தொடர் 36: செம்மான் மகன் – வே. ராமசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 36: செம்மான் மகன் – வே. ராமசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்



கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல்முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு ராமசாமியின் எழுத்துக்கள் சான்று.  கரிசல் காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து இவர் சொல்லித்தான் தெரிகிறது.

செம்மான் மகன்

வே. ராமசாமி

மத்தியான வெயிலில் பிடாங்கு வேப்பமரக் கிணத்துக்குக் குளிக்கலாம்னு போனான்.  தண்ணீ வெயில்ல கண்ணாடி மாதிரிக் கிடந்தது.  ஒத்தையில் குளிக்கறதுக்கு பிடாங்குக்கு பயமா இருந்துச்சு.  எந்தப் பயலாச்சும் வந்தாம்னா சேந்து குளிப்போம்னு அங்கனயே உக்காந்திருந்தான்.

வேப்பமரக் கிணத்தில் கொஞ்ச வருசம் முன்னாடி ஒரு பொம்பளையாளு முங்கிச் செத்துப் போச்சு.  என்னன்னா மாடு மேய்க்கும்போது அவளுக்கு தண்ணீத் தாகம் எடுத்திருக்கு.  சரி படியுள்ள கிணறுதானன்னு இறங்கி தண்ணீயள்ளி குடிச்சிருக்கா. ரெண்டு மூணு நாளாக கண்டுபிடிக்க முடியல.  ஏம்னா உள்ள ஒரு பொந்துக்குள்ள பிணம் மாட்டிக்கிருச்சு.   அதுல இருந்து தனியாக் குளிக்காம இருக்க முடியுமா?

பிடாங்கு இப்படி காத்திட்டிருக்கும்போது எந்தப் பயலோ மோட்ரு ரூம் மச்சுலயிருந்து “ஹோய்”னு கத்திக்கிட்டே குதிச்சான்.  அது யாரு எவம்னு பாத்தா செம்மான் மகன்.  தண்ணீக்குள்ள இருந்து மேல வந்து தலையச் சிலுப்புதான்.  “ஏலேய் நீயால?” ன்னு பிடாங்கும் உள்ளே பாஞ்சான்.

ஊராட்களுக்கு வீடு வீடாப் போய் ஒர் ரூவா ரெண்டு ரூவான்னு கொடுக்கறதை வாங்கிண்டு துணி தச்சுக் குடுக்கிறவனை செம்மான்னு சொல்வாங்க.   ஊர்ல முக்கால்வாசி பொடிப்பயல்கள் மாட்டியிருக்கும் டவுசர்ல பின்னாடி சன்னல் வச்சு ஒட்டுப் போடற செம்மான் மகன்தான் இப்ப பிடாங்கின் குளிப்புத் துணை.

செம்மான் மகன் தரை மண் தொடாத கிணறு இல்லவே இல்லை.  தண்ணீல முங்கி கிணத்துத் தரையத் தொட்டு அதுக்கு அடையாளமாக கல்லோ மண்ணோ சகதியோ எதையாவது எடுத்துட்டு வந்து காட்டணும். இந்த மாதிரி நீச்சல் தெரிஞ்ச பயல்கள் பாதாள கரண்டிக்குச் சிக்காத பொருளைக் கூட முங்கி எடுத்திட்டு வந்துருவாங்க.

பிடாங்கும் செம்மான் மகனும் சேக்காளிகள். எதிலும் ஒண்ணாத்தான் இருப்பாங்க. ஒண்ணு பிரியாம அலைஞ்சாங்க. ரெண்டு பேருக்கும் அப்படியொரு பிரியக்கால் உண்டாகிப் போச்சு.

ஒரு வட்டம் கட்சிக்காரங்கள் திருநெல்வேலியில ஊர்வலம் வச்சிருந்தாங்க.  ஊர்ல இருந்து ஒரு வேன் கூட்டத்துக்குப் போச்சு.  பிடாங்கும், செம்மான் மகனும் வேன்ல இடங்கிடைச்சு ஏறிக்கிட்டாங்க. நல்லா ஊரைச் சுத்திப் பாத்துட்டு வேன்லயே வந்திரலாம்னு கிளம்பிட்டாங்க.  நெல்லை டவுனுக்கு வந்தா இதே மாதிரி ஏகப்பட்ட வேன்களில் கொடி கட்டி நிறையச் சனங்கள் வந்திருக்கு. ஊர்வலம் போம்போது பிடாங்கும், செம்மான் மகனும் கையைக் கோத்துக்கிட்டாங்க.  ஒரே நெரிசல்.  போலீசுக்காரங்க நிறையப் பேரு கூட்டத்தை தொடர்ந்து வந்தாங்க.  

பேரணி பாலத்தைத் தொட்டது.  கீழே தாமிரபரணி சலசலன்னு என்னப் பாரு என்னப் பாருனு சொன்னது.  உயரத்தில் இவன் தண்ணீ தரையில்.  பிடாங்கு: “ஏலேய் :குளிக்க நினைப்பு வந்திருச்சாலே இது வேப்பமரக் கிணறுன்னு பார்த்திட்டியா”னு செம்மான் மகனை நையாண்டி பண்ணினான்.

திடீர்னு ஒரே தள்ளுமுள்ளு. ரெண்டு திக்கமும் இருந்து சட்டிப் போலீசு மக்களை அடி நொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.  பாலத்துக்கு நடுவில் மாட்டிக்கிட்டதால அந்தப் பக்கமும்  ஓட முடியல இந்தப் பக்கமும் ஓட முடியல.  அடி தாங்க முடியாம சனம் பாலத்திலிருந்து தண்ணீக்குள்ளே திடீர் திடீர்னு விழுது.  நீச்சத் தெரிஞ்சவங்களுக்கும் நீச்சடிக்க முடியல.  கைப்புள்ளக்காரியை அடிச்சதுல அவள் புள்ளையோட ஆத்துல விழுந்து பிள்ளை செத்துப் போச்சு. 

செம்மான் மகனுக்கு போலீஸ்காரன் முட்டியிலே அடிச்சான்.  முழுங்கைல கணீர் கணீர்னு வெளுத்ததுலே கை தொங்கியது. பிடாங்கு எந்தப் பக்கம் போனாம்னே தெரியல. செம்மான் மகன் பாலத்திலிருந்து தாமிரபரணில தலைகீழா விழுந்தான். லத்தியடி விழுந்த கைகளால் நீச்சலடிக்க முடியல.

மறுநா பேப்பர்ல செம்மான் மகன் போட்டோ போட்ட எங்க ஊருப் பேரும் வந்தது. “ஒத்த ரூவாய கிணத்துல வீசினா பாதாளக் கரண்டி போகாத தூரமெல்லாம் பாய்வானே அவனுக்கா நீச்சல் தெரியாது?  ஏ சாமிகளே நீங்க நல்லாயிருப்பீங்களா”ன்னு அவன் அம்மா கதறினாள்.

பொன்னுப் புஸ்தகமே ஏன்

பூர்வீகத்துப் பத்திரமே

பூர்வீகத்துப் பத்திரத்தை நான்

போகச் சொல்லக் காத்திருந்தேன்னு 

அவள் வைச்ச ஒப்பாரி ஊரையே உலுக்கியது.

“சரிதான் சாமிகளே நீச்சுத் தெரியாமச் செத்தாங்கன்னு கமிசன் அறிக்கை குடுத்திகளே  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க நிசந்தானா?”

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட் போக்குகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *