை, நெற்றியில் அரை ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டு

“ஒரு கிலோ பெப்பர்மிட்டுக்  குடுங்க” சீக்கிரம் அதட்டினான்.  குரல் கண்டாமணியாய் ஒலித்தது.

நடேசன் நிதானமாக “கிலோ அஞ்சு ரூபாய்” என்றான்.

“சரி கொடுங்க.” இடுப்பு முடிச்சில் எட்டாய் மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அஞ்சு ரூபாய் நோட்டை அளித்தான்.

நடேசன் நிறுத்து காகிதப் பையில் போடப் போகும் போது “பையிலே போடவாணாம், சும்மா அப்படியே காயிதத்திலே வைச்சுக் குடுங்க” மணிக்கூண்டின் பக்கமாக விடு விடுடென்று நடந்தான்,

அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆவலினால் நாங்கள் பின் தொடர்ந்தோம்.

மணிக்கூண்டினடியில் இருந்த சிறு மேடையருகில் நின்று கொண்டு அந்தப் பெப்பர்மிட்டுக்கார ஆள், அருகில் இருந்தவர்கள் கையில் ஓரிரு பெப்பர்மிட்டுகளைத் திணித்தான்.  அவர்கள் திகைத்தார்கள்.  “சாப்பிடுங்க, சாப்பிடுங்க ஆண்டவன் பிரசாதம்” என்றவாறே நடேசன் கடை மிட்டாய்களை அளித்தான்.

செய்தி பரவி விட்டது.

வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்ரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலீன் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்பு போட்டவர்கள், நடை மீசைக்கள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக் கொண்டிருந்த பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜெண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிக் கடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடிய நிர்வாணச் சிறுவர் சிறுமியர்;  தேன் கூடு போல ஞொய்யென்ற சப்தம்.“சத்தம் போடக்கூடாது. நான் சொல்றபடி கேட்டால் எல்லாருக்கும் கிடைக்கும்” உரத்த குரலில் கூவினான்.  ஓராயிரம் முகங்களும் அவனை ஆவலுடன் நோக்கின.  

“எல்லாரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க” பெப்பர்மிட்டுச் சாமியாரிடமிருந்து ஆணை பிறந்தது.

ஒரு கணம் உயிரிழந்து பிணமாய் நின்றிருந்த கூட்டம் உலுக்கலுடன் உயிர் பெற்றது.

நாய் பன்றி மாடு குதிரைச் சாணத்தின் மீது, எச்சில் மூத்திரக் கறைகளின்  மீது, வாழைப்பழத்தோல் காலி சிகரெட் பெட்டி பீடித் துண்டுகள் மீது, தெருப்புழுதி மீது, மல்லாக் கொட்டைத் தோல் மீது, எண்ணற்ற காலடித் தடங்கள் மீது, கண்ணை மூடியபடி,  கையைக் கூப்பியபடி, ஆண் பெண் சின்னவன் பெரியவன் காளை கிழவன் பேதமின்றி சமதருமமாக, சாஷ்டாங்கமாகத் தன் மீதே ஒருவர் மேல் ஒருவராக வீழ்ந்தது.

பெப்பர்மிட்டுக் காகிதத்தைக் கூட்டத்தின் முதுகின் மீது உதறினான்.

சிறுவர்களும், பெரியவர்களும், குமரிகளும், கிழவிகளும், தமிழர்களும், தெலுங்கர்களும், இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும், நாஸ்திகர்களும் எல்லாரும்  சில்வண்டு போலத் தரையைத் துளைத்தனர்.  மற்றவர்களை இடித்துத் தள்ளிச் சுரண்டினர்.  மிட்டாய்களை ஆத்திரத்துடன் பொறுக்கினர். 

மிட்டாய் வீசியவனைக் காணோம்.

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்கு திரும்பினோம்.  “பார்த்தீங்களா பைத்தியம் போல இருக்குதில்லே.  ஆனாலும் அதாலே ஒருத்தருக்கும் நஷ்டமில்லே” நடேசன் சொன்னபடி அந்த  ஐந்து ரூபாயை பிரித்து மேசைக்குள் போட்டுக் கொண்டார்.

ஞானரதம்  பிப்ரவரி 1971

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.